மனதோடு உறவாட வந்தவளே – 3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 3
தனுஸ்ரீ எழுந்து குளித்துவிட்டு வெளியே வந்தபோது விடிந்து வெகு நேரம் ஆகியிருந்தது.
ஹாலில் இருந்த தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தவளிடம் “இப்போது வலி எப்படி இருக்குடா?” எனக் கேட்டார் சேகரன்.
“இப்போ பரவாலப்பா. வலி தான் கொஞ்சம் இருக்கு” என்றாள்.
அவள் வந்ததைப் பார்த்த சங்கரி டிபன் சாப்பிட அழைத்தார். சேகரனும் அவளுடன் சேர்ந்து கொண்டார்.
“தருண் எங்கேம்மா?”
“அவனுக்கு இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ்னு சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பிட்டான். அப்பாவும், நீயும் சாப்பிடுங்க” என்றவர் அவர்களுக்குப் பறிமாறி விட்டு தானும் சாப்பிட அமர்ந்தார்.
சாப்பிட்டு எழுந்து வந்தவளிடம் சோபாவில் அமர்ந்திருந்த சேகரன் “இங்கே வந்து உட்காரும்மா!” என்று தன் அருகில் அழைத்தார்.
“என்னப்பா சொல்லுங்க?”
“இதை நேத்தே உன்னிடம் பேச நினைச்சிருந்தோம்மா. நேத்து நடந்ததுல சொல்லமுடியலை. உனக்கு ஒரு வரன் வந்துருக்குமா. உனக்கே தெரியும் போன தடவை உன் அத்தை வந்த போது உனக்குக் கல்யாணம் பண்ணனும் நாங்க முடிவு பண்ணினது.
உன் மாமா (அத்தையின் கணவர்) வழியில் மாப்பிள்ளை வீட்டார் சொந்தமாம். ரொம்ப நல்ல மனுசங்கன்னு சொன்னார். மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லையாம்.
மாப்பிள்ளையோட அம்மா, அப்பா, தம்பி எல்லாம் புதுச்சேரியில் இருக்காங்க. மாப்பிள்ளை மட்டும் இங்கே சென்னையில் தான் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கார். போட்டோ பாரு! உனக்குப் பிடிச்சிருந்தா மேல பேசுறோம். பார்த்துட்டு உன் முடிவை சொல்லும்மா” என முடித்தார்.
தந்தை சொன்னதைக் கேட்டுக் கொண்டவள் அமைதியாகச் ‘சரி’ என்பது போல் தலையசைத்தாள்.
சில நாட்களுக்கு முன்பு தனுவின் அத்தை வந்திருந்த போது மற்ற குடும்பப் பேச்சு பேசும் போது தனுவின் கல்யாண விசயமும் வந்தது. அப்போதே பேசிக் கொண்டது. நல்ல வரன் வந்தால் அவளுக்குத் திருமணம் பேசி முடிக்க வேண்டியது என்று.
தனுவும் தன் பெற்றோர் தனக்குத் தேவையானதை எப்போது செய்ய வேண்டும் என்று பார்த்துச் செய்வார்கள். எது செய்தாலும் தன் நல்லது ஒன்றுக்கே என்ற நம்பிக்கையிலும் எந்த மறுப்பும் சொல்லாமல் ‘சரி’ என்றாள்.
தனு தன் அறைக்கு எழுந்து சென்றதும் சங்கரி “என்னங்க நாம நல்ல காரியம் பேசனும்னு நினைக்கும் போது இப்படி அபசகுனமா அவளுக்கு அடி பட்டுருச்சே. எனக்கு அதுவே ஒரு மாதிரி இருக்குங்க” என்று தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தார்.
அவரின் பேச்சைக் கேட்டதும் முறைத்த சேகரன் “உனக்கு எத்தனை தடவை சொல்றது? இப்படி அபசகுனம் அது, இது எல்லாம் பார்க்காதேனு? நமக்குனு எது நடக்கணும்னு இருக்கோ அதான் நடக்கும். எந்தக் கால நேரமும் நமக்குனு எழுதி வச்சதை மாத்தாது.
நம்மைப் படைச்சு வழிநடத்துற கடவுளுக்கு நமக்கு எதை, எப்ப, எப்படித் தரணும்னு நல்லா தெரியும். இப்ப நம்மலே இந்தச் சம்பந்தம் வேண்டாம்னு நினைக்கிறோம்னு வை. ஒரு வேலை நம்ம தனுவுக்கு இந்தப் பையன் தான் எனக் கடவுள் எழுதி இருந்தார்னா நம்ம நினைச்சா கூட அதை மாத்த முடியாது.
அவளுக்குனு வந்து சேர வேண்டியது வந்து தான் தீரும். நீயோ, நானோ அதை எல்லாம் மாத்த முடியாது. நாம கடவுள் மேல பாரத்தைப் போட்டு அடுத்து ஆக வேண்டியதை பார்ப்போம். நீ மனதை போட்டு குழப்பிக்காம போய் வேலையைப் பார். நான் கடைக்குக் கிளம்புறேன்” எனக் கிளம்பிச் சென்றார்.
அவர் போட்ட சத்தத்தில் சங்கரி சட்டென அமைதியாகி போனார். சங்கரியும் அதிகம் சகுனம் எல்லாம் பார்ப்பவர் இல்லை. என்னதான் ஜாதகம், சோதிடத்தில் எல்லாம் கணவன், மனைவி இருவருக்கும் நம்பிக்கை இல்லை என்றாலும் பிள்ளைகள் என்று வரும் போது தாயாய் அவரின் பரிதவிப்பு சில நேரங்களில் இப்பொழுது போல நினைக்க வைத்து விடும்.
கணவரின் பேச்சில் தெளிந்த சங்கரி கடவுளை மனதுக்குள் வேண்டிக் கொண்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.
தன் அறைக்குள் நுழைந்த தனுஸ்ரீ தன் கையில் இருந்த கவரை கட்டிலில் வைத்து விட்டு அதன் அருகில் அமர்ந்தாள்.
வெளியே சரி எனத் தலையாட்டிவிட்டு வந்திருந்தாலும் அவளின் மனதினுள் ஏதோ ஒரு பரபரப்பு வந்து அமர்ந்து கொண்டது.
‘எனக்கு இந்தப் போட்டோவில் இருப்பவரை பிடிக்குமா? அப்பா சொல்வதை வைத்து அவருக்கு இந்தச் சம்பந்தம் ரொம்பப் பிடிச்சிருக்குனு தெரியுது. ஒருவேளை எனக்குப் பிடிக்கலைனா என்ன ஆகும்? அப்பா, அம்மா வருந்துவாங்களோ?’
இப்படி ஏதேதோ சிந்தனையுடனும் மனதை குடைந்த கேள்விகளுடனும், புதுவிதமான தடுமாற்றத்துடனும், கவரை கையில் எடுப்பதும் அதனைத் திரும்பக் கீழே வைப்பதுமாகத் தடுமாறிக் கொண்டிந்தாள்.
அவளின் சிந்தனையை எண்ணி அவளே தன் தலையில் தட்டிக் கொண்டவள் ‘நான் ஒரு லூசு. அப்பா எனக்காகச் செலக்ட் செய்த மாப்பிள்ளை கண்டிப்பா எனக்கும் பிடிக்கும் வகையில் தான் பார்த்திருப்பார். அதை நினைக்காம தேவையே இல்லாமல் நான் ஏதேதோ யோசிக்கிறேனே?’ எனத் தன்னையே திட்டிக் கொண்டவள், தன் தடுமாற்றத்தை தானே தகர்த்தெரிந்து கவரை பிரிக்க ஆரம்பித்தாள்.
கவரை பிரித்துப் புகைப்படத்தைப் பார்த்தவளின் மனம் படபடப்பாக இருந்தது. புகைப்படத்தில் இருந்த ஜீவரஞ்சன் தன்னிடம் காந்தமாக அவளை இழுத்துக் கொண்டிருந்தான்.
புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த தனுவை கலைப்பது போல அவளின் தொலைப்பேசி சிணுங்கியது.
போன் வந்ததைத் தனு உணரும் முன்பே ஒரு முறை அழைப்பு வந்து நின்று போனது.
மீண்டும் மறுமுறை அழைப்பு வரவும் சுதாரித்துக் கொண்டவள், போனை எடுத்து யார் அழைத்தது என்று கூடப் பார்க்காமல் காதில் வைத்து “ஹலோ” என்றாள்.
“என்ன ஹலோவா? ஹேய் தனு! என்னாச்சு உனக்கு? எப்பயும் நான் போன் பண்ணினா சொல்லு நித்துனு தான் ஆரம்பிப்ப? இப்ப ஹலோனு சொல்ற? என்ன புதுசா இருக்கு? ஏன் போன் எடுக்க இவ்வளவு நேரம்?” என அந்தப் பக்கம் இருந்து மூச்சே விடாமல் பேசினாள் தனுவின் தோழி நித்யா.
அவளின் ஆரம்பக் கேள்விக்குத் தனு பதில் சொல்வதற்கு முன் “ஆமா காலைல நான் போன் போடும் போது உனக்கு நேத்து அடிபட்டிருச்சுனு அம்மா சொன்னாங்க. அதைக் கேட்க போன் போட்டா நீ என்ன அமைதியா இருக்க? லைன்ல இருக்கியா இல்லையா?” என மீண்டும் பட்டாசாய் பொரிய ஆரம்பித்தாள்.
“ஹேய்! ஹேய்! நித்யா செல்லம். நீ முத வாய மூடினாதான் நான் பதில் சொல்ல முடியும். திறந்த வாய மூடாம பேசிட்டு நான் பேசலைனு குறை சொல்ற?” என்று தனுவும் இந்தப் பக்கம் பொரியவும்,
அசடு வழிந்தவாறே “ஹி ஹி! ஸாரி செல்லம்! என்ன பத்தி தான் உனக்குத் தெரியுமே? சரி சரி! சொல்லு. உனக்கு இப்ப எப்படி இருக்கு? பார்த்து கவனமா வந்துருக்கக் கூடாதா?” என ஆதங்கமாகக் கேட்ட தோழியிடம்,
“எனக்கு ஒன்னும் இல்லை நித்து. நான் நல்லாதான் இருக்கேன். இப்ப பரவாயில்லை. நான் கவனமா தான் வந்தேன். எதிர்பாராம நடந்துருச்சு. சரி நீ என்ன விசயமா கூப்பிட்ட?”
“வீக் எண்ட் ஆச்சே ஷாப்பிங் எங்கேயாவது போகலாம்னு நினைச்சுக் கூப்பிட்டேன். ஆமா நீ என்ன செய்துட்டு இருந்த? உன் குரல்ல ஏதோ வேறுபாடு தெரியுதே! என்ன அது?”
‘ஐயோ கண்டு கொண்டாளே’ என்று உள்ளுக்குள் படபடப்பாக உணர்ந்த தனு “அதுவா?” எனத் தயங்கி பேச முடியாமல் தடுமாறி விட்டு, பின்பு மெல்ல காலையில் தன் தந்தை சொன்னதையும் மாப்பிள்ளையின் புகைப்படம் பற்றியும் தயக்கமும், வெட்கமும் கலந்து சொன்னாள்.
“வாவ்! சூப்பர்! அப்ப மேடம் சீக்கிரமே குடும்பஸ்திரியா மாறப் போறனு சொல்லு. ஹூம்! அப்புறம் மாப்பிள்ளை போட்டோவை பார்த்துட்ட போல இருக்கு? அதான் போன் வந்ததைக் கூடக் கவனிக்கலையோ?” எனத் தோழியின் மனதை அவளின் குரலின் மூலமே கண்டு கொண்டாள் நித்யா.
தோழி தன்னைக் கண்டுக்கொண்டதும் அமைதியாய் இருந்த தனுவிடம் “என்ன நான் சொன்னது சரியா?” எனத் தான் சொன்னதை உறுதிபடுத்திக் கொள்ளக் கேட்டாள்.
“ம்ம்… ம்ம்” என முணுமுணுப்பே பதிலாய் சொன்னாள் தனு.
“சூப்பர்டா தனு. மாப்பிள்ளை எப்படி இருக்கார்?” என ஆரம்பித்து மற்ற விவரம் எல்லாம் கேட்டாள்.
தோழியிடம் தன் மனதை பகிர்ந்து கொண்டு மன நிறைவுடன் பேசிக் கொண்டிருந்தாள் தனுஸ்ரீ.
மாலையில் சிறப்பு வகுப்பு முடிந்து தன் வீட்டிற்கு வந்த தருண் “அக்கா” என்றபடியே உள்ளே நுழைந்தான்.
தன் அறையில் இருந்து வெளியே வந்த தனு “என்னடா தரு? உனக்குக் கிளாஸ் முடிஞ்சிருச்சா? எதுக்குடா என்னைக் கூப்பிட்டுக்கிட்டே வர்ற?” எனக் கேட்டாள்.
“அம்மாவும், அப்பாவும் காலையில் உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறதாகவும், உன்கிட்ட போட்டோ காட்டணும்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. போட்டோ குடுத்தாங்களா? பார்த்தியா?” எனக் கேட்டான்
“ம்ம் குடுத்தாங்கடா” என்று அவள் தயக்கத்துடன் சொல்லவும், “குடு குடு! நான் இன்னும் பார்க்கலை. நான் பார்த்து ஓகே சொன்னாதான் கல்யாணம்” எனத் தன் தமக்கையிடம் கறாராகச் சொன்னான்.
அவனின் சத்தம் கேட்டு வெளியில் வந்த சங்கரி தருணின் பேச்சைக் கேட்டு ‘அவர்களே பேசிக்கொள்ளட்டும்’ என நினைத்துச் சிரித்துக்கொண்டே மீண்டும் உள்ளே சென்றார்.
தம்பியின் பேச்சைக் கேட்டு சிரித்தவள் புகைப்படத்தை எடுத்துவர தன் அறைக்குள் நுழைந்தாள்.
அவளின் பின்னாலேயே வேகமாக வந்த தருண் அவள் கையில் எடுத்த புகைப்படத்தைக் கையில் இருந்து பிடுங்காத குறையாக வாங்கினான்.
புகைப்படத்தை வாங்கிப் பார்த்துவிட்டு ‘இவன் என்ன சொல்வான்?’ என ஆர்வத்துடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தனுவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
“சேச்சே! என்ன அக்கா அம்மாவும், அப்பாவும் இப்படிப் பண்ணிட்டாங்க? இவங்களுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா?” எனக் கேட்டான்.
“என்னடா என்ன சொல்ற? இந்த மாப்பிள்ளை பார்க்க நல்லா தானே இருக்கார். இவருக்கு என்ன குறைன்னு இப்படிச் சொல்ற?”
“இங்கே பாரு! கண்ணு ஒரு மாதிரி இருக்கு. மூக்கு எப்படி நீட்டி இருக்கு. உன்னோட பார்வையே சரியில்லை நல்லா உத்துபாரு” என்றான்.
“நீ முதல கண்ணை நல்லா திறந்து பாரு. இவரைப் போய்க் குறை சொன்னா உனக்குத் தான் கண்ணு தெரியலைன்னு அர்த்தம்” எனக் கோபமாகச் சொன்னாள்.
அவளின் கோபத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த தருண், “அம்மா! அக்காவுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்காம்” எனக் கத்தினான்.
வேகமாக அவனின் வாயை அடைத்த தனு “நான் எங்கடா உன்கிட்ட அப்படிச் சொன்னேன்?”
“நீதானேக்கா இப்போ அவருக்கு என்ன குறைனு சொன்ன? அப்ப உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சு இருக்குனு தான அர்த்தம்?” என்று அவன் கிண்டலுடன் திருப்பிக் கேட்க…
“அப்ப உனக்குப் பிடிக்கலையாடா?” என முகம் வாடி கேட்டவளின் கையில் புகைப்படத்தை வைத்து “இந்தா பிடி! இது இனி உனக்கே உனக்கு மட்டும் தான்!” என்றவன்,
“மாமா சூப்பர்கா!” எனச் சந்தோசமாகச் சொல்லிக் கொண்டே வெளியே சென்றான்.
அதில் தனுவின் முகம் பூவாய் மலர்ந்தது.
சூரிய கதிர்கள் உதித்து ஒளி வீச ஆரம்பித்திருந்த நேரத்தில் ஜீவரஞ்சன் படுத்திருந்த அறையில் குயில் கூவும் சத்தம் கேட்டது. ஆம் குயில் தான். இப்போது எல்லாம் கூடக் குயில் கூவுவது படுக்கை அறை வரை கேட்கின்றதா? என்ற கேள்வி வந்தால்? பதில் ஆமாம் தான்.
ஆனால்… கடிகாரத்தில் அழகுக்கு மட்டுமே பயன் படுத்தும் குயில் தான் அது.
இயற்கையை விடச் செயற்கையோடு தானே நம் நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இப்பொழுதுள்ள வழமை.
கடிகார குயிலின் சத்ததில் மெதுவாகக் கண் விழித்த ஜீவா எழுந்து தன்னைச் சுத்தம் செய்து தயாராகி, உடற்பயிற்சி உடை அணிந்து வெளியில் வந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்த ஜீவா, “குட்மார்னிங்ப்பா!” என்றான்.
“குட்மார்னிங் ஜீவா. நைட் எத்தனை மணிக்கு வந்த?” என்று விசாரித்தார்.
“பத்து மணி போல வந்தேன்ப்பா. உங்க சுகர் எல்லாம் நார்மலா இருக்கா? மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறிங்களா?” என்று எப்போதும் போல இன்றும் அவரின் உடல் நலத்தைப் பற்றிக் கேட்டான்.
“அதெல்லாம் நார்மலாதான் இருக்கு ஜீவா. மாத்திரை தான் உங்க அம்மா கரெக்ட்டா சாப்பிட வைக்கிறாளே” என்று அலுத்தது போலச் சொன்னார். மாத்திரை சாப்பிட முரண்டு பண்ணும் குழந்தையைப் போலத் தான் அந்த நேரத்தில் அவரின் குரல் இருந்தது.
அவரின் பாவனையில் நன்றாகச் சிரித்தவன், “எல்லாம் உங்க நல்லதுக்குத் தானேப்பா?” என்றான் புன்னகையுடன்.
“அப்படிச் சொல்லுப்பா. எப்ப பார்த்தாலும் உங்க அப்பாவுக்கு நான் மருந்து எடுத்து தர்றதை குறை சொல்லிக் கொண்டே இருக்கணும். நோய் வந்தா மருந்து சாப்பிட்டு தான் ஆகணும். அதுக்காக இப்படிப் புலம்பினா சரியாகிருமா?” எனக் கணவரை கடிந்து கொண்டே அவருக்கும் ஜீவாவிற்கும் காபியை கொடுத்தார் தமிழரசி.
அரசி அங்கே வந்ததும் தான் பேசவேயில்லை என்பதைப் போலக் காட்டிக் கொண்ட தந்தையைப் பார்த்து முகத்தில் இன்னும் அதிகப் புன்னகையைப் பரவவிட்டான்.
ஜீவாவும், அறிவழகனும் காபி பருகிக் கொண்டிருக்கும் போது முகத்தில் இன்னும் தூக்கக்கலை மீதம் இருக்க, அப்போது தான் எழுந்து வந்த ஆனந்த் “அம்மா எனக்கும் காபி” என்றான்.
“என்னடா எழுந்து அப்படியே வந்துட்டியா? போய் முகம் கழுவி ப்ரஷ் பண்ணுட்டு வா! காபி எடுத்துட்டு வர்றேன்” என்றவரிடம்,
“ஏன்மா, பிள்ளை நைட் எல்லாம் ரொம்ப நேரம் முழிச்சு இருந்து படிச்சானே. பாவம்னு கேட்டதும் கையில் கொண்டுவந்து காபியை கொடுக்க வேண்டாமா? என்னம்மா இப்படிக் கொடுமை பண்றீங்க? ப்ரஷ் பண்ணாதான் காபினு” என்று பரிதாபம் போலப் பேசிக் கொண்டே போனவனை நிறுத்தி,
“நீ என்ன தான் டைலாக் அடிச்சாலும் உங்க அம்மா எப்படியும் நீ ப்ரஷ் பண்ணின பிறகு தான் குடுப்பா. எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதடா மகனே” என்ற அறிவழகனையும், ஆனந்தையும் மாறி, மாறி பார்த்த அரசியின் பார்வையில் இவர்களுக்குக் காலை உணவு குடுக்கலாமா? வேண்டாமா? எனச் சிந்தனை ஓடியதை இருவரும் கண்டு கொண்டனரோ?
ஆனந்த் மெல்ல தன் அறைக்கு நழுவினான். அறிவழகன் ஜீவாவிடம் பேசப் போவது போல மகன் பக்கம் திரும்பி அமர்ந்தார்.
“ம்ம்! அந்தப் பயம் இருக்கட்டும்!” என்ற பார்வையுடன் சமயலறைக்குச் சென்றார் அரசி.
அவர்களைப் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்த ஜீவாவிடம் “என்னப்பா ஜீவா டீம் லீடர் ஆகிட்டியாம். அம்மா சொன்னா. ரொம்பச் சந்தோசமா இருக்கு. நீ இன்னும் அடுத்தடுத்து உன் வேலையில் முன்னேறனும்ப்பா” என்று தன் வாழ்த்தை தெரிவித்தார்.
“கண்டிப்பா இன்னும் முன்னேறுவேன்ப்பா” என்று தன்னம்பிக்கையுடன் கூறிய மகனை பெருமை மிகப் பார்த்தார் அறிவழகன்.
“சரிப்பா நான் ஜாக்கிங் கிளம்புறேன்” என்றபடி வெளியே நடந்தான் ஜீவா.
அறிவழகன், தமிழரசி தம்பதியினர் தங்கள் இருப்பத்தி ஒன்பது வருட தாம்பத்திய வாழ்க்கையில் நிறைவான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அறிவழகன் ஒரு சாதாரண வேலையில் இருந்து படிபடியாக முன்னேறி இப்போது மேனேஜராகப் பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கின்றார்.
அவர் சாதாரண வேலையில் இருந்த போதும் சரி, அதன் பின்னும் இப்போது வரை அவரின் ஒவ்வொரு அசைவையும் நன்றாகப் புரிந்து கொண்ட துணையாக இருக்கிறார் தமிழரசி.
தங்களின் பிள்ளைகளையும் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்து சிறந்த குணம் உள்ளவர்களாக வளர்த்திருந்தனர்.
அரசிக்கு அறிவழகன் பயப்படுவது போலக் காட்டிக்கொள்வது எல்லாம் சும்மாதான் உண்மையில் ஒருவர் கருத்தை ஒருவர் கேட்டு இருவருக்கும் சரி என்று பட்டதைதான் செய்யும் சிறந்த தம்பதிகள் அவர்கள்.
ஓட்ட பயிற்சியை முடித்துவிட்டு வந்த ஜீவாவும், செமினார் செல்வதற்குத் தயாராகி வந்த ஆனந்தும், தன் அலுவலகம் செல்வதற்குத் தயாராகி வந்த அறிவழகனும் காலை உணவிற்குச் சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்தனர்.
அவர்களுக்கான காலை உணவை எடுத்து வைத்த தமிழரசி தானும் அமர்ந்தார். ஜீவா வந்திருக்கும் சமயத்தில் முடிந்தவரை உணவு வேளையில் சேர்ந்து தங்களுக்கு வேண்டியதை தாங்களாகவே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு சாப்பிடுவார்கள்.
இன்றும் அவ்வாறே சாப்பிட்டுக் கொண்டே “என்ன ஜீவா இன்னைக்கு நீ எதுவும் வெளியே போற ப்ளான் வச்சிருக்கியா?” என்று விசாரித்தார் அறிவழகன்.
“இல்லப்பா ஆபிஸ் ஒர்க் கொஞ்சம் இருக்கு. வீட்டில் இருந்தே முடிக்கணும். அதுக்கே மதியத்துக்கு மேல ஆகும்பா. ஈவ்னிங் தான் ராஜேஷ் வர சொன்னான். நாங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் டின்னர் போறோம்” என்றான்.
“சரி ஆனந்த் நீ எப்ப வருவ?” என்றார்.
“நான் மதியம் வந்துருவேன் பா” என்றான்.
“சரி அப்ப நான் ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன். வந்து பேசலாம் ஜீவா” என்று சாப்பிட்டு முடித்து விட்டு மனைவியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
ஆனந்தும் “ஓகே நானும் அப்படியே கிளம்புறேன். பைணா, பைமா” என்று விட்டு வெளியே சென்றான்.
அவர்களை அனுப்பிவிட்டு தாயும், மகனும் பேச ஆரம்பித்தனர்.
அப்பொழுது ஜீவா “அம்மா மறந்தே போய்ட்டேன் பாருங்க. நேத்து என்னமோ சொல்ல வந்தீங்க, என்னம்மா?” எனக் கேட்டான்.
“சொல்றேன்ப்பா! சாயந்திரம் அப்பாவும் வந்துறட்டும்” என்றார்.
ஜீவாவே விசயத்தை ஓரளவு ஊகித்தான். வீட்டில் சில நாட்களாக நடந்து கொண்டிருப்பது தானே? எனவே அன்னையிடம் அதற்கு மேல் எதையும் கேட்காமல் “சரிம்மா! நான் போய் என் வேலையை முடிக்கிறேன்” என்று எழுந்து சென்றான்.
“அவனுக்கே என்னனு புரிஞ்சிருச்சுனு தெரியுது. அதைப் பத்தி ஏதாவது ஆர்வமா கேட்குறானா பாரு?” மனதில் சலித்துக் கொண்டே மகனுக்குப் பிடித்த மதிய உணவை தயார் செய்யச் சமயலறைக்குச் சென்றார்.
மாலை நேரம் அவரவர் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு வந்தபிறகு நால்வரும் அந்த வரவேற்பறையில் கூடி இருந்தனர்.
அறிவழகனின் கையில் ஒரு கவர் இருந்தது. அவர் அருகில் தமிழரசியும், அவர்களுக்கு எதிரே ஆனந்தும், ஜீவரஞ்சனும் அமர்ந்திருந்தனர்.
தன் கையில் இருந்த கவரை ஜீவாவிடம் கொடுத்த அறிவழகன், “ஜீவா உனக்கே இந்த நேரம் புரிஞ்சிருக்கும், நாங்க என்ன பேச போறோம்னு. அந்தக் கவர்ல பொண்ணு போட்டோ இருக்கு. போட்டோக்கு பின்னாடியே அந்தப் பொண்ணோட பயோடேட்டா இருக்கு பார்த்துக்க” என்றவர் தொடர்ந்து,
“இந்த இடம் நம்ம தூரத்துச் சொந்தம் ஒருவர் மூலமா வந்துச்சு. சென்னைல பொண்ணோட அப்பா ஒரு சூப்பர்மார்கெட் வச்சுருக்கார். அம்மா ஹவுஸ்வைப். ப்ளஸ்டூ படிக்கிற ஒரு தம்பி இருக்கான். நாங்க அந்தக் குடும்பத்தை நல்லா விசாரிச்சிட்டோம். பொண்ணும் நல்ல குணம்னு சொல்றாங்க.
நீ பொண்ணு பார்க்குற பொறுப்ப எங்ககிட்டயே கொடுத்துட்ட. நாங்களும் சில பொண்ணு வரன் எல்லாம் வந்ததெல்லாம் நல்லா விசாரிச்சுட்டு எங்களுக்குத் திருப்தியா தோணின இந்தப் பொண்ணைச் செலக்ட் பண்ணிருக்கோம்.
இனி நீ தான் போட்டோ பார்த்துட்டு சொல்லணும். உனக்குப் பிடிச்சாதான் மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கணும்” என்று முடித்தார்.
பதிலுக்கு ஜீவா பேசும் முன் “அண்ணா, அண்ணி சூப்பரா இருக்காங்க. சீக்கிரம் ஓகே சொல்லு! கல்யாண சாப்பாடு சாப்டனும். உன் கல்யாணம்னு சொல்லி நான் நல்லா எஞ்சாய் பண்ணனும். இன்னும் நிறைய இருக்கு” என்றான் ஆனந்த் உற்சாகத்துடன்.
“டேய்! நீ கல்யாண சாப்பாடு சாப்பிடயெல்லாம் சீக்கிரம் கல்யாணம் பண்ண முடியாது. ஜீவாக்கு பொண்ண பிடிச்சாதான் கல்யாணம். நீ அவனைப் பேச விடு!” என்று அதட்டிய தமிழரசி ஜீவாவை பார்த்தார்.
மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த ஜீவா “நான் தான் சொல்லிருக்கேனேம்மா உங்க எல்லாருக்கும் பிடிச்ச பொண்ணுனா கண்டிப்பா நல்ல பொண்ணாதான் இருக்கும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“ஹய்யோ அண்ணா! நீ பொண்ணு போட்டோ பார்க்காமலயே ஓகே எதுவும் சொல்லிறாதே. அப்புறம் என்கிட்டயும் நானும் இப்படியே சொல்லனும்னு எதிர்பார்ப்பாங்க” என்று கேலியாகச் சோகம் போலச் சொன்ன ஆனந்தை அடக்கிய அறிவழகன்,
“ஆமா ஜீவா! நீ எங்களுக்காக மட்டும் முடிவெடுக்க வேணாம். நீ உன் ரூம்க்குப் போய்ப் போட்டோவை பார்த்துட்டு அப்புறம் பதில் சொல்லு!” என்றவாறு எழுந்து சென்றார்.
ஜீவாவிற்கும் வயதுக்கே உரிய ஆசைகள் நிறைய இருந்தும், மற்ற பெண்களை என்றுமே தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை.
தனக்கே தனக்காக வரும் பெண்ணை மட்டுமே உரிமையாகப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவன்.
தன் அறைக்கு வந்த ஜீவா புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். அந்த அழகு முகம் அவனிடம் சொல்லத் தெரியாத உணர்வை தந்தது. பார்த்துக் கொண்டே இருந்தவன் முகம் என்றும் இல்லாத பிரகாசத்தில் ஒளிர்ந்தது.