பூவோ? புயலோ? காதல்! – 35

அத்தியாயம் – 35

“அம்மா…” என்ற அழைப்புக் கேட்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்த வேலம்மாள் தலையைத் தூக்கி பார்த்தார்.

வாசல் அருகில் நின்றிருந்தவளை பார்த்து படபடவென்று எழுந்து நின்றார் வேலம்மாள்.

“கயலு…” என்று கண்கள் கலங்க அழைத்தார்.

அவர் அழைத்த மறுநிமிடம், “அம்மா…” என்று ஓடிச் சென்று அன்னையின் கால்களைக் கட்டிக் கொண்டாள் கயற்கண்ணி.

“உன்கிட்ட சொல்லாம போனதுக்கு மன்னிச்சுடுமா…” என்றாள்.

மகளைத் தூக்கி நிறுத்தியவர், “சொல்லாம போனதுக்கா?” என்று கேட்டார்.

“ஆமாம்மா… சொல்லாம போனதுக்கு மட்டுந்தேன் மன்னிக்கச் சொன்னேன். அவரு கூடப் போனதுக்குக் கேட்கலை…” என்றாள்.

மகளின் பதிலை கேட்டு அவளின் முகத்தைக் கூர்மையுடன் பார்த்தார் வேலம்மாள்.

“என்னம்மா அப்படிப் பார்க்கிற? ஒரு இக்கட்டான நேரத்துல தேன் அவரு கூடக் கிளம்பி போனேன். ஆனா ஏ மனசறிஞ்சு அவரு என்னைய நல்லா வாழ வைப்பார்னு நம்பிக்கையோட தேன் போனேன். அந்த நம்பிக்கை எங்களுக்குள்ளார இப்போ அதிகமாவே தேன் வளந்து நிக்குது. நம்பிக்கையோட கிளம்பி போய் நல்லா வாழ்ந்துக்கிட்டும் இருக்கும் போது நான் அவரு கூடக் கிளம்பி போனதுக்கு மன்னிப்பு கேட்டா அது எங்க நேசத்தையே அர்த்தமில்லாததா ஆக்கிடும்…” என்றாள் கயற்கண்ணி.

“கல்யாணம் முடிஞ்சதும் நல்லாவே பேச கத்துக்கிட்டடி. நல்லா வாழ்ந்தா மட்டும் போதுமாடி? ஓ புள்ளயை வயித்துலேயே தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே…” என்று கண்ணீருடன் சொன்னார்.

அன்னை சொன்னதைக் கேட்டு அவரை விக்கித்துப் பார்த்தாள் கயற்கண்ணி.

“உனக்கு எப்படித் தெரியும்மா?” என்று கேட்டாள்.

“வேற யார் சொல்லுவா? எல்லாம் மாப்ளை தேன்…” என்றார்.

“மாப்ளையா?”

“ஓ புருஷன் தான்டி… அவரை என்ன உன்னைய போல நினைச்சியா? ஓ பெத்தவக என்ன ஆனாங்கன்னு கூடத் தெரிஞ்சுக்காம இருக்க…” என்று மகளிடம் சலித்துக் கொண்டார்.

“என்னம்மா சொல்ற நீ?” திகைப்புடன் கேட்டாள் மகள்.

“நீங்க ஊரை விட்டு போன கொஞ்ச நாளுலேயே மாப்ளை எங்ககிட்ட பேசினாரு. எந்தச் சூழ்நிலையில உன்னைய கூப்பிட்டுக்கிட்டு நீங்க ஊரை விட்டு போனீங்கன்னு சொன்னாரு. உங்களைக் கஷ்டப்படுத்திட்டு அவளைக் கூப்பிட்டுக்கிட்டு போனதுக்கு மன்னிச்சுருங்க. உங்ககிட்ட விவரம் சொல்லி சம்மதம் கேட்குற அவகாசம் கூட என்கிட்ட இல்ல. அவள் இங்கன இருந்திருந்தா அவள் மானம் தான் கேள்விக்குறியாகிருக்கும். இப்போ அவள் மனசுக்கு பிடிச்சவன் கூட வாக்கப்பட்டு நல்லா வாழுறானு சந்தோசப்பட்டுக்கோங்க. அவளை நான் நல்லா பார்த்துக்குவேன்னு சொன்னாரு…” என்றார்.

“இங்கன இருந்து ஓ மானம் கெட்டு, நாம நாண்டுகிட்டு சாகுறதுக்கு, நீ ஒரு நல்லவரை கல்யாணம் முடிச்சுக்கிட்டதில் எந்தத் தப்பும் இல்லைன்னு எங்களுக்குத் தோனுச்சு. அப்புறம் என்ன… மாப்ளை வேற எதுவும் முக்கியமான விசயமா இருந்தாலும் எங்களுக்குப் போன் போட்டு சொல்லிருவார். நீங்க ரெண்டு பேரும் கையெழுத்து போட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட போட்டோ கூட அனுப்பி வச்சார். நீ உண்டானப்ப கூட உங்களுக்குப் பேரனோ, பேத்தியோ வரப் போறாங்கனு அவ்வளவு சந்தோசமா போன் போட்டார். ஆனா இப்போ…” என்றவர் பிறக்காமலேயே கரைந்து போன பிள்ளையை நினைத்துக் கண்ணீர் விட்டார்.

தானும் பிள்ளையை நினைத்து சிறிது நேரம் கலங்கி நின்றாள் கயற்கண்ணி.

“அவருக்கிட்ட மட்டும் பேசிருக்கீக… ஏ கிட்ட மட்டும் பேசலையேமா…” என்று சிறிது நேரத்திற்குப் பிறகு கேட்டாள்.

“நீ எங்ககிட்ட பேச நினைச்சியாடி? எங்கள கேள்விக் கேட்க வந்துட்ட…” என்று திருப்பிக் கேட்டார் வேலம்மாள்.

“ஆங்… அது…” என்று அன்னைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி போனாள்.

“அவ உங்களை எல்லாம் மனசுக்குள்ள தேடினா அத்தை. ஆனா அதை என்கிட்ட கூடக் காட்டாம மறைக்கணும்னு நினைச்சா. ஏன்னா அம்மா, அப்பாவை அவள் தேடுவதா சொன்னால் நான் அவளை நல்லா பார்த்துக்கலையோன்னு நான் நினைச்சுருவேன்னு அவளுக்குப் பயம். அதுதேன் அவ மனசை மூடி வச்சுக்கிட்டா…” என்று சொல்லிக் கொண்டே அங்கே வந்தான் இளஞ்சித்திரன்.

“மாப்ளை வாங்க… வாங்க… உட்காருங்க…” என்று அவனைப் பார்த்ததும் பரபரப்பாக ஒரு இரும்பு நாற்காலியை அவனுக்கு எடுத்துப் போட்டார்.

இருக்கையில் வந்து அமர்ந்தவன், ‘என்ன சரியா சொன்னேனா கண்ணு?’ என்பது போல் மனைவியைப் பார்த்துப் புருவத்தை உயர்த்தினான்.

தான் சொல்லாமலேயே தன் மனதை புரிந்த கொண்ட கணவனைக் காதலுடன் பார்த்தாள் கயற்கண்ணி.

இதோ இப்போதும் கூடத் தான், தான் கேட்காமலேயே தன் தாயின் வீட்டிற்குத் தன்னை அழைத்து வந்திருக்கிறான்.

முதலில் ‘மதுரையில் ஒரு சோலி இருக்கு கண்ணு’ என்று அழைத்து வந்த கணவன், ஒரு வாரமாக அங்கே அறை எடுத்து, ஏதோ வேலையாக அலைந்து விட்டு, இன்று வெளியே போகலாம் என்று தன்னையும் கிளப்பிய கணவன் நேராகத் தன் தாய் வீட்டிற்கு அழைத்து வருவான் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்த்தாள் இல்லை.

அவனின் குடும்பத்தாரின் கண்ணில் பட்டால் என்னாவது என்று பயந்து கொண்டே தான் வந்தாள். “நம்மளை யாரும் எதுவும் செய்ய முடியாது கண்ணு. பயப்படாம வா…” என்று சொல்லி அழைத்து வந்திருந்தான்.

“மாப்ளை வந்ததை நீ சொல்லவே இல்லடி…” என்று மகளைக் கடிந்து கொண்டார் வேலம்மாள்.

“நாங்க வந்த கார் காரர்கிட்ட என்னமோ பேசிக்கிட்டு இருந்தார்மா…” என்றாள்.

“உட்கார்ந்து இருங்க மாப்ளை. நான் இதோ வந்துடுறேன்…” என்று சொல்லி விட்டு கணவனைத் தேடி வெளியே போனார் வேலம்மாள்.

“என்னய்யா எனக்குத் தெரியாம என்னென்னமோ பண்ணிருக்க?” என்று கணவனிடம் கேட்டாள் கயற்கண்ணி.

“எனக்குக் கோழை மாதிரி உன்னைய கூட்டிட்டுப் போனதே உறுத்தலா இருந்தது கண்ணு. அதுக்கு முழுக்கக் காரணம் ஏ வீட்டு ஆளுங்க. ஆனா அவங்க செய்த தப்புக்கு ஓ அப்பா, அம்மா என்ன பண்ணுவாக? அதுவும் அவுகளுக்கு நீ ஒரு பொண்ணு. அவுக உன்னைய நினைச்சு எவ்வளவு கவலைப்படுவாக… அதான் அவுககிட்ட பேசினேன். நம்ம நிலையைப் புரிஞ்சுக்கிட்டாக. பொண்ணு நல்லா வாழ்ந்தா போதும்னு நினைச்சுக்கிட்டாக.

உங்கிட்ட கூடப் பேச சொன்னேன். ஆனா அவுகதேன் மாட்டேன்னுட்டாக. நீ என்னைக்கு அவுகளைத் தேடுறயோ அப்போ பேசிக்கிறோம்னு சொல்லிட்டாக. நீயா அவுககிட்ட பேசலைனு அவுகளுக்குச் சடவு(கோபம்). நீ என்னென்னா நான் கவலைப்படுவேனோனு ஓ அப்பா, அம்மா பத்தி பேசக்கூட மாட்டேன்னுட்ட. நீயா கேட்க மாட்டனு தெரிஞ்சு போயிருச்சு. அதுதேன் நானா ஏ பொஞ்சாதிக்கு வேண்டியதை செய்துட்டேன்…” என்று சொன்னான் இளஞ்சித்திரன்.

“எனக்கு இன்னும், இன்னும் உன்னைய ரொம்பப் பிடிக்குதுயா…” என்று காதலுடன் சொன்னவள், தன் உதட்டை அசைத்துச் சத்தமில்லாமல் ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பினாள் கயற்கண்ணி.

“ஹே…” என்று ஆர்வமாக இளஞ்சித்திரன் எழுந்து மனைவியின் அருகே போக, “வாங்க… வாங்க மாப்ள…” என்று அழைத்துக் கொண்டே அங்கே வந்தார் கந்தசாமி.

“வர்றேன் மாமா…” என்று இளஞ்சித்திரன் மீண்டும் இருக்கையில் அமர, கயற்கண்ணி தந்தையிடம் ஓடினாள்.

“அப்பா…” என்றாள்.

“வா கயலு…” என்றார்.

பின் அவர்கள் வேறு எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.

மௌனமாக மகளின் தலையில் கை வைத்த கந்தசாமி, “நல்லா இரு புள்ள…” என்று ஆசிர்வதித்தார்.

அவரின் பின்னால் வந்த வேலம்மாளின் கையில் இரண்டு இளநீர் இருந்தன.

அதை வெட்டி இருவருக்கும் கொடுத்தார்கள்.

“இப்போ உங்க உடம்பு பரவாயில்லையா மாப்ளை?” என்று கேட்டார் கந்தசாமி.

“ம்ம்… நல்லாவே இருக்கேன் மாமா…” என்றான் இளஞ்சித்திரன்.

“விசயம் தெரிஞ்சதும் துடிச்சுப் போனோம் மாப்ளை…” என்று கண் கலங்கினார் வேலம்மாள்.

“நீங்க இங்கன வந்ததில் ரொம்பச் சந்தோசம் மாப்ளை… ஆனா உங்க வீட்டு ஆளுங்களுக்குத் தெரிஞ்சா?” என்று தயக்கத்துடன் கேட்டார் கந்தசாமி.

“இந்த நேரம் தெரிஞ்சுருக்கும் மாமா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே, “டேய் சின்னவனே…” என்ற குரல் வெளியே இருந்து கேட்டது.

“அய்யோ…!” என்று கயற்கண்ணி பதறி கணவனின் கையைப் பற்றிக் கொண்டாள்.

“பயப்படாதே கண்ணு…” என்று மனைவியிடம் சொன்னவன், அவளின் கையையும் பிடித்து அழைத்துக் கொண்டே வெளியே சென்றான்.

கையில் அரிவாளுடன் வேங்கையன் முன்னால் நிற்க, அவரின் அருகில் அவனின் அன்னை ருக்மணியும், இருவருக்கும் பின்னால் சாந்தாமணியும் நின்றிருந்தார்கள்.

ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு வெளியே வந்த இருவரையும் கண்ட வேங்கையனின் மீசை துடிக்க, இன்னும் ஒரு அடி முன்னால் வந்து நிற்க, அவருக்கு முன் மறைத்தது போல் வந்து நின்ற ருக்மணி, “ச்சை… போயும் போயும் அந்தச் சின்னச் சிறுக்கி கையைப் போய்ப் பிடிச்சுக்கிட்டு நிக்கிறயே வெட்கமா இல்லையாடா சின்னவனே?” என்று ஆத்திரமாகக் கேட்டார் ருக்மணி.

“ஏ பொஞ்சாதி கையை நான் பிடிச்சிருக்கேன். இதுக்கு எதுக்குமா வெட்கப்படணும்?” என்று கேட்டான் இளஞ்சித்திரன்.

“ஏய்! தள்ளிப்போடி… என்ன ஓ பையன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கியா?” என்று மனைவியைத் தள்ளி நிறுத்திவிட்டு முன்னால் வந்த வேங்கையன்…

“என்ன தைரியம் இருந்தா கீழ் சாதி பொண்ணை ஓடிப் போய்க் கல்யாணம் கட்டிக்கிட்டதும் இல்லாம இந்த ஊருக்கே வந்து நிப்ப? என்ன மாமனார் வீட்டுக்கு மாப்ளை சீராட வந்தீகளோ? இன்னைக்கு உன்னைய வெட்டி பொலி போட்டுறேன்டா…” என்று ஆத்திரத்துடன் கத்தினார் வேங்கையன்.

“என்னைய வெட்டணுமா? தாராளமா வெட்டுங்களேன்?” என்று சொல்லிக் கொண்டே வாசல் படியில் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தவன், கீழே இறங்கி நின்றான்.

“இங்க நின்னா போதுமா? இல்ல இன்னும் பக்கத்தில் வரணுமாங்க அய்யா? எதுக்குக் கேட்கிறேனா நீங்க தேன் கீழ் சாதி வீட்டு வாசலை கூட மிதிக்க மாட்டீங்களே. எங்க நிக்கணும்னு சொல்லுங்க. உங்களுக்கு வசதியா நிக்கிறேன்…” என்றான் சாதாரணமான குரலில்.

கயற்கண்ணி பதறி கணவனின் கையை இறுக பற்றிக் கொண்டவள் “வாய்யா இங்கிருந்து போயிடலாம்…” என்றாள்.

“இரு கண்ணு! இந்தப் பெரிய மனுஷன் வெட்டணுமாம். எப்படி வெட்டுறார்னு பார்ப்போம்…” என்றான்.

“என்னடா லந்தா பண்ற?” என்று அரிவாளை தூக்கி கொண்டு இன்னும் அருகில் வர,

சிறிதும் அசையாமல் நின்று சலனமே இல்லாமல் தந்தையைப் பார்த்தான் இளஞ்சித்திரன்.

“ஏன், உங்க பெரிய மவன் ஜெயிலுக்குப் போனது பத்தலையோ? நீங்களும் போக ஆசைப்படுறீக போல?” என்று நக்கலுடன் கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே அசையாமல் நின்று விட்டார் வேங்கையன். அவரின் பார்வை யோசனையுடன் சின்னமகனின் மீது விழுந்தது.

“பெரியவன் ஜெயிலுக்குப் போனது உனக்கு எப்படித் தெரியும் சின்னவனே?” என்று கேட்டார் ருக்மணி.

“அனுப்பி வச்சவனுக்குத் தெரியாதா?” என்று புருவங்களை உயர்த்தி நிதானமாகக் கேட்டான் இளஞ்சித்திரன்.

“என்னடா சொன்ன?” என்று வேங்கையன் ஆத்திரமாகக் கேட்க,

“உங்க பெரிய மவன் மேல பிராது கொடுத்து அவனை ஜெயிலில் தள்ளியதே நாந்தேன்னு சொல்றேன்…” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி சொன்னான் இளஞ்சித்திரன்

“அய்யோ… அய்யோ… இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் சாந்தாமணி.

“ஏ புருஷனை ஜெயிலுக்கு அனுப்பின நீயெல்லாம் நல்லா இருப்பியா? நாசமா போவ…” என்று இளஞ்சித்திரனை பார்த்து மண்ணை வாரி தூற்றினாள்.

“நான் ஏன் மதினி நாசமா போவேன்? நான் ஏ பொஞ்சாதி கூட நிறைஞ்ச வாழ்க்கை வாழ்வேன் மதினி. உங்க புருஷன் அழிச்ச ஏ புள்ள எனக்கே திரும்ப வந்து பொறக்கும். ஏ பொஞ்சாதி கூடவும், புள்ள கூடவும் சந்தோசமா வாழ்றதை நீங்களே பார்ப்பீங்க…” என்று அசராமல் சொன்னவனை அவனின் குடும்பமே அசந்து போய்ப் பார்த்தனர்.

“அய்யோ… அய்யோ… இவன் எப்படிப் பேசுறான்னு பாருங்க. ஏ வாழ்க்கையை அழிச்சுப்புட்டு என்னா பேச்சுப் பேசுறான். இவனைக் கேட்க ஆளில்லையா?” என்று இன்னும் ஒப்பாரி வைத்தாள்.

அவளைத் தீர்க்கமாகப் பார்த்த இளஞ்சித்திரன் “எண்ணம் போலத் தேன் வாழ்க்கை அமையும் மதினி…” என்றான் அழுத்தமாக.

“அப்போ என்னைய கெட்டவனு சொல்றீகளா?” என்று சண்டைக்கு வந்தாள்.

“புருஷன்காரன் சொந்த தம்பியையே வெட்ட கிளம்பும் போது நீங்க வேடிக்கை பாத்துக்கிட்டு தானே இருந்தீங்க மதினி. அதுக்கு என்ன காரணம்னு எனக்கு நல்லா தெரியும் மதினி. நான் படிக்கப் போய் வீட்டுக்கு வராம இருந்துட்டு திரும்ப நான் வந்தப்ப இவன் ஏன் வந்தானுங்கிற மாதிரி தான் பார்த்தீங்க மதினி. இப்போ உங்க புருஷன் வெட்டி நான் ஒருத்தன் இல்லாம போனா அண்ணன் மட்டும் தேன் எங்க குடும்பத்துக்கு வாரிசா போய்டுவான். சொத்துச் சுகமெல்லாம் நீங்களே அனுபவிக்கலாம்னு நினைச்சுருப்பீங்க…” என்று அவளின் மனதை அறிந்தது போல இளஞ்சித்திரன் சொல்ல,

‘எப்படித் தன்னைக் கண்டுகொண்டான்?’ என்பதுபோல் விழி விரித்துப் பார்த்தாள் சாந்தாமணி.

அவளின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. பேச்சுக்கு கூட உங்கள் தம்பியை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அவள் சொன்னது இல்லை. எப்படியோ அவரின் கூடப் பிறந்தவன் தொலைந்தான் என்று தான் அவளின் நினைப்பு இருந்தது.

தன் நினைப்பை கண்டு கொண்டவன் மீது அகங்காரம் வர, “அந்தச் சிறுக்கியை இழுத்துக்கிட்டுப் போய்க் கட்டிக்கிட்டதும் இல்லாம உங்க மவன் இல்லாததும் பொல்லாததுமா என்னைய எப்படிப் பேசுறான். ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டு நிக்கிறீகளே…” என்று பெரிய மகனை ஜெயிலுக்கு அனுப்பியதே இளைய மகன் தான் என்று அறிந்து கொண்ட அதிர்ச்சியில் சிலையாக நின்றிருந்த வேங்கையனையும், ருக்மணியையும் கத்தி உலுக்கினாள்.

“ஏ மவனையே ஜெயிலுக்கு அனுப்பிட்டு, எங்க முன்னாடியே நின்னு என்னா தெனாவெட்டா பேசுற… இனியும் உன்னைய சும்மா விடுவேன்னு நினைச்சியாடா?” என்று கோபமாகக் கேட்டார் வேங்கையன்.

“சும்மா சும்மா வாயில வடை சுடாம அருவாளால பொட்டுனு போட்டு கொல்லுங்க இந்தப் பயந்தாங்கொள்ளி பயல. சிங்கம் மாதிரி திரிஞ்ச ஏ புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிப்புட்டானே ஓடுகாலி பய. இப்போ இவனை நீங்க கொல்றீங்களா? நான் கொல்லட்டுமா?” என்று ஆங்காரமாகக் கத்தினாள் சாந்தாமணி.

“ஹ…” என்று அவளைப் பார்த்து அலட்சியமாகச் சொன்ன இளஞ்சித்திரன், “என்னைய என்ன எப்பவும் போல ஓடி ஒளியும் பயந்தாங்கொள்ளின்னு நினைச்சீங்களா? ஏ மேலேயோ, ஏ பொஞ்சாதி மேலேயோ சின்னக் கீறல் விழுந்தா கூட அதுக்குக் காரணம் நீங்கதேன்னு மதுரை கமிஷ்னர் கிட்டயும், மனித உரிமை ஆணையத்துக்கிட்டயும் கம்ளைண்ட் கொடுத்திருக்கேன். எங்களுக்கு ஏதாவது ஆச்சுனா மொத்த குடும்பமும் போய் ஜெயிலில் களி தான் திங்கணும்.

அதுமட்டுமில்ல… ஒரு வீடியோவும் ரெடி பண்ணி எங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அதுக்குக் காரணம் ஏ குடும்பம் மொத்தமும் தான்னு பேசி வச்சுருக்கேன். எங்களுக்கு ஏதாவது ஆனா அடுத்த நிமிஷம் அந்த வீடியோ உலகம் ஃபுல்லா ஆன்லைனில் சுத்த ஏற்பாடு பண்ணிருக்கேன். எங்களுக்குத் தற்செயலா கூட எதுவும் நடக்கக் கூடாதுன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கோங்க. இல்லைனா தற்செயலா விபத்து எதுவும் நடந்தா கூட நீங்க எல்லாம் உள்ளே போகணும்…” என்றான்.

அவனின் பேச்சை கேட்டு வேங்கையன், ருக்மணி, சாந்தாமணி மூவரும் மலைத்துப் போய் நின்றனர்.

“என்னடா இளா ரொம்பப் பேசுற? ஓ அய்யா வெட்டினாதேன் அருவா வெட்டுமா? நாங்களே வெட்டிப்புடுவோம்…” என்று அதற்குள் அங்கே வந்திருந்த அவனின் உறவினர்களில் இருந்த மாமா ஒருவர் சவுண்ட் கொடுத்தார்.

“நீங்க எப்படின்னு எனக்குத் தெரியாதா மாமா? நீங்க எல்லாந்தேன் சாதிக்காக எதுவும் செய்யத் தயாரா இருப்பவுகளாச்சே! தெரிஞ்சும் இந்த ஊருக்குள்ள நான் காலெடுத்து வச்சிருக்கேனா அதற்குக் காரணம் இல்லாமலா இருக்கும்? என்ன மாமா என்னைய இப்படிப் புரிஞ்சுக்காம பேசிப்புட்டீக…” என்றவன் குரல் மரியாதையாகப் பேசுவது போல் ஒலித்தாலும், ஒரு வித நக்கலுடனே தான் சொன்னான்.

“இந்த ஊர்ல ஏ உறவுகாரவுக நீங்க எல்லாம் மட்டுமில்ல, நீங்க கூலிக்கு ஆளு புடிச்சு என்னைய ஏதாவது செய்தாலும் சேதாரம் உங்களுக்குத் தேன் மாமா. ஏன்னா ஏ மாமா, மச்சான், அண்ணன், தம்பி, பங்காளினு ஒருத்தன் பேரு கூட விடாம தேன் எங்க சாவுக்குக் காரணம்னு எழுதிக் கொடுத்திருக்கேன். “ஒருத்தரு எங்க மேல கை வச்சா கூட மொத்த பேரும் சேர்ந்து தேன் போலீஸ் ஸ்டேஷன் வாசல் படி ஏறணும். அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க…” என்றான் நக்கலாக.

“ஏய்! என்னடா எங்க பேரெல்லாம் எதுக்குடா எழுதிக் கொடுத்த?” என்று ஒருவர் கேட்க,

“நான் என்னங்க பண்றது மாமா? நீங்க எல்லாரும் தேன் என்னைய அப்படிப் பிராது கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளி விட்டீங்க…” என்று அப்பாவி போலச் சொன்னான்.

பின் அப்படியே முகத்தை இறுக்கமாக மாற்றியவன், “உங்களுக்கெல்லாம் அருவாளை தேன் தீட்டத் தெரியும். ஆனா நான் ஏ புத்தியை தீட்டிருக்கேன். நான் செத்தா கூட உங்க யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டேன்…” என்று கடுமையாகச் சொன்னான் இளஞ்சித்திரன்.

அவனின் அந்தக் கடுமையையும், கோபத்தையும் அங்குக் கூடியிருந்தவர்கள் வியப்பாகப் பார்த்தனர்.

“என்ன பயந்து ஊரை விட்டு ஓடிப்போன பய இப்படி எல்லாம் பேசுறான்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டான்.

“நான் பயந்து ஓடிப் போகலை. ஒதுங்கி போகணும்னு நினைச்சேன். ஏ அய்யனுக்கும், அண்ணனுக்கும் சொந்த மகனையே, தம்பியவே கொன்ன பாவம் வேணாம்னு ஒதுங்கி போனேன். அவுக மனசுல கெட்ட புத்தியை வச்சுக்கிட்டு இருந்தாலும் நான் அவுக மேல துளியூண்டு பாசத்தோட தேன் இருந்தேன். அதுதேன் ஒதுங்கி போனேன்.

அதுமட்டுமில்லாம, எனக்கு அவுக குறி வச்சிருந்தாலும் பரவாயில்லை. ஆனா என்னைய மனசுல சுமந்த ஒரே காரணத்துக்காக இதோ இவ மேல களங்கத்தைச் சுமத்த ஏ வீட்டு ஆளுங்க தயாராகிட்டாக. அவளுக்கு அந்தக் களங்கத்தை வர விடக்கூடாதுனு தேன் மொதல்ல தோணுச்சு. ஒரு காதலனோட கடமை தன்னை நம்பின பொண்ணுக்கு எந்தத் தீங்கும் வரவிடாம பார்த்துக்கிறது. என்னைய மனசுல சுமந்தவளுக்கு எந்தக் களங்கமும் வர விடாம பாதுகாக்கணும்னு தேன் அவளைக் கூப்பிட்டுக்கிட்டு போனேன்…” என்று மனைவியின் தோளில் கையைப் போட்டுச் சொன்னான் இளஞ்சித்திரன்.

கணவனின் பேச்சை கேட்டு நெக்குறுகி கண்களில் நீர் கோர்க்க நின்று கொண்டிருந்தாள் கயற்கண்ணி.

“ஊரை விட்டு போனாலும் நான் ஒரு நிமிசம் கூடச் சும்மா இருக்கலை. எங்களைக் காப்பாத்திக்க என்ன செய்யணுமோ அதுக்கான ஆதாரத்தைத் தேடி அலைஞ்சேன். மொதல்ல எங்க வீட்டு ஆளுங்களை அடக்கணும். அதுக்கு என்ன செய்யணும்னு யோசிச்சேன். அப்போ தேன் ஏ அண்ணே வரம்பன் ஊர் சண்டையில் ரெண்டு பேரை கொன்னது தெரிய வந்துச்சு.

ஆனா அவன் எப்படியோ போலீஸை ஏமாத்தி தப்பிச்சுட்டான். ஆனா அவன் அவங்க ரெண்டு பேரையும் கொன்னதை ஒருத்தன் வீடியோ எடுத்திருந்தான். அதையும் குடியில் ஒருநாளு வேற ஒருத்தன்கிட்ட உளறிட்டான்…” என்றவன் கண்கள் ரகசியமாகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அவனின் நண்பன் சங்கர் மீது படிந்து மீண்டது.

“அந்த வீடியோவை அவன்கிட்ட இருந்து கைப்பற்ற நினைச்சேன். ஆனா என்னால முடியல. அவன்கிட்ட இருந்து அந்த வீடியோவை நான் வாங்குறதுக்குத் தேன் லேட்டாகிருச்சு. வீடியோ மட்டும் போதுமா? அந்த வீடியோவுக்குத் தகுந்த சாட்சியும் வேணுமே? அந்தச் சாட்சியைத் தேடி அலைஞ்சேன். அது கிடைக்கவும் எனக்கு லேட் ஆகிருச்சு. ஒரு வழியா எனக்குச் சாட்சி கிடைக்கும் நேரத்தில் ஏ அண்ணே எப்படியோ எங்களைக் கண்டுபிடிச்சு வந்து குத்திப்போட்டான். செத்துப் பிழைச்சு மறு பிறப்பு பிழைச்சு வந்திருக்கேன்…” என்று சாட்சி பற்றிச் சொல்லும் போது இன்னும் சற்றுத் தூரத்தில் நின்றிருந்த சுதாகர் மீது அவனின் பார்வை படிந்து மீண்டது.

சுதாகர், சங்கர் இருவரும் இளஞ்சித்திரனுக்கு எதிராகப் பேசுவது போல் கூட்டத்தோடு நின்றிருந்தனர். அவர்கள் இருவரால் தான் இளஞ்சித்திரனுக்குத் தேவையான அவனின் அண்ணனுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மனதார மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டான் இளஞ்சித்திரன்.

“இப்ப வீடியோவும், சாட்சியும் கமிஷ்னர் கிட்ட கொடுத்து என்ன பண்ணனுமோ பண்ணினேன். ஏ அண்ணனை போலீஸ் அரெஸ்ட் பண்ணிருச்சு. நீங்க விலை கொடுத்து வாங்க நினைச்சாலும் உங்களால வாங்க முடியாத அளவுக்குச் சாட்சியை ரெடி பண்ணிருக்கேன். அந்த ஆதாரங்களும், சாட்சியும் வரம்பனுக்குத் தேவையான தண்டனையை வாங்கிக் கொடுக்கும். அதோட எங்கள காப்பாத்திக்க உங்க மேல எல்லாம் புகார் கொடுத்து வச்சிட்டேன்…” என்று சொல்லி முடித்தான்.

ஒவ்வொரு காயையும் கவனமாக எடுத்து வைத்து வேலை பார்த்துவிட்டு, தங்கள் முன்னாலேயே ‘உங்களால் முடிந்ததைப் பாருங்கடா!’ என்பது போல் வந்து நிற்கும் அவனை ஊரே இப்போது மலைத்துப் போய்ப் பார்த்தது.

“எவன்டா அவன் இங்கன இருந்துகிட்டே இவனுக்குச் சாட்சி ஏற்பாடு பண்ணி கொடுத்தது?” என்று கூட்டத்தில் ஒருவன் விவரமாகக் கேள்வி கேட்க,

“ஏன் சாதி தேன் முக்கியம்னு நீங்க நூறு பேரு நின்னா, சக மனுஷனை மனுஷனா மதிக்கிற மனம் இருந்தா போதும், சாதி எங்களுக்கு வேணாம்னு சொல்லும் பத்து பேர் இல்லாமயா போவான்? மனுஷ சாதி தேன் எனக்குத் துணையா நின்னான்…” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னான் இளஞ்சித்திரன்.

ஆனால் மகன் திட்டம் போட்டு செயல்பட்டதை அறிந்த வேங்கையன் இன்னும் வெறி பிடித்தவர் போல் ஆனார்.

“உன்னைய எல்லாம் இத்தனை நாளு விட்டு வச்சதே தப்புடா. ஏ புள்ளயையே திட்டம் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி வச்சதும் இல்லாம, இப்போ ஏ ஒட்டு மொத்த குடும்பத்து மேலேயும் பிராது கொடுத்துருக்கேன்னு ஏ முன்னாடியே நின்னு எவ்வளவு தெனாவெட்டா சொல்லிக்கிட்டு நிக்கிற? இனியும் உன்னைய பேச விட்டு வேடிக்கை பார்த்தா ஏ பேரு வேங்கையனே இல்லடா…” என்று ஆத்திரமாகக் கத்தியவர் மகனின் கழுத்தை நோக்கி அரிவாளை வீசினார்.