மனம் கொய்த மாயவனே – 15

அத்தியாயம் – 15

“நீ நிஜமாவே பொண்ணுங்க கூட அந்த மாதிரி பழகுறவன் தானா வெற்றி?” என்று கேட்டு விட்டு வெற்றியின் பதிலுக்காக அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லிராணி.

இரண்டு முறை அவனின் வீட்டிற்கு நள்ளிரவில் பெண்கள் வந்து செல்வதைப் பார்த்தவள் தான்.

ஆனாலும் அவளுக்கு இப்போது அவனின் மீது ஏதோ நம்பிக்கை தோன்றியது.

‘பெண் பித்தானவன் ஒரு பெண் தானே வழிய வந்து பழகும் போது ஒதுக்கி நிறுத்துவானா என்ன?’ என்று தோன்றியது.

அதிலும் அவளே அவனை முத்தமிட்ட போதும் எந்த ஆர்வத்தையும் காட்டாமல் தள்ளி நிறுத்த தானே முயன்றான்.

பெண்களிடம் வேறு விதமாகப் பழக்கம் உள்ளவன் அப்படித் தள்ளிப் போகச் சொல்வானா? என்றெல்லாம் அவளின் மனதில் கேள்விகள் எழுந்தன.

அவள் அப்படி நேரடியாக அந்தக் கேள்வியைத் தயக்கமில்லாமல் கேட்பாள் என்று எதிர்பாராத வெற்றி ஒரு நொடி கண்களை விரித்துப் பார்த்தான்.

ஆனால் அடுத்த நிமிடமே ஒரு அலட்சிய புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் “இப்போ எதுக்கு இந்தக் கேள்வி?” என்று சாதாரணமாகத் திருப்பிக் கேட்டான்.

“எனக்கென்னமோ உன்னை நினைச்சா சந்தேகமா இருக்கு. உன்னைப் பத்தி நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனோனு தோணுது…” என்றாள்.

“நீயே என் பக்கத்தில் வழிய வந்தும் நான் உன்னைத் தள்ளி நிறுத்துவதால் உனக்கு அப்படித் தோணிருக்கும்…” என்று அவளின் எண்ணத்தை அறிந்தது போல் சரியாகச் சொன்னான் வெற்றி.

‘சரியாகச் சொல்லி விட்டானே…’ என்று இப்போது அவள் விழிகளை விரித்துப் பார்த்தாள்.

“குடும்பப் பெண்கள் மேல எல்லாம் நான் கை வைக்கிறது இல்லை…” என்று உதட்டை சுழித்து அலட்சியமாகச் சொன்னான்.

அவனின் அந்தப் பதிலில் அவனைக் கடுமையாக முறைத்துப் பார்த்தாள்.

“எதுக்கு இந்த முறைப்பு? உன் மேல இன்னும் கை வைக்காம இருக்கிறதுக்கா?” என்று நக்கலாகக் கேட்டான்.

அவனின் கேள்வியில் இன்னும் கொதித்துப் போய் அவனைப் பார்த்தவள், “கையை வச்சா வெட்டி போடுவேன் வெட்டி…” என்றாள் ஆவேசமாக.

“இது உனக்கே ஓவரா இல்லை? நீயே தான் என்னை ஒட்டிக்கோ கட்டிக்கோன்னு என்னை உரசிக்கிட்டே திரியுற. அப்படி இருக்கும் போது யாரை யார் இப்போ வெட்டணும்?” என்று கேட்டான்.

அவன் சொல்லிக் காட்டிய விதத்தில் அல்லியின் முகம் சுருங்கிப் போனது. தலையைக் குனிந்து கொண்டு சட்டென்று கலங்கிப் போன கண்களை அவனிடம் மறைக்க முயன்றாள்.

அவளையே கூர்ந்து பார்த்தவன், “உண்மை கசக்கத்தான் செய்யும்…” என்றான் அழுத்தமாக.

“இப்போ நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா?” என்று கேட்டான் வெற்றி.

“கேளு…” என்று முனங்கினாள்.

“பொண்ணுங்க கூட எந்த மாதிரியான பழக்கம் எனக்கு இருக்குன்னு உனக்குத் தெரிஞ்சும் உன்னால எப்படி என் பின்னாடி வர முடியுது? உன் பாஷையில் காதலிக்க முடியுது? இப்போ நான் தனியா இருக்கும் போது வந்து உதவி பண்ண முடியுது?” என்று கேட்டான் வெற்றி.

அவனின் கேள்வியில் சில நொடிகள் மௌனமாக இருந்தாள் அல்லிராணி.

அவனின் பார்வை அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது.

யோசனையாக இருந்த அல்லி, பின் மெல்ல தலையை நிமிர்த்தி அவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து “உன் கேள்விக்கான காரணம் உண்மையா எனக்கே தெரியலை. உன் கூட வேற பொண்ணுங்க இருந்ததை நினைச்சா இதயத்தையே இரண்டா வெட்டிப் போட்டது போல எனக்கு வலிக்குது. இப்படி ஒரு பழக்கம் இருக்குறவன் பின்னாடி ஏன் இப்படிப் பைத்தியக்காரி மாதிரி சுத்துறனு கேட்டு என் மனசாட்சியே என்னைக் காரி துப்புது.

அவனே விலகிப் போனாலும் எப்படி உன்னால அவனுக்கு முத்தம் கொடுக்க முடியுதுனு கேள்வி எழுந்து என்னை ஆட்டிப்படைக்கிது. அவன் தான் உன்னை நாயை விரட்டுற மாதிரி விரட்டுறானே அப்படி விரட்டுறவன் பின்னாடி எப்படி ஒண்ணுமே நடக்காதது போல அவனுக்கு உதவி பண்ண முடியுதுன்னு என்னை நானே பல முறை கேள்வி கேட்டுக்கிட்டேன். ஆனா பதில்? சத்தியமா என்கிட்ட இல்லை.

என் மனசுல தோன்ற இத்தனை கேள்வியையும் தாண்டி ஏதோ ஒரு ஓரத்தில் இருந்து வெற்றி தான் உனக்கானவன்! அவனை விட்டுடாதே! அவனை நீ தான் பார்த்துக்கணும்னு ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு. அந்தக் குரல் தான் நீ விரட்ட விரட்ட இன்னும் தீவிரமா உன் பின்னாடி சுத்த சொல்லுது.

அந்தக் குரலை நம்பி உன் பின்னாடி நான் சுத்துறது பைத்தியக்காரத்தனம் தான். அது எனக்கே நல்லா தெரியுது. ஆனாலும் அந்தக் குரலை மீற எனக்கு விருப்பம் இல்லை.

உன்னோட தப்பான பழக்கம் எனக்குப் பிடிக்கலை தான். இல்லைனு சொல்ல மாட்டேன். ஆனா நாளை பின்ன என் அம்மா பார்க்கிற மாப்பிள்ளை மட்டும் எப்படி நல்லவனா இருப்பான்னு நம்ப முடியும்?

எனக்குத் தெரிஞ்சு நான் வேலை செய்ற இடத்துல கூட வேலை பார்க்கிற சில ஆம்பளைங்களே பொண்டாட்டி ஒன்னு, வப்பாட்டி ஒன்னுன்னு வச்சுக்கிட்டுத் திரியுறான். என் அம்மா கூட்டிட்டு வர்ற மாப்பிள்ளை மட்டும் எப்படிச் சுத்தமானவனா இருப்பான்?

இப்படி எல்லாம் எனக்கு நானே கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு நானே ஒரு சப்பை காரணமும் சொல்லி என் மனசை சமாதானம் செய்துட்டு இருக்கேன்…” என்று இத்தனை நாளும் தன் மனதில் உள்ள அவனைப் பற்றிய எண்ணங்களை எல்லாம் கொட்டினாள் அல்லிராணி.

அவளின் பேச்சே அவளுக்குள் இருக்கும் வலியைக் காட்டிக் கொடுத்தது.

வெளியில் அவனைச் சீண்டுவது போல் பேசிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அவளின் மனதோடு போராடிக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது.

அவள் பேச பேச வெற்றியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அவனின் கண்கள் அதீதமாக ஒளிர்ந்தன.

அந்த ஒளியையும் கண்களை மூடி மறைத்துக் கொண்டான்.

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட என் அம்மா அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு அவனைத் தான் கட்டிக்கப் போறேன்னு அடம் பிடிக்கிறனு கேட்டுச்சு. அதுக்கு நான் அவன் எப்படி இருந்தாலும் அவன் தான் என் புருஷன். அதில் எந்த மாற்றமும் இல்லைன்னு பதில் சொன்னேன்.

இந்தப் பதிலைத் தான் சொல்லணும்னு மனப்பாடம் பண்ணி வச்சுக்கிட்டு நான் சொல்லவே இல்லை. தானா என் வாயில் இருந்து பட்டு பட்டுன்னு வந்தது…” என்று அவள் தொடர்ந்து சொன்னதைக் கேட்டு, தன் மூடியிருந்த கண்களைப் பட்டென்று திறந்து அவளைப் பார்த்தான் வெற்றி.

எந்த ஆண்மகனுக்குத் தான் தன்னை மட்டுமே ஒரு பெண் விரும்பி நீ எப்படி இருந்தாலும் நீ தான் எனக்கு வேண்டும் என்று சொன்னால் பிடிக்காமல் போகும்?

வெற்றிக்கும் அவளைப் பிடித்தது. மிக மிகப் பிடித்தது.

அதைத் தன் கண்களில் பிரதிபலித்தான் வெற்றி.

அவனின் பார்வையில் இருந்த மாற்றத்தை கண்ட அல்லி “என்ன வெற்றி?” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்லை. எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்குறேன்…” என்று சொல்லி மழுப்பியவன் கண்களை இறுக மூடி படுத்துக் கொண்டான்.

“இவன் என்ன எப்ப பார்த்தாலும் ஒரு தினுசாவே அப்பப்போ பார்த்து வைக்கிறான்…” என்று புலம்பிக் கொண்டே அங்கே சுவற்றில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

கண்களை மூடி படுத்திருந்தாலும் வெற்றிக்குச் சிறிதும் உறக்கம் அண்டவில்லை. மாத்திரை போட்டிருந்ததால் காய்ச்சல் சிறிது விட்டுருக்க, அல்லி பேசியதையே மனதில் ஓட்டி பார்த்த படி படுத்திருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னை அறியாமல் உறக்கத்திலும் ஆழ்ந்திருந்தான்.

அவன் மீண்டும் கண் விழித்த போது மதியம் இரண்டு மணி ஆகியிருந்தது.

இப்போது அவனாகத் தான் உறக்கம் கலைந்து எழுந்தான்.

முழித்ததுமே அவனின் கண்கள் அல்லியைத் தான் தேடின.

அவன் படுத்திருந்த இடத்திற்கு நேராக இருந்த சுவற்றில் காலை நீட்டி சாய்ந்து அமர்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளையே சில நொடிகள் பார்த்தவன் மெதுவாகப் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.

இயற்கை அழைப்பிற்குச் செல்ல வேண்டும் என்பதால் மெதுவாகச் சுவற்றைப் பிடித்த படியே எழுந்து நின்றான்.

அவனின் அந்த அசைவில் அல்லி கண் விழித்துப் பார்த்தாள்.

அவன் காலை இழுத்துச் சுவற்றைப் பிடித்த படி நடப்பதைக் கண்டவள், வேகமாக வெற்றியின் அருகில் வந்து காலையில் போல் அவனின் கையைத் தன் தோளின் மீது போட்டுக் கொண்டாள்.

“விடு… நானே மெல்ல நடந்து பார்க்கிறேன். கால் முட்டியில் காயம் என்பதால் நடக்கும் போது சுர்ருனு பிடிச்சு இழுக்குது. அவ்வளவு தான். நான் சமாளிச்சுப்பேன்…” என்றான்.

“நான் இங்க இருக்கும் போது நீ எதுக்குத் தனியா சமாளிக்கணும்?” என்று கேட்டு அவனை அடக்கியவள் தானே தான் அழைத்துச் சென்றாள்.

“சரியான வீம்புகாரிடி நீ…” மீண்டும் உள்ளே வந்து அமர்ந்ததும் சொன்னான்.

“உன்னை விடக் கம்மியா தான் வீம்பு பிடிக்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டே அடுப்பின் அருகில் வைத்திருந்த கஞ்சியையும், துவையலையும் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

“காய்ச்சல் விட்டுருச்சு போல. நல்லா வேர்த்துடுச்சு. இந்தா இந்தக் கஞ்சியைக் குடி. குடிக்கிற சூட்டில் தான் இருக்கு. மாத்திரை போட்டு தூங்கும் போது எழுப்ப வேண்டாம்னு தான் நானே எழுப்பலை…” என்று பேசிக் கொண்டே அவனுக்கு உணவை கொடுத்தாள்.

“உனக்கு?”

“எனக்கும் சேர்த்து தான் வச்சேன்…” என்று தனக்கும் ஒரு பாத்திரத்தில் கஞ்சியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

“உனக்கு வேற வைக்கலையா?”

“எனக்கும் இதே போதும்னு தான் வைக்கலை. நீ வேகமாகக் குடிச்சுட்டு மாத்திரையைப் போடு. திரும்பக் காய்ச்சல் வந்திட போகுது…” என்றாள்.

அதன் பின் வந்த சில நிமிடங்களில் உணவை முடித்து அவன் மாத்திரையைப் போட்டதும் அமைதியாக இருவரும் அமர்ந்திருந்தனர்.

அந்த அமைதியையும் வெற்றியே கலைத்தான்.

“நான் எப்படி இருந்தாலும் என்னை நீ இப்போ போலவே எப்பயும் காதலிப்பியா?” என்று தன் எதிரில் இருந்தவளின் கண்களைச் சந்தித்து ஆழ்ந்த குரலில் கேட்டான் வெற்றி.

அவனிடம் இருந்து அப்படி ஒரு கேள்வியை எதிர்பாராதவள் இன்பமாக அதிர்ந்து போனாள்.

“ம்ம், சொல்லு…”

“இப்போ கூட அதைத் தானே செய்துட்டு இருக்கேன்…” என்று அமைதியாகப் பதில் சொன்னாள் அல்லிராணி.

“நான் கேட்டது வேறு எந்தச் சூழ்நிலையிலும்…” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்குப் புரியலை வெற்றி. ஆனா உன்னோட செய்கையை என்னால் கண்டிப்பா சகிச்சுக்க முடியாது. நான் முன்னாடியே சொன்ன மாதிரி நீ என்னை மட்டும் தான் பார்க்கணும், நேசிக்கணும், ஸ்பரிசிக்கணும். அதை விட்டு இப்போ போல நீ பொண்ணுங்க விஷயத்தில் இருந்தால் கண்டிப்பா என்னால தாங்க முடியாது…” என்று அவள் சொல்லி முடிக்கும் போது அவளின் குரல் கலங்கிப் போனது.

பட்பட்டென்று வார்த்தைகளைத் தெறிக்க விடுபவள் இப்போது கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தாள்.

அன்பு! அது செய்யும் ஜாலங்கள் பலவிதம்!

மனம் விரும்பி விட்டால் தான் விரும்பும் துணையிடம் இருக்கும் எதிர்மறை விஷயங்களையும் சில நேரம் ஏற்றுக் கொள்ள வைத்து விடுகிறது.

பெண்கள் விஷயத்தில் வெற்றியைப் பற்றித் தெரிந்தே மனதை அவனிடம் பறிகொடுத்து விட்டு இப்போது கலங்கிக் கொண்டிருந்தாள்.

இப்போதும் கூட அவனை விரும்பியதற்கு அவள் வருந்தவே இல்லை. அவனின் செய்கைக்கு மட்டுமே வருந்தினாள்.

அன்பு செய்யும் பைத்தியக்காரத்தனத்தில் இதுவும் ஒன்று போலும்.

நீர் துளிகளில் மூழ்கியிருந்த அவளின் கண்களையே பார்த்தவன் ‘இங்கே வா!’ என்பது போல் ஒரு கையை நீட்டி, தலையை அசைத்து அவளை அழைத்தான் வெற்றி.

அவனாக அழைக்கும் முதல் அழைப்பு அல்லியை அலைகடல் எனப் பொங்க வைக்க, வேகமாக எழுந்து வந்து அவன் நீட்டிய கையைப் பற்றிக் கொண்டாள்.

அவளின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டவன் லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

“நான் உனக்கு மட்டும் தான்…” என்று காதலுடன் சொன்னான் வெற்றி.