பூவோ? புயலோ? காதல்! – 26

அத்தியாயம் – 26

“உங்களுக்கு எதுக்குச் சிரமம் இளஞ்சித்திரன்?” என்று கேட்ட ரித்விக், அவர்களைச் சங்கடத்துடன் பார்த்தான்.

“எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை ரித்விக். சிஸ்டருக்கு இந்த நேரத்தில் ஹோட்டல் புட் விட வீட்டு சாப்பாடு தான் நல்லது. அதான் எடுத்துட்டு வந்தோம்…” என்று தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டு பையை அங்கிருந்த மேஜையின் மீது வைத்தான் இளஞ்சித்திரன்.

“உங்க வொய்புக்கு வீணா சிரமம் தானே? நாங்க இங்கே கேன்டின்ல பார்த்துப்போம்…” என்றான் ரித்விக்.

“அவளுக்குச் சிரமமா? நீங்க வேற ரித்விக்… அவள் நேத்து நைட்டே உங்களுக்குச் சாப்பாடு எடுத்துட்டு வரலாம்னு சொன்னாள். ஆனா நான் தான் வொர்க் முடிந்து வர லேட் ஆகிருச்சு. அவளைக் கூட்டிட்டு வர முடியலை. இப்பவும் கூட்டிட்டு வரமுடியலைனா என்னைத்தான் திட்டுவாள்…” மனைவியைப் பார்த்துக் கள்ளச்சிரிப்புச் சிரித்துக் கொண்டே சொன்னான் இளஞ்சித்திரன்.

‘யாரு நான் திட்டுவேன்? நீ என்னைய திட்ட விட்டுட்டு சும்மாவா இருப்ப?’ என்பது போல் கணவனைப் பார்த்து வைத்தாள் கயற்கண்ணி.

அவள் திட்ட ஆரம்பித்ததை அவன் யுத்தத்தில் முடித்த கதை அவள் அறிந்த கதையாகிற்றே!

“ஏன் சிஸ்டர் எங்களுக்காகக் கஷ்டப்படுறீங்க?” என்று கேள்வியைக் கேட்ட ரித்விக், இருவரின் நினைவையும் தன் பக்கம் திருப்பினான்.

“சிஸ்டருனா தங்கச்சி தானே அண்ணே. தங்கச்சின்னு சொன்ன பொறவு பிரிச்சு பார்க்கலாமா? நீங்க இங்கன இருக்குற வரைக்கும் நாந்தேன் கொண்டு வருவேன். என்னைய தடுக்காதீங்க…” என்று உரிமையுடன் சொன்னாள் கயற்கண்ணி.

‘என்ன வரு இப்படி?’ என்பது போல மனைவியைப் பார்த்தான் ரித்விக்.

“பரவாயில்லை விடுங்க…” என்றாள் வேதவர்ணா.

இப்போது அவளுக்குக் குளுக்கோஸ் ஏற்றுவதை நிறுத்தியிருந்தனர். ஆனாலும் தெளிவு இல்லாமல் சோர்வுடனே தான் படுத்திருந்தாள்.

“டாக்டர் அதுக்குப் பிறகு வந்து பார்த்தார்களா ரித்விக்?” என்று கேட்டான் இளஞ்சித்திரன்.

“இயர்லி மார்னிங் ஒரு செக்கப் செய்தாங்க. பிரஷர் இன்னும் குறையவே இல்லை. வலியும் இன்னும் இருக்கு, நடக்கச் சிரமப்படுகிறாள்…” என்று விவரம் சொன்னான் ரித்விக்.

“ஓ! பிரஷர் குறைய இன்ஜெக்ஷன் போட்டாங்களா?”

“யெஸ் போட்டாச்சு. இனி ஈவ்னிங் ஒன்னு போடுவாங்க. அதுக்குப் பிறகும் பிரஷர் குறையலைனா இன்னும் ஹாஸ்பிட்டலில் ஸ்டே பண்ண வேண்டியது இருக்கும்…” என்றான்.

“சரியாகிடும்ணே பயப்படாதீங்க. இப்போ சாப்பிடுங்க…” என்று கொண்டு வந்த இட்லியை தட்டில் வைத்துக் கொடுத்தாள் கயற்கண்ணி.

“இல்ல சிஸ்டர்… முதலில் நான் வருவை சாப்பிட வச்சுடுறேன். அவளால் சரியா உட்கார முடியலை. வசதியா உட்கார வச்சுத்தான் ஊட்டி விடணும்…” என்றான்.

“சரிண்ணே, நானும் உதவி பண்ணுறேன்…” என்ற கயற்கண்ணி, வேதா எழுந்து அமர உதவினாள். ரித்விக் ஒரு புறம் பிடிக்க, கயற்கண்ணி ஒரு புறம் பிடித்தாள்.

வேதா வலி தெரியாத வண்ணம் வசதியாக அமரவும், தானே ஊட்டி விட ஆரம்பித்தான் ரித்விக்.

அவனிடம் தட்டை கொடுத்து விட்டு நகர்ந்த கயற்கண்ணியை “அவுக சாப்பிட்டதும் வருவோம் கண்ணு…” என்று சொல்லி அப்படியே வெளியே அழைத்துச் சென்றான் இளஞ்சித்திரன்.

“என்ன வரு இப்படி ஹெல்ப் செய்றாங்க? என்னால மறுக்கவும் முடியலை. ஏத்துக்கவும் முடியலை…” என்று மனைவியிடம் சொன்னான் ரித்விக்.

“சிலர் அப்படித்தான் ரித்வி. நாம கேட்காமயே கூட உதவி பண்ணுவாங்க. அதுவும் இவங்க வில்லேஜில் இருந்து வந்தவங்க போல. வில்லேஜ்காரங்க எப்பயும் இன்னும் அதிகமா உதவும் மனப்பான்மையோட இருப்பாங்க…” என்று கணவன் கொடுத்த உணவை மென்று கொண்டே சொன்னாள் வேதவர்ணா.

“யெஸ் வரு. எனக்கு அவங்க வில்லேஜ் ஸ்லாங் சடர்னா புரியலை. அந்தச் சிஸ்டர் பேசியது எல்லாம் நானா கொஞ்சம் கெஸ் பண்ணித்தான் புரிஞ்சுகிட்டேன்….” என்றான்.

ரித்விக் தமிழ் பேசினான் தான். ஆனால் தமிழில் கொஞ்சம் வேறுபாடு இருந்தாலும் புரிந்து கொள்ளத் தடுமாறினான்.

“அந்த அண்ணாவை கவனிச்சீங்களா ரித்வி. உங்ககிட்ட பேசும் போது நார்மலா பேசுறார். வொய்ப்கிட்ட வில்லேஜ் ஸ்லாங்லயே பேசுறார்…”

“கவனிச்சேன் வரு. நல்ல கப்புள். சரி நாம அவங்களைப் பற்றி அப்புறம் பேசலாம். இப்போ முக்கியமான விஷயம் பேசணும்…” என்றான் ரித்விக்.

“என்ன ரித்வி?”

“நாம உன் அம்மாவை இப்போவே வரச்சொல்லலாமா வரு?” என்று கேட்டான் ரித்விக்

“இப்பயேவா? எதுக்கு ரித்வி, அநாவசியமா அவங்களை வரவைக்கணும்? வேண்டாம்…” என்று உடனே மறுப்பு தெரிவித்தாள் வேதவர்ணா.

“ஏன் வரு? உனக்கு ஹெல்ப்புல்லா இருக்கும் தானே? கீழே விழ முயன்றதில் வந்த பேக் பெயின் இன்னும் இருக்கு. பிரஷரும் குறையலை. இந்த நிலையில் இனி நீ ஆபீஸுக்கு போக முடியாது வரு. வீட்டில் தான் இருந்தாகணும். டெலிவரிக்கு இன்னும் பிப்டின் டேட்ஸ் இருக்கு. எனக்கும் இப்போ உன் கூடவே லீவ் போட முடியாது வரு. டெலிவரி டைம்ல டென் டேட்ஸ் தான் லீவ் போடமுடியும்…” என்றான் ரித்விக்.

“அதான் அம்மா அடுத்த வாரம் நம்ம வச்சுருக்கிற வளைகாப்புக்கு வர்றாங்களே ரித்வி. அப்பயே வரட்டும்…” என்றாள் வேதவர்ணா.

“அதுக்கு இன்னும் ஒன் வீக் இருக்கே வரு. ஒன்வீக் நீ மட்டும் எப்படித் தனியா இருக்க முடியும்? நேத்து ஒரு நாள் தனியா வீட்டில் இருந்ததுக்கே இப்போ ஹாஸ்பிட்டலில் இருக்க. உனக்கு எப்போ பிரஷர் கூடும்னு தெரியாத இந்த நிலையில் உன்னைத் தனியா விட முடியாது வரு. அடுத்த வாரம் வருவதாக இருக்கிற உன் அம்மாவை இப்பயே வரச் சொல்ல போறோம். அவ்வளவு தான்…” என்றான் ரித்விக்.

“இல்ல ரித்வி, ஒன் வீக் நான் தனியா இருந்துப்பேன். நீங்க கவலைப்படாம ஆபீஸ் போய்ட்டு வாங்க…”

“ஏன்? ஏன் வரு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? உன் நல்லதுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தானே சொல்றேன். அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற வரு?” என்று மனைவியின் பிடிவாதத்தில் தோன்றிய எரிச்சலுடன் கேட்டான்.

“இல்ல ரித்வி. அவங்களை எதுக்கு அவசரப்படுத்தணும்? அம்மா வரும் போதே வரட்டுமே?” என்றவளை முறைத்த ரித்வி,

“போதும் வரு நிறுத்து! இதுக்கு மேல பேசாதே! ஏற்கெனவே இப்படிப் பிடிவாதம் பிடித்துத்தான், பேசக் கூடாதது எல்லாம் பேசி என் மனதை உடைத்தாய். இப்போ இந்த நிலையில் உன்கிட்ட கோபத்தைக் காட்ட முடியாமல் தான் என் இத்தனை நாள் வேதனையை எல்லாம் தள்ளி வச்சுட்டு உன்கிட்ட பழைய படி பேசிட்டு இருக்கேன். திரும்பவும் பிடிவாதம் பிடித்து ஏதாவது பேசி நமக்கு இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடாதே! இன்னைக்குக் கால் செய்து ஆன்ட்டியை வரச் சொல்லத்தான் போறேன்…” என்று கோபமாகச் சொன்ன ரித்விக் கடைசி வாய் உணவை அவளுக்கு ஊட்டி விட்டுவிட்டுத் தண்ணீர் கொடுத்து வாயையும் துடைத்து விட்டான்.

அவனின் அதட்டலிலும், கோபத்திலும் வேதாவின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்ள ஆரம்பித்தது.

அதனைக் கண்டாலும் பொருட்படுத்தாதவன், மாத்திரையை எடுத்து கொடுத்து போட சொன்னான். அவள் மாத்திரையை உண்டதும் தானும் இட்லியை எடுத்து வைத்து உண்டுவிட்டு வெளியில் காத்திருந்தவர்களை அழைத்தான்.

அவர்களைக் கண்டதும் வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் வேதவர்ணா.

“மதியத்திற்கும் லன்ட்ச் ஹாட்பேக்ல இருக்கு ரித்விக். நீங்களும், சிஸ்டரும் அதைச் சாப்பிட்டுக்கோங்க. நைட் நான் வொர்க் முடிந்து வந்ததும் டின்னர் எடுத்துட்டு வர்றேன். இப்போ நாங்க கிளம்புறோம்…” என்றான் இளஞ்சித்திரன்.

“நைட்டுக்கு எல்லாம் எதுக்கு இளஞ்சித்திரன்? நாங்க இங்கேயே இட்லி வாங்கிக்கிறோம்…” என்று மறுத்தான் ரித்விக்.

“இல்லைங்க அண்ணே. நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உங்க இரண்டு பேருக்கு இல்லைனாலும் நாம வயித்துல இருக்கிற குட்டிப் பாப்பாவுக்காகப் பார்க்கோணும். பிரசவம் ஆகுற சமயத்துல சத்தான ஆகாரமா பிள்ளைக்குப் போயி சேரணும். அதுக்குக் கடை சாப்பாடு எல்லாம் சரிவராது. எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. எங்களுக்கும் இங்கே யாரும் இல்லை. நீங்க புதுசா எங்களுக்குக் கிடைச்சிருக்கீங்க. உங்களுக்குச் செய்யணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. நீங்க மறுக்கக் கூடாது…” என்றாள் கயற்கண்ணி.

கிடைத்த புதுத் தமிழ் பேசும் உறவுகளைக் கயற்கண்ணி அவ்வளவு சுலபமாக விடுவதாக இல்லை.

அதுமட்டுமில்லாமல் கிராம மக்களுக்கே உரிய உதவும் மனப்பான்மை அவளை அவர்களுக்குச் சந்தோஷத்துடன் உதவச் சொல்லி தூண்டியது.

கடந்த நான்கு மாதங்களாகச் சொந்தங்கள் யாரும் இல்லாமல் இளஞ்சித்திரனுடன் மட்டும் பேசி, அவன் வேலைக்குச் சென்றதும் வீட்டிற்குள்ளேயே ஒற்றை ஆளாக வலம் வந்தவளுக்கு அவர்களிடம் இயல்பாகப் பழகும் ஆர்வம் தலை தூக்க மனமுவந்து அவர்களுக்காகச் செய்ய நினைத்தாள் கயற்கண்ணி.

அவர்களிடம் அதற்கு மேலும் மறுக்க முடியாத ரித்விக், வேறுவழி இல்லாமல் சம்மதமாகத் தலையசைத்தான்.

“அப்புறம் அண்ணே, இப்போ நீங்க வீட்டுக்கு போய்ட்டு குளிச்சுட்டு அவுகளுக்கும் மாத்துத்துணி எடுத்துட்டு வாங்க. அதுவரைக்கும் நான் இங்கனயே இருக்கேன். நீயும் சோலிக்கு கிளம்புய்யா. சாயந்திரம் வரும்போது என்னைய கூப்பிட்டுக்கோ…” என்று அடுத்தத் திட்டமிடுதலை ஆரம்பித்தாள் கயற்கண்ணி.

‘இதென்ன புதுத் திட்டம்? என்கிட்ட கூடச் சொல்லலையே…’ என்பது போல மனைவியைப் பார்த்தான் இளஞ்சித்திரன்.

“என்னய்யா பார்க்கிற? அவுக இரண்டு பேரையும் பாரு. அவரு நேத்து போட்ட உடுப்போடயே இருக்காரு. அவுக இப்ப ஆஸ்பத்திரி உடுப்புல இருந்தாலும், வீட்டுக்கு போகும் போது வேற உடுப்பு மாத்திட்டுத்தேன் போக முடியும். நேத்து போட்ட அழுக்கு உடுப்பை போட முடியாது. அது தேன் அந்த அண்ணனை வீட்டுக்கு போய்ட்டு வரச் சொல்றேன்…” என்றாள் கயற்கண்ணி.

அவள் சொல்வது இளஞ்சித்திரனுக்கும் புரிந்தது. ஆனாலும் மனைவியின் உடல்நிலையையும் யோசித்தான். தான் வர இரவு ஆகிவிடும். அதுவரை அவளால் மருத்துவமனையில் இருக்க முடியுமா? அவளுக்குச் சோர்வு வருமே என்று நினைத்தான்.

கணவனின் அந்தத் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கயற்கண்ணி, “வீட்டுலேயே தனியா மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்து இருக்குறதுக்கு இங்கன இருக்குறதுல எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைய்யா. நீ கவலைப்படாம சோலிக்கு போயிட்டு வா…” என்று கணவனுக்குக் கேட்கும் படி மட்டும் முணுமுணுத்தவள், ரித்விக்கையும் மேலும் பேசி மறுப்பு தெரிவிக்க விடாமல், “உங்க பொஞ்சாதியை நான் சூதானமா பார்த்துக்கிறேன். நீங்க போயிட்டு வாங்கண்ணே…” என்று அனுப்பி வைத்தாள்.

“அவுகளுக்குத் தாராளமா உதவி பண்ணு கண்ணு. ஆனா ஓ உடம்பையும் பார்த்துக்க…” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு தானும் அலுவலகம் கிளம்பினான் இளஞ்சித்திரன்.

இரு ஆண்மக்களும் கிளம்பியதும் வேதாவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் கயற்கண்ணி.

“ரொம்பத் தேங்க்ஸ். கேட்காமயே எங்களுக்கு நிறைய உதவி செய்றீங்க…” என்றாள் வேதவர்ணா.

“பக்கத்துல பக்கத்துல இருக்கோம். அதுவும் தமிழ் பேசுறவகளா வேற போயிட்டீங்க. இது கூடப் பண்ணலைனா எப்படிங்க?” என்றாள் கயற்கண்ணி.

“நீங்களும் ப்ரெக்னட்டா இருக்கீங்களா?” என்று விசாரித்தாள் வேதா.

“ம்ம்… ஆமா…” என்று வெட்கத்துடன் தலையைப் ஆட்டினாள் கயற்கண்ணி.

அடுத்தும் சிறிது நேரம் பெண்கள் இருவரும் பேசி தங்களுக்குள் நன்றாகப் பழகி கொண்டனர்.

பேச ஆள் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தங்கள் காதல், கல்யாணம் வரை அனைத்தையும் சொல்லி, வேதாவையும் அவளின் கதையைச் சொல்ல வைத்திருந்தாள் கயற்கண்ணி.

பெண்களுக்குள் ஒரு நட்புணர்வும் ஏற்பட்டிருந்தது.

வேதவர்ணா சாதாரணமாகக் கயற்கண்ணியுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவளின் மனதிற்குள் கணவனின் கோபமும், முடிவுமே அவளைத் துரத்திக் கொண்டிருந்தது.

அந்த எண்ணம் அவளைச் சோர்வடையவும் வைக்க, அவளின் நிலையைக் கவனித்த கயற்கண்ணி அவளைத் தூங்க சொன்னாள்.

ரித்விக் குளித்துவிட்டு, மாற்றுடை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனை வந்து சேர்ந்த போது வேதாவை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். மருத்துவரின் முகம் லேசாக இறுக்கத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

மருத்துவர் சொல்லும் வேலையைத் துரித கதியில் செய்து கொண்டிருந்தார் செவிலி.

கைகளைப் பதற்றத்துடன் பிசைந்த படி ஓரமாக நின்றிருந்தாள் கயற்கண்ணி.

அங்கிருந்த சூழ்நிலையைக் கண்ட ரித்விக்கின் கண்கள் திடுக்கிடலை காட்டின.

“வாட் ஹேப்பன்ட் டாக்டர்?” என்று மருத்துவரிடம் பதற்றத்துடன் விசாரித்தான்.

“வெயிட் எ மினிட் மிஸ்டர் ரித்விக்…” என்ற மருத்துவர், வேதாவின் புஜத்தில் ஒரு ஊசியை ஏற்றிவிட்டு, தன் அறைக்கு ரித்விக்கை வரச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தார்.

“உங்களுக்கும், உங்க வொய்ப்க்கும் என்ன பிரச்சினை ரித்விக்?” தன் இருக்கையில் அமர்ந்ததும் ஆங்கிலத்தில் தன் கேள்வியைத் தொடங்கினார் மருத்துவர் காயத்ரி.

“பிரச்சினையா? எதைப் பற்றிக் கேட்கிறீங்க டாக்டர். இப்போ என் வொய்ப்க்கு என்னாச்சு? அவள் ஏன் நான் உள்ளே வந்த போது கண் திறவாமல் கிடந்தாள்?” என்று கேட்டான் ரித்விக்.

“உங்க வொய்ப் ஏன் அப்படி இருந்தாங்கனு நீங்க தான் சொல்லணும் மிஸ்டர் ரித்விக். காலையில் செக்கப் பண்ணும் போது இருந்ததை விட, இப்போ வேதவர்ணாவிற்குப் பிரஷர் அதிகமாகிருக்கு. எப்படித் திடீர்னு பிரஷர் கூடுச்சு? காலையில் நீங்களும் உங்க வொய்ப்பும் ஏதோ வாக்கு வாதம் பண்ணிக்கிட்டதா உங்க அறைக்குப் பக்கத்து அறைக்கு நர்ஸ் வந்த போது காதில் விழுந்ததா சொல்லிருக்காங்க. நீங்க வெளியே போயிருந்தப்போ வேதாவை செக்கப் பண்ண நர்ஸ் உள்ளே வந்தபோது, ‘ப்ளீஸ் ரித்வி, என்னைப் புரிஞ்சுக்கோங்கன்னு’ சொல்லிட்டே தூங்கிட்டு இருந்த வேதா அலறி எழுந்து இருக்காங்க. அவங்களைக் கண்ட்ரோல் பண்ணி செக் செய்து பார்த்ததில் பிரஷர் ஹைல இருக்கு. இப்போ நீங்க தான் சொல்லணும். என்ன பிரச்சினை?” என்று கேட்டார் மருத்துவர்.

அவர் சொன்ன விவரங்களைக் கேட்டு அதிர்ந்து போனாலும், தங்கள் சொந்த பிரச்சினையை மருத்துவரிடம் சொல்ல தயங்கினான் ரித்விக்.

அவனின் தயக்கத்தைக் கவனித்த மருத்துவர், “உங்க வொய்ப்க்கு இருக்குற பிரஷரின் அளவு சாதாரண விஷயம் இல்லை ரித்விக். இதை இப்போவே கட்டுப்படுத்தலைனா உங்க வொய்ப், குழந்தை இரண்டு பேரையுமே அதிகம் பாதிக்கும் விஷயம். உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கக் கூடியது. அதைக் குறைக்க என்ன பிரச்சினைனு எங்களுக்குத் தெரிஞ்சாகணும் ரித்விக்…” என்று மருத்துவர் பின்விளைவுகளைச் சொல்ல,

தயக்கத்துடன் ஆரம்பித்துத் தங்கள் திருமணம் நடந்த சூழ்நிலை, அவளின் பெற்றோருக்கான அவளின் ஏக்கம், அதனால் சில நாட்களுக்கு முன் தங்களுக்குள் பிரச்சினை வந்தது. இப்போதும் அந்தப் பிரச்சினையின் தொடர்ச்சியாக இன்று ஏற்பட்ட வாக்குவாதம் வரை அனைத்தையும் சொன்னான் ரித்விக்.

“வரு கன்சீவ் ஆகும் முன்பு வரை அவள் அதிகமாகக் கோபப்பட்டுப் பார்த்தது இல்லை டாக்டர். ஆனால் அன்னைக்கு அவளுக்கு அதிகமாகக் கோபம் வந்தது. அதோட அதிகமாகவே பேசியும் விட்டாள். அதுக்குப் பிறகு அவளிடம் கேட்டால் எனக்கு ஏன் அப்படிக் கோபம் வந்ததுனே தெரியலை. எதையுமே நான் மனசறிஞ்சு பேசலைன்னு வேற சொன்னாள். பிரகன்சி ஆன பிறகு நிறைய அவளிடம் மாற்றம் வந்துருச்சு டாக்டர்…” என்றான் ரித்விக்.

“உங்க வொய்ப் நடந்து கொண்ட முறைகளை எல்லாம் நீங்க செக்கப் வந்தப்பயே என்கிட்ட சொல்லியிருக்கணும் ரித்விக்…” என்றார் மருத்துவர்.

“சாரி டாக்டர்… அவளுக்கு ஏதோ டென்ஷன் அதான் அப்படி இருக்காள். அதுவும் அவங்க வீட்டை முக்கியமாக நினைச்சுத்தானே அப்படி இருக்காள். இதையெல்லாம் எதுக்குச் சொல்லணும்னு தான் சொல்லலை டாக்டர்…” என்றான்.

“உங்க மனநிலையும் புரியுது ரித்விக். நிறையப் பேர் டாக்டர்கிட்ட ஏன் எல்லாத்தையும் சொல்லணும்னு தான் நினைப்பீங்க. ஆனா திடீர்னு உங்க மனைவிகிட்ட கன்சீவ் ஆன பிறகு மாற்றம் வந்ததை நீங்க சொல்லியிருக்கணும்…” என்றார் மருத்துவர்.

“ஓ! இப்போ அதனால் பெரிய பிரச்சினையா டாக்டர்?” என்று கேட்டான் ரித்விக்.

“பிரகன்ஷி நேரம் பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும் ரித்விக். பிரகன்ஷி பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம் மட்டும் இல்லை. அதிகச் சோதனைகளைத் தரும் காலக்கட்டமும் இதுதான்.

அவங்க ஹார்மோன் மாற்றம் இந்த நேரத்தில் அதிகம் இருக்கும். இந்த ஹார்மோன் மாற்றம் இருக்கும் நேரத்தில் கூடுதலா உங்க வொய்ப் குடும்பத்தைப் பற்றிய கவலையும் அவங்களைப் பாதிச்சிருக்குனு நினைக்கிறேன். அதனால் தான் பிரகன்ஷிக்கு முன்பு இல்லாத வகையில் பிரகன்ஷிக்கு பிறகு அவங்களிடம் கோபம், என்ன பேசுறோம்னு தெரியாமல் பேசிவிடுவது, பின்பு அதையே நினைச்சு வருந்தி கொண்டிருப்பது எல்லாம் நடந்திருக்கும்னு நினைக்கிறேன். இந்த மாதிரி உண்டாகும் கர்ப்பகால அழுத்தத்தை ப்ரிபார்டம் டிப்ரஷன்னு (Prepartum Depression) சொல்லுவோம். இது கர்ப்பணி பெண்களுக்கு வரும் டிப்ரஷன். அது வேதவர்ணாவுக்கு இருக்குமோனு சந்தேகப்படுறேன்.

நார்மலாவே பெண்கள் கர்ப்ப காலத்தில் பிறந்த வீட்டினரை, தாயாரை அதிகமாகத் தேடுவாங்க. வேதாவின் குடும்பச் சூழல் இப்போ இருக்கும் நிலையில், இன்னும் அதிகமாகவே தன் வீட்டாரை அவங்களைத் தேட வச்சிருக்கும். கர்ப்பிணிகளுக்கு இது மாதிரி அழுத்தம் வரக் கூடாதுன்னு தான் கர்ப்பகாலத்தில் பெண்களைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பது. அவங்க அம்மாவே மகளோட மனசை புரிஞ்சுக்கிட்டு அந்த அழுத்தம் வர விடாம பார்த்துக் கொள்ளுவார்கள். ஆனால் வேதா விஷயத்தில் அவங்களால் பிறந்த வீட்டிற்குப் போக முடியாதது, அவங்களும் இங்கே வராதது அவங்களை அதிகமா பாதிச்சிருக்கு.

இது தவிர அவங்க இன்னைக்குப் புலம்பிக்கிட்டே எழுந்ததைப் பார்த்தால் அவங்களுக்கு இன்னும் ஏதோ உள்ளுக்குள் அழுத்தம் இருக்கு. எதையோ நினைச்சு மனசை போட்டு குழப்பிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். அது என்னன்னு கேட்டு அவங்களைத் தெளிவுபடுத்தணும் ரித்விக். இல்லன்னா குழந்தை பிறந்த பிறகு கூட இந்த அழுத்தம் அவங்களைத் தொடர வாய்ப்பு இருக்கு. அப்படித் தொடர்ந்தால் அது அவங்களை இயல்பாகக் குழந்தைக் கூட ஒட்ட விடாது. குழந்தையைப் பார்த்தாலே அவங்க வித்தியாசமாகப் பிகேவ் பண்ண சான்ஸ் இருக்கு. அது தாய், குழந்தை இருவருக்குமே நல்லது இல்லை…” என்றார் மருத்துவர்.

அவர் சொன்னதைக் கேட்டு திகைத்து திண்டாடி போனான் ரித்விக்.

ஏதோ குடும்பத்தைப் பற்றிய ஏக்கத்தில் தான் மனைவி திடீரெனக் கோபப்படுகிறாள். தன்னை வருந்த வைக்கும் வகையில் பேசுகிறாள் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க, அவளின் அந்தச் செயலுக்குப் பின்னால் இப்படி ஒரு கர்ப்பகால டிப்ரஷன் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை.

“அவளோட டிப்ரஷனை குறைக்க என்ன வழி டாக்டர்?” என்று கலங்கிய விழிகளுடன் கேட்டான் ரித்விக்.

“அவங்களை மனசு விட்டு பேச வைக்கணும் ரித்விக். இன்னும் என்னென்ன நினைச்சு மனசை குழப்பிகிறாங்கன்னு விசாரிக்கணும். நீங்களே கூட மெதுவா விசாரிச்சு பாருங்க. ஆனா ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுகோங்க. நீங்க கோபப்பட்டா அது அவங்களை ரொம்பப் பாதிக்கும். அதனால் அவங்க மேலே உங்க மனஸ்தாபத்தைக் காட்டி இன்னும் அவங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது. உங்ககிட்டயும் அவங்க குழப்பத்தைச் சொல்லலைனா, சின்னக் கவுன்சிலிங் தான் வைக்கணும்…” என்றார் மருத்துவர்.

“நானே முதலில் பேசிப் பார்க்கிறேன் டாக்டர்…” என்று சொல்லிவிட்டுக் கனத்த இதயத்துடன் மனைவியைப் பார்க்க சென்றான் ரித்விக்.

வறண்டு போன நெஞ்சத்திற்கு வடிகால் தேடுகின்றேன்…
வார்த்தைகள் இல்லா மௌனத்திடம்!