மனதோடு உறவாட வந்தவளே – 20

அத்தியாயம் – 20

ஜீவா தூங்க ஆரம்பிக்கவும் தனு வெளியே சென்று தன் மாமனார், மாமியாரிடம் அவள் அறிந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மன உளைச்சல், இன்று அவனுக்கு அதிகரித்து இருந்ததாலோ என்னவோ மாத்திரை போட்டும் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அரைத் தூக்கத்தில் மட்டுமே இருந்த ஜீவரஞ்சன் சிறிது நேரத்திலேயே முழித்து விட்டான்.

தனு வெறுமனே கதவை சாற்றி மட்டும் வைத்திருந்ததால் அவள் அறைக்கு வெளியே பேசியது ஜீவாவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது. அவன் ஹாலுக்கு எழுந்து செல்ல நினைத்து எழ முயன்றான். ஆனால் அவனால் முடியாமல் சோர்வும் மாத்திரையின் தாக்கமும் சேர்ந்து அவனின் உடலை அழுத்தி எழ முடியாமல் செய்தது.

அதனால் அப்படியே கண்களை மூடி படுத்திருந்தவன் தனு சொன்ன அனைத்தையும் கேட்டான். நிதின் அவன் மீது அக்கறை கொண்டு தனுவை சந்தித்துப் பேசியதை அறிந்து தான் ஒரு நட்பையாவது நல்ல நட்பாகப் பெற்றோமே என அவனின் மனம் சந்தோஷபட்டுக் கொண்டது. அடுத்து டாக்டர் சொன்னதைத் தனு சொல்லிக் கேட்டபோது அவனுக்குள் வலித்தது.

‘என்ன எனக்கு மன அழுத்தமா? அதுனால தான் எனக்கு இப்படி அளவுக்கு அதிகமா கோபம் வருதா? மூச்சு வாங்குவதைக் கூட ஏதோ சாதாரணமா இருக்கும். இதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு நினைச்சேனே’ என எண்ணியவன்.

‘அது என்ன தற்கொலை எண்ணம் வரும் அளவுக்குப் போகுமாமே? அப்போ அந்த அளவுக்கா நான் பாதிக்கப் பட்டிருக்கேன்? என வருந்தினான்.

மன அழுத்தம் பற்றி அவனும் கேள்வி பட்டிருக்கிறான். அதைப் பற்றிய கட்டுரைகள் கண்ணில் படும் போது படித்தும் இருக்கின்றான். ஏன் அவன் துறையிலேயே ஸ்ட்ரெஸின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறியும் போது அவர்களுக்காக வருத்தப்பட்டுவிட்டு அதைக் கடந்தும் போயிருக்கிறான்.

ஆனால் அடுத்தவர்களுக்கு நடக்கும் போது சிறிது நேர வருத்தத்துடன் கடந்து சென்று விடும் மனம் தனக்கென்று வரும் போது ‘எனக்கா இப்படி?’ என மனம் துடிக்க ஆரம்பித்து விடும்.

அதே போல ஜீவாவிற்கும் வலித்தது. ஆனால் அது சிறிது நேரம் மட்டுமே. பின்பு தனு தனக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளை நினைத்து பார்த்தவனின் மனம் ஒரு தெளிவை தேட முயற்சித்தது.

‘ஏன் எனக்கு மன அழுத்தம் வந்தது? நான் ஏன் இவ்வளவு கோபப்படுகின்றேன்? என்னால் ஏன் என்னையே நிதானப்படுத்திக் கொள்ள முடியாமல் போனது?’ என மனதில் வரிசையாக முளைத்த கேள்விகளுக்குப் பதிலாகத் தனக்குள்ளேயே சுய அலசல் செய்ய ஆரம்பித்தான்.

திருமணம் முடிந்ததில் இருந்து இத்தனை நாட்களில் தான் என்னென்ன செய்தோம் என நினைவிற்குக் கொண்டு வந்தான்.

தனுவை திருமணம் செய்த பிறகு நார்மலான திருமண வாழ்க்கையை ஆரம்பித்தோம். அப்போது எல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாகத் தான் அவனுக்குத் தோன்றியது.

ஆனால் தன் வாழ்க்கை சுமூகமாகச் செல்லவில்லை என்பது அவனுக்கு இப்போது தான் புரிந்தது.

‘அதுவும் எனக்கு உடம்பு சரியில்லை எனத் தான் சொல்லாமல் போன அன்று தனு எவ்வளவு தவித்துப் போய் அழுதாள். அப்பொழுதாவது நான் அவளிடம் மனம் விட்டுப் பேசியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் அடுத்ததாக வேலை, வேலை என்று அதில் மட்டும் தன் கவனத்தை வைத்தது தன் பிசக்கு தானே?’ என நினைத்து மனம் வருந்தியவன்,

‘தான் தினமும் லேட்டாக வர ஆரம்பிக்கவும், விடு வரும் வரை அவள் தனக்காகக் காத்திருக்கும் போதாவது தன் வேலை நிலையைச் சொல்லி விளக்காமல் தனுவிடம் சரியாகப் பேசாமல் கூட இருந்தது என்னுடைய எத்தனை பெரிய தவறு?’

‘அன்று ரஞ்சிவ் செய்தது அவனுக்குப் பெரிய தவறாக இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் எனக்கு எத்தனை பெரிய வலி அது? இத்தனை நாளும் நண்பன் என்னும் போர்வையில் தன் கூடவே சுற்றி திரிந்தவனின் உண்மையான முகத்தைக் கூட அறிந்து கொள்ளாமல், அவனிடம் தன் உண்மையான நட்பை காட்டியது. என் தவறு தானே? அதை எப்படி நான் வெளியே சொல்வது தான் ஒருவன் நடிப்பில் ஏமாந்து விட்டதாக?

அதுவும் அவன் நட்பில் உண்மை இல்லை என்றாலும் அவனிடம் நான் உண்மையான நட்புடன் தானே பழகினேன். அவன் செய்ததை யாரிடமும் சொல்லாமல் என் நட்புக்கு மரியாதை கொடுக்க நினைத்து தனுவின் மனதை காயப்படுத்துவது போலத் தான் நடந்து கொண்டது பெரிய பிழை தான்’ என வருந்தினான்.

ரஞ்சிவை பற்றி நினைத்துப் பார்த்தான். ‘ரஞ்சிவ் தன் மீது பொறாமை கொண்டு பேசியது இன்னும் அணு பிசகாமல் அவனின் மனதில் ஓடியது. அவன் அன்று பேசியதை மனத்திற்குள்ளேயே வைத்து புழுங்கி மூச்சு திணறல் வர வைத்து தனுவையும் சிறிது நேரத்தில் எப்படிப் பயப்பட வைத்து விட்டேன்’ என அன்றைய நிகழ்வை நினைத்து மனம் கசந்தான்.

‘மறுநாள் அவள் தன்னை டாக்டரிடம் செல்ல அழைத்த போது வேலை தான் முக்கியம் என்பது போது தனுவிடம் தான் காட்டிய அலட்சியம் இப்போது மனதை அறுத்தது’

‘தான் அலட்சியம் காட்டியும் விடாமல் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துச் செயல் பட்ட தனுவை நினைத்து அவன் மனம் பெருமை கொண்டாலும், தனுவின் அப்போதைய நிலை எப்படி இருந்திருக்கும்’ எனவும் எண்ணிப் பார்த்தான்.

‘டாக்டரின் ஆலோசனையில் அவள் தன் கவனத்தை வேலையில் இருந்து திருப்ப வைக்க மௌனத்தைக் கையில் எடுக்கும் நிலைக்குத் தனுவை தள்ளிவிட்டது தான் தானே?’

‘என்னை உயிராக நினைப்பவள், என்னைச் சரி பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு என்னிடம் பேசாமல் இருந்தது அவளுக்கும் தானே வலித்திருக்கும்?’

‘அதுவும் நேற்று தான் செய்தது எவ்வளவு பெரிய தவறான காரியம். நைட் எல்லாம் வீட்டுக்கு வராமல் இருந்ததில் அவள் எப்படித் தவித்துத் துடித்துப் போயிருப்பாள். நான் ஏன் அதை யோசிக்காமல் மடத்தனமாக நடந்து கொண்டேன்’ எனத் தன் தவறை உணர்ந்து தலையில் அடிக்கத் தன் கையைக் கொண்டு போனவன் கையில் இருந்த கட்டை பார்த்து நிறுத்தி தன் கையையே பார்த்தான். கையைப் பார்க்க அவன் செய்த தவறின் எண்ணிக்கை உச்சக் கட்டத்தில் வந்து நின்றதை நினைத்து வேதனைப் பட்டான்.

‘இந்தக் கையில் கட்டு வந்தது கூட நியாயம். அவள் கையில் காயம் வர வைத்தது எந்த விதத்தில் நியாயம்?’ எனத் தன்னையே கடிந்துக் கொண்டவன், தான் அடித்ததற்கான காரணத்தை நினைத்துப் பார்த்தான்.

‘இன்று சண்டையின் போது தனு சொன்னதை வைத்து பார்த்தால் தான் அவளை விரும்புகிறோமா இல்லையா எனக் குழம்பி போக வைத்திருக்கிறேன் போலவே?’ என யோசித்தான்.

‘ஆமாம் அவள் குழம்புவதும் நியாயம் தானே? அவள் கேட்ட கேள்வியில் தான் என்ன தவறு இருக்கின்றது? என நான் அவளை அடித்தேன்? அவள் சரியாகத் தான் கேட்டிருக்கின்றாள். நான் அவளைப் பற்றி என்ன நினைக்கிறேன் என அவளுக்குத் தெரியப்படுத்தாமல் புதுமண மோகத்தில் ‘இரவு வந்தது இளமை விழித்தது’ என்பது போல மட்டும் தான் அவளிடம் நடந்து கொண்டால், அவளுக்கு நான் அவளது மனதை விரும்புகிறோமா இல்லையா எனச் சந்தேகம் வர தானே செய்யும்?’ என நினைத்து பார்த்தவன்,

மேலும் ‘என் மனதில் உள்ளதை வெளி ஆட்கள்கிட்ட தான் சேர் பண்ணிக்க எனக்குக் கஷ்டமா இருக்கும். ஆனா என்னை நம்பி வாழ வந்தவளிடமாவது நான் பேசியிருக்கணுமே? அப்படிப் பேசாமல் இருந்தது என் முட்டாள் தனம் தான்’ எனத் தன்னையே நொந்து கொண்டான்.

ஒவ்வொன்றாகத் தன் தவறை எல்லாம் நினைத்து மறுகிய படி அப்படியே படுத்திருந்தவன், அவர்கள் பேசி முடித்துச் சிறிது நேரம் சென்ற பிறகு மெதுவாக எழ முயன்று பார்த்தான். மாத்திரையின் வீரியம் குறைந்திருந்தது போல? இப்பொழுது அவனால் எழ முடிந்தது.

எழுந்து அமர்ந்தவன் கொஞ்ச நேரம் மீண்டும் தனு வெளியே சொன்ன டாக்டர் விஷயத்தைத் தன் மனதில் ஓட்டிப் பார்த்தான்.

பின்பு சிறிது நேரம் ஏதோ யோசனையிலேயே இருந்தவன் எழுந்து வெளியே சென்றான்.


ஜீவா வந்ததைப் பார்த்து விட்டு அவன் குடிக்கப் பழச்சாறு எடுத்து வந்த அரசி அவனிடம் கொடுத்து விட்டு “இப்ப எப்படி இருக்கு ஜீவா? இன்னும் மூச்சுவிடக் கஷ்டமா இருக்கா?” என அவன் தலையைத் தடவிக் கொடுத்த படியே கேட்டார்.

“இல்லம்மா இப்ப ஒன்னும் செய்யலை நல்லா இருக்கேன்” என மெதுவாகச் சொன்னான்.

“ஸாரி ஜீவா! அம்மா உன்னை அடிச்சிட்டேன்” என்றார் அரசி.

“இல்லம்மா நீங்க அடிக்கலனா நான் இப்பயும் பேசியிருக்க மாட்டேன்னு தோணுது. நீங்க அடிச்சது நல்லது தான்” என்றான் ஜீவா.

பின்பு சிறிது நேரம் ஜீவாவிடம் திரும்ப ஏதாவது கேட்டு அவனை மீண்டும் டென்ஷன் படுத்த விரும்பாமல் பேசாமல் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

எல்லாரும் அமைதியாக இருக்க அவ்வளவு நேரம் தலையைக் கைகளால் தாங்கியே உட்கார்ந்து இருந்தவன் திடீரென நிமிர்ந்து “எப்ப டாக்டர்கிட்ட போகணும்?” எனத் தனுவை பார்த்துக் கேட்டான்.

ஜீவா வெளியே வந்ததில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த தனு, அவன் திடீரென அப்படிக் கேட்கவும் திகைத்துப் போய்ப் பார்த்தவள் “உங்களுக்கு டாக்டர் பத்தி எப்படித் தெரியும்? ” எனத் திடுக்கிட்டு கேட்டாள்.

“ஹ்ம்ம்! நீ கொடுத்த மாத்திரை என்ன மாத்திரைனே தெரியல. அதைப் போட்டும் எனக்குச் சரியா தூக்கமே வரலை. கொஞ்ச நேரம் தான் தூங்கினேன். சீக்கிரம் முழிப்பு வந்துருச்சு. நான் அப்பயே எழுந்துட்டேன். நீ அம்மா, அப்பாகிட்ட பேசினது கேட்டுச்சு. எனக்கே நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரியலையா அதான் நீ சொல்லிட்டு இருந்தப்ப குறுக்க வரலை. அதோட என்னால சட்டுனு எழுந்து வர முடியலை” என்றவன் “சொல்லு தனு எப்ப டாக்டர்கிட்ட போகணும்? ” எனக் கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு ஜீவாவிடம் எப்படி டாக்டர் சொன்ன விஷயத்தைச் சொல்வது எனத் தயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனே முன் வந்து மருத்துவமனை போவதை பற்றிக் கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டவள். மாத்திரை பற்றிச் சொன்னாள்.

“முதலில் டாக்டர் பேஷன்ட் பார்க்காம மாத்திரை தர மாட்டேன்னு தான் சொன்னார். நான் தான் நீங்க அப்படி மூச்சு விடும் போது பயமா இருக்கு சேப்டிக்காக மட்டும் ஒன்னு கொடுங்கனு வாங்கிட்டு வந்தேன். ரொம்ப நேரம் மாத்திரை தர மறுத்தவர். அப்புறம் திவ்யா அக்காவும் சொன்ன பிறகு ஒன்னும் மட்டும் வாங்குறாப்புல எழுதிக் கொடுத்தார். அதுவும் உங்களுக்கு அடுத்தத் தடவை மூச்சு திணறல் வந்தா உடனே டாக்டர்க்கிட்ட கூட்டிட்டு போகணும்னு கண்டிஷன் போட்டு தான் குடுத்தார். ஆனாலும் அவர் பவர் குறைந்த மாத்திரை தான் கொடுத்துருப்பார் போல” என்றவள், “நாளைக்குக் கூட அவரைப் பார்க்கப் போகலாம். நான் டாக்டருக்கு போன் போட்டு நாளைக்கு வரட்டுமானு கேட்குறேன்” என்றாள்.

“ம்ம் சரி” என்றவன், “அப்படியே ஆனந்துக்கு போன் போட்டு வர சொல்லு தனு. அவன்கிட்ட வேற கோபப்பட்டுட்டேன். வேற நம்பர் கொடுத்தானா? ” எனக் கேட்டான்.

“அவர் பிரண்ட் நம்பர் கொடுத்தார். வர சொல்றேன்” என்றவள். “உங்களைக் கேட்காம நான் டாக்டரை பார்த்து பேசினதுக்கு உங்களுக்கு எதுவும் என் மேலே கோபமா? ” எனத் தயங்கிய படியே கேட்டாள்.

தனு அப்படிக் கேட்டதும் அவளை வாஞ்சையுடன் பார்த்த ஜீவா “கண்டிப்பா இல்லடா தனு. நீ என் நல்லதுக்குத் தானே செய்த? அதுவும் இல்லாம உன் மேல இதுக்குக் கோபப்பட்டா நான் மனுஷனே இல்ல” என்றான் அவளை நன்றாகப் புரிந்து கொண்ட மனதுடன்.

ஜீவாவின் புரிதலில் தனுவுடன் சேர்ந்து அவர்கள் பேசுவதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவின் பெற்றோர்க்கும் நிம்மதி பிறந்தது.

அறிவழகனும் தமிழரசியும் ஜீவாவிடம் பேசுவதற்கு உடனே சம்மதித்து விட்டாலும் அவர்களுக்கும் ‘அவன் எப்படி எடுத்துக்கொள்வானோ?’ எனச் சிறிது தயக்கம் இருக்கத் தான் செய்தது. ஏன்னென்றால் ‘டிப்ரஷன் நிலையில் அவன் மனம் எப்படி? என்ன யோசிக்கிறதோ?’ என நினைத்தார்கள். ஆனால் யாருக்கும் கஷ்டம் தராமல் ஜீவா புரிந்து கொண்டு சம்மதம் சொன்னது. தங்கள் மகன் என்றும் நல்லவன் தான் எனப் பெற்றவர்களின் மனம் நிறைவைக் கொண்டது.

ஜீவாவின் சம்மதம் கிடைத்ததும் தனு சந்தோஷத்துடனே மருத்துவருக்கும், ஆனந்திற்கும் போன் பண்ண சென்றாள்.

தனு தள்ளி நின்று போன் பேசிக் கொண்டியிருக்க, இங்கே ஜீவா “சாரிமா, சாரிப்பா நிறையத் தப்புச் செய்துட்டேன்” என இருவரிடமும் மன்னிப்புக் கேட்டான்.

“பரவாயில்லை விடு ஜீவா. ஆனா இனியாவது உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. தனு எங்ககிட்ட சொன்னதைக் கேட்டீல? நீ மனசு விட்டு பேசாம இருந்தது எவ்வளவு பெரிய பிராபளம்ல கொண்டு வந்து விட்டுருச்சு பாரு? ”

“தனு பொறுமையா போனது நாளா இதோட போய்ருச்சு. இல்ல அவளும் வேற மாதிரி யோசிச்சிருந்தா குடும்பமே உடைஞ்சிருக்குமே. அதுவும் இப்ப எல்லாம் சின்ன விஷயத்திருக்கும் டிவோர்ஸ் வாங்குற காலமா ஆகிருச்சு. அப்படி எதுவும் இல்லாம அவ எப்படிப் பொறுமையா இருந்துருக்கா பாரு. அதோட அவ உன்கிட்ட கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிருந்தா? அது நம்ம எல்லாருக்கும் எவ்வளவு வேதனைல கொண்டு வந்து விட்டுருக்கும். அப்படி எதுவும் செய்யாம நம்ம எல்லாருக்கும் நிம்மதியை தந்திருக்கா. தனு நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு நாம குடுத்து வைச்சிருக்கணும்” என்றார் அறிவழகன்.

அவர் அப்படிச் சொன்னதும் திரும்பி தனுவை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்த ஜீவா தன் தந்தையிடம் “ஆமாப்பா இப்ப எனக்குப் புரியுது. இனி நிச்சயம் என்னை நான் மாத்திக்குவேன்” என்றான்.

“ஏன் ஜீவா மனநல டாக்டர்கிட்ட போறது உனக்கு எதுவும் கஷ்டமா இருக்கா?” எனக் கேட்டார் அரசி.

“ம்ம் முதலில் டாக்டர் பத்தி தனு சொன்னதை உள்ளே இருந்து கேட்டபோது ஒரு மாதிரி இருந்துச்சுமா. ஆனா எப்ப தனுவை கை நீட்டுற அளவு போய்ட்டேனோ இனியும் நான் சும்மா இருந்தா என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும். அதனால முழு மனசா தான் டாக்டர்கிட்ட போகச் சம்மதம் சொன்னேன்” என்றான் போன் பேசிவிட்டு வந்த தனுவை பார்வையால் தழுவிக்கொண்டே.

அவன் சொன்னதைக் கேட்டு மூவருக்கும் மனதில் நிம்மதியுடன், இனி எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.


மாலையில் வீட்டிற்கு வந்த ஆனந்த் தன் அண்ணன் அண்ணி இருவர் கையிலும் இருந்த கட்டை பார்த்து அதிர்ந்து போனான்.

பின்பு வேகமாகச் சோபாவில் அமர்ந்திருந்த தன் அண்ணனின் முன்பு வந்து நின்றவன், “என்ன அண்ணா இது? என்ன செய்து வைச்ச? இப்படி இரண்டு பேரும் கட்டு போட்டுகிற அளவுக்கு?” எனக் கோபமாகக் கேட்டான்.

கட்டை பார்க்கவுமே ஜீவா தான் இதற்குக் காரணம் எனப் புரிந்திருந்தான். அவன் தான் அதிகாலையில் ஜீவாவின் கோபத்தை நேரில் கண்டவன் ஆயிற்றே?

ஆனந்த் அப்படிக் கேட்கவும் குற்றம் செய்தவன் போல ஜீவா பதில் சொல்ல கூட முடியாமல் அமர்ந்திருக்க, “என்ன அண்ணா சொல்லு. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்றான் இன்னும் கோபம் குறையாமல்.

அவன் கோபம் கூடும் முன் அவன் முன் வந்த தனு “ஆனந்த் விடுங்க! இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்? அமைதியா இருங்க சொல்றேன்” என்றாள்.

“என்ன அண்ணி என்ன சொல்ல போறீங்க? இவன் கோபமா இருக்கான்னு தெரிஞ்சும் உங்களை அப்படியே விட்டுட்டுப் போனது என் தப்புதான். அப்பயே அம்மாவுக்கு நான் சொல்லிருக்கணும். தப்புப் பண்ணிட்டேன்” என்றான் வருத்தமாக.

அப்போது வெளியே சென்றிருந்த அறிவழகனும், தமிழரசியும் உள்ளே நுழைய “என்னடா என்ன சொல்ல போற என்கிட்ட?” எனக் கேட்டபடியே உள்ளேயே வந்தார் தமிழரசி.

அவர் இங்கே வந்தது தெரியாதவன் “என்னமா நீங்க எப்ப வந்தீங்க? ” எனத் திகைத்துப் போய்க் கேட்டான்.

“நாங்க காலையிலேயே வந்துட்டோம். அது சரி நீ ஏன் அவ்வளவு கோபமா பேசின? சத்தம் கதவுக்கு வெளியே கேட்குது. ஒருத்தன் கோபப்பட்டு ஆடியே வீடே ஒரு ஆட்டம் ஆடிருக்கு. இப்ப நீயும் எதுக்குக் குதிக்கிற?” எனக் கேட்டார்.

“என்னது காலைலேயே வந்துடீங்களா? என்கிட்ட சொல்லலை?” எனத் தனுவை பார்க்க “நீங்க இங்க வந்து தெரிஞ்சுக்கிட்டும் சொல்லலை” என்றாள் அவள்.

“ஓ” என்றவன் தன் தந்தையைப் பார்க்க, அவர் அவனை முறைத்துக் கொண்டிருந்தார். ‘என்ன இது அப்பா எதுக்கு என்னை முறைக்கிறார்?’ என நினைத்தவன், “என்னப்பா? ” என மெதுவாகக் கேட்டான்.

“ஹ்ம்ம் என் மகன்களுக்கு இவ்வளவு கோபம் வருமான்னு ஆச்சரியமா பார்க்கிறேன்” என்றார் சிறு எரிச்சலுடன்.

“அதுப்பா இரண்டு பேரையும் இப்படிப் பார்க்கவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் ஸாரிப்பா” என்றான்.

“சரி சரி அமைதியா என்ன நடந்துச்சுன்னு முதலில் தெரிஞ்சுக்கோ” என்றவர் சோபாவில் போய் அமர்ந்தார்.

தனுவை பார்த்த ஆனந்த் “நான் போன பிறகு என்ன நடந்துச்சு அண்ணி” என மெதுவாகக் கேட்டான்.
தனு நடந்ததை அவனிடம் சொல்ல ‘ஹோ’ எனச் சில நிமிடங்கள் அவனும் திகைத்து நின்றவன், பின்பு ஜீவாவின் அருகில் சென்று அமர்ந்து “சாரிண்ணா! நீ டிப்ரஷனால தான் அப்படி இருந்தேன்னு தெரியாம நான் வேற வந்ததும் கத்திட்டேன்” என மன்னிப்பு கேட்டான்.

“டேய்! உன் மேல ஒரு தப்பும் இல்லை. நான் தான் உன் மேல கோபப்பட்டுப் போனை வேற போட்டு உடைச்சிட்டேன் நான் தான் ஸாரி கேட்கனும்” என்ற ஜீவா “ஸாரிடா” என்றான்.

“ஹய்யோ! போன் போனா போகுதுண்ணா. நீ என்கிட்ட ஸாரி கேட்காத” என்றான் ஆனந்த்.

இரண்டு பேரும் மாறி மாறி ஸாரி கேட்க “இப்ப இரண்டு பேரும் பேசாம இருக்கப் போறீங்களா இல்லையாடா?” என ஒரு அதட்டல் போட்டார் அரசி.

அவரின் அதட்டலில் கப்சிப் என அந்த இடம் அமைதியாக, ஆனந்த் வேகமாகத் தன் கன்னத்தை மறைத்துக் கொண்டான்.

அவன் ஏன் அப்படிச் செய்கிறான் எனப் புரியாமல் அரசி பார்க்க, ஜீவா புரிந்து கொண்ட பாவனையில் சிறிது சத்தமாகச் சிரித்தான்.

அவன் அப்படிச் சிரிக்கவும் தனுவும்,அரசியும் வாஞ்சையுடன் அவனைப் பார்த்தார்கள்.

அறிவழகன் “எதுக்கு ஜீவா சிரிக்கிற? நீ ஏண்டா கன்னத்தில் கை வைச்சுக்கிட்டு நிக்கிற?” என இன்னும் புரியாமல் கேட்டார்.

“அப்பா எனக்கு அம்மாவை பார்த்தா பயமா இருக்குப்பா” என்றான் ஆனந்த் இன்னும் கையைக் கன்னத்தில் இருந்து எடுக்காமல்.

“என்னடா எதுக்குப் பயம்?” எனக் கேட்டவர் “முதல கையைக் கீழே போடு” எனச் சொன்னார்.

“நான் கையை எடுத்ததும் அம்மா அடிச்சுட்டா?” என்றான் பயந்தது போல.

அப்போது தான் அரசிக்கும் அவன் செய்ததின் காரணம் புரிந்தது போல “படவா உன்னை” என அடிக்கப் போவது போல எழுந்து வந்தார்.

“என்னை விட்டுருங்கம்மா நான் பாவம்” என ஓடுவது போல நடித்தான்.

அவனின் விளையாட்டில் சிறிது நேரம் அந்த இடமே சிறிது கலகலப்பாகியது.

அனைவரும் முகத்திலும் சிறிது புன்னகை குடிபெயர்ந்தது.

சிறிது நேரம் அப்படியே சென்றிருக்க, பின்பு ஆனந்த் தன் அம்மா அப்பாவிடம் “அண்ணனுக்காக நாளைக்கு மனநல டாக்டரை பார்க்க போறதில் உங்களுக்கு எதுவும் வருத்தமா இருக்கா அம்மா? அப்பா நீங்க என்ன நினைக்கிறீங்க?” என இருவரையும் பார்த்து கேட்டான்.

அவன் அப்படிக் கேட்கவும் எல்லோரின் முகத்திலும் சோகம் இழையோட ஆரம்பித்தது.

பின்பு “எப்படி வருத்தம் இல்லாம இருக்கும் ஆனந்த்? இப்ப கூட உங்க அம்மா ஒரு மாதிரியா பீல் பண்ணின்னான்னு தான் அவளைக் கோவிலுக்குக் கூட்டிட்டு போய்ட்டு வர்றேன். கண்டிப்பா எங்க இரண்டு பேருக்குமே வருத்தம் இருக்கு. இல்லன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டோம். ஆனா இனி வருத்த பட்டு என்ன செய்யச் சொல்லு? ஜீவாவும் எதுவும் அவன் வேணும்னே செய்யலை. அவன் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சிருச்சு. ஆனா இப்ப அப்படி நடத்துக்கிட்டதுக்காக ரொம்பவே வருத்தப் படுறான். இதுக்கு மேல அவனையும் நாங்க என்ன சொல்ல முடியும்”

“டாக்டர்கிட்ட போய்க் கவுன்சிலிங் செய்தா தான் இது சரியாகும்னு நம்பிக்கை இப்ப வந்திருச்சு. இனிமே ஜீவாவும் திரும்ப இப்ப செய்த தப்பை செய்யாம இருக்கணும். அதோட அவன் உடம்பையும் பார்த்துக்கணும்னா அவன் இப்ப டாக்டரை பார்க்கிறது தான் நல்லதுன்னு நானும் உன் அம்மாவும் மனசை தேத்திக்கிட்டோம்” என்றார் அறிவழகன்.

“இப்ப இதுக்காக டாக்டர்கிட்ட போறதெல்லாம் பெரிய விஷயம் இல்லப்பா எல்லாம் சரி ஆகிடும் கவலைப்படாதீங்க” என அவர்களைச் சமாதானப் படுத்திய ஆனந்த், “நீயும் இதை நினைச்சு எதுவும் மனசை குழப்பிக்காதேணா” என்று ஜீவாவிடமும் சொன்னான்.

“எனக்கு ஒன்னும் இல்ல ஆனந்த். நான் அப்பவே தெளிஞ்சிட்டேன்” என்றவன் தன் அருகில் இருந்த தனுவை பார்த்து மென்னகை புரிந்தான்.

பதிலுக்குப் பூத்த தனுவின் புன்னகை அங்கிருந்த எல்லார் மனதிலும் நிறைவை தந்தது.