மனதோடு உறவாட வந்தவளே – 21
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 21
ஜீவாவும், தனுவும் டாக்டர் ராகவ் முன்பு அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் இருவரும் அவனின் அறைக்குள் நுழைந்தவுடன் அவர்கள் கையைப் பார்த்து திகைத்து தான் போனான் ராகவ். “என்னமா தனு என்ன கட்டு இது? நேத்து ஈவ்னிங் போன் போட்டு வரட்டுமான்னு கேட்டப்ப கூட ஒன்னும் சொல்லலை. என்ன நடந்தது?” எனக் கேட்டான்.
தனு முதல் நாள் நடந்தது தாங்கள் பேசிக் கொண்ட சில வார்த்தைகளைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் அவனிடம் சொல்ல, “ஏன்மா அவசர பட்ட? நிதானமா கையாண்டு இருக்கலாமே?” எனக் கேட்டான்.
“நைட் எல்லாம் டென்சன்ல இருந்ததுல கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் டாக்டர். ஆனா இப்ப அதுவும் நல்லது தான்” என அவள் சொல்லிக்கொண்டிருக்க அவளைத் திரும்பி பார்த்து முறைத்தான் ஜீவா.
அவன் முறைப்பதை கவனித்தவள் “அதனால் தானே இன்னைக்கே டாக்டர்கிட்ட வர முடிஞ்சது அதான் சொன்னேன்” என அவனுக்கு விளக்கம் சொன்னவள்,
ராகவிடம் திரும்பி “இனி நாங்க என்ன செய்யணும் டாக்டர்?” எனக் கேட்டாள்.
இருவரையும் பார்த்து பொதுவாகப் புன்னகைத்த ராகவ், “நான் இனி ஜீவாகிட்ட தனியா பேசணும்” என்றான்.
‘சரி’ என்றவள் வெளியே போக எழுந்தாள். “அவள் இருக்கட்டுமே டாக்டர்?” என ஜீவா சொல்ல, “இருக்கலாம் ஜீவா ஆனா இப்ப இல்லை. நாம இப்ப கொஞ்சம் பேசிக்கலாம். அப்புறம் அவங்களையும் கூப்பிட்டு பேசுவோம்” என்றான்.
“ம்ம் ஓகே டாக்டர்” என ஜீவா சொல்ல, தனு செல்லும் முன் ஜீவாவின் தோளை பிடித்து லேசாக அழுத்தி விட்டு வெளியில் சென்று அரசி அருகில் அமர்ந்தாள்.
அறிவழகன் காரில் அழைத்து வந்திருந்தார். இருவரும் இவ்வளவு நேரம் வெளியில் இருந்தார்கள். தனு வரவும் “என்னமா?” என அரசி கேட்க, “டாக்டர் அவர்கிட்ட தனியா பேசணும்னு சொன்னார் அதான்” எனச் சொல்லி அவர்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
“சொல்லுங்க ஜீவா என்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க வந்ததுல எப்படிப் பீல் பண்ணுறீங்க? எதுவும் அனீசியா பீல் பண்றீங்களா?” என ராகவ் பேச்சை ஆரம்பித்தான்.
“இல்ல டாக்டர். அப்படி எதுவும் இல்லை. நேத்து நடந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன செய்து என்னைச் சரிப்படுத்திக்கிறதுன்னு தான் இப்ப என் மனசு முழுவதும் இருக்கு. அதனால வேற எந்த விதமான அனீசி பீலும் இல்லை” என்றான்.
“குட்! கவுன்சிலிங்க்கு முக்கியத் தேவையே பேஷண்டோட ஒத்துழைப்பு தான் உங்களோட இந்தத் தெளிவே நீங்க கவுன்சிலிங்க்கு தயார் ஆகிட்டீங்கன்னு காட்டுது. சரி உங்களைப் பத்தி தனு சில விஷயங்கள் சொன்னாங்க. ஆனா இப்ப அது எல்லாம் அப்படியே ஒதுக்கி வச்சுட்டு உங்களைப் பத்தி நீங்களே சொல்லுங்க. என்ன வேலை பார்க்குறீங்க? உங்க குடும்பம், உங்களைப் பாதித்த சில விஷயங்கள், உங்களுக்குச் சந்தோஷத்தை தந்த நிகழ்வுகள், எல்லாம் நீங்களே சொல்லுங்க” என ராகவ் சொல்ல…
ஜீவா தன்னைப் பற்றிய பொதுவான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டவன், தன் சந்தோச நிகழ்வுகள், தன்னை வருத்திய நிகழ்வுகளைச் சொல்லும் போது ரொம்பவே தயங்கினான். அவன் தயக்கத்தை உணர்ந்து சில கேள்விகள் கேட்டு அவனை மெது மெதுவாக என்றாலும் பேசவைத்து ஜீவாவின் வாயிலாகவே அவன் மனநிலையைத் தெரிந்து கொண்டான் ராகவ்.
“உங்களுக்கு ஏற்பட்டிருப்பது மனஅழுத்ததோட ஆரம்ப நிலைதான் ஜீவா. நீங்க எல்லாத்தையும் உங்க வேலையில் அமைதியா டீல் பண்ணிட்டு வெளியே எதையும் சொல்லாததால அது உங்களுக்குள்ளேயே இருந்து ஒரு அழுத்தத்தை உருவாக்கி இருக்கு.
அதுவும் இத்தனை அழுத்தத்திலும் உங்க ப்ராஜெக்டை நீங்க வெற்றிகரமா முடிச்சது பெரிய விஷயம் தான். ஏன்னா சிலருக்கு இந்த மாதிரி டிப்ரஷன் ஏற்படும் போது தங்கள் வேலைல கவனம் செலுத்த முடியாம போய் அதுனாலே கோபம், எரிச்சல், கழிவிரக்கம் எல்லாம் உண்டாகி அதிகமான பாதிப்புக்கு உள்ளாவாங்க” என்றான் ராகவ்
“உண்மைதான் தான் டாக்டர். நான் இந்தப் பிராஜெக்டை சரியா செய்யணும்னு என்னை நானே ரொம்பப் போர்சா அதுக்குள் மூழ்க வச்சுக்கிட்டேன். இதுக்கு முன்ன நான் ஒரு ஸ்டாப்பா இருந்து வேலை பார்த்தப்ப இருந்த சாதாரண மனநிலை எனக்கு இந்த லீடர் போஸ்ட்ல இருந்து செய்த போது இல்லை.
என் மனசுக்குள் எந்த நேரமும் இதை நான் சரியா செய்யணும். முதல் பிராஜெக்ட்லேயே எதுவும் தப்பு வரக்கூடாதுன்னு எனக்குள் எந்த நேரமும் அதே சிந்தனை தான் ஓடுச்சு. அதைத் தாண்டி வெளியே வர முடியல. அதோட சேர்ந்து தனுவும் ஏன் இவ்வளவு லேட் ஆகுது. ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டீங்கிறீங்கன்னு கேட்கும் போது அவள் கிட்ட சாதாரணமா கூடப் பேச முடியாம எனக்கு வேலை தான் முக்கியம் என்பது போல அவ மேல கோபப்பட ஆரம்பிச்சிட்டேன்.
ஆனா நான் அப்படி நடந்துக்கிட்ட போதெல்லாம் தனு எவ்வளவு கஷ்டப்படுவானு யோசிக்காம போய்ட்டேன். அதையும் விட எனக்குள் இருந்த வேலையை வெற்றிகரமா முடிக்கணும்னு என்ற வெறி வேற எந்த விஷயத்திலும் கவனத்தைச் செலுத்த முடியாம போயிருச்சு” என வருத்தமா சொன்ன ஜீவா தொடர்ந்து,
“அதுவும் ரஞ்சிவ் வேலைல செய்து வச்ச குளறுபடியால எனக்கு அளவுக்கு அதிகமான டென்ஷன். அந்த நேரம் எல்லாம் என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம வேலை வேலைன்னு இருந்துட்டேன். அதுவும் எப்படியும் இந்த வேலையை வெற்றிக்கரமா முடிக்கணும்னு எனக்குள் இருந்த வெறிதான் அதைச் சிறப்பா செய்ய வச்சது. அதேநேரம் ஒரு மாதிரி வேலைக்கு அடிக்ட் ஆனது போல என் மைண்ட் அந்த நேரத்தில் நடந்துக்கிச்சு. அதுனால தான் இன்னொரு ப்ராஜெக்டும் என் கைக்கு வரவும் கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம திரும்ப அதில் மூழ்க ஆரம்பிச்சேன்.
அதுக்கு எனக்கு வலு சேர்க்குறது போல ரஞ்சிவ் செய்த வேலையையும் மனசுல வச்சிக்கிட்டு இன்னும் அதிகமா வேலை செய்ய ஆரம்பிச்சேன். அதுவும் ரஞ்சிவ் செய்ததை நான் போனா போகுது அவனைக் கண்டுக்காம விட்டுட்டாலும் அவன் ஏற்படுத்திய பாதிப்பை மட்டும் நான் அப்படிக் கண்டுக்காம விடாம எனக்குள் இறுக்கமா பிடிச்சு வச்சுக்கிட்டேன்னு இப்ப தான் எனக்குப் புரியுது” என்றான் ஜீவா.
ஜீவாவை பேச விட்டு அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ராகவ் “ஹ்ம்ம் அதுக்கு உங்க குணமும் ஒரு காரணமா அமைஞ்சிருச்சுனு நினைக்கிறேன். இந்த அமைதியான குணம் நல்ல குணம் தான் ஜீவா. ஆனா இந்த மாதிரி குணமே உங்களுக்கு இப்ப பாதிப்பை ஏற்படக் காரணமா ஆகிருச்சு. நீங்க உங்க மனசுலேயே எல்லாத்தையும் சேர்த்து வைக்காம வெளிப்படுத்திருந்தா இத்தனை அழுத்தம் வந்து குடும்பத்தில் அதில் பிரச்சனை ஆகுற அளவுக்கு வந்திருக்காது” என்றான் ராகவ்.
‘ஆமாம்’ என்பது போலத் தலை அசைத்த ஜீவா. “தப்பு தான் டாக்டர். நான் பகிர்ந்து கொள்ளாத விஷயம் எல்லாம் எனக்கு ரொம்பச் சாதாரண நிகழ்வா தான் தெரிஞ்சுது. அதுக்கு இவ்வளவு இம்பார்ட்டன் கொடுக்கணுமானு கொஞ்சம் அலட்சியமா இருந்திட்டேன். ஆனா அது என் மனசுல இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி நான் இப்படி நடந்துக்குவேன்னு நினைக்கலை டாக்டர். அதுவும் நேத்து நைட் என்கிட்ட இருந்த கட்டுப்பாடற்ற கோபம் எப்படி வந்ததுனே தெரியல. அதுவும் தனு கையில் ரத்தத்தைப் பார்க்கிற வரை நான் நானாகவே இல்லை” என்றான்.
“ஹ்ம்ம் புரியது ஜீவா. உங்க மனதிற்குள் புகுந்திருக்கும் அழுத்தங்கள் எல்லாமே அப்படிக் கோபமா வெறி தனமா வெளிப்பட்டிருக்கு. நாம இது எல்லாம் ஒரு பிரச்சனையானு நினைக்கிற சில விஷங்கள் நமக்கே தெரியாம நம்ம மனதில் ஆழமா ஒரு தாக்கத்தை ஏற்படுத்திரும். ஆனா அதோட விளைவுகளை நாம உணரும் முன் சில விபரீதங்களும் நடந்துரும்.
பட் உங்க விஷயத்தில் தனுவோட முயற்சியிலும், உங்க தப்பை நீங்களே உணர்ந்து அதைச் சரி பண்ணனும்னு நினைக்கிறதாலேயேயும் உங்களோட பாதிப்பு கணவன், மனைவி சண்டையோட முடிஞ்சிருச்சு. இதுவே இந்த டிப்ரஷனை கண்டுகொள்ளாமல் விட்டுருந்தா அதன் விளைவுகள் இதை விட மோசமா இருந்திருக்கும்” என்ற ராகவ்,
“இப்ப இதை ஒரு உதாரணத்திற்குத் தான் சொல்றேன். அதுவும் என் பேஷண்டான உங்ககிட்ட இப்படிச் சொல்ல கூடாது தான். ஆனால் உங்க கிட்ட தெரியுற ஒரு தெளிவு சொல்லலாம்னு தோன்றதால சொல்றேன்” என்றவன்,
“சிலர் எல்லாம் இந்த டிப்ரஷனை தாங்க முடியாம உள்ளுக்குள் அழுத்தி, அழுத்தி வைச்சுக்கிட்டு வெளியேயும் தங்கள் பிரச்சனையைச் சொல்ல முடியாமல் தனக்குள் இருக்குற பாரத்தையும் தாங்க முடியாம அவர்கள் கையில் எடுக்கும் முடிவு தற்கொலை. அது மட்டும் இல்ல இந்த டிப்ரஷன் அளவுக்கு அதிகமாக ஆகும் போது சின்ன வயசுலேயே மாரடைப்பு கூட வருது. அதுக்குக் காரணம் வேலையில் காட்டுற அக்கறையைக் கொஞ்சம் கூடத் தங்கள் உடம்பு, மனது மேல காட்டாததுனால தான்” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் ஏற்கனவே தற்கொலை பற்றித் தனு வாயிலாக அதை அறிந்து இருந்தாலும் அதோடு சேர்ந்து ராகவ் சொன்ன மாரடைப்பு விஷயமும் சேர்ந்து தானாகவே ஜீவாவின் உடல் விறைப்படைந்தது.
அதைக் கவனித்த ராகவ் “ஹ்ம்ம் கூல் ஜீவா” என்றவன் “உங்களைப் பயமுறுத்த சொல்லலை. இதை இப்படி நாங்க பேஷண்ட் கிட்ட சொல்லி அவங்களைப் பயமுறுத்தக் கூடாது தான். ஆனா உண்மை இது தான். இப்ப நிறைய இது போல நடக்குது. ஆனா உங்க விஷயத்தில் அந்த அளவுக்குப் போகாம இப்பயே ட்ரீட்மெண்ட் எடுக்க வந்தது நல்ல விஷயம்” என்ற ராகவ் சில மருத்துவ ஆலோசனைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
“இனி நீங்க உங்க அழுத்தத்தைக் குறைக்க முயற்சி பண்ணனும்” என்ற ராகவ், “முதலில் உங்க மனசை பாதிக்கின்ற மாதிரி எதுவும் விஷயங்கள் நடந்தா அதை மனசை விட்டு பேசி சேர் பண்ணிக்கப் பழகிக்கோங்க. அப்படி யார்க்கிட்டேயும் சொல்ல முடியாத விஷயம்னா அதை எதிலாவது எழுதுங்க. அப்போ உங்க மனதில் உள்ள பாரம் குறையும்”
“நம்ம எல்லாருக்குமே ரொம்பப் பழக்கமான பழமொழித்தான் சந்தோசமோ, துக்கமோ அதைப் பகிர்ந்து கொள்ளும் போது சந்தோசம் இரட்டிப்பாகவும், துக்கம் பாதியாகக் குறையும்னு சொல்றதை எல்லாரும் அவங்க, அவங்க வாழ்க்கையில் ஒவ்வொருத்தரும் செய்தா மன அழுத்த பிரச்சனைகள் அதிகம் யாருக்கும் வராது”
“உங்களுக்கு இத்தனை நாளும் பழகின பழக்கத்தை உடனே மாத்த முடியாது ஆனா கொஞ்ச, கொஞ்சமா நீங்க மனசு விட்டு பேச, பேச உங்க மனசு லேசாகும். அது உங்களுக்கும் நல்லது உங்க கூட இருப்பவங்களுக்கும் நல்லது”என்ற ராகவ் தொடர்ந்து,
“இப்ப பொண்ணுங்க மனசு ஆழம் அதை யாராலும் புரிஞ்சுக்க முடியாதுனு சொல்றாங்க”
“ஆண்களுக்கும் அது பொருந்தும் அவங்க என்ன மனசுல நினைக்கிறது எல்லாவற்றையுமா வெளியே சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம் தான்”
“பெண்களாவது பல சமயம் மனசுல வச்சுக்க முடியாமல் வெளியே கொட்டிறாங்க. இல்லையா கண்ணீரால தன் மனச வெளியே காட்டிறாங்க”
“ஆனா ஆண்கள் அவங்களா எதையும் சொன்னா தான் உண்டு”
“எதையும் சொல்லாம உள்ளேயே அழுத்தி வைக்க, வைக்க என்ன ஆகும்? அழுத்தம் தான் கூடும்”
“அதிலும் நாம ஆண்கள் உடலால் பலமானவர்களா இருக்கலாம். ஆனா மனதளவில் நாம தான் வீக் பெர்சன்ஸ். ஆனா பெண்கள் மெண்டலி ஸ்ராங்கா இருப்பாங்க. அதுவும் ஆண்கள் அழக்கூடாதுன்னு சொல்லி வச்சு நாம வெளியே கெத்தா நம்மளை காட்டிக்கிட்டு இருப்போம். அதனால் நம்மலால சில சின்ன விஷயங்களைக் கூடத் தாங்கமுடியாம உள்ளுக்குள் உடைந்து போவோம்.
ஆனா அதே பெண்கள் சிலர் அப்படி ஆகும் போது கண்ணீரால் தங்கள் அழுத்தத்தைக் குறைச்சுக்குவாங்க. ஆனா நாம அதை உள்ளுக்குள்ளேயே வச்சுக்கிட்டு வெளியேயும் சொல்லாமல் சில சின்ன விஷயங்களையும் பெருசா நினைச்சுக்கிட்டு பெரிய பின் விளைவுகள் ஏதாவது வருவது போல அதுக்கு ரியாக்ட் பண்ணிருவோம்”
“நாம பெண்கள் அழுவதைப் பார்த்து இது என்ன இப்படி அழுதுக்கிட்டுன்னு எரிச்சல் படுவோம். ஆனா உண்மையில் கண்ணீர் கோழைதனத்தின் வெளிப்பாடு இல்ல. என்னைக் கேட்டா கண்ணீர் ஒரு வரம்னு தான் சொல்லுவேன். ஏன்னா கண்ணீர் நமக்குள் இருக்குற அத்தனை அழுத்தத்தையும் வெளியே வர வச்சிடும்.
அதுக்குத் தான் சொல்லுவாங்க கண்ணீர் விட்டு அழுதுரு பாரம் குறையும்னு. ஆனா ஆண்கள் அழுதா எங்க கோழைனு சொல்லுவாங்களோன்னு யாரும் ஆழ மாட்டோம். அதுக்குப் பதிலா நாம கோபத்தை வெளிப்படுத்துறோம். அந்தக் கோபத்தின் விளைவு நம்ம கூட இருக்குறவங்களுக்குப் பாதிப்பை கொடுத்து விடுகிறது”
“அதுவும் ஒரு சிலருக்கு ஆபீசில் நடக்குறதை ஏன் வீட்டில் வந்து சொல்லனும் என நினைக்கின்ற மனப்பான்மை இருக்கும். நான் என்ன ஸ்கூல் பையனா அங்கே நடக்கிறது எல்லாம் வீட்டில் சொல்லனுமானு நினைப்பாங்க”
“அப்படி நினைக்காம வீட்டில் வந்து தங்களை அன்றைக்கு அதிகமா பாதிச்ச நிகழ்வுகளையோ, இல்லை சந்தோஷம் தந்த நிகழ்வுகளையோ சொல்லும் போது உங்களுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களோடு பேசிய நிறைவு கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கும் தன் கணவன், தன் மகன் தன் கூட நேரம் செலவு செய்கிறான் என்ற மன நிறைவு கிடைக்கும்”
“அதுவும் மனைவிமார்கள் தாங்கள் எதற்கு அதிகம் ஆசைப்படுவார்களோ இல்லையோ தன் கணவன் தன் கூட இருந்து நேரம் செலவு செய்வதைப் பொக்கிஷமா நினைப்பாங்க” என்றான்.
ராகவ் பேசினதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஜீவா “இனி கண்டிப்பா குடும்பத்துக் கூட நேரம் செலவழிப்பேன் டாக்டர்” என்றான்.
அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்த ராகவ், “நல்லது ஜீவா” என்று விட்டு “உங்க வேலை உடலுக்கு உழைப்பை தருவதை விட மூளைக்கு அதிக உழைப்பை தரும் வேலை. அதில் நிச்சயமா ட்ரெஸ் வர வாய்ப்பு அதிகம். விடாம நீங்க உடற்பயிற்சி செய்யணும். யோகா கூடக் கத்துகிட்டுச் செய்யலாம். யோகா மன அழுத்ததைக் குறைக்கும் சிறந்த மருந்து.
அதை விட முக்கியம் தூக்கம். சரியான தூக்கம் மட்டும் இருந்தா போதும் எந்த விதமான வியாதியும் நம்மளை நெருங்க யோசிக்கும். அதுவும் உங்களை மாதிரி மூளையை மூலதனமா அதிகமா உபயோகிக்கும் ஐடி பீப்பிள்க்கு ரொம்ப முக்கியம் அமைதியான, நிம்மதியான தூக்கம். அதுக்கு முதலில் மனம் அமைதியா இருக்கணும். மனஅமைதியே நிம்மதியான தூக்கத்தைத் தரும். அதுக்குச் சில உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்”
“ஒரு வேளை உங்களுக்கு வேலை செய்திட்டு இருக்கும் போது டென்ஷன் வருவது போல இருந்தால் கொஞ்ச நேரம் வேலை செய்வதை நிறுத்தி அமைதியா மியூசிக் கேளுங்க. இல்லனா கண்ணை மூடி நம்பர்ஸ் எண்ணுங்க. அதுவும் முடியலைனா. எந்தச் சிந்தனையிலும் மனசை விடாம கண்ணை மூடி உங்க புருவ மத்தியில் கவனத்தைக் குவித்து வைப்பத்தைப் போலச் செய்து அதில் மட்டும் உங்க கவனத்தை வைத்து கட்டுக்குள் கொண்டுவரலாம்”
“இது போலச் செய்யும் போது அந்த நேரம் ஏற்படும் டென்ஷன் குறையும். மீண்டும் வேலை செய்யும் போது உங்களுக்கு டென்ஷன் இல்லாம இன்னும் கவனமா வேலை செய்யக் கூட இந்த முறைகள் உங்களுக்கு உதவும்” என்ற ராகவ், “இன்னைக்கு இது போதும்” என்றுவிட்டு “இன்னும் சில நாட்களுக்குக் கவுன்சிலிங் வாங்க ஜீவா. நான் சொன்ன விஷயத்தை எல்லாம் நீங்க நடைமுறை படுத்தினாலே சீக்கிரமே உங்க டிப்ரஷன்ல இருந்து வெளியே வந்துருவீங்க” என்றான்.
“நிச்சயமா நீங்க சொன்னதை எல்லாம் இன்னையில் இருந்தே நடைமுறைக்குக் கொண்டு வந்துருவேன் டாக்டர். ரொம்ப நன்றி” என்றுவிட்டு, “நான் ஒரு கேள்வி கேட்கலாமா டாக்டர்?” என்றான்.
“கேளுங்க ஜீவா”
“இப்ப நான் மூளைக்கு அதிகம் பிரஷர் கொடுக்குற ஐடி பீல்டில் இருக்கிறதால தான் இப்படி டிப்ரஷன் வருதா?” எனக் கேட்டான்.
“கண்டிப்பா அப்படி இல்லை ஜீவா. உங்களுக்கு வந்ததுக்கு உங்க வேலையும் ஒரு காரணம் அவ்வளவுதான். ஆனா டிப்ரஷன் எல்லாருக்கும் பொதுவா தான் வரும். இப்ப என்னோட பேஷண்டா ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் கூட வர்றாங்க” என்று ராகவ் சொல்லவும்,
“என்ன டாக்டர் சொல்றீங்க? ஸ்கூல் பிள்ளைங்களா?” என லேசாக அதிர்ந்து போய்க் கேட்டான் ஜீவா.
“யெஸ் ஜீவா உண்மைதான். இப்ப சின்னக் குழந்தைகளுக்குக் கூட வருது. காரணம் குழந்தைகளைக் குழந்தைகளா இருக்க விடாம ஒரு கிளாஸ் விடாம அனுப்புறது. பெரியவங்க கிட்ட இருக்குற ஒரு இயந்திர தன்மையைக் குழந்தைகளுக்கும் வருவது போல அவங்களைச் சில பெற்றோர் ட்ரீட் பண்றதுன்னு அவங்களுக்கும் மன அழுத்தம் வர அளவுக்குக் கொண்டு வந்து விட்டுறாங்க. அதுவும் பத்தாவது, ப்ளஸ் டூ படிக்கிற பிள்ளைங்க அதிக மார்க் எடுக்கணும்னு கட்டாயப்படுத்துறது போல நடந்துகிறது, எல்லாமே அவங்களுக்கு டிப்ரஷன் வர காரணமா மாறிடுருது.
எந்த ஒரு படிப்போ, வேற எதுவும் கத்துக்கிறதோ அவங்களா ஆசை பட்டு செய்யுற வரை பாதிப்பு இல்லை தான். ஆனா இதை நீ செய்து தான் ஆகணும்னு சொல்லும் போது பிடிக்காத, இல்லை செய்யக் கஷ்டமா அவங்க பீல் பண்ற விஷயத்தைச் செய்யும் போது அதுவே அவங்களுக்கு அழுத்தம் குடுத்துருது.
அதுக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மனசுல என்ன இருக்கு? அவங்களுக்கு என்ன விருப்பம்? என எல்லாம் மனசு விட்டு பேச வைக்கணும். அப்படிச் சில பெற்றவர்கள் செய்யாம போறதால அந்தப் பிள்ளைகளுக்குக் கவுன்சிலிங் கொடுக்குற நிலை வந்துருது”
“இது போல இன்னும் பல விதமான டிப்ரஷன் பத்தி சொல்லிக்கொண்டே போகலாம்” என்று முடித்தான் ராகவ்.
ஜீவா அதைக் கேட்டு வருந்தினான். “பாவம் தான் அந்தக் குழந்தைகள்” என்றான்.
“ம்ம் ஆமாம்” என்ற ராகவ், “ஓகே ஜீவா தனுவை நல்லா பார்க்கோங்க. என்னை முதல் தடவை சந்திக்க வந்த அன்னைக்கு அவங்க முகத்தில் அத்தனை பயத்தைப் பார்த்தேன். அந்தப் பயத்திற்கும் நீங்க தான் காரணம். உங்களுக்கு என்ன பிரச்சனையோனு நினைத்துப் பயம் அவங்களுக்கு”
“ஆனா இன்னைக்கு அவங்க முகத்தில் ஒரு தெளிவு வந்திருக்கு. அதுக்கும் நீங்க தான் காரணம். இனிமே நீங்க சரி ஆகிருவீங்க என்ற நம்பிக்கையை அவங்களுக்கு நீங்க கொடுத்துருக்கீங்க. அதான் அவங்க தெளிவுக்குக் காரணம். அந்தத் தெளிவை இனி கலைய விடாமல் பார்த்துக்கோங்க” என்றான்.
“அவளுக்கு நான் குடுத்த கஷ்டம் எல்லாம் போதும். தனுவிற்கு இனி எந்தக் கஷ்டமும் வராத அளவுக்கு நடக்க முயலுவேன் டாக்டர். இனி அவளுக்கு என்னைப் பத்தின பயமே இல்லாம பார்த்துக்குவேன்” என்றான் ஜீவா.
ஜீவா தான் சொன்னதை எல்லாம் நல்ல விதமாகப் புரிந்துக் கொள்ளவும் புன்னகைத்த ராகவ், “குட் ஜீவா சந்தோஷம். அடுத்து தனுவை உள்ள வர சொல்லும் முன், இன்னும் ஒரு விஷயம் தனுவை பற்றிச் சொல்லணும்” என்றவன் சில விஷயங்களைச் சொன்னான். அதைக் கேட்டதும் திடுக்கிட்ட ஜீவா சிறிது நேரம் அப்படியே அமர்ந்து விட்டான்.