பூவோ? புயலோ? காதல்! – 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 5
நான்கு நாட்களுக்குப் பிறகு…
அந்த நள்ளிரவு நேரத்தில் சாலையில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு விரைந்து சென்று கொண்டிருந்தன.
அதில் ஒன்றாக அப்பொழுது தான் ஒரு பேருந்தை முந்தி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கி கொண்டிருக்க, பேருந்தில் மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
அது நேரம் நள்ளிரவு இரண்டு மணி. தூக்கத்தில் பேருந்தில் இருந்த ஒரு சிலர் இருக்கையை அசவுகரியமாக உணர்ந்து நெளிந்து விட்டு கொண்டனர்.
அதே போல் லேசாக நெளிந்த கயற்கண்ணிக்கு உறக்கம் லேசாகக் களைய ஆரம்பிக்கவும், தான் இருக்கும் இடம் உணர்ந்து சட்டெனத் தான் அவ்வளவு நேரம் தலை சாய்த்திருந்த தன்னவனின் தோளில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவளின் அசைவில் அந்தத் தோளுக்குச் சொந்தமானவனான இளஞ்சித்திரனுக்கும் உறக்கம் கலைய கண்களைப் பட்டென விழித்தவன் “கண்ணு என்னாச்சுடா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.
அவனின் கேள்வியைக் காதில் வாங்காது சுற்றும், முற்றும் பார்த்தவளின் கையைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பி “என்ன கண்ணு பயந்துட்டியா? பயப்படாதே டா! நாம இப்ப பத்திரமா இருக்கோம். இனி ஒரு தொந்தரவும் இல்லை. நீ தூங்கு…!” என்றான் அவளின் பார்வையின் அர்த்தத்தை நன்றாக உணர்ந்தவனாக.
அவனைப் பார்த்து மனம் கலங்கியவள் போலத் தயக்கத்துடன் விழித்தவள் பின்பு அவனின் பேச்சு புரிந்து ‘சரி’ எனத் தலையசைத்தாள்.
அவளின் அந்தக் கலக்கம் அவனை மனம் வருந்த வைத்தது. ஆனாலும் அதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல், தன்னைச் சாதாரணமாகக் காட்டிக் கொண்டவன் இதழ் பிரியாமல் லேசாக உதட்டில் புன்னகையைக் காட்டி “தூங்குடா கண்ணு! இனிமேயும் நாம ஓடிட்டே இருக்க வேண்டிய நிலையில் தேன் இருக்கப் போறோம். இதுபோலக் கிடைக்கிற செத்த நேரத்துல தூக்கம் நம்மள அதுவே தழுவினா தேன் உண்டு.
தானா வாச்ச இந்தத் துக்கத்தை விட்டுறாதே, தூங்கு! இனி என்னன்னு நினைச்சு பயந்து நடுங்காம இந்த நிமிசத்தை மட்டும் நினைச்சுக்கோடாமா…” என்றவன் குரல் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லியதாக ஒலித்தாலும் அதில் இருந்த அவனின் நிதானம் அவளையும் அமைதி அடைய வைத்தது.
அவனுக்கும் தானே என்னைப் போலப் பயம் இருக்கும்? அப்படி இருந்தும் தன்னைப் பொறுமையாக அமைதிப்படுத்தும் அவனின் இந்தக் குணம் தானே அவனின் பின்னால் என்னை இப்படி வர வைத்தது. உயிர் பயம் துரத்திக்கொண்டிருந்தும் தன்னுடையவன் தயவில் எல்லாம் தவிடு பொடி ஆகும் என்ற திடம் அவளில் மனதிலும் உண்டாகத் தானும் புன்னகைக்க முயன்று கொண்டே “நான் இங்கினக்குள்ள சாயணும்…” என அவனின் தோளை காட்டி முணுமுணுத்தாள்.
அவளில் பேச்சில் இப்பொழுது நன்றாகவே சத்தம் இல்லாமல் சிரித்தவன் “கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்கிட்ட கேட்டுக்கிட்டா சாய்ஞ்ச?” எனக் கேலியாகத் தூக்கத்தில் அவளாகச் சாய்ந்ததைக் குறிப்பிட்டான்.
அவனின் கேலியில் கூச்சம் வந்தாலும் அதை மறைத்து “அது எனக்குச் சொந்தமானது. நான் அப்படித்தேன் சாய்வேன்…” என்று பட்டெனப் பதிலளித்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அதான் உனக்கே தெரியுதே? உனக்குச் சொந்தமானதுன்னு. அப்புறமும் என்ன பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க?” எனக் கேட்டவனைப் பார்த்துக் கண்கலங்கியவள்,
“எனக்குத் தெரியுதுயா. ஆனா எனக்குச் சொந்தமானது இல்லைனு ஆக்கிருவாகளோன்னு இன்னமும் பயமா இருக்கு. அத்தன பேரு கண்ணுல மண்ணைத் தூவிட்டு ஓடியாந்திருக்கோம். அந்தக் கோபத்துல நம்மள எதுவும் செய்துருவாகளோனு பயமா இருக்கு…” என்று சொன்னவளின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வந்து விழுந்தது.
அவளின் கண்ணீரையும், கலக்கத்தையும் உணர்ந்தவன் தானாகவே அவளை நெருங்கி அமர்ந்து அவளின் தோளில் கையைப் போட்டு இதமாக அணைத்து கொண்டவன் “அழாத கண்ணு! என்னைய உன்னோடது இல்லன்னு யாராலும் ஆக்க முடியாது. ஆக்கவும் விட மாட்டேன். அப்படி மண்ணைத் தூவிட்டு ஓடி வந்தது நம்ம நன்மைக்குத்தேன் கண்ணு. நாம கடைசியா எந்த ஊருக்கு போனோம்னு தெரியாம குழம்பி அவங்க மண்டை காயணும். அதுக்குத் தேன் இந்த ஓட்டம். இனி நாம ஓட வேண்டியிருக்காது…” எனக் குரல் இறுக உறுதியாகச் சொல்லி அவளின் தோளை அழுத்தி விட்டான் இளஞ்சித்திரன்.
தனக்குத் தைரியம் சொன்ன தன்னவன் தோளில் சாய்ந்து “நமக்கு மட்டும் ஏன்யா இப்படி?” எனக் கேட்டு லேசாகத் தேம்பினாள் கயற்கண்ணி.
அவளின் தோளை இன்னும் லேசாக அழுத்தியவன் சில நொடிகள் மௌனமாக இருந்தான். பின்பு ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட இளஞ்சித்திரன் “அம்புட்டும் நாம வாங்கி வந்த வரம்…!” என்றவன் குரலும் இப்போது கலக்கமாக ஒலித்தது.
அதை உணர்ந்து மெல்ல நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனும் அந்நொடி அவளைப் பார்க்க இருவரின் கண்களும் அந்தப் பேருந்தின் மெல்லிய ஒளியில் கண்ணீரால் ஜொலித்துக் கொண்டிருந்தது.
உனக்கு நான் ஆறுதல். எனக்கு நீ ஆறுதல் என்பது போல இருவரின் கண்களும் கலந்து நின்றது.
பேருந்தில் யாரோ ஒருவரின் இருமல் சத்தம் கேட்க, தாங்கள் இருக்கும் இடம் உணர்ந்து அவளின் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டு சிறிது தள்ளி அமர்ந்து கொண்டு தன் தோளில் அவள் சாய்வதற்கு வசதியாக வைத்து விட்டு “விடிய இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்குடாமா. அதுக்குள்ளார கொஞ்சம் கண் அசந்துக்கோ…!” என்றான்.
“ம்ம்…” என்றவள் கண்களை மூடி தூங்க முயன்றாள். அவனும் சீட்டில் நன்றாகத் தலையைச் சாய்த்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். அவளைத் தூங்க சொன்னவனுக்குத் தூக்கம் எட்டி நின்று வேடிக்கை காட்டியது.
சிறிது நேரத்தில் கயற்கண்ணி உறக்கத்தைத் தழுவ தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். “பாவம்டா நீ! உன்னைய நாலு நாளா பஸ்ஸிலேயே அலைய வைக்கிறேன். அந்த அலைச்சலில் உடம்பு வலிச்சும் அதைக் காட்டிக்காம எனக்குத் தெரியாம சமாளிக்கப் பார்க்குற. எனக்கு நல்லாவே தெரியுது ஓ வலி. ஏன் வாட்டசாட்டமா இருக்குற எனக்கே வலிக்கும் போது மென்மையான உனக்கு வலிக்கத் தானே செய்யும்?
நம்மோட இந்த ஓட்டம் இன்னும் ஒரு நாளு தேன்டா. இதுவரை அவுகளுக்குப் போக்கு காட்ட நாம ஓடின ஓட்டம் எல்லாம் போதும். இனி நமக்குன்னு ஒரு வீட்டில் நமக்கேயான நம்ம வாழ்க்கையைத் துவங்குவோம்…” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவளையே நேரம் கடந்தும் பார்த்துக் கொண்டே இருந்தான்.
நான்கு மணி ஆன நிலையில் பேருந்து சிறிது ஓய்விற்காகச் சாலையோரம் கடைகள் இருக்கும் பகுதியில் சென்று நின்றது. நடத்துனர் பதினைந்து நிமிடம் பேருந்து நிற்கும் எனப் பயணிகளுக்கு அறிவிக்க, உறக்கம் கலைந்து ஒவ்வொருவராக எழ ஆரம்பித்தனர்.
கயற்கண்ணியும் சத்தம் கேட்டு எழுந்து நேராக அமர்ந்து இளஞ்சித்திரனை பார்த்தாள். அவன் கண்களில் சிறிதும் உறக்கம் இல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து “நீ தூங்கலையாய்யா?” எனக் கேட்டவளுக்கு இல்லை என்ற அவனின் தலையசைப்பே பதிலாகக் கிடைத்தது.
அதில் நொடியில் அவளின் முகத்தில் சுணக்கம் வந்துவிட “இதுக்கு ஏன்டாமா வருத்தப்படுற? நாலு நாளா பஸ்ஸில் தூங்கிக்கிட்டு தானே இருக்கோம். அதான் இப்ப தூக்கம் வரலை. சரி எழுந்திரு, பஸ் கொஞ்ச நேரம் தேன் நிக்கும். அதுக்குள்ளார பாத்ரூம்மு போய்ட்டு வந்துடலாம்…” என்று அவளை மேலும் யோசிக்க விடாமல் எழுப்பி அழைத்துச் சென்றான்.
பேருந்தை விட்டு இறங்கும் போதே இருவரின் கவனமும் உச்சி முனையில் நின்றன. கயற்கண்ணி வெளிப்படையாகவே சுற்றும், முற்றும் பயத்துடனே பார்த்து தன் கவனத்தை வைக்க, இளஞ்சித்திரன் தன் பயத்தைக் காட்டி கொள்ளாமல் கவனத்துடன் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தான். இனி யாரின் கண்களிலும் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இதுவரை வேண்டும் என்றே அவர்களின் கண்களில் பட்டிருந்தாலும் இனி தெரியாமல் கூட அப்படி நடந்து விடக் கூடாது என்பதால் இளஞ்சித்திரன் அதிகக் கவனத்துடனே இருந்தான்.
தங்களுக்குத் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா? என ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே நடந்தான். இயற்கை உபாதையைச் சரி செய்து விட்டு வந்து, இருவரும் தேநீரை வாங்கிப் பருகி விட்டு வேகமாகப் பேருந்தில் வந்து அமர்ந்தார்கள்.
இருக்கையில் அமர்ந்ததும் கயற்கண்ணி நிம்மதியாக ஒரு மூச்சுவிட்டு இளஞ்சித்திரனை பார்த்து லேசாகச் சிரித்தாள். ஆனால் பதிலுக்குச் சிரிக்காமல் “ஒவ்வொரு நிமிசமும் நீ பயந்து நடுங்குற நிலைக்கு நான் கொண்டாந்துட்டேன்ல?” என்று வருத்ததுடன் கேட்டான்.
அதில் அவளின் சிரிப்பு அப்படியே உறைந்து விட ‘இல்லை’ என வேகமாகத் தலையசைத்தாள்.
“இல்லடா உண்மைதானே? இப்போ கூடப் பயந்துட்டே தானே போனோம்…” என்று இளஞ்சித்திரன் கேட்க,
“அப்படிப் பாத்தா நாந்தேன் இந்த நிலைக்குக் பொறுப்புயா நிம்மதியா ராசா போலச் சுத்திட்டு இருந்த ஓ மனசில சலனத்த வரவைச்சு இப்ப ஓடி ஒளியுற நிலைக்குக் கொண்டாந்து விட்டுப்புட்டேன்…” எனக் கண்கள் கலங்க சொன்னாள்.
“இல்லடாமா, கண்டிப்பா இல்லை. நாந்தேன்! நான் மட்டும் தேன் பொறுப்பு. விலகி விலகி போன உன்னைய விரட்டி, விரட்டி காதலை சொல்லி இப்ப உசுரு பயத்த கொடுத்துட்டேன்…” என்று வருந்தினான்.
“இல்லை…” என்று அவளும் ஏதோ சொல்லி தன்னையே காரணம் சொல்லிக்கொண்டாள்.
இங்கே கர்நாடக மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இருவரும் மாறி மாறி இன்றைய நிலைக்குத் தானே காரணம் எனச் சொல்லி கொள்ள, “இன்னுமாடா அந்த ஓடுகாலிக இருக்குற இடம் தெரியலை? இத்தனை பயலுக நம்ம ஆளுக இருந்து என்ன பிரயோசனம்டா? இரண்டு ஓடுகாலிக நாலு நாளா ஆட்டம் காட்டுதுங்க. அதுங்களைப் பிடிக்கத் துப்பில்லாம அதுங்க எங்குட்டு போனாவுகனே தெரியலைன்னு வந்து நிக்கிறிங்க. நம்ம குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிகளை இன்னேரம் வெட்டி கூறு போட்டுட்டேன்னு வந்து சொல்ல வேணாமா?” என்று கர்ண கொடூரமாக ஆக்ரோஷமான குரலில் கத்தி கொண்டிருந்தார் வேங்கையன்.
“இல்லய்யா! நம்ம தம்பி பய அண்ணங்காரன் என்கிட்டயே ஆட்டம் காட்டுறான்யா. இங்கன இருந்து அவன் அந்த ஓடுகாலி புள்ளயையும் இழுத்துக்கிட்டு மெட்ராசு பஸ்ல போறதாத்தேன் தகவல் வந்ததுயா. நானும் மெட்ராசுல நம்ம தம்பி பயலுக்குத் தெரிஞ்ச இடத்துல எல்லாம் ஒரு அலசு அலசிப்புட்டேன். ஆனா அங்கிருந்து பய கோவை போய்ட்டான்னு நம்ம சொந்தகார பய ஒருத்தன் அங்க பார்த்தான்னு சொல்லவும், நேர அங்கன ஓடினேன்யா. ஆனா அங்கிருந்து நம்ம பய ஓடிட்டான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
பொறவு குமரி பக்கம் அவனைப் பார்த்ததா தகவல் தெரிஞ்சு போனா அங்கனயும் இல்லைய்யா அவன். ஊரு ஊரா நம்ம சொந்தகாரனுங்க கண்ணுல பட்டுட்டு அங்கிருந்து போயிருக்கான். ஆனா கடைசியா எந்த ஊர் பஸ்ல போனான்னு யாருக்கும் தெரியலை. நானும் தம்பி பய எங்க எல்லாம் போயிருக்க முடியும்னு யோசிச்சு அங்கன எல்லாம் அலசிட்டு ஏமாந்து போய் இப்போ தான் வீட்டுக்குள்ள நுழையுறேன்யா. இனி எங்க எப்படித் தேடனு சொல்லுங்கய்யா செய்றேன். அந்த ஓடுகாலிகளை ஒரு கை பார்த்தாதேன் ஏ கண்ணிலே உறக்கம் வரும்யா…” என்று ஏமாற்றம் தந்த வெறுப்பில் தந்தையை விட ஆக்ரோஷமாகச் சபதமிட்டான் இமயவரம்பன்.
மகன் சொன்னதை எல்லாம் கேட்ட வேங்கையன் ஒரு கையை இடுப்பில் கைவைத்து, இன்னொரு கையால் தன் மீசையை முறுக்கி விட்டவர், “பய விவரமா தான் நமக்கு ஆட்டம் காட்டியிருக்கான். இந்த வேங்கையன் மவன்ல. அதான் வேங்கையா பாய்ஞ்சிருக்கான். இந்த விவரத்தை இந்தப் பய பொண்ணு தேர்ந்தெடுக்குற விசயத்திலேயும் காட்டிருக்கலாம். இதுல மட்டும் இந்தப் பய புத்தி எப்படி இப்படிப் போச்சோ போ. ஆனாலும் இந்த அப்பனை பத்தி முழுசா அவனுக்குத் தெரியல. தெரிய வைக்கிறேன்…” என மீசையை இரண்டு கையாளும் இழுத்து விட்டுக் கொண்டார்.
“வரம்பா நம்ம ஊரு பயலுகளை எல்லாம் அவுக அவுக வீட்டுக்குப் போகச் சொல்லு. கொஞ்ச நாள் விசயத்தை ஆற போடு. ஓ தம்பி நம்ம எங்கனக்குள்ள எல்லாம் தேடுவோம்னு தெரிஞ்சே அந்த ஊரெல்லாம் நாலு நாளா ரவுண்டு போட்டு நமக்கு ஆட்டம் காட்டிருக்கான். ஏ கணிப்புச் சரினா பய இப்ப நமக்கு இதுவர பழக்கம் இல்லாத ஊரு பக்கம் தான் போய்ட்டு இருப்பான். ஒருநாளு கண்டிப்பா வெளிய தலையைக் காட்டுவான். அன்னைக்குக் கோழியைப் பிடிச்சு அமுக்குறாப்புல அமுக்கி புடுவோம்.
என்னைக்கி இருந்தாலும் இந்த அப்பன் கையால தான் அவனுக்குச் சாவுன்னு அவனே அவன் தலையெழுத்தை எழுதி வச்சுட்டு போய்ட்டான். இனி அவனே நினைச்சாலும் அதை மாத்த முடியாது…” என்று கொடூரம் தாங்கிய குரலில் சொன்னவரின் கண்களும் கொடூரமாக ஜொலித்தது.
“அதில் ஏ பங்கும் இருக்கும்யா…” என்று தானும் கர்ஜித்த இமயவரம்பன் “நான் போய் நம்ம பயலுகளை அனுப்பிட்டு வர்றேன்யா…” என்று வாசலில் நின்றிருந்த ஆட்களை அனுப்பி வைக்கச் சென்றான்.
அதே ஊரின் இன்னொரு மூலையில் இருந்த அந்த ஓட்டு வீட்டின் உள்ளே “விசயம் தெரிஞ்ச அன்னைக்கே அவ சோத்துல வெசத்த வச்சிருந்தா இப்ப ஒடுகாலினு பேரு வாங்கியிருப்பாளா? எல்லாம் உங்களால தான், ஒத்த பொட்டபுள்ள அவளை அடைச்சு மட்டும் போடுன்னு சொன்னீங்கன்னு அடைச்சு வச்சா ஓட்டை பிரிச்சு அந்தப் பெரிய வீட்டு பய கூட ஓடி போயிருக்கா. இந்தக் கழுதைக்கு இழுத்துட்டு ஓட அந்த வீட்டுப் பயதேன் கிடைச்சானா? கேனச்சிறுக்கி! நம்ம யாரு. அவுக யாருனு புத்தி வேணாம்?” அழுகையும், ஆங்காரமும் சேர்ந்து கத்திய வேலம்மாள் தன் கணவனான கந்தசாமியையும் விடாமல் திட்டி தீர்த்தார்.
“அடியே வேலு! சும்மா கத்தாம கெடடி! ஒத்த பொட்டபுள்ளய பார்த்துக்கத் துப்பில்லாம ஓட விட்டுப்புட்டு இப்ப மூக்க சிந்தினா ஆச்சா? அந்த வீட்டு பெரிய மனுஷன் நாலு நாளா நம்மள கண்ணுல காங்க விடாம விரட்டி விரட்டி காவ காக்க நம்ம வீட்டை சுத்தி ஆளை போட்டுருக்காரு. நாம என்னவோ அவுக வீட்டு பயல வீட்டுக்குள்ளார ஒளிச்சு வச்சுக்கிட்டது போல வீட்டையே இரண்டாக்கிட்டு வேற போட்டு வச்சுருக்காரு.
போ! போய் அதை எல்லாம் ஒதுங்க வை! ஒம் மவள எப்படியும் அந்த வீட்டு மனுஷன் இழுத்துட்டு வந்து நம்ம வீட்டுக்குள்ள தள்ளுவாரு. அப்போ ஓ மவளுக்கு வெசத்தை வைச்சு கொல்லு. இப்ப போய்ப் பொழப்ப பாரு…” என்று வேலம்மாளை மேலும் பேச விடாமல் வேலையைப் பார்க்க விரட்டி விட்டு வீட்டுத் திண்ணையில் சென்று அமர்ந்தார்.
இளஞ்சித்திரன், கயற்கண்ணி இருவரின் உயிரும் பெற்றவர்களின் கையிலேயே ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க, இங்கே பெங்களூர் மாநகரில் உள்ள பெலந்தூர் பகுதியில் ஒரு ஆட்டோவில் மேடு, பள்ளத்தில் குலுங்கிய படி இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது காலை மணி எட்டு ஆகியிருந்தது. பேருந்தில் வந்த பயணக் களைப்பில் இருவரின் முகமே சோர்ந்திருந்தது. கலைந்த தன் கேசத்தை ஒதுக்கி விட்ட படி தாங்கள் செல்லும் வழியைப் பார்த்துக் கொண்டு வந்தாள் கயற்கண்ணி.
அவளையே பார்த்துக் கொண்டு காற்றில் ஆடிய அவளின் பின் கேசத்தைத் தன் கையில் லேசாகப் பிடித்து இன்னும் பின்னால் விட்டவன் “என்ன கண்ணு இப்பயாவது கேட்பியா? கேட்க மாட்டியா?” என்று வினவியவனை வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவள் திரும்பி கேள்வியாகப் பார்த்தாள்.
“என்னய்யா கேட்கணும்?”
“நான் உன்னைய இப்ப எங்கன கூட்டிட்டு போறேன்னு தேன். வூட்டை விட்டு வெளியில் வந்த நிமிசத்துல இருந்து நீ இதுவர ஒருதடவ கூட நாம எங்க போறோம்னு கேட்கவே இல்லை. நாலு நாளா நான் எந்தப் பஸ்ஸில் ஏறினாலும் என்ன ஏதுன்னு ஒரு கேள்வி கூடக் கேட்காம என் பின்னாடி வர்ற. நானா சொன்னாதான் நாம எங்க போறோம்னே உனக்குத் தெரியுது. நானும் நீயா வாயை திறந்து எங்க போறோம்னு எங்கயாவது கேட்பனு பார்த்தேன். ஆனா இப்போ வர கேட்கலை. இனியும் நீ கேட்பனு எனக்கு நம்பிக்கை இல்லை. அதான் நானே எடுத்துக் கொடுக்கிறேன். இப்பயாவது நாம எங்க தான் போறோம்னு கேளேன்….” என்றான்.
“ஏன் கேட்கணும்யா?” அவளோ திருப்பிக் கேட்டாள்.
அவள் கண்களையே கூர்ந்து சில நொடிகள் பார்த்தவன், “நான் ஏமாத்திருவேன்னு பயமா இல்லையா? இந்த நேரத்துல எந்தப் பொண்ணா இருந்தாலும் சாதாரணமா கேட்குற கேள்வி எங்க போகப் போறோம்? அடுத்து என்ன செய்யப் போறோம்? நாம எங்க தங்குவோம்? அப்படினு தானே? ஆனா அந்தச் சாதாரணக் கேள்வி கூட என்னைய நீ கேட்கலையே ஏன்?” எனக் கேட்டான்.
அவளோ அதற்குப் பதில் சொல்லாமல் அவன் கண்களையே விடாமல் ஊடுருவுவது போல் பார்த்தாள். அவனும் எந்தச் சலனமும் இல்லாமல் அவளின் கண்களைப் பார்க்க “ஓ கண்ணே சொல்லுதுயா, உன்னைய நான் முழுசா நம்பலாம்னு. மொதல்ல ஓ மேல நம்பிக்கை இல்லனா நீ கூப்பிட்டதும் ஓ பின்னால வந்துருக்கவே மாட்டேன்.
ஓ மேல நம்பிக்கை வைச்சு கிளம்பிட்டு வெளிய வந்ததும், என்னைய எங்க கூட்டிட்டு போவ? எங்க வச்சு வாழவைப்பனு கேட்குறது தான் ஓ மேல நம்பிக்கை இல்லாதது போல ஆக்கிரும். என்னைய இழுத்துட்டு வந்தா உசுரு போகும்னு தெரிஞ்சே துணிஞ்சு என்னைய கூட்டிட்டு வந்துருக்க. இதுக்கு மேல நீ ஏமாத்திருவனு நினைக்க என்ன இருக்கு?
என்னைய கூட்டிட்டு வந்த உனக்கு, எங்க? எப்படி வச்சு வாழ வைக்கணும்னும் நல்லாவே தெரியும். உனக்கு நல்லா தெரிஞ்ச ஒன்னை நான் ஏன்யா கேட்கணும்? இன்னும் கூட நீ எங்கனக் கூட்டிட்டு போனாலும் நான் வருவேன். ஆனா அதுக்கு இப்ப அவசியம் இல்ல போல இருக்கே. வீடா வருதே இங்கே. நாம இங்கனக்குள்ள தேன் எங்கனயாவது தங்க போறோம் போல…” அவனின் மீது இருக்கும் நம்பிக்கையைச் சாதாரணம் போலச் சொல்லி விட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவளை மனம் உருக பார்த்துக் கொண்டு வந்தான் இளஞ்சித்திரன்.
வெளியே பார்த்து விட்டு உள்ளே திரும்பியவள் அவனின் அந்தப் பார்வையில் கூச்சம் கொண்டு தலையைக் குனிந்தாள். “ஏன்யா அப்படிப் பார்க்கிற?” என்று குனிந்த தலையுடன் முனங்களாகக் கேட்டாள்.
சிறிது நேரத்திற்கு முன் இருந்தது போல இல்லாமல் காதல் நிறைந்து அப்பொழுதே அவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வர துடிப்பது போல் இருந்தது அவனின் பார்வை.
சில நொடிகளுக்குப் பிறகு “இல்லி எல்லி ஓகுபேக்கு?” (இங்கே எங்கே போகணும்?) என்ற ஆட்டோ ஓட்டுனரின் கேள்வியில் மோனநிலையில் இருந்து கலைந்தான் இளஞ்சித்திரன்.
முதலில் அவரின் கன்னடம் புரியாமல் முழித்தவன் தான் வந்த தெருவை கவனித்து எந்த வீடு எனக் கேட்குறார் எனக் கணித்தவன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடையாளத்தைச் சொன்னான்.
அவன் சொன்ன சில நொடிகளில் ஒரு மூன்று அடுக்குக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முன் வண்டி நின்றது. அதைப் பார்த்தவன் ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு கயற்கண்ணியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
ஆட்டோ சத்தம் கேட்டு வேகமாகக் கீழ் தளத்தில் இருந்த ஒரு சிறிய வீட்டின் உள்ளிருந்து ஓடி வந்த ஒருவன் “எவரண்டா நூவு?”(யார் நீங்க?) எனக் கேட்டான்.
அவனின் கேள்வியை அரைகுறையாகப் புரிந்து கொண்டு “தேர்ட் ப்ளோர் 108 வது நம்பர் வீட்டுக்கு வந்திருக்கேன். மஞ்சுநாதாகிட்ட பேசிட்டேன். உங்ககிட்ட சொல்லி சாவி வாங்கிக்கச் சொன்னார். நீங்களும் ஒரு டைம் பேசிருங்க…” என்றவன் தன் போனை எடுத்து மஞ்சுநாதாவிற்கு அழைத்து அவரிடம் தான் இங்கே வந்து விட்டதாக ஆங்கிலத்தில் உரைத்து விட்டு அந்தக் குடியிருப்பில் காவலாளியாக இருக்கும் எதிரே இருப்பவரிடம் போனை கொடுத்தான்.
காவலாளி சிறிது நேரம் மஞ்சுநாதாவிடம் பேசி முடித்துவிட்டு வீட்டு சாவியை எடுத்து வருவதாகச் சொல்லி மீண்டும் உள்ளே சென்றான்.
அவன் சென்றதும் “என்னய்யா இவுக பேசுறதெல்லாம் ஒண்ணுமே புரியல…” என இவ்வளவு நேரம் மொழி புரியாமல் திருதிருத்துக் கொண்டிருந்தவள் பயத்துடன் கேட்டாள்.
“கர்நாடகால இருக்கோம்ல கண்ணு? கன்னடம் பேசுறாவுக. எனக்கும் ஒன்னும் புரியலடா. ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு இருக்கேன்…” என்றான் மெதுவான குரலில்.
அவனின் ரகசியமான குரலில் அவளுக்குப் புன்னகை அரும்பினாலும், மொழி புரியாத ஊரில் தாங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் உள்ளுக்குள் பயந்து தான் போனாள் தன் ஊரை தவிர வெளியூரில் எங்கும் இதுவரை தங்கியிறாத அந்தக் கிராமத்துப் பெண்கிளி.
காவலாளி சாவியை எடுத்துக் கொண்டு வந்து தன் பின்னால் வரும் படி அழைத்தான். அந்த அடுக்கு மாடியில் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் எட்டு வீடுகள் கொண்டதாக இருந்தது.
தரை தளத்தில் இரண்டு வீடுகள். முதல் தளத்தில் இரண்டு, இரண்டாம் தளத்தில் இரண்டு, மூன்றாவது தளத்தில் இரண்டு என இருந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு வீட்டின் கதவை திறந்து உள்ளே அழைத்துச் சென்றவன் “நானு கெலயத்தா இரேரி. எதனு பேக்குந்தரக் கூங்கண்டா…”(நான் கீழே தான் இருப்பேன். எதுவும் உதவி வேணுமா கூப்பிடுங்க) எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் கதவை தாழ் போட்டுவிட்டு வந்த இளஞ்சித்திரன், வீட்டை பார்த்துக் கொண்டு நின்ற கயற்கண்ணியிடம் வந்தவன் அவளின் தோளை பிடித்துத் தன் புறம் திருப்பி, அவளின் கண்ணோடு கண்கள் கலந்து “இன்னும் கொஞ்ச நேரத்துல நமக்குக் கல்யாணம் கண்ணு…” என்றான்.