பூவோ? புயலோ? காதல்! – 19

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 19

“என்னடி சொன்ன?” என்று கேட்டுக் கொண்டே மனைவியை அடிக்கக் கையை ஓங்கியிருந்தான் இமயவரம்பன்.

“யோவ்! கண்ணால பார்த்த உண்மைய சொல்ல வந்தா என்னையவே அடிப்பியா நீ?” என்று பதிலுக்குத் தன் கன்னத்தில் கை வைத்த படி கத்திக் கொண்டிருந்தாள் சாந்தாமணி.

“உண்மையா? எதுடி உண்மை? என் தம்பியை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்றது தேன் உண்மையா?” என்று கடுமையாகக் கேட்டான்.

“என்னது? இல்லாதது, பொல்லாததா? ஏ ரெண்டு கண்ணால பார்த்தேன்யா. அந்தக் கீழ் சாதி சிறுக்கியோட, ஓ தம்பி கொழைஞ்சு கொழைஞ்சு பேசிட்டு இருந்தாரு. இதோட ரெண்டு தடவை பார்த்தேன்யா. அதுக்குப் பிறகு தேன் வந்து சொல்றேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலமுன்னு சொல்ல நான் ஒன்னும் கூறுகெட்டவ இல்லை…” என்ற மனைவியை நம்ப முடியாமல் பார்த்தான் இமயவரம்பன்.

“தெரியும்யா… ஏ பேச்சை நீ நம்ப மாட்டன்னு எனக்குத் தெரியும். உமக்குப் பொண்டாட்டியை விட ஓ பெத்தவங்களும், கூடப் பொறந்தவரும் தான பெருசு. இல்லைனா என்னைய ஓ ஆத்தா பூக்கா மரம்னு சொன்னதை மரம் மாதிரி கேட்டுட்டு சும்மா இருந்திருப்பியா?” என்று கண்ணீர் விட்டாள்.

“இந்தா, எந்தப் பேச்சு பேசிட்டு இருக்கும் போது எந்தப் பேச்சுக்கு தாவிக்கிட்டு இருக்க? அதான் அன்னைக்கே அதுக்கு உன்னைய சமாதானம் செய்தேன்ல? இப்போ ஏ தம்பி விஷயத்துக்கு வாடி! நீ நிசமாத்தேன் சொல்றீயா?” என்று கேட்டான்.

கணவன் தன்னை அன்று எப்படிச் சமாதானம் செய்தான் என்று நினைத்தவளுக்கு முகம் சிவந்து போனது.

அன்று இரவு தங்கள் தனிமையில் அவன் செய்த சமாதானத்திற்கு ஒன்றும் குறை இல்லை தான்.

ஆனால் சமாதானம் செய்த முறையும், இடமும் தான் அவ்வப்போது அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.

தனிமையில் கொஞ்சி சமாதானம் செய்வதை விட, தன்னைப் பேசும் அவனின் பெற்றோரிடம் தன் மனைவியை இப்படிப் பேச வேண்டாம் என்று கணவன் சொல்ல வேண்டும் என்று அவளின் மனம் எதிர்பார்த்தது.

ஆனால் அப்படி ஒன்று நடக்காமல் போவது அவளை உள்ளுக்குள் இறுக வைத்துக் கொண்டிருந்தது.

“இருட்டுக்குள்ள கொஞ்சிட்டா எல்லாம் சரியா போயிருச்சா?” என்று கணவனுக்கும் கேட்கும் படியே முணுமுணுத்தாள்.

ஆனால் அவளின் முணுமுணுப்பை கேட்கும் நிலையில் இமயவரம்பன் இல்லை.

மனைவியின் முணுமுணுப்பை கேட்டிருந்தால் அவனின் ஓங்கிய கை அவளின் கன்னத்தில் விழுந்திருக்கும்.

அவன் தன் தம்பியைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

தம்பி ஊருக்கு வந்த முதல் நாளே அந்தப் பெண் கயலுடன் பேசியதும், வயலில் பெண்கள் வேலை செய்யும் போது அவன் அந்தப் பக்கமே சுற்றி வந்ததும் தாங்கள் வீட்டில் பார்த்த பெண்ணின் புகைப்படத்தைக் கூடப் பார்க்காமல் புறக்கணித்து வருவதும் மனதை நெருட, மனைவி சொன்னது உண்மை தானோ என்று நினைத்து யோசனையில் ஆழ்ந்தான்.

“எங்க வச்சு அவங்களைப் பார்த்த?” என்று மனைவியிடம் விசாரித்தான்.

“நம்ம வாழை தோப்பை தாண்டி அந்த ஆலமரத்துக்கிட்ட பார்த்தேன்…” என்றாள்.

“சரி நான் பார்த்துக்கிறேன். இனி இந்த விசயத்தைப் பத்தி வெளிய மூச்சு விடக் கூடாது…” என்று மனைவியை மிரட்டி விட்டு முகத்தில் ரௌத்திரம் பொங்க அங்கிருந்து நகர்ந்தான்.

அன்றே சில தகவல்களைத் திரட்டியவன், மனைவி சொன்னது உண்மைதான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டவனுக்குத் தம்பியின் மீதும் கயற்கண்ணியின் மீதும் கோபம் கிளர்ந்து எழ, அந்த விஷயத்தைத் தந்தையின் காதிற்குக் கொண்டு செல்லும் முன், கயற்கண்ணியின் தந்தையைத் தனியாக அழைத்து மிரட்டி விட்டு வந்தான்.

கந்தசாமி விஷயம் கேள்விப்பட்டு உடைந்து போனவர், மனைவி பயந்தது போலவே நடந்து போனதில் மகளின் மீது கோபம் வர, முதல் வேலையாக அவளை இருந்த ஒற்றை அறையில் அடைத்து வைத்தார்.

இளஞ்சித்திரனிடம் சந்தோஷமாகப் பேசி விட்டு வந்த சிறிது நேரத்திலேயே தங்கள் காதல் விஷயம் தெரிந்து தான் அடைத்து வைக்கப்பட்டதில் கயற்கண்ணி வேதனையுடன் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

சற்று முன் அன்னை கொடுத்த அடி வேறு வலிக்க, அதை விட அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் அவளை ஆட்கொள்ளச் செய்வதறியாது தரையில் விழுந்து அழுகையைத் தொடர்ந்தாள்.

“கூறுகெட்டவளே இப்போ அழுது என்னடி பிரயோஜனம்? அந்தப் பையனோட இருப்பு என்ன? நாம இருக்கும் நிலைமை என்னன்னு கூட யோசிக்க மாட்டியாடி? அந்தப் பெரிய பையன் என்ன சொல்லி மிரட்டிட்டு போனானு தெரியுமா? உன் பொண்ணோட மானத்தையே கேள்வி குறியா ஆக்கிருவேன்னு மிரட்டி இருக்கான். காசு பணம் இல்லைனாலும் மானம் தான் நம்மகிட்ட உருப்படியா இருந்தது. அதையும் போக வைக்கிற காரியத்தைப் பண்ணிட்டு வந்து நிக்கிறயேடி…” என்று பூட்டிய கதவை பார்த்து கத்திக் கொண்டிருந்தார் வேலம்மாள்.

அதை எல்லாம் காதில் வாங்கிய படி உள்ளே கதறி கொண்டிருந்தாள் கயற்கண்ணி.

இங்கே அவளின் நிலை இப்படி இருக்க, இளஞ்சித்திரனின் வீடோ வெகு அமைதியாக இருந்தது.

இரவு பத்து மணி வரை தந்தையின் காதிற்கு விஷயத்தைச் சொல்லாமல் ஆற போட்டிருந்தான் இமயவரம்பன்.

மனைவியையும் விஷயம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக் கூடாது என்று மிரட்டியிருந்தான்.

அதனால் இளஞ்சித்திரனுக்குத் தன் காதல் விஷயம் அண்ணனுக்குத் தெரிந்து போனது தெரியாமல் போனது.

அதனால் எப்போதும் போலவே அமைதியாக உணவை முடித்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான். கயற்கண்ணி தன் காதலை ஏற்றுக் கொண்ட கனவில் இருந்ததால், அண்ணனின் பார்வை கோபத்துடன் தன் மீது படிந்து மீண்டதை கவனிக்காமல் போனான்.

அவன் மேலே சென்ற சிறிது நேரத்தில் தந்தையிடம் தம்பியின் காதல் விஷயத்தைப் போட்டு உடைத்திருந்தான் இமயவரம்பன்.

அறிந்து கொண்ட விஷயத்தில் ஆடி போன வேங்கையன் “என்னடா சொல்ற?” என்று ஆங்காரமாகக் கத்தியிருந்தார்.

“உண்மையைத் தானுங்க அய்யா சொல்றேன். நான் நல்லா விசாரிச்சுட்டேன். அந்தக் கீழ் சாதி கழுதையைத் தம்பி விரும்புறானுங்க அய்யா…”

“கூப்பிடுடா அவனை…” என்று ஆத்திரமாகக் கத்தியவர், இளைய மகனை அழைக்க வாயைத் திறந்தார்.

“அய்யா… அய்யா வேணாம்…” என்று வேகமாகத் தடுத்தான் இமயவரம்பன்.

“என்னடா வேணாம்? அவனைக் கூப்பிட்டு என்னன்னு கேட்க வேணாமா? போயும், போயும் அந்த நாய் தான் இவனுக்குக் கிடைத்தாளா?” என்று கத்தியவரை பெரும்பாடு பட்டு அடக்கினான் மகன்.

“என்னைய எதுக்குடா அடக்குற?”

“அய்யா, இந்த விசயத்தை நாம சூதானமா கையாளணும். அதனால செத்த பொறுமையாவே இருங்க அய்யா…”

“எதுக்குப் பெரியவனே?” என்று யோசனையுடன் கேட்டார்.

“தம்பிக்காகத் தான் அய்யா…”

“ஏன் அவனுக்கு என்ன?”

“தம்பி படிக்கப் போனதில் இருந்து நம்மகிட்ட அவ்வளவா ஒட்டுதலா இல்லைங்க அய்யா. அதோட இப்போ நாம அவசரப்பட்டு ஏதாவது செய்தா தம்பி மொத்தமா நம்மள வெறுத்து ஒதுக்கிருவான். அப்படி நடக்காம இருக்கத்தேன் பொறுமையா இருக்கச் சொல்றேன்…” என்றான்.

“அப்போ வேற என்ன செய்யணும்னு சொல்ற?”

“தம்பி நம்மள வெறுக்கவும் கூடாது. அதே நேரம் அந்தக் கழுதையை நம்ம தம்பியே வெறுத்து ஒதுக்கணும்…”

“அதை எப்படிச் செய்யலாம்னு இருக்க?”

“இப்போ மொத கட்டமா விசயம் கேள்விப்பட்டதும் அந்தக் கழுதையோட அய்யனை பிடிச்சு மிரட்டிட்டு வந்தேனுங்க அய்யா…” என்று சொன்ன மகனை முறைத்த வேங்கையன்,

“ஏன்டா இந்நேரம் அவ குடும்பத்தையே வேரோட அழிச்சுட்டு வராம மிரட்டினேன்னு பெருமையா சொல்லி போட்டு வந்து நிக்கிற?” என்று ஆத்திரமாகக் கேட்டார்.

“கண்டிப்பா வேரோட அழிக்கத்தேன் போறேன்னுங்க அய்யா. ஆனா அது வெட்டினதும் செத்து போற அழிவு இல்லைங்க அய்யா. ஏன்டா மேல் சாதி பையனை பார்த்தோம்னு அவ அணுஅணுவா வருந்தி துடிச்சு அழியணும் அய்யா. அப்போதேன் என் ஆத்திரம் அடங்கும்…” என்று சுளுரைத்தான் இமயவரம்பன்.

“என்ன பெரியவனே செய்யப் போற?”

“நம்ம தோப்பு காவக்காரன் வேலன் இருக்கான்ல அய்யா?”

“அவனுக்கு என்ன?”

“அவந்தேன் அய்யா இப்போ நம்ம துருப்பு சீட்டு…”

“நீ என்ன சொல்ற பெரியவனே? அவனை வச்சு என்ன செய்ய நினைக்கிற?”

“நாப்பது வயசாகியும் இன்னும் கல்யாணம் கட்டிக்காம இருக்கான். அவந்தேன் அய்யா அந்தக் கயலு கழுதைக்கு இனி புருசன்…” என்ற மகனை கண்கள் விரிய பார்த்த வேங்கையன் “சபாஷ்டா மகனே…!” என்று அவனின் தோளை தட்டினார்.

“ஆனா அந்தக் கந்தசாமி பைய தன் மகளை வேலனுக்குக் கட்டிக் கொடுக்க மாட்டேன்னு அடம் பிடிப்பானே பெரியவனே?” என்று யோசனையுடன் கேட்டார்.

“மக வேலன்கிட்ட கெட்டுப் போனா கட்டிக் கொடுத்து தானே ஆகணும்யா?” என்று இமயவரம்பன் கொடூரமாகச் சொல்ல,

மகன் செல்லும் வழி புரிந்து “அப்படிப் போடுடா மகனே…!” என்று தானும் கொடூரமாகச் சிரித்தார்.

“கந்தசாமி இந்த நேரம் மகளை வீட்டுக்குள்ள பூட்டி வச்சுருப்பான் அய்யா. இனி அவளை வெளியே வர வைக்க ஒரு ஐடியா வச்சுருக்கேன். வெளியே வந்துட்டா அவ திரும்ப வேலன் பொண்டாட்டியா தேன் போவாய்யா. நம்ம தம்பியை நினைச்ச பாவத்துக்கு அவ இனி காலமெல்லாம் நாப்பது வயசு வேலன் பொண்டாட்டியா இருந்து கண்ணீர் சிந்தணும். ஏற்கனவே வேலன் மொடா குடியன். அவனே போதும் அவளை இனி ஒரு வழியாக்க…” என்றான் இமயவரம்பன்.

“மகளை ஊர் மேய விட்டதுக்குக் கந்தசாமிக்கும் இதுதேன் நல்ல தண்டனை மகனே. நடத்திக் காட்டு…! ஒன்னு மானம் போச்சுன்னு கந்தசாமி குடும்பத்தோட நாண்டுக்கிட்டு சாகணும். இல்ல வேலனை கட்டிக்கிட்டு அவ சித்திரவதையை அனுபவிக்கணும்…” என்று ஆத்திரத்துடன் சொன்னார் வேங்கையன்.

“இதை நடத்திக் காட்டும் போது அந்தப் புள்ளயே வேலனை தேடி போனது போலச் செட்டப்பு செய்யணும் அய்யா. அப்பதேன் தம்பி அவளைக் காறி துப்பிட்டு நம்ம பக்கம் நிப்பான். நம்ம பக்க ஆளுங்களை ஒரு பத்து பேரை கூட்டிக்கணும் அய்யா. வேலனுக்குச் சாராயத்தை ஊத்தி கொடுத்துட்டு அந்தப் பொட்டையை அவன் இருக்குற பக்கம் விட்டா மிச்சத்தை அவனே பார்த்துப்பான். இதை மட்டும் சரியா நடத்தி காட்டிட்டா, தம்பியும் நம்ம வழிக்கு வருவான். அவளுக்கும் நல்ல தண்டனை. அதே சூட்டோட நம்ம தம்பிக்கு பார்த்துக்கிற பொண்ணு வீட்டில் பேசி கல்யாணத்தை முடிச்சுப் போடணும் அய்யா…” என்று தன் திட்டத்தை எல்லாம் இமயவரம்பன் சொல்ல,

“நீ தேன் என் ரத்தம்னு நிரூபிக்கிறடா பெரியவனே…” என்று மகனின் கீழ் தரமான திட்டத்தைப் பெருமையுடன் பாராட்டி கொண்டிருந்தார் வேங்கையன்.

அதே நேரம் அவ்வளவு நேரம் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளஞ்சித்திரன் மூச்சடைத்துப் போய் நின்றிருந்தான்.

மேலே தன் அறைக்குச் சென்ற சற்று நேரத்திலேயே அண்ணன், தந்தையை வீட்டின் பின்புறம் ரகசியமாக அழைத்துச் செல்வதை ஜன்னல் வழியாகப் பார்த்திருந்தான் இளஞ்சித்திரன்.

அண்ணனும், தந்தையும் கோபமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்ததும், அப்படி என்ன விஷயமாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தன் காதல் விஷயத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டதும் அப்படியே மறைந்து நின்று அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தான்.

அதுவும் கயற்கண்ணியின் மானத்திற்கே கேடு விளைவிக்கும் காரியத்தை அவர்கள் திட்டமாகத் தீட்டவும் அதிர்ந்தே போனான்.

உதிரமே உறைந்து போனது போல் விறைத்துப் போனான் இளஞ்சித்திரன்.

அதுவும் கயற்கண்ணிக்குக் களங்கம் விளைவித்து விட்டு அவளே கெட்டவள் என்று தன்னை நம்ப வைக்கப் போவதாகச் சொன்னதும், கோபம் கனன்று கொண்டு வந்தது.

அந்தக் கோபம் கண்ணை மறைக்க, வேங்கையன் மூத்த மகனை பாராட்டிக் கொண்டிருந்த நேரத்தில் சற்றும் யோசிக்காமல் அடுத்த நிமிடம் வீறு கொண்டு வேங்கையாக இமயவரம்பனின் மீதும் பாய்ந்திருந்தான் இளஞ்சித்திரன்.

அது தான் அவன் செய்து முட்டாள் தனமான காரியமாக அடுத்த நிமிடம் போனது.

“சாதி வெறி புடிச்சவனே! என் கண்ணுவோட மானத்தையே அழிக்க ஐடியா சொல்றீயாடா?” என்று கேட்டுக் கொண்டே அண்ணனை அடிக்க ஆரம்பித்தான் இளஞ்சித்திரன்.

தம்பியின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத வரம்பன் சில அடிகள் தான் வாங்கினான். ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்டவன், தானும் அவனை அடிக்க ஆரம்பித்தான்.

வேங்கையனும் இளைய மகனை அங்கே எதிர்பார்க்காமல் உறைந்து போனவர் பின் சூழ்நிலையை உணர்ந்து, இளஞ்சித்திரனை பெரிய மகனிடம் இருந்து பிரித்து ‘பளார்!’ என்று ஒரு அறை விட்டார்.

அண்ணனை அடித்த இளஞ்சித்திரன் தந்தையைத் திருப்பி அடிக்க முடியாமல் அவரை முறைத்துக் கொண்டு நின்றான்.

“என்னடா ரொம்பத் துள்ற? போயும் போயும் கீழ் சாதிக்காரியோட முந்தானையைப் பிடிச்சு சுத்திட்டு வந்துட்டு, நம்ம சாதியை உயிரா நினைக்கிற உன் அண்ணனையே அடிப்பியா நீ?” என்று கேட்டுக் கொண்டே இன்னொரு அறை விட்டார்.

அறை வாங்கியவனுக்கு ஆத்திரம் வர, “அய்யாவாச்சேனு பார்க்கிறேன்யா. இல்லனா என்னாலையும் திருப்பிக் கொடுக்க முடியும். என்ன சொன்னீங்க, சாதியை உயிரா நினைக்கிறீங்களா? இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? சாதியை உயிரா நினைச்சு ஒரு உயிரும், உணர்வும் உள்ள பொண்ணோட மானத்தை வாங்க நினைக்கிறீங்களே நீங்க எல்லாம் மனுஷங்களா இருக்கவே தகுதி இல்லாதவைங்க…” என்று ஆவேசமாகச் சொன்னான் இளஞ்சித்திரன்.

“டேய்! தம்பியாச்சேனு நானும் விட்டு பிடிச்சா, அய்யாவயே அடிப்பேன்னு சொன்னதும் இல்லாம எதுத்து வேற பேசுறீயா? தராதரம் இல்லாம காதலிச்சது உன் தப்பு…” என்று சொன்ன இமயவரம்பன் தம்பியை அடிக்கப் பாய்ந்தான்.

மீண்டும் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு மாறி மாறி அடித்துக் கொள்ள, இவரையும் பிரித்து விட்ட வேங்கையன், “போதும்டா பெரியவனே! சின்னவனுக்குக் காதல் கருமாந்திர புத்தி உச்சிக்கு ஏறி போய் இருக்கு. இனி என்ன பேசினாலும் புத்தி பேதலிச்சு போனவன் கணக்காத்தேன் பேசுவான். அவனைப் பிடிச்சு ரூமுக்குள்ள அடைச்சு போடு. அடுத்து நீ சொன்ன படி ஆக வேண்டிய காரியத்தைப் பாரு. அவளோட காரியம் நாம நினைச்ச படி முடிஞ்சதும் இவனுக்குக் கால் கட்டை போட்டு விட்டுபுடுவோம். அப்படியும் இவன் வழிக்கு வரலைனா ஓ தம்பி வயித்து வலி வந்து மருந்து குடிச்சுட்டான்னு நினைச்சுக்கோ…” என்று வேங்கையன் உத்தரவு போல் கடுமையாகச் சொன்னார்.

தன்னையே கொல்லவும் தயங்க மாட்டார்கள் என்று புரிந்து இளஞ்சித்திரன் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட நினைத்த அடுத்த நிமிடம், அடங்காத காளையாகத் துள்ளியவனை அண்ணனும், தந்தையுமாக அடக்கி அறைக்குள் அடைத்துப் போட்டனர்.

அறைக்குள் அடைத்துப் போட்டதும் தான், அவசரப்பட்டுத் தான் மாட்டிக் கொண்டது அவனுக்குப் புரிந்தது.

தன் அவசரத்தனத்திற்குத் தன் தலையில் தட்டி கொண்டவன், அடுத்தச் சிறிது நேரத்தில் தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்திருந்தான்.

‘இனி ஒரு செகண்ட் கூட அவசரப்பட்டு அகப்படக் கூடாது சித்திரா. நீ மோத போறது சாதி வெறி பிடிச்ச காலன்கள் கிட்ட. கொஞ்சம் கவனம் சிதறினாலும் இனி ஓ உயிரை எடுக்கக் கூடத் தயங்க மாட்டாங்க. ஓ உசுரும் போகக் கூடாது. ஓ கண்ணுவோட மானமும் போகக் கூடாது. அதுக்கு ஏதாவது வழி யோசி…’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் அடுத்த நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தான்.

யோசனையில் இருந்த நேரம் வெளியே மீண்டும் தந்தையும், அண்ணனும் பேசிக் கொள்வது மெல்லியதாக வெளியே கேட்க கூர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

“சின்னய்யா கிட்ட போய் விசயத்தைச் சொன்னேன்னுங்க அய்யா. அவரும் ஏ யோசனை படி செய்து போடுவோம்னு சொல்லிட்டார். ஆனா ரெண்டு நாளைக்கு விசயத்தை ஆறப் போட சொல்றார்…” என்று இமயவரம்பன் சொல்லிக் கொண்டிருந்தான்.

“எதுக்குடா?” என்று வேங்கையன் கேட்க,

“ஊர் கோவிலில் கொடை வருதே அய்யா. அதைப் பத்தி பேச பக்கத்து ஊரு நாட்டாமைங்க எல்லாம் ரெண்டு நாளைக்கு வந்து போக இருப்பாக. இந்தச் சமயம் வேணாம்னு சின்னய்யா சொல்றார்…”

“ஆமா, ஆமா இந்தச் சின்னவன் துள்ளியதில் அதை மறந்துட்டேன் பாரு. சரி ரெண்டு நாளுக்கு விசயத்தை ஆற போடு! அது வரைக்கும் இந்தச் சின்னவனைத் துள்ளாம பார்த்துக்க…” என்றார் வேங்கையன்.

“அவன் நம்ம வழிக்கு வர்ற வரை இனி அந்த ரூமுதேன் அவனுக்கு ஜெயிலு அய்யா…” என்றான் இமயவரம்பன்.

இரண்டு நாட்கள் கயற்கண்ணிக்கு எதுவும் ஆகாது என்ற காரணத்தால் சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டான் இளஞ்சித்திரன்.

‘இன்னும் ரெண்டு நாளு இருக்கு சித்திரா… ஓ புத்தியை வேலை செய்ய வை! புத்தியை தீட்டு!’ என்று தனக்குத் தானே உறுதியாகச் சொல்லிக் கொண்டவன் அடுத்தடுத்த திட்டங்களை அழகாகக் கோர்த்து ஒரு கணக்கு போட்டான்.

என்னென்ன செய்ய வேண்டும்? கயற்கண்ணியைக் காப்பாற்றி அழைத்து எங்கே செல்ல வேண்டும்? எப்படிச் செல்ல வேண்டும்? பிழைப்புக்கு என்ன செய்ய வேண்டும்? என்று ஒவ்வொன்றையும் கச்சிதமாகத் திட்டமிட்டான்.

சாதி விஷயம் என்று வரும் போது உறவுகள் அனைவரும் ஒன்று கூடுவர், தான் ஒருவன் தனி ஆளாகப் போராட முடியாது என்பதாலேயே ஊரை விட்டுச் செல்லும் முடிவை எடுத்தான்.

எல்லாத்தையும் விடக் கயற்கண்ணியின் மானம் அவனுக்கு முக்கியமாகப் பட்டது. அவளுக்குக் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உறுதியில் அவளைக் காக்க நினைத்தான்.

சொந்த மகனையே கொன்று வயிற்று வலியில் செத்துப் போனதாகச் சொல்வோம் என்ற தந்தையிடம் அடுத்த வீட்டு பெண்ணின் மானத்தை வாங்காதீர்கள் என்று சொன்னால் அவர் கேட்பாரா என்ன?

தன் காதல் கன்னிகைக்குக் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க முடிவு செய்தான்.

அவனின் தப்பிச் செல்லும் திட்டம் போட இரண்டு நாட்கள் தாராளமாகப் போதுமானதாக இருந்தது.

அடைத்து வைத்த அன்றும், மறுநாள் இரவும் தந்தை எழுந்ததும் தன்னைக் கண்காணிக்க அறைக்கு வருகிறார் என்பதை அறிந்து கொண்டவன், எந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டும் என்பதையும் கணக்கிட்டுக் கொண்டான்.

விஷயம் அறிந்து அன்னை ருக்மணி வேறு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.

உணவு கொடுக்க வந்தவரிடம் “நான் நல்ல பொண்ணைத் தானே அம்மா காதலிச்சேன்…” என்று சொல்ல, “நல்ல பொண்ணோ, கெட்ட பொண்ணோ அவ நம்ம சனம் இல்லையே ராசா…” என்ற பதில் அன்னையிடம் இருந்து கிடைத்ததில் அதன் பிறகு அவரிடம் அதைப் பற்றிப் பேசவே இல்லை.

மூன்றாம் நாள் இரவு அவன் அறையில் பரணில் இருந்த பொருட்கள் மூலம் ஜன்னலை கழற்றியவன் கயிற்றைக் கட்டி கீழே இறங்கினான்.

வீட்டாரை பொறுத்தவரை அவன் அமைதியானவன். அவன் இப்படி எல்லாம் யோசிப்பான் என்று சிறிதும் எண்ணாததால் சிறிது அசட்டையாகவே இருந்து விட்டனர்.

அவன் இரண்டு நாட்கள் அறையில் இருந்த போதும் அமைதியாக இருந்ததில், அவன் தங்களுக்குப் பயந்து விட்டான் என்ற எண்ணத்தை அவர்களுக்குத் தர, அதுவே இளஞ்சித்திரன் தப்பிக்கச் சாதகமாகப் போனது. கீழே இறங்கி, வீட்டின் பக்கவாட்டில் நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் தள்ளிக் கொண்டே சென்று ஊரின் எல்லையில் விட்டவன், மீண்டும் நடந்தே கயற்கண்ணியின் வீட்டிற்கு வந்தான்.

அவளை அழைத்துக் கொள்ளும் முன் வாகனச் சப்தம் கூட இடைஞ்சல் கொடுத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

கயற்கண்ணியின் வீட்டின் முன் வழியாக இல்லாமல் பின் வழியாகச் சென்று தான் கொண்டு வந்த கயிற்றின் மூலம் மேலே ஏறி ஓட்டை பிரித்தவன் உள்ளே பார்த்தான்.

கயற்கண்ணி ஒரு சுவரின் ஓரமாகச் சுருண்டு படுத்திருந்தது தெரிந்தது.

சிறு சப்தம் செய்து அவளை எழுப்பினான்.

அழுதே கரைந்து அப்போது தான் கண் அசந்திருந்த கயற்கண்ணி, அந்தச் சப்தத்தில் எழுந்து மலங்க மலங்க விழித்தாள்.

மீண்டும் சப்தமிட்டு அவளை மேலே பார்க்க வைத்தான்.

அவனைக் கண்டதும் சட்டென்று கண்கள் கலங்க, வேகமாக எழுந்து நின்றாள்.

‘சப்தம் போடாதே!’ என்பது போல் வாயில் கை வைத்து காட்டியவன், கயிறை உள்ளே விட்டு அவளை ஏறி வரச் சொன்னான். வீட்டிற்குள் ஒரு நாற்காலி இருக்க, அதன் மீது ஏறி கயிறை பிடித்துக் கொண்டு ஏறியதில் சிறிது உயரமே என்பதால் அவளை வேகமாக வெளியே இழுக்க அவனுக்குச் சுலபமாக இருந்தது.

மேலே ஏறியதும் அவனை வேகமாக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் கயற்கண்ணி.

அவளை அணைத்து ஆறுதல் சொல்லியவன், அந்த அணைப்பில் தானும் ஆறுதல் தேடி கொண்டான்.

“என்னைய அடைச்சு போட்டுட்டாகய்யா…” அவனைக் கட்டிக் கொண்டே கதறலாகச் சொன்னாள்.

“என்னையும் தான்…” என்று அவன் சொல்லவும் விலுக்கென்று தலையை நிமிர்த்தி ‘என்ன சொல்ற?’ என்பது போல் பார்த்தாள்.

‘ஆமாம்’ என்று தலையை அசைத்தவன், தன் வீட்டில் நடந்த அனைத்தையும் சொன்னான்.

அவனின் அண்ணனின் திட்டத்தைக் கேட்டு மேனி நடுங்கி போனாள் கயற்கண்ணி.

அதிலிருந்து அவள் மீண்டு வரவே சில நிமிடங்கள் பிடித்தன.

“இப்போ நான் என்னய்யா செய்ய?” உதடுகள் நடுங்க கேட்டாள்.

“நீ என்ன செய்யட்டும்னு கேட்காத கண்ணு. நாம என்ன செய்யப் போறோம்னு கேளு…” என்றான் அழுத்தமாக.

“என்ன சொல்றய்யா?”

“இப்போ நாம என்ன செய்யப் போறோம்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன் கண்ணு. இப்போ எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ஒண்ணே ஒன்னு தான்…”

“என்னய்யா?”

“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே?” என்று கேட்டவனை, ‘என்ன கேள்வி இது?’என்பது போல் பார்த்தாள்.

“கண்ணால பேசவெல்லாம் இப்போ காலநேரம் இல்லை கண்ணு. வாயை திறந்து பதில் சொல்லு! என்னை நீ நம்புற தானே?” என்று மீண்டும் கேட்டான்.

“ஓ மேல நம்பிக்கை இல்லன்னா உன்னைய பிடிச்சிருக்குன்னு ஓ கிட்ட சொல்லிருக்கவே மாட்டேன்யா…” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், தான் எடுத்திருக்கும் முடிவை அவளிடம் சொன்னான்.

அவனின் முடிவை கேட்டு தாய், தந்தையை நினைத்து சில நொடிகள் மௌனமாக இருந்தவள், பின்பு “போகலாம்யா…” என்று தன் சம்மதத்தைச் சொன்னாள்.

அப்போது ஆரம்பித்த அவர்களின் ஓட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வந்து தான் நின்றது.

அவர்களின் மணவாழ்க்கை‌யும் தொடங்கியது!