பூவோ? புயலோ? காதல்! – 29

அத்தியாயம் – 29

“இந்தச் சந்தனத்தைக் கொஞ்சம் கரைச்சு வைமா கயல்…” என்று வேதவர்ணாவின் அன்னை சித்ரா, கயற்கண்ணியிடம் சந்தனக் கிண்ணத்தையும், சந்தனத்தையும் எடுத்துக் கொடுத்தார்.

“சரிங்கமா…” என்று அவரிடம் வாங்கிச் சந்தனத்தைக் கரைத்துக் கொடுத்தாள் கயற்கண்ணி.

“இந்தப் பூச்சடை நல்லா அழகா கட்டியிருக்கக் கயல். யார்கிட்ட கத்துக்கிட்ட?” என்று கேட்ட சித்ராவின் கையில் பூவால் கயற்கண்ணி தயாரித்துக் கொடுத்திருந்த அலங்கார பூச்சடை அழகாக வீற்றிருந்தது.

“எனக்கு யாரும் கத்துக் கொடுக்கலைமா. நானாதேன் சும்மா பூவை வச்சு சுத்தி சுத்தி கத்துக்கிட்டேன். எங்க ஊரு பொண்ணுங்களுக்கு ஏதாவது விஷேசம்னா கட்டி கொடுப்பேன். அவ்வளவுதான்மா…” என்று சாதாரணமாகச் சொன்னவளை வாஞ்சையுடன் பார்த்தார் சித்ரா.

மகளைச் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உதவியது கயற்கண்ணியும், அவளின் கணவனும் தான் என்று கேள்விப்பட்டதில் இருந்து அவரின் பார்வை கயலின் மீது அப்படித்தான் படிந்து படிந்து மீண்டு கொண்டிருந்தது.

மருத்துவமனையில் சேர்த்தது மட்டுமா? மகள் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் மூன்று வேளையும் சளைக்காமல் வீட்டு சாப்பாடு செய்து கொடுத்து மகள், மருமகன் வயிற்றை வாடாமல் பார்த்துக் கொண்டவளும் அல்லவா!

இந்தக் காலத்தில் வாய் விட்டு கேட்டும் ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்வதே அரிது!

அப்படியிருக்க, கேட்காமலேயே உதவி செய்த அவளின் மீது ஒரு தாயின் பரிவு தன்னால் வந்து அமர்ந்து கொண்டது.

இப்போதும் இது உங்கள் வீட்டு விசேஷம் என்று ஒதுங்கி நிற்காமல் தனக்குக் கூட மாட வேலை செய்து கொடுப்பவளை அவருக்குப் பிடிக்காமல் போனால் தான் அதிசயம்!

“அம்மா இந்தச் சேலை மடிப்பு சரியா வச்சுருக்கேனா?” என்று கேட்டபடி தன் பெரிய வயிற்றைத் தாங்கி கொண்டு மெதுவாக அங்கே வந்தாள் வேதவர்ணா.

அவள் வந்து சில நொடிகள் கடந்த பிறகும் அன்னையிடம் இருந்து பதில் கிடைக்காமல் போக, வயிற்றிற்குக் கீழ் உள்ள மடிப்பை சரி செய்ய முயன்று கொண்டிருந்த வேதவர்ணா தலையை நிமிர்த்தி அன்னையைப் பார்த்தாள்.

சித்ராவோ மகளுக்குப் பதில் சொல்லாமல் அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.

“சொல்லுங்கமா… எப்படி இருக்கு?” என்று அவரின் முறைப்பை கண்டு கொள்ளாமல் கேட்டாள் மகள்.

அவரும் மகளின் வீட்டிற்குள் நுழைந்து அவள் மருத்துவமனையில் இருந்த விவரம் கேள்விப்பட்டதில் இருந்து அவளை முறைத்துக் கொண்டு தான் இருக்கின்றார்.

அவரின் முறைப்பிற்கான காரணம் தெரிந்தாலும் அவரின் கோபத்தைப் பொருட்படுத்தாதவள், “நீங்க சொல்லலைனா போங்க…” என்று அன்னையிடம் சொன்னவள்,

“நீங்க சொல்லுங்க கயல், புடவை சரியா இருக்கா?” என்று கயற்கண்ணியிடம் கேட்டாள்.

“கீழ மட்டும் லேசா தூக்கிக்கிட்டு இருக்குங்க. அதைச் சரி பண்ணிட்டா சரியாகிடும்…” என்றாள் கயற்கண்ணி.

“இந்த இங்கன்னு மட்டும் கூப்பிடாம வேதான்னு கூப்பிடுங்கனு நிறைய முறை சொல்லிட்டேன். ஆனா கூப்பிட மாட்டீங்கிறீங்களே கயல்…” என்று அலுத்துக் கொண்டாள் வேதவர்ணா.

கயற்கண்ணி வேதாவிற்கு உதவி செய்து அவளுடன் நன்றாகப் பழகினாலும், ஏனோ பெயர் சொல்லி அழைத்துச் சாதாரணமாக அவளிடம் பேச அவளுக்கு வரவில்லை.

வேதாவிடம் படித்து வேலை பார்க்கும் ஒரு தோரணை தெரிந்தது. வேதா அப்படி எதுவும் கயலிடம் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகத் தான் அவள் பழகினாள்.

ஆனாலும் கயற்கண்ணி, வேதா அவளிடம் காட்டவில்லை என்றாலும் அவளின் கண்களுக்கு மட்டும் தெரிந்த அந்தத் தோரணையைக் கடந்து உள்ளே சென்று அவளிடம் பழக ஏதோ ஒன்று தடுத்தது. அதனால் பெயர் சொல்லியே அவளை அழைக்க மாட்டாள்.

“எனக்கு ஒரு டவுட்டுங்க கயல். அதென்ன உங்க வீட்டுக்காரர் யார் இருக்கா இல்லையான்னு கூடப் பார்க்காம கண்ணு, கண்ணுன்னு உங்களைக் கொஞ்சி கூப்பிடுறார்…” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் வேதவர்ணா.

“அச்சோ… நீங்க வேறங்க… அவரு ஒன்னும் என்னைய கொஞ்சி அப்படிக் கூப்பிடலைங்க. ஏ பேரு கயற்கண்ணில கண்ணினு கூப்பிட முடியாமல் அதைக் கண்ணுவா மாத்திட்டார். அவராவது என்னைய கொஞ்சிக் கூப்பிடுறதாவது…” என்று சலித்துக் கொண்டாள் கயற்கண்ணி.

‘அவன் உன்னைய கொஞ்சியதே இல்லையா?’ என்று மனம் நக்கலாகக் கேட்ட கேள்வியை அப்படியே உள்ளே போட்டு அமுக்கி அப்பாவி போல் காரணம் சொல்லிக் கொண்டிருந்தாள் கயற்கண்ணி.

கூடவே அந்தப் பெயர் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்ட நாளும் அவளுக்கு ஞாபகத்தில் வந்தது.

“யோவ்! வீட்டுக்கு வெளியே வந்ததும் இந்தக் கண்ணுன்னு கூப்பிடுறதை நிறுத்துய்யா. பார்க்கிறவக என்னமோ நீ எப்பயும் என்னைய கொஞ்சிட்டு இருக்கிறதா நினைக்கப் போறாக…” என்று கயற்கண்ணி ஒரு நாள் கணவனைக் கடிந்து கொண்டாள்.

“என்னது கண்ணுன்னு கூப்பிடுறதை நிறுத்துறதா? என்ன கண்ணு நீ இப்படிச் சொல்லிப்புட்ட?” என்று அளவுக்கு அதிகமான அதிர்வை முகத்தில் காட்டிக் கொண்டு கேட்டான் இளஞ்சித்திரன்.

“என்னய்யா ஓவரா மூஞ்சியைச் சுளிக்கிற. என்னமோ சரியில்லையே…” என்று கணவனைச் சந்தேகமாகப் பார்த்துக் கேட்டாள்.

“ஓ புருஷன பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலையே கண்ணு…”

“இன்னும் என்ன புரிஞ்சுக்கலைய்யா?”

“பின்ன என்ன கண்ணு? கண்ணுன்னு பேர் வச்சதே, செல்லப் பேரா மட்டுமில்லாமல் எந்த நேரமும் உன்னைக் கொஞ்சி கூப்பிடுறது போலவும் இருக்கணும்னு தானே அந்தப் பேரை சொல்லியே உன்னைய கூப்பிடுறேன். அப்படி இருக்கும்போது நீ கூப்பிட கூடாதுன்னு சொன்னா நான் கேட்டுருவேனா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“நீ சரியான விவகாரம் பிடிச்ச ஆளுயா…”

“நான் விவகாரமான ஆளு மட்டுமில்ல கண்ணு. விவரமான ஆளும் தேன். எனக்குத் தெரிஞ்ச விவரமெல்லாம் உனக்கும் சொல்லிக் கொடுக்கட்டுமா கண்ணு?” என்று ரசனையுடன் கேட்டுக் கொண்டே மனைவியை நெருங்கினான் இளஞ்சித்திரன்.

அதன் பிறகு…

“இதை இப்ப எனக்குச் சரிப்படுத்தி விடமுடியுமா? முடியாதாம்மா?” என்ற வேதவர்ணாவின் குரலில் நினைவுலகிற்கு வந்தாள் கயற்கண்ணி.

“போய் உன் புருஷனையே சரி பண்ண சொல்லுடி. இதுக்கு மட்டும் அம்மா வேணுமாக்கும்?” என்று கடுப்புடன் மகளை விரட்டிக் கொண்டிருந்தார் சித்ரா.

“என்னம்மா எதுக்கு அவுககிட்ட மூஞ்சை திருப்பிக்கிட்டே இருக்கீங்க? பாவம் வாயும், வயிறுமா வேற இருக்காவுக…” என்று வேதாவிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தாள் கயற்கண்ணி.

“இவகிட்ட மூஞ்சை திருப்பாம கொஞ்சவா முடியும் கயலு? நாலு நாளா ஆஸ்பத்திரியில் எழுந்திரிக்காம கிடந்திருக்காள். ஆனா அவளைப் பெத்த அம்மா என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலை. இங்கே நானும், அவரும் வந்த பிறகு சாவகாசமா சொல்றாங்க. பெத்த பொண்ணு அவ்வளவு முடியாம கிடந்தது கூடத் தெரியாம இருந்திருக்கோம். எனக்கும், அவருக்கும் எப்படி இருக்கும் சொல்லு?” என்று கேட்ட சித்ராவின் கண்கள் கண்ணீரை பொழிந்தன.

கயற்கண்ணி என்ன சொல்வாள்? எந்தத் தாயால் தான் இதைத் தாங்க முடியும்? சித்ராவின் ஆதங்கம் அவளுக்குப் புரிந்தது. ஆனால் ஆறுதல் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.

அன்னை கண்ணீர் விட்டதைக் கண்டதும் வேதாவின் கண்களும் கலங்கின. ஆனாலும் தன்னை அப்படிச் சொல்லவிடாமல் செய்ததற்குக் காரணமே அவர்கள் தானே? கணக்கு போட்டுப் பெண் வீட்டிற்கு வந்து செல்லும் அவர்களிடம் அவளால் எப்படி இலகுவாகச் சொல்ல முடியும்? என்று வீம்புடன் நினைத்துக் கொண்டாள் வேதவர்ணா.

மனைவியின் மனநிலை என்னவென்று தெரிந்ததும் ரித்விக்கே அதற்கு மேல் சித்ராவை வர வைக்கும் முயற்சியைக் கைவிட்டான்.

மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி தெரிந்தாலும் எப்படியாவது அவர்கள் இங்கே வந்துவிடும் வாய்ப்புண்டு என்று புரிந்த ரித்விக் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியாகிவிட்டான்.

ஆனால் சித்ராவும், சந்திரசேகரும் முன்பு பேசி வைத்தபடி வேதாவிற்கு வளைகாப்பு நடத்த சொன்ன தேதியில் கிளம்பி வந்த பிறகு மறைப்பது தவறு என்று வேதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதை சொல்லி விட்டிருந்தான்.

அதுவும் வெறும் ரத்த அழுத்தத்தை மட்டுமே தற்போது சொல்லியிருந்தான். அவளின் கர்ப்பக்கால மனஅழுத்தம் பற்றி இன்னும் எதுவும் சொல்லாமல் இருந்தான்.

இவ்வளவு ஏன்? தனக்கு இருக்கும் மனஅழுத்தம் பற்றி வேதாவிற்கே தெரியாது. ரித்விக் சொல்லாமல் வைத்திருந்தான். அதைச் சொன்னால் இன்னும் டென்ஷன் ஆகிவிடுவாளோ என்று நினைத்தவன் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டான்.

மருத்துவரும் வேதாவிடம் சொல்லவில்லை. ஆனால் அவள் அதிகம் அறியாதவாறு கர்ப்பக் கால மனஅழுத்தத்திற்காகச் சிகிச்சை ஆரம்பித்திருந்தார். அவள் இப்போது தான் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்ததால் தற்சமயம் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று மருத்துவரும் ரித்விக்கிடம் சொல்லியிருந்தார்.

அதேபோல் பெற்றவர்களுக்கு மொத்தமாக டென்ஷனை தரவேண்டாம் என்று நினைத்து ரத்தஅழுத்தத்தை மட்டும் சொல்லியிருந்தான் ரித்விக்.

அதனால் வழக்கம் போல மகளுக்குச் சரியாகப் பேசிக் கொண்டிருந்தார் சித்ரா.

“இப்போ எதுக்குமா இப்படிக் கோபப்படுறீங்க? அப்படியே நான் சொல்லியிருந்தாலும் உடனே கிளம்பி வந்திருக்கவா போறீங்க? அதுக்கும் ஏதாவது சாக்கு சொல்லுவீங்க…” என்று கோபப்பட்டாள் வேதவர்ணா.

“சொல்லியிருந்தால் வராமல் இருப்போமா?” என்று பதிலுக்குச் சித்ராவும் கோபப்பட்டார்.

“ஆமா… இப்போ அப்படித்தான் சொல்வீங்க. ஆனா…” என்று வேதா மேலும் பேசிக் கொண்டிருக்கும் போதே “வரு…” என்ற அழுத்தமான ரித்விக்கின் குரல் அவளை மேலும் பேச விடாமல் தடைச் செய்தது.

அவ்வளவு நேரமாக மாமனாருடன் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் ரித்விக்.

மாமியார், மாமனாரை நன்றாகவே வரவேற்றுப் பேசினான். வேதா ஊருக்கு வந்த போது நடந்ததைக் கணவனிடம் சொல்லியிருப்பாள். அதில் மருமகன் தங்கள் மேல் கோபமாக இருக்கலாம் என்று நினைத்தபடி தான் இருவரும் வந்து இறங்கினார்கள்.

ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே ரித்விக் காட்டிக் கொள்ளவில்லை.

அவன் என்னவென்று கேட்பான்? என் மனைவியிடம் எப்படி அப்படிப் பேசலாம் என்று அவனால் எப்படிக் கேட்க முடியும்? அவர்கள் இப்படித்தான் நாங்கள் இருப்போம் என்று சொன்னது போல் நடந்து கொண்டார்கள். இதில் நடுவில் தேவையில்லாத வேலை செய்து வைத்தது அவனின் மனைவி. அவளின் மீது தவறு இருக்கும் போது அவனால் ஒன்றும் கேட்கவும் முடியவில்லை.

அதே நேரம் மனைவி தற்போது இருக்கும் மனநிலையில் மீண்டும் அன்றைய நிகழ்வுகளைத் தோண்டி துருவவும் விருப்பமில்லை.

அதே போல் சந்திரசேகர், சித்ராவும் அதைப் பற்றிப் பேசாமல் மௌனம் சாதித்தார்கள்.

மருமகனிடம் என்னவென்று கேட்பார்கள்? உங்கள் மனைவியை ஏன் அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்பினீர்கள் என்று கேட்கவா முடியும்?

இல்லையென்றால் அவளிடம் நாங்கள் இப்படி எல்லாம் பேசி விட்டோம் என்று தான் சொல்ல முடியுமா?

உறவுகளுக்குள், முக்கியமாக மிக நெருங்கிய உறவுகளுக்குள் ஏற்படும் மனக்கசப்பை மேலும் மேலும் பேசி புரையோட வைக்காமல் அப்படியே விட்டு அதைத் தாண்டி வருவதே உறவுகள் நிலைத்து நிற்க காரணமாக அமைந்து விடுகிறது.

அதையே தான் இப்போது ரித்விக்கும், வேதாவின் பெற்றோரும் கடைப்பிடித்தார்கள்.

மாமனாருடன் பேசிக் கொண்டிருந்த ரித்விக்கிற்குச் சமையலறையில் மனைவி அவள் அன்னையிடம் பேசிய பேச்சுக்கள் காதில் விழ, அவளை மேலும் பேச்சை வளர்க்க விடாமல் அங்கே வந்து தடுத்திருந்தான்.

பெண்கள் சமையலறையில் நின்று பேசிக் கொண்டிருக்க, சமையலறை வாயிலில் நின்று மனைவியை அழைத்தான் ரித்விக்.

“உன்னை டென்ஷன் ஆகக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல வரு. இப்போ ஆன்ட்டிக்கிட்ட எதுக்குச் சண்டை போட்டுக்கிட்டு இருக்க?” என்று கேட்டான்.

“இல்ல ரித்வி, அம்மா தான்…” என்று சொல்ல,

“நீ முதலில் இங்கே வா…” என்று சமையலறைக்கு வெளியே அழைத்தான்.

“இல்ல ரித்வி, இந்தச் சேலையைச் சரி பண்ணனும். பண்ணிட்டு வர்றேன்…”

“நீ போய் உன் புருஷனையே சரி பண்ண சொல்லுடி…” மருமகன் வந்ததில் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்ட சித்ரா, மகளுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தார்.

“ஏன் என் ரித்வி செய்ய மாட்டார்னு நினைச்சீங்களா? அதெல்லாம் நல்லாவே செய்வார்…” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சொன்னவள், “நீங்க வாங்க ரித்வி. எனக்கு இதைச் சரி செய்து விடுங்க…” என்று கணவனின் கையைப் பிடித்துத் தங்கள் அறைக்குள் அழைத்துப் போனாள்.

நொடியில் அங்கிருந்த நிலை மாற, இப்போது மாமியாரின் முன் ரித்விக் தான் சங்கடத்துடன் மனைவியின் இழுப்பில் அவளின் பின் போக வேண்டியதாகிற்று.

கயற்கண்ணி அந்தக் குடும்பத்தினரிடையே சங்கடத்துடன் தான் நின்றிருந்தாள். இன்னும் சில மணி நேரத்தில் வேதவர்ணாவிற்கு வளைகாப்பு நடக்கவிருந்ததால் காலையில் கணவன் வேலைக்குச் சென்றதில் இருந்து அவள் வேதாவின் வீட்டில் தான் இருந்தாள்.

ரித்விக், வேதவர்ணா இருவருமே முறைப்படி இளஞ்சித்திரன், கயற்கண்ணியை அழைத்திருந்தனர்.

இளஞ்சித்திரன் வேலைக்குச் சென்றுவிட்டு வளைகாப்பு நடக்கும் நேரத்திற்குச் சரியாக வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தான்.

கயல் மட்டும் வேதாவின் உதவிக்கு என்று முதலில் வந்திருந்தாள். அம்மா மகளுக்கு இடையே வாக்குவாதம் வந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தவள், இப்போது வேதா, ரித்விக்கை இழுத்து செல்லவும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

அவளின் சிரிப்பை கண்ட சித்ரா, “இப்போ பாரு என் மகள் அடங்கின பெட்டிப் பாம்பா வெளியே வருவா. அவள் வாய் எல்லாம் என்கிட்ட தான். மாப்பிள்ளையைப் பார்த்ததும் அப்படியே பம்மிருவாள்…” என்று கிண்டலுடன் சொல்லி அவரும் அவளின் சிரிப்பில் இணைந்து கொண்டார்.

அன்பிற்கு அடக்கவும் தெரியும், அடங்கவும் தெரியும் என்பதை அறைக்குள் சென்ற காதல் தம்பதிகள் நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

சங்கடத்துடன் மனைவியின் பின் சென்றாலும், அந்தத் தனிமையான நேரத்திற்கே காத்திருந்தவன் போல, அறைக்குள் சென்றதும் மனைவியைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்திருந்தான் ரித்விக்.

“இந்தச் சாரி உனக்கு நல்லா இருக்கு வரு…” என்று சொன்னவன், மனைவியின் மேடான வயிற்றில் கையை வைத்து குழந்தையின் அசைவை உணர்ந்தான்.

“இது அம்மா எடுத்துட்டு வந்த சேலை. நீங்க எடுத்ததுனா இன்னும் நல்லா இருக்கும்…” என்றாள் மனைவியவள்.

“நான் எடுக்கலைன்னு யார் சொன்னா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“எடுத்தீங்களா… எப்போ? என்கிட்ட காட்டவே இல்லை…”

“டென் டேஸ் முன்னாடியே எடுத்துட்டேன்…” என்றவன் மனைவியை விட்டு விலகி பீரோவில் வைத்திருந்த சேலையை எடுத்து வந்து கொடுத்தான்.

சந்தன நிறத்தில், சிவப்புப் பூக்களைத் தூவி தெளித்திருந்த அந்தச் சேலை கண்ணைக் கவரும் வகையில் இருந்தது.

“வாவ்! ரொம்ப நல்லா இருக்கு ரித்வி. நான் இப்போதே இதைக் கட்டிக்கிட்டுமா?” என்று கேட்டாள்.

“இல்லடா, இன்னைக்கு உங்க வீட்டில் எடுத்தது தான் கட்டணும் ஏதோ முறைன்னு சொன்னாங்களே? அதை நாம மாத்த வேண்டாம். நாளைக்கு நாம எல்லோரும் கோவிலுக்குப் போறதா இருக்கோமே… அப்போ கட்டிக்கோ…” என்றான்.

“ம்ம்… சரி…” என்ற வேதா, தான் கட்டியிருந்த சேலையைச் சரி செய்து விடச் சொன்னாள். மனைவி சொன்னதைச் செய்த ரித்விக், அவளை மீண்டும் அணைத்து, அவளின் இதழில் மென்மையாக முத்தம் ஒன்றை பதித்தான்.

“அம்மா இனி இங்கே தான் இருக்கப் போறாங்க வரு. அவங்களும் பாவம் தான். பெரியவங்க பேச்சுக்கும் அவங்க மதிப்பு கொடுக்கணும். உன்னையும் பார்க்கணும். இரண்டு பக்கமும் அவங்க தான் அல்லாடி போறாங்க. அதனால் அவங்க நிலையைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அவங்க சீக்கிரம் திரும்பி ஊருக்கு போறதை பத்தி எல்லாம் இப்போ யோசிக்காதே! இன்னும் ஒரு மாசத்தில் நாம நல்ல ஒரு வேலையாளா பார்த்து உனக்கு உதவி பண்ண ஆன்ட்டி போனபிறகு வேலைக்கு வச்சுக்கலாம். சரியா? பின்னாடி என்ன செய்யப் போறோம்னு பயப்படாதே! நானும் முடிந்த வரை உனக்கு என்னால் ஆன உதவி செய்ய முயற்சி செய்வேன். அதனால் உன்னை நீயே ஸ்ரெயின் பண்ணிக்காதே!” என்றான்.

இதை ஏற்கனவே சொல்லித்தான் மனைவியை அவளின் பயத்திற்குப் பதிலாகச் சொல்லி தேற்றி வைத்திருந்தான் ரித்விக். ஆரம்பத்தில் அவளின் பயத்தை அவன் சாதாரணமாக நினைத்தாலும், மருத்துவரிடம் அதைப் பற்றிப் பேசிய பிறகு மனைவியின் பயத்தை நன்றாகப் புரிந்து கொண்டான்.

கர்ப்பக்கால மனஅழுத்தத்தில், தேவையில்லாமல் பயப்படுவது, அழுவது, கோபப்படுவது எல்லாம் இருக்கும். அதை எப்படிக் கையாண்டு சரி செய்ய வேண்டும் என்று மருத்துவர் ரித்விக்கிற்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

அதனால் மனைவியைப் பொறுமையுடனே கையாண்டான் ரித்விக்.

சிறிது நேரத்தில் கயற்கண்ணியின் கைவண்ணத்தில் அழகாகத் தலைவாரி பூச்சடை வைத்து மனையில் அமர வைக்கப்பட்டாள் வேதவர்ணா.

ரித்விக், வேதா இருவரின் அலுவலக நண்பர்களும் வருகை புரிந்தனர். வித்யாவும் வந்திருந்தாள்.

வேதா மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு முறை பார்க்க வந்த வித்யாவால், அதன் பிறகு இப்போது தான் பார்க்க வரமுடிந்தது. வேதா திடீரென்று விடுமுறை போட வேண்டியது வந்ததால் அவளின் வேலையும் வித்யாவிடம் வந்து சேர தோழியைக் கவனித்துக் கொள்ள அவளால் முடியாமல் போனது.

முதலில் சித்ரா மகளின் கன்னத்தில் சந்தனம் தீட்டி, வளையல் போட்டு வைபவத்தை ஆரம்பித்து வைக்க, அடுத்து சந்திரசேகர் வைத்தார்.

பின் கயற்கண்ணி வளையல் அடுக்க, அடுத்து வேதாவின் அலுவலகத் தோழிகள் சிலர் சடங்கை தொடர்ந்தனர்.

கடைசியாக ரித்விக் மனைவியின் கன்னத்தில் சந்தனம் தீட்டி, நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டவன், வளையல்களை மனைவியின் முகத்தைக் காதலுடன் பார்த்துக் கொண்டே போட்டு விட்டான்.

நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்கும் பொறுப்பை இளஞ்சித்திரன் ஏற்றுக் கொண்டான்.

வேதவர்ணாவின் வளைகாப்பு நல்லபடியாக முடிய, அங்கேயே உணவை முடித்துக் கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தார்கள் இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும்.

“வளைகாப்பு நல்லா நடந்துச்சுலயா…” என்று படுக்கையில் அமர்ந்திருந்த கணவனின் அருகில் அமர்ந்து கேட்டாள் கயற்கண்ணி.

“ஏழு வகைச் சோறு, இனிப்பு, பூ எல்லாம் வச்சு ஃப்ரெண்ட்ஸுங்க, அப்பா, அம்மா கூடவே இருந்து சிறப்பா செய்திருந்தாங்க…” என்று சொன்ன மனைவியை ஆழ்ந்து பார்த்தான் கயற்கண்ணி.

வளைகாப்பு நிகழ்ச்சியிலேயே மூழ்கி இருந்த கயல் சில நொடிகளுக்குப் பிறகு தான் கணவனின் பார்வையைக் கவனித்தாள்.

“என்னய்யா அப்படிப் பார்க்கிற?”

“அப்பா, அம்மாவை மனசு தேடுதா கண்ணு?” என்று மனைவியின் கண்களை ஊடுருவி பார்த்து ஆழ்ந்த குரலில் கேட்டான்.

கணவனின் கேள்வியில் நொடிப் பொழுது விக்கித்துப் பார்த்தாள் கயற்கண்ணி.

ஆனால் அடுத்த நொடியே தெளிந்தவள், “எனக்கு அப்பாவா, அம்மாவா நீ இருக்கும் போது எப்படிய்யா தேடும்?” என்று சாதாரணமாகச் சொன்னாள்.

அவள் சாதாரணமாகச் சொன்னாலும் மனைவியின் நொடிப் பொழுது பார்வை மாற்றத்தை கவனித்திருந்தான் இளஞ்சித்திரன். ஆனால் அதைப் பற்றி மேலும் கேட்காமல் அவளை அணைத்துக் கொண்டான்.

“ஓ வளைகாப்பையும் நான் சிறப்பா செய்வேன் கண்ணு…” என்றான் உறுதியான குரலில்.

அவனின் அந்த உறுதி அடுத்த நாளே சுக்குநூறாக உடைந்து போகப்போவதை அறியாமல் மனைவியிடம் எப்படி எல்லாம் அவளுக்கு வளைகாப்பு நடத்துவான் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் இப்படி ஒரு நாள் நம் வாழ்க்கையில் வராமலேயே போயிருக்கலாமே என்று நினைக்கும் மனிதன் இல்லாமல் இருக்க முடியாது.

மனிதன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சம்பவம் மொத்த வாழ்நாளையே உருக்குலைத்து போடும் அளவிற்கு அந்த நாள் தன் தடத்தை அம்மனிதன் வாழ்க்கையில் பதித்து விட்டுச் செல்லும்.

அதே போல் ஒரு தடம் தங்களை நெருங்கி வந்ததை உணராமல் எதிர்காலத்தைப் பற்றிய கனவில் இருந்தனர் அத்தம்பதியினர்!

நாளை இதே நேரம் தாங்கள் இருவரும் மருத்துவமனை படுக்கையில் வீற்றிருப்போம் என்பதை அறியாமல் எதிர்காலத்தில் நடக்கப் போவதை பற்றிப் பேசியபடியே ஆனந்தமாகப் பஞ்சனையில் மஞ்சம் கொண்டிருந்தார்கள் இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும்!