மனதோடு உறவாட வந்தவளே – 14

அத்தியாயம் – 14

அதிர்ந்த ஜீவா வேகமாகத் திரும்பி தனுவை பார்த்தான். அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்பது போல.

அவன் பக்கமே திரும்பாத தனுஸ்ரீ ‘இதை எதிர்ப்பார்த்தேன்’ என்பது போலத் தன் தந்தையைப் பார்த்தாள்.

“இப்ப எதுக்குப்பா வீட்டுக்கு கூப்பிடுறீங்க? என் வீடு இதானேப்பா இங்க இருந்து நான் எப்படி வர முடியும்?” என நிதானமாகக் கேட்டாள்.

“என்னம்மா உன்னை அறைஞ்சிருக்குற தடயம் கன்னத்தில் அப்படியே தெரியுது. கை முழுவதும் கட்டு போடுற அளவுக்குக் கொண்டு வந்துருக்கார். அதுக்கே எனக்குக் கோபம் தாங்க முடியாத அளவுக்குக் கொதிக்கிது.

ஆனா பிரச்சனையை பெரிசா ஆக்கிற வேண்டாம்னு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன். நீ நிதானமா ஏன் கூப்பிடுறீங்கனு கேட்குற? உன்னைக் கூப்பிட்டு போகாம நீ இங்க இருந்து இன்னும் அடி வாங்கட்டும்னு விட்டுட்டா போக முடியும். நீ புரிந்து தான் பேசுறயா?” எனக் கோபமாகச் சேகரன் கேட்டார்.

அவர் கோபத்தில் நியாயம் இருந்ததால் யாரும் குறுக்கே தலையிடாமல் தந்தையும் ,மகளும் பேசிக் கொள்ளட்டும் என அமைதி காத்தனர்.

ஜீவாவிற்குக் குற்றவுணர்வு கூடிக் கொண்டே போனது. குற்றவுணர்வுடன் சேர்ந்து மனம் எல்லாம் வலித்தது. சொல்லத் தெரியாத வேதனையில் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான்.

தன் தந்தை சொன்னதைக் கேட்டு “அப்பா அவர் என் ரஞ்சன்! என்னை அடிக்க எல்லா உரிமையும் இருக்கு. அவர் ஒன்னும் வேணும்னே என்னை அடிக்கலை. நான் தான் அவர் என்னை அடிக்கிற அளவுக்குப் பேசினேன். அப்படி என்ன பேசினேனு எல்லாம் என்னால வெளிப்படையா சொல்ல முடியாது.

அது எங்களுக்கு மட்டுமே சொந்தமானது. அப்படினா ஏன் அத்தைக்கு மட்டும் எல்லாத்தையும் சொன்னேன்னு நீங்க நினைக்கலாம். அத்தைக்கும் எதுவும் முழுசா தெரியாது. ஏன் ரஞ்சனுக்கே இன்னும் நான் ஏன் அப்படிப் பேசினேனு தெரியாது” எனச் சொல்லிக் கொண்டே ஜீவாவை கூர்ந்துப் பார்த்தாள்.

அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் தாங்கி, உடலில் ஒவ்வொரு அணுவும் கூர்மையால் நிறைந்திருக்கத் தனுயின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் கடைசியாகச் சொன்னதைக் கேட்டதும் கேள்வியாக நோக்கினான்.

அவனைக் கூர்ந்துப் பார்த்தவள் அவனின் கேள்வி பார்வையைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் தந்தையின் புறம் திரும்பி “ஸாரிப்பா! உங்க பேச்சை தட்டி பேசுற நிலை வரக்கூடாதுனு தான் நான் உங்க காதுக்கு எந்த விசயமும் வரக் கூடாதுனு கவனமா இருந்தேன். ஆனா மாமா அவசரப்பட்டுட்டார். இப்பயும் ஒன்னும் பிரச்சனை. இல்லை உங்க மக மேல நம்பிக்கை வச்சு இதைப் பத்தி இனி பேச வேண்டாம்பா” என்றவள் தொடர்ந்து,

“அப்பா ரஞ்சன் மேல நீங்க வச்ச மரியாதைக்கு இப்பவும் எந்தக் குறையும் வரலை. இனியும் வராது. இனி அவரை மரியாதை குறைவா பேசிறாதீங்கப்பா” எனச் சொன்னவள் “நான் உங்க மனம் வருந்துகிற பேசியிருந்தா ஸாரிப்பா” என்றாள்.

அவள் பேசும் போதெல்லாம் குறுக்கே பேசப் போன சங்கரியின் கையை இவ்வளவு நேரம் அழுத்தி பிடித்துத் தடுத்துக் கொண்டிருந்த சேகரனின் கையை எடுத்து விட்ட சங்கரி “என்ன தனு இப்படி எல்லாம் பேசுற? எப்ப இருந்து நீ இவ்வளவு பேச கத்துக்கிட்ட?

தன் மகள் அடிவாங்கினதை பார்த்துட்டு எந்தப் பெத்தவங்க தான் சும்மா இருப்பாங்க? மாப்பிள்ளைக்கு நாங்க மரியாதை குடுத்து தான் ஆகனும். ஏன்னா எங்க பொண்ணைக் குடுத்துட்டோமே. வேற வழி இல்லை. ஆனா அதுக்காக உன்னை என்ன செய்தாலும் நாங்க கேட்காம இருக்க முடியுமா? உனக்கு எதுவும்னா நாங்க இருக்கோம்னு தெரிய வேண்டாமா?

எங்களுக்குத் தெரியாம இன்னும் என்ன விஷயமெல்லாம் இருக்கு. அதையும் சொல்லிரு! காது குளிர கேட்டுட்டு போறோம்” எனக் கோபமாகப் பேசிய சங்கரியின் ஆதங்கம் நியாயமானது தான் என உணர்ந்ததால் என்ன பதில் சொல்ல எனப் புரியாமல் தன் அத்தையைத் திரும்பி பார்த்தாள்.

அவள் பார்வை சென்ற திசையைக் கண்டு அரசியிடம் திரும்பிய சங்கரி “என்ன அண்ணி இதெல்லாம்? இன்னும் என்ன, என்ன பிரச்சனை இருக்கு? தினமும் நடுசாமம் வரை தனியா இருந்துருக்கா. நாட்டு நடப்பு இருக்குற நிலையில் இவ தனியா இருந்ததுல ஏதாவது ஆபத்தில் வந்து முடிஞ்சிருந்தா என்ன செய்ய முடியும்? இதுல எங்ககிட்ட சொன்னா கஷ்டப் படுவோம்னு மறைச்சாளாம்.

அவ சந்தோஷத்தில் பங்கு எடுத்துக்க மட்டுமா பெத்தவங்கன்னு நாங்க இருக்கோம்? கஷ்டத்திலயும் நாங்க இருப்போம்னு ஏன் யோசிக்காம போனா? உங்ககிட்ட மட்டும் சொல்லிருக்கா. ஆனா பெத்தவகிட்ட மட்டும் சொல்ல மாட்டாளா? என்ன நியாயம் இது?” என ஆதங்கமாகக் கேட்ட சங்கரியின் கையைப் பிடித்த அரசி.

“உங்க கோபம் நியாயமானது தான் அண்ணி. நிஜமா எனக்கும் முழு விவரம் தெரியாது. நேத்துச் சாயங்காலம் போலத் தான் தனு போன் பண்ணி ஜீவா இப்படி எல்லாம் செய்றதாகவும் அதுக்கு நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறதாகவும் அதுக்கு நீங்களும் வந்தா நல்லா இருக்கும்னு சொன்னா.

நான் இன்னைக்குச் சாயங்காலம் வரலாம்னு ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன். இங்க வந்த பிறகு இங்கே நடப்பதை நான் பார்த்திருந்தா நிச்சயம் உங்க காதுக்கு விஷயத்தை வர வச்சுருப்பேன். ஆனா அதுக்குள்ள ஜீவா நைட்டெல்லாம் வீட்டுக்கு வராம இருக்கவும்.

இனிமே எல்லாத்தையும் சொல்லி உங்களை வர வைக்கிறத்துக்குப் பதிலா இங்க நடக்கிறது ஏற்கனவே தெரிஞ்ச என்கிட்ட சொல்லலாம்னு நினைச்சிருப்பா. அதான் காலையில் எனக்கு போன் போட்டுருக்கா. அவ பண்ணினது தப்புதான். அதையும் விட என் பையன் பண்ணினது ரொம்பத் தப்பு. அதுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” எனச் சங்கரியை சமாதானப் படுத்தினார்.

அனைவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்க அதற்கு மேல் ‘என்ன பேசுவது? ஆளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். மாப்பிள்ளை தன்னை அடிப்பதற்குத் தான்தான் காரணம் என்கிறாள் மகள். அவளே அவரை ஒன்றும் சொல்லாமல் அவருக்கு ஆதரவா பேசும்போது இனி தாங்கள் என்ன சொல்ல’ என நினைத்து அமைதியாக இருந்த சங்கரியை பார்த்து வாசல் பக்கம் கையைக் காட்டி ‘கிளம்பு’ என்பது போலச் சொன்ன சேகரன் தானும் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அவர்கள் அப்படி எதுவும் பேசாமல் கிளம்பவும், தனு வேகமாக அருகில் வந்து “என்னப்பா என்னம்மா நீங்க பாட்டுக்கு கிளம்புறீங்க? அதான் அத்தை, மாமா, ரஞ்சன் எல்லாரும் மன்னிப்பு கேட்டாங்க இல்ல? அப்புறமும் என்ன கோபம்? நான் பேசினது தான் கோபம்னா நானும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். உங்ககிட்ட தானே நான் இவ்வளவு உரிமையா பேச முடியும்? நீங்களே கோவிச்சா எப்படி?” எனக் கேட்ட தனுவிற்குப் பதில் சொல்லாமல் இருவரும் அமைதியாக இருந்தனர்.

அவர்களின் அமைதியை பார்த்து “அப்பா என்னப்பா பேச மாட்டீங்கிறீங்க? ஏதாவது பேசுங்கப்பா. என் மேல கோபமாப்பா?” எனக் கெஞ்சலாகக் கேட்ட தனுவை பார்த்த சேகரன்,

“கோபமும் இருக்கும்மா. அதைவிட வருத்தம் ரொம்ப இருக்கு. ஆனா நீ சொன்னியே உன்னை நம்பி இனிமே இந்த விசயத்தைப் பற்றிப் பேச வேணாம்னு. அதான் அமைதியா இருக்கேன். இப்ப நாங்க கிளம்புறது தான்மா நல்லது. நீ பேசக்கூடாதுனு சொன்ன பிறகு இங்க இருக்குறது சரி வராதுமா.

இன்னும் இருந்தா இருக்குற வருத்தத்தில் ஏதாவது பேச்சு வளர்ந்துரும். உறவுனு ஆன பிறகு முகத்தைத் திருப்பிக்கிட்டே இங்க இருக்க முடியாது. கொஞ்ச நாள் ஆகட்டும். நாங்க இப்ப கிளம்புறோம்” என்றவர் வேறு யாரையும் பார்க்காமல் நடக்கத் தொடங்கினார்.

ஜீவா இத்தனை பிரச்சனைக்கும் தான்தான் காரணம் என நொந்து கொண்டு நின்றிருந்தவன், யாரை என்ன சொல்லி தான் சமாதானபடுத்துவது எனக்கூடத் தெரியாமல், அப்படியே சோபாவில் தொப்பென்று அமர்ந்தான். அவனுக்குள் நடந்து கொண்டிருந்த போராட்டங்கள் அங்கிருந்த யாருக்கும் தெரியாமல் போனது.

அவனை அனைவரும் பார்த்தாலும் கண்டுக்கொள்ளாமல் சேகரன், சங்கரியை சமாதானப் படுத்த முயன்றார்கள். சேகரன் அருகில் வந்த அறிவழகன். “நீங்க இப்படி மன வருத்தத்தோட போறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போங்க. பேசி ஒரு முடிவுக்கு வரலாம்” என்றவர் “அரசி நீயும் சொல்லு” என்றார்.

“ஆமாண்ணா இருங்க அப்புறம் போகலாம்” என அரசியும் சொன்னார்.

“இல்ல சம்பந்தி தனுகிட்ட சொன்னது தான் உங்ககிட்டேயும் சொல்றேன். இப்ப நான் இங்க இருந்தா நிச்சயம் வார்த்தை வளரும். அதனால நாங்க கிளம்புறோம். தனு சொன்ன வார்த்தைக்காகவும் நீங்க பெரியவங்க இங்க இருக்கீங்க என்ற தைரியத்திலும் தான் போறோம்” என்றவர் ஜீவாவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே சங்கரியையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அவர்களின் மனவருத்தம் அறிவழகன், அரசி இருவருக்குமே புரிந்ததால் அதற்கு மேலும் அவர்களை நிறுத்தி வைக்க முடியாமல் போனது.

அவர்கள் செல்லவும் ஜீவாவை கோபமாக முறைத்துக் கொண்டே அவனின் அருகில் வந்த அறிவழகன் “இப்படி தலையைக் கவுந்துக்கிட்டு உட்கார்ந்தா என்ன அர்த்தம் ஜீவா? பார் உன்னால உன் நடத்தையால அவங்க எப்படி வேதனைப்பட்டுப் போறாங்க பார்? அதுவும் உன்னை நேரடியா ஏன் இப்படிச் செய்தேனு கூடக் கேட்காம எங்க தன் மகளுக்குப் பிடிச்ச கணவனைக் கோபத்தில் எதுவும் பேசிருவோமோனு ஓடுறாங்க. இப்படி ஒரு நல்ல மனுஷங்களுக்கு நீ கொடுத்தது என்னனு நினைச்சுப் பார்” எனத் திட்டியவர், ஜீவா இத்தனை பேச்சுக்கும் சிறிதும் அசையாமல் இருக்கவும்,

“கிளம்பு அரசி! ஊருக்குப் போகலாம். தனு நீயும் கிளம்பு! உங்க அப்பா வேணும்னா உன் பேச்சைக் கேட்டு இங்க விட்டுவிட்டுப் போயிருக்கலாம். நாங்களும் அந்த மாதிரி கல்லூள்ளி மங்கனா இப்படி உட்கார்ந்துகொண்டு இருக்கிறவன்கிட்ட விட்டுவிட்டு போக முடியாது. போ! போய் உன் துணியை எடுத்துட்டு வா! கிளம்பலாம்” என்றார்.

“மாமா” என எதுவோ சொல்ல ஆரம்பித்த தனுவை கைகாட்டி நிறுத்தி “நீ எதுவும் பேச வேண்டாமா. கிளம்புற வேலையை மட்டும் பார்” என்றார்.

அவள் அவரின் பேச்சுக்கு மரியாதைக்குக் கொடுத்து அறைக்குப் போகத் திரும்பும் நேரத்தில், விருட்டென்று சோபாவை விட்டு எழுந்த ஜீவா அவளைத் தாண்டி அறைக்குள் சென்றவன் கதவை படார் எனத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் திறந்த வேகத்தில் கதவு இன்னொரு முறை திறந்து மூடியது.

அவனின் வேகத்தைப் பார்த்து மூவரும் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.

‘என்ன சத்தம்?’ என வேகமாக அறைக்குள் நுழைந்த தனு கணவன் செய்து கொண்டிருந்த காரியத்தை பார்த்து “ஐயோ என்ன பண்றீங்க?” எனக் கத்தினாள்.