மனதோடு உறவாட வந்தவளே – 15

அத்தியாயம் – 15

அறையினுள் வேகமாக நுழைந்த ஜீவா தன் கட்டுப்போட்ட கையை மேசைமீது ஓங்கி ஒரு அடி அடித்திருந்தான். அந்தச் சத்தம் கேட்டு உள்ளே வந்த தனு கத்திய கத்தலில் மீண்டும் ஒருமுறை அடிக்கப் போனவனின் கைகள் அப்படியே நின்றன.

அவனின் அருகில் ஓடி வந்தவள் அவனின் கையைப் பார்க்க கட்டையும் மீறி ரத்தம் கசிய தொடங்கியிருந்தது. அதைப் பார்த்து “என்ன ரஞ்சன் இது? ஏன் இப்படிப் பண்றீங்க? ஹையோ! திரும்ப ரத்தம் வருது பாருங்க” எனக் கையைப் பார்த்தவள் பதறி துடித்தாள்.

தனு தன் ஒற்றைக் கையால் அவனின் கையை இறுக பற்றிகொள்ள, ஜீவா வார்த்தைகளின்றிக் கையை அவளிடம் இருந்து விடுவிக்க முயன்று கொண்டிந்தான்.

தனுவின் பின்னாலேயே பதறி போய் வந்த அறிவழகனும், தமிழரசியும் ‘என்ன செய்கிறான் இவன்?’ எனத் திகைத்து நின்றுவிட்டனர்.

ஆனால் நொடியில் தெளிந்த அரசி வேகமாக ஜீவாவின் அருகில் வந்தவர் யாரும் என்ன நடக்கிறது எனச் சுதாரிக்கும் முன் ‘பளார்’ என அவனை ஒரு அறை விட்டிருந்தார்.

அரசி இப்படிச் செய்வார் என எதிர்ப்பார்க்காத அறிவழகன் “அரசி என்ன காரியம் செய்ற?” எனச் சத்தம் போட்டார்.

தனுவும் அவர் இப்படிச் செய்வார் என நினைக்காததால் ஜீவாவை மறைத்து நின்ற படி “அத்தை என்னதிது? எதுக்கு அவரை அடிச்சீங்க? அதுவும் என் முன்னாடி” எனக் கோபத்துடன் கேட்டாள்.

“நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க” என அறிவழகனை பார்த்து சொன்னவர், தனுவின் பக்கம் திரும்பி “நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு விலகி நில்லுமா. நீ ஆரம்பத்திலேயே எதுவும் சொல்லாம மூடி மறைச்சதால தான் இந்த நிலைமைக்கு வந்து நின்னிருக்கு. முன்னாடியே பெரியவங்ககிட்ட சொல்லியிருந்தேனா அப்பயே நாங்க சரி பண்ண பார்த்திருப்போம்” என அவளை அடக்கினார்.

தன் அம்மா தன்னைக் கை நீட்டி அடிப்பார் எனச் சிறிதும் நினைக்காத ஜீவா அதிர்ந்து அவரையே பார்த்தபடி நின்று கொண்டிருக்க, அவனின் புறம் திரும்பிய அரசி “உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்குற ஜீவா? உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நீ என்ன செய்துகிட்டு இருக்குறனு உனக்காவது புரியுதா இல்லையா? நீ எங்க ஜீவாவே இல்லை.

எங்க ஜீவாவுக்கு யாரையும் கஷ்டப்படுத்தத் தெரியாது. யாரையும் காயப்படுத்தத் தெரியாது. ஆனா நீ அதெல்லாம் செய்துக்கிட்டு இருக்குற. நாங்க உன்னை இப்படியா வளர்த்தோம்? உங்க கல்யாணம் முடிஞ்சு நீங்க இங்க வர்றதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? நீ என்ன செய்து வச்சுருக்கிற?

“புருஷன், பொண்டாட்டிகுள்ள சண்டை, சச்சரவு வர்றது சகஜம் தான். ஊர் உலகத்தில யார்வேணா தன் மனைவியை அடிக்கிற கணவன் இருக்கலாம். ஆனா என் மகன் நீ அதைச் செய்திருக்கக் கூடாது. அவளை அடிச்சது மட்டும் இல்லாம கையே உடைந்து போற மாதிரி ஆக்கி வச்சிருக்க” எனத் தனுவின் கையைக் காட்டி சொன்னவர்,

“அவ கைல பட்டதால அதோட போய்ருச்சு. ஒருவேளை ஏடாகூடமாகக் கண்ணாடி மேல விழுந்து உயிருக்கு ஆபத்தா முடிஞ்சிருந்தா என்ன பண்ணிருப்ப? எனக் கேட்டார்.

அவ்வளவு நேரம் அவர் பேசுவதை எல்லாம் மனம் வருந்தி கேட்டுக்கொண்டிருந்த ஜீவா அவர் கடைசியாகச் சொன்னதைக் கேட்டதும் துடித்துப் போய் அவரின் வாயை மூட போனான். ஆனால் அவனின் கையைத் தட்டிவிட்டவர்,

“என்ன வாய் வார்த்தையா சொன்னதுக்கே வலிக்குதா?” எனக் கோபமாகக் கேட்டவர், “இப்ப கூட அவங்க அப்பா உன் மேல போலீஸ் கம்பளைன்ட் குடுக்கலாம். ஆனா அவர் தன் மக சொன்ன வார்த்தைக்காகப் பேசாம அமைதியா போறார்”

“இரண்டு பேரும் எப்படி மனசொடிஞ்சிப் போறாங்கனு பார்த்தியா இல்லையா? அவங்க உன்னைப் பத்தி நல்ல மருமகன்னு சொல்லனும்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு உன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காம போறாங்கனா, அவங்க எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்க”எனக் கேட்க ஜீவாவின் முகம் கசங்கியது.

மேலும் அரசி தொடர்ந்து “என்ன செய்து அவங்க வேதனையை நீ போக்க போற? உன்னை பெத்ததுல பெருமையா சுத்திக்கிட்டு இருந்த எங்களை இன்னைக்குத் தலை குனிய வைக்கிற மாதிரியான காரியம் செய்து வச்சிருக்கியே உன்னை எல்லாம் என்ன செய்தால் தகும்?” எனத் தன் மன ஆதங்கத்தை அவனின் மீதான கோபத்தை வார்த்தையால் கொட்டியவர், “இவ்வளவு செய்த பிறகும் இன்னும் என்ன பாக்கி இருக்குனு வெறி வந்தது போல இப்படி உன் கையை அடிச்சுக்கிற?” எனக் கேட்டார்.

அரசி பேச, பேச அப்படியே குற்றவுணர்வில் தவித்த படி அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் தன்னைச் சாட்டையால் அடிப்பது போல உணர்ந்து குறுகி நின்றிருந்த ஜீவா, அப்படியே மடிந்து கீழே அமர்ந்தான்.

அரசி ஜீவாவிடம் பேசியவை யாவும் அறிவழகன் மனதிலும் இருந்ததால் அவரும் “சொல்லு ஜீவா எதுக்கு இப்படிப் பைத்தியம் போல நடந்துக்கிட்டு திரியுற?” எனக் கேட்டார்.

மடிந்து அமர்ந்திருந்தவன், “ஆமா எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருச்சு. நான் ஏன் இப்படி நடந்துக்கிறேன்? எனக்கு என்னாச்சு? என் இயல்பான குணம் எங்க போய்ருச்சுனு நானும் தேடிட்டு தான் இருக்கேன். அப்படியே எனக்கு எங்கேயாவது போயிறணும் போல இருக்கு. ஏதோ வெறுப்பு! ஏதோ ஒரு கோபம்! ஏதோ ஒரு குடைச்சல்னு நான் நானாகவே இல்லை.

ஏன் இப்படி நடந்துக்கிறேன்னு இப்ப என்னையே நான் கேட்டுக்கிறேன். எனக்கே தெரியாததைக் கேட்டா நான் என்ன சொல்லுவேன்? எனச் சத்தமாகச் சொன்னவன், அந்த நேரத்திலும் தான் மடிந்து அமரவும், தன் அருகில் வந்து அமர்ந்து அவனின் ரத்தம் கசிந்த கையைப் பிடித்திருந்த தனுவைக் காட்டி “இதோ இவளை என் உயிர் போலப் பார்த்துக்கணும்னு நினைச்சேன். ஆனா இப்ப அவள் உயிரையே எடுக்குற அளவுக்கு வெறி பிடிச்சுப் போய் இருக்கேன்.

அவளுக்கு மட்டும் எதுவும் ஆகியிருந்தா நான் என்ன ஆகியிருப்பேன்? நிச்சயம் பைத்தியம் பிடிச்சு தான் அலைஞ்சிருப்பேன்!” என்றவனின் வாயை வேகமாக மூடிய தனுவின் கையை விலக்கி அவளின் கையை இறுகப் பிடித்துத் தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவன்,

“இதோ நான் இவ்வளவு செய்தும் என் கூடவே வந்து உட்கார்ந்துருக்கா. இவளுக்கு நான் கொடுத்தது கண்ணீரும், காயமும் மட்டும் தான். இவளை உங்க கூடவே கூட்டிக்கிட்டு போய்ருங்க. இல்லனா நானே எதுவும் செய்திருவேனோன்னு பயமா இருக்கு. எனக்கு அவ உயிரோட நல்லா இருந்தா போதும்” என்றவன் எழுந்து நின்று தன் கூடவே எழுந்து நின்ற தனுவை தன் தாயின் புறம் நகர்த்தி “கூட்டிட்டு போங்கம்மா” என்றவன்,

“நான் நல்ல மகனாகவும் இல்லை. நல்ல மருமகனாகவும் இல்லை. நல்ல கணவனாகவும் இல்லை” என வேதனையுடன் சொன்னவன், “கிளம்புங்க எல்லாரும்” என்று விட்டு அவர்களின் முகத்தைப் பார்க்காமல் திரும்பி நின்றிருந்தவனின் தோள்பட்டை வேகமாக ஏறி இறங்கியது.

திரும்பி நின்றிருந்தவனைத் தன் புறம் திருப்பி எதுவோ சொல்ல வந்த தனு அவன் மூச்சு காற்றுக்குத் தவிக்கும் நிலையைப் பார்த்து “அய்யோ! திரும்ப மூச்சு வாங்குதே’ எனப் பதறிக் கொண்டே அவனின் நெஞ்சை பதட்டத்துடன் நீவி விட்டாள்.

ஜீவா இவ்வளவு நேரமும் பேசியதை கேட்டு திகைத்து ‘என்ன அவனுக்கே ஏன் அப்படி நடந்து கொண்டான் எனத் தெரியவில்லையா? அப்போ எதுவுமே அவன் வேண்டும் என்றே செய்ய வில்லையா?’ என நினைத்துக் கொண்டே அவன் வார்த்தைகளை மனதில் வாங்கி நின்றுக்கொண்டிருந்த அறிவழகனும், தமிழரசியும் அவன் மூச்சு விடத் திணறுவதைப் பார்த்து பயந்து போய் அவனின் அருகில் வந்தார்கள்.

“ஹய்யோ! என்ன செய்து ஜீவா? ஏன் இப்படி மூச்சு வாங்குது?” என அரசி பதறினார். அறிவழகன் அவனை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவர் தண்ணீர் எடுத்துவர ஓடினார்.

ஜீவாவின் அருகில் அமர்ந்து அவனின் நெஞ்சை நீவி விட்டாள் தனு.

அவனின் இன்னொரு பக்கமிருந்து “என்னடா இது?” எனக் கேட்டுக் கொண்டே அவனின் முதுகை தடவி விட்டுக் கொண்டிருந்த அரசியிடம் “அத்தை அந்த ட்ரையரில் ஒரு மாத்திரை இருக்கும் எடுத்துட்டு வாங்களேன்” என்றாள்.

‘என்ன மாத்திரை? எதற்கு மாத்திரை?’ எனத் தெரியாவிட்டாலும் ஜீவா படும் கஷ்டத்தைப் பார்த்து எடுத்து வந்து கொடுத்தார்.

தனு சொன்ன மாத்திரைப் பற்றி ஒன்றும் புரியாமல் அவளைக் கேள்வியாக அவளை பார்த்தான் ஜீவா.

அரசி எடுத்து வந்த மாத்திரையைக் கையில் வாங்கியவள் அவனின் கேள்வியைப் புரிந்து கொண்டு “என் மேல நம்பிக்கை இருந்தா இந்த மாத்திரையைப் போடுங்க” என்றாள்.

நம்பிக்கை என்ற வார்த்தையைக் கேட்டதும் தன் கேள்வி பார்வையை அப்படியே மாற்றியவன் மாத்திரையைப் போட்டுக் கொண்டான்.

“டென்சன் ஆகாம ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க” என அவனை ஆசுவாசப்படுத்தினாள்.

அறிவழகனும் அரசியும் ஜீவாவிற்கு ‘என்ன பிரச்சனை? எதற்கு இப்படி மூச்சு வாங்குகிறான்?’ என ஒன்றும் புரியாமல் தவித்துப் போய் நின்றிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் ஓரளவு சீராக மூச்சு விட ஆரம்பித்தவன், பெற்றவர்களின் முகத்தில் தெரிந்த பயத்தைப் பார்த்து “எனக்கு ஒன்னும் இல்லப்பா பயப்படாதீங்க. நீங்க தனுவை கூட்டிட்டு கிளம்புங்க” என்றான் சோர்வாக.

அவனின் பேச்சைக் கேட்டு இப்போது மூவரும் ஒன்றாக முறைத்தார்கள்.

தனு அவனை முறைத்துக் கொண்டே “ஊருக்குத் தானே கிளம்புறேன். உங்களுக்கு அந்த மாத்திரை போட்டது தூக்கம் வரும். நீங்க தூங்கி எழுந்திறீங்க. நீங்க எழுந்ததும் நான் கிளம்பிடுறேன்” என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும் ஜீவாவின் முகம் அப்படியே சுருங்கிப் போய் வேதனையைக் காட்டியது.

ஏதோ ஒரு வேகத்தில் போகச் சொல்லிவிட்டான் தான். அவளை விட்டுத் தன்னால் இருக்க முடியாது என அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் வேறு வழி இல்லாமல் தான் சொன்னான்.

அவன் முக வேதனையை மூவருமே கவனித்தனர்.

அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் வரிசைக் கட்டி நின்றன. ஆனால் அவனின் உடல்நிலையை மனதில் கொண்டு “நீ தூங்கு ஜீவா. எதுவா இருந்தாலும் பொறுமையா பேசி முடிவெடுப்போம்” என்ற அறிவழகன் “வா அரசி! நாம வெளியே இருப்போம் அவன் தூங்கட்டும்” என்றவர் நடக்க ஆரம்பித்தார்.

“நீயும் கொஞ்ச நேரம் படுமா. கை வலிக்கும் ரெஸ்ட் எடு” எனச் சொல்லிய அரசி அறைவிட்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்.

ஜீவாவை படுக்கச் சொல்லிய தனு அவனின் அருகிலேயே அமர்ந்து இருந்தவள் “எதுக்குக் கையை இப்ப அடிச்சுகிட்டீங்க?” எனக் கேட்டாள்.

“உன்னை அடிச்ச கைக்குத் தண்டனை வேண்டாமா?” என்றான் அமைதியாக.

அவன் சொன்னது வெளியே போய்க் கொண்டிருந்த பெற்றவர்களின் காதிலும் விழ, தன் மகனின் நடவடிக்கைகளில் கலங்கி தவித்துக் கொண்டிருந்தவர்களின் மனம் ஏதோ ஒருவிதத்தில் அமைதியை தழுவியது.

ஜீவாவின் பதிலில் திகைத்து அவனைப் பார்த்த தனுவிற்கு அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் இருவரின் உடல்நிலையும் கவனத்தில் கொண்டு தன் உணர்வுகளை மறைத்து அமைதியானாள்.

அவளின் முக உணர்வுகளையே பார்த்துக் கொண்டிருந்தவன், தனு தன் உணர்வுகளை மறைக்க முயல்வதைக் கண்டு வேறு எதுவும் பேசாமல் அவள் இன்னும் அமர்ந்திருப்பதைப் பார்த்து “ஏன் உட்கார்ந்து இருக்கப் படு?” என்ற ஜீவா நகர்ந்து படுத்தான்.

“நான் படுக்குறேன் நீங்க தூங்குங்க” என்ற தனு இன்னும் சிறிது வேகமாக ஏறி இறங்கின நெஞ்சை தடவிக் கொடுத்த படி அமர்ந்திருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்கள் தூக்கத்தை நாடிச் சென்றது.

கணவனையே பார்த்துக் கொண்டிருந்த தனுவின் மனதில் இன்றைக்கு அவன் நடந்து கொண்ட விதங்களும், அவனின் வார்த்தைகளும் வந்து போனது.

அனைத்தையும் நினைத்தவளின் மனதில் சில வருத்தங்கள் இருந்தாலும் இத்தனை நாளும் இல்லாத அளவில் தனுவின் மனமும், முகமும் அமைதியுடன் மிளிர்ந்தது.

சிறிது நேரம் ஜீவா அருகிலேயே இருந்தவள் அவனின் கையைப் பார்த்தாள். கட்டின் மேலே ரத்தம் உறைந்திருந்தது. அதை மிருதுவாக வருடியவள் எழுந்து அறையை விட்டு வெளியே சென்றாள்.

அங்கே சோபாவில் ஆளுக்கு ஒரு மூலையில் சோர்வாக அமர்ந்திருந்த அத்தை, மாமாவின் அருகில் வந்து நின்றாள்.

அவள் வந்த அரவம் உணர்ந்து நிமிர்ந்து அவளைப் பார்த்த அரசி “என்னமா ஜீவா தூங்கிட்டானா? நீ தூங்கலையா?” எனக் கேட்டார்.

“அவர் தூங்கிட்டார் அத்தை. நீங்க இரண்டு பேரும் கவலையா இருப்பீங்கன்னு தான் வந்தேன்” என்றவள் “உங்களுக்குக் குடிக்க எதுவும் எடுத்து வரவா அத்தை? மாமா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“கைல கட்டை வச்சுக்கிட்டு என்ன செய்யப் போற? உட்கார்! நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்ற அரசி எழுந்து சென்று குளிர்சாதனப்பெட்டியிலிருந்து மூவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தார்.

மூவரும் அருந்தி முடித்துவிட்டு எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது எனப் புரியாமல் சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அந்த அமைதியை கலைத்த அறிவழகன், அவளின் புறம் திரும்பி “சொல்லும்மா, இங்க என்ன நடக்குது? ஜீவா ஏன் இப்படி நடந்துக்குறான்? அவனுக்கு என்ன பிரச்சனை? தான் ஏன் இப்படி நடந்துக்குறோம்னு அவனுக்கே தெரியலைன்னு சொல்றான்? அப்படி என்ன அவனுக்குள் போராட்டம்? ஏன் மூச்சுவிடக் கூடச் சிரமப்படுறான்? அதுக்கு நீ குடுத்த மாத்திரை என்ன மாத்திரைனு கூட அவனுக்குத் தெரியாது போல? எனத் தன் கேள்வியை எல்லாம் அடுக்கியவர் தொடர்ந்து,

ஜீவாவிற்குக் கோபம் வரும் தான் ஆனா அப்படி வந்தா தனக்குள்ளேயே வச்சுக்கிட்டு இறுகி போய்ச் சுத்துவான். அப்புறம் சரி ஆகிருவான். ஆனா இப்போ அவன்கிட்ட தெரியுற முரட்டுத்தனம். தன்னிலையிலேயே இல்லாத அவனின் செயல் எல்லாமே புதுசா இருக்கு? உன்னை அடிக்கிற அளவுக்குப் போறானா உங்க இரண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சினையா? எனத் தன் மனதில் இருந்த அத்தனையையும் கேட்டார்.

எல்லாக் கேள்வியையும் அமைதியாகக் காதில் வாங்கியவள் “உங்க கேள்விக்கு எல்லாம் பதில் ஒரே வார்த்தையில் சொல்லனும்னா இத்தனை பிரச்சினைக்கும் காரணம் அவரோட மௌனம் தான் மாமா” என்றாள் நிதானமாக.

“என்னமா சொல்ற மௌனமா? அவன் எப்பயும் அப்படித்தானேமா அமைதியா இருப்பான். அதுனால இப்ப என்ன பிரச்சனை?” எனப் புரியாமல் கேட்டார் தமிழரசி.

“ஆமா அத்தை. அதான் அவர் பிரச்சனை. அதோட அவர் ஆபீஸ் பிரச்சனை வேற”

“ஆபீசில் என்ன பிரச்சனைமா? உங்க கல்யாணம் பேசின சமயத்தில் தான் பதவி உயர்வு எல்லாம் கிடைச்சுதுனு எல்லாரும் சந்தோசப்பட்டோமே. இந்த ஆறு மாதத்தில் அவன் இப்படி மாறுகிற அளவுக்கு என்ன பிரச்சனை வந்தது?” எனக் கேட்டார் அறிவழகன்.

“ம்ம் சொல்றேன் மாமா” என்ற தனு, “இதுவும் அவர் சொன்னது இல்ல. வேற ஒரு ஆள்தான் சொன்னாங்க” என்றவள்,

“சில நாளுக்கு முன்னாடி நான் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் போது அவரோட பிரண்ட் என்னைப் பார்க்க வந்தார். அப்போ தான் ஆபீசில் நடந்த பிரச்சனை எனக்குத் தெரியும்” என்ற தனு, ஜீவாவின் நண்பன் சொன்ன விஷயத்தை இருவரிடமும் சொல்ல ஆரம்பித்தாள்.