பூவோ? புயலோ? காதல்! – 33

அத்தியாயம் – 33

“ஆ… அம்மா… ரொம்ப வலிக்குது ரித்வி…” என்று அவ்வப்போது உண்டான பிரசவ வலியில் கத்தினாள் வேதவர்ணா.

“இன்னும் கொஞ்ச நேரம் தான் வரு…” என்று மனைவி வலியில் துடிப்பதை பார்த்துக் கலக்கத்துடன் சமாதானம் செய்து கொண்டிருந்தான் ரித்விக்.

“போங்க… போங்க… கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்னு இன்னும் எவ்வளவு நேரம் சொல்லுவீங்க…” என்று தன் அருகில் அமர்ந்திருந்த கணவனைக் கோபத்துடன் தள்ளி விட்டாள் வேதவர்ணா.

வலி தாங்க முடியாமல் மனைவி கோபப்படுகிறாள் என்று புரிந்ததால் அவள் தள்ளி விடவும் அமைதியாகத் தள்ளி நின்றவன், பின் மீண்டும் தானே அருகில் சென்று அவளின் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ரித்விக்.

அவளும் சற்று முன் கோபப்பட்டதை மறந்து கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அவளைக் கொஞ்ச நேரம் நடக்க விடுங்க. மாப்பிள்ளை. இப்படி உட்கார்ந்துக்கிட்டே இருந்தால் அவள் தான் சிரமப்படுவாள்…” என்று பலமுறை சொல்லிவிட்டார் சித்ரா.

ஆனால் வேதவர்ணா நடக்க முடியவில்லை என்று கணவனின் கையணைப்பே கதி என்று அமர்ந்து விட்டாள்.

சித்ராவும் எவ்வளவு நேரம் தான் எடுத்து சொல்லுவார்?

அதற்கு மேல் அவர்களை அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்க முடியாமல் அறைக்கு வெளியே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

ரித்விக்கும் எவ்வளவோ சமாதானம் செய்து மனைவியை நடக்க வைக்க முயன்று பார்த்து விட்டான். படுக்கையைச் சுற்றி ஒரு முறை நடப்பவள் பின் நகராமல் படுக்கையில் சென்று அமர்ந்து கொள்வாள்.

அதற்கு மேல் சொன்னால் கோபத்தில் கத்தினாள். பின் ‘சாரி ரித்வி’ என்று அவனையே சரணடைவாள்.

“இருந்தாலும் இந்த மாப்பிள்ளைக்கு இவ்வளவு பொறுமை ஆகாது. நல்லவரா இருக்க வேண்டியது தான். ஓவர் நல்லவராவும் இருக்கக் கூடாது. அவளை இரண்டு அதட்டல் போட்டு நடக்க வைப்பாரா. அதை விட்டு அவள்அதட்டலுக்குத் தான் அப்பாவி மாதிரி தழைந்து போய்ட்டுயிருக்கார்…” என்று வெளியில் அமர்ந்து தனியாகப் பொரும ஆரம்பித்தார் சித்ரா.

“என்னங்கமா தனியா பேசிட்டு இருக்கீங்க?” என்றபடி அங்கே வந்தாள் கயற்கண்ணி.

இன்னும் மருத்துவமனையில் தான் இருந்தான் இளஞ்சித்திரன்.

அவர்கள் இருந்த மருத்துவமனையில் தான் வேதவர்ணாவும் இரண்டு மணி நேரத்திற்கு முன் பிரசவ வலி வந்துவிட்டது என்று அனுமதிக்கப்பட்டிருந்தாள். பிரசவம் நடக்க இன்னும் நேரம் இருக்கிறது என்று சொல்லி அவளைச் சிறிது நேரம் அறையில் நடக்கச் சொல்லி அனுப்பி இருந்தனர்.

அவள் தான் நடக்காமல் கணவனின் கைப்பிடியில் அடங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“நான் பெத்து வச்சுருக்கேனே ஒருத்தி… அவ பெத்து எடுக்கிறதுக்குள்ளயும் என்னை இப்படித்தான் தனியா புலம்ப விடுவாள் போல…” என்று கயற்கண்ணியிடம் சலித்துக் கொண்டார் சித்ரா.

“என்ன செய்றாங்கமா?” என்று கேட்டாள்.

“நடக்கச் சொன்னா நடக்க மாட்டேன்னு உட்கார்ந்து இருக்காள். மாப்பிள்ளையும் அவள் கூட உட்கார்ந்து இருக்கார். இப்படியே உட்கார்ந்து இருந்தால் எப்படிச் சுகப்பிரசவம் ஆகும்?” என்று அவளிடம் நியாயம் கேட்டார்.

“பாவம் மா ரொம்ப வலிக்கும்ல. அதான்… அவங்களால முடிஞ்சா நடக்கட்டும். இல்லன்னா விட்டுருங்க…” என்று வேதாவிற்கு ஆதரவாகச் சொன்னாள்.

“ஆமா, நீயும் அவளுக்குச் சப்போர்ட் பண்ணு…” என்று அலுத்துக் கொண்டார்.

“உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்?”

“இப்போ பரவாயில்லைமா. இன்னும் இரண்டு நாளில் தையல் பிரிக்கிறதா சொல்லியிருக்காங்க…” என்றாள்.

“அடுத்த வாரம் நீங்க மதுரைக்குப் போகப் போறதா கேள்விப்பட்டேன் கயலு?”

“ஆமாங்க மா. அவரோட முடிவு…” என்றாள்.

“எனக்கு என்னமோ தம்பி தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிறாரோனு தோணுது கயலு. இவ்வளவு தூரம் உங்களைத் தேடி வந்தவங்க. நீங்க அங்கே போனதும் எதுவும் செய்யத் தயங்க மாட்டாங்களா கயல்?” என்று கேட்டார் சித்ரா.

“இல்லைமா எதுவும் ஆகாது. அவரு பார்த்துப்பாரு…” என்று கணவனின் மீது நம்பிக்கையாகச் சொன்னாள் கயற்கண்ணி.

“சரிமா… எதுக்கும் கவனமாகவே இருந்துக்கோங்க…” என்றார் சித்ரா.

“சரிங்க மா…” என்றாள் கயற்கண்ணி.

நேரம் செல்லச் செல்ல வேதவர்ணாவிற்குப் பிரசவ வலி கூடிக் கொண்டே போனது.

பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

வலி கூடக் கூட அவளின் ரத்த அழுத்தமும் உயர்ந்து கொண்டே போனது.

அது அவளின் பிரசவத்தில் சிக்கலையும் ஏற்படுத்தியது.

“பிரஷர் அதிகமா இருக்கு மிஸ்டர் ரித்விக். இவ்வளவு பிரஷரில் நார்மல் டெலிவரிக்கு வெயிட் பண்றது இப்போ வேதவர்ணாவின் உடல் நிலை இருக்கும் நிலையில் ரிஸ்க் தான். அதனால் சிசேரியன் தான் பண்ணனும்…” என்றார் மருத்துவர் காயத்ரி.

“ஓகே டாக்டர் பண்ணிடுங்க…” என்று உடனே சம்மதத்தைத் தெரிவித்திருந்தான் ரித்விக்.

அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிகிச்சைக்கு முன் கணவனிடம் தனியாகப் பேச ஆசைப்பட்டாள் வேதவர்ணா.

அறுவை சிகிச்சைக்குத் தயாராகி மருத்துவமனை உடையில் படுத்திருந்த மனைவியின் அருகில் வந்து அமர்ந்தான் ரித்விக்.

கணவனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்ட வேதா, “எனக்குப் பயமா இருக்கு ரித்வி…” என்றாள் கலக்கமாக.

“என்னடா? எதுக்குப் பயம்?” என்று மென்மையாகக் கேட்டான்.

“ஹ்ம்ம்… தெரியலை ரித்வி. ஆனா என்னமோ உங்களை விட்டு ரொம்பத் தூரம் போற மாதிரி பயமா இருக்கு…” என்று மனைவி சொன்ன விதத்தில் கலங்கிப் போனான் ரித்விக்.

ஆனாலும் மனைவியை இப்போது தேற்றுவது தான் முக்கியம். தன் கலக்கத்தைக் காட்டினால் அவளும் உடைந்து போவாள் என்று நினைத்தவன், “பயப்பட ஒன்னுமில்லை வரு. ரிலாக்ஸாக இரு. எதைப் பற்றியும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காதே! உனக்காக உன் ரித்வி காத்திருக்கான்னு மட்டும் நினைச்சுக்கோ. நல்லபடியா டெலிவரியாகி நீயும், நம்ம பேபியும் என்கிட்ட பத்திரமா வந்திரணும். சரியா?” என்றான் ரித்விக்.

அவள் பதில் சொல்லாமல் கணவனின் முகத்தையே பார்க்க, “பதில் சொல்லுமா…” என்றான்.

“ம்ம்…” முனங்கியவள் கணவனின் முகத்தைத் தன் அருகே இழுத்தாள்.

“என்னடா?” என்று அவன் கேட்க, பதிலை மௌனமாகச் சொன்னாள் வேதவர்ணா. கணவனின் அதரங்களில் அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்தாள்.

தானும் மனைவியின் இதழ்களை மீண்டும் ஸ்பரிசித்த ரித்விக், அவளின் நெற்றியிலும் ஒரு முத்தத்தைப் பதித்து, “என் வருவுக்காக நான் காத்திருக்கேன்…” என்று அழுத்தமாக மனைவியிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான்.

சிகிச்சை ஆரம்பித்துச் சில மணிநேரம் கடந்த பிறகு, ரித்விக், வேதவர்ணாவின் மகவுவை கையில் ஏந்திய படி அங்கே வந்தார் செவிலி.

“கன்கிராஸுலேசன்ஸ் சார். கேர்ள் பேபி…” என்றவர் குழந்தையை ரித்விக்கிடம் காட்டினார்.

கண்களை இறுக மூடி, ரோஜா பூ போல் மென்மையாக இருந்த மகளை மகிழ்ச்சியுடன் பார்த்த ரித்விக், “என் வொய்ப் எப்படி இருக்காங்க சிஸ்டர்?” என்று மனைவியைப் பற்றி விசாரித்தான்.

“டாக்டர் சொல்லுவாங்க சார். நீங்க பார்த்துட்டு குழந்தையைக் கொடுங்க. திரும்ப ரூமுக்கு மாத்தின பிறகு பார்க்கலாம்…” என்றார்.

குழந்தையைக் கையில் கவனமாக வாங்கியவன், “அத்தை…” என்று சித்ராவின் புறம் திரும்பி குழந்தையைக் காட்டினான்.

பேத்தியை பார்த்துப் பூரித்துப் போன சித்ரா, “என் பேத்தி ரொம்ப அழகா இருக்கா மாப்பிள்ளை…” என்றார் சந்தோஷமாக.

இருவரும் குழந்தையைப் பார்த்து மகிழ்ந்த பிறகு மீண்டும் செவிலி குழந்தையை வாங்கிச் சென்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் மருத்துவர் வந்து அழைப்பதாகச் சொல்ல, ரித்விக் உள்ளே சென்றான்.

“வாங்க ரித்விக், உங்க பேபியை பார்த்தீங்களா?” என்று கேட்டார்.

“பார்த்தேன் டாக்டர். என் வொய்ப் எப்படி இருக்காள் டாக்டர்? அவளை எப்போ பார்க்கலாம்?” என்று கேட்டான்.

“சாரி டூ சே மிஸ்டர் ரித்விக்…” என்று வருத்தத்துடன் மருத்துவர் ஆரம்பிக்க,

“ஃபார் வாட் டாக்டர்?” என்று அதிர்வுடன் கேட்டான்.

“குழந்தையை நல்லபடியா சிசேரியன் பண்ணி எடுத்துட்டோம் ரித்விக். பேபி பெர்பெக்ட்லி ஆல்ரைட். பட், உங்க வொய்ப் ஹெல்த்தில் தான்…”

“அவள் ஹெல்த்துக்கு என்ன டாக்டர்?”

“பிரஷர் மட்டும் இல்லாமல் அவங்களுக்கு இருக்குற மன அழுத்தமும், அவங்களுக்குப் பாதிப்பை கொடுத்திருக்கு. எங்களால் முடிஞ்ச ட்ரீட்மெண்ட் நாங்க கொடுத்துட்டு தான் இருக்கோம் ரித்விக். ஆனா எங்க ட்ரீட்மெண்டுக்கு ஏற்ற பலன் இல்லாம பின்னடைவு தான் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவங்க பிரஷரை குறைக்க ட்ரீட்மெண்ட் பண்ணிருக்கோம். ஆனாலும் அவங்க உடல்நிலை இருக்குற நிலையில் இப்போ எதுவும் உறுதியா சொல்ல முடியாது ரித்விக்…” என்றார் மருத்துவர்.

தலையில் இடி விழுந்தது போல் அவரைப் பார்த்தான் ரித்விக்.

“அவ உயிருக்கு?” என்று நம்பமுடியாமல் பயத்துடன் கேட்டான்.

“பிரஷர் கண்ட்ரோலுக்கு வந்தால் தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும் ரித்விக். இப்போதைக்குச் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்காங்க…” என்றார் மருத்துவர்.

“டாக்டர்…” என்று விக்கித்து அழைத்தான் ரித்விக். கண்கள் கலங்கி தவித்துப் போனான்.

“அவள் தான் டாக்டர் என் உயிர்…” என்றான் கண்களின் தேங்கிய கண்ணீருடன்.

“உங்க உயிர் உங்ககிட்ட திரும்ப வரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க ரித்விக்…” என்றார் மருத்துவர்.

மருத்துவரை பார்த்து விட்டு கலங்கிப் போய் வந்த மருமகனை பார்த்து பயந்து போனார் சித்ரா.

என்னவென்று விசாரித்தவரிடம் ரித்விக் மனைவியின் நிலையைச் சொல்ல உடைந்து போனார்.

“என்ன மாப்பிள்ளை பிரஷர் இருந்துச்சுன்னு தானே சொன்னீங்க. இப்போ மனஅழுத்தம் அது இதுன்னு ஏதேதோ சொல்றீங்க?” என்று அழுது கொண்டே கேட்டார்.

அவளுக்கு முன்பே மனஅழுத்தம் இருந்ததை ரித்விக் தெரியப்படுத்த, அழுது தீர்த்தார் சித்ரா.

“கடவுளே… என் பொண்ணை எங்ககிட்ட கொடுத்துருங்க…” என்று வேண்டியபடி கதறி அழுதார்.

அவர் வாய் விட்டு அழ, ரித்விக் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான்.

அவனுக்கும் கடவுளை சரணாகதி அடைவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு வேதவர்ணாவை பார்க்க, ரித்விக்கிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

உணர்வற்று கிடந்தாள் அவனின் உயிர்!

“அவங்ககிட்ட மனம் விட்டு பேசுங்க ரித்விக். அவங்க தான் உங்க வாழ்க்கைனு புரிய வைங்க. அவங்க மனசு உங்க பேச்சை அப்செர்வ் பண்ணுதான்னு பார்ப்போம்…” என்று சொல்லி விட்டு சென்றார் மருத்துவர் காயத்ரி.

“டாக்டர் சொன்னதைக் கேட்டியா வருமா? நீ தான் என் வாழ்க்கைன்னு உனக்கு நான் புரிய வைக்கணுமாம். தெரியாததைத் தெரிய வைக்கலாம். ஆனா உனக்கு நல்லா தெரிஞ்ச விஷயத்தை இன்னும் நான் என்ன எக்ஸ்பிளைன் பண்ணி தெரிய வைக்கிறது வருமா?” என்று மனைவியிடமே கலங்கிய குரலில் கேள்வி கேட்டான் ரித்விக்.

உடலில் சிறு அசைவு கூட இல்லாமல் அசைவற்று கிடந்தாள் அவள்.

“வாழ்க்கையில் தனிமை தான் எனக்கு வரம்னு வாங்கிட்டு வந்தவன் நான். நீ வந்த பிறகு தான் தனிமைனு ஒன்னு இல்லவே இல்லைன்னு எனக்குப் புரிய வச்ச… இவன் தான் எனக்கு வேணும்னு உங்க வீட்டுல சண்டை போட்டு என்னைக் கல்யாணம் பண்ணிகிட்ட. நான் தான் வேணும்னு வந்தவள் என்னை விட்டு பாதியிலேயே போக நினைக்கலாமா வருமா?” என்று கேட்டவன், கன்னம் நனைத்த கண்ணீரை துடைக்க மறந்து மனைவியிடம் பேச்சை தொடர்ந்தான்.

“என்னை விட்டு நீயே போக நினைச்சாலும் உன்னைப் போக விடமாட்டேன் வரு. முன்பு நான் வேணும்னு உங்க வீட்டுல நீ சண்டை போட்டது போல, இப்போ நீ தான் எனக்கு வேணும்னு உங்கிட்டயே நான் சண்டை போடுறேன். எனக்கு நீ வேணும் வரு, வந்திடு. வேதவர்ணானு ஒருத்தி என் வாழ்க்கையில் இல்லைனா இந்த ரித்விக் வெறும் ஜடம் தான். என்னை ஒரு ஜடமா பார்க்க நீ ஆசைப்பட மாட்டன்னு எனக்கு நல்லாத் தெரியும். என்கிட்டே வந்துடு வருமா…” என்றான் உருக்கமாக.

கலங்கிய கண்களுடன் மீண்டும் “சீக்கிரம் என்கிட்ட வந்திடு டா…” என்றவன் பிரசவத்திற்கு முன் மனைவி கொடுத்தது போல் அழுத்தமாக அவளின் வரண்டு போன இதழில் தன் அதரங்களைப் பதித்தான்.

“அப்போ நீ கொடுத்த… இப்போ நான் கொடுத்தேன். திரும்ப நீ எழுந்து வந்து நீ கொடுக்கும் முத்தத்திற்காகக் காத்திருக்கேன் வருமா. உன் கடமையில் இருந்து தப்பிச்சுக்கலாம்னு நினைக்காதே. நம்ம பேபியை நல்லா வளர்க்கவும், உன் ரித்விக்கை இன்னும் அதிகமா காதலிக்கவும் எழுந்து வந்துடு…” என்று கரகரப்பான குரலில் மனைவியிடம் பேசிவிட்டு வெளியே சென்றான்.

இவன் இங்கே பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சித்ரா தன் கணவனுக்கு அழைத்து மகளின் நிலைமையைச் சொல்லி அழுது கொண்டிருந்தார்.

அவரும் பதறி அடித்துக் கொண்டு கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தார்.

கயற்கண்ணியும் சற்று நேரத்தில் அங்கே வந்து விஷயம் கேள்விப்பட்டு அவளும் கடவுளிடம் வேதவர்ணாவிற்காக வேண்டிக் கொண்டாள். இளஞ்சித்திரனும் மெல்ல நடந்து வந்து ரித்விக்கிற்கு ஆறுதல் சொல்லி தேற்ற முயன்றான்.

“நம்பிக்கையை மட்டும் விட்டுடாதீங்க ரித்விக். உங்க நம்பிக்கையே சிஸ்டரை உங்களுக்கு மீட்டு கொடுக்கும்…” என்றான் இளஞ்சித்திரன்.

“அவள் என்கிட்ட திரும்பி வந்திருவாள்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு இளஞ்சித்திரன். அவள் தான் எனக்கு எல்லாமேனு அவளுக்கு நல்லாவே தெரியும். அவள் இல்லைனா நான் என்ன ஆவேன்னும் தெரியும். தெரிஞ்சும் என்னைத் தவிக்க வச்சு பார்த்து விளையாடிக்கிட்டு இருக்காள். அவள் விளையாட்டு எவ்வளவு தூரம் போகுதுன்னு நானும் பார்த்து விடுகிறேன்…” என்றான் இறுகி போன மனதுடன்.

மனைவியின் நிலை அவனின் உடலையும், உள்ளத்தையும் இறுக வைத்துக் கொண்டிருந்தது. குழந்தையைச் சித்ராவும், ஒரு செவிலியும் கவனித்துக் கொள்ள ரித்விக் மனைவி கண் விழிக்கும் நேரத்திற்காகத் தவமிருந்தான்.

முதல் நாள் மட்டுமல்ல, அடுத்த நாளும் வேதவர்ணாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, ரித்விக் உள்ளுக்குள் சுக்குநூறாக உடைந்து போனான்.

முதல் நாள் குழந்தையை வேதாவின் அருகில் படுக்க வைத்து குழந்தையின் ஸ்பரிசத்தை உணர வைக்க முயன்றும் எந்த முன்னேற்றமும் அவளிடம் இல்லை.

குழந்தையின் வரவிற்காக ஆசையாகக் காத்திருந்த ரித்விக், இப்போது குழந்தையின் வரவை நினைத்து மகிழ கூட முடியாமல் மனைவி மீண்டு வரும் நிமிடங்களை மட்டும் எதிர்நோக்கி காத்திருந்தான்.

மீண்டும் வேதாவிடம் பேசிப் பார்க்க சொல்லி மருத்துவர் சொல்ல, இப்போது குழந்தையையும் தன் கைகளில் வாங்கிக் கொண்டு மனைவியைப் பார்க்க சென்றான்.

நேற்று எப்படி இருந்தாளோ அப்படியே சிறிதும் மாற்றம் இல்லாமல் கிடந்தவளை பார்த்து அவனின் நெஞ்சம் வலித்தது.

“உன் அம்மாவை எழுந்து வரச் சொல்லுடா பேபி. உங்களைத் தேடி நான் வந்தால், நீங்க ஏன் இன்னும் என்னைத் தூக்கலைனு கேளுடா பேபி. நீங்க எழுந்து வரலைனா பப்பாவும் எனக்கு இல்லாம போயிடுவார்னு சொல்லு பேபி…” என்று வேதனையுடன் ரித்விக் சொல்ல,

தந்தை சொன்னது புரிந்தது போல் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தாள். அவளை அப்படியே மனைவியின் அருகே படுக்க வைத்தான் ரித்விக்.

நேரம் செல்லச் செல்ல குழந்தை விடாமல் அழ, அவளைத் தூக்க ஒரு செவிலி வேகமாக ஓடி வந்தார்.

அவரைத் தடுத்தவன் குழந்தை அழுவதை மனதை கல்லாகி கொண்டு பார்த்த படி நின்றான்.

“குழந்தை இதுக்கு மேல அழுதா மூச்சு திணறும் சார்…” என்று செவிலி சொல்ல,

“நான் பார்த்துக்கிறேன் சிஸ்டர். நீங்க போங்க…” என்று அவரை அனுப்பி வைத்தவன், மனைவியின் அருகே அமர்ந்து குழந்தையின் மீதும், மனைவியின் மீதும் ஒரு கையை வைத்தான்.

“நம்ம பேபி சத்தம் போட்டு அழுதுட்டா வரு. நான் சத்தம் போட்டு அழலை. அது மட்டும் தான் வித்தியாசம். ஆனா உள்ளுக்குள் கத்தி அழறேன் வருமா. நான் அழுதா நீ சந்தோஷப்படுவியா வரு. இல்லை தானே? எங்க இரண்டு பேரின் அழுகையையும் நிறுத்த உன்னால் மட்டும் தான் முடியும் டா…” என்றான்.

குழந்தையின் அழுகையும், கணவனின் மனதை உருக்கிய பேச்சும் மனைவியவளின் காதில் விழுந்ததோ? வேதவர்ணாவின் கண்ணிமைகளில் மெல்லிய அசைவு வந்தது.

அதைக் கண்டு விட்ட ரித்விக்கின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் சந்தோஷத்துடன் அவனின் கன்னம் தொட்டு ஓடியது.

கணவனைக் கலங்கடித்தது போதும் என்று நினைத்தவள் போல் மெல்ல மெல்ல மயக்கத்தில் இருந்து மீண்டாள் வேதவர்ணா.

அதன் பிறகு அவளின் ரத்த அழுத்தம் மெதுவாகக் கட்டுக்குள் வந்து உடல் நலத்தில் ஏற்றம் மட்டுமே இருக்க, வேதவர்ணா முழுமையாகக் கண் விழித்த போது அவளின் மொத்த குடும்பமும் அவளைப் பார்க்க மருத்துவமனையில் கூடியிருந்தனர்.