மனம் கொய்த மாயவனே – 22

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 22

“என்ன கிருதி, ஏன் எந்த நேரமும் இப்படி அமைதியா இருக்க? உன் முகத்தில் டூருக்கு வந்த உற்சாகமே இல்லையே?” என்று கேட்ட படி தன் நண்பர்களை விட்டுத் தள்ளி வந்து அமர்ந்திருந்த கிருதியின் அருகே அமர்ந்து கொண்டே கேட்டான் சந்துரு.

“ஹான், ஒன்னுமில்லை சந்துரு. எனக்குத் தனியா இருக்கணும் போலத் தோணுச்சு. அதான் இப்படி வந்து உட்கார்ந்துட்டேன்…” என்று அவனின் புறம் திரும்பிப் பார்க்காமல் தொலை தூரத்தில் ஓடிய மேகங்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் கிருதிலயா.

“டூர் வந்த இடத்தில் பிரண்ட்ஸ் கூட ஜாலியா சுத்த நினைக்காம, தனியா இருக்கப் பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டு இருக்க? உண்மையைச் சொல்லு கிருதி… எதுவும் பிரச்சினையா?” என்று கேட்டான்.

“இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை…” என்றவள், “ப்ளீஸ் சந்துரு. நான் தனியா இருக்கணும்…” என்றாள்.

அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து சென்றான் சந்துரு.

நேற்று தான் கல்லூரியிலிருந்து கேரளாவிற்குச் சுற்றுலா வந்திருந்தார்கள். தோழிகளுடன் சுற்றித் திரிந்தாலும் அவளிடம் உற்சாகமின்மை இருந்தது.

அவளின் தோழிகளான சரண்யாவும், சிந்துஜாவும் அவளுடனே தான் இருந்தனர். ஆனால் அவர்களிடம் கூடச் சரியாகப் பேசாமல் செழியன் பற்றிய எண்ணத்திலேயே இருந்தாள் கிருதிலயா.

மிருதுளா கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று சுற்றுலாவிற்கு வரவில்லை.

நாளை காலையில் ஊர் திரும்புவதாக இருந்தனர். இரண்டாவது நாளான இன்று வெளியே சுற்றி விட்டு அவர்கள் தங்கியிருந்த காட்டேஜிற்கு வந்துவிட்டனர்.

இரவு உணவு முடிந்ததும் மாணவர்கள் எல்லாம் காட்டேஜிற்குள் இருந்த பூங்காவில் பாட்டு, நடனம் என்று உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கக் கிருதி மட்டும் அவர்களுடன் ஒன்ற முடியாமல் ஒரு செடி அருகே யாரின் கவனத்தையும் கவராத வண்ணம் தனியாக வந்து அமர்ந்து கொண்டாள்.

அவள் சென்றதைப் பார்த்துச் சரண்யா அழைக்க, “நீங்க எஞ்சாய் பண்ணுங்கடி. எனக்குத் தலைவலிக்கிற மாதிரி இருக்கு. நான் இங்கே பக்கத்தில் தானே தள்ளி இருக்கேன்…” என்று அவளைச் சமாளித்து அனுப்பியிருந்தாள்.

தன் தோழிகளிடம் கூடச் செழியன் விஷயத்தில் நடந்ததை அவள் இன்னும் சொல்லவில்லை. ஏனோ சொல்ல விருப்பமும் இல்லை. அதனால் தனக்குள்ளே புழுங்கியவள் தனிமையை அதிகம் நாடினாள்.

அப்படித் தனியாக வந்தவள் மேல் ஒரு கவனத்தை வைத்திருந்த சந்துருவும் அவளிடம் வந்து கேட்டு விட்டுச் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் அன்று செழியனிடம் தன் காதலைச் சொன்னதையும், அதன் பின் நடந்ததையும் நினைத்துப் பார்த்தாள் கிருதிலயா.

மறுநாள் காலையில் செழியன் தன்னிடம் வந்து ஏதாவது பேசுவான். அப்போது மீண்டும் தன் காதலை அவனிடம் வலியுறுத்தலாம் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, அவனோ மறுநாள் முழுவதும் வேலை விஷயமாக வெளியே சென்றவன் வீட்டிற்கு வரவே இல்லை.

செழியனும் பின்பு அவளிடம் பொறுமையாகப் பேசலாம். தங்கையாகப் பார்த்தவளைத் தாரமாகப் பார்க்க முடியாது என்று எடுத்துச் சொல்ல நினைத்தவனுக்கு வேலை வீட்டில் கூட இருக்க நேரமில்லாமல் விரட்ட கிருதியிடம் பேச முடியாமலேயே போனது.

அறைக்குள்ளேயே அடைந்து போயிருந்த கிருதியிடம் பவானி பேசி சமாதானம் செய்ய முயல, அவளோ “உங்க மகனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கத் தயார்னா என்கிட்ட பேச வாங்க…” என்றாள்.

அதுக்கு மேல் அவரால் என்ன பேச முடியும்? அவருக்கு அவளும் முக்கியம் தான். ஆனால் மகன் தங்கையாக நினைக்கிறேன் என்று சொன்ன பிறகு திருமணத்தைப் பற்றி அவரால் எப்படிப் பேச முடியும்?

மகன் வேறு “நாம திரும்பத் திரும்பப் பேசுவது தான்மா அவளோட பிடிவாதத்தை அதிகரிக்க வைக்கிது. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். அவளோட இந்தக் கோபம் குறைஞ்சதும் அவளுக்கு எடுத்துச் சொல்றேன். அதுவரை நீங்க எதுவும் இப்போ பேச வேண்டாம். எனக்கு இப்போ வேலை அதிகமா இருக்கு. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க. நான் பேசி அவளைச் சரி பண்றேன்…” என்று சொல்லிச் சென்றிருந்தான்.

அவருக்கும் செழியன் அவளிடம் பேசுவதே சரி என்று பட்டது. தான் பேச போக “உங்க மகனை எனக்குக் கட்டி வைக்கிறேன்னு உறுதி தாங்க” என்று ஏதாவது கேட்டுவிட்டால், மகன் பக்கம் நிற்பதா இல்லை கிருதியின் பக்கம் நிற்பதா என்று புரியாமல் தான் குழம்பிப் போக வேண்டும் என்று நினைத்தவர் பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு அமைதியானார்.

கலகலவென்று இருந்த வீட்டில் இப்பொழுது ஆளுக்கு ஒரு மூலையில் இருப்பது அவருக்கு வருத்தத்தைத் தந்தது.

“கடவுளே! என் பிள்ளைங்களுக்கு எந்த மனக்கஷ்டமும் வராமல் அவங்க இரண்டு பேரும் இந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு வரணும்” என்று அவரால் கடவுளிடம் மட்டுமே சரணடைய முடிந்தது.

செழியன் தன்னிடம் பேச வரவில்லை என்றதும் கோபம் வந்து அடுத்த இரண்டாம் நாள் அவன் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த நேரத்தில் சோர்வுடன் அவனின் அறைக்குச் செல்ல வந்தவனை வழி மறைத்தாள் கிருதிலயா.

“என்ன அத்தான் என்னை அவாய்ட் பண்ண நினைக்கிறாயா?” என்று வழிமறித்துக் கேட்டவளை முறைத்துப் பார்த்தான் செழியன்.

அவள் ‘அத்தான்’ என்று அழைத்தது அவனுக்கு எரிச்சலை தந்தது. அதோடு எப்போது படுக்கையில் விழுவோம் என்று சோர்வுடன் வந்தவனை வழி மறைப்பது அதைவிடக் கடுப்பைக் கிளப்பியது.

அவள்தான் இரண்டு நாட்களாக ‘அத்தான்’ என்றுதான் அழைக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டு தயாராக வந்திருந்தாளே. அதனால் ‘அத்தான்’ என்ற அழைப்புச் சர்வசாதாரணமாக அவளின் வாயிலிருந்து வந்தது.

“முதலில் என்னை முன்னாடி போல மாமான்னு கூப்பிடு கிருதி. நீ இப்படிக் கூப்பிடுவது வேற யாரையோ கூப்பிடுவது போல இருக்கு. அதோட நான் எதுக்கு உன்னை அவாய்ட் பண்ணனும்? என் வேலையைச் செய்யவே எனக்கு நேரம் பத்தாம வீட்டுக்கே இப்பத்தான் வர்றேன். டயர்டா இருக்கு. வழி விடு…” என்று அவளைத் தாண்டிச் செல்ல முயன்றான்.

“அதெல்லாம் இனி நீ எனக்கு அத்தான் தான். என்னால மாத்திக்க எல்லாம் முடியாது. இப்ப வழியையும் விட முடியாது. இங்கே ஒருத்தி இரண்டு நாளா தவிச்சுப் போய்க் கிடக்கிறேன். உனக்குத் தூக்கம் தான் முக்கியமா? எனக்கு முதலில் பதில் சொல்லிட்டு நீ தூங்கப்போ…” என்று வம்பு செய்தாள்.

“ம்ப்ச், விளையாடாதே கிருதி. இப்ப நிஜமா உனக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கக் கூட எனக்குத் தெம்பில்லை. நான் போய்க் கொஞ்ச நேரமாவது தூங்கினால் தான் காலையில் வேலைக்குப் போக முடியும். போ… போய்த் தூங்கு. இன்னொரு நாள் பொறுமையா பேசுவோம்…” என்று சொன்னவன், அவள் பதிலுக்குக் காத்திராமல் அவளின் தோளில் கை வைத்து விலக்கி நிறுத்திவிட்டு வேகமாகத் தன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.

அதன் பிறகு அவனைக் கண்ணில் கூடப் பார்க்க முடியவில்லை. பின் அவன் சொன்னது போல் வெளியூர் கிளம்பிச் சென்றும் விட்டான்.

இவளும் சுற்றுலா வந்துவிட்டாள். ஆனாலும் செழியனின் சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவளைச் சுற்றுலாவில் ஒன்ற விடாமல் செய்து கொண்டிருந்தது.

அதனால் சற்று நேரத்திற்கு முன் செழியனை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தாள். அவன் சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.

அவன் அலைபேசியை எடுத்ததும் அவனை ஹலோ கூடச் சொல்ல விடாமல் “எனக்கு எந்தப் பதிலும் சொல்லாம என்னை இப்படி அலைய விடுறல்ல அத்தான். இப்ப பார் என்னால டூர் வந்த இடத்தில் கூட நிம்மதியா இருக்க முடியலை…” என்று பொறிந்தாள்.

“கிருதி, என்ன பேசுற நீ? இங்கே நான் வேலையா இருக்கேன்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான் செழியன்.

“எனக்குப் பதில் சொல்லிட்டு என்ன வேலை வேணும்னாலும் பண்ணு…” என்றாள்.

“குழந்தை மாதிரி அடம் பிடிக்காதே கிருதி. எதைப் பத்தியும் நினைக்காமல் இப்ப டூரை எஞ்சாய் பண்ணு. நானும் வேலையை முடிச்சுட்டு வர்றேன். அப்புறமா நிதானமா பேசலாம். இப்போ போனை வை” என்றான்.

“இல்ல, நீ இப்பவே சொல்லு. நீ என்ன கல்யாணம் பண்ணிக்குவியா, மாட்டியா?” என்று பிடிவாதமாகக் கேட்டாள்.

புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிப்பவளின் மீது கோபம் வந்தது. ஆனாலும் பொறுமையாக எடுத்துச் சொல்ல முயன்றான் செழியன்.

“உன்னோட இந்த வயது கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிற வயசு இல்லை கிருதிமா. நீ இன்னும் சின்னப் பொண்ணுடா…”

“இல்ல, எனக்கு இருபது வயசு ஆச்சு. இது ஒன்னும் சின்ன வயசு இல்லை…” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டுச் சொன்னாள் கிருதிலயா.

“என்னை முழுசா பேச விடு கிருதி. நீ சொன்ன மாதிரி உனக்கு இருபது வயசு தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இந்த வயசில் படிப்பு தான் முக்கியம். இந்த வயசில் தான் மன தடுமாற்றமும் அதிகம் வரும். அதையெல்லாம் வென்று வாழ்க்கையில் எப்படி முன்னேறுவதுன்னு பார்ப்பது தான் இப்போ முக்கியம்…”

“அதெல்லாம் நான் ஜெயித்துக் காட்டிடுவேன் மாமா. ஆனா நீயும் கூடவே இருக்கணும். அதுக்கு என்னை நீயும் காதலிக்கிறதா ஒரே ஒருமுறை மட்டும் சொல்லு போதும்…” என்றாள்.

“இது தான் உன்னோட தடுமாற்றம் கிருதிமா. வாழ்க்கையில் காதல் வரலாம். ஆனால் அந்தக் காதல் உணர்வுபூர்வமா இருக்கணுமே தவிர, உதட்டளவில் இருக்கக் கூடாது.

என்கிட்ட இருந்து எப்படியாவது காதல் என்ற வார்த்தையை வாங்கிவிடணும் என்ற எண்ணம் உனக்கு இருக்கே தவிர, என் மனசை வாங்கணும்னு உன்கிட்ட எண்ணம் இல்லை. அதனால் தான் உறுதியா சொல்றேன். இப்போ உனக்கு வந்திருப்பது காதலே இல்லை.

அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க. அதனால் நீ செய்றது காதல் தான் அப்படின்னு நம்பாதே. உன் மனசு என்ன சொல்லுதுன்னு யோசி. இப்போ உன்கிட்ட காதல் என்ற வார்த்தையினால் உண்டான பதட்டமும், பரவசமும் இருக்கே தவிர உண்மையான காதல் இல்லவே இல்லைடா கிருதிமா. மாமா உன்னைத் தூக்கி வளர்த்தவன்டா. உன்கிட்ட ஒரு அண்ணாவா, பிரண்டா இருக்க நினைச்சிருக்கேனே தவிர வேற விதமான ஈடுபாடு எனக்கு வரவே வராது.

யோசி… உன் மனசை அலசி யோசி. நாம வளர்ந்த விதத்தை யோசி. காதல் என்ற வார்த்தையை மட்டும் பிடிச்சுக்கிட்டு யோசிக்காம, காதல் கொடுக்கும் உணர்வுகளைப் பற்றி யோசி. அதுவே உனக்கு நமக்குள்ள இருக்குற உறவு நிலையைப் புரிய வைக்கும். எங்க கிருதி விளையாட்டு புத்தியா இருந்தாலும் தெளிவா யோசிக்கவும் செய்வாள்னு நம்புறேன்…” என்று சொல்லி முடித்துத் தன் வார்த்தைகள் அவளின் மனதில் இறங்க நேரம் கொடுத்தவன்,

“நாம திரும்ப நேரில் சந்திக்கும் போது நாம பழைய படி சிரித்து, சேட்டை செய்து விளையாடி மகிழும் சூழ்நிலையில் தான் சந்திப்போம்னு நம்புறேன் கிருதிமா. நல்லபடியா டூரை எஞ்சாய் பண்ணிட்டு வா…” என்று சொல்லி அவளை யோசிக்க விட்டுத் தொடர்பை துண்டித்துக் கொண்டான் செழியன்.

அப்படியே அசைவற்றுப் போனாள் கிருதிலயா. ‘நான் காதலிக்கவே இல்லையா? அப்படியா?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் அப்படியே இன்னும் சற்று நேரம் யோசித்திருந்தால் அவள் மனது விரைவிலேயே தெளிந்திருக்கும்.

ஆனால் அதற்குள், “என்ன கிருதி இன்னும் இப்படியே உட்கார்ந்து இருக்க? உனக்கு என்ன பிரச்சினைன்னு சொல்லு. என்னால் தீர்க்க முடியலைனாலும் உன் மன பாரம் கொஞ்சமாவது குறையும்…” என்று சொல்லிய படி மீண்டும் கிருதியின் அருகில் வந்து அமர்ந்தான் சந்துரு.

முதலில் அவனிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே கிருதிக்கு இல்லை. ஆனால் செழியன் சொல்லியிருந்த விஷயங்கள் அவளைக் குழப்பி விட்டிருந்தன.

ஒருவேளை சந்துருவிடம் சொல்லும் போது தனக்குத் தெளிவு கிடைக்குமோ என்று தோன்ற சந்துருவிடம் சொல்ல முடிவெடுத்தாள்.

செழியன் அவளுடன் வளர்ந்தவன். அவள் மீது அக்கறை கொண்டவன். அவன் குணம் என்ன என்று அறிந்தவள் அவள். அவன் சொன்னதை அவளே யோசிக்கும் போது அவனின் எண்ணப்போக்கையும் அறிந்து யோசிப்பாள்.

ஆனால் சந்துரு, செழியனின் குணநலன்களை அறிந்தவன் இல்லை. அவனின் சிந்தனை எப்படி இருக்கும் என்று தெரியாதவனிடம் போய் விஷயத்தைச் சொன்னால் அவனின் கண்ணோட்டம் வேறாக இருக்கும் என்று அறியாமல் சந்துருவிடம் நடந்த அனைத்தையும் சொல்லி, சற்று நேரத்திற்கு முன் செழியன் பேசியது வரை சொல்லி முடித்திருந்தாள் கிருதிலயா.

கேட்டதும் சில நொடிகள் அவன் மௌனமாக இருக்க, “என்ன சந்துரு, ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?” என்று கேட்டாள்.

“எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு கிருதி…” என்றான்.

“எதுக்கு?”

“உன் காதல் தோற்றுப் போனதை நினைச்சுத்தான்…” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

“என்ன சொல்றீங்க சந்துரு? என் காதல் தோற்றுவிட்டதா? ஆனா என் மாமா என்னோடது காதலே இல்லைன்னு சொன்னாரே?” என்று கேட்டாள்.

“உன்னோட மாமா வேற ஒரு பொண்ணை லவ் பண்றதா சொன்னியே கிருதி. அதுதான் காரணம். உன் மாமா தன்னோட காதலுக்கு நீ குறுக்கே வந்திடக்கூடாதுன்னு தான் அப்படிச் சொல்லியிருக்கார்.

இந்த வயது காதல் வரும் வயசு தான் கிருதி. சொல்ல போனா இதுதான் சரியான வயசு. இப்போ எல்லாம் ஸ்கூல் பசங்களே லவ் பண்றதைப் பார்த்துருக்கத் தானே. அவங்களே லவ் பண்ணும் போது காலேஜ் படிக்கிற நீ பண்றது லவ்வே இல்லைன்னு உன் மாமா சொல்றது சுத்த ஹம்பக்…” என்றான்.

“ஓ!” என்றவள் தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள்.

செழியன் தன்னுடையது காதலே இல்லையென்று சொல்ல, சந்துரு இப்படிச் சொல்கிறானே? என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

“காதல் தோத்துப் போச்சுன்னு ஃபீல் பண்ணாதே கிருதி. உன் மாமா இன்னொரு பொண்ணைக் காதலிக்கும் போது நீ ஏன் அவரே தான் வேணும்னு நினைக்கிற? உனக்கு அவரை விடப் பெட்டரா ஒரு ஆள் கிடைப்பான். சோ, கவலைப்படாதே…” என்று சொல்லி அவள் காதல் தோல்வி அடைந்து விட்டது என்று அவளின் மனதில் பதிய வைக்க முயன்றான்.

பின்பும் சிறிது நேரம் அவன் அப்படியே பேச கிருதியின் மனது செழியன் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அருகில் இருந்து துர்போதனை செய்தவனின் பேச்சை நம்ப ஆரம்பித்தது.

அதன் விளைவு அவளின் முகம் வேதனையையும், குழப்பத்தையும் பிரதிபலித்தது.

அதனைக் கண்ட சந்துரு அவள் அறியாமல் வெற்றி புன்னகை புரிந்து கொண்டான்.

“நீங்க சொன்னது தான் சரின்னு படுது சந்துரு. அந்த ரத்னாவை கல்யாணம் பண்ணிக்க என் மாமா என்னைத் தள்ளி நிறுத்த தான் அப்படிப் பேசியிருக்கும். ஆனாலும் என் மாமா ரொம்ப விவரம் சந்துரு. என் வாயாலேயே அதை நான் காதலிக்கலைன்னு சொல்ல வைக்க எப்படி நேக்காகப் பேசியிருக்குப் பாருங்க…” என்றாள் வேதனையான குரலில்.

“உன் கஷ்டம் புரியுது கிருதி. ஆனா இனியும் நீ உன் மாமாவை விரும்புவது முட்டாள்தனம். உனக்கு உன் மாமாவை விட இன்னும் ‘யங்’கா ஆள் கிடைப்பான். அதனால் அவரை மனசில் இருந்து தூக்கிப் போட்டுட்டு நிம்மதியா இரு…” என்றான்.

“உண்மை தான் சந்துரு. எனக்கும், என் மாமாவும் வயசு வித்தியாசம் அதிகம் தான். எனக்கென்ன வேற ஆளா கிடைக்காது?” என்று அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிக் கொண்டவள், “போனா போகட்டும்னு நினைச்சாலும் மனசு எல்லாம் பாரமா இருக்கு சந்துரு. நெஞ்சு எல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு…” என்று இதயபகுதியில் கை வைத்து அழுத்தி விட்டுக் கொண்டாள்.

“காதல் தோல்வி அப்படித்தான் இருக்கும் கிருதி. போகப் போகச் சரியாகிடும். சரியாகலைனா சரி பண்ணவும் மருந்து இருக்கு…” என்று மெதுவான குரலில் சொன்னான்.

“மருந்தா? என்ன மருந்து?”

“அதைச் சொன்னா நீ கோவிச்சுக்குவ கிருதி. வேண்டாம்…” என்று நல்லபிள்ளை போல் மறுத்தான்.

“சும்மா சொல்லுங்க சந்துரு. எனக்கு என் மனக்கஷ்டம் உடனே போகணும் போல இருக்கு. அதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க…” என்றாள்.

“நீ கோவிச்சுக்க மாட்டன்னு நம்பிக்கையில் சொல்றேன் கிருதி. இது போல் மன வலிக்குப் போதை தான் பெஸ்ட் மருந்து…” என்றான்.

“ஓ, ட்ரிங்க்ஸா? ட்ரிங்க்ஸ் சாப்பிட்டா சரியாகிடுமா?” என்று கேட்டாள்.

ஏற்கனவே மதுவைக் குடித்துப் பார்த்திருக்கிறாள் என்பதால் அவன் போதை என்று சொன்னதைக் கேட்டு அவளுக்கு எதுவும் தப்பாகத் தெரியவில்லை.

“ட்ரிங்க்ஸ் சாப்பிட்டாலும் வலி போகும் தான். ஆனா நான் சொன்ன மருந்து அதில்லை கிருதி. அந்த மருந்து நம்மளையே மறக்க வைக்கும். நம்ம வலியைச் சுத்தமா போக வைக்கும். அதை விட உன்னை வேண்டாம்னு சொன்னவங்களை நினைக்க வைக்காது…” என்றான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்க கேட்க அவளுக்கு அந்த மருந்து உடனே வேண்டும் போல் தோன்றியது. அதனால் என்ன மருந்து என்றாலும் சரி, முயற்சித்துத் தான் பார்ப்போமே என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.

சிகரெட்டையும், மதுவையும் முயற்சித்துப் பார்த்து விட்டு விட்டவள் தானே? அதனால் அந்தப் புதிய மருந்தையும் முயற்சித்துப் பார்த்து விட்டுவிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டாள்.

“அந்த மருந்து இப்போ இங்கே வச்சுருக்கீங்களா சந்துரு?” என்று கேட்டவளை, கண்கள் மின்னப் பார்த்தான்.

“டூருக்குக் கொண்டு வந்திருக்கேன் கிருதி. ஆனா அதை இப்போ வெளியே எடுக்க முடியாது. மிட்நைட்ல தான் யாருக்கும் தெரியாம யூஸ் பண்ண முடியும். லெட்சரருக்கும், நம்ம பிரண்ட்ஸ் யாருக்காவதும் தெரிஞ்சா கூடப் பிரச்சினை தான்…” என்றான்.

“அப்போ மிட்நைட்ல எடுத்துட்டு வாங்க சந்துரு…” என்றாள்.

“கண்டிப்பா எடுத்துட்டு வர்றேன். ஆனா நீ தான் நான் சொல்ற இடத்துக்கு யார்கிட்டயும் சொல்லாம வரணும்…” என்றான்.

“எங்கே?” யோசனையுடன் கேட்டாள்.

“இந்தக் காட்டேஜ்லயே நான் நம்ம சாருங்களுக்குத் தெரியாம தனியா ஒரு ரூம் எடுத்துருக்கேன் கிருதி. நான் நைட் அங்கே தான் தங்குவேன். நம்ம மருந்தை யாருக்கும் தெரியாம எடுத்துக்கணும்னா அதுதான் வசதி…” என்றான்.

“சரி, வர்றேன் சந்துரு…” என்று அவளின் வழக்கமான குணம் போலச் சட்டென்று யோசிக்காமல் சம்மதம் சொல்லியிருந்தாள் கிருதிலயா.

அன்று நள்ளிரவு பக்கத்தில் உறங்கிய தோழிகளுக்குத் தெரியாமல் அறையை விட்டு வெளியே வந்து சந்துரு சொல்லியிருந்த காட்டேஜிற்குச் சென்று கதவைத் தட்டினாள்.

அவளுக்காகக் காத்திருந்த சந்துரு உடனே கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்துக் கதவைச் சாற்றினான்.

“நீங்க சொன்ன மருந்து ட்ரக்ஸா சந்துரு?” என்று அறைக்குள் புகுந்ததும் கேட்டாள்.

அதுவாக இருக்கலாம் என்ற யூகத்தில் அவள் கேட்க, சந்துரு ஒரு நொடி திடுக்கிட்டான்.

பின் எப்படியும் அவளுக்குத் தெரியத்தானே போகிறது என்ற எண்ணத்தில், “ஆமா கிருதி. ஏன் ட்ரக்ஸ்னா வேண்டாமா? வேண்டாம்னா பரவாயில்லை கிருதி, நீ கிளம்பு…” என்றான் நல்ல பிள்ளை போல்.

“வேண்டாம்னு நினைச்சிருந்தால் இங்கே வந்திருக்கவே மாட்டேனே சந்துரு. ஆனா ஒரு விஷயம் நான் ட்ரக்ஸ் எடுத்துக்கிட்டதை நீங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாது…” என்றாள்.

“இது எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கக் கூடிய விஷயமில்லை கிருதி. ஏன் நீ சிகரெட், ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்டதை நான் யார்கிட்ட சொன்னேன்? யார்கிட்டயும் சொல்லலை தானே? என் மேல நம்பிக்கை இல்லையா கிருதி?” என்று கேட்டான்.

“நம்பிக்கை இல்லைனா இங்கே வந்திருக்கவே மாட்டேன் சந்துரு…” என்றாள்.

“ஹப்பாடா! இப்பத்தான் நிம்மதியா இருக்கு. உன் நம்பிக்கைக்கு ஒரு குறையும் வராது. சரி, வா…” என்று அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர சொல்லிவிட்டு அவன் பெட்டியில் இருந்து ஒரு ஊசி மருந்தை எடுத்துக் கொண்டு வந்தான்.

ஊசியைப் பார்த்து அவளின் கண்கள் மிரண்டு விழித்தாலும், “இதைப் போட்டுக்கிட்டா மனசு வலி எல்லாம் போயிடும் தானே சந்துரு?” என்று கேட்டாள்.

“இதில் பயப்பட ஒன்னுமே இல்லை கிருதி. நீ போட்டுப் பாரு. உன் மனக் கஷ்டமெல்லாம் குறைஞ்சிடுச்சுன்னு நீயே என்கிட்ட சொல்லுவ…” என்று சொல்லிக் கொண்டே அவளின் கையில் போதை ஊசியை ஏற்றினான் சந்துரு.

நொடிகள் செல்ல செல்ல உடம்பில் ஏறிய போதையில் மனக்கஷ்டத்தை என்ன? அவளையே மறந்தாள் கிருதிலயா.