பூவோ? புயலோ? காதல்! – 16

அத்தியாயம் – 16

“என்ன வேதா மேடம், உங்க குட்டி என்ன பண்றாங்க?” என்று கேட்ட அலுவலகத் தோழி வித்யாவை சிரிப்புடன் பார்த்தாள் வேதவர்ணா.

தன் வயிற்றில் கை வைத்து லேசாகத் தடவியவள், “நான் தூங்குறேன் ஆன்ட்டினு சொல்றாங்க…” என்று புன்னகையுடன் சொன்னாள் வேதா.

“என்னது ஆன்ட்டியா? வேதா திஸ் இஸ் டூ மச்! எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை. அதுக்குள்ள உன் பிள்ளைக்கு என்னை ஆன்ட்டியாக்க பார்க்கிற?” என்று சிணுங்களாக ஆட்சேபனை தெரிவித்தாள் வித்யா.

“கல்யாணம் ஆகலைனாலும் நீ ஆன்ட்டி தான் வித்தி…” வேதா அவளைக் கடுப்பேற்ற முயல,

“அதெல்லாம் இல்லை. நான் கல்யாணம் முடிக்க இன்னும் இரண்டு வருஷம் ஆகும். அதுக்குள்ள என்னைக் கிழவி ஆக்க பார்க்காதே…!”

“செல்லாது… செல்லாது… நீ ஐஞ்சு வருஷம் கழிச்சுக் கல்யாணம் பண்ணினாலும் இப்போ நீ என் பிள்ளைக்கு ஆன்ட்டி தான். உனக்கும் எனக்கும் ஒரே வயசு. நான் அம்மான்னா நீ ஆன்ட்டி தானே…” என்று வேண்டும் என்றே வேதா அழுத்தமாகச் சொல்ல,

“நீ பண்றது சரியே இல்லை, ஆமா…” என்று வித்யா கடுப்பானாள்.

“சரி விடு… ரொம்ப ஃபீல் பண்ற, அதனால என் குட்டியை உன்னை அத்தைனு கூப்பிட சொல்றேன். ஓகே, இப்போ ஹேப்பியா?” என்று தலையைச் சாய்த்து குறும்புடன் கேட்ட வேதாவை கொலைவெறியுடன் பார்த்தாள் வித்யா.

“ஆமா, ஆமா… அத்தைக்கும், ஆன்ட்டிக்கும் ரொம்பப் பெரிய வித்தியாசம் பார்…!” என்று நொடித்த வித்யா “சரி, போனா போகுது. என்னை அத்தைனு கூப்பிடலைனா குட்டி பேபி கூட, அவங்க அம்மா பேபியும் ஃபீல் பண்ணும். அதனால் போனா போகுதுனு ஒத்துக்கிறேன்…” என்று தாராளம் போல் சொன்னாள்.

“ஹான்… அது…!” என்று மிரட்டல் போலச் சொல்லி சிரித்தாள் வேதா.

“ஓகே வேதா. நான் கிளம்புறேன் அப்புறம் பார்க்கலாம்…” என்று வித்யா தன் பையை எடுத்துக் கொண்டு தயாராக,

“என்ன வித்தி மணி நாலு தானே ஆகுது. அதுக்குள்ள கிளம்பிட்டியா?” என்று வியப்பாகக் கேட்டாள் வேதா.

அவர்களின் வேலை முடிய வழக்கமாக இரவு ஏழு மணியாவது ஆகும். அப்படியிருக்க மாலை நான்கு மணிக்கே கிளம்பும் தோழியை வியப்பாகவும், கேள்வியாகவும் பார்த்தாள்.

“எங்க பெரியம்மா மகளுக்குக் கல்யாணம் வருது வேதா. அதுக்கு எனக்கும் ட்ரஸ் எடுத்து தர்றாங்க. அவங்க பேமிலியா ட்ரெஸ் எடுக்கப் போன அன்னைக்கு என்னால கூடப் போக முடியலை. அதனால எனக்குத் தனியா பணம் கொடுத்து என்னையே எனக்குப் பிடிச்சதா எடுக்கச் சொல்லிட்டாங்க. இன்னைக்குத் தான் ஆஃபிஸ் வேலையில் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தது. அதான் போய்ச் சேலை வாங்கலாம்னு கிளம்புறேன்…” என்று விவரம் சொன்னாள் வித்யா.

“ஓ…! ஓகே வித்தி…” என்ற வேதா ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.

“என்ன வேதா என்ன யோசனை…?” அவளின் அமைதியைப் பார்த்து கேட்டாள் வித்யா.

“எனக்கும் இன்னைக்கு வேலையில் ஃப்ரீயா தான் இருக்கு வித்தி. அதான் வீட்டுக்கு போவோமானு யோசிச்சுட்டு இருக்கேன். ஆனா என் கூட ரித்விக்கும் வர முடியாது. நானா வீட்டுக்கு போனாலும் அங்க தனியாத்தான் உட்கார்ந்து இருக்கணும். அதுக்கு ஆஃபீஸ்லேயே இருந்திடலாம்…” என்றாள் சலிப்பாக.

“”ஹேய்…! அப்படினா பேசாம கிளம்பி நீ என் கூட வா. நான் டாக்ஸி பிடிச்சு தான் கடைக்குப் போவதாக இருந்தேன். டாக்ஸினா உனக்கும் தொந்தரவு இல்லைல? கடைக்குப் போயிட்டு நானே கூட உன்னை வீட்டில் டிராப் பண்றேன்…” என்றாள் வித்யா.

“நல்ல ஐடியாவா தான் இருக்கு. ஆனா நான் எதுக்கும் ரித்விக்கிட்ட ஒரு முறை கேட்டுக்கிறேன்…” என்றவள், தன் கைப்பேசியை எடுத்து கணவனுக்கு அழைத்தாள்.

“யெஸ் வரு…” என்று அந்தப் பக்கம் ரித்விக் அழைப்பை ஏற்றதும், வித்யாவுடன் செல்வதைப் பற்றிச் சொன்னாள்.

“உனக்கு ஓகேனா போய்ட்டு வா வரு…” என்று அவன் சொன்னதும் “ஓகே ரித்வி நான் போய்ட்டு வர்றேன். பை…!” என்று அழைப்பை வைத்தாள்.

“நானும் வர்றேன் வித்தி…” என்று தோழியுடன் கிளம்பினாள் வேதவர்ணா.

தோழிகள் இருவரும் குளிரூட்டப்பட்ட ஆடையகத்தில் நுழைந்து ஒரு மணி நேரம் செலவு செய்து வித்யாவிற்குப் பிடித்தமான ஒரு புடவையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

“என்ன வேதா டையர்ட் ஆகிட்டியா?”

“இல்லை வித்தி, சும்மா உட்கார்ந்து தானே இருந்தேன். ஐயாம் ஆல் ரைட்…”

“ஓகே வேதா, அப்போ பக்கத்தில் ஒரு சாட் கடை இருக்கு. அங்கே போய்ப் பானி பூரி சாப்பிட்டு போவோமா?”

“போகலாம் வித்தி…” என்று வேதா சொல்லவும் இருவரும் பக்கத்தில் இருந்த சிற்றுண்டி கடைக்குச் சென்றனர்.

ஆளுக்கு ஒரு பானி பூரி வாங்கி வந்து பேசிக்கொண்டே சுவைத்துக் கொண்டிருக்க, அப்போது அந்தக் கடைக்குள் சிலர் வந்து அமர்ந்தனர்.

அவர்கள் ஒரே குடும்பம் போலும். வயதானவர்களில் இருந்து கை குழந்தை வரை அக்குடும்பத்தில் இருந்தனர். மொத்தம் பன்னிரெண்டு பேர் இருப்பார்கள்.

ஒரு இருக்கை பற்றாமல் அக்கடையில் இருந்த மூன்று மேஜை இருக்கைகளில் இடம் பிடித்து அமர்ந்தார்கள்.

அக்குடும்பத்தின் இளைஞர் பட்டாளம் தங்கள் குடும்பத்திற்குத் தேவையான சாட் வகைகளை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் கடையில் தங்களுக்குத் தேவையான உணவு வகைகளைத் தாங்களே தான் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும்.

வாங்கி உண்டு கொண்டே, மேஜை மாறி அமர்ந்திருந்தாலும், அவர்களுக்குள் சலசலவென்று பேசிக் கொண்டு இருந்தனர்.

முதலில் அவர்களைக் கண்டு கொள்ளாமல் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த வேதவர்ணாவின் பார்வை அதன் பிறகு அடிக்கடி அக்குடும்பத்தின் பக்கம் சென்று சென்று மீண்டு கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் வித்யா தன்னுடன் பேசிக் கொண்டிருப்பதையே மறந்து அந்தக் குடும்பத்தையே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

தோழியின் கவனம் தன் பேச்சில் இல்லாததைக் கவனித்த வித்யா அவளின் கரத்தை பிடித்து “வேதா என்ன பண்ற? ஏன் அவங்களையே வேடிக்கை பார்க்கிற?” என்று கேட்டு அவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள்.

“இவங்களைப் பார்த்தால் என் பேமிலி ஞாபகம் வருது வித்தி. இவங்க அளவுக்கு எங்க குடும்பம் ஒற்றுமை இல்லைனாலும் வெளியே எங்கயும் போனா எல்லாரும் சேர்ந்து தான் போவோம். வீட்டுக்குள்ள சின்னச் சின்ன மனஸ்தாபம் இருந்தாலும் இப்படி வெளியே வரும் போது எல்லாரும் சகஜமா பேசிக்குவோம். அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் அந்த நேரம் தான் ரொம்ப நல்லா பேசிப்பாங்க. வீட்டுல உள்ள மத்தவங்களும் அப்படித்தான். ஏன் இப்பயும் கூட அப்படித்தான் போறாங்க. ஆனா…” பேசிக் கொண்டே வந்தவள் திடீரென்று பேச்சை நிறுத்தினாள்.

அவள் சொல்ல வந்தது வித்யாவிற்கும் புரிந்தது. இப்போது வேதா மட்டும் அவர்களுடன் இல்லாமல் போனது.

வேதா வேலையில் சேர்ந்ததில் இருந்தே வித்யாவுடன் நட்பு ஏற்பட்டது.

அதனால் அவளுக்குத் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் வேதா சொல்லியிருந்தாள். அவளின் காதல் கதையும், கல்யாணம் நடந்த முறையும், அதன் பிறகு அவளைக் குடும்பத்தை விட்டு தள்ளி வைத்ததும் தெரியும் என்பதால் வேதாவின் மனநிலை வித்யாவிற்கு நன்றாகப் புரிந்தது.

தோழியின் கையை அழுத்திக் கொடுத்தாள் வித்யா.

“கவலைப்படாதே வேதா. சீக்கிரம் உன்னோட குடும்பத்தில் உன்னை ஏத்துக்குவாங்க…” என்றாள் சமாதானமாக.

“ம்ம்…” என்ற வேதா மூச்சை இழுத்து விட்டாள்.

அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

“ஓகே வித்தி கிளம்பலாம்…” என்ற வேதா எழுந்து கொள்ள, வித்யாவும் கிளம்பினாள்.

சொன்னது போல வேதாவை அவளின் வீட்டில் விட்டு விட்டே தன் வீட்டிற்குச் சென்றாள் வித்யா.

வேதா வீட்டிற்கு வந்து இரண்டு மணிநேரம் கடந்த பிறகே வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான் ரித்விக்.

அவன் வீட்டிற்கு வந்த போது பால்கனியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து வான்வெளியை வெறித்துக் கொண்டிருந்தாள் வேதவர்ணா.

கணவனின் வருகையை உணர்ந்தாலும் அவளின் யோசனை எல்லாம் எங்கோ இருக்க, சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தாள்.

வீட்டிற்குள் வந்து தன்னைச் சுத்தம் செய்து உடை மாற்றி வந்த பிறகும், மனைவி அசையாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து அங்கே வந்த ரித்விக் இருக்கையின் பின்னால் இருந்து மனைவியை அணைப்பது போல் முன்னால் கையை விட்டு அவளைச் சுற்றி வளைத்தவன், குனிந்து அவளின் தோளில் நாடியை வைத்துக் காதோரம் உதடுகள் உரச, “என் வரு குட்டிக்கு என்ன யோசனை?” என்று கொஞ்சலாகக் கேட்டான்.

அவனைத் திரும்பி பார்த்த வேதா ‘ஒன்னுமில்லை’ என்பது போல் தலையை அசைத்தாள்.

ஒன்றும் இல்லை என்று சொன்ன மனைவியை நம்பாமல் பார்த்தான் ரித்விக்.

அதைக் கண்டுகொண்டவள், மீண்டும் வான்வெளியை பார்த்து “நட்சத்திர கூட்டத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். அதோ அங்கே பார்த்தீங்களா ரித்வி… அங்கே சில நட்சத்திரங்கள் எப்பவும் கூட்டமாத்தான் தெரியும். இன்னைக்கு அதில் இருந்து ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் கொஞ்சம் தள்ளி போயி நிக்குது…” என்று வானத்தைக் காட்டி, தான் கண்ட நட்சத்திரங்களைக் கணவனுக்குக் காட்டினாள்.

தானும் மனைவி சுட்டிக்காட்டிய நட்சத்திர கூட்டத்தைப் பார்த்தவன், அதில் தள்ளி இருந்த நட்சத்திரத்தையும், மனைவியையும் குறிப்பாகப் பார்த்தவனுக்கு, மனைவியின் மனநிலை நன்றாகப் புரிந்தது.

உறவுகள் ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் இருப்பது என்பது வேறு. ஆனால் அனைத்து உறவுகள் இருந்தும் இல்லாமல் இருப்பது வேறல்லவா?

ஆரம்பத்தில் தன் காதலில் சுகித்து இருந்தவளுக்கு, இப்போது உறவுகளின் ஒதுக்கம் பெரிதாகத் தெரிகிறது என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் இதில் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லையே?

தங்கள் திருமணத்தைப் பேசும் போது வேதாவின் வீட்டார் சொன்ன முடிவில் ரித்விக்கிற்கும் உடன்பாடு இல்லாமல் தான் போனது.

தன் காதலால் அவள் குடும்பத்தை விட்டு வர வேண்டுமா? என்று நினைத்தான்.

உறவுகள் இல்லாத அவனுக்குத் தான் உறவுகளின் அருமை தெரியும். அதனால் வேதாவை கஷ்டப்படுத்த வேண்டுமா என்று வெகுவாகத் தயங்கினான்.

அதே நேரம் அவளையும் பிரிந்து அவனால் வாழ முடியாது என்றே தோன்றியது.

குடும்பமா? வேதா? என்று ஊசலாடிய தராசில் வேதாவின் பக்கம் அவனின் மனம் அதிகம் சாய, அவனுக்கென்று வரும் ஒரு உறவையும் விட்டுவிட அவனின் மனம் தயாராக இல்லை என்பதால் தான் வேதாவின் வீட்டார் சொன்ன கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் சரி என்று சொல்லி அவளைக் கரம் பிடித்தான்.

இப்போது மனைவி உறவுகளைத் தேடும் போது அவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

மனைவியுடன் சேர்ந்து தானும் அந்த நட்சத்திர கூட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

கண்கள் நட்சத்திரங்களை வெறித்தாலும், அவனின் கைகள் மெதுவாக நகர்ந்து தன் குழந்தையை உணர ஆரம்பித்தன.

மனைவியின் வயிற்றில் தன் கையை வைத்து குழந்தையை உணர்வது போல் தடவினான் ரித்விக்.

அதில் கூச்சம் உண்டாகத் தன் மோனநிலையில் இருந்து வெளியே வந்த வேதா, “டேய் சேட்டைக்காரா… என்ன பண்ற?” என்று ரகசிய குரலில் கேட்டுக் கொண்டே கணவனின் கையை மேலும் நகர விடாமல் பிடித்துக் கொண்டாள்.

மனைவியின் ரகசிய குரல் மன்னவனையும் மயக்க, “என் பேபிக்கிட்ட பப்பா உன் கூட விளையாட வந்துட்டேன்னு சொல்றேன்…” என்றான் தானும் அதே ரகசிய குரலில்.

ரகசிய குரல்கள் தம்பதிகளுக்குள் இணக்கத்தைக் கொண்டு வர, அதில் லயிக்க ஆரம்பித்தனர்.

“எப்படிச் சொல்வீங்களாம்?” வேதாவின் குரல் கொஞ்சிற்று.

பின்னால் இருந்து மனைவியை அணைத்திருந்தவன் விலகி அவளின் முன் வந்து காலின் அருகில் மண்டியிட்டவன், மனைவியின் வயிற்றில் கை வைத்து “ஹேய் பேபி… என்ன செய்றீங்க? பப்பா உன் கூட ஃப்ளே பண்ண வந்துருக்கேன். என்ன ஃப்ளே பண்ணலாம் சொல்லுங்க…” என்று வயிற்றைப் பார்த்துப் பேசினான்.

கணவன் பேசியதை கேட்டு வேதாவிற்குச் சிரிப்பு வந்தது.

அவளைக் கண்டுகொள்ளாமல் “என்ன நான் வெளியே வந்த பிறகு விளையாடலாம்னு சொல்றீங்களா?” என்று குழந்தை சொல்வது பேசினான்.

“நீ வெளியே வந்த பிறகு வேற விளையாட்டு விளையாடலாம் பேபி. இப்போ நாம பேசிப்பேசி விளையாடலாம். பப்பா உங்க கூட டெய்லி பேசுவேனாம். நீங்க அதைக் கேட்பீங்களாம். இதுதான் நம்ம இரண்டு பேருக்கும் இருக்குற விளையாட்டு. இந்த விளையாட்டு விளையாட உனக்கு ஓகேவா?” என்று குழந்தையிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டான்.

அவன் பேசுவதைப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வேதா, “டீல் நல்லாத்தான் இருக்கு…” என்றாள்.

“யெஸ் பப்பா, பேபி டீல் எப்பவும் பெஸ்ட்டா தான் இருக்கும்…” என்று சொன்னவன்

குனிந்து மனைவியின் வயிற்றில் முத்தமிட முயன்றான்.

“ஹேய் ரித்வி கண்ணா… என்ன பண்றீங்க? பால்கனில இருக்கோம்…” தடுத்து நிறுத்தி கணவனுக்குக் கடிவாளம் போட முயன்றாள்.

“என் பேபியை கொஞ்ச விடு வரு…” என்று மனைவியின் முகத்தைக் கொஞ்சலாகப் பார்த்துச் சொன்னான்.

“கொஞ்சுற இடமா இது? யாராவது எங்கிருந்தாவது நீங்க காட்டுற ஃப்ரீ ஷோவை வீடியோ எடுத்துட போறாங்க. எழுந்திருங்க முதலில்…!” கணவனைச் செல்லமாக அதட்டினாள் வேதவர்ணா.

“அப்படி ஒன்னு இருக்கோ? சரி வா…!” என்று தான் எழுந்து நின்று மனைவியையும் எழுப்பித் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பால்கனி கதவை மூடி விட்டு சோஃபாவிற்கு அழைத்துச் சென்றான்.

மனைவியைச் சோஃபாவில் அமர வைத்து, அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு வயிற்றில் முகத்தைப் புதைத்தவன், மனைவியைக் கொஞ்சினானா? மணி வயிற்று பிள்ளையைக் கொஞ்சினானா? என்று ஆராய்ச்சியே செய்யும் அளவிற்குத் தன் பிள்ளையைக் கொஞ்சினான்.

“ஹேய்! என்ன இன்னைக்குக் கொஞ்சல் ஓவரா இருக்கு…” கணவனின் தலைக்குள் விரல்களை விட்டு கோதிக் கொண்டே கேட்டாள்.

“என் பேபியை அப்படித்தான் கொஞ்சுவேன்…” சிறிது கூட முகத்தை நகர்த்தாமல் சொன்னான்.

“நீங்க செய்றதை பார்த்தால் பேபியை கொஞ்சுற மாதிரி தெரியலையே…”

“வேற எப்படித் தெரியுது?”

“பேபியோட அம்மாவை கொஞ்சுற மாதிரி இருக்கு…”

“பேபியோட அம்மாவை கொஞ்சுற இடமே வேற…” நிமிர்ந்து மனைவியின் முகம் பார்த்து சொன்னவன் குறும்பாகக் கண்களைச் சிமிட்டினான்.

அவனின் கண்கள் அவளின் இதழில் அர்த்தத்துடன் படிந்து மீண்டது.

“ஆஹான்…” என்று வேதா வெட்கத்துடன் இழுக்க,

“யா… யா…!” என்றவன், “கொஞ்சட்டுமா…?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

“பர்மிஷன் கொடுத்தால் தான் கொஞ்சுவீங்களா என்ன?” குறும்புடன் கண்ணைச் சிமிட்டி கேட்டாள்.

அதற்குப் பிறகும் கேட்டுக் கொண்டு இருப்பானா என்ன?

கொஞ்சும் இடம் மாறியது.

பிள்ளையிடம் இருந்து பிள்ளையின் அன்னைக்கு மாறியிருந்தான்.

மனைவியின் முகத்தை மென்மையாக பற்றித் தன்னை நோக்கி இழுத்தான்.

ஏதேதோ யோசனைகள் பின்னால் ஓட, கணவனுடன் கவி பாட ஆரம்பித்தாள் வேதவர்ணா.

உறவுகளைப் பற்றிய நினைவுகள் எங்கோ ஓடி ஒளிய, கணவன், பிள்ளையின் நினைவு மட்டுமே அவளைச் சுற்றி வளைத்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

அவளின் யோசனைகள் அப்போது மட்டும் தான் பின்னால் சென்றிருந்தன என்பதை அறியாத ரித்விக் மனைவி வருத்தத்தில் இருந்து வெளியே வந்து விட்டாள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

வருத்தம் அவளை வலையாகச் சுற்றி வளைத்திருந்து அவனுக்கு தெரியாமல் போனது.

அது அப்போதைக்கு மட்டுமே!

அடுத்தப் பத்தாவது நாள் வருத்தம் என்னை மட்டும் இல்லை உன்னையும் சுற்றி வளைக்கப் போகின்றது என்பதைச் செய்தே காட்ட தயாராகியிருந்தாள் அவனின் மனைவி.

பெட்டியும், ஊருக்கு செல்ல பயணச் சீட்டுமாக நின்று, ‘அம்மா வீட்டிற்குச் செல்கிறேன்…’ என்று வந்து நின்று கணவன், மனைவிக்கிடையே மனஸ்தாபம் உண்டாக வித்திட்டிருந்தாள் வேதவர்ணா.