மனம் கொய்த மாயவனே – 10

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 10

“ஏன் இப்படி ஆணாதிக்கச் சமூகமாகவே இருக்க நினைக்கிற செழிப்பானவனே?” என்று கேட்ட ரத்னாவை எரிச்சலுடன் பார்த்தான் செழியன்.

“இப்ப என்ன நான் ஆணாதிக்கமா நடந்துகிட்டேன்னு என்னை நிற்க வைத்துக் கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்று கேட்டான்.

“நிற்க வைத்துக் கேள்வி கேட்கக் கூடாதா? சரி, இங்கே வா. இப்படி உட்காரு…” என்று அவனின் கையைப் பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள் ரத்னா.

“சரி, இப்போ சொல்லு. நான் நிற்க வைத்துக் கேள்வி கேட்கலை. வசதியா உட்கார வைத்தே கேட்குறேன். எதுக்கு ஆணாதிக்கமா நடந்துக்கிற?” என்று இன்னும் பொறுமையாகக் கேட்டவளை இப்போது கொலை வெறியுடன் பார்த்தான் செழியன்.

“ஹா…ஹா…” அவர்கள் இருவரையும் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் ஆனந்த்.

“போதும் டா இளிப்பு. பல் சுழிக்கிக் கொள்ளப் போகுது…” ரத்னாவின் மீது இருந்த கடுப்பை அப்படியே ஆனந்தின் புறம் திருப்பினான் செழியன்.

“அவள் மேல இருக்குற கடுப்பை ஏன்டா என் பக்கம் திருப்புற?” என்று சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான் ஆனந்த்.

“பின்ன என்னடா? இவள் கேள்வி கேட்டதில் கடுப்பாகி நிற்க வைத்துக் கேட்கறனு சொன்னால் உட்கார வைத்து விட்டுக் கேட்டதையே கேட்டு என்னை நக்கல் அடிக்கிறாள். நீ அதுக்கு வாயைப் பிளந்துட்டுச் சிரிக்கிற…” என்று சிடுசிடுத்தான்.

“இதென்ன அநியாயமா இருக்கு? உன்னைக் கிண்டல் பண்ணியது அவள். அவளை ஒன்னும் சொல்லாமல் என் மேலே மட்டும் பாய்ற?” என்று ஆனந்தும் கோபப்பட ஆரம்பிக்க,

“டேய்… நிறுத்துங்கடா! பேச்சை ஆரம்பிச்சது நான். இப்போ எதுக்குடா நீங்க சண்டை போட்டு என் பேச்சை மாத்தப் பார்க்குறீங்க?” கத்தி இருவரையும் அடக்கினாள் ரத்னா.

‘நம்மைக் கண்டு கொண்டாளே’ என்பது போல் ஆனந்தும், செழியனும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள்.

“உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதாடா?” என்று அவர்களின் பார்வை மாற்றத்திற்கும் பதில் சொன்னாள் ரத்னா.

“நீ கேடி தான். இது மட்டுமா தெரியும்? இதுக்கு மேலேயும் உனக்குத் தெரியும். சொல்லு இப்போ என்ன தெரிஞ்சுட்டு வந்து இந்தக் குதி குதிக்கிற?” என்று விசாரித்தான் செழியன்.

“கிருதி பேபி பேசினாள்…” என்றாள் ரத்னா.

“ஏது? அவள் பேபி? சரிதான்…” என்றான் நக்கலாக.

“எனக்குப் பேபி தான்டா. நான் அப்படித்தான் கூப்பிடுவேன். சரி சொல்லு, எதுக்கு நீ அவளைத் திட்டின?” என்று கேட்டாள்.

“ஏன்? எதுக்கு நான் திட்டினேன்னு அவள் சொல்லலையா?” என்று திருப்பிக் கேட்டான்.

“சொன்னாள்… சொன்னாள்… இப்போ எல்லாம் ஊர், உலகமே ஆப்ல டாஸ்மாஸ், டான்ஸ்னு பண்ணுது. அவள் பண்ணினால் என்னடா தப்பு?” என்று கோபமாகக் கேட்டாள்.

“அவள் பண்ணியது தப்பு இல்லை. பண்ணிய முறை தான் தப்புன்னு சொன்னேன்…” என்றான் அழுத்தமாக.

“நாம தப்பாகப் பார்த்தால் எல்லாமே தப்பான கண்ணோட்டத்தில் தான் தெரியும் செழியா…” என்று அவனை விட அழுத்தமாகச் சொன்னாள் ரத்னா.

“நீ முதலில் அந்த வீடியோ பார்த்தியா ரத்னா?” என்று கேட்டான் செழியன்.

“பார்த்தேன்…” என்றாள்.

“அதில் உனக்கு எதுவுமே தப்பாகத் தெரியலையா? அவள் போட்டுருந்த அந்த ட்ரெஸ் சரின்னு சொல்றீயா?” என்று கேட்டவனை அமைதியாகப் பார்த்தாள்.

“என்ன பதிலைக் காணோம்? சோ, உனக்கே அது தப்பா தெரியுது தானே?” என்று கூர்மையாகக் கேட்டான்.

“நீ கூடத் தான் மார்டன் ட்ரெஸ் போடுவ. ஆனா அதில் கூட அவ்வளவு கண்ணியம் இருக்கும். அவளும் அதே போல் டிரெஸ் போட்டு அவள் திறமையைக் காட்டியிருந்தால் நானே நாலு பேர் கிட்ட என் வீட்டுப் பொண்ணு திறமையைப் பாருங்கடானு காட்டியிருப்பேன்.

ஆனா அவள் அப்படிச் செய்யலை. அந்த வீடியோவை நான் நாலு பேர்கிட்ட காட்டினால் என்னைப் பார்த்துக் காறி துப்புவாங்க. என்னடா பிள்ளையை வளர்த்து இருக்கீங்கனு கேட்பாங்க.

பொண்ணு இப்படித்தான் இருக்கணும். அப்படித்தான் இருக்கணும்னு நான் என்னைக்கும் நினைச்சது இல்லை. அப்படி அவளை நாங்க வளர்க்கவும் இல்லை.

அவளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்திருக்கோம். வீட்டில் சுதந்திரம் கொடுக்கும் போது ஆணோ, பெண்ணோ அதைச் சரியா பயன்படுத்தணும். சுதந்திரம் இருக்குன்னு தறிகெட்டுப் போகக் கூடாது…” என்றான் செழியன்.

“உன் பார்வையில் நீ சொல்றது சரியா இருந்தாலும் இது நிச்சயமா பாரபட்சமான கண்ணோட்டம் தான் செழியா…” என்று அப்போதும் அவனைக் குற்றம் சாட்டினாள் ரத்னா.

“கண்டிப்பா பாரபட்சம் தான்…” என்று ஒத்துக்கொண்டான் செழியன்.

உடனே ஒத்துக்கொண்டவனை வினோதமாகப் பார்த்தாள் ரத்னா.

“ஒரு ஆம்பிளை என்ன பண்ணினாலும் கண்டுக்காம போற உலகம் பொண்ணை மட்டும் குறை சொல்ல எதுக்கு மூக்கை நீட்டிட்டு வருதுனு இந்த இடத்தில் உனக்குக் கேள்வி வரும். அதானே?” என்று செழியனே கேட்டான்.

‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்தாள் ரத்னா.

“ஆணோ, பெண்ணோ தங்கள் வரைமுறையை மீறினால் அதைக் கண்டிப்பா தப்புன்னு சொல்றவன் தான் நான். என்னைப் பொறுத்தவரை ஆண், பெண் பாகுபாடு எனக்குப் பார்க்கத் தெரியாது.

ஆணுக்கு இருக்குற மாதிரி ரத்தமும், சதையும், உணர்வுகளும் எல்லாமே தான் பெண்ணுக்கும் இருக்கு. அதை நான் மறுக்கலை. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனா என்னைப் போல இந்த உலகத்தில் இருக்குற எல்லா ஆண்களும் நினைப்பாங்களா? கண்டிப்பா இல்லை. அதுக்குச் சாட்சி அந்த வீடியோக்கு வந்த கமெண்ட்ஸ்.

அதில் அத்தனை வக்கிரத்தைக் காட்டியிருக்காங்க. அப்படி எல்லாம் யாரோ அந்நிய நபர்களின் பேச்சை ஏன் கிருதி வாங்கணும்னு தான் என் ஆதங்கம்.

நம்ம முகத்துக்கு நேரா ஒருத்தர் ச்சீனு சொன்னாலே நமக்கு எப்படி இருக்கும்? ஆனா இங்கே அவளுக்கு வந்த வார்த்தைகள்? அது அவளுக்கு வேண்டாம்னு அக்கறையில் தான் சொல்றேன். என் வீட்டுப் பெண் அடுத்தவங்க கண் பார்வையில் தப்பான கண்ணோட்டத்தில் படக்கூடாது.

அவள் வக்கிரமான பேச்சை வாங்க கூடாதுன்னு அக்கறையில் கண்டிச்சா அதுக்குப் பேரு ஆணாதிக்கம்னா நான் ஆணாதிக்கக் காரனாகவே இருந்துட்டுப் போறேன்.

அவளை நான் கண்டிக்க இன்னொரு காரணம் அவளோட குணம். நான் இப்போ இந்த விஷயத்துக்குக் கண்டிக்கலைனா அதை அட்வான்ஸ்டேஜா எடுத்துக்கிட்டு இன்னும் அதிகமா வேற ஏதாவது பண்ணுவாள்.

அவள் செய்ற எதுக்கும் நாங்க அதிகம் கண்டிக்கிறது இல்லை. அப்படிக் கண்டிக்கக் கூடிய விஷயம் செய்து நாங்க கண்டிச்சா அதைக் கண்ட்ரோல் பண்ணிக்குவாள். அதுக்குத் தான் கண்டிச்சேன்…” என்றான் செழியன்.

“இப்போ எதுக்கு நீ இவளுக்கு இவ்வளவு விளக்கம் சொல்லிட்டு இருக்குற செழியா. நாம அக்கறையா சொல்றது எல்லாம் இவங்களுக்கு ஆணாதிக்கமா தான் தெரியும்…” என்று ரத்னாவை முறைத்துக் கொண்டே சொன்னான் ஆனந்த்.

“இப்போ எதுக்கு நீ என்னை இப்படி முறைக்கிற ஆனந்தமானவனே? எல்லாம் உன்னால் தான். கிருதி பேபி உன் மேல் செம காண்டில் இருக்காள். அவள் கையில் மாட்டினா நீ சட்னி தான்…” என்று கடுப்பாக அவனிடம் சொன்னாள் ரத்னா.

“சட்னி தானே? ஆக்கட்டும். தோசைக்குத் தொட்டுச் சாப்பிட்டுக்கிறேன்…” என்று அலட்சியமாகச் சொன்னவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“இப்போ எதுக்கு நீங்க இரண்டு சண்டை போட்டுக்கிறீங்க? நிறுத்துங்க!” என்று அதட்டினான் செழியன்.

“ஏன் ரத்னா அவள் மாமா நான் கண்டிச்சதே அவளுக்குத் தாங்க முடியாம உன்கிட்ட வந்து கம்ளைண்ட் பண்ணிருக்காள். ஆனா ஊரு உலகத்தில் யாருனே தெரியாத ஆளுங்க போட்ட வக்கிரமான கமெண்ட்ஸ் மட்டும் தாங்க முடியுதாமா?” என்று கேட்டான் செழியன்.

ரத்னாவோ அவனின் கேள்வியில் அவனைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தாள்.

“என்ன? சொல்லு ரத்னா…” என்று மீண்டும் கேட்டான்.

அவள் அப்போதும் பதில் சொல்லாமல் இருக்க, “அழுதாளா என்ன?” என்று யோசனையுடன் தானே யூகித்துக் கேட்டான் செழியன்.

‘ஆமாம்…’ என்று மட்டும் ரத்னா தலையை அசைத்தாள்.

“ம்ப்ச்…” என்று வருத்தத்துடன் உச்சுக் கொட்டினான்.

“அவளுக்கு எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிற ஆர்வம் இருக்குற அளவுக்கு அதோட பின்விளைவுகளைத் தாங்குற பக்குவம் இல்லை ரத்னா. இன்னும் அவள் மனதளவில் குழந்தையா தான் இருக்காள்.

நானும், அம்மாவுமே கொஞ்சம் முகத்தைச் சுருக்கிட்டா கூட அவளால தாங்க முடியாது. அப்படி இருக்கும் போது அந்தக் கமெண்ட்ஸ் எல்லாம் அவளை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும்னு எனக்குத் தெரியும்…” என்று வருத்தத்துடன் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான் செழியன்.

அவனின் தோளில் கையை வைத்த ஆனந்த், “வருத்தப்படாதே செழியா! இது அவளுக்கு ஒரு பாடம். வெளி உலகம் அவளுக்கு இன்னும் நிறையக் கத்துக்கொடுக்கும். போகப் போகப் பக்குவப்படுவாள்…” என்று ஆறுதலாகச் சொன்னான் ஆனந்த்.

“பக்குவப்படும் முன் அவள் உடைந்து போய்ட கூடாதுடா…” என்றான் செழியன்.

“அப்படி எல்லாம் ஆகாது. விடு!” என்றான் ஆனந்த்.

“ம்ம்…” என்று செழியன் அமைதியாக அமர்ந்து விட்டான்.

“அவள் அழுத விஷயத்தைச் சொல்லாம ஆணாதிக்கம், அது இதுன்னு இப்போ எதுக்கு நீ இவ்வளவு குதிச்ச ரத்னா?” என்று கோபத்துடன் அவளிடம் கேட்டான் ஆனந்த்.

“அவள் அந்தக் கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து ஏற்கனவே வருத்தத்தில் இருந்திருக்காள். அப்போ இவனும் திட்டவும் அவளுக்கு இன்னும் கஷ்டமா போயிருச்சு. அதென்னடா ஒரு பொண்ணு என்ன செய்தாலும் உங்க ஆண் வர்க்கம் இப்படிப் பேசுதேனு செம்ம கோபம் எனக்கு. அதுதான்…”

“அவனுங்களைத் திட்ட முடியலைனு இவனைத் திட்ட வந்துட்ட…ம்ம்ம்…” என்று அவளின் பேச்சை முடித்து வைத்தான் ஆனந்த்.

“நீ என்னடா சும்மா என்னைத் திட்டிக்கிட்டே இருக்க. நான் செழியனைத் தானே திட்டினேன். அதுக்கு ஏன் நீ குதிச்சிக்கிட்டு வர்ற?” என்று கோபப்பட்டாள் ரத்னா.

“நான் கேட்கும் போது அலட்சியமா பொதுவில் அப்படித்தான் பேசுவாங்க. அது எல்லாம் பெரிய விஷயமே இல்லைங்கிறது போல என்கிட்ட பேசினாள்…” என்று நடுவில் பேசி அவர்களின் சண்டையை நிறுத்தி வைத்தான் செழியன்.

“அவள் வருத்தப்பட்டதைக் காட்டிக்கிட்டா நீ இன்னும் கோபப்படுவன்னு நினைச்சு அப்படிச் சொல்லியிருப்பாள்…” என்றாள் ரத்னா.

“சரி, விடு! இனி நான் பார்த்துக்கிறேன். உன்கிட்டயாவது மனசு விட்டுப் பேசினாளே. அதுவே போதும்…” என்றான் செழியன்.

“இவள் நம்ம பிரண்டா இருப்பதில் ஒரே ஒரு நன்மை இது தான்…” என்று ரத்னாவைக் கிண்டலாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் ஆனந்த்.

“நீ என்னை ரொம்ப டீஸ் பண்றடா ஆனந்தமானவனே. எனக்கு வர்ற கோபத்துக்கு… கோபத்துக்கு…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆனந்தின் கழுத்தை நெறிப்பது போல் அருகில் வந்தாள்.

“கழுத்தை நெறிக்கப் போறீயா? சரி நெறிச்சுக்கோ…” என்று அசால்டாகச் சொல்லிவிட்டு அசையாமல் நின்றான் ஆனந்த்.

அவனின் அசால்ட்டில் இன்னும் கோபம் பொங்க அவனின் கழுத்தில் கையை வைத்து அழுத்தினாள்.

“உனக்கு இன்னைக்குப் பீட்சா வாங்கிக் கொடுக்கலாம்னு இருந்தேன். சரி பரவாயில்லை, நெறிச்சுடு! பீட்சா வாங்கிக் கொடுக்குற காசு மிச்சம்…” என்று ஆனந்த் சொல்ல, அவனின் கழுத்தில் இருந்த கையை வேகமாகக் கீழே இறக்கினாள் ரத்னா.

“பீட்சாவா? வாவ்! சூப்பர்! வா, வா! வாங்கிக் கொடு!” என்று அவனின் கையைப் பற்றி இழுத்தாள்.

“பீட்சான்னு சொன்னதும் உன் கோபம் புஸ்வானம் ஆகிருச்சா?” என்று கேலியாகக் கேட்டுக் கொண்டே அவளின் இழுப்பிற்கு நகர்ந்தான்.

“கோபமாடா முக்கியம்? பீட்சா தான் முக்கியம். வளவளன்னு பேசாம வாடா…” என்று இழுத்துப் போனாள்.

“நீ போய்க் கிருதியைச் சமாதானப்படுத்துச் செழியா…” என்று சொல்லிவிட்டு ரத்னாவுடன் சென்றான் ஆனந்த்.

நண்பனுக்குத் தலையசைத்து விட்டு எழுந்து வீட்டிற்குச் சென்றான் செழியன்.

செழியன் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள் கிருதிலயா.

அவளின் அறைக் கதவு லேசாகத் திறந்திருக்க மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான்.

ஒருக்களித்துப் படுத்து ஒரு பெரிய டெடிபியர் பொம்மையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

கீழே அன்னையிடம் விசாரித்த போது அவள் அன்றைய உணவைச் சரியாக உண்ணவில்லை என்று சொன்னதைக் கேட்டு விட்டு வருத்தத்துடன் வந்தவன், இப்போது அவள் குழந்தை போல் உறங்குவதை வாஞ்சையுடன் பார்த்தான்.

கிருதிலயாவின் முகத்தைக் கவனித்துப் பார்த்த போது தான் அவள் கன்னத்தில் இருந்த கண்ணீரின் தடம் தெரிய வேகமாக அறைக்குள் சென்றான்.

“தேவையில்லாம எதையாவது செய்ய வேண்டியது. அப்புறம் வருத்தப்பட்டு அழ வேண்டியது. அந்தத் தேவையில்லாத வேலையை ஏன் செய்யணும்?” என்று மனதிற்குள் கடிந்து கொண்டே கிருதிலயாவின் தலை அருகில் கட்டிலில் அமர்ந்தான்.

அவளின் கன்னத்தில் தெரிந்த கண்ணீர்த் தடத்தை மெல்ல தன் விரலால் வருடித் துடைத்தான்.

அவன் கன்னத்தில் கை வைத்ததும், “ம்ம்ம்…” என்று முனங்கிக் கொண்டே செழியனின் கையைத் தன் கன்னத்தோடு அழுத்திக் கொண்டாள்.

அவளின் செயலில் மெதுவாகச் சிரித்தவன், “ஏய், கையை விடு கிருதி…” என்றான்.

“ம்ம்ம்… விட மாட்டேன் மாமா…” என்று தூக்கத்திலேயே அவள் சிணுங்கினாள்.

“கிறுக்கி…” என்று செல்லமாகத் திட்டியவன், “எதுக்கு அழுத கிருதிமா?” என்று மென்மையாகக் கேட்டான்.

பாதி உறக்கத்தில் இருக்கும் போது அவளின் மனதில் உள்ளது வெளியே வரும் என்று தெரிந்ததால் தான் அவள் தூக்கத்தில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கேட்டான்.

“ஹ்ம்ம்…” என்று அவளிடமிருந்து சப்தம் மட்டும் வர,

“என் கிருதிமாவை மாமா திட்ட மாட்டேன். சொல்லுடா…” என்று இன்னும் மென்மையாகக் கேட்டு அவளைப் பேச வைக்க முயன்றான்.

“ஹா… அசிங்க அசிங்கமா…” என்று சொன்னவளுக்கு அந்த நேரத்திலும் அழுகை வர, லேசாகக் கேவினாள்.

“ஓகே, ஓகே… கூல்! அதெல்லாம் ஒன்னுமில்லைடா. மனுஷங்களுக்கு உள்ளுக்குள்ள ஒரு வித வக்கிர புத்தி இருக்கு. அதைக் காட்ட இப்போ எல்லாம் இந்தச் சமூக வலைத்தளம் தான் அவங்களுக்குக் கிடைச்சிருக்கு.

யாருன்னு முகம் காட்டாம யாரையும் எப்படியும் பேசிடலாம்னு பேசுறாங்க. அதை எல்லாம் நம்ம மனசில் ஏத்திக்கக் கூடாது. நாம அப்படிப் பேசுறவங்களுக்கு இடமும் கொடுத்துட கூடாது…” என்று மெதுவாக அவளிடம் பேசினான்.

“ம்ம்ம்…” என்று அவனின் பேச்சை அவள் உள்வாங்கியதற்கு அடையாளமாக முனகினாள் கிருதிலயா.

அவள் உள்வாங்கிக் கொண்டதை உணர்ந்தவன் புன்முறுவல் பூத்தான்.

‘இதையே நீ முழிச்சிருக்கும் போது சொன்னா இவ்வளவு பொறுமையா கேட்டுருப்பியா கிறுக்கி? அப்படிக் கேட்க மாட்டன்னு தான் பாதித் தூக்கத்தில் புரிந்து கொள்கிற சக்தியைக் கடவுள் உனக்குக் கொடுத்துருப்பார் போல…’ என்று கேலியாகத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“நீயும் திட்டாத மாமா…” என்று அவர்கள் அசிங்கமாகப் பேசினார்கள், நீயும் என்னைத் திட்டினாயே என்ற அர்த்தத்தில் மீண்டும் முனகினாள் கிருதிலயா.

“சரி, சரி… மாமா திட்டலை. நீ நிம்மதியா தூக்கு…” என்றவன் அவளின் கன்னத்தில் இருந்த கையை மெதுவாக எடுத்து அவளின் தலையில் கையை வைத்து மெதுவாகக் கோதி கொடுக்க ஆரம்பித்தான்.

அந்த வருடலில் கிருதிலயா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.

அவள் ஆழ்ந்து உறங்கியதை உணர்ந்ததும் படுக்கையில் இருந்து எழுந்து அவளுக்குப் போர்வையை நன்றாகப் போர்த்தி விட்டுத் தனது அறைக்குச் சென்றான் செழியன்.

“நைட் என் ரூமுக்கு வந்தியா மாமா?” காலையில் முதல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டு தன் முன் நின்றிருந்தவளை அமைதியாகப் பார்த்தான் செழியன்.

“சொல்லு மாமா. இப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் கிருதிலயா.

“உனக்கு என்ன தோணுது?” என்று திருப்பிக் கேட்டான் செழியன்.

“வந்திருக்க… ஏதோ பேசியிருக்கன்னு தோணுது…” என்றாள்.

“உனக்குத் தோன்றியது சரிதான். வந்தேன்… பேசினேன்… நீயும் பேசின. அப்புறம் தான் நீ நிம்மதியா தூங்கின. இன்னும் வேற என்ன தெரியணும்?” என்று கேட்டான்.

“நீ என்ன பேசின? நான் என்ன பேசினேன்?” என்று யோசனையுடன் கேட்டாள்.

“நாம என்ன பேசினோம்னு உன்னால இப்போ எதுவும் உணர முடியலையா?” என்று கேட்டான்.

“அந்த வீடியோ பத்தி பேசின மாதிரி ஞாபகம்…” என்று முழுதாகத் தெளிவு இல்லாமலேயே சொன்னாள்.

“ம்ம்… இனி அதைப் பத்தி நீயும் பேச தேவையில்ல. நானும் பேசலை. உன் வீடியோ இப்போ இல்லை எடுத்தாச்சு. நம்ம பாதுகாப்பு விஷயத்தில் நாம தான் கவனமா இருக்கணும். இதுக்கு மேல அந்த விஷயம் வேண்டாம். காலேஜுக்கு நேரமாகுது, போய்க் கிளம்பு…” என்றான்.

“நீ ரூல்ஸ் ருத்ரையாவா இருந்தாலும், அப்பப்போ கூல் குருவய்யாவாகவும் இருக்க மாமா. சோ ஸ்வீட்!” என்று அவனின் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“ஏய்! கையை எடு கிருதி…” என்று அவளின் கையைத் தட்டிவிட்டு “அதென்ன பேரு ருத்ரையா, குருவய்யான்னு?” என்று கடுப்பாகக் கேட்டான்.

“உன் மூடுக்குத் தகுந்த மாதிரி உனக்குப் பட்ட பேர் வைப்பேன் மாமோய்…” என்று கத்திக் கொண்டே அங்கிருந்து ஓடினாள் கிருதிலயா.

“சரியான கிறுக்கி…” என்று செல்லமாக அவளைத் தனக்குள் திட்டிக் கொண்டான் செழியன்.

சற்று நேரத்தில் குளித்து விட்டுத் தயாராக வந்த கிருதிலயா, “மாமா, அடுத்த மாசம் காலேஜில் இருந்து டூர் போறாங்க. அதுக்கு இன்னைக்குத் தான் பீஸ் கட்ட கடைசித் தேதி. நீ இன்னும் காசு தரலை…” என்றாள்.

“நான் தான் வேலை பிஸியில் மறந்துட்டேன். நீ ஏன் ஞாபகப்படுத்தலை?” என்று கேட்டுக் கொண்டே தன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“ஹிஹி… நானும் மறந்துட்டேன்…” என்று அசடு வழிந்தாள்.

“நல்லா மறந்த போ! படிக்கிற பிள்ளை மறக்கலாமா?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தார் பவானி.

“படிக்கிற பிள்ளைதான் மறந்து போகும் அத்தை…” என்று அவள் அசால்டாகச் சொல்ல,

“இது என்னடி இப்படிச் சொல்ற? படிக்கிற பிள்ளைக்குத் தானே ஞாபகசக்தி அதிகம் வேணும்?” என்று கேட்டார் பவானி.

“அதான் அத்தை. ஞாபகசக்தியை எல்லாம் படிக்கவே அதிகம் யூஸ் பண்றதால் மத்த விஷயம் எல்லாம் மறக்கும் அத்தை…” என்று நியாயம் பேசியவளின் முதுகில் ஒரு அடியைப் போட்டான் செழியன்.

“உன் ஞாபக மறதிக்காக ஏதாவது உளறி வைக்காம சாப்பிட்டுக் காலேஜ் கிளம்புற வழியைப் பாரு…” என்றான்.

“அடிக்காதே மாமா. வலிக்குது…” என்று சிணுங்கினாள் கிருதிலயா.

“பிள்ளையை அடிக்காதேடா செழியா!” என்று பவானியும் மகனை அதட்டினார்.

“ஹ்க்கும்… உங்க பிள்ளையை நீங்க தான் கொஞ்சுங்க. எனக்கு முதலில் சாப்பாட்டைப் போடுங்க. நான் கிளம்பணும்…” என்றான்.

சாப்பிட்டு முடித்ததும் கல்லூரிக்குக் கிளம்பினாள் கிருதிலயா.

“ஹாய்… ஹாய் மசாலா பொட்டலங்களா…” என்று ஆர்ப்பாட்டமாகக் கத்திக் கொண்டே தன் வகுப்பறைக்குள் நுழைந்தவளை “வாடியம்மா கரம் மசாலா… இன்னைக்கு என்ன காரம் கம்மியா இருக்குற மாதிரி இருக்கு…” என்று வரவேற்றாள் அவளின் தோழி சரண்யா.

“இன்னைக்குச் சிம்பிளா வரணும்னு தான் மேக்கப் கம்மியா போட்டேன் சாம்பார் பொடி…” என்றாள் கரம் மசாலா என்று தோழிகளால் அழைக்கப்பட்ட கிருதிலயா.

“ஏய், சீரகப் பொடி நீ என்னடி எழுதிட்டு இருக்க?” என்று தோழிகள் இருவரையும் கண்டு கொள்ளாமல் நோட்டில் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த சிந்துஜாவிடம் கேட்டாள் கிருதி.

அவளோ இவள் பேச்சுக் காதில் விழாதது போல் எழுதிக் கொண்டிருந்தாள்.

“நம்ம செட்லயே இந்தச் சீரகப் பொடி தான் ஓவர் படிப்ஸ்னு தெரியும்ல. அவ ஏதாவது எழுதிட்டு இருப்பா. அவளை விடு, நீ சொல்லு இன்னைக்கு உங்க வீட்டில் என்ன ஸ்பெஷல் கிருதி?” என்று கேட்டாள் சரண்யா.

“என்ன ஸ்பெஷல்டி கேட்குற?”

“வேற என்ன கேட்கப் போறேன்? சாப்பாடு தான். அப்புறம்…” என்று அவள் ஆரம்பிக்க,

“ஏய், நிறுத்து! நிறுத்து! சாப்பாடு தானே? இன்னைக்கு உன் ஸ்பெஷல் தான். வெண்பொங்கல், சாம்பார்…” என்றாள் கிருதி.

“வாவ்! சூப்பர்!” என்று நாவை வெளியே நீட்டி உதட்டைத் தீண்டிச் சப்புக் கொட்டிக் கொண்டாள் சாம்பார் பொடியான சரண்யா.

“சரி சரி, சாப்பாடு ஐட்டம் சொல்லிட்ட… அப்படியே உன் வீட்டு ஐட்டத்தைப் பத்தியும் கொஞ்சம் சொல்லிடேன்…” என்று வழிசலாகக் கேட்ட தோழியை முறைத்தாள் கிருதிலயா.

“உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். என் மாமனை ஐட்டம்னு சொல்லாதேனு. இனி திருப்பி இப்படிச் சொன்னா அப்படியே உன் மூஞ்சில ஒரு குத்து விட்டுடுவேன்…” என்றாள் கோபமாக.

“ஆமாடி, எல்லா விஷயத்துக்கும் எங்க கூடக் கூட்டுச் சேர்ந்துக்கோ. ஆனா உன் மாமா விஷயத்தில் மட்டும் எங்களைக் கழட்டி விட்டுடு…” அவளின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் பொறிந்தாள் சரண்யா.

“என் மாமா விஷயத்தில் நான் எப்பவும் அப்படித்தான்னு தெரிஞ்சும் என்னை வம்புக்கு இழுத்தால், என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கப் போற சாம்பார் பொடி…” என்றாள் மிரட்டலாக.

“ஏய், நான் சும்மா விளையாட்டுக்குக் கலாட்டா பண்ணினா நீ என்னடி இப்படித் தாம்தூம்னு குதிக்கிற?”

“என் மாமா பத்தி பேசாதே… நானும் குதிக்க மாட்டேன்…” என்றாள்.

“போதும்டி, ஓவரா பொங்காதே! உன் மாமாவை நீயே வச்சுக்கோ…”

“நானே தான் வச்சுப்பேன். பின்ன உன்கிட்டயா தூக்கிக் கொடுப்பேன்னு நினைச்ச?”.

“ஹேய், அப்போ லவ்வே பண்ண ஆரம்பிச்சுட்டியாடி? இதுக்கு முன்னாடி எல்லாம் இல்லைனு சொல்லிட்டு இருந்த… அப்போ அது பொய்யா?” சரண்யா ஆச்சரியமாகக் கத்திக் கேட்டாள்.

“ஏய், நான் லவ் பண்றேன்னு எப்போ டி சொன்னேன்?”

“பின்ன, நீயே வச்சுக்கப் போறேன்னு சொன்னதுக்கு அதானே அர்த்தம்…” என்று சரண்யா கேட்க, கிருதிலயா யோசனையுடன் அமைதியாகிப் போனாள்.

எத்தனை சண்டை போட்டாலும், மாறி மாறித் திட்டிக் கொண்டாலும் செழியனை கிருதிலயாவிற்கு மிகவும் பிடிக்கும்.

ஆனந்திடம் மட்டுமே செழியனைப் பற்றி ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்வாளே தவிர, அவனைத் தன் தோழிகளிடம் கூட விட்டுக் கொடுத்துப் பேசி விட மாட்டாள்.

செழியனைப் பற்றிய அவளின் எண்ணம் எல்லாம் இதுவரை பிடித்தம் என்ற அளவில் தான் இருந்தது.

இப்போது தோழி சொல்லியதைப் பார்த்தால் பிடித்தத்தைத் தாண்டி வேறு இருக்குமோ? என்று யோசிக்க ஆரம்பித்தாள் கிருதிலயா.