பூவோ? புயலோ? காதல்! – 18
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 18
விடியலின் பொழுதில் கணவனைச் சுற்றி உற்சாகமாகவே வளைய வந்தாள் வேதவர்ணா.
“என்ன வரு, இன்னைக்கு நீ ரொம்ப ஹேப்பியா இருக்குற மாதிரி இருக்கு?” என்று தனக்கு உதவி கொண்டே கேட்ட கணவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள் அவள்.
அவளின் அந்த முறுவல் தாங்கள் காதலித்த காலத்தில் அவளிடம் இருந்த மலர்ச்சியை மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு எடுத்துக் காட்டுவது போல் இருந்தது.
“வாட் இஸ் தி மேட்டர் வரு?” அவளின் முறுவல் அவனிடமும் தொற்றிக் கொள்ள மலர்ந்த முகத்துடன் கேட்டான் ரித்விக்.
“நத்திங் ரித்வி…” என்ற மனைவியை யோசனையுடன் பார்த்தான்.
“நோ… ஏதோ விஷயம் இருக்கு. அது என்னனு சொல்…!” என்று விடாமல் கேட்டான் ரித்விக்.
“அதான் நத்திங்னு சொன்னேனே ரித்வி…”
“நோ வரு… உன் ஸ்மைலும், ஹேப்பியும் ஏதோ சம்திங் இருக்குனு தான் சொல்லுது…”
“நம்ப மாட்டிங்களா ரித்வி?”
“நீ உண்மையைச் சொன்னா நம்புறேன்…” என்று பதிலுக்குச் சொன்ன கணவனைப் போலியாக முறைத்தாள் வேதவர்ணா.
“உண்மையைத் தானே? சொல்றேன், ஆனா இப்ப இல்லை…” என்றாள்.
“அப்போ எப்ப உண்மையைச் சொல்வாய்?” என்று திருப்பிக் கேட்டான்.
“சொல்றேன் ரித்வி, கண்டிப்பா சொல்றேன். இன்னைக்கு ஈவ்னிங் சொல்றேன்…” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
“ஓகே…” என்ற ரித்விக்கும் அதோடு அந்தப் பேச்சை முடித்துக் கொண்டான்.
மனைவி மாலையில் வலி தரும் வார்த்தைகளைப் பரிசாகத் தர போகிறாள் என்று தெரிந்திருந்தால் அவளை அவ்விஷயத்தைச் சொல்ல சொல்லி கட்டாயப் படுத்தியிருக்க மாட்டானோ?
ஆனால் அவனின் மனைவி ஏற்கனவே ஒரு முடிவு எடுத்த பிறகு அதை அவள் எப்போது சொன்னாலும் வலி ஒன்று தானே?
இருவருமாக வீட்டு வேலைகளை முடித்து அலுவலக வேலைக்குக் கிளம்பி காரில் சென்று கொண்டிருந்த போது, “நான் இன்னைக்கு ஈவ்னிங் ஐஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்துருவேன் ரித்வி. நீங்க ஒரு ஆறு மணி போலக் கிளம்பி வாங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என்றாள் வேதவர்ணா.
“வொய் வரு? நாம இரண்டு பேரும் சேர்ந்தே வரலாமே?” என்று கேட்டான் ரித்விக்.
“ப்ளீஸ் ரித்வி. நம்ம நல்லதுக்காகத் தான் சொல்றேன். நான் சொன்னதைச் செய்யுங்களேன்…” என்றாள் கெஞ்சல் குரலில்.
மனைவியின் பேச்சை கேட்டு அவளை விநோதமாகப் பார்த்தாலும், அவளிடம் ஒன்றும் கேட்காமல் தலையை மட்டும் அசைத்தான்.
மாலை ஆறு மணி!
மனைவி சொல்லியிருந்த படி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்து கதவை திறந்த ரித்விக்கின் கண்களில் முதலில் பட்டது வரவேற்பறையில் இருந்த சூட்கேஸ் தான்.
சூட்கேஸை பார்த்ததும் அவனுக்கு முதலில் தோன்றியது ‘நம் வீட்டிற்கு யாராவது வந்திருக்கிறார்களா என்ன?’ என்று தான்.
ஆனால் அடுத்தச் சில நிமிடங்களில் அது தங்கள் சூட்கேஸ் தான். வேறு ஒருவருடையது அல்ல என்பது புத்தியில் ஏறியது.
ஏறியதும் மனைவியைத் தேடி அவனின் பார்வை அலைந்தது.
அவள் அவர்களின் படுக்கையறையில் இருக்கும் சப்தம் கேட்டு, “வரு…” என்று அழைத்துக் கொண்டே அங்கே விரைந்தான்.
படுக்கையறையில் கண்ணாடி முன் நின்று தலைவாரி கொண்டிருந்த மனைவியின் பின் சென்று நின்றவன், “ஹாலில் என்ன சூட்கேஸ் அது? நாம எங்கயாவது ஊருக்கு போறோமா வரு?” என்று கேட்டான்.
தலைவாரி விட்டு நிதானமாகத் திரும்பிய வேதா, “ஊருக்கு தான் ரித்வி. ஆனால் நாம இல்லை. நான் தான் போறேன்…” என்றாள் அமைதியான குரலில்.
“என்ன நீயா? எங்கே? எப்போ?” என்று அதிர்ந்த குரலில் கேட்டான்.
“நானே தான்! திருநெல்வேலிக்கு... அம்மா வீட்டுக்கு போறேன். நைட் நைன்னோ க்ளாக் ட்ரெயின்…” என்றாள்.
“என்ன சொல்ற வரு? அவங்க தான் நம்மை அங்கே வரக்கூடாதுனு கண்டிஷன் போட்டுருக்காங்களே? அப்படி இருக்கும் போது நீ எப்படி அங்கே போக முடியும்? அதுவும் இந்த நிலையில்…” என்று அவளின் வயிற்றைக் காட்டி கேட்டான்.
“பேபி பத்தி டாக்டர்கிட்ட கேட்டுட்டேன் ரித்வி. அவங்க டிராவல் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க…” என்று அவனின் முன் கேள்வியை விட்டுவிட்டுப் பின் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள்.
“என்னோட ப்ரஸ்ட் கேள்விக்கு நீ இன்னும் ஆன்சர் பண்ணலை வரு. நம்மை வர வேண்டாம்னு சொன்ன இடத்துக்கு ஏன் போகணும்னு சொல்ற?” என்று அப்போதும் நிதானமாகவே கேட்டான்.
அக்கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனத்தைப் பதிலாகத் தந்தாள் அவனின் மனைவி.
“ஆன்சர் மீ வரு…!” வார்த்தையில் அழுத்தம் கூடியது.
“நான் உங்களை வர சொல்லலையே ரித்வி?”
“என் கொஸ்ட்டீனுக்கு இது ஆன்சர் இல்லையே வரு?”
“நான் மட்டும் போய்ட்டு வரலாம்னு இருக்கேன் ரித்வி. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…” என்று அவனுக்கான சரியான பதில் சொல்லாமல் கெஞ்சலில் இறங்கினாள் வேதவர்ணா.
“நான் ‘நாம்’னு உன்னையும், என்னையும் சேர்த்து பேசுறேன். ஆனா நீ ‘நான்’னு உன்னை மட்டும் தான் குறிப்பிட்டுக்கிற வரு. எனக்குத் தமிழ் சொல்லி கொடுத்த உனக்கே தமிழ் மறந்து போயிருச்சா? உன் பேச்சுக்கான அர்த்தம் என்ன வருதுன்னு உனக்கே புரியுதா இல்லையா வரு?” என்று கேட்டான்.
“ஏன் ரித்வி என்னென்னவோ பேசுறீங்க? என் பேச்சில் அப்படி என்ன அர்த்தம் வருது?” என்று கேட்டாள் வேதா.
“நீ வேற நான் வேறன்னு அர்த்தம் வருது வரு…” என்றான் வலி நிறைந்த குரலில்.
“இல்லை ரித்வி, அப்படி இல்லை…” என்று வேகமாக மறுத்தாள் வேதா.
“இல்லை அப்படித்தான் வரு. என்னை நீ பிரிச்சு பார்க்கலைனா என்கிட்ட முன்னாடியே சொல்லிருப்பாய். ஆனா என்கிட்ட எதுவும் சொல்லாமல் கிளம்பிட்டு இப்படிக் கடைசி நிமிடம் சொல்லிருக்க மாட்டாய்…” என்றான்.
“முன்னாடியே சொன்னா நீங்க விட மாட்டீங்கனு தான் இப்போ சொல்றேன் ரித்வி…”
“இப்போ மட்டும் நான் உன்னைப் போக விடுவேன்னு உனக்கு என்ன நிச்சயம் வரு?”
“நீங்க தடுத்தாலும் நான் போய்த் தான் தீருவேன் ரித்வி…” என்றாள் இறுக்கமாக.
“ஏன் அப்படி என்னையும் மீறி அங்கே போகணும்னு என்ன அவசியம் வர்ணா?” என்று தன் கோபத்தைக் காட்டினான்.
“என்னை வர்ணானு கூப்பிடாதீங்க ரித்வி…”
“இப்போ விஷயம் அது இல்லை வர்ணா. என் கேள்விக்கான பதிலை மட்டும் சொல்…!”
“நான் போய்த் தான் ஆகணும் ரித்வி…”
“அது தான் ஏன்?”
“ஏன்னா எனக்கு என் உறவுகள் வேணும் ரித்வி…” என்றாள் அழுத்தமாக.
“உன் உறவுகள் வேணும்னா என்ன அர்த்தம்? அப்போ என் உறவு உனக்கு வேணாமா?” என்று அவளை விட அழுத்தமாகக் கேட்டான்.
“வேண்டாம் ரித்வி, வார்த்தையைக் கவனமா பேசுங்க. நமக்கு என் வீட்டு உறவு வேணும்னு தான் இப்போ நான் ஊருக்கு போய் ஆகணும்னு சொல்றேன்…” அவன் சொன்ன வார்த்தையில் துடித்துப் போனவளாகப் பேசினாள் வேதவர்ணா.
“அவங்க நம்மை அங்கே வரக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டுருக்காங்க வர்ணா. அப்படி இருக்கும் போது அழையாத வீட்டுக்கு விருந்தாளியா போகப் போறீயா?” என்று கேட்டான்.
“ரித்வி அது அப்போ நம்ம கல்யாணத்தின் போது போட்ட கண்டிஷன். இப்போ மாறி இருக்கலாம் இல்லையா?”
“ஆன்ட்டி இங்கே வந்த போது என்ன சொன்னாங்கனு மறந்து போய் விட்டாயா வர்ணா? உன் அம்மாவையே குழந்தை பிறந்த பிறகு ஒரு மாதத்திற்கு மேலாக இருந்தால் மொத்தமாகவே உறவை கட் பண்ணி விட வைப்போம் என்று சொன்னதா சொன்னாங்க தானே? அது உனக்கு ஞாபகம் இல்லையா?” என்று கேட்டான்.
அது எப்படி மறக்கும்? அவளுக்கு அது நன்றாகவே ஞாபகம் இருந்தது. அதற்குப் பின், தான் தனிக் குடித்தனம் வந்து விடுங்கள் என்று அன்னையிடம் சொல்லி அதை அன்னையும், கணவனும் கண்டித்ததும் கூட ஞாபகம் வந்து அவளின் அன்றைய கோபத்தை மீண்டும் கிளறிவிட்டது.
அது அவளுக்கு வீம்பை தர அதை அப்படியே அவனிடம் காட்ட ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு உறவுகளைப் பற்றி என்ன தெரியும் ரித்வி? அதைப் பற்றி நீங்க அனுபவித்து இருந்தால் உங்களுக்கு அதோட அருமைகள் தெரியும். ஆனா உங்களுக்கு ஒன்னும் தெரியாது ரித்வி. அது தெரியாமல் தான் என்னைப் போக விடாம தடுத்துட்டே இருக்கீங்க.
அவங்க அப்படித் தான் ஆரம்பத்தில் கோபமா இருப்பாங்க. ஆனா நான் அப்படியே ஒதுங்காம அங்கே போய் வந்து கொண்டிருந்தால் தான் அவங்க மனது மாறும். அவங்களா மாறி நம்மை ஏத்துப்பாங்கனு நினைச்சா அது இப்போதைக்கு நடக்காது.
அதுக்குத் தான் முதல் ஸ்டெப்பா இப்போ நான் போறேன்னு சொன்னேன். உங்களையும் கூட்டிட்டுப் போயிருப்பேன். ஆனா அவங்க உங்களை ஏதாவது சொன்னால் எனக்குக் கஷ்டமா இருக்கும். அதான் நான் மட்டும் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்…” என்றாள்.
கணவனுக்கு விளக்கம் சொல்வதாக நினைத்து பேசிக் கொண்டே போனவளுக்கு அவள் முன் சொன்ன உறவுகளைப் பற்றி உனக்குத் தெரியாது என்று வார்த்தைகளைக் கேட்டே கணவன் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனான் என்பதைக் கவனிக்காமல் போனாள் வேதவர்ணா.
தனக்கா உறவுகளைப் பற்றித் தெரியாது? தன் மீது அக்கறை செலுத்தும் ஒரு உறவு கிடைக்காதா ஏங்கிய தன்னை விட வேறு யாருக்கு உறவுகளின் அருமை தெரிந்து விடப் போகிறது? ஆரம்பத்தில் தன்னைப் பாதுகாத்து வந்த உறவு ஏதோ சிறு பையன் என்ற பச்சாதாபத்தை மட்டுமே காட்டினார்களே தவிர, பாசம் என்று ஒன்றை அவர்களிடம் இருந்து பெறாதவன் தானே நான்.
அப்போதெல்லாம் பாசத்திற்காக எப்படி எல்லாம் ஏங்கி இருப்பான்?
தன் ஏக்கத்தை வேதவர்ணாவை காதல் புரிந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் நீங்கள் ஏங்கிய பாசத்தை என் மூலம் அடைவீர்கள் என்று சொல்லி அவனை அரவணைத்தவள் அவள் தான். இப்போது அவளே அவனின் முந்தைய நிலையைக் குறையாகச் சொல்கிறாள். அதை உணர்ந்து தான் சொல்கிறாளா? என்பது போல் மனைவியின் முகத்தையே கூர்ந்து பார்த்தான்.
அவளோ அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
‘உனக்கு உறவுகளின் அருமை தெரியாது’ என்று மனைவி சொல்லி காட்டியதில் அவனுக்கு உள்ளம் வலித்தது.
ஆனால் அந்த வலியை அவளிடம் காட்ட அவனுக்கு விருப்பம் இல்லை. அதை விட இப்போது முக்கியமான ஒன்று இருந்தது.
அது அவளை ஊருக்கு செல்ல விடாமல் தடுப்பது!
ஆம்! தடுத்தே ஆக வேண்டும்.
அவனின் அந்தத் தீவிர எண்ணத்திற்கும் ஒரு காரணம் இருந்தது. அதைச் சொன்னால் மனைவி தாங்கமாட்டாள் என்று இத்தனை நாளும் அதைச் சிறிதும் அவளிடம் காட்டாமல் மறைத்து வைத்திருந்தான்.
இப்போதும் அதைச் சொல்லாமல் அவளைத் தடுக்க நினைத்தான்.
“நான் உன்னைப் போக விட மாட்டேன்னு சொன்னால்?” என்று அவளின் அமைதியை கலைத்தான் ரித்விக்.
அந்தக் கேள்வி வேதாவின் மௌனத்தை மட்டும் இல்லாமல் மனதையும் கலைத்தது.
கேள்வி கேட்ட கணவனைக் கோபத்துடன் முறைத்தவள், “நீங்க என்னைத் தடுக்க முடியாது ரித்வி. நான் போய்த் தான் தீருவேன். ஏன்னா எனக்கு என் அப்பாவும், அம்மாவும் எந்தக் கட்டுபாடும் இல்லாமல் இங்கே வந்து போகணும். அதுக்கு நான் இந்த முயற்சியைச் செய்தே ஆகணும். அதனால் என்னை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது ரித்வி…” என்றாள்.
“உன் முயற்சி வீண் வர்ணா. நீ போனதும் உன்னை வரவேற்பாங்கனு நினைச்சா கண்டிப்பா நீ முட்டாள் தான். நான் உறவுகள் கூட வளராதவன் தான். ஆனா அதுக்காக உறவுகளின் அருமை தெரியாதவன் இல்லை. நாம மட்டும் உறவுகளைத் தேடினால் பத்தாது. உறவுகளும் நம்மைத் தேடணும். ஒருத்தர் நம்மை வராதேனு சொன்ன இடத்துக்குப் போறது அநாகரிகம். அதை என் மனைவியான நீ செய்றது எனக்குப் பிடிக்கலை. அதனால் உன்னை நான் போக விடமாட்டேன் வர்ணா…” என்றான் உறுதியாக.
கணவனின் பேச்சில் வேதாவிற்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது. அந்தக் கோபத்தை வார்த்தைகளில் வடிக்க ஆரம்பித்தாள்.
“நீங்க என் ஹஸ்பென்ட் தான் ரித்வி. என்னோட எஜமான் இல்லை. நீங்க உத்தரவு போட்டால் அதன் படி நடந்து கொள்ள என்னால் முடியாது. எனக்கும் தனி உணர்வுகள் இருக்கு. என் உணர்வுகளை நீங்க கட்டுப்படுத்த முடியாது. நான் போவேன். போய்த்தான் தீருவேன். உங்களால் தடுக்கவே முடியாது…” என்று ஆவேசமாகக் கத்தியவள் படுக்கையறையில் இருந்து வெளியே சென்றாள்.
அவள் பின்னாலேயே சென்ற ரித்விக், “இப்போ ஏன் இப்படிக் கத்துற வர்ணா? நான் சொல்றது உன் நன்மைக்காகத் தான் அதை முதலில் புரிந்து கொள்!” என்றான்.
“எது நல்லது ரித்வி? என் உறவுகள் கிட்ட இருந்து என்னைப் பிரிக்கிறது தான் உங்க நல்லதா?” என்று இன்னும் ஆவேசம் குறையாமல் கேட்டாள்.
“என்ன…? உன் உறவுகள் கிட்ட இருந்து நான் உன்னைப் பிரிக்கிறேனா?” என்று அதிர்ந்து கேட்டான் ரித்விக்.
“ஆமா…” என்று இன்னும் கத்தினாள்.
“வர்ணா என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறீயா?”
“ஆமா ரித்வி… புரிஞ்சு தான் பேசுறேன். நீங்க அனாதையா இருக்கிறதால் இப்போ நானும் அப்படியே இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க. உங்களுக்குன்னு யாரும் உறவுகள் வராதது போல எனக்கும் உறவுகள் வந்து போக கூடாதுன்னு நினைக்கிறீங்க. அதனால் தான் என்னை தடுக்குறீங்க…” என்று ஆவேசமாக கத்தியவளை பார்த்து வாயடைத்து போனான் ரித்விக்.
அவனின் உயிரையே உறைய வைக்கும் குற்றச்சாட்டு!
இப்படி ஒரு குற்றச்சாட்டு, அதுவும் அவனின் மனம் விரும்பும் மனைவியிடம் இருந்து வரும் என்று ரித்விக் சிறிதும் எதிர்பார்த்தான் இல்லை.
மூச்சு விடவே மறந்து போனவன் போல், அசையாமல் மனைவியை வெறித்துப் பார்த்தான் ரித்விக்.
ஆவேசமாக கத்திய வேதாவோ மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிய படி கணவன் இனி மேலும் தன்னை தடுத்தால் இன்னும் வார்த்தையால் தாக்க தயார் என்பது போல் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
தான் பேசிய வார்த்தைகளில் இருந்த வீரியத்தை உணராதவள் போல் நின்றிருந்த மனைவியை பார்த்து உள்ளுக்குள் இன்னும் உடைந்து போனான்.
தன் மனைவி தன்னை புரிந்து கொண்டது இவ்வளவு தானா? என்பது போல் தன் வெறித்த பார்வையை தொடர்ந்தான்.
சில நிமிடங்கள் கடந்த பிறகும் கணவன் எதுவும் பேசாமல் நிற்பதை பார்த்து முகத்தை சுருக்கினாள் வேதவர்ணா.
அப்போதும் கூட தான் பேசிய வார்த்தைகள் கணவனை வாயடைத்து போக வைத்துள்ளது என்பதை உணராதவள் போல் அவனின் அமைதியே தனக்கு சாதகம் என்பது போல் அங்கிருந்து நகர்ந்து கிளம்பும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தாள்.
வாடகை காருக்கு முன் பதிவு செய்தவள், ஏற்கெனவே கடையில் இருந்து வாங்கி வந்திருந்த உணவை உண்ண ஆரம்பித்தாள்.
பாதி உணவை காலி செய்த பிறகு இன்னும் அசையாமல் நின்றிருந்த கணவனை பார்த்தாள். அவன் நின்றிருந்த நிலை அப்போது தான் அவளை உறுத்த, அதற்கு மேல் ஒரு வாய் உணவு கூட அவளுக்குள் இறங்க மறுத்தது.
பாதி உணவுடன் எழுந்து கையை கழுவி விட்டு வந்தவள், சிலையாக நின்றிருந்த கணவனின் கையை பிடித்து தன் கைகளுக்குள் அடக்கி கொண்டவள், “சாரி ரித்வி. ஏதோ ரொம்ப பேசிட்டேன்னு புரியுது. ஆனா என்ன பேசினேன்னு தெரியலை. இப்போ என் மைண்ட்ல இருப்பது எல்லாம் எப்படியாவது தாத்தா, பாட்டியை சமாளிச்சு என் அப்பா, அம்மா கூட ரொம்ப சகஜமாக இருக்கணும் என்பது தான். அதை நீங்க தடுப்பது போல் பேசவும் தான் என் கண்ட்ரோல் இல்லாம ஏதோ பேசிட்டேன். சாரி! இந்த ஒரே ஒரு முறை நான் போய்ட்டு வர்றேன் ரித்வி. என்ன சரியா?” என்று கெஞ்சலாக கேட்டு கொண்டே தன் ஒரு கையை உயர்த்தி கணவனின் கன்னத்தில் வைத்தாள்.
தன் கன்னத்தில் படிந்திருந்த மனைவியின் கையை அப்படியே தன் கன்னத்தோடு பிடித்து வைத்து அழுத்திய ரித்விக், “இல்லை வர்ணா… நீ எவ்வளவு கெஞ்சினாலும் நான் உன்னை போக விடமாட்டேன். நீ இன்னும் என்னை பேசினாலும் கூட உன்னை போக விடமாட்டேன்…” என்றான் உறுதியாக.
அவ்வளவு தான்! அவ்வளவே தான்!
முன் இருந்ததை விட பலமடங்கு ஆவேஷத்துடன் கணவனிடம் இருந்து தன் கையை பறித்துக் கொண்ட வேதவர்ணா, தன் உயிரானவனையே வார்த்தை அம்புகளால் தாக்க ஆரம்பித்தாள்.
இத்தனை நாட்களும் உள்ளுக்குள் தாய், தந்தையோடு ஒட்டி உறவாட முடியாத ஏக்கம், தன்னை இப்படி ஒதுக்கி வைத்து விட்டார்களே என்ற ஆதங்கம். இதை எல்லாம் விடக் கணவன் கூடத் தன் பக்கம் யோசிக்காமல், தன் முயற்சியைத் தடுக்கின்றானே என்ற எரிச்சல், அனைத்தையும் விடத் தாய்மை உண்டானதால் அவளுக்குள் ஏற்பட்டிருந்த ஹார்மோன் மாற்றம் எல்லாம் சேர்ந்துக் கடிவாளம் இல்லாமல் வார்த்தைகளைக் கொட்ட வைத்தது.
வார்த்தைகளுக்கு கடிவாளம் காணாமல் போனால் என்ன ஆகும் என்பதை அந்த நேரத்தில் மொத்தமாக மறந்து போயிருந்தாள் வேதவர்ணா.
கணவன், மனைவிக்கு இடையே மன வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் மன விரிசல் விழுந்தால்???