பூவோ? புயலோ? காதல்! – 17

அத்தியாயம் – 17

“இந்தா சின்னவனே… இந்தப் போட்டோவை பார்த்துச் சொல்லு…” என்று அன்னை நீட்டிய புகைப்படம் இருந்த கவரை வெறித்துப் பார்த்தான் இளஞ்சித்திரன்.

இவ்வளவு விரைவாகப் பெண் தேடிக் கொண்டு வந்து நிற்பார்கள் என்று அவன் சிறிதும் நினைத்துப் பார்த்தான் இல்லை.

“என்னம்மா இது?” ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான்.

“உனக்குப் பார்த்திருக்கப் பொண்ணு ராசா. அப்படியே உனக்குப் பொருத்தமா இருப்பா. மதுர காலேஜுக்கு போயி மூணு வருஷம் படிச்சுருக்கா. என் வகையறா தான். சம்பந்தி வீடு எனக்கு அண்ணன் முறை ஆகோணும். அந்நியமா இல்லாம சொந்தமாவே அமைஞ்சு போயிருச்சு…” மகன் கேட்ட கேள்விக்கு மட்டுமில்லாமல் கேட்காத கேள்விக்கும் சேர்த்தே பதிலை சொன்னார் ருக்மணி.

“இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் மா? எனக்கு இப்போ வேலை கூட இல்லை. இப்போ போயி கல்யாணம், அது, இதுன்னுட்டு இருக்கீக…” அன்னை நீட்டிய கவரை தொட்டு கூடப் பார்க்காமல் சிடுசிடுத்தான்.

“உனக்கு வேலை இல்லாததெல்லம் பெரிய விசயமே இல்ல ராசா. ஓ அய்யன் பேரை சொன்னாலே உனக்குப் பொண்ணு கொடுக்க நானு நீன்னு போட்டி போட்டுக்கிட்டு வருவாக. நமக்கு இருக்குற சொத்து பத்துக்கு ஓ வேலை எந்த மூலைக்குனு நீ அந்த வேலையவே கட்டிக்கிட்டு அலையிறாயோ தெரியலை. பேசாம இங்கனக்குள்ள இருந்தே சோலியை பாருய்யா…” என்றார்.

‘மாப்பிள்ளைக்கு வேலை இல்லையென்றாலும் பரவாயில்லை. ஏ அய்யனுக்கு இருக்குற சொத்துப் பத்தை பார்த்துப் பொண்ணைக் கொடுப்பார்களாமா?’ என்ற எரிச்சல் தோன்ற, “பொண்ணு அய்யாவுக்கா தேடுறீகமா?” என்று நக்கலாகக் கேட்டான்.

“இந்தா… இந்த இடக்கு மடக்குப் பேச்செல்லாம் இங்கன வேணாம் ராசா. நீ இப்படிப் பேசியது ஓ அய்யன் காதுக்கு மட்டும் போச்சுது, உம்ம தோலை மட்டுமில்லாம பிள்ளையாடி வளர்த்து வச்சுருக்கனு ஏ தோலையும் உரிச்சுப் போடுவாக. இந்தா பிடி! பொண்ணு முகத்தைப் பாரு. அப்புறம் நீயே என்னைக்கு மா கல்யாணம்னு கேட்ப…” என்றவர் கவரை மகனின் கையில் திணித்து விட்டு அங்கிருந்து சென்றார்.

அன்னை கொடுத்த கவரை தீ சுட்டார் போல் தூக்கி மேஜையின் மீது போட்டவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

ஒரு பக்கம் பெற்றவர்கள் கல்யாணத்திற்கு அவசரப்படுத்த, இன்னொரு பக்கம் கயற்கண்ணியைக் கண்ணால் கூடப் பார்க்க முடியாமல் போனது அவனைத் துன்பத்தில் ஆழ்த்தியது.

“ஏன் கண்ணு இப்படிப் பண்ற? எங்க போன? நான் உனக்கு மட்டுந்தேன் புருஷனா இருக்கணும்னு ஆசைப்படுறேன் கண்ணு. என்கிட்ட வந்துடேன்…” என்று வாய் விட்டு புலம்பி கொண்டான்.

கண்ணுக்குப் புலப்படாமல் கண்ணாமூச்சி ஆடிய கயற்கண்ணியைத் தேடி கண்கள் கலங்கித்தான் போனது.

இத்தனை நாட்களில் அவளைப் பற்றிய விவரங்களையும் அறிந்து வைத்திருந்தான். அவளின் படிப்பு பன்னிரெண்டாவதுடன் முடிந்து போனதும் தெரியும். அவள் வீட்டின் வசதி நிலைமை, அவளின் பெற்றவர்கள் யார் என்ன செய்கிறார்கள் என்று ஓரளவு விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தான்.

அவளுக்கும், அவனுக்கும் ஏற்ற தாழ்வுகள் நிறைய இருப்பதும் புரிந்தது.

ஆனால் அதை எல்லாம் பொருட்டாக நினைக்கவே இல்லை அவன்.

அவள் தன் மனைவியாக வந்தால் போதும் என்ற மனநிலையில் மட்டுமே இருந்தான்.

அன்னை கொடுத்த புகைப்படத்தைத் திரும்பி கூடப் பார்க்காமல், இன்றாவது கயற்கண்ணியைப் பார்க்க முடியுமா? என்ற எதிர்பார்ப்புடன் வயலுக்குக் கிளம்பிச் சென்றான்.

அவனின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகாமல் கயற்கண்ணி வேலைக்கு வந்திருந்தாள்.

அவளைக் கண்டதும் இளஞ்சித்திரனின் கண்கள் மின்னியது.

ஆட்களோடு ஆளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த கயற்கண்ணி சிறிது நேரத்திற்கு அவனைக் கவனிக்கவே இல்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு யாரோ இளஞ்சித்திரனிடம் பேச்சு கொடுக்கவும், அவனின் குரல் கேட்ட அடுத்த நிமிடம் தலையை விழுக்கென்று உயர்த்திப் பார்த்தாள்.

அவனைப் பார்த்ததும்‌ கயற்கண்ணிக்கு சட்டென்று கண்கள் கலங்கி போனது.

ஆனால் ‌அடுத்த நிமிடமே தன் கண்ணீரை அவன் கண்டு விடாத வண்ணம் வேகமாகக் குனிந்து கொண்டாள்.

அவளின் முயற்சி வீண் என்பது போல் எதிரே இருப்பவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவள் மேல் பார்வையை வைத்திருந்தவன் அந்தக் கயல் விழிகளில் உண்டான கலங்கலைக் கண்டு விட்டான்.

கண்டதும் அவனின் புருவங்கள் கேள்வியாய்ச் சுருங்கியது.

தன்னிடம் பேச்சுக் கொடுத்தவரிடம் பேச்சை முடித்துக் கொண்டவன், அங்கிருந்து நகர்ந்து அங்கே இருந்த மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டான்.

அங்கிருந்து பார்த்தால் அங்கே வேலை செய்பவர்கள் நன்றாகத் தெரிவார்கள் என்பதால் வசதியாக அமர்ந்து கொண்டு கயற்கண்ணியையே ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

வேலை செய்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவளின் கைகள் உயர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டதை கவனித்தவனுக்கு உள்ளுக்குள் பதறிக் கொண்டு வந்தது.

தான் திருமணத்திற்குக் கேட்டது பிடிக்காமல் அழுகின்றாளோ? என்று நினைத்தவனுக்கு மனமும், முகமும் கசங்கி போனது.

மனம் வேதனையில் துடிக்க ஆரம்பிக்க, அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

“என்ன தம்பி தலைய வலிக்கிதா? தலையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டீங்க?” வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் கேட்க, சட்டென்று கையை எடுத்து விட்டு உணர்வுகள் துடைத்த முகத்துடன், “ஒண்ணுமில்லை, சும்மா…” என்றவன் நிமிர்ந்து பார்க்க, அப்போது கயற்கண்ணியும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரின் விழிகளும் ஒரு நொடி சந்தித்து மீண்டு கொண்டன.

உடனே அவளிடம் சென்று பேச உள்ளம் துடித்தது.

சூழ்நிலை கட்டிப்போட பொறுமையுடன் காத்திருந்தான்.

ஒருவழியாக மாலை அளவில் அவளைத் தனியாகச் சந்திக்க வாய்ப்பு கிடைக்க, “உனக்கு என்னைய பிடிக்கலையா கண்ணு?” என்று அவளின் கண்களைப் பார்த்து வேதனையுடன் கேட்டான்.

எப்படிச் சொல்வாள் பிடிக்கவில்லை என்று? அவன் தான் அவளின் மனக்கதவை தட்டி திறந்து விட்டுருந்தானே!

ஆனாலும் மனம் விரும்பினால் மட்டும் போதுமா?

தாங்கள் வாழ்க்கையில் சேர்வது என்பது நடக்காத ஒன்றாயிற்றே!

அந்த நிதர்சனம் புரிந்ததால் அவனுக்கான பதிலை சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

அவளின் அமைதி அவனை உலுக்க, “சொல்லு கண்ணு…” என்றான் மீண்டும்.

அவளோ அவனின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் எங்கோ பார்க்க, “உன்னைய கட்டாயப்படுத்துறேன்னு நினைக்காத கண்ணு. எங்க வீட்டுல எனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களை நான் தடுத்து நிறுத்த ஓ சம்மதம் வேணும். சொல்லு கண்ணு…” என்றான்.

‘பொண்ணு பார்க்கிறார்களா?’ அவ்வார்த்தை எங்கேயோ திரும்பி கொண்டு நின்றிருந்தவளை அதிர்ச்சியுடன் அவன் முகம் பார்க்க வைத்தது.

ஆனால் அது கண் இமைக்கும் நேரம் தான். அடுத்த நிமிடம் மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில் இப்போது அவனுக்குக் கவலையே வரவில்லை.

அவன் தான் அவளின் அதிர்ச்சியைக் கண்டு கொண்டானே!

அவளின் அதிர்ச்சி அவ்வளவு நேரம் இருந்த அவனின் பதட்டத்தை, தவிப்பை தணிய வைத்தது.

அவனின் தவிப்பு அடங்க, அவளின் முகத்திருப்பலை பார்த்து இப்போது உதட்டில் புன்முறுவல் பூத்தது.

“ஏய் கண்ணிவெடி… என்னைய கல்யாணம் கட்டிக்குவ தான?” என்று சிரிப்புடன் கேட்டான்.

“அதான் ஓ வீட்டுல பொண்ணு பார்த்துட்டாகல? போயி கட்டிக்க…” என்று முகத்தைத் திருப்பாமல் கரகரத்த குரலில் சொன்னாள்.

“நீ என்னைய கல்யாணம் கட்டிக்கிறயானு தேன் கேட்டேன். யாரோ ஒரு பொண்ணைக் கட்டிக்கட்டுமானு உன்கிட்ட கேட்கலை…” என்றான் அவளின் பேச்சினால் உண்டான கடுப்புடன்.

“உன்னைய கட்டிக்கிறது எல்லாம் கனவுல கூட நடக்காது. நீ ஓ வழியைப் பார்த்துட்டு போ… நான் என் வழியில போறேன்…” என்றவள் கண்கள் மீண்டும் கலங்கி போனது.

இன்னும் அவனின் முகத்தைப் பார்க்காமல் தான் பேசினாள்.

எப்போது அன்னை கல்யாணத்தைப் பற்றிப் பேசினாரோ, எப்போது இளஞ்சித்திரன் தன் மனதுக்குப் பிடித்தவனாக மாறி விட்டான் என்று உணர்ந்து கொண்டாளோ, அப்போது இருந்து அவளின் கண்கள் கலங்கி கொண்டு தான் இருந்தன.

அவனை விரும்பினால் மட்டும் போதுமா? அது நிறைவேறுமா என்ன?

நிறைவேறாத ஆசையை எப்படி அவனிடம் வெளிப்படுத்துவாள்?

அதனால் தன் மனதை மறைக்க முடிவு செய்துவிட்டு தான் இன்று வேலைக்கே வந்தாள்.

முடிவு எடுத்து விட்டாலும், விலகலை நினைத்து விண்ணென்று வலித்த மனம் உள்ளுக்குள் உருக்க, அவனைக் கண்டதும் அழுகையை வர வைத்திருந்தது.

“நம்ம இரண்டு பேரு வழியும் இப்ப ஒன்னுதேன் கண்ணு…” என்றான் அழுத்தமாக.

“இல்ல, அதெல்லாம் சரி வராது. உன்னோட உசரத்துக்கும், என்னோட இருப்புக்கும் ஏணி வச்சா கூட எட்டாது…” என்றாள்.

“என்னோட உசரத்தை எட்டிப் பிடிக்க ஏணி எதுக்கு? நான் நினைச்சா, என்னைய விட நீ உசரத்துக்குப் போக முடியும்…”

அவன் சொன்னது புரியாமல் குழப்பத்துடன் அவனைத் திரும்பி பார்த்தாள்.

தான் எப்படி அவனை விடப் பெரிய ஆளாக ஆக முடியும்? படிப்பை கூடச் சரியாக முடிக்காமல் கூலி வேலை பார்க்கும் தான் எங்கே? பெரிய படிப்பு படித்து வசதி நிறைந்தவனாக இருக்கும் அவன் எங்கே? என்பது போல் கேள்வியுடன் பார்த்தாள்.

அவள் கேள்வியுடன் பார்க்க, அவனோ குறும்புடன் பார்த்தான்.

“நான் உன்னைய தூக்கினா என்னைய விட நீ உசரமாகிருவ…” என்று கண்களிலும், குரலிலும் குறும்பு மின்ன சொன்னான்.

‘ஆத்தாடி! பேச்சைப் பாரேன்?’ என்பது போல் வாயை பிளந்தவள் விரல்கள் கொண்டு வாயை மூடினாள்.

“என்ன உசரம் பார்த்துருவோமோ?” கண்சிமிட்டலுடன் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.

“இப்படியெல்லாம் பேசினா நான் மயங்கிருவேன்னு கனவு காணாதே! நீ சொல்றது எல்லாம் சரி வராது. இனி இப்படி என் வழியில் குறுக்க வராதே…!” என்று கோபம் போலச் சொன்னவள் சட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள்.

அவனின் முன் நிற்க, நிற்க எங்கே தான் எதுவும் தன் மனதை வெளிப்படுத்தி விடுவோமோ என்று பயந்தாள்.

அந்தப் பயம் அவளை விரட்ட கால்களை எட்டிப் போட்டாள்.

“ஒரு நிமிஷம் நில்லு கண்ணு. எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போ…” என்று அவளைச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினான்.

‘என்ன?’ என்பது போல் அவள் நிற்க, “அப்போ என்னைய பார்த்ததும் எதுக்குக் கண்ணீர் விட்ட?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவள் ஏதோ சொல்ல வர, “இரு! நான் கேட்டு முடிச்சுடுறேன். நான் கல்யாணம் கட்டிக்கலாமானு கேட்டதுக்குத்தேன் அழுதனு சொல்லாத. நான் நம்ப மாட்டேன். அப்போ நானும் அப்படித்தேன் மொதல்ல நினைச்சேன். ஆனா இப்போ பேசும் போது ஓ முகப்பாவமும், என்கிட்ட தடுமாறி பேசியதும் ஓ மனசை எனக்குக் காட்டி கொடுத்துருச்சு. அதனால பொய் சொல்லாம சொல்லு. எதுக்கு அழுத?” என்று கேட்டான்.

அவன் கேட்டதும் ஒரு நொடி பிடிப்பட்ட உணர்வில் முழித்தவள், அடுத்த நொடி புரியாத பாவனையைக் காட்டி, “நான் என்னத்துக்கு அழணும்? நான் ஒன்னும் அழலை…” என்று வேகமாகச் சொன்னவள் இப்போது நிற்காமல் வேகமாக நடந்தாள்.

அவளின் ஓட்டமே அவளின் மனதை இளஞ்சித்திரனுக்கு எடுத்துக் காட்ட, இப்போது மீண்டும் அவளை நிறுத்த முயற்சி செய்யாமல் அவளைப் போக விட்டான்.

அவள் தன்னை மறுக்கும் காரணம் தான் நன்றாகத் தெரியுமே. நிறைவேறாத காதல் எதுக்கு என்று நினைத்திருப்பாள் அது தான் இந்த ஓட்டம் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

அவளின் மனதில் தான் இருப்பதை நினைத்து அவனுக்கு நிறைவாக இருந்தது.

எப்படியும் அவளைப் பேசி சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து சென்றான்.

அதன் பிறகு மீண்டும் மீண்டும் அவளிடம் தன் மனதை வலியுறுத்தினான்.

அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்ததால் தயங்காமல் அவளைச் சம்மதிக்க வைக்கப் போராடினான்.

தன்னையே தேடி வந்து கெஞ்சும் அவனின் தவிப்பும், தனக்குக் கணவனாக வந்தால் அவனாக மட்டும் தான் இருக்க முடியும் என்ற அவளின் மனது அவளுக்கே எடுத்துக் காட்டியதும் சேர்ந்து இளஞ்சித்திரனுக்கு அவளின் சம்மதத்தைச் சொல்ல வைத்தது.

கயற்கண்ணி சம்மதம் சொன்ன பிறகு என்ன செய்வது என்றும் யோசித்து வைத்திருந்தான்.

எப்படியும் தன் பெற்றோர் தன் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும் ஒரு நப்பாசை அவனின் மனதின் ஓரம் இருந்தது.

தன் மீது இருக்கும் பாசத்தில் வேலைக்குச் சம்மதம் சொன்னது போல் காதலுக்கும் பேசி சரிகட்டி சம்மதம் சொல்ல வைக்கலாம் என்று நினைத்திருந்தான்.

அடுத்த வீட்டுப் பிரச்சனையில் சாதியை பெரிதாக நினைப்பவர்கள் தன் வீட்டில் பிள்ளையின் ஆசைக்கு அடிப்பணிய வாய்ப்பு இருக்கலாம் என்று நினைத்தான்.

அன்னை, தந்தைக்கு மட்டுமில்லாமல் அண்ணனிற்கும் தன் மீது பாசம் அதிகம் என்று அவனுக்குத் தெரியும். பாசத்திற்கு முன்னால் சாதி பின்னால் போகலாம். அப்படிப் போகவில்லை என்றாலும் அவளைத் தான் கட்டிக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்துத் தன் முடிவை சொல்லலாம் என்று நினைத்து வைத்திருந்தான்.

பெற்ற பாசம் அவர்களை இளக வைக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.

இப்படியும், அப்படியுமாக ஏதேதோ யோசித்து வைத்திருந்தான். ஆனால் எல்லா நினைப்பும் நினைப்பாக மட்டுமே போகும் என்று அறிய வேண்டிய நேரமும் நெருங்கி கொண்டே வந்ததை அப்போது அறியாமல் போனான்.

அன்று கயற்கண்ணியிடம் தன் படிப்பு, என்ன வேலை, இப்போது வேலை இல்லாதது என்ற விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான் இளஞ்சித்திரன்.

“வேலை இல்லாதவனைக் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டனு வருத்தப்படாத கண்ணு. சுளுவுல அடுத்த வேலை வாங்கிருவேன். இப்போ கூட இங்க இருந்தே போன் மூலமாவும், ஸ்கைப் மூலமாவும் நடக்குற இண்டர்வியூ எல்லாம் அட்டர்ன் பண்ணிட்டு தான் இருக்கேன். நேர்ல போனா சீக்கிரம் வேலை கிடைச்சுரும். நான் தான் ஒரு இரண்டு கம்பெனில கொஞ்சம் டைம் கேட்டிருக்கேன்…” என்று மேலும் தான் வேலை தேடிக்கொண்டிருக்கும் முறையைப் பற்றி விளக்கி கூறினான்.

உண்மையைப் பேசி கண்களில் காதலை மட்டும் இல்லாமல் கண்ணியத்தையும் காட்டியவனை முழு மனதோடு அவளால் நம்ப முடிந்தது.

“சரிய்யா… சரிய்யா…” என்று அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டாள்.

“அதென்ன கண்ணு ய்யா, ய்யான்னே சொல்ற? பேசாம என் பேரை சொல்லியே கூப்பிடு…”

“பேரை சொல்றதா? ம்கூம்… அதெல்லாம் முடியாது. ஏ அம்மா, அப்பாவை ‘எய்யா’ன்னு தான் கூப்பிடும். நானும் அப்படித்தான் சொல்லுவேன்…” என்றாள்

“ஓஹோ…! அப்போ இப்பயே என்னைய ஓ புருஷனா ஏத்துக்கிட்டனு சொல்லு…” என்று குறும்பு புன்னகையுடன் சொன்னான்.

அவன் சொன்ன விதத்தில் கயற்கண்ணியின் முகம் சிவக்க, அதை ரசித்துப் பார்த்தான் இளஞ்சித்திரன்.

இளஞ்சித்திரனுக்குப் பார்த்திருந்த பெண் வீட்டில் ஒரு துக்கம் நடந்திருக்க அவனின் கல்யாண பேச்சு சிறிது நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கயற்கண்ணிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அவளின் அன்னை சொன்ன சொந்தத்தில் இருந்த மாப்பிள்ளை அவர்கள் நினைத்த படி அமையாமல் போனதால், வேறு இடம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரின் வீட்டிலும் கல்யாண பேச்சு இழுத்துக் கொண்டிருந்ததால் இவர்கள் இரண்டு பேருக்கும் பேசி பழகி கொள்ள நேரம் கிடைத்தது.

“அதென்ன பட்டணத்துல போய்ப் படிச்சும் நம்ம ஊருகாரவக கணக்கா பேசுற. அங்கன போயும் பேச்சு மாறலையோ?” என்று பேச்சை மாற்ற கேட்டாள்.

“சென்னைல இருந்தப்ப சாதாரணமாத்தேன் பேசுவேன் கண்ணு. ஆனா நம்ம ஊருகாரவக கிட்ட தன்னால நம்ம ஊரு பேச்சு வந்திரும். ஆனாலும் முன்ன மாதிரி மொத்தமா கிராமத்து பேச்சா இல்லாம கலந்து தானே பேசுறேன்…” என்றான்.

“நீ மட்டுமாய்யா? இந்த ஊருலயே பொறந்து வளர்ந்து இங்கனயே இருக்குறவக கூடக் கலந்து தான் பேசுறாவுக. நானும் தேன்…” என்றாள்.

“அதென்னவோ உண்மை தான் கண்ணு. கால மாற்றத்தோட ஊருக்கு ஊரு இருக்கும் பேச்சு வழக்கும் மாறிக்கிட்டு தேன் வருது. சரி அந்தப் பேச்சு இப்போ நமக்குத் தேவையில்ல. நாம அடுத்து என்ன செய்றதுன்னு பார்க்கணும். எனக்குப் பார்த்திருக்கிற பொண்ணு வீட்டுல துக்கம் ஒன்னு நடந்துச்சுன்னு கல்யாணப் பேச்சை தள்ளிப் போட்டுட்டாங்க. நானும் வேலை இல்லாம இங்கனயே சுத்திட்டு இருக்க முடியாது. ஒரு மாசம் வந்து இருக்கணும் நினைச்சு வந்தேன். இப்போ இரண்டு மாசம் கிட்ட வர போவுது. இதுக்கு மேலயும் வேலை தேடுறதை தள்ளி போட முடியாது. அதனால சீக்கிரமே ஏ வீட்டுல நம்மளை பத்தி பேசலாம்னு இருக்கேன்…” என்றான்.

“ஒத்துப்பாங்களாய்யா?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.

“கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க…” என்று உறுதியுடன் சொன்னான்.

அதில் இன்னும் அவளின் முகம் கலக்கத்தைச் சுமக்க, “பெத்தவுக யாரு தேன் காதலை உடனே ஒத்துப்பாக? பார்ப்போம் கண்ணு. நம்ம போராட வேண்டியது இருக்கும். எம்புட்டு மறுப்பு வந்தாலும் என் முடிவில் இருந்து மட்டும் மாற மாட்டேன் கண்ணு. அதை மட்டும் நீ உறுதியா நம்பணும்…” என்றான்.

“ம்ம்… நம்புறேன்யா…” என்று கயற்கண்ணி சொன்னதும் “நான் பேசிப்பார்க்கிறேன் கண்ணு. என்ன சொல்றாங்கனு கேட்போம். அதுக்குப் பிறகு அடுத்து என்ன செய்றதுன்னு பார்ப்போம்…” என்றான்.

அடுத்து என்ன செய்வது என்று இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் மூச்சு வாங்க வீட்டிற்குள் நுழைந்த சாந்தாமணி தன் கணவனிடம் இளஞ்சித்திரனின் காதல் விஷயத்தைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள்.

தன் சொந்தத்தில் இருந்து பெண் வேண்டாம் என்றதையும், தன்னை மலடி என்று சொன்னதில் உண்டான துவேசத்தையும் இளஞ்சித்திரன் விஷயத்தில் காட்ட ஆரம்பித்தாள் சாந்தாமணி.