மதுவின் மாறன் 5 & 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 5:
கடுப்புடன் மாறன் காரை இயக்கி கொண்டிருக்க, முன்னிருக்கையிலிருந்த வாணி பின் நோக்கி திரும்பி அமர்ந்து பின்னிருக்கையில் இருந்த இளமருதனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் முன்பு …
ஹோட்டலில் வாணியை பார்த்ததும் பொங்கிய உவகையில் அவளருகில் அமர்ந்து மதுரா பொண்ணு என அவள் கைகளை பற்றி, “எப்படி இருக்கடா??” என ஆதுரமாய் விசாரித்திருந்தான் இளமருதன்.
“டேய் மருதா!!” என அவனைக் கண்ட ஆனந்த அதிர்ச்சியில் உற்சாகமாய் பேசிட்டிருந்தாள் வாணி.
இவர்களின் எதிரே அமர்ந்திருந்த மாறன், “இங்க என்ன நடக்குது?? என்பது போன்றே அவர்களை பார்த்திருந்தவன், “இந்த சீன் பார்ட்டிக்கு மதுவ எப்படி தெரியும்??” என யோசிக்கலானான்.
இளமருதன் காண்பதற்கு வடநாட்டு சாயலில் படு கலராய் உயரமாய் ஸ்டைலிஷாய் இருக்கும் ஆடவன். கோயமுத்தூர் தான் அவனின் சொந்த ஊரெனினும், நடை உடை நாகரிகத்தில் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாதது போல் வெளிநாட்டு வாழ் மக்களை போல் இருப்பவன்.
சாதாரணமாய் காண்பதற்கே சற்று நிறமாய் இருப்பவன், ஐடியில் பணிபுரிய ஆரம்பித்த பிறகு தன்னை நாகரிகமாய் மாற்றிக்கொள்ள முற்பட்டான். அதன் பின் கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பில் தன்னை முழுவதுமாய் அயல்நாட்டு ஆடவனாய் மாற்றிக் கொண்டான்.
அவனை கண்டதும் வேற்று ஊர் ஆடவனெனவே அனைவரும் எண்ணுவர். அவன் வாயிலிருந்து வரும் தமிழை கேட்டதும் கண்டிப்பாக சற்றாய் அதிர்ச்சி பிறக்கும், “இவன் தமிழனா??” என்ற கேள்வி எழும்.
அங்கு சண்டை நிகழ்ந்தப் போது அவ்வாறு தான் முதலில் மாறனும் எண்ணினான்.
அதன் பின் மருதன் அந்த ஹோட்டல் முதலாளிக்காக பரிந்து வந்து பேச, மருதனை சீன் பார்ட்டியாய் எண்ண வைத்தது.
மதுவும் மருதனும் பரஸ்பர நலவிசாரிப்புக்கு பின் இயல் நிலைக்கு திரும்பிய பின், டேபிளில் எதிரில் அமர்ந்திருந்த மாறனை நோக்க, அவன் இவளை கடுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆஹா வாணி, ஓவர் எக்ஸைட் ஆகி உனக்கே ஆப்பு வச்சிக்கிட்டியே!! இவரை கண்டுகாம பேசிட்டு இருந்துட்டேனே!!” என அவளின் மைண்ட்வாய்ஸ் கூற,
“ஏங்க இவன் இளமருதன். லண்டன்ல எனக்கு நிறைய ஹெல்ப் செஞ்சிருக்கானு சொல்லிருக்கேன்ல அவன் தான் இவன்” என மாறனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
ஏனோ தன்னுடைய பெங்களுர் வாழ்வை பற்றி பேசிய அளவிற்கு லண்டனைப் பற்றி பேசியதில்லை வாணி. இளமருதன் மற்றும் சஹானா என இருவர் தனக்கு உதவியாக இருந்ததாய் மட்டுமே மாறனிடம் கூறியுள்ளாள். அவர்கள் இருவருமே திருமணத்திற்கு வராமல் இருந்ததினால் அவர்கள் இவளுக்கு நெருங்கிய தோழமைகள் இல்லை என எண்ணயிருந்தான்.
ஆனால் தற்போது மருதனை கண்டதும் வாணியின் வதனத்தில் கண்ட பூரிப்பும் நெகிழ்ச்சியும் அவளுக்கு அவன் மீதிருக்கும் அன்பை பறைசாற்றியது. மாறனுக்கும் அது நன்றாய் விளங்கியது.
வாணி அறிமுக படுத்தியதும் மருதனிடம் கை குலுக்கி பேசினான் மாறன்.
எனினும் முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் மருதனின் முதல் சந்திப்பு உண்டாக்கிய சிறிய கடுப்பு அவனுள் இருந்திருந்தது.
“மதுரா பொண்ணு, வெற்றி மாறன் உன்னை நல்லா பார்த்துகிறாரா??” என்று தன் தோழி நன்றாக வாழ்கிறாளா என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அடுத்த கேள்வியை அவன் கேட்க,
“என் பொண்டாட்டியை எனக்கு நல்லா பார்த்துக்க தெரியும். இதை கேட்க நீ யாரு??” என மாறனின் மனம் அவனுக்கு கவுண்டர் கொடுத்துக் கொண்டிருக்க,
“என் வாழ்க்கை பொக்கிஷம்டா அவரு” என கண்கள் மின்ன ஒரு வார்த்தையில் கூறி முடித்துவிட்டாள் வாணி.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயம், திடீரென தன் மேஜையிலிருந்து அலறி எழுந்தான் மருதன்.
“அய்யய்யோ பஸ் போயிருக்க போகுது. உன்ன பார்த்ததுல பஸ்ஸயே மறந்துட்டேனே” என பதறிக் கொண்டு மருதன் ஓட,
“பஸ்ஸ மட்டுமா என்னையும் தானடா மறந்து பேசிட்டு இருந்த அவ கூட” என மாறனின் பொஸஸிவ் மனம் அவனை பொசுக்கி கொண்டிருந்தது.
ஹப்பாடா எப்படியோ கிளம்பினானே என நிம்மதி அடைந்தது மாறனின் மனது.
மருதன் அவ்விடத்தை விட்டு அகன்றதும் மாறனிடம் திரும்பிய வாணி, அவனுடனான தன் நட்பின் கதையை கூற விழைய,
அவனை பற்றிய எவ்வகை பேச்சும் இவனின் மனம் கேட்க விரும்பாமல் இருக்க,
“ப்ச்… மது எனக்கு தலைவலியா இருக்கு. இப்ப இந்த கதை முக்கியமா?” என்று அவள் பேச்சிற்கு தடை போட்டுவிட்டான்.
மாறனின் நடவடிக்கை மற்றும் பேச்சை வைத்து வாணியும், மாறனின் மனநிலை மற்றும் மாறனுக்கு மருதனின் மீதான எண்ணத்தை புரிந்துக் கொண்டாள்.
மாறனும் வாணியும் அந்த உணவகத்தை விட்டு தங்களது காரில் ஏறப் போன சமயம், “மதுரா பொண்ணு” என மீண்டும் வந்து நின்றான் மருதன்.
“டேய் பஸ்ல போகலையா நீ??” என்றாள் வாணி.
“ம்ப்ச் உன்கிட்ட பேசினதுல பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன்” என்றானவன்.
அனைவரும் நின்றிருந்த இடம் கிருஷ்ணகிரி அருகிலிருந்த ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில்.
மாறனும் வாணியும் சென்னையிலிருந்து காரில் வந்திருக்க, மருதன் கோயமுத்தூரில் இருந்து பேருந்தில் வந்திருந்தான்.
மருதனும் பெங்களூருக்கு தான் பயணப்பட்டுக் கொண்டிருந்ததால், “மாறன் நீங்களும் பெங்களுர் தானே போறீங்க. என்னை வழில டிராப் செஞ்சிடுறீங்களா??” என்று கேட்டான்.
எத்தனை தான் மன நெருடல் இருந்தாலும், ஒருவர் உதவி என கேட்கும் போது, தன்னால் உதவி புரிய முடியும் பட்சத்தில் இல்லை என கூற மனசு வராது மாறனுக்கு.
ஆக அவனையும் தங்களின் பயணத்தில் இணைத்துக் கொண்டான் மாறன்.
அப்பொழுது கூட முழு மனதுடன் சந்தோஷமாகவே அவனை தன் காரில் ஏறுமாறு கூறினான் மாறன்.
ஆனால் அதன்பிறகு மாறனுக்கு ஏற்பட்ட கடுப்பிற்கு முழு காரணம் வாணி மட்டுமே.
எப்படியோ தன்னுடைய லண்டன் கதையை மருதனுடனான நட்பின் கதையை இந்த பயணத்தில் மாறனிடம் உரைக்க வேண்டுமென எண்ணியிருந்தாள் வாணி.
ஆனால் மருதனும் உடன் வருவதாய் முடிவு செய்ய படவும், அவனுடனான அளவளாவலில் இறங்கி விட்டாள் வாணி.
தன்னுடன் அமர்ந்துக் கொண்டு தன்னை சிறிதும் பொருட்படுத்தாது அவனிடமே அவள் பேசிக் கொண்டே வர, மாறனுக்கு அது கடுப்பை விளைவித்தது. மருதன் மீதிருந்த கோபத்தை வெறுப்பை இன்னும் கொஞ்சம் ஏற்றிவிட்டது.
அவர்கள் பேசிய பேச்சு எதுவும் மாறனின் காதில் விழவில்லை. அவன் உள்ளம் எல்லாம் மதுவை திட்டிக் கொண்டு வேறொரு திசையில் பயணித்திருந்தது.
இவர்களின் பேச்சை கேட்டிருந்தால் பின்னாளில் இவனால் தங்களுக்குள் உருவாகும் சண்டையை வராமல் தடுத்திருக்கலாம் மாறன். விதி வலியது ஆயிற்றே!!
திடீரென இவர்களின் பேச்சை நிறுத்த எண்ணிய மாறன், “நீங்க பார்க்க தமிழ் ஆள் மாதிரியே இல்லை. உங்களுக்கு எப்படி சுத்த தமிழ் பேர்?” எனக் கேட்டான்.
“நான் தமிழ் பையன் தான்ங்க. அப்பா தமிழ் வாத்தியார். எனக்கு கொஞ்சம் மார்டனா இருக்க பிடிக்கும். அதுக்கேத்தது போல ஐடில வேலை கிடைக்கவும் ஃலைப் ஸ்டைல் டிரஸ்ஸிங் ஸ்டைல் லாம் மாத்தியாச்சு” என்றான்.
“அதுக்காக மீசை கூட இல்லாமலா இருப்பீங்க??” என்று மாறன் கேட்க,
“நல்லா கேளுங்கப்பா!! நான் இவன்ட்ட லண்டன்ல இருக்கும் போதே சொல்லியிருக்கேன் உனக்கு மீசை வச்சா நல்லாயிருக்கும். ஏன் இப்படி மொத்தமா வழிச்சிட்டு சுத்துறனு கேட்டுருக்கேன்” என்றவள் கூறிய நொடி,
“மீசைய பத்தி பேசுற அளவுக்கு இவன் க்ளோஸ் ஃபிரண்டா?? இவ அனாவசியமா எல்லார் கிட்டயும் இப்படி பேச மாட்டாளே!! இந்தளவுக்கு க்ளோஸ் நட்புனா அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு வரலை?? இவளும் ஏன் அவளோட பெங்களுர் ஃப்ரண்ட்ஸ் அளவுக்கு இவனை பத்தி பேசல??” என பல கேள்விகள் மாறன் மனதை துளைத்துக் கொண்டிருக்க,
“மீசை மேல எனக்கு பெரிசா விருப்பம் இல்லைங்க. இப்ப என்னை பார்த்தா சின்ன பையனா தானே தெரியுது. அப்படி இருக்க தான் எனக்கு பிடிச்சிருக்கு” என்றான் மருதன்.
மருதன் இறங்க வேண்டிய இடம் வரவும், இறங்கிக் கொண்டவன், மாறனின் பக்க கார் கண்ணாடி அருகே வந்து கை குலுக்கி நன்றி உரைத்து,
“மதுராவ லண்டன்ல பார்த்ததே நான் செஞ்ச புண்ணியம்னு அடிக்கடி நினைச்சிப்பேன். அவ கூட டச்ல இல்லைனாலும் எப்பவும் என் மனசுல அவ நினைவு இல்லாம இருந்ததில்லை. அவளை கண்கலங்காம நல்லா பார்த்துக்கோங்க மாறன்” என நட்பின் உரிமையில் கூறியவன்,
“அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை என் வீட்டுக்கு கண்டிப்பா வாங்க. உங்களுக்கு நான் விருந்து தரேன்” என்று உரைத்துவிட்டு கிளம்பினான்.
மாறனின் மனம் இப்பொழுது மொத்தமாய் குழம்பியது. “இப்படி ஒரு நட்பை எப்படி அவ நம்மகிட்ட சொல்லாம விட்டா??” தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தவன் அவளிடமே கேட்டுவிடலாமென திரும்பி பார்க்க, அவள் தலையை கண்ணாடி மீது சாய்த்து நன்றாய் உறங்கி கொண்டிருந்தாள்.
அவள் உறங்குவதை பார்த்தவன், காரை ஓரமாய் நிறுத்தி, அவள் அமர்ந்திருந்த இருக்கையை பின்னோக்கி சாய்த்து அவளை சாய்வாக படுக்க வைக்க, சற்றாய் தூக்கம் கலைய கண் திறந்து பார்த்தவள், அவனின் கன்னம் கிள்ளி முத்தமிட்டு, “என் செல்ல கண்ணப்பா” எனக் கூறிக் கொண்டே கண்ணயர்ந்தாள்.
அத்தியாயம் 6:
பெங்களூர் வந்து இரண்டு நாட்கள் நகர்ந்திருந்த நிலையில், இவ்விரு நாட்களும் மாறனும் வாணியும் அவரவர் அலுவல் வேலையில் பிசியாய் இருந்துவிட, இளமருதனை பற்றி வாணியிடம் கேட்கும் தருணம் கிடைக்காமலேயே போயிற்று மாறனுக்கு.
என்றோ ஒரு நாள் ஒருவன் வந்து பேசியதை பெரியதாய் எண்ணி அவளிடம் கேட்கவும் மனமில்லை அவனுக்கு.
வாணி, தான் ஒருவரை தன் மனதில் நிறைவாய் எடுத்து வைத்து அன்பாய் பழகினாலானாள், தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு மனதில் ஓர் இடம் வைத்து, அவரை எவ்வளவு வருடம் கழித்து எங்கு காணினும் அதே பாச பிணைப்புடன் அதே பூரிப்புடன் பேசும் பழக்கமுடையவளாகையால் மருதனும் அவ்வாறு இவள் வாழ்வில் முக்கிய நபராய் இருப்பானாய் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அவனைப் பற்றி பெரியதாய் அறிய விழையவில்லை மாறன்.
ஆனால் அவனை அவ்வாறே கேள்வி கேளாது இருக்க விடுமா வருங்காலம்??
பெங்களூரிலிருந்த இரண்டு நாட்களும் இரவுணவு உண்ணக்கூட நேரமின்றி பின்னிரவு நேரமே வீடு வந்தடைந்தான் வெற்றி.
வாணியும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் விதத்தில் தான் இந்த பெங்களூர் பயணம் மேற்கொண்டதால் அவளும் அவளின் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தாள்.
மூன்றாம் நாள் இரவு பன்னிரெண்டு மணியை தாண்டி வந்த மாறன், அதீத வேலையின் காரணமாய் முழுதாய் சோர்ந்திருக்க, தூக்கமும் கண்களை சுழட்ட உண்ணாது வாணியின் அருகே கட்டிலில் சாய்ந்துவிட்டான்.
ஆழ்ந்த நித்திரைக்கு அவன் கண்கள் அவனை இழுத்துச் சென்ற சமயம் சரியாய் தும்மினாள் வாணி.
அடுத்து அடுக்கு தும்மலாய் அவள் தும்மிக் கொண்டிருக்க, அவளின் சத்தத்தில் நித்திரைக்குள் புகுந்திருந்த இவனின் நினைவுகள் விழிப்படைந்து விழிக்க செய்ய, பெரும் சோர்வில் தூங்கிட்டிருந்தவனை விழிக்க செய்த தும்மலின் மேல் பெருங்கோபம் எழ,
“ம்ப்ச் மது மாத்திரை போட்டியா இல்லையா?? கொஞ்சம் தள்ளி போய் தும்மிட்டு இரேன். என் தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதுல” என சற்று எரிச்சலாய் உரைத்தான்.
ஏற்கனவே சைனஸ்சினால் உண்டான அடுக்கு தும்மலில், முகம் சிவந்து தொண்டை வலிக்க காது அடைக்க மூக்கிலிருந்து நீராய் வழிய சீந்திக் கொண்டிருந்தவள், அவனின் இச்சொல்லில் மனம் வெகுவாய் காயம் பட, சற்றாய் கண்ணில் நீர் வர அவ்விடத்தை விட்டு பால்கனியிலிருந்த ஊஞ்சலில் மாத்திரையும் தைலமும் கையில் கைகுட்டையுமாய் வந்துமர்ந்தாள்.
அவளிடம் அவ்வாறு உரைத்து நித்திரைக்கு சென்றவனின் மனமோ, முழுதாய் நித்திரைக்கு செல்லாமல் முன்னே நிகழ்ந்த ஒரு நிகழ்வில் சென்று நின்றது.
அது அவன் திருமணம் நிச்சயமாகி அவர்கள் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நாட்கள்.
அப்போது ஒரு நாள், “ஏங்க எனக்கு எந்த நேரம் எப்ப உடம்பு முடியலைனு சொன்னாலும் எரிச்சல் படாம பார்த்துபீங்களா??” என்று கேட்டாள் மதுரவாணி.
“ஏன் நல்லாதானே இருக்க!! அப்புறம் ஏன் அப்படி கேட்குற மது??” என்றான் மாறன்.
“எனக்கு சைனஸ் ப்ராப்ளம் இருக்குங்க. தூசி, தாளிச்ச வாசனை, சில்லுனு ஏசி காத்து இதெல்லாம் எனக்கு தும்மல் வர வைக்கும். நார்மல் சில்னஸ் எனக்கு ஒத்துக்கும். உள்ளங்கை உள்ளங்கால் சில்லுனு ஆகுற மாதிரி இருக்குற சூழல் தும்மல் வர வச்சிடும். இதுக்கு நிரந்திர சொல்யூசன்னு எதுவும் இல்ல. பட் உடம்பை ஹெல்தியா சாப்டு மெய்டெய்ண் பண்ணா அடிக்கடி வராம தடுக்கலாம்”
“சரி… எனக்கு தெரிச்ச வரைக்கும் இப்ப மாமா அத்தை உனக்கு தேவையானதெல்லாம் கொடுத்து உன்னை ஹெல்தியா தான் பார்த்துக்கிறாங்க. அதே மாதிரி நானும் உன்னை பார்த்துக்கனும்னு சொல்றியா மது. அதெல்லாம் நான் உன்னை நல்லா வச்சி பார்த்துப்பேன்” என்றான் மாறன்.
“அதில்லைங்க. ஒருத்தங்க உடலாலையும் மனதாலையும் பலமா இருக்கும் போது அவங்களை எதிர்நோக்கி வரும் எந்த சொல்லும் துன்பமும் அவங்களை சோர்வுறச் செய்யாது. மனம் கலங்கினாலும் அடுத்து அவங்களே தானா எழுந்து அடுத்த வேலைய பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா இதே ஒருத்தர் உடலும் மனமும் சோர்வா இருக்கும் போது அவங்கிட்ட சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அவங்களை ரொம்பவே காயப்படுத்தும். நான் உன்னை நம்பி இருக்கனால தானே இப்படி பேசுறனு தன்னோட சுகமின்மை பெரிய இயலாமையா தெரிஞ்சு தன் மேலேயே அவங்களை பரிதாபப்பட வச்சி ரொம்பவே மனச வருத்தி கூனிக்குறுக வச்சிடும்”
“அதான் யாரையுமே அவங்க உடம்பும் மனசும் சரியில்லாத சமயத்துல, என்ன தான் அவங்க மேல தப்பு இருந்தாலும், என்ன தான் அவங்க நம்மள கடுப்பேத்தினாலும், அவங்கள அந்த நேரம் திட்டாம மனசும் வாடும் படி பேசாம இருக்கனும்”
“என்ன இவ சின்ன தும்மலுக்கு பெரிய லெக்சர் குடுக்குறானு நினைக்கிறீங்களா??”
“எனக்கு எந்த நேரம் தும்மல் வரும்னு தெரியாது, ஒரு நேரம் கசின் வீட்டுல இருந்தப்ப இப்படியாக, “என்னமா நீ எப்ப பார்த்தாலும் மூக்க உறிஞ்சிட்டு சீந்திட்டு சுத்துறனு எரிச்சல் பட்டுட்டாங்க”. இது அப்பாக்கு எப்படியோ தெரிய வந்து என்னைய கூட்டிட்டு போய்டாங்க”.
இந்த பேச்செல்லாம் தூங்கும் அவன் புலன்களில் ரீங்காரமிட்டு அவனை சுகமாய் நித்திரைக் கொள்ள விடாது அவனின் மனதை தத்தளிக்க செய்ய, மது என அலறிக் கொண்டே முழித்தான் மாறன்.
தன் பேச்சில் அவளின் மனம் என்னவாய் காயப்பட்டிருக்கும்… அதுவும் தும்மல் வரும் போது கண் சிவந்து அழுது தாய்மடி தேடும் பிள்ளை போலல்லவா அவள் நடந்துக் கொள்வாள். அச்சமயத்தில் அவளை திட்டிட்டோமே என பலவகையான எண்ணங்கள் அவன் ஆழ்மனதில் சுழன்றடிக்க, அந்நிலையில் தான் முழுதாய் தூக்கம் கலைந்து பதறி விழித்தான் மாறன்.
அருகில் மது இல்லாததை கண்டவன், அவள் எங்கேவென தேடி அறையை விட்டு வெளி வந்தான்.
அது ஏசி அறை ஆதலால் அவனின் அலறல் அவளின் செவியை தீண்டாதிருக்க, தைலம் தேய்த்து மாத்திரை போட்டு விலகி வைத்திருந்த தும்மலினால் தன்னை மீறி அந்த ஊஞ்சலிலேயே உறங்கியிருந்தாள் வாணி.
பால்கனி வந்து கண்கள் வீங்கி முகம் வாடி உறங்கிக் கொண்டிருந்தவளை கண்டவனின் மனம் வருந்தியது.
அவளருகில் வந்து மண்டியிட்டவன் அவள் காலருகே அமர்ந்து அவளின் மடியில் தலையை சாய்த்துக் கொண்டான்.
அவனின் ஸ்பரிசத்தில் விழித்தவள், “இங்க ஏன் படுத்திருக்கீங்க?? உள்ள போய் படுங்க. எனக்கு இப்போதைக்கு ஏசி ஒத்துக்காது. உள்ள வந்தா திரும்ப தும்மல் வந்துடும். அதனால நீங்க உள்ளே படுத்துக்கோங்க. நான் இன்னிக்கு இங்கேயே தூங்கிக்கிறேன்” என்றாள்.
“சாரி மதும்மா” தன் முகத்தை நிமர்த்தி அவள் முகம் நோக்கி கண் பார்த்துரைத்தான் மாறன்.
“பரவாலைப்பா. எல்லா நேரமும் மனுசன் பொறுமையாவே கவனிச்சிக்கிட்டே இருக்க முடியாதுல. அப்பப்ப கோவம் எரிச்சல் வரது சகஜம் தான்.” என்றாள் வாணி.
“இல்ல இது நீ ஏற்கனவே இந்த இடத்துல இப்படி சொன்னா நீ ஹர்ட் ஆவனு சொல்லியும் செஞ்சிட்டேனேனு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா” என்றானவன்.
அவனின் துயரம் அவளைத் தாக்க, அவனருகில் தரையில் அமர்ந்தவள், அவனை தன் மடி மீது சாய்த்து தட்டிக் கொடுத்து அவன் தலையை கோதினாள்.
“நீங்க இப்படி வந்து என்கிட்ட கேட்காம போயிருந்தா தான் எனக்கு கஷ்டமா இருந்திருக்கும் வெற்றிப்பா. ஏன் நாளைக்கே கூட இதுக்காக உங்ககிட்ட சண்டை போட்டிருப்பேன். நீங்க எவ்ளோ டயர்ட்ல இதை சொன்னீங்கனு தெரிஞ்சாலும் இவருக்கு நான் கவலைபட்டது முக்கியமாய் தெரியலைலனு சின்னபிள்ளதனமா சண்டை போட்டிருப்பேன். ஆனா இப்ப உங்க தூக்கத்தையும் தாண்டி என் கஷ்டம் உங்க தூக்கத்துலயும் முழிக்க வச்சிருக்குனா என் மேல எவ்ளோ அன்பு உங்களுக்குனு மனசு பூரிச்சு பொங்குது வெற்றிப்பா” என முகம் சந்தோஷத்தில் மின்ன உரைத்தவள்,
எப்பொழுதும் தான் உரைக்கும் டிரேட்மார்க் வசனமான, ” என் செல்ல கண்ணப்பா” என அவனின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி முடித்தாள்.
அவளின் கொஞ்சலில் சிரித்தவன், அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்து முத்தமிட்டவனின் மனம் ஆசுவாசமடைய அப்படியே உறங்கி போனான்.
மறுநாள் காலை இந்த அன்பின் பூரிப்புலேயே வலம் வந்தவள், அவன் உண்ண அனைத்தையும் தயார் செய்து அவன் கிளம்பும் நேரமும் அவன் பின்னேயே வால் பிடித்து அலைந்தாள்.
அந்நேரம் சரியாய் வந்தது அந்த அழைப்பு அவளின் கைபேசிக்கு.
கட்டிலில் அமர்ந்து அவன் கிளம்புவதையே பார்த்திட்டிருந்தவள், கைபேசி சத்தம் கேட்டு அதை எடுத்துப் பார்த்தவள் புதிய எண்ணாய் இருக்க அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என சிந்தித்திருக்க, “என்ன மது யோசனை?? யாரு போன்ல” என்றான் மாறன்.
“யாருனு தெரியலைப்பா… புது நம்பரா இருக்கு. ஆபிஸ் காலா இருக்குமோ?? மார்னிங்கே ஏதும் இஸ்யூ வந்துட்டுனு இந்த ஜூனியர் பிள்ளைங்க கால் பண்றாங்களோனு யோசிட்டு இருந்தேன்” என்றவள் அழைப்பை ஏற்று தன் காதில் வைத்து ஹலோ என்றவள் மறுப்பக்கம் பேசியவனின் குரலில், “மருதா நீதானா” எனக் குதூகலித்தாள்.
“என்னது அவனா!!! என்ன குட்டையை குழப்ப ப்ளான் பண்ணி கால் செஞ்சிருக்கானோ” என அதிர்ந்து திரும்பி வாணியை பார்த்தான் மாறன்.
— நர்மதா சுப்ரமணியம்