பூவோ? புயலோ? காதல்! – 27

அத்தியாயம் – 27

“என்னடா பெரியவனே, நாளைக்காவது பெங்களூருக்கு கிளம்புறீயா?” என்று கேட்ட தந்தையைக் கவலையுடன் பார்த்தான் இமயவரம்பன்.

“இப்போ எப்படிங்க அய்யா போகமுடியும்? இங்கன நடக்குறது எல்லாம் ஒன்னும் சரியா இல்லையே… மொதல அதை என்னன்னு பார்க்கணுமே அய்யா…” என்றான்.

“இங்கன நடந்ததை நான் பார்த்துக்கிறேன் பெரியவனே. நீ மொதல முடிக்க வேண்டிய சோலியை போய் முடிச்சுட்டு வா!” என்று கோபமாகச் சொன்னார் வேங்கையன்.

“அதுதேன் சின்னவன் எந்த ஊருல இருக்கான்னு தெரிஞ்சிருச்சுல அய்யா. இனி எப்ப வேணா போய்ச் சோலியை முடிச்சுருவேன் அய்யா. ஆனா இங்கன நம்ம நிலத்துல கை வச்சவன் எந்த ஊருகாரன்னு இனிதேன் அய்யா கண்டு பிடிக்கணும். அதுக்கு நான் இங்கன இருந்தாவணுமே…” என்றான் இமயவரம்பன்.

“இதெல்லாம் ஆகாத சோலி பெரியவனே. நீ இங்கன உட்கார்ந்து இருக்குற நேரத்துல, அங்கன அவன் ஜோடி போட்டுக்கிட்டு பொஞ்சாதி கூட ஜாலியா ஊரு சுத்திக்கிட்டு கிடக்கான். நம்ம சன பைய அனுப்பின போட்டோவை பார்த்த தானே? சின்னவனை அந்தச் சிறுக்கி கூடச் சுத்த விட்டுட்டு இன்னமும் நாம இங்கன கையைக் கட்டிக்கிட்டு நிக்கிறது நல்லா இல்ல பெரியவனே. நீ நாளைக்கே கிளம்பு. வேறு பேச்சு பேசாதே…” என்று அதட்டினார் வேங்கையன்.

“நேத்து ராத்தரியோட ராத்திரியா எந்தப் பையனோ நம்ம வைக்கப்போருக்கு(வைக்கோல் போர்) தீ வச்சுருக்கான். என்ன தைகிரியம் இருந்தா நம்ம மேலேயே கை வைக்கத் துணிஞ்சுருப்பான்? அவனைச் சும்மா விடச் சொல்றீகளா அய்யா? அவன் யாருன்னு கண்டுபிடிச்சா தேன் எனக்கு நிம்மதி அய்யா. இல்லனா ஒரு வாய் சோறு கூட என்னால உங்க(உண்ண) முடியாது…” என்று கோபத்துடன் முழக்கமிட்டான் இமயவரம்பன்.

“அப்போ எப்போ கிளம்புறதா இருக்க?”

“அய்யா நம்ம பயலுக ரெண்டு பேரை ஏற்கனவே பெங்களூருக்கு அனுப்பி வச்சிருக்கேன். அங்கே அந்த ஏரியா முழுசா தேடியும் சின்னவனைக் கண்டுபிடிக்க முடியலை அய்யா. அந்தப் பைய போட்டோ மட்டும் பிடிக்காம சின்னவன் எங்கன இருக்கான்னு பின்னாடியே போய்ப் பார்க்காம விட்டுப்புட்டான். கேட்டா சோலி இருந்துச்சு பஸ்ஸை விட்டு இறங்க முடியலைன்னு சொல்றான். இப்போ போன பயலுக ரெண்டு பேரும் கண்டுபிடிச்சு சொல்லட்டும் அய்யா. நான் உடனே கிளப்பிடுறேன்…”

“அவனுங்க கண்டுபிடிக்கிறான்களோ இல்லையோ, நாளைக்கு நீ கிளம்பி போய் அவனுங்களை இன்னும் வெரசா தேட முடுக்கி விடு! நீ பக்கத்துல இருந்தாதேன் சோலி வேகமா நடக்கும். கண்ணுல பார்த்ததும் நம்ம குலத்தைக் கெடுக்க வந்தவனையும், அவளையும் வெட்டி போட்டுட்டு வா…!” என்று ஆத்திரமாகச் சொன்னார் வேங்கையன்.

அதற்கு மேலும் தந்தைக்கு மறுப்பு சொல்ல முடியாமல் “சரிங்க அய்யா…” என்றான் இமயவரம்பன்.

“ஏங்க…” தகப்பனும், மகனும் பேசி முடித்ததும் அவர்களின் பின்னால் மெதுவாக வந்து தயக்கத்துடன் குரல் கொடுத்தார் ருக்மணி.

“என்ன ருக்கு?” என்று வேங்கையன் கேட்க,

“அந்தச் சிறுக்கியை மட்டும் நறுக்கி போட்டுட்டு நம்ம சின்னவனை இங்கன கூட்டிட்டு வந்துருங்க. அவனை ஒண்ணும் செய்துபுடாதீங்க. என்ன இருந்தாலும் அவன் நம்ம புள்ளங்க…” என்று மகனை நினைத்து கண்ணீருடன் சொன்னார் ருக்மணி.

மனைவியைக் கடுமையாக முறைத்த வேங்கையன், “என்ன இன்னும் உம்மவன், உம்மவனாவே இருப்பான்னு நினைச்சியா? எப்பவோ அந்தக் சிறுக்கிக்கு புருஷனாகிருப்பான். வேற சாதி ரத்தத்தோட அவன் கலந்த பிறகும் அவனை உம்மவனா நீ ஏத்துக்குவியா?” என்று கேட்டார்.

“அவன் ஆம்பள புள்ளங்க… என்னவோ அவ மேலே அப்படிக் கிறுக்கு பிடிச்சு இழுத்துக்கிட்டு ஓடிப் போய்ட்டான். ஆனா இந்த நேரம் அந்தப் பொம்பள கிறுக்கு அவனை விட்டு போயிருக்கும்ங்க. அதுதேன் சொல்லுதேன். இப்போ அவனை இழுத்துட்டு வந்தா நம்ம பையலா இனி இருப்பான். அப்புறம் நம்ம சாதி சனத்துலேயே நல்ல பொண்ணா பார்த்து கட்டி வச்சுப்புடலாம்…” என்றார் ருக்மணி.

மனைவி சொன்னதைக் கேட்டு வேங்கையனின் கண்களில் யோசனை வந்து அமர்ந்து கொண்டது.

யோசனையுடன் பெரிய மகனை பார்த்தார். அவனும் தந்தையைப் பார்க்க, “நீ என்ன சொல்ற பெரியவனே?” என்று கேட்டார்.

“அம்மா சொல்ற யோசனை கூட நல்லாத்தேன் இருக்குங்க அய்யா. என்ன சின்னவன் கொஞ்ச நாள் அந்தச் சிறுக்கி போன பிறகு சோக கீதம் வாசிச்சுக்கிட்டு இருப்பான். அப்புறம் வேற நல்ல பொண்ணா கண்ணில் காட்டினா தன்னால நம்ம வழிக்கு வந்துப்புடுவான்…” என்றான் இமயவரம்பன்.

“க்கும்… இதுக்கு நான் சொன்னப்பயே ஏ தங்கச்சியைச் சின்னவருக்குக் கட்டி வச்சுருந்தா, இந்நேரம் புள்ள குட்டியே வந்திருக்கும். எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது…” என்று சலிப்பாகச் சொல்லிக் கொண்டாள் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சாந்தாமணி.

“ஏய்…! வாயை மூடிக்கிட்டு அங்கிட்டு போடி…” என்று கோபத்துடன் மனைவியை அடிக்க இமயவரம்பன் கை ஓங்க, ‘அவளை அடிடா…’ என்பது போல் மாமியாரும், மாமனாரும் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

“க்கும்… எப்படியோ போங்க…” என்று நாடியை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு உள்ளே சென்றாள் சாந்தாமணி.

“ஓ பொஞ்சாதிக்கு வரவர பேச்சு கூடிப் போச்சு பெரியவனே…” என்று மகனிடம் மருமகளைப் பற்றிப் புகார் வாசித்தார் ருக்மணி.

“இவ மட்டுமா பேசுறா? சின்னவன் எப்போ ஓடிப் போனானோ அப்போ இருந்து இந்த ஊரு மட்டும் இல்லாம சுத்துப்பட்டுல இருக்குற ஆளுங்களும் தேன் பேசுறாக. இந்த விசயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுப்புடணும் பெரியவனே…” என்றார் வேங்கையன்.

“வச்சுப்புடுவோம் அய்யா…” என்று மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு சொன்னான் இமயவரம்பன்.

மறுநாள் தந்தையின் சொல்படி பெங்களூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் இமயவரம்பன்.

“நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் பெரியவனே… ஒன்னு ஓ தம்பி மட்டும் இங்கன வரணும். அவன் ஒத்துவரலைனா சோலியை முடிச்சுப் போடு. ஓ அம்மாவுக்காக எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காதே. ஏற்கெனவே நம்ம மானம், மரியாதை, நம்ம மேல இருந்த பயம் அம்புட்டும், இந்த ஊருக்கார பயலுகளுக்குப் போய்க்கிட்டு வருது. பெத்த புள்ளயை கீழ் சாதிகாரி கூட ஓட விட்டுப்புட்டு, அடுத்த வீட்டுப் பஞ்சாயத்தை நீ எப்படிப் பேசலாம்னு நம்ம முதுகுக்குப் பின்னாடி கேட்டுட்டு இருக்கிறவைங்க, முகத்துக்கு முன்னாடி கேட்குறதுக்குள்ள சின்னவன் விசயத்தில் கணக்கை தீர்த்துப்புடணும்…” என்று மகனை உசுப்பேத்திக் கொண்டு இருந்தார் வேங்கையன்.

“சரிங்க அய்யா… சரிங்க அய்யா…” என்று மண்டையை ஆட்டி ஆட்டி கேட்டுக் கொண்டு கோபத்துடன் கிளம்பினான் இமயவரம்பன்.

அவன் வீட்டை விட்டு வெளியே வந்து உறவுக்காரர்கள் இருவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு தங்கள் வாகனத்தில் ஏறிக் கொண்டிருந்த போது, வாசலில் ஒருவன் வேகமாக ஓடி வந்து நின்று மூச்சு வாங்கினான்.

“என்னடா எதுக்கு இப்படி ஓடி வர்ற?” என்று வேங்கையன் விசாரிக்க,

“நம்ம மில்லுல தீ பிடிச்சிருச்சுங்க அய்யா…” என்றான் வந்தவன்.

“என்னடா சொல்ற?” என்று இமயவரம்பன் கோபத்துடன் கேட்க,

“ஆமாங்கய்யா… கொழுந்து விட்டு எரியுது… வாங்கய்யா…” என்றான் அவன்.

விஷயம் கேள்விப்பட்டுப் பெங்களூருக்கு கிளம்பி கொண்டிருந்த இமயவரம்பனும், அவனை வழி அனுப்பி வைக்கக் காத்திருந்த வேங்கையனும் பதட்டத்துடன் அவர்களின் மில்லை நோக்கி ஓடினர்.

அங்கே மில்லில் சாக்குகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தனர்.

அவர்களோடு சேர்ந்து இமயவரம்பனும், வேங்கையனும் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.

சில மணி நேர போராட்டத்தில் தீயை அனைவரும் சேர்ந்து அணைத்திருந்தனர்.

“நல்லவேளை வரம்பா, வெறும் சாக்குக் கட்டுத்தேன் எரிஞ்சுருக்கு. இந்தப் பக்கம் அடுக்கி வச்சுருந்த தானிய மூட்டை எல்லாம் தப்பிச்சது…” என்று ஒருவர் சொல்ல, அவனும் தானிய மூட்டை எரியாமல் தப்பித்ததில் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

தானிய மூட்டைகள் மட்டும் எரிந்திருந்தால் தங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும். அதைச் சமாளிக்கத் தாங்கள் கஷ்டப்பட்டிருக்க வேண்டியது இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

“என்ன வேங்கையா, இப்ப தேன் உங்க வைக்கப்போர் எரிஞ்சது. இப்போ மில்லுல தீ பிடிச்சுருக்கு. நடக்குறது ஒன்னும் சரியா படலையே வேங்கையா. பேசாம குலசாமிக்கு ஒரு படையலை போடுய்யா…” என்று ஒரு பெரியவர் வேங்கையனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஆமாங்க அய்யா. எனக்கும் ஒன்னும் சரியா படலை. எவனோ நம்மளையே கங்கணம் வச்சுத் தாக்குறது போல இருக்கு. அது எவன்னு கண்டுபிடிக்கணும் அய்யா. கண்டுபிடிச்சு அவனைக் கண்டம் துண்டமா வெட்டணும்…” என்று ஆத்திரத்துடன் தந்தையிடம் கத்தினான் இமயவரம்பன்.

“நம்மள பிடிக்காத பயலுக யார் யாருன்னு ஒரு கணக்கு போடு வரம்பா. இனியும் நம்ம மேல கையை வைக்கத் துணிஞ்சவனுங்களைச் சும்மா விடக்கூடாது. அவனுங்களா, நம்மளான்னு ஒரு கை பார்த்துருவோம்…” என்று ஆத்திரத்துடன் மீசையை முறுக்கி விட்டு மூர்க்கத்தனமாகச் சொன்னார் வேங்கையன்.

***

“பாவம்யா அவுக… அப்படியே துவண்ட கொடியா போய்ட்டாக. செத்த நேரத்தில் நான் என்ன செய்றதுன்னு தெரியாம பதறி போய்ட்டேன்யா…” என்று வருத்தத்துடன் வேதவர்ணாவை பற்றிக் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் கயற்கண்ணி.

“அதுதேன் வைத்தியம் பார்க்கிறாகல கண்ணு. சரியா போய்டும்…” என்றான் இளஞ்சித்திரன்.

“அவுக படிச்சு வேலைக்குப் போறவக தானேய்யா. ஆனா என்கிட்ட எந்த ஏத்த இறக்கமும் பார்க்காம நல்லா பழகுறாகய்யா. எனக்கு அவுகளை ரொம்பப் பிடிச்சுருக்கு…” என்றாள் புதுத் தோழமை கிடைத்து விட்ட மகிழ்ச்சியுடன்.

“ம்ம்ம்…” மனைவியின் பேச்சுக்குச் செவி சாய்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் இளஞ்சித்திரன்.

வேதவர்ணா, ரித்விக்கிற்கு இரவு உணவை கொடுத்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர் இருவரும்.

“என்னய்யா வேற பாதையில போற? நீ எப்பவும் இன்னொரு பாதையில தானே போவ?” என்று பின்னால் அமர்ந்திருந்த கயற்கண்ணி கணவன் புதிய பாதையில் செல்வதைக் கண்டு கேட்டாள்.

“அந்தப் பக்கம் குழி தோண்டி போட்டு ரோட்டை அடைச்சு போட்டுருக்காகக் கண்ணு. அதுதேன் இந்தப் பக்கம் போறேன்…” என்று கண்களில் தோன்றிய கவனத்துடன் சொன்னான் இளஞ்சித்திரன்.

வாய் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தாலும், மனம் வண்டி ஓட்டுவதில் கவனம் வைத்திருந்தாலும், இளஞ்சித்திரனின் கண்களோ கூர்மையுடன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தன.

காலையில் அவன் வழக்கமாகச் செல்லும் சாலையில் ஒரு கடை அருகே தன் உறவுக்காரர்களை அவன் பார்த்து விட்டதே அவனின் கூடுதல் கவனத்திற்கான காரணமாக இருந்தது.

அவன் தலைக்கவசம் அணிந்திருந்ததால் நல்லவேளையாக அவனின் உறவுக்காரர்களின் கண்ணில் படாமல் போனான்.

இப்போதும் தனக்கு மட்டும் இல்லாமல், மனைவிக்கும் தலைக்கவசத்தை அணிவித்து விட்டிருந்ததால், அவர்களின் கண்களில் தாங்கள் சுலபமாகப் பட்டுவிட மாட்டோம் என்ற நிம்மதி மனதின் ஓரம் இருந்தாலும், எதற்கும் கவனத்துடனேயே நடந்து கொண்டான் இளஞ்சித்திரன்.

வீடு வந்து சேர்ந்ததும் கயற்கண்ணி கதவை திறக்க, “நீ உள்ளார போ கண்ணு. எனக்கு இப்போ ஒரு போனு வரும். நான் மெத்தைல நின்னு பேசிப்புட்டு வர்றேன்…” என்றான் இளஞ்சித்திரன்.

“சரிய்யா… வெரசா வந்துரு. உறக்கம் கண்ணைக் கட்டுது…” என்று ஒரு கொட்டாவியை வெளியே விட்டுக் கொண்டே சொன்னாள் கயற்கண்ணி.

“நீ படுத்துக்கோ கண்ணு. நான் வீட்டு சாவியை எடுத்துட்டு போறேன். நானே திறந்து வந்துக்கிறேன். கதவை திறக்கணுமேனு நினைச்சு முழிச்சுக் கிடக்காதே…” என்றவன் மனைவி உள்ளே சென்றதும் கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஏறினான் இளஞ்சித்திரன்.

மொட்டை மாடிக்கு ஏறியதும் குளிர்காற்று ஜில்லென்று அவனின் உடம்பை தாக்கியது.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்று தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

சில நொடிகள் கைப்பேசியை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், பின் மெல்ல தொடுதிரையைத் தேய்த்து ஒரு எண்ணை அழுத்தி அழைப்பு விடுத்தான்.

அந்தப் பக்கம் அழைப்பு ஏற்க பட்டதும், “நான் கேட்டது ரெடி ஆகிருச்சா?” என்று கேட்டான்.

“…………………”

“இன்னும் எத்தனை நாளு ஆகும்?”

“……………..”

“சீக்கிரம் கிடைச்சா பரவாயில்லை. இங்கன நெருக்கடி ஜாஸ்தியாகிட்டே போவுது. அவுக எங்கள நெருங்கிறதுக்குள்ள நான் முந்திக்கலாம்னு நினைச்சேன்…” என்றான் இளஞ்சித்திரன்.

“……………….” என்று அதற்கு அந்தப் பக்கம் ஏதோ சொல்ல,

“சரி… சரி… எனக்கும் ஓ சூழ்நிலை புரியுது தேன். ஆனா எனக்கும் வேற வழி இல்லையே? நாங்களும் இன்னும் எத்தனை நாளைக்குத் தேன் ஓடி ஒளிய முடியும்?” என்று கேட்டான் இளஞ்சித்திரன்.

“………………..”

“இல்ல கயலுக்கு இன்னும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா பயந்தே ஒடுங்கி போயிருவா. வாயும், வயிறுமா இருக்குறப்ப அவளைப் பயமுறுத்த வேண்டாம்னு நான் எதுவும் அவகிட்ட காட்டிக்கலை…”

“…………………….”

“இது நாங்க சந்தோஷமா இருக்க வேண்டிய நேரந்தேன். ஆனா நிலைமை இப்படி இருக்கும் போது என்ன செய்யமுடியும்? இதுக்கு ஏதாவது வழிகிடைச்சா பரவாயில்லைன்னு தேன் ஓ கிட்ட உதவி கேட்டுட்டு இருக்கேன்…” என்றான் இளஞ்சித்திரன்.

“………………………”

“ம்ம்… ஓ மேலே நம்பிக்கை இருக்கு. முடிஞ்சா நான் கேட்டது சீக்கிரம் கிடைக்க வழி இருக்கானு மட்டும் பாரு. ஆனா நீயும் சூதானமாவே இரு. அவிங்க பார்வை ஓ மேலே விழுந்திராம…” என்று அந்தப் பக்கம் பேசிய நபரை எச்சரித்தான்.

“……………………”

“சரி… நான் வைக்கிறேன். கிடைச்சதும் எனக்கு மெசேஜ் அனுப்பு. நானே ஓ கிட்ட பேசுறேன்…” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் இளஞ்சித்திரன்.

அதன் பிறகு வேறொரு நபருக்கு அழைத்துச் சில நொடிகள் பேசியவன், ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு கீழே இறங்கி வந்தான்.

அவன் கதவை திறந்து உள்ளே வந்த போது கயற்கண்ணி படுக்கையறையில் இருந்த மெத்தையில் படுத்து உறங்கி கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே குளியலறைக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தவன், மனைவியின் அருகில் படுத்தான்.

அவன் படுத்ததும் மெதுவாகத் தன் தலையை அவனின் தோள்பட்டைக்கு மாற்றினாள் கயற்கண்ணி.

“நீ இன்னும் தூங்கலையா கண்ணு?” மனைவியின் உச்சந்தலையில் இதழ் பதித்துக் கொண்டே கேட்டான்.

“நீ பக்கத்தில் இல்லாம தூக்கம் வந்தும் தூங்க முடியலைய்யா…” என்று தூக்க கலக்கத்துடன் சொன்னாள் கயற்கண்ணி.

அவளின் பதிலில் புன்னகை தோன்ற, “ஆனா எனக்கு ஓ பக்கத்தில் இருந்தா தூக்கமே வர மாட்டீங்கிதே கண்ணு…” என்றான்.

“கண்ணை மூடி தூங்கு! தூக்கம் தன்னால வரும்…” கணவன் எதற்கு அடிப்போடுகின்றான் என்று புரிந்து வேகமாகச் சொன்னாள் மனைவியவள்.

“ம்கூம்… அதெல்லாம் முடியாது. இப்போ எனக்குத் தூக்கம் வரலை. என்னைய தூங்க வச்சுட்டு நீ தூங்கு. இல்லனா நான் தூங்கும் போதே நீயும் தூங்கு…” என்று சிறு குழந்தை போல் அடம்பிடித்தான்.

“யோவ்… படுத்தாதேய்யா. ஓ தோளுல படுக்க ஆசைப்பட்டுத் தூங்காம இருந்தது ஒரு குத்தமாய்யா? அதுக்குப் போய் இப்போ நீயும் தூங்காம ஏ தூக்கத்தையும் கெடுக்க நினைக்கிறயே… இது சரியில்ல… ஆமா…” என்று அவள் போலி கோபத்துடன் சிணுங்கினாள்.

“ஏ தோளுல படுத்தாதேன் உனக்குத் தூக்கம் வர்றது போல, எனக்கு நீ தூங்க வச்சாத்தேன் தூக்கம் வருது. என்னைய நீ தேன் அப்படிப் பழக்கி விட்ட. இப்போ பழக்கத்தை மாத்துறதுதேன் சரியில்லை…” என்றவன் கை மனைவியின் இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தன.

அவனின் கையை மேலும் முன்னேற விடாமல் தடுத்த கயற்கண்ணி, “ம்ம் கூசுதுய்யா…” என்று சிணுங்கினாள்.

“கையை நகர விட்டா கூச்சம் போயிரும் கண்ணு…” என்று காதலுடன் கிசுகிசுப்பாக மனைவியின் காதில் முணுமுணுத்த இளஞ்சித்திரன், மனைவியின் கூச்சத்தைப் போக வைக்கும் வேலையில் இறங்கினான்.

அடுத்தச் சில நொடிகளில் முழுதாகக் கணவனின் வசம் சரணடைந்திருந்தாள் கயற்கண்ணி.

தூங்க நினைத்த காதல் தம்பதிகள் தூக்கம் மறந்து போனார்கள்.

தங்கள் வாழ்க்கையில் புயல் வருவதற்கான அறிகுறிகள் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தாலும், அதைத் தனக்குள் மட்டும் போட்டு புதைத்துக் கொண்டு மனைவியின் மனதில் பூவை மட்டும் பூக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் இளஞ்சித்திரன்.