மனம் கொய்த மாயவனே – 27
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 27
அந்தப் பெட்டியை முதலில் குழப்பத்துடன் பார்த்துவிட்டு அதில் இருந்த சில எழுத்துக்களை அவளுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் படிக்க முயன்றாள் அல்லிராணி.
பின் அந்தப் பெட்டியைத் திறந்து உள்ளே பார்க்க, அதில் ஒரு ஊசியும், ஒரு சின்னப் பாட்டிலும் இருந்தது.
இது என்ன ஊசி மருந்தாக இருக்கும் என்ற குழப்பத்துடன் அதைப் பார்த்தாள்.
‘வெற்றிக்கு எதுவும் உடம்பு சரியில்லையோ? அதற்குத் தான் இந்த ஊசியா?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
அடிப்பட்ட காயங்கள் கூட ஆறிவிட்டதே. அப்படியிருக்க எதுக்கு இந்த ஊசியாக இருக்கும்? இதை அந்தப் பெண் தான் கொண்டு வந்திருப்பாளா? இல்லை வெற்றி தான் வாங்கினானா? என்று புரியாமல் குழம்பிப் போனாள்.
மெடிக்கலில் கேட்டால் இந்த ஊசி எதற்கு என்று தெரிந்து விடும் தானே? என்று நினைத்தாள்.
வேறு எதுவும் துணி பெட்டியில் இருக்கிறதா என்று பார்க்க நினைத்துப் பரபரவென்று தேட ஆரம்பித்தாள்.
அப்போது இன்னும் ஒரு சட்டைக்குள் ஒரு பாக்கெட் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கையகல பாக்கெட்டைப் பார்த்ததும் அவளின் மனம் திக்கென்று அதிர்ந்தது.
அவளுக்கு அந்தப் பாக்கெட் என்னவென்று முழுதாக விவரம் தெரியாது தான். ஆனால் அதைப் பார்த்ததும் ஒரு இனம் புரியாத பயம் மனதைக் கவ்வியது.
அந்த ஊசி மருந்து பெட்டியையும், அந்தப் பாக்கெட்டையும் மாறி மாறிப் பார்த்தாள்.
சில நொடிகளுக்குப் பிறகு துணிகளை இருந்தது போலவே அடுக்கி வைத்தவள் கையில் இருந்த ஊசி மருந்தையும், பாக்கெட்டையும் யோசனையுடன் பார்த்து விட்டு, பின் அதையும் இருந்தது போலவே சட்டைக்குள் மறைத்து வைத்துவிட்டு மீண்டும் அதே சாவியை வைத்துப் பெட்டியைப் பூட்டி விட்டு, வீட்டையும் பூட்டியவள் தன் வீட்டிற்குச் சென்றாள்.
இப்போது வேலைக்குக் கிளம்ப வேண்டும். ஆனால் அதற்கு அவளுக்கு மனமேயில்லை. ‘அந்த ஊசி மருந்தும், பாக்கெட்டும் என்னவென்று முதலில் அறிந்து கொள்’ என்று மனது பிராண்டியது.
வேலைக்குக் கிளம்ப யோசனையுடன் வெளியே வந்த போது எதிர்சாரியில் இருந்த வீடுகளில் ஐந்து வீடு தள்ளியிருந்த ஒரு குடிசையில் இருந்து அந்த வீட்டு ஆள் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியேறியவன் அல்லியின் கண்களில் பட்டான்.
அவனை எதேர்ச்சையாகப் பார்த்தவளுக்கு மூளையில் ஏதோ மின்னல் வெட்டியது போல் இருந்தது.
‘வெற்றியின் வீட்டில் பார்த்த மருந்து ஒருவேளை அதுவாக இருக்குமோ?’ மனது சந்தேகம் எழுப்பியது.
‘ச்சே ச்சே! இருக்காது. வெற்றி அதெல்லாம் செய்ய மாட்டான்’ என்று தானே சமாதானம் செய்து கொண்டாள்.
‘பொண்ணுங்க கூட அப்படி இப்படி இருக்குறவன் இதை மட்டும் செய்ய மாட்டானா என்ன?’ மனது எடுத்துக் கொடுத்தது.
‘இந்த ஏரியாவில் தான் அது சர்வசாதாரணமாகக் கிடைக்குமே. ஏன் இதோ போனானே அவனே அந்த வேலை தானே செய்றான்’ என்று நினைத்தாள்.
அவள் குடியிருக்கும் குடிசை பகுதியில், பல வகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், நடைமேடையில் பொருள் விற்பவர்கள் என்று பலவகையில் இருப்பது போல் இன்னும் ஒரு வகையினரும் உண்டு.
அது சட்டத்திற்குப் புறம்பான வேலை செய்பவர்கள் தான் அவர்கள்.
அடிதடி, கஞ்சா விற்பவர் என்று வாழ்பவர்களும் உண்டு. அதிலும் குறிப்பாகப் போதை மருந்து, மாத்திரை, ஊசி, பவுடர் என்று விற்பவர்கள் பற்றி அல்லியும் அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்தாள்.
அந்த ஐந்தாவது வீட்டிலிருந்து சென்றவனும் ஏதோ போதை மருந்து கை மாத்தி விடும் வேலை தான் செய்து கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.
அதனாலேயே அவனைப் பார்த்ததும், வெற்றியின் வீட்டில் பார்த்த ஊசியும், பவுடரும் மனதில் மின்னலடிக்க, ஒருவேளை அது போதை ஊசி, பவுடராக இருக்குமோ என்று நினைத்தாள்.
‘தேவையில்லாம கற்பனை பண்றேனோ?’ என்று நினைத்தவள் வேலைக்குக் கிளம்பினாள்.
அங்கே சென்று வேலையைச் செய்ய ஆரம்பித்தாலும் அவள் மனம் வேலையில் ஒன்றவில்லை.
நான்காவது தளத்தில் இருந்து ஐந்தாவது தளத்திற்குச் செங்கலை எடுத்து வைக்கும் வேலையிருக்க, செங்கலைச் சுமந்து படிகளில் ஏறும் போதே இரண்டு, மூன்று முறைகள் தடுமாறினாள்.
“ஏய் அல்லி, என்ன காலையிலேயே தண்ணி அடிச்சுட்டு வந்து போதையில் தள்ளாடுறவன் கணக்கா தள்ளாடிட்டு இருக்க?” என்று கூட வேலை செய்தவர்கள் கேலியாகக் கேட்க,
அவர்களின் கேலிக்குப் பதில் சொல்லாதவளின் மனம் அவர்கள் சொன்ன ‘போதை’ என்ற வார்த்தையில் தள்ளாடியது.
அதில் அவளின் கால்களும் தள்ளாட மேல் படியிலிருந்து கீழ் படிக்குச் சட்டென்று சரிந்தாள்.
“ஏய் அல்லி…” என்று பின்னால் வந்த பெண் அவளின் முதுகை பிடித்து நிறுத்த, அப்படியே படியில் சுமையை இறக்கி வைத்து விட்டுத் தளர்ந்து அமர்ந்தாள் அல்லி.
மகள் பெயர் சப்தமாக ஒலிக்க, உள்ளே வேறு வேலையாக இருந்த சரோஜா பதறி அடித்து ஓடி வந்தார்.
“என்னடி அல்லி, எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க?” என்று கேட்டவருக்குப் பதில் சொல்லாமல் மலங்க விழித்தாள்.
“என்னடி ஆச்சு? இந்த முழி முழிக்கிற?” என்று அதட்டிக் கேட்டார்.
“சரோஜாக்கா அல்லிக்கு உடம்பு சரியில்லை போல. ரெண்டு மூணு வாட்டி விழப் பார்த்தா. இப்போ உருளவே போய்ட்டா. பிடிச்சு உட்கார வச்சுருக்கேன். உடம்புக்கு என்னான்னு பாரு…” என்று சொன்ன அந்தப் பெண்மணி தன் வேலையைத் தொடர, சரோஜா மகளைத் தொட்டுப் பார்த்தார்.
“உடம்பு சுடலையே? வீட்டுக்குத் தூரமாகுற நாளு கூட இல்லையேடி. உடம்புக்கு வேறென்ன பண்ணுது?”
“ஒன்னுமில்லமா, கால் வழுக்கி விட்டுருச்சு. இப்ப ஒன்னுமில்ல…” என்று அன்னையிடம் சமாளித்துவிட்டு மீண்டும் எழுந்து வேலையைத் தொடர்ந்தாள்.
“கவனமா வேலை பாருடி. விழுந்து கிழுந்து வச்சுடாதே…” என்ற சரோஜாவும் தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.
வேலையில் கவனத்தை வைத்துக் கொண்டே அது என்ன ஊசியாக இருக்கும்? அந்தப் பாக்கெட்டில் இருந்தது அவள் நினைப்பது தானா? அதை எப்படி யாரிடம் என்னவென்று விசாரிப்பது? என்று அல்லிக்கு அதே யோசனையாகத் தான் இருந்தது.
வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியெல்லாம் கூட அவளுக்கு அதே யோசனை தொடரத்தான் செய்தது.
வெற்றியிடம் கூட அவளால் நேரடியாகக் கேட்டு விட முடியும்.
ஆனால் ‘அவன் இதுவரை எதைத் தான் ஒழுங்காகச் சொல்லியிருக்கிறான்? அவள் ஏதாவது கேட்டால் ஒன்று கோபத்தைக் காட்டுவான். இல்லையென்றால் வேறு ஏதாவது காரணம் சொல்லிச் சமாளிப்பான்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அதனால் அவனிடம் நேராகக் கேட்கும் எண்ணமில்லை அவளுக்கு.
ஏதோ மருத்துவ ஊசி என்றால் அவ்வளவு ரகசியமாக வைக்கத் தேவையே இல்லையே என்ற எண்ணமும், கொசுறாக இருந்த அந்தப் பாக்கெட்டும், வெற்றியின் சில மர்ம செயல்பாடுகளும், உண்மையை மறைக்க அவன் கோபம் காட்டுவதும் ஒருவேளை அது மருத்துவ ஊசியாக இருக்காதோ என்று அவளை நினைக்க வைத்துக் கொண்டே இருந்தது.
தான் வெற்றியின் வீட்டிற்குள் சென்றது தெரிய கூடாது என்றே திரும்பவும் தான் பார்த்ததை அங்கேயே வைத்து விட்டு வந்திருந்தாள். அதனால் அதைக் காட்டியும் யாரிடமும் விசாரிக்க முடியாது.
அந்த ஊசியைப் பற்றி மெடிக்கலில் பெயர் சொல்லி விசாரிக்கலாம் தான். ஆனால் அவள் கற்பனை பண்ணிக் கொண்டது போல அது போதை ஊசியாக இருந்தால், அதைப் பற்றி விசாரிக்கும் அவளுக்கு மட்டுமில்லாமல், அதை வாங்கி வைத்திருக்கும் வெற்றிக்கும் பிரச்சினை வந்துவிட்டால்? என்ற எண்ணம் அவளை மேற்கொண்டு விசாரிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
என்ன செய்வது என்றும் புரியாமல் குழம்பிய படி அவளுக்கு அன்றைய பொழுது நகர்ந்து கொண்டிருந்தது.
அன்று இரவு வீட்டிற்கு வந்த வெற்றி வழக்கம் போல வீட்டைத் திறந்து துணி மூட்டையை வீட்டிற்குள் வைத்து விட்டு வெளி குளியலறைக்கு வந்து தன்னைச் சுத்தம் செய்து கொண்டு உள்ளே சென்றவன் பூட்டியிருந்த பெட்டியைத் திறந்து வேறு மாற்றுடையை எடுக்கப் போனான்.
பெட்டியைத் திறந்ததுமே அல்லி அப்படியே அடுக்கி வைத்திருந்தாலும் கூட, அவள் தவிர விட்ட சிறு மாற்றத்தை அவனின் கண்கள் கண்டுகொண்டன.
‘யாரது பெட்டியைத் திறந்தது?’ என்று நினைத்தவன், பரபரவென்று உள்ளே வைத்த பொருட்கள் இருக்கும் இடத்தை ஆராய்ந்தான்.
அது இரண்டும் அந்தந்தச் சட்டையின் உள்ளே அப்படியே இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தாலும் ஏதோ உறுத்தல் தோன்ற யோசனையுடன் பெட்டியை ஆராய்ந்தான்.
பின் வீட்டை சுற்றிலும் ஆராய்ச்சியாகக் கண்களைச் சுழற்றினான். பெட்டியில் அவன் பார்த்த மாற்றம் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை என்பதை அறிந்து கொண்டான்.
‘யார் வீட்டிற்குள் வந்திருக்க முடியும்?’ என்று யோசித்தவனுக்கு அல்லியிடம் தன் வீட்டின் இன்னொரு சாவி இருப்பது ஞாபகம் வந்தது.
அதோடு அவன் வேலையிலிருந்து வந்த போதும், அவன் குளியலறைக்குச் சென்று வந்த போதும், அவள் வீட்டின் கதவின் மறைவில் இருந்து தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்ததை ஓரக்கண்ணால் கண்டு கொண்டிருந்தான்.
“அந்த ராங்கி தான் வந்துருப்பா. அவளை…” என்று பற்களைக் கடித்தவன் மாற்றுடையை மாற்றி விட்டுக் கதவைத் திறந்து வாசலில் வந்து நின்றான்.
அதுவரை கதவின் மறைவில் நின்று அவன் வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் வாசலில் வந்து நின்றதும் உள்ளே சென்று மறைந்து கொண்டாள்.
“திமிர் பிடிச்சவ, சண்டிராணி. அடங்காப்பிடாரி, ஆள்முழுங்கி…” என்று வாய்க்கு வந்த படி மெதுவாக அவளைத் திட்டியவன், கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.
அவளோ தனது பட்டன் மாடல் போனை கையில் வைத்துக் கொண்டு நடுவீட்டில் வந்து நின்றவள், அவனைப் பார்த்துக் கொண்டே அந்த அழைப்பைத் துண்டித்தாள்.
“திமிரைப் பாரேன்…” கோபமாக முறைத்தவன், “இங்கே வாடி…” என்று வாயசைத்து அழைத்தான்.
அது புரிந்தாலும் கண்டு கொள்ளாதவள் போல், தன் தாவணி முந்தானையை உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு ‘வர முடியாது போடா…’ என்று சொல்வது போல் அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிய படி அவன் கண்ணில் படாமல் மறைந்து கொண்டாள்.
“வீட்டுக்குள்ள வந்து நோண்டியதும் இல்லாம தலையை வேற சிலுப்பிக்கிட்டுப் போறீயா நீ. உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்டி…” என்று முனங்கிக் கொண்டான்.
“என்னை லவ்விக்கிட்டே இன்னொரு பொம்பளையை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து கூத்தடிப்பானாம். இப்ப அவன் கூப்பிட்டதும் நாய்க்குட்டி மாதிரி போயிடணுமாம். என்னை என்ன சொரணை கெட்டவள்னு நினைச்சானா?” என்று இங்கே அல்லி அலட்டிக் கொண்டாள்.
‘அவன் அப்படிப்பட்டவன்னு தெரிஞ்சே அவனை லவ்வியது உன் தப்பு. தப்பை எல்லாம் உன் மேல வச்சுக்கிட்டு இப்போ அவன் கூத்தடிக்கிறான், கும்மாளம் போடுறான்னு சொன்னா ஆச்சா?’ மனசாட்சி அவளை இடிந்துரைத்தது.
“என்ன செய்றது. அவன் தான் வேணும்னு நீயும் தானே என்னைப் போட்டுப் பாடாபடுத்துற. மனசும், புத்தியும் அடங்கி இருந்தா நான் ஏன் அவன் பின்னாடி சுத்த போறேன்?” என்று மனதையே குற்றம் சொல்லிச் சலித்துக் கொண்டாள்.
அன்று முழுவதும் ஏன் வீட்டில் வந்து குடைந்தாள் என்று தெரிந்து கொள்ள, அவளிடம் பேச முயன்றான் வெற்றி.
ஆனால் அவனுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள் அல்லிராணி.
அன்று மட்டுமில்லாமல் மறுநாளும் அவனின் கண்களில் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடினாள்.
இருவரின் ஊடலும் தொடர்ந்து கொண்டிருக்க, மறுநாள் மாலை வேலை முடிந்ததும் பஜார் பக்கம் சென்றாள் அல்லிராணி.
சில நாட்களாக முருகன் அவளின் கண்களில் படவில்லை. ஏன் என்ற கேள்வியுடன், அந்த ஊசி மருந்தை பற்றியும், அந்தப் பாக்கெட் பற்றியும் அவனுக்கு ஏதாவது தெரியுமா என்று அவனிடம் எப்படியாவது விசாரித்து விட வேண்டும் என நினைத்தாள்.
அதனாலேயே அன்னையிடம் ஏதேதோ காரணத்தைச் சொல்லிச் சமாளித்துவிட்டுப் பஜாருக்கு வந்திருந்தாள்.
அவர்கள் வழக்கமாக வியாபாரம் பார்க்கும் இடத்திற்கு வந்த போது காளி மட்டுமே அங்கே இருந்தான்.
வெற்றியும், முருகனும் அங்கில்லை.
‘இவனுங்க வியாபாரம் பார்க்கிறான்களா? இல்ல ஊர் சுத்த போவான்ங்களா? எப்ப பார்த்தாலும் துணி மூட்டையைத் தூக்கிட்டு வியாபாரம் பார்க்கிற மாதிரி வீட்டிலிருந்து கிளம்பி வந்து இங்கே இல்லாம போறாங்க. வழக்கமா வெற்றி தானே அப்படிக் காணாம போவான். இப்போ என்ன முருகன் அண்ணனையும் காணோம்’ என்று அவள் மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.
‘இரண்டு பேரும் எங்கே போயிருப்பாங்க?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போதே கூவி வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருந்த காளி எதிர் சாலையில் எதையோ பார்த்து விட்டுச் சட்டென்று கூவுவதை நிறுத்தினான்.
கையில் இருந்த துணிகளை மடித்து மூட்டையைக் கட்டினான். அவனின் கண்கள் கவனத்துடன் நாலாபுறமும் சுழன்று வந்தன.
அவனின் வித்தியாசமான நடவடிக்கையைக் கண்டதும் சட்டென்று அருகிலிருந்த கடையில் மறைந்து நின்று கொண்டாள் அல்லி.
காளி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ரோட்டை கடந்து அங்கிருந்த ஒரு மரத்தின் புறம் செல்வதைக் கண்ட அல்லியும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
“காதலிச்சோமா, கல்யாணம் முடிச்சோமா, புள்ள குட்டியைப் பெத்துக்கிட்டோமான்னு இல்லாம, இப்படியா இந்த வெற்றி என்னை அலைய வைப்பான்? அவன் தான் அப்படினா அவன் கூடச் சுத்துறவன்களும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கானுங்க.”
“டேய் வெற்றி, நீ என்னை ஜேம்ஸ்பாண்ட்டுக்குத் தங்கச்சியா மாத்தாம விட மாட்ட போலடா…” என்று முனங்கிக் கொண்டே காளியைப் பின் தொடர்ந்தாள்.
மரத்தின் புறம் சென்ற காளி திரும்பி வெளியே வரும் போது கூடவே இன்னும் ஒருவனும் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான்.
அவனைக் கண்ட அல்லியின் கண்கள் வியப்பாக விரிந்தன. நேற்று காலையில் அவள் குடிசை பகுதியில் அந்த ஐந்தாவது வீட்டிலிருந்து வெளியேறியவன் அவன்.
போதை மருந்து கைமாற்றி விடுபவன். அந்தத் துரையுடன் பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த காளியை நம்ப முடியாமல் பார்த்தாள்.
இருவரும் சேர்ந்து அங்கிருந்த பூங்காவிற்குள் நுழைய, இவளும் சென்றாள்.
பூங்காவின் இன்னொரு பாதையருகிலிருந்த செடி மறைவில் இருவரும் சென்று நிற்க, அவர்கள் தன்னைப் பார்த்து விடாதவாறு ஒரு மரத்தின் பின்புறம் நின்றாள் அல்லி.
அவர்கள் ஏன் இப்படி மறைந்து நிற்கிறார்கள்? என்ன செய்யப் போகிறார்கள் என்று அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த இன்னொரு வாசல் வழியாக ஒரு பையுடன் உள்ளே வந்தான் முருகன்.
வந்தவன் நேராகத் துரை, காளியின் பக்கம் செல்ல, “என்ன முருகா, வாங்கிட்டு வந்துட்டியா?” என்று கேட்டான் துரை.
“வாங்கிட்டேன் துரை. இந்தா, இதை இப்படியே கை மாத்திவிட வேண்டியது தான்…” என்ற முருகன் அவன் கையில் இருந்த பையைத் துரையிடம் கொடுத்தான்.
அதை வாங்கிய துரை, பையைத் திறந்து உள்ளே பார்த்தான். பின் உள்ளே இருந்து ஒரு பாக்கெட்டை கையில் எடுத்துப் பார்க்க, அது சரியாக அல்லியின் கண்களில் விழுந்தது.
வெற்றியின் வீட்டில் பார்த்த அதே மாதிரியான பாக்கெட் தான் அது.
அதைப் பார்த்ததும் ‘அப்போ வெற்றியின் வீட்டிலிருப்பதும் போதை மருந்து பாக்கெட் தானா?’ என்று நினைத்து விக்கித்து நின்றாள்.
அவளின் கைகள் எல்லாம் ஜில்லிட்டுப் போனது.
அவள் அதிர்வில் கண்களைக் கூடச் சிமிட்ட மறந்து நின்றிருக்கும் போதே அவள் இருந்த மரத்தைத் தாண்டி மூவரும் ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டே நடக்க, அந்தப் பேச்சு அவளின் காதுகளையும் சரியாகத் தீண்டி விட்டுச் செல்ல, தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் ஆடிப்போனாள் அல்லிராணி.