மனதோடு உறவாட வந்தவளே – 2

அத்தியாயம் – 2

எட்டு மாதங்களுக்கு முன்…

ஒரு வெள்ளி கிழமை மாலை நேரத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியே ரோட்டில் இரைச்சலாகச் சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்துக் கொண்டே தன் கையில் இருந்த சூடான காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் தனுஸ்ரீ.

அவள் நின்று கொண்டிருந்த இடம் சென்னையில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டின் அலுவலக அறையில்.

காபியைக் குடித்து முடித்து விட்டு தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து கணினியில் அன்றைய கணக்குவழக்குகளைச் சரிபார்க்க ஆரம்பித்தாள்.

அரைமணி நேரம் கடந்த நிலையில் தன் வேலையை முடித்துக் கணினியை அமர்த்திவிட்டு தன் விரல்களை நெட்டி முறித்தபடி நிமிர்ந்து மணியைப் பார்த்தாள்.

மணி ஐந்து முப்பது எனக் காட்டியது. அதைப் பார்த்து விட்டு மேஜை மீது வைத்திருந்த போனை தன் பேக்கில் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பத் தயாரானாள்.

அதே நேரம் அவள் இருந்த அலுவலக அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் சேகரன் தனுஸ்ரீயின் தந்தை.

ஆம்! அது அவர்களுக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் தான்.

“என்னம்மா உன் வேலையை முடிச்சிட்டியா?” எனக் கேட்ட சேகரனிடம்,

“ஆமாப்பா இப்போ தான் முடிச்சேன்” என்றாள்.

“சரிம்மா! அப்ப நீ கிளம்பு. மணி ஆறாகப் போகுது பார். இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குப் போய்ச் சேரும்மா. இல்லைன்னா உன் அம்மா என்னைத் திட்ட போறா” என அவர் சொல்லவும்,

“ஆமாப்பா! நீங்க அப்படியே அம்மாவுக்குப் பயந்தவர்தான்” என்று தன் தந்தையை மெல்லிய சிரிப்புடன் கேலி செய்தாள் தனுஸ்ரீ.

“ஸ்ஸ்! அந்த ரகசியத்தை வெளியில் சொல்லிடாதேம்மா!” என்று ரகசியம் பேசுவது போல மெல்லிய குரலில் பதில் கொடுத்த அப்பாவைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தவள்,

கதவின் அருகில் சென்று கொண்டே “இருங்கப்பா அம்மாகிட்ட வீட்டுக்குப் போனதும் சொல்றேன்” எனத் தந்தையைப் போலியாக மிரட்டியபடி அவருக்குப் பயந்தது போல் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே சென்றவள் திரும்பி லேசாகக் கதவைத் திறந்துப் பார்த்து “போய்ட்டு வர்றேன்ப்பா” என்றுவிட்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்துச் சிரித்தபடி “பார்த்துப் போம்மா!” என்ற சேகரனின் குரல் கதவிற்கு வெளியே காற்றில் தேய்ந்து ஒலித்தது.

உதட்டோரம் லேசாகப் பூத்த புன்னகையுடன் வந்தவளைப் பார்த்துச் சிரித்த பணியாளர்களுக்குப் பதில் புன்னகையைத் தந்து கொண்டே சூப்பர்மார்கெட்டின் வெளியே வந்தவள், பார்க்கிங்கில் இருந்த தன் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு செல்லும் வழியில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள்.

தனுஸ்ரீ இருபத்தி மூன்று வயதில் இருக்கும் நல்ல முக லட்சணம் அமைந்த மங்கையவள்.

தந்தை சேகரன் ஒரு மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தவர், மக்கள் மெது மெதுவாகச் சூப்பர் மார்க்கெட்டுக்கு மாறத் தன்னுடைய கடையையும் சிறிது சிறிதாக மாற்றி அமைத்தவர், இப்பொழுது அனைத்து அங்காடி பொருட்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாம் கிடைக்கும் வகையில் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டாக உயர்த்தி விட்டார். அதற்காக வாங்கிய வங்கி கடனையும் சமீபத்தில் தான் அடைத்தார்.

இப்போது மகளும் கூட வந்திருந்து கணக்குவழக்குகளைப் பார்ப்பது அவருக்கு உதவியாக இருந்தது.

தனுஸ்ரீயின் அன்னை சங்கரி இல்லத்தரசியாக இருக்கின்றார். அவளிடம் வம்பு வளர்க்கவும், அதற்குக் குறையாத பாசம் காட்டவும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி தருணும் இருக்கிறான்.

இது தான் தனுஸ்ரீயின் அன்பான குடும்பம். அவர்களின் வீடு பாசக்கூட்டினால் பின்னப்பட்டிருந்தது. ஒருவரின் மீது ஒருவர் பாசம் வைப்பதில் யாரும் குறைந்தவர்கள் இல்லை.

அதுவும் தனுஸ்ரீக்குக் கூடுதல் பாசம் என்று தான் சொல்ல வேண்டும் அவனின் தம்பியும் அதில் அடக்கம்.

தருணும் அக்காவிடம் சண்டை போடுவான், வம்பிளுப்பான், போட்டி போடுவான். ஆனால் அவளுக்கு ஒன்றென்றால் தாங்கமாட்டான்.

தனுஸ்ரீ M.Sc கணக்குப் பிரிவில் படித்து முடித்த கையோடு வீட்டில் சும்மா பொழுதுப்போக்க விருப்பம் இல்லாமல் இந்த ஒரு மாதமாகத் தங்களின் சூப்பர் மார்க்கெட்டின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மென்மையும், அமைதியும் மட்டும் இல்லாது தேவையான நேரத்தில் துணிந்து செயல்படத் தயங்காதவள். வீட்டு ஆட்களுடனும், நெருங்கிய தோழிகளிடமும் நன்றாக வாயடித்துக் கேலி பேசி விளையாடினாலும் வெளி ஆட்களுடன் அளவோடு தான் பேசி பழகுவாள்.

சங்கரிக்கு தன் மகள் தந்தைக்கு உதவியாகச் செல்வது பிடித்திருந்தாலும் ஏழு மணிக்குள் அவள் வீட்டுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அன்னையின் மனதை புரிந்து கொண்டு தனுஸ்ரீயும் நேரமே வீடு சென்றுவிடுவாள். அவளின் வீடு சூப்பர்மார்க்கெட்டில் இருந்து அரைமணி தூர பயணத்தில் இருந்தது.

வீடு நோக்கி சென்று கொண்டிருந்த தனுஸ்ரீ அந்தத் தூரத்தை பாதிக் கடந்து வந்து கொண்டிருந்த போது, அவளின் மீது எதிர்பாராவிதமாக வேகமாக ஏதோ வந்து தாக்கியது போலக் கையை உதறியவள், நிலை தடுமாறி வண்டியில் இருந்து விழப்போய்த் தன்னிச்சை செயலாக வண்டியை கீழே போட்டுவிட்டுத் துள்ளிக்குதித்துக் காலை ஊன்றி நிற்க முயன்றாள். ஆனால் அது முடியாமல் சாய்ந்து விழுந்தாள்.

விழுந்த அதிர்ச்சியில் இருந்து சில நொடிகளுக்குப் பிறகு தெளிந்து எழுந்து தான் விழுந்தற்கான காரணத்தைத் தேடினாள்.

அவளைத் தாக்கி விட்டு சிறிது தூரம் தள்ளி விழுந்து கிடந்தது ஒரு கிரிக்கெட் பந்து. அது நல்ல கல் போன்று இருந்ததால் அவளின் இடது தோள்பட்டையைப் பதம் பார்த்திருந்தது அந்தப் பந்து.

அந்த வழியில் சென்று கொண்டிருந்தவர்கள் அவள் விழுந்ததைப் பார்த்து உதவிக்கு ஓடிவந்தனர்.

வலியை முகத்தில் தாங்கி கண்கலங்கி வண்டியின் அருகில் நிலைகுலைந்து நின்றிருந்தவளின் அருகில் வந்தவர்கள் “என்னச்சும்மா எங்கே அடிப்பட்டது?” என விசாரித்தனர்.

அவளின் நிலைக்குக் காரணமானச் சாலையோரத்தில் இருந்த காலியிடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவளுக்கு அடிப்பட்டதும், ஆட்கள் திட்டுவார்களோ என்ற பயத்தில் தன் இல்லங்களை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தனர்.

அதைப் பார்த்து ஓரிருவர் அவர்களைத் திட்டுவதும், தனுஸ்ரீக்கு உதவுவதுமாகச் சிறிது நேரத்தில் அந்த இடத்தில் சிறு கூட்டம் கூடியது.

வண்டியைத் தூக்கி நிறுத்தி அவளுக்குத் தண்ணீர் கொடுத்து உதவி செய்து அவளால் தனியாக வீட்டிற்குச் செல்ல முடியுமா? என்று விசாரித்து, அவளால் முடியும் என்று சொன்னதும் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றார்கள்.

தோளில் வலி அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் தன்னால் சமாளித்து விட முடியும் என்று உறுதியாக நம்பியவள் வலியை பொறுத்துக் கொண்டு மெதுவாக வண்டியை ஓட்டியபடி வீட்டிற்குச் சென்றாள்.

அவளின் வண்டி சத்தம் கேட்டு கதவை திறந்த சங்கரி, மகளையே பார்த்தபடி வாசலில் நின்றிருந்தவருக்கு, அவளிடம் தெரிந்த வித்தியாசம் உரைக்க, “என்னடி தனு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி வர?” என்று கேட்டுக் கொண்டே பதறியபடி வாசலுக்கு ஓடினார்.

வண்டியைக் கஷ்டப்பட்டு நிறுத்தி மெல்ல நடந்து வந்தவள் அன்னையை எதிர் கொண்டு “ஒன்னும் இல்லம்மா. பதறாம உள்ள போங்க சொல்றேன்” அன்னையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று உள்ளே அமர்ந்து நடந்ததைச் சொல்ல, பதறிப் போனார் சங்கரி.

“என்னடி சொல்ற? வா, வா! உள்ளே போய் முதல்ல கைக்கு என்னாச்சுனு பார்ப்போம்” என்று பதட்டமாக அறைக்கு அழைத்துச் சென்று அவளின் அடிபட்ட இடத்தைப் பரிசோதிக்க, தோளில் ரத்தம் கட்டியது போலச் சிவப்பாக இருந்தது.

அதைப் பார்த்ததும் சட்டெனச் சங்கரிக்குக் கண்கள் கலங்கி விட்டது. “என்னடி இப்படிச் சிவந்துருக்கு? நீ இப்படி அமைதியா இருக்க?” என்று கண்கலங்க கேட்டார்.

ஆம்! அவ்வளவு அமைதியாக அமர்ந்திருந்தாள் தனு. வலி இருக்கிறது என்று அவளின் முகச் சுழிப்பை வைத்துத் தான் கண்டு கொள்ள முடியும். அந்தச் சுழிப்பை தவிர அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.

சங்கரி கேள்வி கேட்கவும் “என்னம்மா செய்ய? எனக்கு ரொம்ப வலிக்குது. ஆனா நான் ஆர்ப்பாட்டம் பண்ணாமயே உங்க கண்ணு எல்லாம் கலங்கிருச்சு. இதுல நான் வேற வலிக்குதுனு சொல்லி, நீங்க இன்னும் அழுக ஆரம்பிச்சுட்டா என்ன செய்றது?” என்று அன்னையைச் சகஜமாக்க கேலி போலக் கேட்டாள்.

“வலிக்குதுனா வலிக்குதுன்னு சொல்லுடி. அதை விட்டு என்னையே கேலி பண்ணறா” என்றார் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டே.

“அம்மா! ரொம்ப வலிக்குது. போங்க! போய் எனக்கு மருந்து ஏதாவது எடுத்துட்டு வாங்க. ஆனா அழக் கூடாது” என்று சிறிது கண்டிப்பு போலச் சொல்ல… அவள் வலிக்குது என்ற குரலிலேயே அவளின் வலியை உணர்ந்த சங்கரி அதற்கு மேல் அவளிடம் எதுவும் வழக்காடாமல் மருந்து எடுத்து வர வெளியே சென்றார்.

முதலில் ஐஸ் கட்டியை எடுத்து வந்து ரத்தம் கட்டியிருந்த இடத்தில் வைத்து வீக்கம் வராமல் இருக்கச் செய்தவர், பின்பு ஒரு தைலத்தைத் தேய்த்தார்.

அவர் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே காரின் சத்தம் கேட்டது. தனு கேள்வியாக அன்னையைப் பார்க்க, “அப்பாவை நான் தான் வர சொன்னேன்” என்றார் அவர்.

“ஏன்மா? எனக்கு ஒன்னும் இல்லை. அதுக்குள்ள எதுக்கு வர சொன்னீங்க?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “தனுமா! என்னாச்சுடா?” என்று கேட்டபடி வேகமாக உள்ளே வந்தார் சேகரன்.

தனுவின் அருகில் வந்தமர்ந்தவர் அவளின் தலையை வருடிக் கொண்டே “வலிக்குதாடா?” எனக் குரலில் மெல்லிய தடுமாற்றத்துடன் கேட்டார்.

அவரின் குரலில் இருந்த தடுமாற்றத்தை உணர்ந்து கொண்ட தனு அவரைச் சமாதானப் படுத்துவது போல் மென்மையாகப் புன்னகைத்து “ரொம்ப இல்லைப்பா. நீங்க கவலைபடாதீங்க” என்று தன் வலியை மறைத்துக் கொண்டு சொன்னாள்.

என்னதான் அவள் மறைத்தாலும் பிள்ளைகளின் வலியைப் பெற்றவர்கள் உணராமல் போவார்களா என்ன? அவரும் உணர்ந்து கொண்டார்.

ஆனாலும் அவர் அவள் வலியைப் போக்கமுடியாதே? அதனால் அவளின் தலையை மெதுவாக வருடிய படி இருந்தவர் மனதில் தோள்பட்டையைப் பதம் பார்த்த பந்து கொஞ்சம் கீழிறங்கி இதயப் பகுதியில் பட்டிருந்தால், நினைத்துப் பார்க்கவே அவருக்கு நெஞ்சம் பதறியது.

சிறிது நேரத்தில் தன்னைச் சமாளித்துக் கொண்டவர் “கவனமா வந்திருக்கக் கூடாதாம்மா? இப்ப பாரு உனக்குத் தான் வலி” என்றார்.

“ஆமா அக்கா பார்த்து வர வேண்டியது தான? இப்படி அடி பட்டு வந்துருக்க?” என்று தமக்கையைக் கடிந்து கொண்டே அறைக்குள் வந்தான் தருண்.

“நான் பார்த்துத் தான் வந்தேன். விளையாடிட்டு இருந்த பந்து சரியா என்மேல விழும்னு எனக்கு எப்படித் தெரியும்? எனக்கு இப்போ வலிக்கலைபா. எனக்கு வலிக்கலை தருண். போ! போய்ப் படி! அம்மா உன்னையும் டியூசன்ல இருந்து பாதிலேயே வர வச்சுட்டாங்க போல” என்று அனைவரையும் சமாளித்து அவர்கள் வேலையைப் பார்க்க அனுப்பினாள்.

“ஆமா இப்போ எல்லாம் விளையாட்டு தான் வினையா உயிருக்கே உலை வைக்கும் நிலைக்குப் போய்கிட்டு இருக்கு. நாமதான் கவனமா இருக்க வேண்டிருக்கு” என்று புலம்பிய படியே சாப்பாடு தயார் செய்ய அங்கிருந்து சென்றார் சங்கரி.

பிள்ளைகளைச் சாப்பிட வைத்து அவர்கள் படுக்கச் சென்றதும், தன் வேலைகளை முடித்துக் கொண்டு வந்த சங்கரி, சேகரன் இருந்த இடத்திற்கு வந்தார்.

“தனு தூங்கிட்டாளா?” என்று விசாரித்த சேகரிடம் “தூங்கிட்டாங்க” என்றவர், “அவகிட்ட இன்னைக்குக் கல்யாண விசயம் பேசலாம்னு நினைச்சோம் அதுக்குள்ள இப்படி அடிபட்டு வந்திருக்காளே?” என வருத்தத்துடன் சொன்னார்.

“அதுக்கு என்னம்மா பண்ண முடியும்? இன்னிக்கு இது அவளுக்கு நடக்கனும்னு இருந்திருக்கு நடந்துருச்சு. விடு! காலையில் அவகிட்ட பேசலாம். இப்ப தூங்குவோம்” என்று விட்டு சேகரனும் சங்கரியும் தூங்க சென்றனர்.


அதே வெள்ளிக்கிழமை அந்தி மாலைவேளையில் அன்றைய பொழுதின் வெயிலின் தாக்கம் குறைந்ததும் மெல்ல ஒளிவீச ஆரம்பித்த நிலவுமகள் இனி இரவு முழுவதும் என் ஆதிக்கம் என்று சூரியனுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டு சந்தோசத்துடன் தலைகாட்ட ஆரம்பித்த நேரத்தில் வாகன இரைச்சல் நிறைந்த அந்தச் சாலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் ஜீவரஞ்சன்.

ஜீவரஞ்சன் MCA படித்து விட்டுச் சென்னையில் இருக்கும் பெயர்பெற்ற கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மூன்று வருடமாக வேலை பார்த்து வருகின்றான்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஐ.டி. துறையில் இருந்தாலும் எந்த வித கெட்ட பழக்க வழக்கங்களும் அற்றவன். தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் கேலி செய்தாலும் கூடத் தன் மனக் கட்டுப்பாடை இழக்காத சுய ஒழுக்கம் நிறைந்த இருப்பத்தி ஏழு வயது இளைஞன்.

தன் நண்பர்கள் குடியை நாடிச் சென்றால் அதில் உள்ள தீமைகளை எடுத்து சொல்லி நல்வழி படுத்தும் எண்ணமுடையவன் தான் அவன்.

எந்த மனிதனுமே நூறு சகவிகிதம் பெர்பெக்ட் என்று சொல்ல முடியாது இல்லையா?

நிறை ஒன்று இருந்தால் குறை என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும். குறை இல்லாத மனிதன் உலகில் இல்லையே?

ஜீவரஞ்சனுக்கும் குறைகள் உண்டு. அது அவனின் அமைதியான குணம் தான். அநாவசிய அலட்டல்கள், வளவள பேச்சுக்கள் எதுவும் அவனிடம் இருக்காது. அவனாக எதுவும் சொல்ல வேண்டி இருந்தால் மட்டுமே பேசும் குணம் உடையவன்.

அதோடு தன்னைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, இல்லை மனது சரியில்லை என்றாலோ கூட அவ்வளவு சீக்கிரம் வாய்விட்டு சொல்லிவிடமாட்டான்.

வழக்கத்தை விட அமைதியாகவோ, சோர்வாகவோ, பதட்டமாகவோ இருந்தால் அவனின் முகத்தைப் பார்த்தே அவனின் நிலையைப் புரிந்து கொள்வார் அவனின் அன்னை.

சிறுவயதில் இருந்து தானாகவே ஏற்பட்ட பழக்கம் இன்றைக்கு வரை அதுவே அவனோடு ஒட்டிக்கொண்டு தொடர்கின்றது.

சில பழக்கத்தை என்னதான் மாற்ற நினைத்தாலும் மாற்ற முடிவதில்லை. வளர, வளர அதை அவனின் இயல்பாகப் பெற்றோரும், சகோதரனும் பழகிக் கொண்டார்கள்.

இப்பொழுது தன் வாகனத்தில் ஜீவா சென்று கொண்டிருப்பது புதுச்சேரிக்கு. அது தான் அவன் பிறந்து வளர்ந்த ஊர்.

அங்கே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேனேஜராக இருக்கும் தந்தை அறிவழகனும், இல்லத்தரசியாக அன்னை தமிழரசியும், கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தம்பி ஆனந்தும் இருக்கின்றார்கள்.

ஜீவா மட்டும் வேலைக்காகச் சென்னையில் இருக்கின்றான். சென்னையில் அவனுக்கு என்று ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தாலும் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மாலைக்கு மேல் புதுச்சேரிக்கு கிளம்பி விடுவான்.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் குடும்பத்துடன் இருந்து விட்டுத் திங்கள்கிழமை அதிகாலையில் கிளம்பி நேராக அலுவலகத்திற்கே சென்றுவிடுவான்.

மாலையும் இரவும் கலந்த அந்தப் பொழுதின் இதமான வானிலை போல இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜீவரஞ்சனின் மனமும் ஜில்லென்று இதமாகச் சந்தோசத்தில் மிதந்தது.

காரணம் அவன் குழுவினர் செய்த பிராஜெக்ட் நல்லவிதமாக வெற்றி பெற்று மேலிடத்தில் நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு அவனின் பங்கு அதிகம் என்பதால் மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும்?

அதைவிட அவனின் சந்தோசத்திற்குக் கூடுதல் காரணம் மூன்று வருட கடின உழைப்பின் பலனாக டீம் லீடராகப் பதவி உயர்வு பெற்றிருக்கின்றான். தன் வேலையில் அவனின் உயர்வு அவனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருந்தது.

அந்தச் சந்தோசத்துடனே பத்துமணி அளவில் தன் வீட்டை அடைந்தான். அழைப்பு மணியை அழுத்தியவனுக்குக் கதவைத் திறந்து வரவேற்றார் அந்த வீட்டின் அரசி தமிழரசி.

“வா ஜீவா!” என்று அவனை அழைக்கும் போதே மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷ மாற்றத்தைக் கவனித்து விட்டார் அரசி. ஆனால் அதையும் மீறிய களைப்பு அவனிடம் தெரியவும் வேறு எதுவும் கேட்காமல் “போய்க் கை காலை கழுவிட்டு வா ஜீவா சாப்பிடலாம்” என்றார்.

“இதோம்மா குளிச்சுட்டே வந்துடுறேன்” என்று தன்னுடைய அறைக்கு விரைந்தான் ஜீவா. குளித்துவிட்டு வந்து சாப்பாடு மேஜையின் முன் வந்தமர்ந்தவன், “அப்பா, ஆனந்த் எல்லாம் எங்கேம்மா?” என்று கேட்டான்.

“அப்பா தூங்க போய்ட்டார். ஆனந்த் உள்ளே படிச்சுகிட்டு இருக்கான். நீ வந்ததை இன்னும் கவனிக்கலை போல. வருவான் நீ சாப்பிடு!” என்றவர் அவனுக்குச் சப்பாத்தியை வைத்துப் பட்டாணி குருமாவை ஊற்றினார்.

“சரிம்மா! நீங்க எல்லாரும் சாப்டீங்களா?”

“சாப்பிட்டோம் ஜீவா. நீதான் நாங்க லேட்டா சாப்பிட்டால் திட்டுவியே. அதுனாலயே வழக்கமா சாப்பிடுற நேரத்தில் சாப்பிட்டோம்” என்றார் மகனை விட்டுவிட்டு தான் மட்டும் முன் கூட்டியே சாப்பிட்டுவிட்ட ஆதங்கம் குரலில் தெரிய.

அவரின் ஆதங்கத்தை உணர்ந்த ஜீவா மெல்லிய சிரிப்புடன் “பின்ன என்னம்மா? நான் எப்பவும் நேரத்தோட வரமுடியாதே? இன்னைக்குச் சீக்கிரம் ஆபீசில் இருந்து கிளம்பினதால இந்த டைமுக்கு வந்துட்டேன். இல்லைனா இன்னும் நான் வர நேரம் ஆகிருக்கும்.

அதுவரைக்கும் நீங்க எனக்காகக் காத்திருக்க வேணாம்னு தான் சொன்னேன். இல்லைனா நீங்க எனக்காகக் காத்திருப்பீங்கனு நான் வேகமாக வண்டி ஓட்ட வேண்டியிருக்கும்” என்றான் தாய் எதற்குப் பயப்படுவார் என்று தெரிந்தே கள்ள சிரிப்புடன்.

அவனின் கள்ள சிரிப்பை கண்டுக்கொண்டவர் “போடா! சேட்டை!” என்று செல்லமாக அதட்டிவிட்டு அவன் தட்டில் காலியாகி இருந்த குருமாவை வைத்துக் கொண்டே “எங்களுக்காக நீ ஒன்னும் வேகமாக வண்டி ஓட்டிடு வர வேணாம். மெதுவாவே வா!” என்றார்.

“சரிமா கவலைப்படாதீங்க நான் கவனமாதான் வருவேன்” என்று தன் அன்னையைச் சமாதானப் படுத்தினான்.

“சரி! அது எல்லாம் இருக்கட்டும். என்ன விசயம் உன் முகத்தில ஏதோ சந்தோசம் தெரியுற மாதிரி இருக்கே?” என்று விசாரித்தார்.

அவரிடம் தன் அலுவலகப் பிராஜெக்ட் விசயத்தையும், பதவி உயர்வையும் சொன்னவன் தன் மகிழ்ச்சியை அன்னையுடன் பகிர்ந்து கொண்டான்.

“ரொம்பச் சந்தோசம் ஜீவா” என்று புன்னகைத்தவர் தன் வாழ்த்தை சொல்லி அவன் மகிழ்வில் பங்கெடுத்துக் கொண்டார்.

ஜீவா சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருந்த போது “நானும் உன்கிட்ட ஒரு சந்தோசமான விசயம் சொல்லனும்ப்பா” என்று ஆரம்பித்தார் அரசி.

“சொல்லுங்கம்மா!” என்று ஜீவா கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களின் பேச்சுக்கிடையே “ஹாய் அண்ணா!” என்ற உற்சாகமான ஆனந்தின் குரல் குறுக்கிட்டது.

அன்னையின் பேச்சை மறந்து ஆனந்தின் புறம் திரும்பினான் ஜீவா.

அரசியும் சரி காலையில் நிதானமாக விசயத்தைச் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியானவர் தன் மகன்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்.

“எப்போண்ணா வந்த? சாப்பிட்டியா?” என்று கேட்ட படி அருகில் வந்தான்.

“சாப்பிட்டேன். இரு வர்றேன்” என்று போய்க் கைகழுவி விட்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.

ஆனந்த் கடைசி வருடம் MBA படித்துக் கொண்டிருக்கின்றான். தன் அருகில் வந்தமர்ந்த ஆனந்திடம் அவனின் படிப்புச் சம்மந்தமாக விசாரிக்க ஆரம்பித்தான் ஜீவா.

“என்னடா எப்படிப் போகுது உன் ப்ராஜெக்ட்?”

“நல்லா போகுதுண்ணா. நாளைக்குக் கூட ஒரு செமினார் இருக்கு. அது சம்பந்தமா தான் இப்போ தயார் செய்துட்டு இருந்தேன்” என்றான் ஆனந்த்.

“சரிடா நல்லா பண்ணு” என்றவன் தம்பியின் தோளை தட்டிக் கொடுத்தான்.

“சரிண்ணா” என்ற ஆனந்த், “அம்மாகிட்ட ஏதோ சொல்லிட்டு இருந்தண்ணா என்ன விசயம்?” எனக் கேட்டான்.

அவன் கேட்கவும் தன் அலுவலக விசயத்தைத் தம்பியிடமும் பகிர்ந்து கொண்டான் ஜீவா. ஆனந்தின் முகமும் சந்தோசத்தில் நிறைய “வாழ்த்துக்கள் ண்ணா” என்றான்.

அவனின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டு ஜீவா தன் நன்றியை சொன்னான்.

அப்பொழுது சமையலறையை ஒதுங்க வைத்து விட்டு அங்கே வந்த தமிழரசி,

“சரிப்பா பேசினது போதும் தூங்க போங்க. காலையில் பேசலாம். உனக்கு வண்டி ஓட்டினது அலுப்பா இருக்கும்” என்றார்.

“சரிம்மா” என்றவர்கள்,

ஒருவொருக்கொருவர் “குட்நைட்” சொல்லிவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றனர். தமிழரசியும் விளக்கு, கதவு எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு தூங்க சென்றார்.

அறைக்கு வந்து தன் படுக்கையில் விழுந்த ஜீவாவிற்குத் தன் அன்னை எதுவோ சொல்ல வந்தது அப்பொழுது தான் ஞாபகத்திற்கு வந்தது.

‘சரி காலையில் கேட்டுக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டே நித்திரையைத் தழுவினான் ஜீவரஞ்சன்.