பூவோ? புயலோ? காதல்! – 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 9
இணைந்த இதழ்கள் தங்கள் இணையைப் பிரிய மறுத்து ஒட்டிக் கொண்டிருந்தன.
முதல் முதலான இதழ் அணைப்பு இளஞ்சித்திரனை பித்தனாக்கி தன் இணையைப் பிரிய விடாமல் தன்னுடனே வைத்துக் கொள்ள அவனைப் போராட வைத்துக் கொண்டிருந்தது.
தானும் ரசித்து, மனைவியையும் ரசிக்க வைத்து, இதழ் இணைப்பை தொடர்ந்து கொண்டிருந்தவனின் கைகளில் நெகிழ்ந்து கொண்டிருந்தாள் கயற்கண்ணி.
காதலித்த நாட்களில் கண்களால் மட்டும் காதல் பேசியவன்! இன்று கணவன் ஆனதும் அவளைக் களவாட தவிப்பதை அந்த ஒரு இதழ் இணைப்பின் மூலமே அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான்.
கண்ணிய காதலன் அவன்!
கடந்த நாட்களில் ஒரு முறை கூடத் தன் காதல் கன்னிகையிடம் வரைமுறை தாண்டாதவன்.
இன்றோ உரிமைப்பட்டவளிடம் தன் உரிமையை நிலை நாட்ட துடித்துக் கொண்டிருந்தான்.
அவள் மூச்சுக் காற்றுக்குத் தவிக்கும் நிலை உருவானதும் மெல்ல தன் அதரங்களைப் பிரித்தவனுக்கு, மனைவியின் மேனியில் ஓடிய நடுக்கம் உறைக்க, அவளைத் தன் தோள் வளைவில் நிறுத்தி ஆதூரமாக அணைத்துக் கொண்டான்.
“சாரிடா கண்ணும்மா… ஃபர்ஸ்ட் டைம் உரிமையா வந்தேனா? அதுதேன் என்னாலேயே என்னைய கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை…” என்று அவளின் காதின் ஓரம் முணுமுணுத்துக் கொண்டே அவளின் நடுக்கத்தைக் குறைக்க முயன்றான்.
அவனின் சமாதானத்தை “ம்ம்ம்…” என முனங்கி ஏற்றுக் கொண்டாலும், அவளின் நடுக்கம் குறைய நேரம் பிடிக்கவே செய்தது.
அவளின் நடுக்கத்தைக் கண்டு, அதற்கு மேல் தன் உரிமையை மீறாமல் அவள் மீண்டு வர நேரம் கொடுத்தான்.
சில நொடிகள் கடந்த நிலையில் தன்னை நிலை கொண்டவள் அவனின் தோளில் இருந்து விலகினாள்.
விலகியவளை மீண்டும் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன், அவளின் முகத்தை நிமிர்த்தித் தன்னைப் பார்க்க வைத்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நான் ஒன்னு சொல்லணும் கண்ணு…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ம்ம்… சொல்லுய்யா…”
“நம்ம வாழ்க்கையை நாம இன்னைக்கே ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன் கண்ணு…” அவளின் கண்ணோடு கண் நோக்கி தீர்க்கமாகச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு கயற்கண்ணி சங்கடத்துடன் முழித்தாள்.
“என்னடா இவன் இப்பதேன் தாலி கட்டினான். அதுக்குள்ள தாம்பத்தியத்தைப் பத்தி பேசுறானேனு என்னைய தப்பா நினைக்காதே கண்ணு. நாம சேர்ந்து வாழணும் கண்ணு. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் சேர்ந்து வாழணும். எந்த மேல் சாதி ரத்தம் கீழ் சாதியோட சேர்ந்துட கூடாதுனு ஓ மானத்துக்குக் களங்கம் வர வைக்க நினைச்சாங்களோ, அந்தச் சாதி நமக்கு நடுவில் இல்லைனு காட்ட நாம வாழ்ந்து காட்டணும் கண்ணு.
இப்போ நாம உசுருக்கும், மானத்துக்கும் பயந்து ஓடி வந்தோம். ஆனா என்னைக்காவது நம்ம சொந்தபந்தம் கண்ணுல படும் போது, நாங்க இரண்டு பேரும் இப்போ ஒரே மனுஷ சாதிடானு அவுகளுக்குக் காட்டணும் கண்ணு. அங்கனக்குள்ளயே இருந்து வாழ்ந்து காட்ட அந்தச் சாதி வெறி பிடிச்சவுக விடமாட்டாக.
ஏ அய்யாகிட்ட பேசி எப்படியாவது நம்ம கல்யாணத்தை முடிச்சுப் போடுவோம்னு நினைச்சேன். ஆனா ஏ அய்யனும், அண்ணனும் கொலைகார பாவிக. நம்ம விசயத்தில் நான் அவுக வீட்டுப் புள்ளையா தெரியலை. விசயம் தெரிஞ்சதும் அவுக சாதி புத்தியை அப்படியே காட்டிட்டாக. நாம மட்டும் இப்போ தப்பிச்சு வந்துருக்கலைனா இந்நேரம் உன்னையும், என்னையும் பொதச்ச இடத்தில் புல்லே முளைச்சுருக்கும். அரவமே இல்லாம வெசத்தை வச்சு கொன்னு பொதச்சு, வயித்து வலில செத்துப் போனதா கத கட்டியிருப்பாக…” என்று இறுக்கத்துடன் அவன் சொல்ல, அவள் தேம்பி அழுதாள்.
“பெத்த பிள்ளைன்னு கூடப் பார்க்காம எப்படியா உன்னைய கொல்ல அவுகளுக்கு மனசு வந்துச்சு? உன்னைய ராசாவாட்டம் வளர்த்து விட்டது இப்படிக் கொல்லத்தானா?” என்று அழுகையின் ஊடே கேட்டாள்.
“அவுக கைக்குள்ள நான் அடங்கி இருக்குற வரைக்கும் தேன் அவுகளுக்கு நான் ராசாவாட்டம் கண்ணு. அவுக கையை மீறிட்டேன்ல? அதான் நகத்தை நறுக்குற மாதிரி என்னைய நறுக்கிப்புட நினைக்கிறாவுக…” என்று சொல்லி பெருமூச்சு விட்டவன்,
“சரி, அந்த வெறி பிடிச்சவங்களை விடு கண்ணு. அவுகளும் மாற மாட்டாக. அவுக புத்தியும் மாறாது. நம்ம விசயத்துக்கு வருவோம். நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க உனக்குச் சம்மதம் தானே கண்ணு?” என்று மனைவியிடமும் சம்மதம் கேட்டான்.
“ஹான்… இதுக்கு நான் என்னய்யா சொல்ல? நீ என்கிட்ட கேட்கவே தேவையில்லைய்யா. ஓ இஷ்டந்தேன் ஏ இஷ்டமும்…” என்று லேசாகத் தடுமாறினாலும் அமைதியாகச் சொன்னாள் கயற்கண்ணி.
“ஏ இஷ்டம் மட்டும் இல்ல கண்ணு. உன்னோட இஷ்டமும் எனக்கு வேணும். இப்போ முத்தத்துக்கே அந்த நடுங்கு நடுங்குற. அதனால தேன் கண்ணு ராவைக்கு இதைப் பத்தி பேசாம இப்பயே பேசினேன். இந்தப் பகல் பொழுது உன்னைய தயார் படுத்திக்க உனக்கு டைம் வேணும்னு நினைச்சேன்…” என்றவன் சிரித்துக் கொண்டே அவளின் நெற்றியில் செல்லமாக முட்டினான்.
அவனின் சிரிப்பில் நாணம் கொண்டவள், அதை மறைக்க அவனின் மார்பிலேயே தன் முகத்தைப் புதைத்தாள்.
அதுவே அவளின் சம்மதத்தைச் சொல்லாமல் சொல்லிவிட, நிறைவுடன் மனைவியை அணைத்துக் கொண்டான் இளஞ்சித்திரன்.
சிறிது நேரத்தில் விலகியவன் “நான் போய்க் கடை எங்கன இருக்குனு பாத்து சாப்பாடு வாங்கிட்டு அப்படியே மதியானத்துக்குத் தேவையான சாமான் எல்லாம் வாங்கிட்டு வர்றேன் கண்ணு. சோறு பொங்க சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இங்கன பிரைவேட் கேஸ் விக்கும்னு என் பிரண்ட் சொன்னான். அதையும் என்னன்னு பார்த்துட்டு வர்றேன் கண்ணு…” என்று வெளியே கிளம்பத் தயாரானான்.
அவன் வெளியே செல்ல தயாராகவும், கயற்கண்ணியின் முகம் பயத்தில் வெளுத்தது.
அதைக் கண்ணுற்றவன், “தேவையில்லாம எதுக்கெடுத்தாலும் பயப்படாதே கண்ணு. எனக்காக இல்லாட்டியும் உனக்காக நான் எங்கன போனாலும் பத்திரமா வீடு வந்து சேருவேன்…” என்று உறுதியாகச் சொல்ல,
அவனுக்குத் தான் மேலும் மேலும் சங்கடத்தைக் கொடுக்க விரும்பாமல், “சரிய்யா, நான் பயப்படலை. நீ பத்திரமா போய்ட்டு வா…” என்று வழி அனுப்பி வைத்தாள்.
கணவன் வெளியே சென்றதும் கதவை அடைத்து விட்டு வந்தவளுக்கு அந்தப் புதிய வீடு அந்நியமாகத் தெரிந்தது.
கணவன் அருகில் இருந்த வரை அவளுக்கு அந்த வீடு வித்தியாசமாகத் தெரியவில்லை. அவனின் பேச்சும், தங்களின் வருங்கால வாழ்க்கையைப் பற்றிய பயமும் வேறு எதையும் நினைக்க விடவில்லை.
காலையில் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் திருமணத்திற்குத் தயாராகச் சொன்னதும் அதை மட்டும் செய்தவள் அந்த வீட்டின் அமைப்பு எப்படி என்று கூடப் பார்க்க நேரமில்லை.
குளியலறை கூடச் சகல வசதிகளுடன் இருந்ததைப் பார்த்து ஒரு நிமிடம் வியந்தாலும், திருமணம் பற்றிய எண்ணம் அதற்கு மேல் அவளை வியக்க வைக்கவில்லை.
இப்பொழுதோ இனி சில மாதங்களுக்குத் தங்களின் இருப்பிடம் இது தான் என்று தெரிந்ததும், வீட்டை பார்வையிட்டாள்.
வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து மீண்டும் அங்கே தான் வருவார் என்பதால் சோஃபா, டீவி, டைனிங் டேபிள் எல்லாம் செட்டாக அப்படியே இருந்தது. அது இரண்டு படுக்கை அறை கொண்ட ஃபிளாட். ஒரு படுக்கை அறையில் கட்டிலும், மெத்தையும் இருந்தன. இன்னொரு படுக்கையறையில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லாதது போல் சில பொருட்கள் மட்டும் இருந்தன.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அந்த அறையைத் தான் காலையில் அவள் உடை மாற்றவும், குளிக்கவும் பயன்படுத்தச் சொன்னான் இளஞ்சித்திரன்.
சமையலறையில் சில பாத்திரங்களும் மின்சார அடுப்பும் மட்டும் இருந்தன. மற்ற மளிகை சாமான் என்று எதுவும் இல்லாமல் துடைத்து வைத்தது போல் இருந்தது. பாத்திரங்கள் இருந்தாலும் அதில் எல்லாம் முன்பு அதிகம் சமைத்த அறிகுறி கூட இல்லை.
‘இந்த வீட்டு சொந்தக்காரு இன்னும் கல்யாணம் கட்டிக்காதவர் போல இருக்கு’ என்று நினைத்துக் கொண்டாள் கயற்கண்ணி.
அவ்வீட்டில் அவளின் எண்ணத்திற்கு ஏற்ப ஒற்றை ஆள் உபயோகப்படுத்தும் பொருட்கள் தான் அதிகம் தென்பட்டன.
‘இந்தச் சாமானை எல்லாம் அப்படியே ஓரங்கட்டிட்டு புதுசா நம்ம காசில் வாங்கின சாமான் மட்டும் வைச்சு புழங்குவோம்னு அவர்கிட்ட சொல்லி வைக்கணும்…’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஓட்டு வீட்டில் வாழ்ந்து, தென்னை ஓலை மறைவில் குளித்து என வாழ்ந்தாலும் தந்தை, தாயின் சொந்த உழைப்பில் வந்த பொருட்களை உபயோகித்துப் பழகியவளுக்கு இப்போது யாரோ ஒருவரின் பொருட்களை எடுத்து உபயோகிக்க மனம் வரவில்லை.
பூட்டியிருந்த வீடு என்பதால் ஆங்காங்கே தூசு படிந்திருக்க, அதை எல்லாம் அவள் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் வந்த இளஞ்சித்திரன் கை நிறையச் சாமான்களுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
“சாரி கண்ணு… ரொம்பப் பசிக்கிதா? எல்லாச் சாமானையும் கையோட வாங்கிட்டு வந்துருவோம்னு நினைச்சேன். அது என்னென்னா இம்புட்டு நேரம் இழுத்துருச்சு…” என்று சோர்ந்த முகத்துடன் வரவேற்ற மனைவியைப் பார்த்துச் சொன்னான்.
அவனின் கைகளில் இருந்த சில பொருட்களை வாங்கியவள், “பசி இல்லைய்யா. இம்புட்டு நேரமா உன்னைய காணோங்கவும் கொஞ்சம் பயந்துட்டேன்…” என்றவள் குரல் லேசாக நடுங்கவே செய்தது.
அவளின் நடுக்கத்தை அமைதியாகப் பார்த்தவன், தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் ஒரு ஓரமாக வைத்து விட்டு அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்து சோபாவின் கீழே “இங்கன வந்து உட்காரு கண்ணு…” என்று அமர வைத்தவன் தானும் அவளின் எதிரே அமர்ந்தான்.
எதற்கு என்று புரியா விட்டாலும் கணவனின் பேச்சைக் கேட்டு அமர்ந்தவள் அவனின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“நல்லா இப்படிச் சம்மணம் போட்டு உட்காரு கண்ணு…” எப்படி உட்கார வேண்டும் என்று தான் சம்மணமிட்டுக் காட்டினான்.
சம்மணமிட்டு முதுகை வளைக்காமல் நேராக அமர்ந்தவன், அவளையும் அமர வைத்துக் கண்களை மூட சொன்னான்.
அவன் என்ன செய்யச் சொல்ல நினைக்கிறான் என்று எதுவும் தெரியாமலேயே அச்சுப் பிசக்காமல் அனைத்தும் செய்து கொண்டிருந்தவள் கண்களையும் மூடி அமர்ந்தாள்.
“கண்ணைத் திறக்காம மனச ஒன்னு கூட்டி எங்களுக்கு ஒன்னுமில்லை. இப்போ பத்திரமான இடத்தில் இருக்கோம்னு சொல்லிட்டே இரு கண்ணு. உனக்கா திடனா நாம பத்திரமா இருக்கோம்னு இத்துனூண்டாவது நம்பிக்கை வர்ற வரை சொல்லு…” என்றான் அழுத்தமாக.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் பட்டென மூடிய இமைகளைப் பிரித்துப் பார்க்க, “செய் கண்ணு…” என்று இன்னும் தன் வார்த்தையில் அழுத்தத்தைக் கூட்டி சொன்னான்.
அடுத்தச் சில நிமிடங்கள் அவன் சொன்னதை அட்சரம் பிசகாமல் செய்தவள், “சொல்லிட்டேன்யா… கண்ணைத் திறக்கவா?” என்று பதினைந்து நிமிடம் கடந்த நிலையில் கேட்டவள் குரல் திடனாக வெளியே வந்தது.
அதை உணர்ந்தவன் “இப்போ கண்ணைத் திற கண்ணு…” என்று சொன்னவன், அவள் கண்களைத் திறந்ததும் “இப்போ எப்படி இருக்கு கண்ணு?” என்று கேட்டான்.
“நாம பத்திரமா தான் இருக்கோம்னு நம்பிக்கை இத்துனூண்டு இருக்குய்யா…” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு லேசாகச் சிரித்தவன், “சரி கண்ணு எழுந்திரு, சாப்பிடலாம்… ஏற்கனவே ரொம்ப நேரம் ஓடிப் போயிருச்சு…” என்றவன் தான் எழுந்து அவளையும் கை கொடுத்து எழுப்பி விட்டான்.
காலை உணவு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு புதிதாக வாங்கிய இரண்டு தட்டுக்களையும் கழுவி விட்டு வந்து தரையில் வைத்தான்.
“கொடுய்யா நான் எடுத்து வைக்கிறேன்…” என்று அவள் வாங்கிப் பரிமாற ஆரம்பித்தவள், “ஏன்யா என்னைய அப்படிச் செய்யச் சொன்ன? இப்படிச் செய்ய எல்லாம் எங்கன கத்துக்கிட்ட?” என்று கேட்டாள்.
“இப்போ மட்டும் இல்லை. உனக்குப் பயம், பதட்டம் வரும் போதெல்லாம் இனி இதைச் செய்யணும் கண்ணு. நம்ம மனச நாம கட்டுப்படுத்தி வைக்கலைனா நாம அதுக்கு அடிமை ஆகிருவோம். ஆசை, பயம், பதட்டம், கோபம், அழுகைனு எந்த உணர்வும் நம்ம கட்டுப்பாட்டில் இல்லன்னா அதோட கட்டுப்பாட்டுக்கு நாம போயிருவோம். அதுனால கண்டிப்பா நமக்கு நிம்மதி கிடைக்காது. நம்ம நிம்மதியை எப்படித் தக்க வச்சுக்கிறதுனு நாமதேன் தெரிஞ்சு வச்சுக்கணும்…” என்று சொன்னவனை வியப்பாகப் பார்த்தாள் கயற்கண்ணி.
“பெரிய பெரிய விசயமெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கயேய்யா…” என்று பிரமிப்புடன் சொன்னவளை பார்த்து மென்மையாகச் சிரித்தான் இளஞ்சித்திரன்.
“அவ்வளவு பெரிய விசயமெல்லாம் இல்லை கண்ணு. மனுசன் நினைச்சா மலையளவு விசயத்தையும் மடுவளவா மாத்த முடியும். இந்த உணர்வுகள் எல்லாம் நம்ம மனசோடயே ஒட்டிக்கிட்டு வர்றது. அதையும் நாம நினைச்சா நம்ம கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்க முடியும்…” என்றான்.
“சரிய்யா… இதெல்லாம் எப்படி எங்கன கத்துக்கிட்ட?” ஆர்வத்துடன் கேட்டாள்.
“இதைக் காலேஜில் படிக்கும் போதே யோகா கிளாஸ் போய்க் கத்துக்கிட்டேன் கண்ணு. உனக்கு ஞாபகம் இருக்கா? நான் ஸ்கூல் படிக்கும் போது எப்படி இருந்தேன்னு?”
“ஹான்… இருக்கே… அந்த வயசுலேயே சும்மா சண்டியர் கணக்கா சிலுப்பிக்கிட்டு திரிவியே…” அவனை விடச் சில வயதே இளையவள் என்பதால் அவளுக்கு நன்றாகவே அந்த வயது நினைவு ஞாபக அடுக்கில் இருந்தது.
“ம்ம் ஆமா… அதுக்குப் பிறகு எப்படி இருந்தேன்?”
“காலேஜுக்குப் படிக்கப் போறேன்னு சென்னைக்குப் போய்ட்டு வந்ததும் அந்தச் சண்டியரா நீயினு வாயை பிளந்துட்டுல பார்த்தேன். அப்படிப் பட்டணத்துக்கார பயலுகமாட்டம் வந்து நின்ன…” அன்றைய வியப்பு இன்னும் முகத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது போல் பாவனைக் காட்டினாள்.
“நான் மதுர காலேஜில் படிக்காம ஏன் சென்னை போனேன்னு தெரியுமா?”
“எனக்கு எப்படிய்யா தெரியும்? நீ வசதியான வீட்டுப்புள்ள. உன்னோட அய்யா நினைச்சா உன்னைய வெளிநாட்டில் கூடப் படிக்க வைக்க முடியும்னு நினைச்சுருக்கேன். அப்படி இருக்கும் போது நீ சென்னைல போய்ப் படிச்சது எனக்குப் பெரிய விஷயமா தெரியலைய்யா…” என்றாள்.
“காசு இருக்குங்கிறதுக்காக நான் சென்னைக்குப் போய்ப் படிக்கலை கண்ணு. நம்ம ஊரை விட்டு ரொம்பத் தூரத்துக்குப் போகணும்னு தேன் மதுர காலேஜ் எல்லாம் விட்டு சென்னைல தேன் படிப்பேன்னு அடம் பிடிச்சுப் போய்ப் படிச்சேன்…”
“ஓ…! நம்ம ஊரு மேல அப்படி என்னய்யா உனக்குக் கோபம்?”
“கோபம் ஊரு மேல இல்ல கண்ணு. ஏ அய்யன் மேலயும், அண்ணன் மேலயும் தேன் கோபம். எங்க அவுக கூட இருந்தா நானும் அரக்கன் மாதிரி மாறிருவேனோனு பயந்து அவுக பக்கத்துலயே இருக்கக் கூடாதுனு சென்னைக்கு ஓடினேன்…” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்,
“அரக்கன் மாதிரி அப்படி அவுக என்னய்யா பண்ணினாக?” திகைப்புடன் கேட்டாள்.
“கொலை…” என்று சொன்னவன் இன்னும் தன் கண் முன் பார்த்ததைச் ஜீரணிக்க முடியாமல் தலையைச் சிலுப்பினான்.
“கொலையா?” விதிர்த்துப் போய்க் கணவனைப் பார்த்தாள்.
“ம்ம்…” என்று தலையை அசைத்தவன், “ஸ்கூல் படிக்கும் போது, அந்த வயசுக்குரிய அலட்சியம் இருந்துச்சு. ஊர் பெரிய வூட்டு பையன்னு திமிரு இருந்தது. அதனால தேன் அப்போ சண்டியர் கணக்கா திரிவேன். அப்பயும் பசங்க கூட ஊர் சுத்துறது, ஏதாவது கலாட்டானு இருந்திருக்கேனே தவிர அடிதடி, சண்டைனு கூடப் போனதில்லை.
அப்பதேன் பிளஸ்டூ பரிட்சைக்குக் காத்திருந்த சமயம், நடுச்சாமம் வீட்டு பின்னாடி என்னமோ சத்தம் கேட்குதுன்னு போய்ப் பார்த்தா ஒருத்தனை போட்டு அண்ணனும், சில சொந்தக்காரவகளும் அடிச்சுட்டு இருந்தாவுக. அய்யா கொலைவெறியோட அவனைப் பார்த்து இன்னும் அவனை அடிங்கடானு தூண்டி விட்டுட்டு இருந்தார்.
“எவ்வளவு தைரியம் இருந்தா கீழ் சாதி நாய் நீ எங்க வீட்டுப் பொண்ணை விரும்புறேன்னு சொல்லிருப்ப? உன்னைய எல்லாம் விட்டு வச்சா அம்புட்டுக் கீழ் சாதி நாய்களுக்கும்ல குளிர் விட்டு போவும். விடலாமா? அப்படி விடலாமானு கேட்டு கேட்டே அந்த ஆளை அடிச்சாவுக. அப்போதேன் எதுக்கு அவனை அடிச்சாவுகனே எனக்குத் தெரிஞ்சது.
அய்யாவும், அண்ணனும் ஊருக்கு எதுனா பிரச்சனைனா முன்னாடி நிப்பாக. மேல் சாதி, கீழ் சாதினு பார்த்து தள்ளி நிப்பாகனு மட்டும் தேன் அது வரைக்கும் அவுகளைப் பத்தி நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா அன்னைக்கு அவுகளோட இன்னொரு முகத்தைப் பார்த்து மிரண்டுட்டேன்னு தேன் சொல்லணும். அதுவும் அவுக எல்லாம் போட்டு அடிச்ச அடியில் அந்த ஆளு செத்தே போனாருனு தெரிஞ்சதும் கொலைகார கூட்டத்துக்குள்ள நிக்கிற மாதிரியே இருந்தது.
அந்த ஆளை கொன்னதையும், அவனைத் தூக்கி மதுரை மெயின் ரோட்டுல போட்டு ஆக்ஸிடன்ட்னு சொல்லி செட்டப் பண்ணியதையும் பார்த்து அதுக்குப் பிறகு அய்யாவும், அண்ணனும் இருக்குற இடத்தில் நானும் இருந்தா அவுக புத்தி எனக்கும் வந்திருமோனு பயந்து தேன் சென்னைல தேன் படிப்பேன்னு அங்கன போய்ட்டேன். அவுகளைப் பார்க்க பிடிக்காம தேன் லீவ்க்கு கூட நம்ம ஊருக்கு வர மாட்டேன்.
எனக்கும் அவுக மாதிரி கோபப்புத்தி வந்துட கூடாதுனு தேன் யோகா கிளாஸ் போனேன். அப்போதேன் மனசை அமைதியா வச்சுக்கிறதை எல்லாம் கத்துக்கிட்டேன்…” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு பிரமித்து அமர்ந்திருந்தாள் கயற்கண்ணி.
அவனைப் பற்றிய இவ்வளவு விவரங்கள் அவளுக்கு இப்போது தான் தெரியும். அவன் சொன்னது போல் அவனின் தந்தையும், அண்ணனும் ஊரில் எதுவும் பிரச்சனை என்றால் முன் நின்று பார்ப்பார்கள். கீழ் சாதி, மேல் சாதி எனப் பிரித்துப் பார்ப்பார்கள்.
சாதி கலவரம் என்றால் முதல் ஆளாக நிற்பார்கள் என்று தான் அவள் அறிந்திருந்தாள்.
சாதி விட்டு சாதி விரும்புகிறவர்களைக் கொலை வரை செய்துள்ளார்கள் என்பதை இப்போது தான் அறிந்து கொண்டாள்.
கிராமம் என்றாலும் பல விஷயங்கள் இலைமறை காயாக மறக்க படுவதுண்டு. அதுவும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர்களுக்கு ஊருக்குள் மறைமுகமாக நடக்கும் பல உள் விவகாரங்கள் தெரிவதில்லை.
தெரிவதில்லை என்று சொல்வதை விடத் தெரிய விடுவதில்லை என்பது சரியாக இருக்கும்.
அவர்களின் கொடூர புத்தி தெரியாததால் தான் பெற்ற மகனையே அவர்கள் கொல்ல துணிந்ததை அவளால் நம்பக் கூட முடியவில்லை.
அதோடு ஒன்று தோன்ற கணவனை ஆழ்ந்து பார்த்து ” சாதி விட்டு சாதி விரும்புனதுக்காக ஓ அய்யனும், அண்ணனும் ஒருத்தரை கொன்னதை நேரில் பார்த்தும் எப்படியா கீழ் சாதி பொண்ணான என்னைய விரும்பின? அப்போ என்னைய விரும்பினா ஓ உசுருக்கு உத்தரவாதம் இல்லனு தெரிஞ்சே தேன் என்னைய விரும்பினாயா?
என்னைய விரும்புறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது ஓ உசுரை பத்தி யோசிச்சுருக்கலாமேயா? அதுவும் பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பன்னெண்டாவதை கூட உருப்படியா முடிக்காத என்னைய போய் விரும்பி இப்போ என்னைய இழுத்துக்கிட்டு வந்து உசுருக்கு பயந்து ஒளிய வேண்டிய நிலையை ஏன்யா இழுத்து விட்டுக்கிட்ட? நீ நினைச்சுருந்தா இப்படி எதுவுமே நடக்காம தடுத்துருக்க முடியும் தானே. ஏன்யா தடுக்காம போன?” என்று கேட்டாள் கயற்கண்ணி.
அவளை அமைதியாகப் பார்த்த இளஞ்சித்திரன் “நல்லா தெரியும் கண்ணு. உன்னைய விரும்பினா ஏ உசுருக்கு உத்தரவாதம் இல்லனு நல்லாவே தெரியும் கண்ணு…” என்றான்.
“அப்புறமும் ஏன்யா என்னைய விரும்பின?” என ஆதங்கமாகக் கேட்டாள்.
“காதல் கண்ணு காதல்! எப்போ வரும்? ஏன் வரும்? எதுக்கு வரும்? யார் மேல வரும்? இப்படி எதுவும் அறியாமல் வரும் காதல் கண்ணு! அந்தக் காதல் உன்னைய கீழ்சாதின்னு தனிச்சு பார்க்க விடலை. அந்தக் காதல் நீ தேன் எனக்குனு அடிச்சு சொல்லுச்சு. அந்தக் காதலுக்கு முன்னாடி ஓ சாதி எனக்குத் தெரியலை. ஓ படிப்புக் குறைவா தெரியலை. ஓ வசதியும் குறையா தெரியலை. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்தக் கண்ணிவெடி எனக்கே எனக்குனு வேணும். அவ்வளவு தான்…!” என்றான் கண்களில் பொங்கிய காதலுடன்.
அவன் சொல்ல சொல்ல கயற்கண்ணிக்கு அவன் தன்னிடம் காதல் சொன்ன கணமும், அவன் தன் மனதை கொள்ளைக் கொண்ட விதமும், தங்கள் காதல் வீட்டிற்குத் தெரிந்ததும், அவர்கள் தங்களைப் பிரிக்கச் செய்த சூழ்ச்சியும் ஒவ்வொன்றாக மனதில் உலா போக ஆரம்பித்தது.
மனம் சென்ற உலாவில் தானும் கலந்து கொண்டாள் கயற்கண்ணி.
மனைவியின் முகப் பாவனையைக் கண்டு அவளின் மனதை அறிந்து கொண்ட இளஞ்சித்திரன், அந்த உலாவில் தானும் பயணிக்க ஆரம்பித்தான்.