மனம் கொய்த மாயவனே – 14

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 14

“ஹாய் கிருதி!” என்ற குரலில் முன்னால் நடந்து கொண்டிருந்த கிருதிலயா தன் நடையை நிறுத்தி திரும்பிப் பார்த்தாள்.

தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக நடந்து வந்து கிருதியுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான் சந்துரு.

“ஹாய் சந்துரு! எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள் கிருதிலயா.

“நீ தினமும் ஆட்டோவில் தான் வருவியா கிருதி? நீ ஆட்டோவில் வந்து இறங்கியதைப் பார்த்தேன்…” என்று கேட்டான்.

“இல்லை சந்துரு… என் ஸ்கூட்டியில் தான் வருவேன். இன்னைக்கு ஸ்கூட்டி பஞ்சர். அதான் ஆட்டோவில் வந்தேன்…” என்று பேசிக் கொண்டே நடந்தாள்.

கூடவே நடந்தவன், “ஆமா, எங்கே உன் மசாலா பொட்டலங்கள் எல்லாம் இனிதான் வருவாங்களா?” என்று பேச்சை வளர்த்தான்.

“தெரியலை, கிளாஸ் போய்ப் பார்த்தால் தான் தெரியும்…” என்றாள்.

“ஓகே கிருதி! அப்புறம் பார்க்கலாம் பை…” என்று பேச்சை முடித்துக் கொண்ட சந்துரு, அப்போது தான் வந்த தன் நண்பனுடன் இணைந்து கொண்டான்.

அன்று பிறந்தநாள் என்று விருந்து கொடுத்த பிறகு, இப்படி அவ்வப்போது கிருதியைப் பார்த்துப் பேச ஆரம்பித்திருந்தான் சந்துரு.

தோழியின் காதலன் என்பதாலும், சந்துரு வேறு தேவையில்லாமல் வளவளக்காமல் மேலோட்டமாக மட்டும் பேசி விட்டு நகர்ந்து விடுவதாலும் கிருதியும் அவனிடம் தயங்காமல் பேசுவாள்.

அன்று மாலை கல்லூரி முடிந்து ஆட்டோ பிடிக்கக் கல்லூரிக்கு வெளியே வந்தாள் கிருதிலயா.

அன்று பார்த்து ஒரு ஆட்டோவும் கிடைக்காமல் போக, ‘பேசாம பஸ்லயே போயிடலாமா?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது அவளின் அருகே தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் சந்துரு.

“என்ன கிருதி இன்னும் நீ வீட்டுக்குப் போகலையா?” என்று கேட்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஒரு ஆட்டோவும் கிடைக்கலை சந்துரு. அதான் வெயிட் பண்றேன்…”

“இன்னைக்கு ஸ்டான்ட்ல கூட ஒரு ஆட்டோவும் இல்லை போல இருக்கே. ஆன்லைன்ல புக் பண்ணி பார்த்தியா?” என்று கேட்டான்.

“அதுலயும் எதுவும் புக் ஆகலை சந்துரு. அதான் பஸ்ல போகலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றாள்.

அப்போது சரியாக அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது. ஆனால் அதில் ஏற்கனவே ஆட்கள் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்துப் பயந்த கிருதி அதில் ஏறாமல் நின்று விடப் பேருந்தும் கிளம்பிவிட்டது.

“ம்ப்ச்… இந்தப் பஸ்ல ஏறியிருந்தால் கண்ட தடிமாடும் இடிச்சிருப்பான்…” என்று புலம்பினாள்.

“இப்போ என்ன பண்றதா இருக்கக் கிருதி?”

“வேறென்ன பண்றது? ஆட்டோ கிடைக்கும் வரை வெயிட் பண்ண வேண்டியது தான்…”

“பேசாம ஒன்னு பண்ணுவோமா?”

“என்ன சந்துரு…”

“என் கூடப் பைக்கில் வருவது உனக்குக் கஷ்டம் இல்லைனா வர்றீயா? நான் உன்னை ட்ராப் பண்ணிடுறேன்…” என்றான்.

கிருதி சிறிதும் யோசிக்கவில்லை. “ஹேய்… சூப்பர்! ட்ராப் பண்ணிடுங்க…” என்று பைக்கில் ஏறி அமர்ந்துவிட்டாள்.

அவன் வண்டியைக் கிளப்ப, “நல்லவேளை நீங்க வந்தீங்க சந்துரு. எனக்குக் கால் எல்லாம் வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் எவ்வளவு நேரம் நிக்கணுமோனு எரிச்சல் ஆகிடுச்சு…” என்று பின்னால் அமர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டு அவனுடன் வளவளத்துக் கொண்டு வந்தாள்.

அவளின் வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டு வண்டியை அந்தப் பாதையில் விட்டவன் “உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறார் கிருதி?” என்று கேட்டான்.

“அப்பாவா? அவர் இல்லை…”

“ஓ! ஸாரி… உன் அம்மா?”

“என் பெத்தவங்க சில வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க…” என்றாள் மரத்துப் போன குரலில்.

“ஓ! ஸாரி கிருதி… வெரி ஸாரி…” என்று வருத்தம் தெரிவித்தவன் சிறிது நேரம் அமைதியாக வந்தான்.

“அப்போ நீ எங்கே இருக்க?” என்று மெதுவாகக் கேட்டான்.

“எங்க அத்தை வீட்டில் இருக்கேன். மாமா உயிரோடு இல்லை. அத்தை பெத்த மகன் ஒருத்தர் இருக்கார். நாங்க மூணு பேரும் தான் எங்க வீட்டில்…” என்றாள்.

“ஹோ! உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா?” என்று அக்கறையாகக் கேட்டான்.

“ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க…” என்று செழியனை மனக்கண்ணில் கொண்டு வந்து மர்மமான சிரிப்புடன் சொன்னாள்.

அவளின் முகத்தைக் கண்ணாடி வழியாகப் பார்த்த சந்துரு “ஹேய்… அப்ப உன்னோட புகுந்த வீடும் அதுதான்னு சொல்லு…” என்று கேலியாகக் கேட்டான்.

“கண்டிப்பா!” என்றாள் சிறிதும் தயங்காமல் அழுத்தமாக.

வீடு இருக்கும் தெரு வந்ததும், “இங்கேயே இறங்குறாயா கிருதி?” என்று கேட்டான் சந்துரு.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“எங்க வீட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரம் போகணும் சந்துரு…” என்றாள்.

“ஆனா என் கூடப் பைக்கில் போய் இறங்கினா உங்க வீட்டில் உன்னைத் திட்ட மாட்டாங்களா?”

‘என்ன வழக்கம் போல அட்வைஸ் பண்ணுவாங்க…’ என்று உள்ளுக்குள் நினைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை சந்துரு. வீட்டுக்கிட்டயே இறக்கி விடுங்க…” என்றாள் கிருதிலயா.

அவள் சொன்னதும் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான் சந்துரு.

பிரதான பெரிய வாயில் கதவு மூடியிருக்க, அதற்கு முன் வண்டியை நிறுத்தினான்.

கேட்டிற்கு அந்தப் பக்கம் எப்போதும் அமர்ந்திருக்கும் காவலாளி வண்டி சப்தம் கேட்டும் வராமல் இருக்க, “உங்க வீட்டுக்கு வாட்ச்மேன் எல்லாம் இல்லையா?” என்று கேட்டான் சந்துரு.

“இருக்காங்க சந்துரு. உள்ளே எதுக்கும் போய்ருப்பாங்க. அதான் இங்கே காணோம். என்னை ட்ராப் செய்ததுக்குத் தேங்க்ஸ் சந்துரு…” என்று அவனிடம் விடைபெற்றுக் கொள்ள,

“பை கிருதி…” என்ற சந்துருவும் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றதும் அங்கிருந்த சிறிய கேட்டை திறந்து கிருதி உள்ளே செல்ல, அப்போது தோட்டத்தில் இருந்த குளியலறையில் இருந்து வெளியே வந்தான் அவ்வீட்டின் காவலாளி.

‘பைக் சப்தம் கேட்ட மாதிரி இருந்தது. ஆனா சின்ன மேடம் வர்றாங்க. அவங்க இன்னைக்கு ஆட்டோவில் தானே காலேஜ் போனாங்க…’ என்று வீட்டிற்குள் நுழைந்த கிருதியை யோசனையுடன் பார்த்தான் காவலாளி.

உள்ளே சென்ற கிருதி, “ஹாய் அத்தை…” என்று அங்கே வரவேற்பறையில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்த பவானியைப் பார்த்துச் சொன்னாள்.

“வா கிருதி… போய் முகம் கழுவிட்டு வா. காஃபி போட்டுத் தர்றேன்…” என்றார்.

“இதோ வர்றேன் அத்தை…” என்று தன் அறைக்குச் சென்றவள் உடையை மாற்றிவிட்டு, முகம் கழுவி விட்டு வந்தாள்.

அதற்குள் காஃபி போட்டு எடுத்து வந்த பவானி அவளுக்கும் கொடுத்து, அவரும் குடிக்க ஆரம்பித்தார்.

“உன் வண்டி ரெடியாகிருச்சுன்னு பஞ்சர் கடையில் இருந்து கொண்டு வந்து விட்டுட்டுப் போனான், பார்த்தியா?” என்று கேட்டார்.

“பார்த்தேன் அத்தை. ஸ்கூட்டி இல்லாம இன்னைக்கு எரிச்சலா இருந்தது…”

“என்ன எரிச்சல்? ஆட்டோவில் தானே போய்ட்டு வந்த? பஸ் என்றாலும் இடிப்படணும்னு எரிச்சல் பட்டுருப்ப…” என்றார்.

“ஆட்டோ எங்க ஈஸியா கிடைச்சது?” என்றவள் “சரி, அதை விடுங்க அத்தை. எப்படியோ வீடு வந்து சேர்ந்துட்டேன். இன்னைக்கு டிவில ஒரு ப்ரோக்ராம் போடுவான். அதை நான் பார்க்கப் போறேன்…” என்று பேச்சை சட்டென்று மாற்றிவிட்டுத் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு அதைக் கவனிப்பது போல் திரும்பிக் கொண்டாள்.

அவளுக்கு ஏனோ சந்துருவுடன் வந்ததைச் சொல்ல விருப்பமில்லை. அவனுடன் தவறான எண்ணத்தில் வரவில்லை தான். ஆனாலும் அத்தையின் அறிவுரையைக் கேட்க மனம் இல்லாமல் அவனுடன் வந்ததைச் சொல்லாமல் தவிர்த்து விட்டாள் கிருதிலயா.

எப்பொழுதும் ஆட்டோவில் சென்றால் அதில் தான் திரும்பவும் வருவாள் என்பதால் இன்றும் அப்படித் தான் வந்திருப்பாள் என்று நம்பிய பவானி அதற்கு மேல் அவளிடம் தூண்டித் துருவி எதுவும் கேட்கவில்லை.

அதனால் அவள் சந்துருவுடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கியது அவருக்குத் தெரியாமல் போனது.


“நான் கேட்ட ரிப்போர்ட் ரெடி ஆகிடுச்சா ஆனந்த்?” என்று கேட்ட செழியனை கணினிக்குள் தலையை விட்டுக் கொண்டிருந்த ஆனந்த் நிமிர்ந்து பார்த்து “இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் செழியா…” என்றான்.

“இதுக்குத் தான் உன் டீமில் என்னைச் சேர்த்துக்கோன்னு சொன்னேன் செழிப்பானவனே. ஆனா நீதான் என்னைச் சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்ட. இந்த ஆனந்தமானவன் கிட்ட கொடுத்த வேலையை என்கிட்ட கொடுத்திருந்தால் இந்நேரம் முடிச்சே கொடுத்துருப்பேன்.

எள்னு சொன்னாலே எண்ணெய்யா நிக்கிற என்கிட்ட கொடுக்காம அவன் கிட்ட கொடுத்த இல்ல, உனக்கு நல்லா வேணும்…” என்று அலட்டலாகச் சொன்ன ரத்னாவை முறைத்துப் பார்த்தான் ஆனந்த்.

“ஆமா… ஆமா… இந்த அம்மாகிட்ட எள்ளை கொடுத்தா வாயில் போட்டு அரைச்சு எண்ணையைக் கொடுத்திருப்பாள். அதை மிஸ் பண்ணிட்டியே செழியா…” என்று ரத்னாவை நக்கலாகப் பார்த்துக் கொண்டே நண்பனிடம் சொன்னான்.

“வேண்டாம் ஆனந்தமானவனே! என்னை நக்கல் பண்ணாதே!” விரல் நீட்டி எச்சரித்தாள்.

“நானும் அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன். வேண்டாம் என்னைச் சீண்டாதே!” என்று கடுப்பாக மொழிந்தான் ஆனந்த்.

“அப்படித்தான்டா சீண்டுவேன். என்ன பண்ணுவ?” என்று எகிறிக் கொண்டு கேட்டாள்.

“உன்னை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆனந்த் ஏதோ சொல்ல வர,

“ஷ்ஷ்!” என்று வாயில் விரல் வைத்து இருவரையும் அடக்கினான் செழியன்.

“இல்லை செழியா, ரொம்பப் பேசுறாள்…” என்று ஆனந்த் கடுப்பாகச் சொல்ல,

“யாரு நானா?” என்று ரத்னா எகுற,

“இரண்டு பேரும் வாயைக் கொஞ்சம் மூடுறீங்களா?” என்று கண்டிப்புடன் சொன்ன செழியன், “நான் கேட்ட ரிப்போர்ட் ரெடி பண்ணு ஆனந்த்…” என்று சொல்லி விட்டு ரத்னாவின் புறம் திரும்பினான்.

“நீ ஏன் உன் வேலையைப் பார்க்காம இங்கே வந்து அரட்டை அடிச்சுட்டு இருக்க?” என்று கேட்டான்.

“நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் செழிப்பானவனே…”

“என்னைப் பார்க்க வந்தால் நீ என் கேபின்னுக்கு வர வேண்டியது தானே? இங்கே ஏன் வந்த?”

“ம்ப்ச்… கோபப்படாதே செழிப்பானவனே. இப்போ வா உன் கேபின்னுக்குப் போய்ப் பேசுவோம்…” என்று அவனின் முழங்கைக்குள் தன் கையைக் கோர்த்துக் கொண்டாள்.

“அதான் இங்கேயே என்னைப் பார்த்துட்டீயே. என்ன விஷயம்னு சொல்லிட்டுக் கிளம்பு…” என்றவன் அவளின் கையை எடுத்து விட்டான்.

“ரொம்பப் பண்ணாதே செழியா. வேலை விஷயத்தில் உன்கிட்ட ஒரு டவுட் கேட்கணும். வா, உன் கேபின் போவோம்…” என்று மீண்டும் அவனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“இந்தம்மாவுக்கே டவுட் கிளியர் பண்ண ஒரு ஆள் வேணும். இதில் என் வேலையை அவள் செய்து முடிப்பாளாம்…” என்று நக்கலாகச் சொன்னான் ஆனந்த்.

“டேய் வேண்டாம்…” என்று செழியனுடன் அங்கிருந்து நகர ஆரம்பித்தவள் திரும்பி நின்று எச்சரித்தாள்.

“ரத்னா, ஒழுங்கா அவனை வேலை பார்க்க விடு. நீ அந்தப் பக்கம் வா…” என்று அவர்களை மேலும் சண்டை போட விடாமல் தன் கேபின் பக்கம் அவளை அழைத்துச் சென்றான் செழியன்.

செழியனின் முழங்கையோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டு சென்ற ரத்னாவின் முதுகையே வெறித்துப் பார்த்தான் ஆனந்த்.

தன் கேபின்னுக்குச் சென்ற செழியன் ரத்னாவிடம் வேலையில் அவளுக்கு இருக்கும் சந்தேகத்தைக் கேட்டு அதைத் தெளிவுபடுத்த ஆரம்பித்தான்.

“தேங்க்ஸ் செழிப்பானவனே! இப்போ தான் கொஞ்சம் கிளியரா இருக்கு. இனி நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்…” என்று தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்ட ரத்னா இருக்கையை விட்டு எழ,

“அதுக்குள்ள எங்கே போற? உன்கிட்ட கொஞ்சம் பேசணும். உட்கார் ரத்னா…” என்றான் அழுத்தமாக.

“என்ன செழிப்பானவனே?” என்று அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டே அவள் மீண்டும் அமர்ந்தாள்.

“என்னன்னு நீ தான் சொல்லணும்…” என்றவனின் பார்வை அவளை ஊடுருவியது.

“என்ன செழியா, என்ன விஷயம்னு தெரியாமலேயே நான் என்ன சொல்ல?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“நான் என்ன கேட்குறேன்னு நிஜமா உனக்குத் தெரியாது?” அவனின் குரலில் அழுத்தம் கூடியது.

“தெரியலைன்னு தானே கேட்குறேன். சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வா…” என்றவள் குரலும் அழுத்தத்தைப் பிரதிபலித்தது.

“நீ என்கிட்ட நடந்து கொள்ளும் முறையைப் பத்தி தான் கேட்கிறேன்…”

“ஏன்? எப்படி நடந்துகிறேன்?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“இந்தக் கேள்விக்கு நான் விளக்கம் சொல்லணும்னு எதிர்பார்க்கிறாயா ரத்னா?” என்றவன் பார்வை அவளைத் துளைத்தது.

தானும் அவனின் பார்வையைச் சந்தித்தவள், “நீயே சொல்லு செழியா. நீ என்ன புரிஞ்சுகிட்டன்னு நானும் தெரிஞ்சுக்கிறேன்…” என்றாள் அசராமல்.

அவளின் பேச்சில் அவனின் முகம் இறுகியது.

“நீ என்னைக் கொஞ்ச நாளாக அதிகமாகத் தொட்டுப் பேசுவது, ஒட்டி உரசுவது, என்னிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வது எதனால் ரத்னா?” என்று கேட்டான்.

“ஏன் நான் உன்னைத் தொட்டுப் பேசியதே இல்லையா? இல்லை இதுக்கு முன்னாடி உன்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டது இல்லையா செழிப்பானவனே?” என்று திருப்பிக் கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.

“நாம காலேஜ் படிக்கும்போது இருந்தே நீ என்னைத் தொட்டுப் பேசுவதான். உரிமை எடுத்தும் பழகுவ. ஆனால் அப்போது இருந்த தொடுகைக்கும் இப்போது சில நாட்களாக நீ தொடும் தொடுகைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் ரத்னா. எதனால் இந்த மாற்றம்?” என்று கேட்டான்.

அவனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் அமைதியாகத் தன் விரல்களைப் பார்த்தாள். பின் அந்த அலுவலகத்தைச் சுற்றி ஆங்காங்கே தன் பார்வையை அலைய விட்டாள்.

“பதில் சொல் ரத்னா…” என்று அவளின் மௌனத்தைக் கலைக்க முயன்றான்.

ஆனாலும் உடனே பதில் சொல்லாத ரத்னா, மேலும் சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு ஆழ்ந்த மூச்சு ஒன்றை இழுத்து விட்டவள் செழியனின் பார்வையைத் தயங்காமல் எதிர்கொண்டாள்.

“இதையும் நீ எந்த மாதிரி புரிஞ்சுகிட்டனு சொல்லு செழியா…” என்றாள் நிதானமாக.

அவளின் நிதானத்தில் அவனின் முகம் கடுத்தது.

“கோபப்படாம சொல்லு செழிப்பானவனே…” என்று ரத்னா மீண்டும் கேட்க,

“நீ என்னை லவ் பண்றியா?” என்று பட்டென்று கேட்டான்.

“நீ என்ன நினைக்கிறாயோ அதே தான் செழியா…” என்று அவளும் சட்டென்று தன் பதிலைச் சொல்ல,

“ரத்னா…!” என்று அதிர்வாக அழைத்தான் செழியன்.