மனதோடு உறவாட வந்தவளே – 7

அத்தியாயம் – 7

காலையில் மாத்திரையின் வீரியம் குறைய உடல் அசதியில் தூங்க முடியாமல் தவித்த ஜீவரஞ்சன் சீக்கிரமே கண்விழித்தான்.

தனுவின் முகத்தைப் பார்க்க நினைத்து தன் அருகில் திரும்பி அவளைப் பார்க்க அங்கே சரியாகத் தூங்காத விழிகளுடன் தன்னையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த தனுவை கண்டுவிட்டு எழுந்து அமரப் போனான்.

அவனைத் தடுத்த தனு, அவன் நெற்றியில் கைவைத்து பார்த்து விட்டு கழுத்திலும் கைவைத்துப் பார்த்தாள். உடல் சூடாக இருக்கவும் கவலை அடைந்தவள் எழ முயன்றாள்.

இப்பொழுது தனுவை எழவிடாமல் தடுத்தவன் கழுத்தில் இருந்த தனுவின் கையைத் தன் கழுத்தோடு இன்னும் அழுத்தமாக அணைத்துக் கொண்டு சுகமாகக் கண்களை மூடிக் கொண்டான்.

அவனின் பிடியில் இருந்து பிடிவாதமாகத் தன் கையை எடுத்துக் கொண்ட தனு எழுந்து அமர்ந்தாள்.

அவளின் செயலில் கண்களைத் திறந்தவன் கேள்வியாகப் பார்த்தான்.

‘ஏன் நேற்று தனக்கு உடம்புக்கு முடியவில்லை என்று தன்னிடம் சொல்லாமல் போனான்?’ எனக் கேட்டுச் சண்டை போட வார்த்தைகள் தொண்டை வந்துவிட்டாலும் அவனின் நிலையை உணர்ந்து அதை அப்படியே விழுங்கிவிட்டு ”உங்களுக்கு இன்னும் காய்ச்சல் அடிக்குது ஜீவா. நான் போய்க் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன். நீங்க எழுந்து ப்ரஸ் பண்ணிட்டு இருங்க” என்றவள் அறைக்கு வெளியே சென்றாள்.

“இவ ஏன் இப்படி இருக்கா? சரியா தூங்காம இருந்தது போல் இருக்கு முகம்?” என நினைத்து அவள் செல்வதையே பார்த்தவன் உடல் சோர்வு அழுத்தியதால் கண்களை மூடிக்கொண்டான்.

தனு கையில் காபியுடன் வந்து பார்த்தபோது எழாமல் படுத்திருந்தவன் அருகில் இருந்த டேபிளில் காபியை வைத்துவிட்டுக் குளியலறை சென்று ப்ரஸும், பேஸ்ட்டும் எடுத்துவந்து அவனின் கையைப் பிடித்து எழுப்பி அமர வைத்தாள்.

“என்னை விடு தனு எனக்குப் படுக்கணும்” என்றவனை “பல் விழக்கிட்டு காபி குடிச்சுட்டு படுங்க. நான் போய்க் கஞ்சி வச்சு எடுத்துட்டு வர வரைக்கும். அதையும் குடிச்சுட்டு ஹாஸ்பிடல் கிளம்பலாம்” என்றாள்.

“ஹாஸ்பிடல் எல்லாம் எதுக்கு? வேணாமே!” என ஆரம்பிக்கவும், அவனைப் பார்த்தவள் ஒன்று பேசாமல் பேஸ்டை ப்ரஸில் வைத்து நீட்டினாள்.

அவனும் கட்டிலை விட்டு இறங்கி போய்ப் பல் துலக்கி விட்டு வந்தான். வந்தவனிடம் காபியை நீட்டவும் குடித்து முடித்தான்.

“இப்ப படுங்க கஞ்சி செய்துட்டு வர்றேன்” எனச் சொல்லி சென்றாள்.

‘ஹ்ம்ம் மேடம்க்கு ஏதோ கோபம் போல?’ என மனதில் நினைத்தவன் அது என்னவென்று அறிய முயற்சி எதுவும் எடுக்காமல் படுத்துவிட்டான்.

சமையலறையில் இருந்த தனுவின் மனம் வருத்தத்தில் இருந்தது.

‘ வளவளனு பேச மாட்டார். அமைதியான டைப்கிறதால அப்படி இருக்கார்னு நினைச்சா உடம்பு சரி இல்லைனா கூடவா சொல்லக்கூடாது? அப்படிச் சொல்லமுடியாத அளவுக்கு நான் என்ன வேற்று ஆளா என்ன? ஏன் இப்படிச் செய்தார் இந்த ரஞ்சன்?’ என நினைத்தவள் ‘இப்ப அவருக்குச் சரி ஆகுறது தான் முக்கியம் அதுக்கான வேலையை முதலில் பார்ப்போம்’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு கஞ்சியைத் தயார் செய்தாள்.

கஞ்சியை எடுத்துக் கொண்டு வந்து ஜீவாவிடம் கொடுக்க, அதைக் கையில் வாங்கியவன் “நீ சாப்பிடலையா?” எனக் கேட்டான்.

“எனக்கும் எடுத்துட்டு வந்துருக்கேன்” எனச் சொல்லி இன்னொரு கையில் இருந்த கஞ்சியைக் காட்டினாள்.

“உனக்கும் கஞ்சியா? உனக்கு வேற எதாவது செய்துக்க வேண்டியது தான?”

“எனக்கு மட்டும் எதுக்குத் தனியா செய்துகிட்டு? எனக்கு இதுவே போதும்”

“உனக்கா காய்ச்சல்? இதைச் சாப்பிட்டு ஏன் கஷ்டபடுற? போய் உனக்கு வேற செய்துக்கோ!” என்றான்.

ஆனால் தனுவோ பதில் சொல்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தாள்.

“சொல்றேன்ல தனு? ஏன் இப்படிச் செய்ற?” எனச் சோர்வுடன் கேட்டான்.

அவன் சோர்வை கண்டவள் “எனக்குத் தனியா சமைச்சுத் திருப்தியா சாப்பிடுறத விட, அதைத் தயார் செய்ற நேரத்தில் நாம இதைச் சாப்பிட்டுச் சீக்கிரம் ஹாஸ்பிடல் கிளம்பி போய் டாக்டர்கிட்ட காட்டிட்டு வந்துட்டா எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும் ஜீவா. ப்ளீஸ் குடிச்சுட்டு கிளம்புங்க” என்றாள் கெஞ்சலாக.

அவளின் ப்ளீஸில் அமைதியானவன் “சரி விடு கிளம்புவோம்” என்றுவிட்டு கஞ்சியை அவள் மீது பார்வையை வைத்துக் கொண்டே பருகினான். கஞ்சிக்குத் தோதாக அவள் செய்திருந்த பருப்பு துவையல் நாக்கிற்குச் சுவையைக் கூட்டியது.

சாப்பாட்டை முடித்தவர்கள் தன் தந்தைக்குப் போன் செய்து ஜீவாவிற்குக் காய்ச்சல் எனச் சொல்லி இன்றைக்குக் கடைக்கு வரவில்லை எனச் சொல்லவும், அவர் ‘நாங்கள் கிளம்பி வரவா?’ எனக் கேட்க, “வேணாம்ப்பா! நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன். நீங்க வேணா சாயங்காலமா வாங்க” எனச் சொல்லி போனை வைத்தாள்.

ஜீவாவும் தன் அலுவலகத்தில் விடுமுறை அறிவித்து விட்டு வரவும் மருத்துவமனை கிளம்பினார்கள். தன்னுடைய இரு சக்கர வாகனத்தைக் கிளப்பியவனைத் தடுத்து “பக்கத்தில் தான ஆட்டோ ஸ்டாண்ட் அதிலேயே போவோம்” என ஆட்டோ பிடித்து அழைத்துச் சென்றாள்.

மருத்துவர் சோதனை செய்து பார்த்து விட்டு”சாதாரண வைரவல் பீவர் தான். மூனு நாளில் சரி ஆகிவிடும்” எனச் சொல்லி மாத்திரை எழுதி கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு வீடு வந்தார்கள்.

காய்ச்சலும், வெளியில் சென்று விட்டு வந்ததும் சேர்ந்து அலுப்பைத் தர வந்ததும் போய்ப் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

அதற்குள் தனு ‘அவனுக்கு ரசம் சாதம் ரெடி செய்வோம்’ என வேலை ஆரம்பித்த சமயத்தில் போன் வந்தது.

தமிழரசி தான் அழைத்திருந்தார். தினமும் ஒருமுறை தனுவிடம் பேசி விடுவார். அதே போல இன்றைக்கும் அழைத்தார்.

‘இன்னைக்கு என்ன செய்தீங்க? என்ன சமையல்?’ என்று வழக்கமான பேச்சுடன் ஆரம்பித்தார்.

“அவருக்குப் பீவர் அத்தை நான் காலைல கஞ்சி தான் செய்தேன். இப்போ தான் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தோம். ரசம் சாதம் ரெடி செய்துட்டு இருக்கேன்” என்றாள்.

“என்னம்மா சொல்ற? இப்ப ஜீவாக்கு எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னார்?” என வேகமாகக் கேட்டார் அரசி.

“வைரவல் பீவர் தானாம். மூனு நாளுக்குள்ள சரி ஆகிரும்னு சொல்லி டாக்டர் மாத்திரை கொடுத்துருக்கார். அவர் இப்ப தூங்கிகிட்டு இருக்கார் அத்தை” என்றவள் தொடர்ந்து,

“இவர் ஏன் அத்தை இப்படிச் செய்றார்? நேத்து ஈவ்னிங்கே பீவர் வந்துருக்கும் போல. ஆனா இவர் என்கிட்ட எதுமே சொல்லலை. நானா தெரிஞ்சுக்கிட்டேன்” என உரிமையுடன் அரசியிடம் புகார் வாசித்தாள்.

இந்த உரிமையான பேச்சு அரசியால் வந்தது. மருமகளை அப்படித் தன்னிடம் பழக வைத்திருந்தார்.

“அவன் எப்பவுமே அப்படிதான்மா! எதுவும் சொல்லமாட்டான். அந்தக் குணத்தை மாத்த நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டோம் மாறலை” என அவரும் அலுத்துக் கொண்டார்.

“இப்படிச் செய்வார்னு என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல அத்தை? நான் முன்பே கவனமா இருந்திருப்பேனே?” என்றவளிடம்,

“அது சரி வராதுமா” என்றார்.

“ஏன் அத்தை? என்ன சரி வராது? என்கிட்ட சொல்றதுல என்னவாகிரும்?” எனப் படபடத்தாள்.

“இப்ப எதுக்கு நீ இவ்வளவு பதட்டப்படுற? நிதானமா இரு! சொல்றேன்” என்றவர்.

“நானே ஜீவா பத்தி சொல்றதை விட நீயே தெரிஞ்சுக்கிறது தான்ம்மா நல்லது. அதான் சொல்லலை” என்றார் பொறுமையாக.

“ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க?”

‘இப்ப நான் ஜீவா இப்படிச் செய்வான், இது அவன் பழக்கம்னு சொல்றேன்னு வை. நீ என்ன செய்வ தெரியுமா? அவன் சாதாரணமா இருந்தாலே நான் சொன்னதை மனசுல வச்சுகிட்டு அந்தக் கண்ணோட்டத்தோடையே அவனைப் பார்ப்ப. அதான் சொல்லலை” என்றார்.

“என்ன அத்தை நீங்க இப்படிச் சொல்றீங்க?” எனச் சலித்துக் கொண்டவளிடம்,

“இதுக்கே இப்படிச் சலிச்சா எப்படிமா? அவன் குணத்தைப் புரிஞ்சுக்க இன்னும் இருக்கே” என்றார்.

“பயமுறுத்தாதீங்க அத்தை” எனக் குரலில் மெல்லிய பயம் தெரியப் பேசினாள்.

“நீ இவ்வளவு பயபடுற அளவுக்கு அவன் ஒன்னும் மோசம் இல்லமா. அதனால பயப்படாத!” எனச் சமாதானப் படுத்தினார்.

“சரி சாதம் வைச்சுட்டியா? சீக்கிரம் செய்து அவனுக்குக் கொடு. சாப்பிட்டு மாத்திரை போடட்டும்” என்றவர், “நான் நாளைக்கு அங்க வர்றேன்” என்றார்.

“நீங்க அவசரமா வர அளவுக்குப் பயம் இல்லை அத்தை. வந்தா இரண்டு நாள் தங்குற மாதிரி வாங்க. வந்ததும் ஓடக் கூடாது” எனச் செல்லமாக மிரட்டினாள்.

“அடி அவளை! என்னையே மிரட்டுறியா?” எனப் பதிலுக்கு மாமியார் கெத்துக் காட்டியவரிடம்,

“அய்யோ நான் பயந்துட்டேனே!” எனப் பலிப்பு காட்டினாள்.

“உனக்குச் செல்லம் அதிகமாகிருச்சு. ஓடு, ஓடு! போய் வேலையைப் பார்!” எனச் செல்லமாக அதட்டிக் கொண்டே போனை வைத்தார்.

தமிழரசியிடம் பேசினதில் கொஞ்சம் இதமாக உணர்ந்தவள், அந்த இதத்துடனே சமையலை முடித்துவிட்டு போய் ஜீவாவை எழுப்பிச் சாப்பாட்டு மேஜைக்கு அழைத்து வந்தாள்.

தூங்கி எழுந்ததில் இப்போது கொஞ்சம் சோர்வு குறைந்ததாகத் தோன்றியது ஜீவாவிற்கு.

சூடான ரசம், சாதமும் தெம்பைக் கூட்டியது.

சாப்பிட்டு முடித்ததும் “இந்தாங்க ஜீவா மாத்திரை போடுங்க” என நின்று கொண்டே எடுத்துக் கொடுத்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

‘இவ என்ன ஜீவான்னு கூப்பிடுறா?’ என்ற எண்ணத்துடன் அவளைப் பார்த்த படியே இருந்தான்.

அப்போது தான் அவனுக்குக் கொஞ்சம் புரிந்தது ‘அவள் காலையில் இருந்தே தன்னை அப்படிதான் கூப்பிடுகிறாள்?’ என்று.

திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் அவள் வாயில் ரஞ்சன் தான் அதிகமாக வரும்.

அவன் மாத்திரையைக் கையில் வாங்காமல் பார்த்திருக்கவும் ‘என்ன?’ என்பது போலக் கண்களில் கேள்வியைக் காட்டினாள்.

“நீ என் மேல கோபமா இருக்கியா என்ன? எப்பயும் ஜீவான்னு சொல்ல மாட்ட? இன்னைக்குப் புல்லா நீ என்னை ஜீவான்னு தான் கூப்பிட்டு இருக்க. என்ன விசயம்?” என்றான்

‘நான் கோபமா இருக்கிறது எல்லாம் இவருக்குப் புரியுமா? அதிசயம் தான்!’ என மனதில் நொடித்துக் கொண்டவள்,

“நீங்க முதலில் மாத்திரையைப் போடுங்க, அப்புறம் பேசலாம்” என்றாள்.

” நீ முதலில் எதுக்குக் கோவம்னு சொல்லு. அப்பத்தான் மாத்திரை போடுவேன்” என இவனும் திருப்பினான்.

“சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதீங்க ஜீவா” எனக் கடியவும்.

“பார்! இப்ப கூட ஜீவா சொல்ற?” என்றான்.

‘ஆமா தேவைக்குப் பேசிடுறாதீங்க. இப்ப தேவை இல்லாம எத்தனை பேச்சு பார்!’ என அவள் முனங்கியது காதில் விழவும்.

“நான் தேவையானது என்ன பேசலை?” எனக் கேட்டான்.

மாத்திரையைப் போடாமல் கேள்வியாகக் கேட்கவும் பொறுமை இழந்தவள் அவளாகவே அவனின் வாயை திறக்க வைத்து மாத்திரையை வாயில் போட்டு தண்ணியைக் கொடுத்தாள்.

அவள் செய்வதைத் தடுக்க முயலாமல் ஒத்துழைத்தவன் மாத்திரையை முழுங்கிவிட்டு ‘இப்பவாவது சொல்றியா?’ என்பது போலப் பார்த்தான்.

அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல் ”நேத்து நீங்க வந்ததும் ஏன் உங்களுக்கு உடம்பு சரி இல்லாததைச் சொல்லலை? நீங்க என்கிட்ட சொல்லாம இருக்கவும் எனக்கு எவ்வளவு வலிச்சது தெரியுமா? நைட் எல்லாம் ஏன் அப்படிச் செய்தீங்கனு நினைச்சு என்னால சரியா தூங்க கூட முடியல” என லேசாகக் குரல் கமற கண்ணில் நீர் தேங்கக் கேட்டாள்.

“ஹேய்! இதுக்குப் போயா அழுவ? இதெல்லாம் ஒரு விசயம்னு இதுக்கு அழுதுக்கிட்டு” எனவும்,

“என்ன சொன்னீங்க? வீட்டுல நம்ம இரண்டு பேர் தான் இருக்கோம். என்கிட்ட சொன்னாதானே தெரியும். எதுவும் சொல்லாம நீங்க பாட்டுக்குப் போய்ப் படுத்துட்டீங்க. கஷ்டமா இருக்கு எனக்கு. என்னை நீங்க ஒதுக்கி வைக்கிறது போல” எனக் கலங்கினாள்.

“ச்சேச்சே! அப்படி எல்லாம் இல்லை தனு” என்றவன் ”அழாதே! ப்ளீஸ்!” என அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

அவள் கலங்குவதைப் பார்த்து சமாதானப் படுத்தினாலும் அவனுக்குத் தான் சொல்லாமல் விட்டது பெரிய விசயமாகவே தெரியவில்லை.

‘நான் எப்பயும் இப்படித் தானே இதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிறாளே?’ என்று தான்அவன் எண்ணம் ஓடியது.