பூவோ? புயலோ? காதல்! – 34

அத்தியாயம் – 34

“ஏன்டா மகனே… செய்ற சோலியை உருப்படியா செய்ய வேணாமா? இப்படியா அரையும் குறையுமா விட்டுட்டு வருவ?” என்று தன் பெரிய மகனை கடிந்து கொண்டிருந்தார் வேங்கையன்.

“சின்னவன் தேன் ரெண்டு தடவை குறுக்க வந்து காரியத்தையே கெடுத்துப்புட்டான் அய்யா…”

“சரி, அவனையாவது உருப்படியா செய்தீயா? அதுவுமில்லை…” என்று தன் சிறிய மகனை பற்றிப் பேசுகிறோம் என்ற இரக்கம் சிறிதும் இல்லாமல் பெரிய மகனின் வேலையைக் குறை சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

“வெளியூருங்க அய்யா. நம்ம ஊருன்னா நான் துணிஞ்சு எதுவும் செய்து புடுவேன். அங்கன மாட்டினா நாம வெளிய வர எவனையும் சிபாரிசு கூடப் பிடிக்க முடியாதுங்க அய்யா. அதுதேன் வெரசா சோலியை முடிச்சுட்டு கிளம்பினேன். தம்பி செத்தாலும் அந்தப் பொட்டை கழுதைக்கு அது பெரிய தண்டனை தானுங்க அய்யா. அதான் போலீஸ் கைல மாட்டக்கூடாதுனு வெரசா இடத்தைக் காலி பண்ணினேனுங்க அய்யா…” என்றான் இமயவரம்பன்.

“ஆமா விளக்கமா வியாக்கியானம் பேசு…” என்று சிடுசிடுத்தார் வேங்கையன்.

“மன்னிச்சுடுங்க அய்யா. இந்த முறை விட்டுப்புட்டேன். அடுத்த முறை முழுசா முடிச்சுடுறேன். நாமளும் மாட்ட கூடாது. அவன் சோலியையும் முடிக்கணும். அதுக்குத் தகுந்த மாதிரி சில ஏற்பாடு பண்ணிட்டு முடிக்கிறேன்னுங்க அய்யா…” என்றான் இமயவரம்பன்.

“என்னவோ பண்ணு. மில்லு எரிஞ்சது எல்லாம் போட்டது போட்ட படி கிடக்கு. மொதல போய் அந்தச் சோலி என்னன்னு பாரு…” என்று கடுப்புடன் மகனை அனுப்பி வைத்தார்.

மேலும் இருபது நாட்கள் கடந்த நிலையில் இமயவரம்பன் எங்கோ வேலையாகச் சென்று விட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவன் நுழைந்த சிறிது நேரத்திற்கு எல்லாம், “இங்கே யாரு இமயவரம்பன்?” என்று கேட்ட படி வாசலில் ஒரு இன்ஸ்பெக்டர் வந்து நின்று கொண்டு கேட்டார்.

“நாந்தேன் இன்ஸ்பெக்டர்… என்ன விஷயம்?” என்று இமயவரம்பன் சொல்ல,

“நடங்க… போலீஸ் ஸ்டேஷன் போகணும்…” என்று தடாலடியாக அவனின் தோளில் கையை வைத்துப் போலீஸ் வாகனத்தில் ஏற சொன்னார்.

அப்போது அவனின் மனைவியும், அன்னையும் அங்கே வர, “அய்யோ! ஏ புள்ளய ஏன் பிடிச்சுட்டு போறீங்க?” என்று பதறிக் கொண்டு ருக்மணியும்,

“ஏ புருஷன் ஒரு தப்பும் செய்யாதவருங்க. அவரை எதுக்கு இப்போ போலீஸ் ஸ்டேஷன் கூப்பிடுறீங்க?” என்று சாந்தாமணியும் கத்தி கொண்டு வந்தார்கள்.

“ஏ மேல என்ன பிராது இன்ஸ்பெக்டர்? எதுக்கு என்னைய அரெஸ்ட் பண்றீங்க?” என்று இமயவரம்பனும் திமிறிக் கொண்டு கேட்டான்.

“முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடய்யா. அப்புறமா கேள்வி கேளு…” என்று விரட்டினார் இன்ஸ்பெக்டர்.

“என்ன விஷயம்னு தெரியாம வரமுடியாது இன்ஸ்பெக்டர்…” என்று இமயவரம்பன் துள்ள,

“யோவ் கான்ஸ்டபிள்ஸ்… உங்களை என்ன வேடிக்கை பார்க்கவா கூட்டிட்டு வந்திருக்கேன்? இந்த ஆளை பிடிச்சு வண்டியில் ஏத்துங்கய்யா…” என்று இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்களைப் பார்த்துக் கத்தினார்.

இமயவரம்பனின் இருபுறமும், இரு கான்ஸ்டபிள்கள் பிடித்து வாகனத்தில் ஏற்ற, “யோவ்! எதுக்கு ஏ புள்ளயை இழுத்துட்டு போறீங்க?” என்று கேட்ட படி வெளியில் இருந்து வந்தார் வேங்கையன்.

அக்கம், பக்கத்தில் இருக்கும் அவர்களின் பங்காளிகளும், மாமன், மச்சான் உறவுகளும் கூடி விட்டனர்.

“என்னயா இன்ஸ்பெக்டரு, எங்க ஊருக்குள்ள வந்து எங்க ஆளையே அரெஸ்ட் பண்ணுவியா நீ?” என்று துள்ளிக் கொண்டு வந்தனர்.

“தப்பு செய்தா எந்த ஊரு ஆளா இருந்தாலும் அரெஸ்ட் பண்ணுவோம்யா…” என்று பதிலுக்குச் சொன்ன இன்ஸ்பெக்டர், “ஒழுங்கா என் வேலையை என்னைச் செய்ய விடுங்க. செய்ய விடாம தடுத்தா எல்லோரையும் மொத்தமா அள்ளிட்டு போய் உள்ள போட்டுருவேன்…” என்றார் மிரட்டலாக.

“மொதல எதுக்கு ஏ புள்ளயை பிடிச்சுட்டு போறீங்கன்னு சொல்லுங்க இன்ஸ்பெக்டர்…” என்று கேட்டார் வேங்கையன்.

“மூணு மாசத்துக்கு முன்னாடி உங்க ஊரு பிரச்சனை ஒண்ணுல ஏற்பட்ட தகராறுல உங்க பையன் இரண்டு பேரை கொன்னுருக்கான். அப்போ நாங்க விசாரிச்சப்ப தகராறுல யார் செய்ததுனு தெரியலைன்னு எங்களை ஏமாத்தி தப்பிச்சிட்டீங்க. ஆனா இப்போ ஆதாரம் கிடைச்சுருக்கு. உங்க பையன் தான் அவங்களைக் கொன்னுருக்கான்னு ஆதாரம் புட்டுபுட்டு வச்சிடுச்சு. அதான் அரெஸ்ட் பண்றோம்…”

“ஆதாரமா? என்ன ஆதாரம்?” என்று ஆத்திரமாகக் கேட்டார் வேங்கையன்.

“அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது. அரெஸ்ட் பண்ண வேண்டியது என் வேலை. மிச்சத்தை எல்லாம் கோர்ட்ல பார்த்துக்கோங்க…” என்றார் இன்ஸ்பெக்டர்.

“யோவ்! என்னய்யா…” என்று மாமன்காரன் ஒருவர் கோபத்துடன் இன்ஸ்பெக்டர் முன் வர,

“என்ன என்னய்யா? போலீஸ்காரனையே மிரட்டிட்டு வருவீகளா? நீங்க இந்த ஊருல பெரிய கொம்பனா இருந்தா இருந்துட்டு போங்க. அதுக்காக என் வேலையில் குறுக்கிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்று கடுமையாக எச்சரித்த இன்ஸ்பெக்டர் “வண்டியை எடுங்க…” என்று இமயவரம்பனை பின்னால் ஏற்றிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானார்.

“எவன் ஏ மவன் மேல பிராது கொடுத்ததுனு சொல்லிட்டு போய்யா…” என்று வேங்கையன் காவல் வாகனத்தின் முன் நின்று வழியை மறைத்த படி கேட்டார்.

ஆனால் அவருக்குப் பதிலை சொல்லாமல் “நிக்காம வண்டியை விடுய்யா…” என்று வாகன ஓட்டியை இன்ஸ்பெக்டர் அதட்ட, வேங்கையன் தான் வழி விட்டு நிற்க வேண்டியதாகிற்று.

“அய்யோ! ஏ புள்ளயை பிடிச்சுட்டு போறாகளே…” என்று ருக்மணி ஒப்பாரி வைக்க, “ஏ புருஷனை எப்படியாவது வெளிய கொண்டாந்துருங்க மாமா…” என்று சாந்தாமணி மாமனாரை கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“ஏப்பா வேங்கையா, ஒரு வக்கீலை பிடிச்சு கூடக் கூப்பிட்டுக்கிட்டுப் போய்ப் போலீஸ் ஸ்டேஷன்ல என்னன்னு கேட்டுட்டு வருவோம் வா…” என்று ஒரு பங்காளி சொல்ல, அதன் படி ஒரு வழக்கறிஞரை மதுரையில் சந்தித்துப் பேசி காவல் நிலையம் சென்றனர்.

காவல் நிலையம் சென்று முழு விவரமும் விசாரித்து விட்டு வந்த வழக்கறிஞர், “சாட்சி எல்லாம் ரொம்ப வலுவா இருக்குங்க. ஜாமீன்ல கூட வெளியே வருவது கஷ்டம். சாட்சி, ஆதாரம் எல்லாம் பக்காவா ரெடி பண்ணிருக்காங்க. அதுவுமில்லாம இந்தக் கேஸ்ல மதுரை கமிஷ்னரே நேரடியா தலையிட்டுருக்கார். இனி இங்கே ஒன்னும் பேச முடியாது. கோர்டுக்கு தான் போகணும். ஆனா அங்கேயும் இந்த வழக்கு நிக்காது. எல்லாமே பக்காவா இருக்கும் போது கோர்ட் தீர்ப்பு கொடுத்துட்டு போயிட்டே இருக்கும்…” என்றார்.

“என்னங்க இப்படிச் சொல்றீங்க? உங்களை நம்பித்தானே நாங்க வந்திருக்கோம். எப்படியாவது ஏ புள்ளயை வெளிய எடுத்துருங்க…” என்றார் வேங்கையன்.

“இன்ஸ்பெக்டர் சொல்றதை வச்சு பார்த்தால் சாட்சி எல்லாம் வலுவா இருக்கு. சாட்சியை உடைக்க முடியுதான்னு வேணும்னா பார்ப்போம்…” என்றார் வழக்கறிஞர்.

“ஏ புள்ள மேல யாரு பிராது கொடுத்ததுன்னு விசாரிக்கச் சொன்னேனே விசாரிச்சீங்களா?” என்று வேங்கையன் கேட்க,

“அதைச் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா உங்களுக்கு வேண்டாத பைய எவனோ தான். திட்டம் போட்டு, ஒவ்வொன்னா ரெடி பண்ணிருக்கான். நாம எங்கிட்டு போனாலும் வழியை அடைகிற மாதிரி தான் கேஸ் இருக்கு…” என்றார் வழக்கறிஞர்.

“எவன் பிராது கொடுத்தான்னு மட்டும் தெரியட்டும் அவனைப் பொலி போட்டுடுறேன்…” என்றார் வேங்கையன்.

‘நாந்தேன் பிராது கொடுத்தேன்’ என்று அவன் வந்து நிற்கும் போது ஒன்றுமே செய்ய முடியாமல் நிற்க போகிறோம் என்றதை அறியாமல் சபதமிட்டார் வேங்கையன்.


“என்னை நீ எவ்வளவு பயமுறுத்திட்டனு தெரியுமா வரு?” என்று வருத்தத்துடன் கேட்டான் ரித்விக்.

“சாரி ரித்வி. எப்பயும் உங்களைக் கலங்கடிகிறதே என் வேலையா போயிருச்சு…” என்று கணவனை விட வருந்தினாள் வேதவர்ணா.

“அதெல்லாம் ஒன்னுமில்லை, வருத்தப்படாதே…!” என்று மனைவியைத் தேற்றியவன், “ம்ம்… இந்தா…” என்று தன் உதட்டை மனைவியின் அருகே கொண்டு சென்றான் ரித்விக்.

“என்ன ரித்வி?” கணவனின் செய்கை புரியாமல் கேட்டாள் வேதவர்ணா.

“கிஸ் மீ…!” என்றவன் அவள் கண் திறவாமல் இருந்த போது பதிலுக்கு அவளிடம் முத்தம் கேட்டதையும் சொன்னான்.

“இதென்ன கொடுக்கல் வாங்கல் கணக்கா?” என்று புன்னகையுடன் கேட்டாள் வேதவர்ணா.

“என்ன கணக்கோ… அதெல்லாம் எனக்குத் தெரியாது. கொடு… நீ அப்படிக் கண் திறவாமல் கிடந்தப்ப நான் கொடுத்தது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? உணர்வற்ற உன்னோட அந்த நிலையை நான் மறக்கணும்…” என்றான் இன்னும் மனைவி இருந்த நிலையை நினைத்து ஏற்பட்ட வருத்தத்துடன்.

கணவனின் கசங்கி போன முகத்தைப் பார்த்து மனம் உருகி போன வேதவர்ணா காதலுடன் கணவனின் அதரங்களைக் கவர்ந்து கொண்டாள்.

உணர்வுகள் அற்ற நிலை மறந்து போய் உயிரோட்டமான இதழ் முத்தம் இன்பத்துடன் பகிரப்பட்டுக் கொண்டது.

பின் சிறிது நேரம் அவர்கள் பேசி கொண்டிருந்த போது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த சித்ராவின் கையில் குழந்தை இருந்தாள். குழந்தையைக் குளிக்க வைக்கக் குழந்தைகள் பகுதிக்கு செவிலி எடுத்துச் சென்றிருந்தார். அவருடன் சென்ற சித்ரா குழந்தையைக் குளிக்க வைத்து வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.

“மாப்பிள்ளை கிட்ட அப்புறம் பேசலாம் வேதாமா. இந்தா முதலில் பிள்ளைக்குப் பாலை கொடு. இரண்டு நாளா பிள்ளைக்குத் தாய் பால் கொடுக்காம பவுடர் பால் தான் கொடுத்திருக்கு…” என்று குழந்தையை மகளிடம் கொடுத்தார் சித்ரா.

அவள் குழந்தைக்கு அமுதூட்ட ஆரம்பிக்கவும் ரித்விக் வெளியே செல்ல, “ஏன்டி எங்களை இப்படிக் கலங்கடிச்ச? அப்படி என்னடி உனக்குக் குழப்பம்? செத்து பிழைச்சு வந்திருக்க… இன்னும் அதை நினைச்சா என் கொலயே நடுங்குது…” என்று இன்னும் சரியாக எழ முடியாமல் கஷ்டப்பட்டுக் குழந்தைக்கு அமுதூட்டும் மகளுக்கு உதவி கொண்டே கண்ணீருடன் கேட்டார் சித்ரா.

வேதவர்ணா கண் திறந்து அரை நாள் கடந்திருந்தது. அவள் முழித்ததும் ரித்விக் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.

கண் திறந்த சிறிது நேரத்தில் தங்கள் குழந்தையை அவளிடம் காட்டி மகிழ்ந்து போனான்.

சிகிச்சைகள் தொடர்ந்து அவளின் ரத்த அழுத்தம் குறைந்து, இனி பயப்பட ஒன்றும் இல்லை என்று மருத்துவர் அவளைச் சாதாரண அறைக்கு மாற்றியிருந்தார்.

அவளின் கர்ப்பகால மனஅழுத்தத்திலிருந்து தாய்மை அடைந்த பிறகு வரும் மனஅழுத்தம் அவளைத் தொடராமல் இருக்க மருத்துவர் கவுன்சிலிங் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

கர்ப்பகாலத்தில் மனஅழுத்தம் இருந்தால் அது குழந்தை பிறந்த பிறகும் தொடர வாய்ப்பு அதிகமான சதவிகிதம் உள்ளது என்பதால், இப்போது இருந்தே அவளுக்குத் தகுந்த சிகிச்சை கொடுக்க மருத்துவர் ஏற்பாடு செய்ய ஆரம்பித்திருந்தார்.

தொடர்ந்த கவுன்சிலிங் மூலமும், குடும்பத்தினரின் ஆதரவின் மூலமும் அவள் முற்றிலும் அந்த அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும் என்று சொல்லியிருந்தார்.

“அம்மாகிட்ட சொல்லுடா வேதா. ஏன் அமைதியா இருக்க?” என்று மௌனத்தை மட்டும் பதில் தந்து கொண்டிருந்த மகளிடம் வாஞ்சையுடன் கேட்டார் சித்ரா.

அவர் வாஞ்சையுடன் கேட்கவும் உடைந்த வேதா, குழந்தையை அவர் ஊருக்கு சென்ற பிறகு எப்படிப் பார்த்துக் கொள்ளப் போகிறோம் என்று பயந்ததைச் சொன்னாள்.

அவள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார் சித்ரா. ‘இதுக்கு எல்லாம் பயப்படலாமா?’ என்று அவர் ஒன்றும் கேட்கவில்லை.

அவளை அந்த அழுத்தத்தில் இருந்து மீட்பது அவரின் பொறுப்பும் கூட என்று மருத்துவர் அவரிடம் சொல்லி அவளை எவ்வாறு அணுக வேண்டும் என்று பேசியிருந்தார்.

அதோடு சின்ன விஷயம் கூட அவளைப் பெரியதாக யோசிக்க வைக்கும். அதனால் அவளைச் சரியான முறையில் கையாண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளின் தாய்மை கால மனஅழுத்தத்தையும் போக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை வேதா. அம்மா உனக்கு எல்லாம் சொல்லித் தர்றேன். அதுமட்டுமில்லாம…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வரு…” என்று ஆர்ப்பாட்டமாக அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் ரித்விக்.

அப்போது தான் பால் குடித்து விட்டு தூங்கிய பேத்தியை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே மகளிடம் பேசிக் கொண்டிருந்தார் சித்ரா.

அவன் வந்த வேகத்தில் என்னவோ என்று அவனை இருவரும் பயந்து போய்ப் பார்க்க, “வரு, யாரெல்லாம் வந்திருக்காங்கனு பார்…” என்று மனைவியிடம் சொன்னவன் தன் பின்னால் வந்தவர்களைக் காட்டினான்.

அங்கே அவளின் தந்தை மட்டுமில்லாமல் தாத்தா, பாட்டி, பெரியப்பா, அவரின் மனைவி, மகள், சித்தப்பா, சித்தி, என்று அனைவரும் வந்திருக்க, நம்ப முடியாமல் விழிகளைத் திறந்து அதிசயத்துடன் பார்த்தாள் வேதவர்ணா.

சித்ராவும் அவர்கள் வந்தது உண்மையா என்று விழிகளைச் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தார்.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்தவர்கள் வேதாவைப் பார்த்த படி அமைதியாக இருந்தனர்.

சில நொடிகள் அங்கே மௌனமே ஆட்சி செய்ய, “ஹ்க்கும்… ஹ்க்கும்…” என்று முதலில் தொண்டையைச் செருமிய அவளின் தாத்தா சிதம்பரம், “என்னமோ கண்ணு திறக்காம கிடந்தாள்னு சொன்னாங்க?” என்று கேட்டவர் விறைப்பாகப் பேத்தியை பார்த்தார்.

“உண்மையா தான் மாமா… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என் பொண்ணு சாவில் இருந்து போராடி மீண்டு வந்தாள். அவள் பிள்ளையவே முழுசா இப்போ தான் தூக்கினாள்…” மகள் இப்போது முழித்திருப்பதைப் பார்த்து, தாங்கள் பொய் சொல்கிறோமோ என்று மாமனார் கோபப்படுகிறாரோ என்று நினைத்து வேகமாகப் பதில் சொன்னார் சித்ரா.

அவரின் பதிலில் மருமகளைக் கூர்ந்து பார்த்த சிதம்பரம், பின் அவரின் தோளில் இருந்த கொள்ளுப்பேத்தியை பார்த்தார்.

“என் மகன் என்கிட்ட பொய் சொல்ல மாட்டான்…” என்றார் விறைப்பாக.

அதாவது என் மகன் சொல்லி அவனின் மகள் சீரியஸாக இருந்தது தெரிந்து தான் வந்திருக்கிறோம் என்பது போல் சொன்னார்.

‘தெரிஞ்சே வந்திருந்தா அப்புறம் ஏன் அப்படிக் கேட்கணும்?’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்ட சித்ரா, வெளியில் மாமனாரை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவரின் பிடிவாதமும் தானே தன் மகள் இப்படிக் குழப்பிக் கொள்ளக் காரணம் என்று தான் அவருக்குத் தோன்றியது. வீட்டிற்கு வந்த மகளைக் கூட விரட்டினார்களே. அவர்களுக்குப் பயந்து நானும் என் பொண்ணை விரட்டினேனே… என்ற ஆதங்கம் அவருக்கு வந்தது.

சகஜமாகத் தாங்கள் மகளுடன் பழகி இருந்தால் மகளுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது என்பது அவரின் எண்ணம்.

மாமனார், மாமியாருக்கு மரியாதை கொடுக்கும் மருமகளாக நடந்து கொண்டு, தன் பொண்ணைச் சாவின் விளிம்பு வரை தள்ளி விட்டு விட்டோமே என்று அவரின் மனது அவரைக் குடைந்து கொண்டிருந்தது.

“பிடிச்சவர் கூடத் தான் வாழ போறேன்னு எங்க கோபத்தை எல்லாம் வாங்கிட்டு வந்தவள் நிம்மதியா புருஷன் கூட வாழ வேண்டியது தானே? எதுக்கு மனசை போட்டு குழப்பிக்கணும்…” என்று பேத்தியிடம் நேரடியாகக் கேட்டார் சிதம்பரம்.

‘தான் மனதை குழப்பிக் கொண்டது இவருக்கு எப்படித் தெரியும்?’ என்பது போல் தாத்தாவை பார்த்தாள் வேதவர்ணா.

“டாக்ரை பார்த்து எல்லா விவரமும் பேசிட்டு தான் வர்றோம். இப்போ நல்லபடியா பிழைச்சு வந்துட்ட சந்தோசம். இனியாவது எதையும் நினைச்சு குழப்பிக்காம புருஷன், பிள்ளைன்னு சந்தோஷமா வாழ பாரு. உனக்கு உன் அப்பா, அம்மா கூட நல்லா பழகி வந்து போய் இருக்கணும். அவ்வளவு தானே? உன்னோட அம்மா இனி நீ நினைச்ச நேரம் உனக்குத் துணையா வருவாள். உன் அப்பனும் வருவான். ஆனா…” என்று பேத்திக்கு என்ன ஆறுதலை தருமோ அவள் கேட்காமலேயே அதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த சிதம்பரம், அப்படியே பேச்சை நிறுத்தினார்.

அவர் சொல்ல சொல்ல அவரை நம்ப முடியாமல் வாயை லேசாகப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வேதவர்ணா.

“எங்களை எதிர்பார்க்காதே! நான் பழமையில் ஊறிப்போனவன், இன்னமும் உன் காதல் விஷயத்தை எல்லாம் என்னால் ஏத்துக்க முடியலை தான். எனக்கு என்னைச் சுத்தி இருக்குற மனுஷங்க பார்வையும் முக்கியம். அதை எல்லாம் என்னால் நினைச்ச நேரம் மாத்த முடியாது.

உன் கூட உன் பெத்தவங்களை எத்தனை நாள் வச்சு பார்க்கணுமோ பார்த்துக்கோ. மத்ததெல்லாம் முன்னாடி சொன்னது போல எல்லாம் அப்படியே தான் இருக்கும். இப்போ இந்த அளவுக்கு நான் இறங்கி வந்தது இந்த வயசுலேயும் என் பேச்சை கேட்டு நடக்கும் என் மகனுக்காகத் தான்.

என் பொண்ணு சீரியஸா இருக்காள்னு அவன் என் முன்னாடி கண் கலங்கி நினைப்ப அவன் என்ன கேட்குறானோ அதைக் கொடுக்கணும்னு நினைச்சேன். அவனுக்காகத் தான் நாங்க எல்லாரும் உன்னைப் பார்க்க கிளம்பி வந்தோம். டாக்டர்கிட்ட பேசின பிறகு என் மகன் குடும்பத்துக்கு என்ன தேவைன்னு அவன் சொல்லாமலேயே புரிஞ்சது. அதான் அவன் கேட்குறதுக்கு முன்னாடி நானே கொடுத்துட்டேன். அவனுக்கு அவன் பொண்ணு சந்தோஷமா வாழ்றது தான் வேணும். அதை அவனுக்குக் கொடுத்துட்டேன்…” என்று விறைப்பாகவே எல்லாம் சொல்லி முடித்து விட்டு சித்ராவின் கையில் இருந்த கொள்ளுப் பேத்தியைப் பார்த்தார்.

அவரின் பார்வையைக் கண்டதும், வேகமாகப் பேத்தியை மாமனாரின் அருகில் கொண்டு சென்றார் சித்ரா.

மாமனார் மகளுக்கு ஒரு நல்லது செய்து விட்டாரே! இனி அவருக்கு வேறு என்ன வேண்டும்? அவரின் ஆதங்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போனது.

மருமகள் கையில் இருந்த கொள்ளுப்பேத்தியை கையில் வாங்காமல் பார்த்தவர், தன் சட்டைப் பையில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து இறுக மூடியிருந்த குழந்தையின் கையை லேசாகப் பிரித்து வைத்தவர், “நீயாவது உன் அம்மா மாதிரி இல்லாம பெத்தவங்க பேச்சை கேட்டு வளரணும்…” என்று அந்த நேரத்திலும் பேத்திக்கு ஒரு கொட்டு வைத்து விட்டு கொள்ளுப் பேத்தியை ஆசீர்வதித்து விட்டு “சீக்கிரம் சொல்லிட்டு வாங்க…” என்று தன் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே நடந்தார்.

அவர் வாசல் அருகில் சென்றதும் அப்போது தான் கனவில் இருந்து எழுந்தவள் போலச் சிலிர்த்து முழித்த வேதவர்ணா, “தாத்தா…” என்று அழைத்தாள்.

அவர் தலையை மட்டும் திருப்பிப் பேத்தியை பார்க்க, “ரொம்பத் தேங்க்ஸ்…” என்றாள்.

“அப்புறம் நான் லவ் மேரேஜ் செய்ததுக்குச் சாரி எல்லாம் கேட்க மாட்டேன். என் மனசுக்கு பிடிச்சவர் ரொம்ப நல்லவர். சாரி கேட்டா அவரை நான் அவமதிச்சது போல ஆகிடும். அப்புறம் என் பொண்ணு என் புருஷன் போலத் தங்கமான ஒருத்தரை கொண்டு வந்து எங்க முன்னாடி நிறுத்தி பிடிச்சுருக்குனு சொன்னால் அவள் ஆசையை மறுக்காமல் நிறைவேத்தி கொடுப்பேன்…” என்றாள் மென்மையாகச் சிரித்துக் கொண்டே.

தாத்தாவின் கொட்டுக்குப் பதில் கொடுத்து விட்ட பேத்தியை, அவளின் தந்தையும், தாயும், கணவனும் அடக்கப் பார்க்க, அவளின் தாத்தாவோ ‘உன்னைத் திருத்த முடியாது’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தவரின் உதட்டோரம் சிரிப்பில் துடித்ததை வேதவர்ணா மட்டும் தான் கண்டாள். அதை உடனே மறைத்துக் கொண்டதையும் கண்டாள்

ஊருக்கு என்று ஏதாவது காரணம் சொல்லி பேத்தியை ஒதுக்கி வைத்தாலும், தங்கள் வீட்டுப் பெண் என்ற சொந்தம் விட்டு போகுமா என்ன?

அந்த நேரத்தில் பேத்தியின் குறும்பை ரசித்தார். அதே நேரம் பிறந்ததில் இருந்தே இருக்கும் வீம்பையும் அவரால் முழுதாக விட்டுக்கொடுக்க முடியவில்லை.

அவர் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிது என்று தான் வேதவர்ணா நினைத்துக் கொண்டாள்.

“இப்ப கல்யாணம் கட்டிக்கிட்டவ அவ புருஷனை உச்சானி கொம்பில் வச்சுப் பேசிட்டு, என் புருஷனை இவ நொன்னநாட்டியம் பேச வந்திட்டாள்…” என்று பேத்தியை பார்த்து கழுத்தை நொடித்துக் கொண்ட லட்சுமி தானும் கொள்ளுப் பேத்தியை பார்த்து இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையில் இருந்து பணம் எடுத்து கொடுத்து விட்டு தன் கணவரின் பின்னே நடந்தார்.

மற்றவர்களும் வரிசையாக, “உடம்பை பார்த்துக்கோ வேதா…” என்று சொல்லி விட்டுக் குழந்தையைப் பார்த்து ஆசிர்வதித்து விட்டு பெரியவர்களின் பின்னே வெளியே சென்று விட்டனர்.

அவர்களின் பின்னால் சந்திரசேகரும், ரித்விக்கும் அவர்களை வழி அனுப்பி வைக்கச் சென்றனர்.

“என்னம்மா இது தான் பேசணும்னு சொல்லி வச்சு கூட்டிட்டு வந்த போலச் சொல்லிட்டு போறாங்க…” என்றாள் வேதா.

“உங்க தாத்தா அப்படிக் கட்டுக்கோப்பா குடும்பத்தைக் கொண்டு போறார். உன் மேல எல்லோருக்கும் பாசமெல்லாம் இருக்கு. இல்லாமயா கிளம்பி வந்திருக்காங்க? இதுக்கும் இங்கே வந்த பிறகு தான் நீ கண்ணு முழிச்சதே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நீ இருந்த நிலையை நினைச்சே பதறி போய் வந்திருக்காங்க.

ஆனாலும் உன் தாத்தா பேச்சுக்கு கட்டுப்படுறாங்க. ஏன் நானும், உன் அப்பாவுமே அப்படித்தான். இந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம்னு சொன்னா என்னன்னு கேட்பாங்க. ஆனா உன் தாத்தா எந்தப் பிரச்சனை வந்தாலும் குடும்பத்தை மட்டும் உடைய விடாமல் கட்டிக் காப்பாத்துறார். அதுவே பெரிய விஷயம். என்ன உன் விஷயத்தில் ரொம்பப் பிடிவாதமா தான் இருக்காங்க. அப்படி இருந்தும் உனக்கு முடியலைன்னு சொன்னதும் கொஞ்சம் இறங்கி வந்திருக்காரா இல்லையா? நீ கேட்டது கிடைச்சுருச்சு. அதை மட்டும் நினைச்சு சந்தோஷமா இரு…” என்றார் சித்ரா.

“ஆமா வேதாமா… இனியாவது உன்னைக் குழப்பிக் கொள்ளாமல் அமைதியாய் இரு…” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த சந்திரசேகர் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார்.

“அப்பா ரொம்பப் பயந்துட்டேன் வேதாமா. நீ கண்ணு முழுச்சு உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து தான் நிம்மதியா இருக்கு…” என்றார் கரகரப்பான குரலில்.

“இப்போ நல்லா இருக்கேன்பா…” என்ற வேதா தந்தையின் தோளில் சலுகையுடன் சாய்ந்து கொண்டாள்.

வேதவர்ணாவின் ஒரு புறம் அவளின் தந்தையும், இன்னொரு புறம் அவளின் தாயும், அவரின் கையில் தங்கள் குழந்தையும் என்று இருக்க, அவர்களை நெகிழ்ந்து போன மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

இனி மனைவி எல்லா மன அழுத்தத்தில் இருந்தும் மீண்டு விடுவாள் என்ற நம்பிக்கை ரித்விக்கின் மனதில் வேர்விட்டு வளர்ந்து நின்றது