மனம் கொய்த மாயவனே – 19
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 19
“அல்லி… அல்லி…” என்று எதிர் வீட்டில் இருந்து வந்த அழைப்பைக் கேட்டு உதடுகளைக் கோபத்துடன் சுழித்துக் கொண்டாள் அல்லிராணி.
“போடின்னு விரட்டிட்டு இப்போ எதுக்குக் கூப்பிடுறானாம்?” என்று கடுப்புடன் முனங்கிக் கொண்டாள்.
‘போகாதே அல்லி. உனக்கு என்ன சூடு, சொரணையே இல்லையா? அவன் எப்போ பார்த்தாலும் என்னமோ நாயை விட்டுற மாதிரி விரட்டிட்டே இருக்கான். நீயும் வெட்கமில்லாம வழிய வழிய போறதால தான் அவனுக்கு ரொம்ப ஏத்தம் ஆகிப்போச்சு…’ என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள்.
“ஹேய், ஆள் முழுங்கி… வாடி…” என்று இப்போது தீனமாக ஒலித்தது வெற்றியின் குரல்.
அவனின் குரலில் வலி தெரிய, இப்போது அவஸ்தையாகக் கைகளைப் பிசைந்து கொண்டாள் அல்லிராணி.
அப்போது தான் அவன் உடம்பு முடியாமல் இருக்கிறான் என்று ஞாபகத்தில் வர, போவதா, வேண்டாமா? என்று யோசனையுடன் தன் வீட்டு வாசலிலேயே நின்றிருந்தாள்.
மதியம் அவனிடம் கோபித்துக் கொண்டு வந்தவள் கோபத்துடன் அப்படியே படுத்து உறங்கியிருந்தாள்.
மாலை ஆனதும் தான் எழுந்து அன்னை வேலையில் இருந்து வரும் முன் காஃபி போடலாம் என்று அடுப்பை பற்ற வைத்திருந்தாள்.
அப்போது தான் வெற்றி எதிர் வீட்டில் இருந்து அவளை அழைக்கும் குரல் கேட்டது.
பாலை இறக்கி வைத்து விட்டு வாசலுக்கு வந்தவள் அங்கே செல்லக்கூடாது என்று விறைப்புடன் நின்றிருந்தவளை அவனின் தீனக் குரல் அசைத்துப் பார்த்தது.
“ப்ச்ச்…” என்று வலியுடன் அவன் சலித்துக் கொள்ளும் சப்தம் கேட்க, அதற்கு மேலும் தயங்கி நின்று கொண்டிருக்காமல் அவனின் வீட்டை நோக்கி ஓடினாள்.
அங்கே காலை பிடித்துக் கொண்டு “ஸ்ஸ்…” என்று முனங்கிக் கொண்டிருந்தான் வெற்றி. காலை பார்க்க, கட்டையும் மீறி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
“வெற்றி… என்ன? என்னாச்சு? எப்படி ரத்தம் வந்துச்சு?” என்று பதறிக் கொண்டு அவனின் அருகில் சென்று காலை பிடித்துப் பார்த்தாள்.
“வந்துட்டியாடி? அப்படி என்ன உனக்குக் கோபம் வருது? எவ்வளவு நேரமாகக் கூப்பிட்டேன்…” என்று கேட்டான் வெற்றி.
“இது நல்ல நியாயமா இருக்கே? நீ தான் போடினு விரட்டின. நீ விரட்டினா போயிடணும். கூப்பிட்டா உடனே வரணுமோ?” என்று இன்னும் ஒட்டிக் கொண்டிருந்த கோபத்துடன் கேட்டாள்.
“சரிடி, இனி போன்னு சொல்ல மாட்டேன். சாரி… நீ சொன்னது சரி தான். எனக்குச் சொல்ல பிடிக்கலை இனி கேட்காதேனு சொல்லியிருக்கணும். அதை விட்டு உன்னைக் கிஸ் பண்ணி பேச்சை மாத்தியது தப்பு தான். தப்பை என் மேல வச்சுக்கிட்டு உன்கிட்ட நான் கோபப்பட்டிருக்கக் கூடாது…” என்று தன் தவறை உணர்ந்து சொன்னான் வெற்றி.
காதல்!
‘தழைந்தும் போக வைக்கும்’ என்பதை வெற்றி நிரூபித்துக் கொண்டிருந்தான்.
“பரவாயில்லையே… இப்படிக் கூடப் பேசுவியா நீ?” என்று அவனை வியந்து பார்த்து சொன்னாள்.
“என்னை என்ன அரக்கன்னா நினைச்ச? மனுஷன் தான்…” என்றான் கடுப்புடன்.
“சரி, அதை விடு… காலுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“நீ போனதும் தூங்கிட்டேன். தூக்கத்தில் நான் பேசியதுக்கு வருத்தப்பட்டு நீ அழுகுற மாதிரி கனவு வந்துச்சு. காதலை சொன்ன கொஞ்ச நேரத்திலேயே உன்னை அழ வைச்சுட்டோமேனு என் மேலேயே எனக்குக் கோபம் வந்துச்சா காலை கோபப்பட்டு வேகமாக உதறினேன். அதான் இப்படி…” என்று ரத்தம் கசிந்து கொண்டிருந்த காலை காட்டினான்.
“கனவுல கூட என்னைப் பத்தி நினைப்பியா நீ?” என்று அதிசயமாக நாடியில் கைவைத்துக் கேட்டாள் அல்லி.
“எனக்கு இங்கே கால் வலி உயிர் போகுது. நீ என்ன எல்லாத்துக்கும் நீட்டி முழங்கி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க?” என்று சிடுசிடுத்தான் வெற்றி.
“பின்ன என்ன வெற்றி அன்னைக்கு அரக்க பறக்க பரக்காவட்டி போல உன்னை அடைச்சுப் போட்டுட்டாங்கனு நினைச்சு நீ வியாபாரம் பார்க்கிற இடத்துக்கு வந்தப்ப எப்படிச் சிடுசிடுன்னு என்கிட்ட பேசுன.
பெரிய இவன் மாதிரி அவளை வீட்டுக்குப் போகச் சொல்லுன்னு முருகன் அண்ணேகிட்ட சொல்லிட்டு நிக்காம ஓடினியே. நேத்துக் கூட ஆட்டோவில் இருந்து தள்ளி விட்டுருவேன்னு சொன்னவன் தானே நீ.
ஏன் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் கூட என்னை நாயை விரட்டுற மாதிரி விரட்டியவன் இப்போ கனவில் கூட என் அழுகையை நினைச்சுக் கவலைப்பட்டேன்னு நீ சொல்லும் போது எனக்கு எல்லாமே அதிசயமாத்தான் இருக்கு…” என்று இன்னும் அவனின் மனமாற்றத்தை நம்ப முடியாத அதிசயத்துடன் சொன்னாள்.
“ரோட்டுல வச்சு விரட்டாம அங்கேயே இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்திருந்தா உனக்குக் குளுகுளுன்னு இருந்திருக்குமா?” என்று நக்கலுடன் கேட்டான்.
“என்னது?” என்று வாயைப் பிளந்து கேட்டாள் அல்லிராணி.
“பின்ன என்னடி? எனக்காக ஒருத்தி அப்படிப் பதறி அடிச்சுட்டு வந்து நிற்கும் போது பார்த்துட்டுக் கையைக் கட்டிக்கிட்டு என்னால் எவ்வளவு நேரம் நிற்க முடியும்? எனக்கு அப்படித்தான் செய்யத் தோணுச்சு. இன்னும் கொஞ்ச நேரம் நான் அங்கே நின்னா ரோட்டில் வைத்து அதைத்தான் பண்ணிருப்பேன். அதான் அங்கிருந்து சீக்கிரம் போனேன்…” என்றான்.
அவன் சொன்ன விளக்கத்தைக் கேட்டு வாயடைத்துப் போனாள் அல்லி.
“நேத்தும் எனக்காக நீ பதறியது என்னை உலுக்குச்சு. ஆனா நான் வேற ஒரு டென்ஷனில் இருந்தேன். அதான் கோபத்தில் ஏதாவது கத்தியிருப்பேன். இப்பயும் அப்படித்தான் எனக்குக் கோபம் வந்தது. கோபம் வந்தா என் பேச்சு இப்படித்தான் இருக்கும். இனி பழகிக்கோ…” என்று அசால்டாகச் சொன்னான்.
‘சரி தான்’ என்பது போல் விழிகளைப் பெரிதாக விரித்துப் பார்த்தவளைக் காதலுடன் பார்த்தவன், “என்னை இப்படிப் பார்த்துப் பார்த்தே மயக்கிட்டியேடி ஆள் முழுங்கி…” என்றான்.
“க்கும்… நீ மயங்குற ஆளு தான் போ. நேத்து அந்த டாக்டரு ஏதோ ஒரு ஊசியைத் தப்பா போட்டுட்டார்னு நினைக்கிறேன். அதான் கிறுக்குப் பிடிச்ச மாதிரி உளறிகிட்டு இருக்க…” என்றாள் அல்லி.
“ஆமாடி காதல் கிறுக்குப் பிடிச்சுப் போச்சு…” என்று அதற்கும் பதில் சொன்னவனைப் பார்க்காமல் அவனின் கால் காயத்தைப் பார்த்தாள்.
“காலில் ரத்தம் வருது வெற்றி. வா ஆஸ்பத்திரிக்குப் போய்த் திரும்பக் கட்டுப் போட்டுட்டு வருவோம்…” என்றாள்.
“ஏன்டி, நான் எவ்வளவு ஃபீலிங்கா பேசிட்டு இருக்கேன். நீ என்னென்னா ரத்தம், கட்டுன்னு பேசிட்டு இருக்குற…” என்று எரிச்சலை காட்டினான்.
“எப்பா சாமி, நீ நிமிசத்துக்கு ஒரு முகம் காட்டுற. எனக்கு மண்டை எல்லாம் சூடாகுது. இப்போ ரத்தம் வருதுன்னு தானே என்னைக் கூப்பிட்ட. வா ஆஸ்பத்திரிக்குப் போவோம்…” என்றாள் காரியத்தில் கண்ணாக.
“ரத்தத்தைக் காட்ட எல்லாம் கூப்பிடலை. எனக்குப் பாத்ரூம் போகணும். கூட்டிட்டுப் போ. ரத்தம் எல்லாம் கொஞ்ச நேரத்தில் உறைஞ்சி போய்டும்…” என்றான்.
“விரட்டியவன் நீயா போயிருக்க வேண்டியது தானே? இப்ப மட்டும் என் ஞாபகம் வந்திருச்சாக்கும்?” என்று நொடித்துக் கொண்டாள்.
“கூப்பிடும் தூரத்தில் நீ இருக்கும் போது நான் ஏன் தனியா போகணும்?” என்றான்.
“கிறுக்கு முத்தி தான் போச்சு போல…” என்று முனங்கிக் கொண்டாள்.
பின் அமைதியாக அவனின் கையைத் தோளில் போட்டு அழைத்துக் கொண்டு போய் விட்டுத் திரும்ப அழைத்து வந்து விட்டவள் “நான் கிளம்புறேன்…” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.
“ஏய்… என்னடி ஆச்சு உனக்கு? ஏன் அப்ப இருந்து என்னவோ போலப் பேசுற?” என்று கேட்டான்.
“என்ன ஆகணும்? ஒன்னும் ஆகலை. நான் கிளம்புறேன்…” என்று அங்கிருந்து நகரப் போனவளின் கையைப் பிடித்துத் தன் அருகே இழுத்தான்.
அவன் அமர்ந்த படியே இழுக்க அவன் இழுத்த வேகத்தில் அவனின் மேலேயே விழுந்தாள்.
அவளை அணைத்துப் பிடித்த படி அவளைத் தாங்கிக் கொண்டவன், நேராக அமர வைத்து அவளின் முகத்தைப் பார்த்தான்.
அல்லியின் முகம் அவனின் புறம் திரும்பி இருந்தாலும் கண்கள் அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் சுழன்று கொண்டிருந்தன.
“என்னைப் பாருடி…” என்று அதட்டினான்.
அப்படியும் பார்க்காமல் அவள் சண்டித்தனம் செய்ய, “இப்போ என்ன கோபம் உனக்கு? நான் என் மனசை சொல்லி அன்னைக்கு நடந்துகிட்டதுக்கு விளக்கம் சொன்னப்ப கூட அதுக்காக நீ சந்தோஷப்படலை. ஏன் என்னாச்சு?” என்று கேட்டான்.
“சந்தோசம் எல்லாம் எக்கச்சக்கமா கிடக்கு…” என்றாள் சுரத்தையே இல்லாமல்.
“சந்தோஷத்தை ஏன்டி சந்தோஷமே இல்லாம சொல்ற?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
“க்கும்… என் பேச்சை மாத்துறதுக்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பான் போல…” என்று எங்கோ பார்த்துக் கொண்டு முணுமுணுத்தாள்.
“ஹா…ஹா…” என்று அவள் சொன்ன விதத்தில் வாய் விட்டுச் சிரித்தான்.
“ரோட்டுல வச்சே முத்தம் கொடுத்துருப்பேன்னு சொன்னவன் அதை உன்கிட்ட சொல்லும் போது கொடுக்கலைனு தான் கோபமா? முத்தம் வேணும்னா நேரடியா கேளுடி. அதை விட்டு ஏன் மூஞ்சை தூக்கி வச்சுக்கிற?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
முன்பு போல அவளின் பிடரியில் கை வைத்துத் தன்னருகில் அவளை இழுத்து “ம்ம்… என்னைப் பாருடி…” என்று தன் கண்களைச் சந்திக்க வைத்தான் வெற்றி.
“எனக்கும் உன்னை முன்னாடியே பிடிச்சு இருந்தது. ஆனா நான் தான் சில காரணங்களுக்காக உன்கிட்ட என் மனசை காட்டிக்கலை. என்ன காரணம்னு எல்லாம் இப்போ சொல்ல முடியாது. இப்போ இந்த நிமிஷம் எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் உன்னை விரும்புறேன். இது முற்றிலும் உண்மை. இதை மட்டும் என்னைக்கும், எந்தச் சூழ்நிலையிலும் மறக்காதே…” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே ஆழ்ந்த குரலில் சொன்னவன், அவளின் இதழில் அழுத்தமாகத் தன் உதடுகளைப் பதித்தான்.
மனதை முழுமையாகப் பகிர்ந்த பிறகு கொடுக்கப்பட்ட அந்த முத்தம் இப்போது இவரையுமே திக்குமுக்காட வைத்தது.
அதிலும் அல்லி மயங்கித்தான் போனாள். அவனின் மனதை அவன் சொல்லும் போதே உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ந்து போனாள். ஆனாலும் வேண்டும் என்றே முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டிருந்தாள்.
‘எம்புட்டு ஆசை வச்சுக்கிட்டு இருந்துட்டு என்னை விரட்டிக்கிட்டே இருந்து இருக்கான் பாரேன்…’ என்று செல்ல கோபமும் வந்தது.
அதிலும் ‘சாலையில் வைத்தே உன்னை அணைத்து முத்தமிட தோன்றியது. எனக்கு முன்பே உன்னைப் பிடிக்கும்’ என்ற வார்த்தைகள் அவளின் காதலுக்குக் கிடைத்த வெற்றியாகத் தோன்ற, வெற்றி இட்ட முத்தத்தை ரசித்து உள்வாங்கிக் கொண்டாள்.
“டேய் வெற்றி…” என்ற அதிர்ந்த குரல் கேட்டு முத்தத்தில் முத்தெடுத்துக் கொண்டிருந்த இருவரும் வேகமாகப் பிரிந்து சப்தம் வந்த பக்கம் பார்த்தனர்.
கண்களை அகலமாக விரித்து அவர்கள் முத்தம் கொடுத்ததை அதிர்ந்து பார்த்த பார்வையை மாற்றாமல் வாசல் அருகில் நின்றிருந்தான் முருகன்.
அவனை அங்கே கண்டதும் சங்கடத்துடன் எழுந்து வெளியே ஓடினாள் அல்லிராணி.
“வாடா முருகா…” என்று ஒன்றுமே நடவாதது போல் சுவற்றில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து நண்பனை வரவேற்றான் வெற்றி.
தன்னைத் தாண்டி வெளியே ஓடிய அல்லியை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே வந்த முருகன், “என்னடா நடக்குது இங்கே?” என்று இன்னும் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“என்ன நடக்குது? நீ பார்த்தது தான் நடந்துச்சு. இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்டுக்கிட்டு…” என்று அலட்சியமாகச் சொன்னான் வெற்றி.
வெற்றியை ஒரு மார்க்கமாகப் பார்த்த முருகன் “நீ செய்றது சரியில்லையே வெற்றி…” என்றான்.
“சரியில்லையா? அதெல்லாம் சரியாத்தான் செய்தேன்…” அல்லியின் இதழ்களை ஸ்பரிசித்த தன் உதடுகளை நாவால் மென்மையாக நீவி விட்டுக் கொண்டான்.
“அதான் ரசிச்சு செய்துட்டு இருந்தியே… உனக்குச் சரியாத்தான் இருக்கும்…” என்று கடுப்புடன் சொன்ன முருகன், “இப்போ எதுக்கு நீ அந்தப் புள்ள மனசை கலைச்சு விட்டுருக்க வெற்றி?” என்று கோபமாகக் கேட்டான்.
‘அவள் தான் என் மனசை கலைச்சவ… அது புரியாம நான் அவள் மனசை கலைச்சேன்னு சொல்லிட்டு இருக்குறான்…’ என்று தனக்குள் முனங்கிக் கொண்டான் வெற்றி.
“பதில் சொல்லு வெற்றி. அதுவும் நாம செய்ற வேலைக்கு இதெல்லாம் சரி வருமா?” என்று கேட்டான் முருகன்.
அவனின் கேள்வியில் சில நொடிகள் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டான் வெற்றி.
யோசனையில் அவனின் புருவங்கள் சுருங்கிக் கொண்டன.
பின் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன், “நம்ம வேலைக்கும், அல்லிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை முருகா. அதனால இரண்டையும் சேர்த்து முடிச்சுப் போடாதே…” என்று உத்தரவாகச் சொன்னான் வெற்றி.
“சம்பந்தம் இல்லையா? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லு. நாளைக்கே…” என்றவன் சட்டென்று பேச்சை நிறுத்தி, “நாளைக்கே என்ன நாளைக்கே… இப்போ இந்த நிமிஷம் நீ யாருன்னு தெரிஞ்சா அல்லி என்ன நினைப்பாள்னு தெரியுமா?” என்று வெற்றியைக் கூர்ந்து பார்த்த வண்ணம் கேட்டான் முருகன்
“என்ன சொல்லுவாள்? அதெல்லாம் அவள் ஒன்னும் சொல்ல மாட்டாள். நான் அவளைச் சமாளிச்சுக்கிறேன்…” என்று அலட்சியமாக வெற்றி சொல்ல,
“என்ன என்னைச் சமாளிப்ப வெற்றி?” என்று கேட்ட படி அங்கே வந்து நின்றாள் அல்லி.
அவளைத் திடீரென எதிர்பார்க்காத வெற்றியும், முருகனும் அதிர்ந்து அவளைப் பார்த்தனர்.
இருவரின் முகம் போன போக்கையும் நிதானமாகப் பார்த்த அல்லி, “என்னைப் பத்தி என்ன பேசிட்டு இருந்தீங்க? என்னை என்ன சமாளிக்கணும்?” என்று கூர்மையுடன் கேட்டாள் அல்லிராணி.
‘இதோ கேட்குறாளே… சொல்லு…’ என்பது போல் வெற்றியைப் பார்த்தான் முருகன்.
“ஒன்னுமில்லை அல்லி. நாங்க வேற விஷயம் பேசிட்டு இருந்தோம். ஆமா நீ எதுக்கு இப்போ வந்த?” என்று கேட்டுப் பேச்சை திசை மாற்ற முயன்றான் வெற்றி.
“இப்போ ஏன் பேச்சை மாத்த முயற்சி பண்ற வெற்றி? நீங்க பேசியதை நான் கேட்டுட்டேன். என்ன விஷயம் வெற்றி? நீங்க என்ன வேலை பார்க்குறீங்க? என்னை எதுக்குச் சமாளிக்கணும்?” என்று நீ சொல்லியே ஆக வேண்டும் என்பது போல் கேட்டாள்.
“ஏன் நாங்க என்ன வேலை பார்க்கிறோம்னு உனக்குத் தெரியாதா என்ன? நாங்களே ரோட்டோரம் துணி வித்துக்கிட்டு கிடக்கோம். இப்போ இந்தக் காதல் எல்லாம் தேவையான்னு முருகன் கேட்குறான். என்னடா முருகா அப்படித்தானே?” என்று அல்லியிடம் ஆரம்பித்து முருகனிடம் கேள்வியாக முடித்தான்.
வாய் கேள்வி கேட்டாலும், கண்கள் ‘ஆமாம் என்று சொல்’ என்று முருகனுக்குக் கட்டளை இட்டது.
அதைக் கண்டுகொண்ட முருகனும், “ஆமா தங்கச்சி, இரண்டு துணி வித்தாதான் அடுத்த வேளை சாப்பாடு நாங்களே சாப்பிட முடியும். இதில் உன்னையும் ஏன் கஷ்டப்படுத்தணும்னு தான் அவனைத் திட்டினேன்மா…” என்றான்.
“ஓ, வெற்றி எம்புட்டு காசு கொண்டு வந்தாலும் அதை வச்சு சமாளிச்சு என்னால் குடும்பம் நடத்த முடியும் அண்ணே. ஆனா நீங்க என்னைச் சமாளிக்கணும்னு இல்லை பேசினீங்க. இதில் என்னைச் சமாளிக்க என்ன இருக்கு?” என்று கேட்டாள்.
‘விட மாட்டாளே’ என்று பல்லைக் கடித்த வெற்றி, முருகனை முறைத்துப் பார்த்தான்.
‘எனக்குத் தெரிந்தே ஆக வேண்டும்’ என்பது போல் பிடிவாதமாக நின்றாள் அல்லிராணி.
‘இவர்களுக்கு இடையே போய் இப்படி மாட்டிக் கொண்டோமே’ என்பது போலப் பரிதாபமாக நின்றான் முருகன்.