மதுவின் மாறன் 2

தனது மார்பை தலையணையாக்கி ஒய்யாரமாய் துயில் கொண்டிருந்த தன் மனைவியின் தலையை கோதிக் கொண்டிருந்தான் மாறன்.

அவள் கண்ணில் லேசாய் கண்ணீர் தடமிருக்க, “அப்பா வந்ததும் என்னைய கண்டுக்காம போயிட்டு, இப்ப வந்து அழுது வடிஞ்சி ஒட்டிக்கிட்டு தூங்குறதப் பாரு” செல்லமாய் அவளை மனதிற்குள் வசைப்பாடிக் கொண்டிருந்தான்.

நேரம் காலை நான்கு மணியை கடந்திருக்க, அவளை தள்ளி படுக்க வைத்தவன், தனதறை விட்டு வெளியே வந்து பால்கனியை பார்த்தான்.

அப்பால்கனியில் அமர்ந்து அதிகாலை பொழுதை ரசித்து கொண்டிருந்த தன் மாமனாரிடம் வந்தான் மாறன்.

“என்ன மாமா? தூக்கம் வரலையா?” கேட்டான் அவரிடம்.

“இல்ல மாப்பிள்ள! சீக்கிரம் முழிப்பு வந்துடுச்சு”

“சாரி மாமா! நேத்து சட்டுனு கோபம் வந்துடுச்சு. எதுவும் ஹர்ட் பண்ணிட்டேனா உங்கள? நீங்க உடனே கிளம்புறேனு சொன்னது கஷ்டமா போச்சு” என்றான் மனதில் உதித்த குற்றவுணர்வுடன்.

“சே சே இல்லப்பா. அதுக்காக கிளம்புறேனு சொல்லல. நீ நேத்து சொன்னது கரெக்ட் தான். பொண்ண ரொம்ப கைக்குள்ள வச்சி வளர்த்துட்டேன். அதான் என்னை போலவே எதிர்பார்த்து உன்னை ரொம்ப கஷ்டபடுத்துறா?” என்றார் அவரும் குற்றவுணர்வுடன்.

“அச்சோ அப்படிலாம் இல்ல மாமா! அவ என்னை கஷ்டபடுத்தினாலும் எனக்கு அது பிரச்சனை இல்லயே! அவ அவளையே தான கஷ்டபடுத்திக்கிறா.
நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே” என தீவிரமாய் மாறன் கேட்க,

“எதுனாலும் சொல்லுங்க மாப்பிள்ளை” என்றவரும் படு தீவிரமாய் கேட்க,

“உங்க பொண்ணு ஒரு பொசசிவ் பேய் மாமா” என்றவன் கூறிய நொடி கணீரென சிரித்தார் செல்வம்.

அவரின் சிரிப்பில் இவனும் இணைந்திட,  இருவரும் சிரித்து முடித்த நேரம்,

“ஆனா அந்த பொசசிவ் தான் அவகிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே! இது என் பொம்மை, யாருக்கும் தரமாட்டேன்ங்கிறது போல நடந்துப்பா மாமா” கண்ணில் ரசனை மின்ன ஆழ்ந்து ரசித்து அனுபவித்து கூறினானவன்.

அதே பொசசிவ் தன்னை பிற்காலத்தில் ஆட்டுவிக்க போகிறதெனவும் அதற்காக அவளிடம் கடுமையாய் சண்டையிட போகிறோமெனவும் அறியாது அவளின் பொசசிவ் குணத்தைக் கூறி சிரித்துக் கொண்டிருந்தான்.

முந்தைய நாள் நிகழ்வு அவன் மனகண்ணில் நிழலாடியது.

கதவு தட்டும் ஓசையில் மோன நிலை கலைந்து யாரென்று பார்க்க மாறன் போய் கதவை திறந்த நொடி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வாணி.

“அப்பாஆஆ” என்று ஓடோடிச் சென்று அவரைக் கட்டிக் கொண்டாள்.

வாணி துள்ளிக் குதித்த சமயம் மாறனின் மனமோ, ‘போச்சுடா!  சும்மாவே அப்பா புராணம் பாடுவா! இப்ப கேட்கவே வேண்டாம். நம்மள ஒரு மனுஷனாவே யோசிக்க மாட்டாளே’ என அலுத்துக் கொண்டது.

மகளை கண்ட மகிழ்ச்சியில் அவளை ஆதுரமாய் தழுவி கொண்ட செல்வம், “எப்படிமா இருக்க?” என தலையை வருடிக் கேட்டார்.

‘இனி இந்த உலகத்திலேயே அவங்க இரண்டு பேர் மட்டும் தான் இருக்கிறது போல சுற்றத்த மறந்து பேசுவாங்களே’ என கடுப்பாய் மைண்ட் வாய்ஸ் பேசியவன் வெளியில் கிளம்பிச் சென்றான்.

அவன் வெளியில் சென்றதைக் கூட கவனியாது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

வெற்றிமாறனின் குடும்பம் நெல்லையை பூர்வீகமாய் கொண்டு சென்னையை இருப்பிடமாய் வைத்து வாழ்ந்து வந்தது.

எம்பிஏ முடித்தவனுக்கு அலுவலகத்தில் மணி கணக்கு பார்த்து மாத சம்பளத்திற்கு காத்திருந்து, மாத முதல் வாரம் செல்வந்தராகவும் கடைசி வாரம் பிச்சைகாரனாகவும் வாழும் நிலை வேண்டேவே வேண்டாமென தீர்க்கமாய் முடிவெடுத்திருந்தபடியால் , தன் தந்தையின் சிறு சேமிப்பு பணத்தையும் பேங்க் லோன் பணத்தையும் வைத்து கார் ஷோரூம் வைத்து நடத்தினான்.

தொழில் தொடங்கிய நேரம் சறுக்கி விழுந்து நிறைந்த அனுபவம் பெற்று சிறுக சிறுக முன்னேறி, தன் தொழிலுக்கு சென்னையிலும் பெங்களூரிலும் ஒரு கிளை திறக்குமளவு முன்னேறியிருந்தான்.

இவனுமே பெங்களூரில் முக்காலவாசி மாதம் இருந்துவிட்டு, தாய் தந்தையின் வற்புறுத்தலுக்காக அவ்வப்போது சென்னை வந்து சென்றுக் கொண்டிருந்தான் திருமணத்திற்கு முன்பு வரை.

திருமணத்திற்கு பின் வாணியின் வேலை அலுவலகம் சென்னையிலேயே இருக்கட்டும் மாற்ற வேண்டாமென உரைத்தவன்,  சென்னையை இருப்பிடமாக்கி அவ்வப்போது பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தான்.  மறக்காமல் மறுக்காமல் இவளையும் உடன் அழைத்து செல்வான்.

மாறனின் தாய் தந்தையர் நெல்லைக்கு சென்றிருக்க, இவளும் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாய் கூறியதால் அன்றைய நாள் மதிய உணவு உண்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தான் மாறன்.

ஆனால் இப்போது ஏன் வந்தோம் என்ற அலுப்புடன் அலுவலகத்திற்கு தன் இரு சக்கர வாகனத்தில் பயணப்பட்டிருந்தான்.

வெற்றிமாறன் நெடு உயரமும் அதற்கேற்ற உடலும் சிறிய தொப்பையும் நவநாகரிகமாய் திருத்தப்பட்ட அடர் தாடியும் சுருள் கேசமும் கொண்ட நாகரிக யுவன்.

நம் மதுரவாணிக்கு நேர் எதிர்பதமாய் இருப்பவன். என்ன தான் மென்பொருளாளினியாய் அங்கு லீட்டாகவே வேலை பார்த்தாலும் லண்டன் பெங்களூர் என பல ஊர்களில் வேலை பார்த்திருந்தாலும் அவளின் உடையோ என்றுமே இன்றைய நாகரிகம் என்ற அளவை கூட தொட்டதில்லை.

பின் எவ்வாறு இத்தகைய காதல்? அவள் எது செய்தாலும் சகித்துக் கொள்ளும் காதல் அவனுக்கு அவள் மீது. அவனாய் தேடிச் சென்று அவள் தந்தையிடம் பெண் கேட்டு மணந்துக் கொண்டான் அவளை.

இக்கால யுவதிகள் போலல்ல அவள். மீடியம் சைஸ் பொட்டில்லாது குங்குமம் இல்லாது அவள் நெற்றி வெற்றிடமாய் என்றும் இருந்ததில்லை.

உயரம் இல்லை, தங்க நிறமில்லை என்ற காரணத்திற்காகவே எத்தனையோ வரன்கள் அவளை புகைபடத்தில் பார்த்தே வேண்டாமென நிகாரித்து சென்றிருந்த சமயம், தானாய் வந்து அவள் எனக்கு வேண்டும் என கேட்டு மணம் புரிந்துக் கொண்டானவன்.

எவ்வாறு எவ்வகையில் நம் மது அவனை ஈர்த்தாள். அவளுக்கே தெரியாத ரகசியமது.

திருமணமாகிய இந்த ஆறு மாத காலத்திலும் அந்த ரகசியத்தை அவளிடம் உரைக்காது காத்துக் கொண்டிருந்தான் மாறன்.

அவன் ஷோரூமில் ஒரு வாடிக்கையாளர் வந்து பிரச்சனை செய்து சென்றிருக்க, அத்தகைய கடுப்பு மனநிலையிலேயே வீட்டை வந்து சேர்ந்தவனுக்கோ அவனது மாமனார் கதவை வந்து திறக்கவும் ஏகமாய் கடுப்பாயிற்று.

“எங்க மாமா அவ?”  உள்நுழைந்ததும் அவனின் முதல் கேள்வியே அது தான்.

“தூங்கிட்டு இருக்காப்பா ” என்றாரவர்.

மதியம் அவன் உண்ணாமல் செல்கிறானென கூட அவள் கவனியாமல் இருந்தது, இப்போதும் தனக்காக காத்திராமல் தான் உண்டேனா இல்லையா என்கின்ற எண்ணமுமில்லாமல் அவள் உறங்குவது என அனைத்தும் அவன் மனதில் கோபத்தை கிளற,
இவை அனைத்திற்கும் காரணம் அவள் தந்தையின் வருகை என்ற காரணமும் சேர்ந்துக்கொள்ள,

“என்னனாலும் இப்படி கைகுள்ளேயே வச்சு நீங்க உங்க பொண்ண வளர்த்திருக்க கூடாது மாமா” கேட்டிருந்தான் அவன் மாமனாரிடம்.

செல்வத்தின் முகம் சுருங்கி போனது.
“உங்களை பார்த்ததும் என்னை மறந்தே போய்டா… நான் சாப்பிட்டேனா இல்லையா ஆபிஸ் ரீச் ஆயிட்டேனா ஒரு மெசேஜ் இல்ல இன்னிக்கு. காலைல அவ என் கிட்ட சண்டை போட்டதே அவளோட மெசேஜ நான் பார்க்கிறதே இல்ல. பார்த்தாலும் ரிப்ளை பண்றதில்லைனு தான். ஒரு நாளைக்கு பத்து மெசேஜாவது நான் ஆபிஸ்ல இருக்க நேரத்துல அவகிட்டயிருந்து வந்திடும்.  இன்னிக்கு நான் அவ மெசேஜூக்காக காத்திருக்க, மேடம் என்னை கண்டுகாம தூங்கிட்டு இருக்காங்க” 

தன்னவள் தன்னை கண்டு கொள்ளவில்லை என்கின்ற அவனின்  காதல் மனம் விளைவித்த கோபமது என நன்றாய் புரிந்தது செல்வத்திற்கு.
மென்னகை புரிந்தாரவர் அவனின் குற்றச்சாட்டில்.

“அவ உங்களை தான் உங்க அன்பை தான் பென்ச் மார்க்கா வச்சி பார்க்கிறா. அதை நான் ரீச் பண்ணனும்னு நினைக்கிறா”

“எல்லா அப்பாவும் இப்படி பொண்ணுங்க மேல பாசம் கொட்டி வளர்க்கிறீங்களே… உங்களோட வைஃப் கிட்டயும் மக மேலே பொழியுற மாதிரியே பாசத்தை பொழிஞ்சீங்களா?
இது தெரியாம பொண்ணுங்க எல்லாரும் என் அப்பா போல வருமானு சொல்லி சொல்லி வெறுப்பேத்தியே புருஷன் சாபத்தை வாங்கிக்கிறாங்க”  என அவன் உலகத்திலுள்ள அனைத்து பாவப்பட்ட புருஷங்களுக்காக பேசிக்கொண்டிருந்த நேரம்,

மாறனின் அறையினின்று எட்டிப்பார்த்தாள் வாணி.

“அய்யோ!! எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ?” அவளைப் பார்த்ததும் இவ்வாறு தான் மனம் குமுறியது மாறனுக்கு.

அவனை முறைப்பாய் பார்த்தவள், “அப்பா  உங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மெசெஜ் செய்வேன்ப்பா” என்றாள்.

“இரண்டே இரண்டு தான்மா. காலை வணக்கம். இரவு வணக்கம். அதுவும் நான் அனுப்பின பொறவு தான் உன்கிட்ட இருந்து வரும்”  மாப்ள வசமா பொண்ணுக்கிட்ட சிக்கிட்டாரோ என்கின்ற நினைப்புடன் கூடிய சிரிப்புடன் கூறினார்.

“உங்களுக்கு எத்தனை மெசேஜ் வரும்னு சொல்லுங்க”  என்றாள் மாறனிடம்.

‘ஆஹா மாறா வகையா மாட்டிக்கிட்டியே அவ கிட்ட.  இப்ப எக்ஸ்ஸாம்பிள் காமிச்சு விளக்கோ விளக்குனு விளக்குவாளே’ என அவன் மைண்ட் வாய்ஸ் பதற,

அவை எதையும் வெளியில் காண்பிக்காது, “நீங்க அனுப்புற குட் மார்னிங் அப்படியே எனக்கு ஃபார்வேடு பண்ணுவா  மாமா. அப்புறம் அவ அப்பப்ப பேஸ்புக்ல பார்கிற அவளுக்கு பிடிக்கிற போஸ்ட் மீம்ஸ்லாம் வந்துட்டே இருக்கும்.  மதியம் சாப்பிட்டாச்சானு கேட்பா? அவளுக்கு வேலை செய்ற நேரம் இடைல போர் அடிச்சா இன்னிக்கு இப்படி ஆச்சு அப்படி ஆச்சனு எல்லாத்தையும் எனக்கு டைப் பண்ணிட்டிருப்பா… இல்லனா வீட்டுக்கு வந்து சொல்லுவா” என அவள் கேட்ட கேள்விக்கு தன் மாமனாரிடம் பதிலுரைத்துக் கொண்டிருந்தான்.

“அப்புறம் வேறென்ன மெசேஜ்” என்றாளவள் புருவத்தை உயர்த்தி.

“அப்புறம்ம்ம்” என இழுத்தவன்

“அதையும் சொல்லனுமா” என்றான் அவளிடம்.

“ம் சொல்லுங்க!! நீங்க சொன்ன குற்றச்சாட்டு எவ்ளோ அபத்தம்னு அவங்களுக்கு தெரிய வேண்டாமா… பொண்ணு இன்னும் குழந்தையாவே மெச்சூரிட்டி இல்லாம இருக்கானு அவங்க கவலைபடுவாங்கல”  என்றாள் கண்சிமிட்டி.

“அதை நீயே சொல்லலாமே” என்றானவன் முகத்தில் தோன்றிய வெட்கப்புன்னகையுடன்.

அவனின் வெட்கச்சிரிப்பை பார்த்து ரசித்து சிரித்தாளிவள்.

இவர்களின் பேச்சும் பார்வையும் சிரிப்பும் போகும் திக்கை பார்த்து சிரித்த செல்வம்,  “விடுமா மாப்ளய! ஓவரா தான் மிரட்டுற அவர” என்றார் மாறனுக்காக பரிந்து வந்து.

“இன்னிக்கு வேணும்னே தான்ப்பா அவருக்கு மெசேஜ் செய்யல. மதியம் கண்டுகாத மாதிரி இருந்தேன். மெசேஜ் பார்த்தும் ரிப்ளை செய்யாம கொஞ்ச நாளா கடுப்பேத்தினாரு. எனக்கு அவர் என்னை அவாய்டு பண்றாருனு தானே தோணும்.  அதான் இன்னிக்கு அவரை வெறுப்பேத்தினேன்” என அவனை நோக்கி நாக்கை துறுத்தி உரைத்தாள்.

“சரி வாங்கப்பா சாப்பிடலாம். நீங்களும் கை கால் கழுவிட்டு வாங்க” என்றிவள் இருவரையும் உண்ண அழைக்க,

“அதெல்லாம் வேண்டாம்மா. நீ தனியா இருக்கியேனு தான் இவ்ளோ நேரம் இருந்தேன். நான் கிளம்புறேன். அங்க உங்கம்மா தனியா இருப்பா” என செல்வம் கூற,

“இதுக்கப்புறம் லேட் நைட் நீங்க ஒன்னும் போக வேண்டாம். அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன். ஒரு நாள் அவங்க தனியா சமாளிச்சிப்பாங்க” இது தான் முடிவு என்பது போல் உரைத்து சமையலறை சென்ற மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் செல்வம்.

“ஹா ஹா ஹா மாமா… உங்களையே மிரட்டுற அளவுக்கு எப்படி வளர்ந்துட்டா பாருங்க உங்க பொண்ணு” என்றான் மாறன்.

“அத நினைச்சி தான் மாப்ள நானும் அவளை பார்த்துட்டு இருக்கேன். இந்த ஆறு மாசத்துல மூனு நேரம் தான் அவளை நேர்ல பார்த்திருக்கேன். ஒவ்வொரு நேரமும் அவளோட முதிர்ச்சியான பேச்சு நடவடிக்கை என்னைய பூரிக்க வைக்குது தான்” என்றார்.

அதன்பின் அனைவரும் உண்டுவிட்டு உறங்க செல்ல, செல்வம் ஹாலிலேயே படுத்துக் கொண்டார். அவரை உறங்க வைத்து விட்டே வாணி தனதறைக்குச் சென்றாள்.

அவள் உள்நுழைந்த நொடி, அவளின் இரு கால்களையும் தன் கைகளுக்குள் கோர்த்து தன் உயரத்திற்கு மேலாய் அவளை தூக்கினான் மாறன்.

திடுமென நிகழ்ந்த  அதிர்ச்சியில் “ஹே” என அவள் பதற,
கட்டிலில் அவளை நிறுத்தியவன் அவள் வயிற்றில் தனது தலையை முட்டி குறுகுறுப்பூட்டினான்.

மழலையாய் சிரித்தவள் அவன் சிகைப் பற்றி இழுத்து நிறுத்த, “என்னா மிரட்டல் மிரட்டுற உன் அப்பா முன்னாடி.  எல்லாத்துக்கும் தண்டனை உண்டு” என்றவன் அவளுள் முழ்கி போனான்.

அவன் மார்பில் அவள் தலை வைத்திருக்க,  “நிஜமாவே இன்னிக்கு நான் உங்களை மறந்துட்டேனு நினச்சீங்களாப்பா” என்றாள் கண்ணில் வலியை தேக்கி.

அவளின் அன்பின் வீரியம் புரியாது, அதை மதியாது அவளின் அன்புக்குரியோரே நடந்தால் மிகவும் வேதனைக்குள்ளாவாள்.  அது தான் வாணியின் ப்ளஸ் அண்ட் மைனஸ். அன்புக்கு நான் அடிமை கேட்டகரி அவள்.

அவளின் இக்குணம் விளைவிக்க போகும் பிரச்சனையை எவ்வாறு சமாளிக்க போகிறானோ மாறன்.

ஏதேதோ பேசி சமாதானம் செய்து அவளை உறங்க வைத்தான் மாறன்.

— தொடரும்