பூவோ? புயலோ? காதல்! – 14

அத்தியாயம் – 14

மூன்று நாட்கள் மகளைச் சீராட்டிய சித்ரா, மறுநாள் கிளம்ப முடிவெடுத்திருந்தார்.

அதனால் அன்று அதிக நேரம் அன்னையின் மடியையே பஞ்சனையாக்கி துயில் கொண்டிருந்தாள் வேதவர்ணா.

அவளின் தலையைக் கோதி கொடுத்த சித்ரா, மகளையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

தன்னை அவள் தேடும் தேடல் அவரின் மனதை பிசைந்து கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் தங்கள் வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்று கவனித்துக் கொள்ள முடியாமல் போன நிலை அவரை வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தது.

ஆனாலும் தனக்கும் வேறு வழியில்லையே? என்று நினைத்தவர் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டார்.

சிறிது நேரத்தில் எழுந்த வேதா, அவரின் மடியை விட்டு எழுந்து அமர்ந்து அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“நீங்க இன்னும் கொஞ்ச நாள் இருக்கிறது போல வந்திருக்கலாம் அம்மா…” என்று அவரின் பிரிவை நினைத்துக் கசங்கி போன முகத்துடன் சொன்னாள்.

“நான் இந்த மூணு நாள் இருந்ததே பெருசு வேதா…” என்றார் சித்ரா.

“ம்ப்ச்… பெத்த மகளைக் கூடப் பார்க்க வராத அப்பா. வந்தாலும் காலில் சுடுதண்ணி ஊத்திக்கிட்டது போல ஓடுற அம்மா. இது தான் என் மிச்ச காலத்துக்கு நான் வாங்கி வந்த வரம் போல…” என்று எரிச்சலும், வருத்தமுமாகச் சொன்ன மகளைத் தீர்க்கமாகப் பார்த்தார் சித்ரா.

அவரின் பார்வையைப் பார்த்து “என்னம்மா…?” என்று கேட்டாள்.

“நம்ம குடும்பத்தில் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட முதல் ஆள் நீதான். நீ காதலிக்கிறேன், அவனை மட்டும் தான் கட்டிக்குவேன்னு சொன்னப்ப, நாங்க என்ன சொன்னோம்? உன் தாத்தா, பாட்டிக்கு, பெரியப்பா, சித்தப்பாவுக்கு எல்லாம் பிடிக்காது. இது சரிவராது விட்டுடுனு சொன்னோமா இல்லையா?

நாம இருக்கிறது கூட்டுக் குடும்பம்! ஒருத்தர் வழக்கத்தை விட வேற பாதையில் போனாலும் குடும்பமே சிதைந்திரும்னு நானும், உன் அப்பாவும் எவ்வளவோ எடுத்து சொன்னோம். ஆனா நீ கட்டினால் அவரைத்தான் கட்டுவேன். இல்லன்னா செத்து போயிருவேன்னு பயமுறுத்தின.

காதலுக்கு உன்னைக் காவு கொடுக்க வேண்டாமே, நீ எங்களுக்கு ஒத்தை பிள்ளையாச்சேனு மாப்பிள்ளைக்கே உன்னைக் கட்டிக் கொடுத்தோம். ஆனா அப்படிக் கட்டிக்கொடுக்க நானும் உன் அப்பாவும் என்ன பாடுபட்டோம்னு உனக்குத் தெரியும் தானே?

உன் அப்பாவோட அப்பா, அம்மாவை சமாளிச்சு, உன் பெரியப்பா, சித்தப்பாவை சமாளிச்சு, எங்க பிள்ளை எங்களுக்கு உயிரோட வேணும். அவருக்கே கட்டிவைக்கிறோம்னு சொல்லி எவ்வளவு போராடி உனக்குக் கல்யாணத்தை முடிச்சு வச்சோம்?

எல்லாரும் லேசாவா உன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க? உங்க பொண்ணு உயிரை காப்பாத்திக்கக் கல்யாணம் பண்ணி வைங்க. ஆனா அவ இங்கே புருஷன் கூட வந்து இருக்கிறதோ, அதிகமான ஒட்டுதலோ இருக்கக் கூடாதுனு கண்டிஷன் போட்டு தானே உன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க.

உன்கிட்ட போனில் பேசினா கூட உங்க தாத்தா முறைச்சுக்கிட்டு போறார். நீ நல்ல விஷயம் சொல்லி போன் போட்டப்ப உடனே எங்களைப் பார்க்கணும் போல இருக்குனு சொன்னாள்னு உன் பாட்டிக்கிட்ட சொன்னா, போயிருவியா நீ என்பது போலப் பார்க்கிறாங்க.

இதில் நான் எப்படிக் கிளம்ப? நீ வேற போன் போடுறப்ப எல்லாம் எப்ப வர்றீங்கனு என்னைக் கேட்டால் நான் எப்படி உங்க தாத்தா, பாட்டியை சமாளிச்சு வருவதுன்னு கொஞ்சமாவது யோசிச்சியா? இப்போ கூட என்னால கிளம்பி வர முடியலை. எப்பயும் போன் போடாத மாப்பிள்ளையே வேதா உங்களை ரொம்பத் தேடுறா… ஒரு முறை வந்துட்டு போங்கனு உன் அப்பாகிட்ட நேரா பேசினார்னு தான் உன் அப்பா, எல்லாரையும் சமாளிச்சு என்னை மட்டும் அனுப்பி வச்சார்.

அவருக்கு மட்டும் இங்கே வரணும்னு ஆசையில்லையா என்ன? என்னை விட என் மகள் என்ன செய்றாளோனு தவிச்சு போறதே அவர் தான். போன்ல பேசினா கூட எங்க உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கிறதை நினைச்சு உடைஞ்சு போயிருவோம்னு நினைச்சு போன்ல கூடப் பேச முடியாம தடுமாறி என்னை மட்டும் பேச சொல்வார். நீ என்னென்னா அவரையே குறை சொல்ற?

நாங்களும் என்ன செய்யட்டும் நீயே சொல்லு. நாங்க உன்னையும் பார்க்கணும். சொந்த பந்தத்தையும் பார்க்கணும். உனக்காகச் சொந்தத்தையும் விட முடியாது. சொந்தத்துக்காக உன்னையும் விட முடியாதுங்கிற நிலையில் நாங்க இருக்கோம். அதைப் புரிஞ்சுக்காம, நீ இப்படிக் குறை சொல்லி அழுதுட்டே இருந்தா நான் என்ன செய்ய?” என்று தன் உள்ள குமுறலை கொட்டினார் சித்ரா.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டு முகம் வாடினாள் வேதவர்ணா. அன்னை, தந்தையின் நிலை அவளுக்கும் புரிந்தது.

புரிந்ததினால் தான் இதற்கு முன் அவள் இப்பிரிவை பெரிய விஷயமாகக் கருதியதில்லை.

ஆனால் அப்போது புரிந்தது இப்போது புரியாமல் போய்க் கொண்டிருந்தது.

ஏற்கனவே குடும்பத்தை நினைத்து ஒரு வித அழுத்தத்தில் இருந்தவளின் மனநிலையை மேலும் சோதிக்கும் வண்ணம் சித்ராவின் பேச்சுத் தொடர்ந்தது.

“உனக்கு ஒன்பதாவது மாசம் வந்ததும் நானும், அப்பாவும் மட்டும் வருவோம் வேதா. இங்கேயே உனக்கும், மாப்பிள்ளைக்கும் தெரிஞ்சவங்களை மட்டும் அழைச்சு வளைகாப்பு நடத்தலாம். அதுக்குப் பிறகு உனக்குக் குழந்தை பிறந்து முப்பது நாள் ஆகுற வரை நான் மட்டும் உன் கூட இருப்பேன்.

அதுக்குப் பிறகு நீ தான் குழந்தையைப் பார்த்துக்கணும். இது தான் உங்க பாட்டி சொல்லி விட்டாங்க. அதுக்கு மேல இருந்தா மொத்தமாவே இனி உன் பொண்ணை வெட்டி விட்டிருனு சொல்றாங்க. இனி நீ தான் கவனமா இருக்கணும். இங்கே ஒத்தாசைக்குப் பெரியவங்க யாரும் இல்லை. பார்த்து இருந்துக்கோ…” என்று சொன்ன அன்னையை வெறுமையான பார்வை பார்த்து வைத்தாள் வேதவர்ணா.

அவரின் பேச்சு அவளை ரணமாக வலிக்க வைத்துக் கொண்டிருந்தது.

தான் அவர்களுக்கு ஒற்றை மகள்! ஆனால் மகளுக்கு என்று ஒரு வாரிசு வரும் போது, விருந்தாளி போல வந்து செல்வார்களாம். என்ன நியாயம் இது? என்று தான் அவளுக்குத் தோன்றியது.

இதே அவளின் பெரியப்பா மகள் கர்ப்பமாக இருந்த போது நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

ஒரு வேன் கொள்ளா அளவு சொந்தங்களை அழைத்துக் கொண்டு அக்காவின் மாமியார் வீடு சென்று ஏழு வகைச் சோறு கட்டி வளையல் அடுக்கி, அழைத்து வந்து, குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தங்கள் வீட்டிலேயே வைத்து பராமரித்து, மீண்டும் சென்று புகுந்த வீட்டில் விட்டுவிட்டு வந்தனர்.

ஆனால் தனக்கு இதில் எதுவுமே நடக்காது. எதுவும் வேண்டும் என்றால் தானும், தன் கணவனும் மட்டுமே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

பெற்றவர்களும் சில நாட்கள் மட்டும் வந்து செல்வார்கள். இல்லை வரவே மாட்டார்களோ என்று கூடத் தோன்றியது. தான் இரண்டாவது மாதம் வர சொன்ன அன்னை நான்காவது மாதம் வந்திருக்கிறார். அதுவும் தன் கணவன் வழிய அழைத்த பின்பு வந்திருக்கிறார் என்று தெரிந்ததில் அன்னையின் மடி இப்போது பாரமாய்க் கனத்தது.

தன் காதலினால் சொந்தங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பொட்டில் அறைந்தது போல உணர சிறிது நேரம் உறைந்து தான் போனாள்.

என்னை எப்படி நீங்கள் ஒதுக்கி வைக்கலாம்? என்று அவளின் திருமணத்தின் போது வராத ஆத்திரம் இப்போது வந்தது.

மகளின் பார்வையையும், அவளின் முகத்தில் வந்து போன ஆத்திரத்தையும் கண்ட சித்ரா, “வேதா என்னடி என்ன?” என்று பதறிப் போய்க் கேட்டார்.

“நீங்களும், அப்பாவும் பேசாம தனியே வந்திருங்கமா…” என்று அவ்வளவு நேரம் மனதில் உருப்போட்டதைச் சொல்லியே விட்டிருந்தாள்.

“ஏய்! என்னடி என்ன பேசுற? புரிஞ்சுதான் பேசுறியா?” என்று அதட்டினார்.

“புரிஞ்சு தான்மா பேசுறேன். என்னைப் பார்க்கவும், எனக்குப் பார்க்கவும் கண்டிஷன் போட அவங்க யாருமா? அவங்க மூத்த பேத்திக்கு மட்டும் பார்த்து பார்த்து செய்தாங்க. ஆனால் எனக்கு மட்டும் செய்ய மாட்டாங்களாவாம்? நானும் அவங்க பேத்தி தானே? என்னை மட்டும் பார்க்க போகக் கூடாதுனு உங்களுக்குக் கண்டிஷன் போடுவாங்களா? அவங்க கூட இருந்தா தானே கண்டிஷன் போடுவாங்க. நீங்களும் அப்பாவும் தனியா வந்துருங்க. அப்புறம் எல்லாம் சரியா போகும். நாம யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை…” என்றாள் ஆக்ரோஷமாக.

அவள் பேசும் போது அவளின் முகத்தில் அவ்வளவு ஆவேசம் வந்து போனது.

தன் மகளா இப்படிப் பேசுவது என்று நம்ப முடியாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சித்ரா.

இத்தனை நாளும் வீட்டார் தன்னைக் கண்டு கொள்ளவில்லையே என்று வருந்தியிருக்கிறாளே தவிர இப்படிப் பேசியதில்லை.

அவளுக்கு இப்படிப் பேசத் தெரியாது என்று தான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தார்.

என்றும் இல்லாமல் மகள் அப்படிப் பேசியதில் திகைத்திருந்தவரின் தோளை பிடித்து உலுக்கிய வேதா “என்னமா ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க? எப்போ தனியா போவீங்க?” என்று அவர்கள் தனியாகப் போவதை உறுதி படுத்தியவள் போல் கேட்டாள்.

“வேதா…”

“வர்ணா…”

என்று இரண்டு விதமான அழுத்தமான குரல் வந்து அவளின் பேச்சை நிறுத்தியது.

வேதா என்று கண்டிப்புடன் சித்ரா அழைத்துக் கொண்டிருக்கும் போதே, சிறிது நேரத்திற்கு முன்பே வேலை முடிந்து வந்த ரித்விக் வழக்கம் போலத் தானே கதவை திறந்து வந்தவன் காதில் மனைவி பேசிய அனைத்தும் விழ, வர்ணா என்று அதட்டியிருந்தான்.

வேதா ஆவேச மனநிலையில் இருக்க, சித்ரா அதிர்ச்சியில் இருக்க, இருவருமே அவனாகக் கதவை திறந்து வந்ததை உணரவில்லை.

கணவனின் அழுத்தமான அழைப்பில் அவனின் புறம் திரும்பியவள், “வாங்க ரித்வி… இப்போ எதுக்கு என்னைக் கோபமா அதட்டுறீங்க? நாங்க என்ன பேசுறோம்னு தெரியாம நீங்க பாட்டுக்கு கண்டிக்காதீங்க…” என்றவளின் குரல் இன்னும் அவளின் ஆவேசம் குறையவில்லை என்று காட்டியது.

“நீ என்ன பேசினனு நல்லாவே தெரியும். நான் அப்பவே வந்துட்டேன். உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பேச்சை நான் எதிர்பார்க்கலை வர்ணா. ஒற்றுமையா இருக்குற குடும்பத்தைப் பிரிக்க நினைப்பது பாவம்…!” என்றான் அழுத்தமாக.

“பாவமா? என்ன பாவம்? என்னை மட்டும் அந்தக் குடும்பத்திலிருந்து பிரிச்சு வச்சிருக்காங்களே அது பாவம் இல்லையா?” என்று ஆத்திரம் குறையாமல் கேட்டாள்.

“நம்மை யாரும் விலக்கி வைக்கலை வர்ணா. நாம தான் விலகி வந்திருக்கோம். முதலில் அதை நல்லா புரிஞ்சுகிட்டு அப்புறம் பேசு…!” என்றான் கண்டிப்புடன்.

தான் பேச நினைத்ததை எல்லாம் மருமகனே பேச, அமைதியாக வீற்றிருந்தார் சித்ரா.

கணவனின் பேச்சில் அவனை முறைத்தவள், அன்னையையும் திரும்பி பார்த்தாள். அவரும் தனக்கு அறிவுரை சொல்வது போல அமர்ந்திருக்க, அதில் இன்னும் தான் அவளின் ஆத்திரம் அதிகரித்தது.

“நாம எங்கே விலகி வந்தோம்? அவங்க தானே நம்மை அங்க வரக்கூடாது, பேசக்கூடாதுனு எல்லாம் கண்டிஷன் போட்டாங்க?”

“அவங்களை அப்படிக் கண்டிஷன் போட வச்சதே நாமும், நம்ம காதலும் தானே? அவங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்துட்டு எங்களை நீங்கள் சேர்த்துக்கத் தான் வேணும்னு சொல்வதில் என்ன நியாயம் இருக்கு?” என்ற கணவனை வெறித்துப் பார்த்தாள்.

அவளின் பார்வையைச் சலனம் இல்லாமல் எதிர் கொண்டவன், “இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மாதிரியான எண்ணங்களை வளர்த்து கொள்ளாதே வரு. அது நமக்கும் நல்லது இல்லை. நம்ம குழந்தைக்கும் நல்லதில்லை…” என்றான்.

ரித்விக் அதிர்ந்து பேசுவதே அபூர்வம்.

அப்படிப் பேசினால் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக வந்த விழும்.

பேச்சை விடத் தன் பாசத்தால் வீழ்த்த தெரிந்தவன்!

அவனிடம் இருந்த வந்த கண்டிப்பு வார்த்தைகள் அவளை இன்னும் இறுகி போக வைத்தது.

தன் பேச்சு மனைவியின் மனநிலையையே மாற்ற போகின்றது என்று அறியாமல் அவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தான் ரித்விக்.