மனதோடு உறவாட வந்தவளே – 23

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 23

பத்து நாட்கள் சென்றிருக்க, இருவரும் தனுவின் பிறந்த வீட்டிற்குச் சென்றார்கள்.

தனுவும் ஜீவாவும் வந்ததைப் பார்த்ததும் தருண் வந்து வேகமாக வரவேற்று விட்டுச் சமயலறையில் இருந்த அம்மாவிற்குக் குரல் கொடுத்தான்.

அவன் வரவேற்பு சத்தம் கேட்கும் போதே வரவேற்பறைக்கு வந்து கொண்டிருந்தவர், வந்தவர்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே நின்றார்.

பின்பு “வாங்க மாப்பிள்ளை! வா தனு! வந்து உட்காருங்க” என்றார். ‘அவர்கள் என்ன சொல்வார்களோ?’ என நினைத்துக் கொண்டே வந்த ஜீவா,

“எப்படி இருக்கீங்க அத்தை?” என்றான் சிறு தயக்கத்துடனே. “நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. முதலில் உட்காருங்க அப்புறம் பேசுவோம்” என்றவர், “தருண் அப்பாவை வர சொல்லு” என்றார்.

“இதோமா” என்றவன் அவரின் அறைக்குச் செல்ல போகப் பேச்சுச் சத்தத்தில் வெளியே வந்த சேகரன் “வாங்க மாப்பிள்ளை” என்ற படியே வந்தார்.

ஜீவா நிச்சயமாக இருவரும் இப்படிச் சிறிது கூட முகம் கோணாமல் வரவேற்பார்கள் என எதிர் பார்க்கவில்லை.

இங்கே வர கிளம்பி விட்டாலும் சிறு தயக்கம் அவனின் மனதில் ஒட்டிக் கொண்டு இருந்தது. அவர்கள் எவ்வளவு மன வருத்தத்துடன் அன்று கிளம்பினார்கள் என உணர்ந்தவன் அல்லவா?

ஜீவாவின் அருகில் வந்த சேகரன் “இன்னும் ஏன் நிக்கிறீங்க? உட்காருங்க மாப்பிள்ளை” என்றவர், “இரண்டு பேருக்கும் கை சரி ஆகிருச்சா?” எனக் கேட்டார்.

“ம்ம் இப்ப பரவாயில்லை. ஓரளவு சரி ஆகிருச்சு மாமா” எனச் சொல்லிவிட்டு “நீங்க என்னை மன்னிக்கணும் மாமா” என்றவன் சங்கரியின் புறம் திரும்பி “ அத்தை நீங்களும் தான்” என்றான்.

“ஹய்யோ என்ன மாப்பிள்ளை அதெல்லாம் வேண்டாம்” என்றார் சங்கரி. “மன்னிப்பு எல்லாம் இப்ப எதுக்கு மாப்பிள்ளை? விட்டுருங்க” என்றார் சேகரனும்.

“நான் பண்ணினது தப்பு. அதுக்குச் சாரி கேட்டுத்தான் ஆகணும்” என்றவன், “நீங்க வேணா போனாப் போகுதுன்னு விடலாம். இந்த மாதிரி ஒரு தப்பை நான் இனி செய்யாம இருக்கணும்னா நிச்சயம் மன்னிப்புக் கேட்டு தான் ஆகணும். அப்பத்தான் திரும்ப ஒரு முறை நான் மன்னிப்பு கேட்குற அளவுக்குத் தப்புச் செய்யக் கூடாதுனு எனக்குத் தோணும்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டுச் சந்தோசமாகச் சிரித்த சேகரன் “இப்பத்தானே தெரியுது தனு ஏன் உங்களை அவ்வளவு விட்டுக்கொடுக்காம பேசினான்னு” என்றவர், “இவ்வளவு நல்ல விதமா யோசிக்கிறவரை என் மக எப்படி விட்டுக் கொடுப்பா?” என்றார் பெருமையாக.

அவர் அப்படிச் சொன்னதும் அவருக்கும், ஜீவாவிற்கும் நடுவில் அமர்ந்திருந்த தனு அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

அவள் அப்படிச் சாயவும் “என்னமா தனு வந்ததில் இருந்து ரொம்ப அமைதியா இருக்க? என்னாச்சு?” என்றார்.

அவரின் தோளில் சாய்ந்த படியே நிமிர்ந்துப் பார்த்து “சாரிப்பா” என்ற தனு தொடர்ந்து, “உங்ககிட்ட அன்னைக்கு அப்படிப் பேசினது உங்களுக்கு வருத்தமா இருந்திருக்கும் சாரி” என்றாள்.

“அடடா! என் பொண்ணு எது செய்யறதா இருந்தாலும் சரியா இருக்கும்னு நினைச்சுட்டு இருந்தேனே, அப்படி இல்லையா?” எனக் கேலியாகக் கேட்டார்.

“என்னப்பா கேலி பண்றீங்களா?” எனக் கேட்டவளிடம் “பின்னே என்னம்மா எதுக்கு இப்ப மாறி, மாறி சாரி கேட்குறீங்க? நான் அன்னைக்கே சொன்னேன் உன் மேல நம்பிக்கை வச்சு தான் கிளம்புறேன்னு” என்றவர்,

ஜீவாவை பார்த்து “எங்களுக்கும் வருத்தம் இருந்துச்சு மாப்பிள்ளை ஆனா நாலு நாள் கழிச்சுத் தருண் உங்க வீட்டுக்கு வந்தப்போ அவன் கிட்ட கூடச் சாரி கேட்டு ரொம்ப வருத்தப்பட்டீங்கன்னு சொன்னான்”

“அதுவும் இல்லாம நீங்க ஒன்னும் கெட்டவர் இல்லையே உங்க சூழ்நிலை எப்படியோன்னு அன்னைக்கே நாங்க மனசை தேத்திகிட்டோம். அப்புறம் ஊருக்கு கிளம்புறதுக்கு முன்ன சம்பந்தி வந்து எங்ககிட்ட பேசிட்டு தான் போனாங்க. தனு எங்ககிட்ட சொல்ல தயங்கின விஷயத்தைச் சொன்னாங்க” என்றார்.

“என்னப்பா சொல்றீங்க? என்ன சொன்னாங்க? எங்க கிட்ட சும்மா தான் பார்க்க போறோம்னு சொன்னாங்களே?” எனத் தனு கேட்டாள்.

“ஹ்ம்ம் ஆமா. அவங்க வந்து கொஞ்ச நேரம் சமாதானமா தான் பேசினாங்க. அப்புறமா கிளம்பும் போது சம்பந்தி தான் சொன்னார் மாப்பிள்ளைக்கு டிப்ரஷன். அதான் அப்படின்னு. எங்களுக்கு முதலில் அதைக் கேட்டதும் ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்புறம் நீ அதற்கு எடுத்த முயற்சிகளையும் சொன்னாரா? என் பொண்ணு எவ்வளவு யோசிச்சு செயல் பட்டிருக்கானு நினைத்து எங்களுக்குப் பெருமையாதான் இருந்துச்சு”

“டிப்ரஷன் பத்தி நாம எல்லாரும் இப்ப அதிகமா கேள்விப்படுறோமே? அதைப் பத்தி நானும் கொஞ்சம் டீட்டைல்ஸ் கலைக்ட் பண்ணினேன். கவுன்சிலிங்லேயே சரி ஆகிரும், பயப்படத் தேவை இல்லைன்னு கேள்விப் படவும் எங்களுக்கு நிம்மதி ஆகிருச்சு. உங்க அம்மா அதுக்காகக் கோவிலுக்கு எல்லாம் தினமும் போய்க்கிட்டு இருக்கா” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு அமைதியாக இருந்த ஜீவாவிடம் “இதெல்லாம் ஒன்னும் இல்லை மாப்பிள்ளை. நான் கூடத் தான் கோபம் வந்தா கத்துவேன். ஆனா உங்க விஷயத்தில் அது கொஞ்சம் அதிகமா பாதிப்பை ஏற்படுத்திருச்சு விட்டுரலாம்” என்ற சேகரன்,

“இனி நாம நடந்து முடிஞ்சதை பத்தி பேச வேண்டாம். சில விஷயங்களைத் தோண்டித் தோண்டி எடுத்து பேசுறதை விட அப்படியே அதை விட்டு நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பது நல்லது”

“நாங்களே உங்களைப் பார்க்க வந்திருக்கணும். ஆனா நீங்க கவுன்சிலிங் போகும் போது தேவை இல்லாம உங்களைச் சங்கடப் படுத்த வேண்டாம்னு தான் வரலை. இப்ப நீங்களே வந்ததில் ரொம்பச் சந்தோஷம்” என்றார் சேகரன்.

“ஆமாம் மாப்பிள்ளை. இனி முடிஞ்சு போனதை பேச வேண்டாம். நீங்க உங்க உடம்பை கவனமா பார்த்துக்கோங்க” என்ற சங்கரி, தன் அருகில் வந்து நின்ற தனுவின் தலையை வருடி “உன்னை நினைச்சு எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு தனு. குடும்பத்தை எப்படிச் சிறப்பா வழி நடத்தணும்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்குற” எனச் சொல்லி சந்தோஷப்பட்டார்.

அதற்கு மேல் அங்கே என்ன வேண்டும்? புரிதல் உள்ள இடத்தில் சந்தோசம் நிலைக்கும் தான் இல்லையா?

அங்கே சந்தோசம் விளையாட ஆரம்பித்தது.


ஜீவா அடுத்தடுத்துக் கவுன்சிலிங் சென்று வந்தான். அதோடு தன் வீட்டருகில் இருக்கும் யோகா வகுப்பிற்கும் செல்ல ஆரம்பித்தான். கூடவே தனுவையும் அழைத்துச் சென்றான். அவர்களின் கைகளின் காயமும் ஆற ஆரம்பித்திருந்தது.

இடையில் விட்ட உடற்பயிற்சியை மீண்டும் தொடர்ந்தான். லேசாகக் கை காயம் ஆற ஆரம்பித்ததுமே வேலைக்குச் செல்ல ஆரம்பித்த ஜீவா, இரவு எத்தனை வேலைகள் இருந்தாலும் சரியான நேரத்தில் வீடு வர ஆரம்பித்தான்.

இத்தனை நாட்களில் தனுவிற்கும், ஜீவாவிற்கும் இடையே மனதால் அன்நோன்னியம் கூடிக் கொண்டே போனது.

ஜீவா கவுன்சிலிங் சென்று கொண்டிந்த நாட்களில் இரவுகளின் நாடலை தேடாமல் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொள்ள, தங்கள் நேரத்தை செலவழித்தனர்.

தனு தானும் பேசி ஜீவாவையும் பேச வைத்தாள். முன்பெல்லாம் அதிகம் அவள் பேசுவதைக் கேட்கும் வேலை செய்தவன், இப்பொழுது தானும் உடனுக்குடன் பதில் சொல்ல பழகினான்.


மேலும் ஒரு மாதம் கடந்திருந்தது. இருவருக்குமே கைக் காயங்கள் நன்றாக ஆறியிருந்தது.

நாட்கள் ஓடியதில் நித்யாவின் திருமண நாளும் வந்திருந்தது. அதற்குத் தனுவும், ஜீவாவும் சென்றார்கள்.

அங்கே மணமக்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுப் புகைப்படம் எடுத்து விட்டு கிளம்பும் பொழுது, நித்யா செய்த உதவிக்குத் தன் நன்றியை சொன்ன ஜீவா, “நீங்க ரொம்ப நல்லா சந்தோஷமாக வாழணும்” என்று வாழ்த்தினான்.

“என்ன அண்ணா எனக்குப் போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க? நான் எதுவுமே பெருசா பண்ணல. நீங்க இரண்டு பேரும் நல்லா இருந்தாலே எனக்குப் போதும் அண்ணா” என்றாள் நித்யா.

தனு நித்யாவை லேசாக அணைத்து தன் வாழ்த்துக்களைச் சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து மணமக்கள் ஓய்வாக அமர்ந்திருந்த சமயத்தில் தனுவை தன் அருகில் அழைத்த நித்யா. “அப்புறம் மேடமோட முகம் ஜொலி ஜொலிக்குதே! என்ன ரகசியம்?” என நித்யா தனுவின் காதில் ரகசியமாகக் கேட்டாள்.

தனு கீழே ராகவோடு பேசிக் கொண்டிருந்த ஜீவாவை பார்த்தாள். ராகவும், ஜீவாவும் இப்போது நண்பர்களாகப் பழக ஆரம்பித்திருந்தனர். அவர்கள் அங்கே பேசிக் கொண்டியிருக்க, இங்கே நித்யா கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல மறந்து போனாள் தனு.

“ஆகா திரும்ப ஆரம்பிச்சுட்டா! புதுப் பொண்ணு நானே அடக்கி வாசிக்கிறேன். உனக்கு என்ன அங்க லுக்கு?” எனத் தனுவின் கையில் லேசாக ஒரு அடி கொடுத்தாள்.

தனு சுதாரித்து நித்யாவின் பக்கம் திரும்பி அவள் முகத்தை மேலும், கீழும் பார்த்தாள். அவள் பார்வை புரியாமல் “என்ன? எதுக்கு அப்படிப் பார்க்கிற?” எனக் கேட்க…

“இல்ல அடக்கி வாசிக்கிற புதுப் பொண்ணைப் பார்க்கிறேன்! மேடைல நிக்கிறீங்கன்னு கூட நினைக்காம இரண்டு பேரும் ஏதாவது பேசிக்கிட்டே இருக்கீங்க. நீ என்னைச் சொல்றீயாக்கும்?” எனத் தனு அவளை வாற ‘ஹிஹி’ என வழிவது போலச் சிரித்தாள் நித்யா.

அவளின் வழிசலை பார்த்து தனு சந்தோஷமாகச் சிரித்தாள். தனுவின் சிரிப்பை கீழே இருந்து ரசனையுடன் பார்த்தான் ஜீவரஞ்சன்.


திருமணவீட்டில் அதிக நேரம் இருந்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அன்று மாலை அளவில் அவர்கள் வீட்டிற்கு நிதின் வந்தான்.

நண்பர்கள் இருவரும் நிறைய நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்து விட்டு நிதின் கிளம்ப இருந்த நேரத்தில், தனு தன் நன்றியை சொன்னாள். “நன்றிண்ணா. நீங்க மட்டும் இவர் நிலையைச் சரியான நேரத்தில் செல்லலைனா இன்னமும் கூட இவர் நிலைமை சரியாகிருக்குமான்னு தெரியலை.இப்ப இவர்கிட்ட தெரியுற மாற்றம் நிம்மதியா இருக்கு எனக்கு” என்று சொன்னாள்.

“நன்றி சொல்லி என்னை அந்நியப்படுத்தாதேமா. ஒரு பிரண்டா என் கடமையைச் செய்தேன் அவ்வளவு தான். அதைப் பெருசுப் படுத்தாதே!” என்ற நிதின் தொடர்ந்து,

“இவனைப் பார்த்தீயா? இத்தனை நாளில் எனக்கு நன்றியே சொல்லாம இருக்கான்” என்று சொல்லி ஜீவாவை பேச்சில் இழுக்க வம்பிலுத்தான்.

“டேய்! அங்க பேசிக்கிட்டு இருக்கும் போது, எதுக்கு என்கிட்ட தாவுற?” என்ற ஜீவா, “இப்ப மட்டும் இல்லை. இனி வரும் நாட்களிலும் உனக்கு நன்றி சொல்லமாட்டேன். நம்ம நட்புக்குள் எங்க இருந்து நன்றி வந்தது? தனு நன்றி சொல்லும் போது நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம் தனு அவ அண்ணனுக்கு நன்றி சொன்னாள். நான் நட்புக்குள்ள நன்றி சொல்லி உன்னைப் பிரிச்சுப் பார்க்க மாட்டேன்” என்றான் ஜீவா.

ஜீவா சொன்னதைக் கேட்ட நிதின் “அது தான் எனக்கும் வேணும்” என்றான். அங்கே அவர்களின் நட்பு பிரகாசமாக மிளிர்ந்தது.


அன்று இரவு சாப்பாட்டை முடித்து விட்டுப் படுக்கத் தயாரான தம்பதிகள் மனதில் என்றும் இல்லாத நிம்மதி இருந்தது.

மாலையில் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டதை நினைத்துப் பார்த்த தனு, “உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா ரஞ்சன்?” எனப் பேச்சை ஆரம்பித்தாள்.

அவளின் இரு கைகளையும் பிடித்துத் தனக்குள் வைத்துக்கொண்ட ஜீவா “கேளுடா தனு” என்றான்.

“ரஞ்சிவ் அண்ணா வேலைல குடைச்சல் குடுத்து உங்களுக்கு வேலை போகணும் நினைக்கிற அளவுக்கு அத்தனை செய்தார். அதுவும் நிதின் அண்ணாகிட்ட அத்தனை பொறாமையா வேற உங்களைப் பத்தி பேசினதா சொன்னார். அவர் அப்படிப் பேசினப்ப உங்களுக்குக் கோபம் வரலையா? அன்னைக்கு நடந்ததை நிதின் அண்ணாகிட்ட கூட அப்புறம் பேசலைன்னு சொன்னார். ஏன் அப்படி அமைதியா வந்தீங்க?” எனக் கேட்டாள்.

அவள் கேட்டதும் சிறிதுநேரம் மௌனம் சாதித்தவன் பின்பு “ரஞ்சிவ் அப்படிச் செய்வான்னு நிச்சயம் நான் எதிர்பார்க்கலை தனு. தெரியாம தப்புச் செய்றது வேற. ஆனா ஒருத்தருக்குப் பாதிப்பு வரும்னு தெரிஞ்சே தப்புச் செய்றது துரோகம் தானே? நாங்க மூணு பேரும் ஒண்ணா படிச்சு ஒண்ணா இந்தக் கம்பெனில சேர்ந்தோம். ஆனா நான் முதல லீடராகி அவன் எனக்குக் கீழே வேலை செய்யவும் என் மேல பொறாமை பட்டு வேலைல குளறிபடி செய்து வைச்சான். அந்தச் சமயத்தில் எனக்கு டிப்ரஷன் கூடினதும், கஷ்டப்பட்டதும் உண்மைதான். ஆனா என் மேலே பொறாமைப்பட்டு அவன் செய்த வேலை அவனுக்கே எதிரா திரும்பி இருக்கும்னு யோசிக்காம போனான்” என்றவன் தொடர்ந்து.

“அவன் செய்து வைச்ச குளறுபடி அதிகம். நாங்க மட்டும் சரியான நேரத்தில் ரிலிஸ் செய்யலைனா? எங்களுக்கு ப்ராஜெக்ட் குடுத்த கம்பெனிக்கு ஏகப்பட்ட பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும். நான் எக்ஸ்ரா நாள் கேட்டதுக்கே கேள்வி கேட்டு பிழிஞ்சு எடுத்துட்டாங்க. இதுல வேலையும் சரியா முடிக்கலைனா அதுனால கம்பெனிக்கு லாஸ் வரும். அப்ப யார் எரர் வர காரணமோ அவங்களுக்கு வேலை போகும். வேற கம்பெனிலேயும் அவ்வளவு சீக்கிரம் வேலை கிடைக்கிறது கஷ்டம். அதை முதலிலேயே யோசிக்காம எரர் வர வச்சிட்டான். அப்புறம் அவன் வேலைக்கு இன்டர்வியூ அட்டன் பண்ணின கம்பெனில அவன் கேட்ட லீடர் போஸ்ட் கொடுக்க அவங்க யோசிக்கவும் அதுக்கப்புறம் வந்த ஒன் வீக்கும் அவ்வளவு சின்சியரா வேலை பார்த்தான். அதுனால தான் இந்தக் கம்பெனிக்கிட்ட கிடைக்க வேண்டிய பனிஸ்மெண்ட்ல இருந்து தப்பிச்சிட்டான்”

“அன்னைக்கு நிதின் கிட்ட அவன் பேசியதை கேட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா தான் இருந்துச்சு. நான் அவனை உண்மையான நண்பனா தான் நினைச்சேன். ஆனா அவனுக்கு என் மேல இவ்வளவு பொறாமை இருக்கும்னு நினைக்கலை. நிதின் கூட என்கிட்ட நான் எதுவும் அவன் கிட்ட சொல்லலைனா கோபப்படுவான். ஆனா ரஞ்சிவ் அப்பயேயும் எனக்குச் சப்போர்ட்டா பேசுவான்”

“இப்பத்தான் நிதினோட கோபத்துக்குக் காரணம் புரியுது. என் மேல உள்ள உண்மையான நட்புனால் வந்த உரிமையான கோபம் தான் அது. உரிமையா நம்மகிட்ட கோபப்படுறவங்களைக் கூட நம்பிறலாம், நமக்கு ஆதரவா பேசிட்டு உள்ளுக்குள் பொறாமை படுறவங்களை நம்ப முடியாதுன்னு ரஞ்சிவ் நிரூபிச்சிருக்கான்” என்று வருத்தமாகத் தனுவிடம் சொன்னவன்,

பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு, “எனக்கு அன்னிக்கும் சரி, அதுக்குப் பிறகும் சரி எனக்கு அவன்கிட்ட பேசவே முடியலை. நான் அன்னைக்கு அவனைத் திட்டினாலும் அவன் புத்தி மாறாதுன்னு எனக்குத் தோனுச்சு, அதான் நான் அவனை விட்டு விலகி வந்துட்டேன்” என்றான்.

ஜீவா சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டு அவனின் எண்ணங்களைப் புரிந்து கொண்ட தனு “ஏன் ரஞ்சன் ஒருவேளை அவர் திரும்ப உங்ககிட்ட நட்பு பாராட்ட வந்தா என்ன செய்வீங்க? எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் இனி நிச்சயம் அவன் கூட என்னால் நட்பா பேச முடியாது” என்றான்.

“ஏன் ரஞ்சன்?”

“இனி பேசினாலும் எங்க இரண்டு பேருக்குள்ள நட்பு வராது. அவன் எப்படி இனி நடந்துக்குவான்? திரும்பவும் பொறாமைல என்ன செய்வானோன்னு? நினைச்சிக்கிட்டே பழக வேண்டி இருக்கும். நட்புனா உண்மையா பழகணும். முகமூடி போட்டுக்கிட்டு பழக இனி எனக்கு விருப்பம் இல்லை” என்றான்.

அவன் அப்படிச் சொல்லவும் “பாவம்” என்றாள் தனு.

“பாவம்மா யாரு நானா?” என ஜீவா கேட்க…

“இல்லை ரஞ்சிவ் அண்ணா தான். உங்களைப் போல ஒரு பெஸ்ட் பிரண்டை மிஸ் பண்ணிட்டாரே. அதான் பாவம் சொன்னேன்” என்றாள் தனு.

அடுத்து இத்தனை நாளும் பேசாமல் தள்ளிப் போட்டுக்கொண்டு இருந்த விஷயத்தை இப்பொழுது ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு எனக்காகத் தண்டனை கொடுத்துக்கணும்னு ஏன் கையை அடிச்சீங்க ரஞ்சன்?” என மெதுவாகக் கேட்டாள்.

அவள் தயங்கிக் கொண்டே கேட்பதை உணர்ந்தவன் அன்று அடிப்பட்ட அவளின் கையை எடுத்து, வடு தெரிய ஆரம்பித்திருந்த இடத்தில் ஒற்றை விரலால் வருடியவன்.

“ஏன்? நான் உனக்காக எதுவும் செய்ய மாட்டேனா?அதானே நான் தான் உன் மனசை பார்க்கிறவன் இல்லையே?” என வருத்தம் மிகச் சொன்னான்.

‘ஹய்யோ! இவன் எங்கே இருந்து எங்கே தாவுகிறான்?’ என நினைத்தவள், ஏற்கனவே அவனிடம் தான் அன்று அப்படிப் பேசியதற்கு உள்ளுக்குள் வருந்திக் கொண்டிருந்தவள். இப்பொழுது ரஞ்சனே அப்படிக் கேட்கவும் வேகமாக அவனின் வாயை தன் விரலால் மூடி “வேண்டாம் ரஞ்சன் அப்படிச் சொல்லாதீங்க!” என்றாள்.

அவள் கையை மெதுவாக விளக்கி “ஏன்? நீ சொன்னதைத் தானே நான் சொன்னேன்?”

“ம்ம், அது சும்மா உங்களை எப்படியாவது பேச வைக்கணும்னு நினைச்சேன். ஆனா என்னை அறியாமலேயே வார்த்தை கூடிருச்சு. உங்களை வருத்தப்படுத்தணும்னு நினைச்சு நான் பேசலை. அன்னைக்கு ஏதோ ஒரு கோபத்தில் அப்படிப் பேசிட்டு எனக்கு ரொம்பக் கஷ்டமா போயிருச்சு” என்று வருத்தமாகச் சொன்னாள்.

“நீ வருத்தப்படாதேடா மனதில் இருந்த உன்னோட உறுத்தல் தானே வார்த்தையா வந்தது? அது என்னை வருத்தியிருந்தாலும் அது கூட நல்லது தான். இல்லைனா, நீ மனதில் என்னைப் பத்தி என்ன நினைக்கிறனே எனக்குத் தெரியாமையே போயிருக்கும். நானும் உன் மனதை புரிஞ்சுக்காத முட்டாளாகவே இருந்துருப்பேன்” என அவளைச் சமாதானப் படுத்தி விட்டு..

“நான் உன்னைப் பத்தி என் மனசில் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்லட்டுமா?” என ஜீவா கேட்டான்.

ஆனால் தனுவோ “இல்லை வேண்டாம்” என வேகமாக மறுப்பு சொன்னாள்.

“என்ன! வேண்டாமா? ஏன்?” என்று ஜீவா லேசாக அதிர்ந்து கேட்டான்.

அதற்கோ “எனக்கே தெரியும்” என்று பதில் சொன்னாள்.

“உனக்கே தெரியுமா! என்னடா சொல்ற? என்ன தெரியும்?” என ஆச்சரியமாகக் கேட்டான்.

“உங்களுக்கு என்மேல அன்பையும் தாண்டி காதலும் இருக்குன்னு நானே கண்டுப்பிடிச்சிட்டேன்” என்றாள்.

“என்ன! நீயே கண்டுப்பிடிச்சிட்டியா? எப்படி?” என ஜீவா வியப்பாகக் கேட்க…

“ஹ்ம்ம்! நீங்க பொண்ணு பார்க்க வந்ததில் இருந்து நம்ம கல்யாணம் நடந்த பிறகும் சில நாள் உங்க மனசு புரியாம குழம்பிப் போய்த் தான் இருந்தேன். ஆனா அதுக்குப் பிறகு கொஞ்சம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுருச்சு” என்றாள்.

“ஓ! எப்படிடா? நான் தான் உன்கிட்ட சாரியா கூடப் பேசலை. உடம்பு சரி இல்லாததைக் கூடச் சொல்லாம இருந்தது உனக்குக் கஷ்டமா இருந்ததுன்னு சொன்னீயே? அப்புறமும் எப்படி உனக்குப் புரிஞ்சது?” என ஜீவா கேட்டான்.

“ம்ம், அன்னைக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நீங்க சொல்லாம இருந்தப்ப நான் கோபத்தில் உங்களை ஜீவான்னு கூப்பிடவும் உங்களுக்கு அது பிடிக்காம என்கிட்ட ஏன் ரஞ்சன்னு நான் கூப்பிட மாட்டீன்கிறனு விடாம கேள்வி கேட்டீங்க” எனச் சொல்லி அவள் நிறுத்த,

“ஆமாம், எனக்கு நீ ஜீவான்னு கூப்பிட்டது பிடிக்கலை. அதான் கேட்டேன்” என்றான் ஜீவா.

“யெஸ்! அன்னைக்குத் தான் ஒரு உண்மை புரிஞ்சது” என்றாள் தனு.

“என்ன உண்மை?”

“உங்களுக்கு நான் முதல் முறை ரஞ்சன்னு கூப்பிடுறப்ப இருந்து நான் எப்பவெல்லாம் உங்களை அப்படிக் கூப்பிடுறனோ அப்பவெல்லாம் உங்க கண் அப்படியே ஜொலிக்கிறதை அன்னைக்குத் தான் உணர்ந்தேன்”

அவள் அப்படிச் சொன்னதும் அவளின் கையை எடுத்து தன் உதட்டில் வைத்து ஒற்றியவன் “ஆமா, என்னை ஸ்பெஷலா நீ மட்டும் கூப்பிடுற அந்தப் பெயர் என்னை ஒவ்வொரு முறையும் மெய்மறக்க வைக்கும்” என்றான்.

அவன் சொன்னதில் லேசான வெட்கத்துடன் மென்மையாகச் சிரித்தவள் மேலும் தொடர்ந்தாள். “அப்புறமா ஏன் என்கிட்டே சொல்லலைனு நான் அழுகவும் உடனே சமாதானம் படுத்தினீங்க. என் கண்ணீரை பார்க்கவும் உங்ககிட்ட தெரிஞ்ச துடிப்பை பார்த்தேன். அதில் இன்னும் கொஞ்சம் புரிஞ்சது” என்றாள்.

“ம்ம்” என மட்டும் சொல்லி ஜீவா அவள் தொடர்ந்து பேசினதை கேட்டான்.

“அடுத்து நீங்க நைட் லேட்டா வர ஆரம்பிச்ச பிறகு நான் போன் போடுறப்ப எல்லாம் போனை எடுக்காம கடுப்படிச்சாலும் அப்புறம் போன் போட்டு பேசி என் பத்திரத்தை நீங்க உறுதிப் படுத்திக்கிற செயலில் உங்க அக்கறையை விட அதில் ஒளிஞ்சிருந்த உங்க காதல் தான் எனக்குத் தெரிஞ்சது”

“அதுக்கடுத்து நான் உங்க கிட்ட பேசாம இருந்தப்ப நீங்களும் வீம்பா இருந்தாலும், அப்புறம் அதைத் தாங்க முடியாம நீங்க என்கிட்ட ஏன் பேச மாட்டீங்கிறனு கேள்வி கேட்டப்ப உங்கள் குரலில் தெரிந்த ஒரு நடுக்கத்தை உணர்ந்தேன். அப்பயே உங்ககிட்ட எனக்குப் பேசணும் போல இருந்துச்சு. ஆனாலும் அவசரப்பட்டு மௌனத்தைக் கலைச்சுட்டா அப்புறம் அதுக்கு மேல திரும்பவும் வேலை பக்கம் உங்க முழுக் கவனமும் திரும்பிருச்சுனா என்ன பண்ணுறதுனு பயந்து மௌனத்தைத் தொடர்ந்தேன்”

“ம்ம் புரியதுடா. ஆனா, பேசாம இருந்தது உனக்கும் தானே வேதனையா இருந்திருக்கும்?” எனக் கேட்டான்.

“ஆமா, ரொம்ப” என்றவள், “பிறகு அன்று இரவு நான் சம்மதம் இல்லைன்னு சொன்ன பிறகும் நீங்க என் பக்கத்தில் வந்திட்டு அப்புறம் என் கண்ணில் உள்ள கேள்வியைப் பார்த்தே கண்ணியமா விலகி போன செயலில் எனக்கு உங்க காதல் தான் தெரிஞ்சது. என் மனசை பார்த்ததால தான் நீங்க விலகி போனீங்க. அப்படி இருந்தும் சண்டை வந்தப்ப உங்களைப் பார்த்து உங்களுக்கு என் மனசு முக்கியம் இல்லைனு சொல்லிட்டேன். ஸாரி” என்றாள்.

“ஸ்ஸ்” என அவளின் வாயின் மீது ஒரு விரலை வைத்து “ஸாரி எல்லாம் சொல்ல கூடாது” என்றான்.

“ம்ம், சரி சொல்லலை” என அவனின் விரலை பிடித்துக் கொண்டவள், “அப்புறம் அன்னைக்கு ஒரு நாள் நைட் முழுவதும் நீங்க வீட்டுக்கு வராம இருந்ததுக்குக் காரணம் நிச்சயம் என்னோட மௌனத்தை உங்களால தாங்க முடியாமல் போனது தான் காரணமா இருக்கும்னு எனக்குத் தோணுது” எனச் சொல்லி அவன் முகம் பார்க்க ஜீவாவின் கண்கள் பளபளத்தது. அதோடு அவன் ஏதோ சொல்ல வர “நான் சொல்லி முடிச்சிறேன் ப்ளீஸ்” எனச் சொல்லி அவனைத் தடுத்தவள்,

“அன்னைக்குச் சண்டைல நான் பேசின வார்த்தைகளைக் கேட்டு மாறிக்கொண்டே போன உங்க வலி நிறைந்த முகம் காட்டிக் கொடுத்துருச்சு உங்க காதலை”

“அப்புறம் என்னை அடிச்சப்ப என்னை விட அதிக வலியை காட்டின உங்க கண்ணு சொல்லிச்சு, நீங்க என் மேல உயிரையே வச்சிருக்கீங்கன்னு”

“அடுத்து நான் கண்ணாடில விழுந்து ரத்தம் வந்ததும் என்னைவிட அதிகமா துடித்துப் போய் உணர்வே இல்லாமல் புலம்பின புலம்பல் சொல்லிச்சு, நீங்க என் மேல வச்சுருக்குற எல்லை இல்லா காதலை” என்ற தனு மேலும்,

“அதுக்கு முன்னாடி இன்னும் ஒன்னும் கூட உங்க காதலை சொல்லிச்சு. ஆனா அதை நீங்க தான் சரியா இல்லையான்னு சொல்லணும்” எனச் சொல்லி நிறுத்தினாள்.

அவ்வளவு நேரமும் அவள் சொல்ல, சொல்ல பரவசம் வந்தவன் போல அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன், அவள் கடைசிக் கேள்வியில் “என்ன?” என்றான்.

“அது என்னை அடிச்சதுக்காகத் தான் நீங்க உங்க கையை டீப்பாயில் அடிச்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். அதோட சேர்ந்து நீங்களே எதிர்ப்பாராம எங்க திரும்ப என்னை அடிச்சிறப் போறீங்களோன்னு பயந்து என்னைத் தள்ளி விட்டதுல நான் கண்ணாடி மேல தெரியாம விழுந்துட்டேன். என்ன சரியா?” எனக் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டவன் போல அவளை அருகில் இழுத்தவன் பேச வார்த்தைகள் அற்று இறுக அணைத்துக் கொண்டான்.

இன்னும், இன்னும் அவளுக்கு மூச்சு முட்டும் அளவிற்கு இறுக்கியவன் அவள் காதில் மீசை முடிகள் உரச தன் ஒட்டு மொத்த காதலும் குரலில் முத்துக்குளிக்க “லவ் யூ ஸ்ரீம்மு” என்றான் ஜீவரஞ்சன்.

அவனின் இறுகலில் திணறிக் கொண்டிருந்தவள், அதில் இருந்து தளர நினைக்க, அதற்குள் ஜீவாவின் அடுத்த அதிரடியாக அவளின் காதில் அவனின் மீசை உரச ஆரம்பிக்கவும் கூசி சிலிர்த்தாள்.

அந்தச் சிலிர்ப்பு அடங்கும் முன் தன் காதில் விழுந்து நெஞ்சில் உறைந்த வார்த்தையில், அவளின் திணறலும் நின்று தான் போனது. அப்படியே ஆசைவற்றுப் போனாள்.

தன் காதலை சொல்லி முடித்து விட்டு லேசாக அவளை விலக்கியவன், அசைவற்று இருந்தவளை மேலும் உறைய வைக்கும் வகையில் அவனின் அதரங்கள் அவளின் முகத்தைப் பழுத்தாக்க தொடங்கின முத்தம் என்னும் ஆயுதத்தால்.

முகம் முழுவதும் தன் அதர ஆயுதம் கொண்டு அவளைத் திணறடித்தவன், அடுத்ததாக அவளின் இதழில் தன் வேலையைத் தொடர ஆரம்பித்தான்.

இதழ்கள் இரண்டும் சங்கமித்துப் புதுக் கவி பாடியது. நேரம் செல்லச் செல்ல அவனின் வேகம் கூடிக் கொண்டே போனது.

ஜீவாவின் தாக்குதலில் நிலை குழைந்தாலும் தித்திப்பாய் அவனின் தாக்குதலை தாங்கிக் கொண்டாள்.

திருமணமான இத்தனை நாளும் இல்லாத வகையில் இருந்தது ஜீவாவின் தாக்குதல் வேகம். தன் காதல் மொத்தத்தையும் அந்த இதழ் ஒற்றலில் உணர்த்த முயன்றான்.

அதனை உணர்ந்து அவனின் காதலை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தாள் தனு.

முத்தத்தில் ஆரம்பித்த அவர்களின் யுத்தம் அடுத்தக் கட்டத்தைத் தேடும் ஆவலை தந்தது.

ஆனாலும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு எதையோ நினைத்துக் கொண்டதை போலத் தனுவை விட்டு விலகி அமர்ந்தான் ஜீவரஞ்சன்.