மனம் கொய்த மாயவனே – 16
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 16
நாட்கள் அதன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க, கிருதிலயா, சந்துருவின் நட்பும் அதே வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது.
தினமும் இல்லையென்றாலும் இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்ளும்படியாக நேர்ந்தது.
அப்படிச் சந்திக்கும் பொழுதுகளில் கிருதியுடன் மரியாதையாகப் பேசுவான் சந்துரு.
கிருதி, சந்துரு சந்தித்துக் கொள்ளும் சில நாட்களில் மிருதுளாவும் உடன் இருப்பாள்.
சரண்யாவும் அவ்வப்போது அவர்களுடன் சேர்ந்து கொள்வாள்.
ஒரு நாள் கல்லூரி முடிந்து சந்துரு தன் இருசக்கர வாகனத்தில் சென்றவன் கல்லூரியில் இருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு பெட்டிக் கடையில் வண்டியை நிறுத்தி விட்டு அந்தக் கடையில் சிகரெட் வாங்கிப் பிடிக்க ஆரம்பித்தான்.
அதை அவன் பின்னாலேயே தன் வீட்டிற்குச் செல்ல ஸ்கூட்டியில் வந்த கிருதிலயாவும் பார்த்து விட, பெட்டிக் கடை அருகில் வந்ததும் வண்டியின் வேகத்தைக் குறைத்து அவன் சிகரெட் புகையை வளைய வளையமாக ஊதி விடுவதைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.
மறுநாள் காலையில் கல்லூரிக்குச் சென்றதும் முதல் வேலையாகச் சந்துரு வழக்கமாக வண்டியை நிறுத்தும் இடத்திற்குச் சென்றாள்.
பத்து நிமிடங்கள் கடந்த பிறகு அங்கே வந்து சேர்ந்தான் சந்துரு.
“என்ன கிருதி கிளாஸ் போகாம இங்கே நிற்கிற?” என்று கேட்டவன் கண்கள் சிவந்து இரவெல்லாம் தூங்காதவன் போல் இருந்தான்.
“உங்களைப் பார்க்கத்தான் நிற்கிறேன் சந்துரு…”
“என்னைப் பார்க்கவா? என்ன விஷயம் கிருதி?”
அவனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள் கிருதிலயா.
இருசக்கர வாகனத்தில் வந்த மாணவ, மாணவிகள் எல்லாம் அப்போது தான் வந்து அங்கே தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொண்டிருந்தனர்.
ஆட்கள் நடமாட்டமாக இருக்க, “கொஞ்சம் தனியா பேசணும் சந்துரு. இன்னைக்கு ஈவ்னிங் பேசலாமா?” என்று கேட்டவளை கண்கள் பளபளக்க பார்த்தான் சந்துரு.
அந்தப் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை உணராமல் அவனின் பதிலுக்காக ஆர்வத்துடன் நின்றிருந்தாள் கிருதி.
“தனியா தானே? தாராளமா பேசலாமே. எங்கே மீட் பண்ணலாம்?” என்று அவள் தன்னைக் கண்டு கொள்ளக் கூடாது என்று கவனமாகப் பேசினான்.
“எங்க வீட்டுக்குப் போற வழியில் ஒரு பார்க் இருக்குல? அங்கே வர முடியுமா?” என்று கேட்டாள்.
“வர்றேன் கிருதி. அப்படித் தனியா பேசும் அளவிற்கு என்ன விஷயம் கிருதி? ஈவ்னிங் வரை என்னன்னு தெரியாம என் மண்டை காய்ஞ்சு போயிருமே…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனைப் பார்த்து சிரித்தாள்.
“பெருசாவெல்லாம் ஒன்னுமில்லை சந்துரு. என்னோட ஒரு சின்ன ஆசை. அதைத் தான் சொல்லணும். ஓகே ஈவ்னிங் மீட் பண்ணலாம். பை!” என்று விடைபெற்று சென்று விட்டாள்.
அவர்கள் இருவரும் அங்கே நின்று பேசியதையும், கிருதி விடைபெற்று சென்றதையும் சற்று தூரத்திலிருந்து கண்டு விட்டுச் சந்துருவின் அருகில் வந்தாள் மிருதுளா.
“ஹாய் சந்து! என்னப்பா, இப்பத்தான் வந்தீங்களா?”
“ஆமா மிருது. வா அப்படியே நடந்துட்டே பேசுவோம்…” என்று அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
“கிருதி உங்ககிட்ட என்னவோ பேசிட்டுப் போனாள். என்னவாம்?” என்று கேட்டாள்.
“அவள் என்கிட்ட என்ன பேச போகிறாள்? நான் வந்தப்ப தான் அவளும் வந்தாள். சும்மா ஹாய் சொல்லிப் பேசிக்கிட்டோம். அவ்வளவுதான்!” என்றான்.
“ம்ம் ஓகே… உங்க கண்ணு ஏன் இவ்வளவு சிவப்பா இருக்கு?” என்று அவன் சொன்னதை அப்படியே நம்பி வேறு கேள்வி கேட்க ஆரம்பித்தாள் மிருதுளா.
“அதுவா? உன்னால் தான்!” என்று சொல்லி அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.
“என்னாலா? நான் என்ன செய்தேனாம்?” என்று கொஞ்சலாகக் கேட்டாள்.
“நீ தான் நைட் என் ரூமுக்கு வந்து என் பக்கத்தில் படுத்துக்கிட்டுப் போகமாட்டேன்னு அடம் பண்ணின. அப்புறம் என்னென்னவோ பண்ணின…” என்று அவன் அந்தரங்கமாகப் பேச ஆரம்பிக்க, வெட்கத்துடன் நாணி கோணினாள்.
“பொய் சொல்லாதீங்க சந்து. நானெல்லாம் உங்க ரூமுக்கு வரலை…” கல்லூரிக்குள் நிற்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவனின் தோளில் செல்லமாக அடித்துச் சிணுங்கினாள்.
“நான் ஏன் பொய் சொல்லப் போறேன்? நீ தான் வந்த என் கனவில்! வந்து இன்னும் என்னென்ன செய்தன்னு தெரியுமா? நீ செய்த வேலையில் என் தூக்கம் ஹோகையா…” என்று ஓடிப்போனது போல் கையை வீசிக் காட்டினான்.
“அச்சோ! போங்க…” என்று அவள் இன்னும் நாணி கோண,
“ஹேய் மிருது! இன்னும் நீ கிளாஸ் வரலையா? சீக்கிரம் வா! டைம் ஆகிடுச்சு…” என்று அவர்களின் பின்னால் வந்த சரண்யா, மிருதுளாவின் அருகில் வந்து கையைப் பிடித்து இழுத்தாள். அவளுடன் சிந்துஜாவும் இருந்தாள்.
ஆனால் சரண்யா மட்டும் மிருதுளாவின் அருகே வந்து அழைக்க, சிந்துஜா அவர்களை விட்டுத் தள்ளி நின்றிருந்தாள்.
“நான் இதோ வரேன் சரண். நீங்க முன்னாடி போங்க…” சந்துருவிடம் இன்னும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவலில் தோழிகளை அங்கிருந்து அனுப்ப பார்த்தாள்.
“ஏய்! உன்னோட காதல் கடலையைச் சாயங்காலம் வறுக்கலாம். இப்போ வாடி! உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்…” என்று சரண்யா நகராமல் அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றாள்.
தோழிகளைக் கூர்ந்த பார்வையுடன் அளவிட்ட சந்துரு பின் உதடுகளில் சிரிப்பை வழிய விட்டு, “அதான் உன் ப்ரண்ட்ஸ் கூப்பிடுறாங்களே மிருது. நீ அவங்க கூடப் போ! நாம ஈவ்னிங் மீட் பண்ணலாம்…” என்றான்.
“ஓகே சந்து… பை…” என்று அவனிடம் விடைபெற்ற மிருது, தோழிகளுடன் நடந்து கொண்டே அவர்களை முறைத்துப் பார்த்தாள்.
“ஏய்! என்னடி முறைக்கிற? நீ செய்த வேலைக்கு நாங்க தான் உன்னை முறைக்கணும்…” என்றாள் சிந்துஜா.
“நான் என்னடி தப்புச் செய்தேன்? நீங்கதான் என் சந்து கூடப் பேசவிடாம என்னை இழுத்துட்டு வந்தீங்க. அதில் நான் தான் உங்க மேல காண்டா இருக்கேன்…” என்று சிலிர்த்துக் கொண்டு சொன்னாள் மிருதுளா.
“நீங்க இரண்டு பேரும் பேச்சாடி பேசினீங்க? உங்க பின்னாடி வந்த எங்க காதில் விழுந்த அரைகுறை பேச்சிலேயே காது கூசிப் போச்சு. அவன் தான் விவஸ்தை இல்லாம பேசுறான்னா நீ அதுக்கு மேல்… காலேஜில் இருக்கோம்னு கொஞ்சம் கூட நினைப்பு இல்லாம அவன் சொன்னதுக்கு எல்லாம் வெட்கப்பட்டுக் காலால் பூமியை நோண்டிட்டு இருக்க. கனவில் மிதந்த உன்னை நடப்புக்கு இழுத்துட்டு வரத்தான் நாங்க குறுக்க வந்தோம்…” என்றாள் சிந்துஜா.
“அதெல்லாம் லவ்வர்ஸ் பேச்சு சிந்து. அப்படித்தான் இருக்கும். இதுக்குப் போய் அலுத்துக்கிற…” என்று அலட்டலாகச் சொன்னான் மிருதுளா.
“எது? இப்படிப் பச்சை பச்சையா பேசுறது தான் லவ்வர்ஸ் பேச்சு? சரிதான்…” என்று நக்கலாகச் சொன்ன சிந்து, “சரண்… வர வர இவ சரியில்லை. எனக்கு என்னமோ சரியாப்படலை…” என்று சரண்யாவிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றாள்.
“இவ ஏன்டி சரண் இப்படி இருக்கா? நாங்க லவ்வர்ஸ். எங்களுக்குள் எத்தனையோ, எப்படி எல்லாமோ பேசிப்போம். அதனால் இவளுக்கு என்னவாம்? ரொம்பத் தான் அலட்டிக்கிறாள்…” என்று சரண்யாவிடம் குறை சொன்னாள்.
“எனக்கும் சிந்து சொல்றது தான் சரின்னு படுது. எதுவா இருந்தாலும் ஒரு அளவோடு நின்னுக்கோ மிருது…” என்று சொல்லி விட்டுச் சரண்யாவும் அங்கிருந்து சென்றாள்.
“இவளுங்க வேற…” என்று அசால்டாகத் தோளைக் குலுக்கிக் கொண்டாள் மிருதுளா.
அன்று மாலை பூங்காவின் வாயிலில் தன் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்த கிருதிலயா சற்றுத் தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த சந்துருவை நோக்கிச் சென்றாள்.
“ஹாய் சந்துரு வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்று கேட்டுக் கொண்டே சற்று இடைவெளி விட்டுத் தானும் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“இப்போ தான் வந்தேன் கிருதி. என்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னியே என்ன அது?” என்று கேட்டான்.
“அது…” என்று தயங்கினாள்.
“சும்மா தயங்காம சொல்லு கிருதி…”
“என்னைத் தவறா எடுத்துக்காதீங்க சந்துரு. எனக்கு ஒரு சின்ன ஆசை. ஜஸ்ட் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க மட்டும் தான்…” என்று லேசாக இருந்த தயக்கத்துடன் சொன்னாள்.
“நீ இவ்வளவு தயங்குற அளவுக்கு அப்படி என்ன ஆசை கிருதி?”
“அது… உங்ககிட்ட சிகரெட் இருக்கா?” என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.
“வாட்! சிகரெட்டா?”
“ம்ம்… ஆமா…”
“எதுக்கு?”
“அதான் சொன்னேனே ஆசைன்னு. சிகரெட் குடிச்சா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசை சந்துரு…” என்றாள்.
“ப்ப்பூ… இவ்வளவு தானா? இதுக்கா இத்தனை பில்டப் கொடுத்த? இப்போ எல்லாம் சில பொண்ணுங்க ட்ரிங்ஸே சர்வசாதாரணமா குடிக்கிறாங்க. நீ சிகரெட்டுக்குப் போய் இப்படித் தயங்குற? இந்தா…” என்று தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிகரெட் பெட்டியை எடுத்து அதிலிருந்து ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இங்கயா?” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“இங்கே மரம் மறைவா தான் இருக்கு. யாரும் பார்க்க முடியாது. சும்மா அடி…” என்று சிகரெட்டை எடுத்துக் கையில் கொடுக்க, தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.
“உதட்டில் வை…” என்றவன் லைட்டரை எடுத்து அவள் உதட்டில் வைத்த சிகரெட்டை பற்ற வைத்தான்.
தீயைப் பற்ற வைத்ததும் வாயில் இருந்த சிகரெட் நெருப்பு கனலை கக்க ஆரம்பிக்க, அதன் புகை அவளின் தொண்டைக்குள் அதிவேகமாக இறங்கி இருமலை வர வைத்தது.
சில நொடிகள் தொடர்ந்து இருமல் வர, அவளின் தலையில் தட்டிக் கொடுத்தவன், “பர்ஸ்ட் டைம்ல… அதான் இப்படி இருக்கு. இன்னொரு இழுப்பு இழு…” என்றான்.
அவளும் இழுக்க அவ்வப்போது இருமல் வந்தாலும் முழுச் சிகரெட்டையும் குடித்து முடித்த பிறகே நிறுத்தினாள்.
“வெரிகுட்! எப்படி இருந்தது?” என்று சந்தோஷமாகக் கேட்டான்.
“வாயெல்லாம் புகைச்சலா இருக்குற மாதிரி இருக்கு. அதுவும் இந்தச் சிகரெட் ஸ்மெல்… ஹப்பா!” என்றாள் முகத்தைச் சுளித்து…
“பிடிக்காதப்பயே ஒரு முழுச் சிகரெட்டை குடிச்சிருக்கயே. பிடிச்சா ஒரு பாக்கெட் சிகரெட் காலி பண்ணுவ போல…” என்றான் கிண்டலாக.
“எப்பா… இதுவே எனக்குப் போதும். சும்மா ஒரு எக்ஸ்பீரியன்ஸ்காக மட்டும் தான் சிகரெட் பிடிச்சேன். ஒரு விஷயம் ஆசைப்பட்டா செய்து பார்த்துடணும். அதான் என் பாலிசி…” என்று விளம்பரபாணியில் சொன்னவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“நல்ல பாலிசி தான். இன்னும் வேற என்ன ஆசை இருக்கு?” என்று கேட்டான்.
“நீங்க சொன்னீங்களே பொண்ணுங்க சர்வசாதாரணமா ட்ரிங்க்ஸ் குடிக்கிறாங்கன்னு. எனக்குச் சர்வசாதாரணமாகக் குடிக்கவெல்லாம் ஆசையில்லை. ஒரே முறை டேஸ்ட் மட்டும் பார்க்கணும்…” என்றாள்.
“அவ்வளவுதானே? இன்னொரு நாள் அந்த ஆசையையும் நிறைவேத்தி வைக்கிறேன்…” என்றான் சந்துரு.
“ஓகே சந்துரு. அதுக்கு ஒரு நாள் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். இப்போ நான் கிளம்புறேன். ஹான் சந்துரு… இன்னொரு விஷயம் இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். மிருதுவுக்குக் கூடத் தெரிய வேண்டாம்…” என்றாள்.
“கண்டிப்பா கிருதி…” என்று சந்துரு சொல்லவும், அவனிடம் விடைபெற்று கிளம்பினாள் கிருதிலயா.
சென்றவளையே வெற்றி புன்னகையுடன் பார்த்தான் சந்துரு.
வீட்டிற்குச் சென்று பவானியிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு தன் அறைக்குச் சென்று உடைமாற்றி விட்டு வெளியே வந்த கிருதிலயா வழியில் இருந்த செழியனின் அறைக்கதவை கண்டதும் அதன் முன் தயங்கி நின்றாள்.
செழியனின் அறைக்கு வெளியே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி சில நொடிகள் நின்றாள்.
அடுத்த நொடி யோசனைக்கு விடை கொடுத்தவள் தாழ்ப்பாளை நீக்கி விட்டு உள்ளே நுழைந்தாள்.
அவளுக்குத் தான் செய்யப் போகும் வேலை தேவையில்லாதது என்று புரிந்தது. ஆனாலும் சஞ்சலப்பட்ட மனதில் ஆர்வம் தலைத்தூக்க உள்ளே நுழைந்து விட்டிருந்தாள்.
அவன் அறைக்கு அவள் சர்வசாதாரணமாக வந்து போவாள் தான். செழியனும் அவளை ஒரு நாளும் தடுத்தது இல்லை.
அப்படியிருக்க எதற்கு இந்தத் திருட்டுத்தனம் என்று தோன்றினாலும் ஆவலுடன் அவனின் அறையில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் வருடிக் கொடுத்தாள்.
பின் அலமாரியைத் திறந்தவள் அவனின் சட்டை ஒன்றை எடுத்து தன் தோளில் போட்டுப் பார்த்தாள்.
‘நீயே என்னைக் கட்டிப்பிடிக்கிற மாதிரி இருக்கு மாமா’ என்று தனக்குள் ரகசியமாகச் சொல்லிக் கொண்டவள், அந்தச் சட்டையை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்று அதைப் பத்திரப்படுத்தினாள்.
செழியனின் அறையில் அவனின் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளும் அவளின் திருட்டுத்தனம் தொடர்ந்தது மட்டுமில்லாமல், சந்துருவிடம் சொல்லித் தான் செய்ய ஆசைப்பட்டவற்றை நிறைவேற்றிக் கொள்வதையும் சர்வசாதாரணமாக அரங்கேற்றிக் கொள்ளத் தயாரானாள் கிருதிலயா.