பூவோ? புயலோ? காதல்! – 13

அத்தியாயம் – 13

வேகமாக ஓடி வந்த கயற்கண்ணி கிணற்றின் அருகில் வந்ததும் சட்டென்று நின்றாள்.

அவள் நிற்கவும் இளஞ்சித்திரனும் அவளைப் புரியாமல் பார்த்தபடி அவளின் பின் நின்றான்.

“இந்தா புள்ள, எதுக்கு இப்போ தலைதெறிக்க ஓடி வந்த?” என்று கேட்டவனைக் கண்டு கொள்ளாமல் குனிந்து கிணற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்னடா இது தலைதெறிக்க ஓடி வந்துட்டுக் கிணத்தை எட்டி பார்த்துட்டு இருக்கு. ஒருவேளை கிணறு எவ்வளவு ஆழம்னு ஆராய்ச்சி பண்ணிட்டு அப்புறம் குதிக்குமோ?’ என்று நினைத்தவன், “ஹேய்… என்னத்தை அப்படிப் பார்க்கிற?” என்று கேட்டுக் கொண்டே தானும் கிணற்றை எட்டிப் பார்த்தான்.

“என் தாவணி…” உள்ளே மிதந்து கொண்டிருந்த தாவணியைக் காட்டி சொன்னாள்.

“ஓ…! தாவணி விழுந்துருச்சா? அதை எடுக்கவா இப்படி ஓடி வந்த?”

“ஆமா…”

“அப்போ கிணத்தில் இறங்கி எடுக்க வேண்டியது தானே?”

“ம்ம்ம்… ம்ம்ம்…” என்று முனங்கியவள் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

“என்ன தாவணியை எடுக்கப் போகலையா?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் அவனை ஒரு பார்வை பார்த்தவள் குனிந்து தாவணியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.

அவள் எதற்கு அப்படிப் பார்க்கிறாள் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஒருவேளை தான் நிற்பதால் எதுவும் தயங்குகிறாளோ என்று நினைத்தவன், அங்கிருந்து செல்ல போனான்.

ஆனால் “அய்யோ! போயிறாதீங்க…” என்று வேகமாக அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

“என்ன?” என்ற படி அவன் நிற்க,

“உங்களுக்கு நீச்சலு தெரியுமா?” என்று கேட்டவளை பார்த்ததும் இளஞ்சித்திரனுக்குச் சட்டெனச் சிரிப்பு வந்தது.

“ஓஹோ…! உனக்கு நீச்சலு தெரியாதா?” சிரித்த படி கேட்டான்.

“உங்களுக்கு நீச்சலு தெரியுமானு தேன் கேட்டேன். தெரியும்னா தெரியும்னு சொல்லுங்க. இல்லனா தெரியாதுனு சொல்லுங்க. அதென்ன திருப்பி என்னைய கேள்வி கேட்குறது?” என்றாள் ரோஷமாக.

“ஆத்தாடி…! நான் கேட்டதுக்கு மட்டும் நீச்சலு தெரியாதுனு மேடம் சொல்ல மாட்டாங்களாம். ஆனா நான் மட்டும் தெரியலைனா தெரியலைனு சொல்லணுமாம். எந்த ஊரு நியாயம் இது?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்வது போல் சத்தமாகச் சொன்னான்.

“யோவ்…! ரொம்பப் பேசினா கிணத்துல பிடிச்சு தள்ளி விட்டுருவேன்…” வாய் துடுக்காகப் பேசினாள்.

“நீ என்னைய பிடிச்சு தள்ளி விட்டா நான் நீந்தி வந்துருவேன். ஆனா அதே நான் உன்னைய தள்ளி விட்டா நீ என்ன செய்வ?” என்று பதிலுக்குக் கேட்டான். அவளுடன் இப்படிப் பேசுவது அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது.

சிறிது நேரம் மாற்றி மாற்றி வழக்காடியவர்களில் கயற்கண்ணி தான் முதலில் பேச்சை குறைக்க வேண்டியதாக இருந்தது.

பின்னே அவளுக்குத் தாவணி வேண்டுமே!

“தாவணி எடுத்துத்தாங்க…” என்று கெஞ்சுதலாகக் கேட்டு முடித்தாள்.

அவனும் எடுத்து வந்து கொடுக்க, வாங்கிக் கொண்டு “பரவாயில்லை, நல்லாத்தேன் நீச்சலு அடிக்கிறீங்க…” என்று விட்டு ஓடினாள்.

‘இந்தப் புள்ளைக்கு நக்கலைப் பாரேன்…’ என்று சொல்லி சிரித்துக் கொண்டான் இளஞ்சித்திரன்.

அதன் பிறகும் அவர்களின் சந்திப்பு அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது.

கேலி பேச்சுக்களும் இருவருக்கும் இடையே சர்வ சாதாரணமாக வந்தன.


“எய்யா சின்னவனே, சோறு உங்க(உண்ண) வாய்யா…” என்றழைத்த அன்னை ருக்மணியின் குரலில், “இந்தா வந்துட்டேன்மா…” என்று சொல்லிக் கொண்டே தன் அறையில் இருந்து வெளியே வந்தான் இளஞ்சித்திரன்.

மாடியில் இருந்து கீழே வரும் போதே தந்தையும், அண்ணனும் சாப்பிட தயாராகத் தரையில் விரித்திருந்த பாயில் அமர்ந்திருந்ததைப் பார்த்து படியிலேயே அவனின் கால்கள் தேங்கி நின்றன.

எப்போது ஒருவனை அடித்தே கொன்றதை கண் முன்னால் பார்த்தானோ அதிலிருந்தே தந்தை, அண்ணனிடம் இடைவெளி விட்டே பழக ஆரம்பித்திருந்தான் இளஞ்சித்திரன்.

ஊருக்கு வந்தால் அவர்களிடம் பேசாமல் தவிர்க்க முடியாது என்பதால் தான் சில வருடங்கள் ஊர் பக்கமே வராமல் இருந்தான்.

நடுவில் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த அண்ணனின் திருமணத்திற்கு வந்து ஒரு வாரம் மட்டும் இருந்து விட்டுச் சென்றான்.

அதன் பிறகு ஊர் பக்கமே வராமல் இருந்தவன் அன்னையின் வற்புறுத்தலால் தான் இப்போது வந்திருந்தான்.

“வெரசா வாய்யா…” என்று ருக்மணி மீண்டும் குரல் கொடுக்க, வேகமாக இறங்கி அண்ணனின் அருகில் வந்து அமர்ந்தான்.

“அப்புறம் சின்னவரே இனி என்ன செய்யப் போறதா இருக்கீரு?” உணவை வாயில் அள்ளி வைத்துக் கொண்டே கேட்டார் வேங்கையன்.

“சென்னைலதேன் அய்யா சோலி பார்க்க போறேன்…” இளஞ்சித்திரன் உணவை உண்டு கொண்டே அமைதியாகப் பதிலளித்தான்.

“இன்னும் என்னத்துக்கு அங்கனக்குள்ளயே இருக்கோணும்? பட்டணத்துல போயி படிக்கணும்னு ஆசைப்பட்டீரு. படிச்சாச்சு… உம்ம ஆசைக்கு ரெண்டு வருசமா அங்னக்குள்ளயே சோலியும் பாத்தாச்சு. அப்புறம் என்ன ஊரை பார்த்து வர வேண்டியது தானே. அதுவுமில்லாம இப்போ உமக்குச் சோலி போயிருச்சுனு வேற கேள்விப்பட்டேன். சோலி இல்லாம அங்கன என்ன செய்யப் போறீரு?” உணவு உள்ளுக்குள் போய்க் கொண்டு இருந்தாலும் மகனிடம் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார் வேங்கையன்.

ஆம்! இளஞ்சித்திரனுக்கு அப்போது வேலை போயிருந்தது.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலையை விட்டுத் தூக்குவதெல்லாம் சர்வசாதாரணமாக நிகழும் ஒன்று!

புதிதாக வேலையில் சேர்பவர்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரை வேலையை விட்டு நிற்க சொல்வதும், அவர்களே வேலையை விட்டு விலகி வேறு அலுவலகத்தில் சேர்ந்து கொள்வதும் அன்றாட நிகழ்வு போல் நடக்கும் ஒன்றாகவே இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

இளஞ்சித்திரன் வேலைக்குச் சேர்ந்த இரண்டு வருடத்திற்குப் பிறகு சில காரணங்களால் அவனின் அலுவலகத்தில் சிலரை வேலையை விட்டு நின்று கொள்ளச் சொல்ல, அதில் அவனும் ஒருவனாகி போனான்.

இந்த வேலையில் இவை சகஜம் தான் என்பதால் இளஞ்சித்திரனும் அதை நினைத்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போது கூட உடனே அவன் வேறு வேலையில் சேர்ந்திருக்க முடியும். ஆனால் அவனின் அன்னை நிறைய நாட்கள் ஊர் பக்கமே வருவதில்லை என்று அழுது புலம்ப, புது வேலையில் சேர்ந்து விட்டால் உடனே விடுமுறை சொல்லிவிட்டு ஊருக்கு வர முடியாது என்பதால் ஒரு மாதம் முழுவதும் ஊரில் இருந்து விட்டு அதன் பிறகு வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்று தான் கிளம்பி வந்து விட்டான்.

ஆனால் வேலை இல்லாத காரணத்தைக் காட்டி தன்னைத் தந்தை இங்கேயே இருக்க வைக்க நினைக்கிறார் என்று தெரிந்ததும் உஷாரானான்.

“இல்லங்கய்யா, எனக்கு அங்கனக்குள்ள வேலை பார்க்க தேன் பிடிச்சுருக்கு. இப்போ சோலி இல்லதேன். ஆனா நான் சென்னை போனதும் வேற வேலையில் சேர்ந்துருவேன்…” என்றான் உறுதியாக.

மகனின் பேச்சைக் கேட்டு அழுத்தமாக அவனைப் பார்த்தவர், “அப்படியென்ன அங்கனக்குள்ளயே சோலி பாக்கோணும்னு வீம்புனு கேட்குதேன்? நமக்கே மில்லு, தோப்பு, தொரவுனு கணக்கில்லாம கிடக்கு. பேசாம அதையெல்லாம் பார்த்துக்கிட்டு இங்கனக்குள்ளயே இருக்க வேண்டியது தானே? அதை விட்டுப்புட்டு ஊரு பயலுக கிட்ட கையைக் கட்டி சோலி பார்க்கணும்னு உமக்கு என்ன தலையெழுத்தா?” பார்வையில் இருந்த அழுத்தம் குரலிலும் தெரிய கேட்டார்.

அவரின் கேள்வியில் சில நொடிகள் மௌனமாக இருந்தவன் பின் அவரை விட அழுத்தமாகத் தன் எண்ணத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

“நமக்கு ஊரு முழுக்கச் சொத்து, பத்து இருந்தாலும் எனக்குப் பிடிச்ச வேலையைப் பாக்கோணும்னு ஆசைப்படுறேன் அய்யா. படிச்ச படிப்பையும் வீணாக்க வேண்டாம்னு நினைக்கிறேன். அதுவுமில்லாம இங்கனக்குள்ள தேன் அண்ணே அம்புட்டு பொறுப்பையும் பார்த்துக்கிடுது தானே. அப்படியே எப்பயும் பார்த்துக்கட்டும். நான் எனக்குப் பிடிச்ச வேலையே செய்யுறேன் அய்யா…” என்றான்.

அவனின் குரலில் இருந்த உறுதி என் முடிவு இது தான் என்று சொல்வது போல் இருந்தது.

முன்பிருந்த ஆரவாரம் இல்லாமல் அமைதியாகி போனாலும் இளஞ்சித்திரனிடம் இன்னும் மாறாமல் இருந்தது அவனின் பிடிவாதம்!

முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து அவன் பின் வாங்குவதில்லை.

தன் தந்தையிடம் பயம் இருந்தாலும் தனக்குப் பிடித்ததை வெளிப்படுத்துவதற்குத் தயங்காதவன்.

“ஏன் ராசா இம்புட்டு வீம்பு பிடிக்குத? நீ மேல சென்னைல தேன் படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டியேனு தேன் மதுரயை விட்டுப்புட்டு அம்புட்டு தொலைவுல உன்னைப் படிக்க விட்டோம். படிப்பை முடிச்சுட்டு இங்கனக்குள்ளாரயே வந்துருவன்னு பார்த்தா சோலி பாக்குதேன்னு வராம வேடிக்கக் காட்டின. இப்பவாவது இங்கனயே இருப்பனு பாத்தா இம்புட்டு வீம்பு பிடிக்குதயே. இதெல்லாம் சரியில்லை ராசா. பேசாம இங்கனக்குள்ளாரயே வந்துருய்யா…” என்று மகன் பேச்சைக் கேட்டு பொரிய ஆரம்பித்தார் ருக்மணி.

“ஆமாடா இளா, அம்மா, அய்யா சொல்றதை கேளு…” என்றான் இமயவரம்பனும்.

கணவனின் பேச்சைக் கேட்டதும் அதுவரை மூவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்த வரம்பனின் மனைவி சாந்தாமணி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

‘கொழுந்தனாரே எனக்கு வேலை போதும், நீயே சொத்தை பாருனு சொல்றாரு. அதைக் கப்புனு புடிச்சுக்க வேணாமா? அதை விட்டு எப்ப பாரு அய்யா, அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு…’ என்று மானசீகமாக நொடித்துக் கொண்டாள்.

சாந்தாமணி இவர்கள் அளவு இல்லையென்றாலும் ஓரளவு வசதியான வீட்டில் இருந்து வந்தவள் தான்.

ஆனாலும் பணம், நகை, சொத்தின் மீது ஆசை அதிகம் மிக்கவள். தங்கள் திருமணத்தின் போது இளஞ்சித்திரன் சென்னையிலேயே வேலை தேடி கொண்டான் என்று தெரிந்ததும் முதலில் சந்தோசப்பட்டவள் அவள் தான்.

‘அப்போ இங்கே இருக்கும் சொத்துப் பத்தை தன் கணவன் பார்த்துக் கொண்டால் தங்களுக்குத் தான் அதிக உரிமை’ என்று மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் மாமனார் கொழுந்தனை இங்கேயே இருக்கச் சொல்லவும் உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள்.

அதே நேரம் இளஞ்சித்திரன் பிடிவாதம் பிடித்ததில் மகிழ்ந்து கொண்டும் இருந்தாள்.

அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாலும், ஒன்றுமே கண்டு கொள்ளாதவள் போல முகத்தை வைத்திருந்தாள்.

அவள் முகத்தில் சிறிது மாற்றம் வந்தாலும் அவளின் கணவனே தன்னை விரோதி போலப் பார்ப்பான் என்று நன்றாக அறிந்தவள்.

தங்கள் படுக்கையறையில் கணவன், மனைவிக்கான ஏகாந்த பொழுதில் மட்டுமே வரம்பன் மனைவியுடன் கொஞ்சலும் குலாவலுமாக இருப்பான். அதே அறையை விட்டு வெளியே வந்துவிட்டால் கட்டிய மனைவியையே ‘யார் நீ?’ என்பது போலப் பார்ப்பான்.

அதிலும் அவனின் அய்யாவின் முன் தனக்கு மனைவி என்று ஒருத்தி இல்லை என்பது போலவே நடந்து கொள்வான்.

தந்தையுடன், அன்னை, அண்ணனும் சேர்ந்து சொன்னாலும் அழுத்தமாக அமர்ந்திருந்தான் இளஞ்சித்திரன்.

“இல்லைம்மா, எனக்கு அந்த வேலை தான் பிடிச்சுருக்கு…” சொன்னதையே சொன்ன மகனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் வேங்கையன்.

ஆனால் மகன் அவரின் முறைப்பை சட்டையே செய்யவில்லை.

அவனுக்கு மென்பொறியாளர் வேலையைத் தான் பிடித்திருக்கிறது என்று சொல்வதை விட, அவ்வீட்டில் நிரந்தரமாக இருக்கப் பிடிக்கவில்லை என்பதே அவனின் பிடிவாதத்திற்குக் காரணம் என்று அறியாமல் போனார் வேங்கையன்.

ஒருவனை அடித்தே கொல்லும் அளவு மிருகத்தனமாக இருப்பவர்களுடன் அவனுக்கு இருக்கப் பிடிக்கவில்லை. ஒருவித வெறுப்பு அவர்கள் மீது வந்திருந்தது.

அவ்வெறுப்பை வெளிப்படையாகக் காட்டவும் அவன் விரும்பவில்லை. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தந்தை, அண்ணன் என்ற பாசமும் அவனுக்கு இருந்தது.

அதனாலேயே அவர்களின் இன்னொரு முகத்தைப் பார்த்ததைக் காணாதது போல் ஒதுக்கி வைத்தவன் தானே ஒதுங்கியும் போக முடிவெடுத்தான்.

மூவரும் மாறி மாறி பேசிப் பார்த்தும் இளஞ்சித்திரன் தன் பிடிவாதத்தில் உறுதியாக இருக்க, “சரி, ஓ விருப்பப்படி சோலிக்கு போ! ஆனா போறதுக்கு முன்னாடி ஓ கல்யாணத்தை முடிச்சுப்புட்டு ஓ பொஞ்சாதியையும் கூடக் கூட்டிட்டு போ…” என்று இறங்கி வந்தார் வேங்கையன்.

கல்யாணம் என்றதும் இளஞ்சித்திரனின் மனது திக்கென்று அதிர்ந்தது.

சென்னையில் வேலை பார்க்க, தந்தை எப்படியும் சம்மதிப்பார் என்று அவனுக்குத் தெரியும். ஏனெனில் அதட்டல், உருட்டல் என்று இருந்தாலும் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பவர் தந்தை என்று நன்கு அறிந்தவன்.

ஆனால் கல்யாணம் என்றதும் மனதில் பலமான அதிர்வை உணர்ந்தான்.

கல்யாணம் என்ற வார்த்தையில் மனது அவனின் அனுமதியின்றியே கயற்கண்ணியின் உருவத்தைக் கண் முன் காட்டியது.

ஊருக்கு வந்தும், கயற்கண்ணியைப் பார்த்தும் பத்து நாட்கள் ஆகியிருந்த நிலையில், தினமும் ஏதோ வகையில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது அன்று போல் சந்தர்ப்பம் வாய்த்தால் கேலியாகப் பேசிக் கொண்டதும் உண்டு.

ஆனால் அது எல்லாம் சாதாரணக் கிண்டல், கேலி பேச்சுக்கள் தான். அதையும் தாண்டி அவளைப் பற்றி அவன் பெரிதாக நினைத்தது இல்லை.

ஆனால் இன்றோ கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டதும் ஏன் அவனுக்கு அவளின் முகம் கண் முன் வந்து சென்றது என்று புரியாமல் திக்கென்று திகைத்து தான் போனான்.

அவனின் திகைப்பை உணராமல் பெற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஆமாய்யா ராசா கல்யாணத்தை முடிச்சுடலாம்…” ருக்மணி சொல்ல,

“என்னோட சின்னம்மா மக ராஜேஸ்வரியை பார்க்கலாமா அத்தை? அவளும் மதுர போயி காலேஜு எல்லாம் படிச்சுருக்கா…” என்று தங்கள் வீட்டு பெண்ணையே முன்னிறுத்தினாள் சாந்தாமணி.

“ஓ வீட்டுச் சொந்தம் எல்லாம் ஒன்னும் வேணாம் தாயி. ஏற்கனவே உன்னைய கட்டி இன்னும் ஒரு புழு பூச்சி வர காணோம். இதுல ஓ தங்கச்சியையும் பூக்கா மரமா இங்கன இருக்க வைக்கப் போறியா?” என்று பட்டென்று முகத்தில் அடித்தது போல் மருமகளுக்கு இன்னும் குழந்தை உண்டாகாததைச் சொல்லி சாடினார்.

அதில் சட்டென்று கண்கள் கலங்கி போகக் கணவனைப் பார்த்தாள் சாந்தாமணி. ஆனால் இமயவரம்பனோ யாரோ யாரையோ சொல்கிறார்கள் என்ற பாவனையில் முகத்தை வைத்திருந்தான்.

கணவனின் செயலில் இன்னும் அடிவாங்கியவள் போல நின்றாள்.

“போதும் ருக்கு, தேவையில்லாத பேச்சை பேசிக்கிட்டு திரியாதே…” என்று மனைவியை அடக்கிய வேங்கையன், “பொண்ணு எப்படிப் பார்க்கோணும், எந்த வீட்டுப் பொண்ணைப் பார்க்கோணும்னு நாங்களே முடிவு பண்ணிக்கிறோம் மருமவளே. நீ தலையிடாதே…!” என்று மருமகளையும் அடக்கினார்.

அவரின் அதட்டலில் இன்னும் கண்ணீர் பொங்கி கொண்டு வர, அதை அடக்க முடியாமல், அங்கிருந்து சென்றாள் சாந்தாமணி.

கலங்கிய கண்ணீருடன் சென்ற மனைவியைச் சலனம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன்.

இங்கே ஒரு கலவரமே நடக்க, கயற்கண்ணி கண் முன் வந்து நின்ற நினைவில் இருந்து அப்போது தான் வெளியே வந்த இளஞ்சித்திரனுக்குத் தந்தை எதற்குச் சத்தம் போட்டார் என்று கூடப் புரியாமல் அவரைக் கேள்வியாகப் பார்த்தான்.

“சொல்லு சின்னவனே, கல்யாணத்தை முடிச்சுடலாமா?” என்று மீண்டும் கேட்டார் வேங்கையன்.

அவரின் கேள்வியில் ஒரு நொடி தயங்கியவன், “கல்யாணத்தைப் பத்தி நா இப்போ எதுவும் யோசிக்கலைங்க அய்யா. இப்பயே என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே…” என்றான்.

“இப்படிச் சொன்னா எப்படிச் சின்னவனே? ஒன்னு இங்கனயே இருந்து சோலியை பாரு. இல்லைனா கல்யாணத்தை முடிச்சுட்டு உமக்குப் பிடிச்ச சோலியை பாரு. எதுக்கும் ஒத்துவரலைனா என்ன அர்த்தம்?” என்று குரலை ஓங்கினார் வேங்கையன்.

“சென்னையிலேயே வேலையைப் பாருன்னு சொல்லிட்டீங்க அய்யா. அதனால அந்தப் பேச்சு முடிஞ்சது. இப்போ கல்யாண பேச்சு இப்பத்தானே அய்யா ஆரம்பிச்சீங்க? நா கொஞ்சம் யோசனை பண்ணிட்டு சொல்றேங்க அய்யா…” என்றான் இப்போதும் பிடிவாதமாக.

“என்ன சின்னவனே வர வர உமக்கு வீம்பு கூடுது…” என்று ருக்மணி அதட்ட,

“ஏய்! நீ பேசாம கிடடி. அவரு யாரு வேங்கையன் ரத்தம்ல. அப்படித்தேன் என்னைய போல வீம்பு பிடிப்பான். நா பேசிக்கிடுதேன். நீ குறுக்க வராதே…” என்றார் வேங்கையன்.

“சரிங்க சின்னவனே, நீ சொன்னது போலச் சென்னை சோலி முடிஞ்சது. அதை ஓ இஷ்டத்துக்கே விட்டுட்டேன். ஆனா கல்யாணம் நான் சொன்னது போலத்தேன் நடக்கணும். பொண்ணு பாக்க ஆரம்பிக்கப் போறேன். தாலி கட்ட தயாரா இரு…” என்று முடிவாகச் சொல்லிவிட்டு தந்தை எழுந்து சொல்ல, இளஞ்சித்திரன் புரியாத உணர்வுடன் திகைத்து நின்றான்.

தந்தையைச் சில விஷயங்களில் தான் வளைக்க முடியும். அனைத்திலும் முடியாது என்று அறிந்தவன்.

அவரின் உறுதியான பேச்சில் கல்யாண விஷயத்தில் என்ன செய்வது என்ற யோசனையுடன் வெளியே கிளம்பி சென்றான்.

யோசனையுடன் தங்கள் தென்னந்தோப்பிற்குச் சென்றவன், எதிரே வந்த கயற்கண்ணியைப் பார்த்ததும் அப்படியே நின்றான்.

அவளும் அவனைப் பார்த்தாலும் அமைதியாக விலகி நடந்தாள்.

கிணற்றடியில் பார்த்த பிறகு வயலில் மற்றவர்களும் இருக்கும் போது தான் சிறிது கேலி செய்வாள். தனியாகப் பார்த்தால் அப்படித்தான் போவாள்.

அந்த மாதிரி நேரத்தில் தானும் எப்போதும் கடந்து சென்று விடுபவன் இன்றோ, “கண்ணு…” என்று அழைத்து அவளை நிறுத்தினான்

அந்த அழைப்பு யாருக்கென்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் அங்கே இல்லை என்றதும் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“உன்னைத்தேன் கூப்பிட்டேன் கண்ணு…” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“யோவ்! என்ன கொழுப்பா? யாரைப் பார்த்து கண்ணு, மூக்குன்னு கூப்பிடுற? கண்ணு முழியைத் தோண்டிப்புடுவேன்…” சண்டைக்கு எக்கிக் கொண்டு வந்தாள்.

“ஹா…ஹா… எப்படி அன்னைக்கு அருவாளை வச்சு வெட்ட வந்தியே, அப்படியா?”

“உன்னைய அன்னைக்கே அருவாளுல ஒரு போடு போட்டுருக்கணும். அப்படிப் போட்டுருந்தா இப்போ கண்ணு மூக்குன்னு வருவியா?”

“யாரு நீ, என்னை அருவாளில் போட்டுருப்ப?” என்று நக்கலாகக் கேட்டான்.

“ஏன் போட முடியாதுன்னு நினைச்சியா?” என்றவள் சுற்றி முற்றி பார்த்தாள்.

“என்ன தேடுற?”

“உன்னைய சாத்த எதுவும் கிடைக்குதானு பாக்குத்தேன்…” என்றவள் அங்கிருந்த தென்னம்பட்டையை எடுக்கச் சென்றாள்.

“ஏய் கண்ணிவெடி… அடிச்சுக்கிடுச்சு போடாதே…” என்று போலியாக அலறினான் இளஞ்சித்திரன்.

“என்னது கண்ணிவெடியா?” என்றவள் இப்போது தீவிரமாக ஒரு உடைந்து போன சிறிய தென்னம்பட்டையை எடுத்துக் கொண்டு வந்து அவனை அடிக்கக் கையை ஓங்கினாள்.

ஓங்கிய அவளின் கையை லாவகமாகப் பிடித்துத் தடுத்தவன் அவளின் முகத்தைத் தீவிரமாகப் பார்த்து, “நாம கல்யாணம் கட்டிக்கலாமா கண்ணு…?” என்று காதலுடன் கேட்டான் இளஞ்சித்திரன்.

அவன் அப்படிக் கேட்பான் என்று சிறிதும் நினைக்காத கயற்கண்ணி அவனை அடிக்க ஓங்கிய கையுடன் திகைத்து நின்றாள்.