மனதோடு உறவாட வந்தவளே – 6

அத்தியாயம் – 6

திருமணம் முடிந்து பத்து நாட்கள் சென்றிருந்தன.

அன்று காலையில் தான் ஜீவா, தனு தனிக்குடித்தனம் நடத்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு வந்தார்கள். இருவரின் பெற்றோரும் வந்திருந்து, பால் காய்ச்சி, வீட்டு சாமான் எல்லாம் வாங்கி அடுக்கி வைத்து விட்டு அப்பொழுது தான் கிளம்பினார்கள்.

அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த ஜீவா “நாளையில் இருந்து நான் வேலைக்குக் கிளம்பனும் தனு. அதுக்கு இப்போ கொஞ்சம் வேலை முடிக்க வேண்டி இருக்கு. நான் அதைப் பார்க்கிறேன். நீ நாளையில் இருந்து என்ன செய்யப் போற? அப்பா ஸ்டோருக்கு போறீயா? வீட்டில் இருக்கப் போறீயா?” என விசாரித்தான்.

“நான் இந்த வீட்டு அப்பார்ட்மெண்ட் சூழல். இந்த ஏரியா பத்தி எல்லாம் கொஞ்சம் பழகிக்கிறேன் ரஞ்சன் அப்புறம் போய்க்கிறேன்” என்றாள்.

“ஓகே அப்படியே செய்துக்கோ. இப்போ நான் வேலையை முடிச்சுட்டு வர்றேன்” என்று அறைக்குச் செல்ல, தனு மீதம் இருந்த வேலைகளைப் பார்க்கச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்த ஜீவாவிற்குப் புதுச்சேரியில் இருந்து இங்கே வரும்முன் அரசி அவனிடம் பேசியது நினைவிற்கு வந்தது.

தேன்நிலவிற்குச் சென்றுவிட்டு வந்த பிறகு இங்கே வரும் வரை புதுமணத் தம்பதிகள் புதுச்சேரியில் தான் இருந்தார்கள்.

சென்னை வருவதற்கு முதல் நாள் காலையில் சீக்கிரம் எழுந்து வந்த ஜீவாவிடம் காபியை கொடுத்துக் கொண்டே “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்ப்பா” என்றார் அரசி.

“என்னம்மா சொல்லுங்க”

“உனக்கு இப்ப கல்யாணம் ஆகிருச்சு. இனி உனக்குனு ஒருத்தி இருக்கா. அவகிட்ட கொஞ்சம் நல்ல விதமா பழகணும்ம்பா நீ” என்றார்.

“என்னமா இது. எல்லாரும் கல்யாணம் முடிஞ்ச பொண்ணுங்ககிட்ட தான் அம்மாக்கள் இப்படி எல்லாம் அட்வைஸ் செய்வாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன். நீங்க என்ன எனக்குச் சொல்றீங்க?” எனச் சிரிப்புடன் கேட்ட ஜீவாவை பார்த்து.

“ஏன் ஜீவா பொண்ணைப் பெத்த அம்மாக்கள் மட்டும் தான் புகுந்த வீட்டுல தன் பொண்ணு நல்ல பேர் வாங்கணும்னு நினைக்கணுமா? பையன்களைப் பெத்த அம்மாவும் தன் மகன் நல்ல மருமகன், நல்ல கணவன்னு பேர் வாங்கணும்னு நினைச்சா என்ன தப்பு?” எனக் கேட்டார்.

தன் அன்னையைப் பெருமைவுடன் பார்த்த ஜீவா “நினைக்கலாம்மா! தப்பே இல்லை” என்றான்.

“அதான் சொல்றேன். நானும் நீ அப்படிப் பேர் வாங்கணும்னு நினைக்கிறேன். அதான் தனுகிட்ட இன்னும் நல்லா பேசிப் பழகுன்னு சொல்றேன்” என்றார்.

“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? நான் தனுகிட்ட நல்லாத்தான்மா பேசுறேன்?

“நீ சாதாரணமா பேசி பழகுகிறதை சொல்லலை. உன் குணத்தைக் கொஞ்சம் மாத்திக்கப் பழகுன்னு சொல்றேன். நீ எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம இருக்கிறது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? ஆனா உன்கிட்ட இருக்கிற வேற கெட்ட பழக்கம் என்ன தெரியுமா?

நீ எதையும் மனசு விட்டுப் பேச மாட்ட. நான் உன் முகத்தைப் பார்த்தே ஒவ்வொன்னும் கண்டுபிடிச்சேன். அப்பாவுக்கும், ஆனந்துக்கும் அது இப்போ பழகிருச்சு. ஆனா தனு? உன் வாழ்க்கையில் புதுசா வந்தவ. உன்னைப் புரிஞ்சிக்கக் கொஞ்சம் நாளாகும். அதுக்குள்ள அவளைக் கஷ்டப்படுத்திறானு சொல்றேன்” என்று சிறிது கண்டிப்புடனே சொன்னார்.

“ஹ்ம்ம்! சரிம்மா. முயற்சி பண்றேன். ஆனா நீங்க கவலை படும் படி எதுவும் நடக்காது போதுமா?” என்றான் தான் அப்படி நடக்க மாட்டோம் என்ற நம்பிக்கையுடன்.

“அப்படி இருந்தா சந்தோஷம் தான் பா” என்றார் அரசி.


தன் அம்மா பேசியதை நினைத்துப் பார்த்த ஜீவா இப்பொழுது தனக்குள் சிரித்துக் கொண்டான்.

‘நான் என்ன அப்படியா கஷ்டப் படுத்திருவேன்? அம்மா இப்படிக் கவலைப்படுறாங்க?’ என நினைத்தான்.

இப்படி நினைத்த ஜீவரஞ்சன் தான் பின்னாளில் அவனின் மீதான அவனின் நம்பிக்கையே ஆட்டம் வகையில் அவளைக் கஷ்டப்படுத்தப் போகின்றான் என்பதை அவனே அறியாத ஒன்று.
.*
மறுநாளில் இருந்து அவர்களின் அன்றாட வாழ்க்கை ஆரம்பம் ஆகியது.

புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர்.

வார விடுமுறையில் ஒருவாரம் புதுச்சேரிக்கும், ஒரு வாரம் தனுவின் இல்லத்திற்கும் எனச் செல்பவர்கள், அங்குச் செல்ல முடியாத நாட்களில் பக்கத்தில் எங்கேயாவது வெளியே செல்வது என அவர்கள் நாட்கள் ஓடின.

மீண்டும் தனு கடைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

இப்படியே மூன்று மாதங்களைக் கடந்திருந்தது.

திருமணமான புதிதில் இருக்கும் அதே வாழ்க்கை முறை எப்போதும் தொடருமா என்ன?

அவர்களின் வாழ்க்கையிலும் மெல்ல, மெல்ல வந்த மாற்றங்களை உணரும் நாட்களும் வந்தன.

இத்தனை நாட்களில் தனு அவளின் ரஞ்சன் என்றால் அவளின் உயிர் என்னும் அளவிற்கு அவனை நினைக்க ஆரம்பித்திருந்தாள்.

ஆனால் ஜீவரஞ்சனை பற்றி இன்னும் அவளால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.

கணவன், மனைவியிடம் காட்டும் இயல்பான பாசத்தைக் காட்டினான். அவளை எந்தக் குறை கூறியும் பேசுவதில்லை. ஒரு கணவனாக நன்றாகப் பார்த்துக் கொண்டான் என்றால் அது மிகையல்ல.

ஆனால் தான் அவனைத் தன் உயிராகக் கருதுவது போல, அவனும் நினைக்கிறானா என்பதை இன்னும் தனுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் அப்படி நினைப்பதற்குக் காரணம் ஜீவா எதுவென்றாலும் அளவாகவே பேசினான். அது அவனின் இயல்பாக ஏற்றுக் கொண்டாலும் ஏனோ தனுவால் அதை எளிதாகப் புறம் தள்ள முடியவில்லை.

இருவர் மட்டும் இருக்கும் வீட்டில் ஒருவர் மட்டுமே பேசிக் கொண்டு இருக்க முடியாதே? தனக்குச் சொந்தமானவனிடம் தனுவிற்குப் பேச்சுச் சரளமாக வந்தது.

ஆனால் ஜீவா எதுவும் கேட்டால் பதில் சொல்வான். எதுவும் அவனுக்குச் சொல்லவேண்டியது இருந்தால் சொல்வான். அவ்வளவு தான்! அதையும் தாண்டிய சகஜமான பேச்சையும் எதிர்பார்த்தாள் தனு.

ஜீவரஞ்சனிடம் பாசத்தையும் மீறிய காதலை எதிர்பார்த்தாள் தனுஸ்ரீ. தன்னிடம் அவன் இன்னும் உரிமையுடன் பழகவேண்டும் என நினைத்தாள்.

காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை என்றாலும் ஒரு சிறந்த தாம்பத்திய வாழ்க்கைக்குக் காதலும் முக்கியம்தான் அல்லவா?

அதில் யாராவது ஒருவரிடம் குறைவாக நினைக்கும் போது அங்கே சிக்கல்கள் ஆரம்பமாகின்றன.

அங்கேயும் அதே தான் நடந்தது. சிக்கல்கள் வருவதற்குச் சான்று போலச் சில சம்பவங்களும் நடக்க ஆரம்பித்தன.


ஒருநாள் வேலை முடிந்து வந்த ஜீவா வீட்டிற்குள் நுழையும் போதே ஒரு மாதிரியாக இருந்தான்.

கதவை திறந்து விட்ட தனு “வாங்க ரஞ்சன். உட்கார்ந்து இருங்க நான் போய் உங்களுக்குக் காபி எடுத்துட்டு வர்றேன்” என்றவள் அவனைச் சரியாகக் கவனிக்காமலேயே உள்ளே சென்று காபியை எடுத்துக் கொண்டு வந்தவள், அவன் உடை கூட மாற்றாமல் அப்படியே சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்ன ரஞ்சன் அப்படியே உட்கார்ந்துடீங்க? டிரஸ் மாத்தலையா?” எனக் கேட்டாள்.

” ஹ்ம்ம் மாத்தணும்” எனச் சொல்லியவன் அவள் கையில் இருந்த காபியை வாங்கிப் பருக ஆரம்பித்தான்.

தன் காபியுடன் அவனின் எதிரே அமர்ந்த தனு “இன்னைக்குத் தருண் வந்தான்ங்க. அவனுக்கு லீவாம். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். இப்பத்தான் கிளம்பினான்” என அவனிடம் நடந்ததை அவள் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே போனாள் அவன் கவனிக்கிறானா, இல்லையா என உணராமலேயே.

சொல்லி முடித்த பிறகுதான் ஜீவாவிடம் இருந்து வழக்கமாக வரும் “ம்ம்” கொட்டல் கூட இல்லாமல் இருக்கவும், தான் பேசினதைக் கவனிக்கிறானா எனப் பார்த்ததாள். ஆனால் அவன் சோபாவில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்னாச்சு ரஞ்சன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றவளின் கேள்வியில் அப்பொழுது தான் கவனித்து நிமிர்ந்து “ஒன்னும் இல்ல தனு நல்லாத்தான் இருக்கேன். தருண் எப்படி இருக்கான்? ஏன் அதுக்குள்ள கிளம்பிட்டான்? இருக்கச் சொல்லவேண்டியது தான?” என்றான்.

தம்பியை பற்றிப் பேசவும் மற்றதை மறந்தவள் “சொன்னேன் ரஞ்சன். ஆனா நீங்க வர லேட்டாகவும் இன்னொரு நாள் வர்றேன்னு கிளம்பிட்டான்” என்றாள்.

“சரி தனு! நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என உள்ளே சென்றவன் வெகு நேரமாகியும் வெளியில் வராமல் இருக்க ‘என்னதிது? இன்னைக்கு இவர் சரியில்லையே? எதுவும் ஆபீஸ் டென்சனா?’ என நினைத்துக்கொண்டே உள்ளே செல்ல எழுந்தாள்.

அப்போது வெளியே வந்த ஜீவா “சாப்பிடலாமா தனு?” என்றான்.

‘என்ன இவ்வளவு சீக்கிரமா?’ என நினைத்தபடி மணியைப் பார்த்தாள். மணி அப்பொழுது தான் ஏழரையைத் தாண்டி இருந்தது. வழக்கமாக எட்டரை மணி தான் அவர்களின் சாப்பாட்டு நேரம். ஆனால் சீக்கிரமே அவன் அவ்வாறு கேட்கவும் ‘இப்போவேவா?’ என நினைத்தாள்.

அவள் மணியைப் பார்ப்பதை கவனித்தவன் “இன்னைக்குச் சீக்கிரம் சாப்பிடலாம். எடுத்து வை!” என்றான்.

‘சரிதான்’ என அவளும் வேறு கேட்காமல் ஏற்கனவே அவன் வரும் முன்பே தயார் செய்து விடுவதால் ரெடியாக இருந்த சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.

எப்போதையும் விடச் சாப்பிடும் நேரம் அமைதியாக இருந்தது. தனுவும் இன்று அமைதியாகி விட்டாள். அலுவலகம் விட்டு வந்த பிறகு அவன் பேசுகிறானோ, இல்லையோ இவள் பேசுவதையாவது கேட்பவன், இன்று அதுவும் கூட இல்லாமல் அமைதியாக இருக்கவும். ‘நீங்க பேசத்தான் மாட்டீங்கனு பார்த்தா, இன்னைக்கு நான் பேசுறத கேட்கவும் மாட்டீங்களா? போங்க நானும் பேசமாட்டேன்’ என மனதிற்குள் செல்லமாக அவனிடம் கோபித்துக் கொண்டாள்.

அந்தக் கோபத்துடனே சாப்பிட்டுவிட்டு எல்லாம் எடுத்து வைத்து சமையலறையை ஒதுங்க வைத்துவிட்டு அவள் வரவேற்பறைக்கு வரும் போது எப்போதும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கும் ஜீவா இப்போது அங்கே இல்லை.

முன்பே போடபட்டிருந்த தொலைக்காட்சி தன்னால் ஓடிக்கொண்டிருந்தது. அதை அணைத்துவிட்டு அறைக்குச் சென்றால் ஜீவா படுத்திருந்தான்.

அவனின் வித்தியாசமான நடைமுறையிலேயே குழம்பி இருந்தவள், ‘என்னவென்று பார்ப்போம்’ என அருகில் சென்று பார்த்தாள். ஜீவா அதற்குள் உறங்கி இருந்தான்.

‘இவ்வளவு நேரத்திலேயே தூங்கிவிட்டானா? ஒருவேளை உடம்பு எதுவும் சரி இல்லாமல் இருக்குமோ?’ என அருகில் அமர்ந்து நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

நெற்றி தீயாய் சுட்டது. சட்டெனக் கையை உதறியவள். ‘அய்யோ என்ன இது? இப்படிச் சுடுது. இவர் ஒன்னுமே சொல்லலையே? அதான் எப்பவும் விட இன்னைக்குக் கம்மியா சாப்பிட்டாரா?’.

‘இது தெரியாம நான் வேற அவர் கிட்ட கோபப்படறேனே? மாத்திரை எதுவும் போட்டாரா, இல்லையான்னு தெரியலையே?’ என மனம் பதைத்தவள், அவனைத் தட்டி எழுப்பினாள் “ரஞ்சன் எழுந்திருங்க. என்ன செய்யுது உங்களுக்கு? எழுந்திருங்க ரஞ்சன்” என உலுக்கினாள்.

படுத்ததுமே நன்றாகக் கண்ணயர்ந்திருந்தவன் அவளின் சத்தத்தில் மெதுவாகக் கண் திறந்து “என்ன தனு?” என்றான்.

“என்னவா? எனக்குயென்ன? உங்களுக்குத் தான் நெருப்பா சுடுது. எழுந்திருங்க மாத்திரை எதுவும் போட்டீங்களா இல்லையா?”

“மாத்திரை போடலை. தூங்கினா சரியாகிடும் விடு”

“எப்படித் தன்னால சரி ஆகும்? எழுந்து உட்காருங்க மாத்திரை எடுத்திட்டு வர்றேன்” என்றவள், வேகமாகப் போய் மாத்திரையும் தண்ணீரும் கொண்டு வந்து சோர்வாக எழுந்து அமர்ந்து இருந்தவனிடம் கொடுத்தாள்.

மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை அருந்தியவன் திரும்பப் படுத்து தூங்க ஆரம்பித்தான்.

“ஏன் அவருக்கு உடம்புக்கு முடியலைங்கிறதைக் கூட என்கிட்ட சொல்லாமல் அமைதியாக வந்து படுத்தார்?” என்ற கேள்வியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் தனுஸ்ரீ.