பூவோ? புயலோ? காதல்! – 11

அத்தியாயம் – 11

“வெரசா களையைப் புடுங்கி போடுங்கடி. உச்சி பொழுது சுள்ளுனு ஏறிட்டு வருது. களையைப் புடுங்கி போட்டுட்டு வயித்துக்குக் கஞ்சியை ஊத்திட்டு வரணும்… ம்ம்… வெரசா… வெரசா…” என்று தலையை நிமிர்த்தாமல் வேலை செய்பவர்களை விரட்டிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.

“ஏய் கிழவி… சும்மா விரட்டிக்கிட்டே திரியாதே. எங்க வயிறும் தேன் தீயா காய்து. களையைப் புடுங்கிட்டு தானே இருக்கோம். செத்த பொறு…” என்று கையில் இருந்த களையைத் தூக்கி எறிந்து விட்டு அவரைப் பார்த்துப் பதிலுக்குக் கத்தினாள் கயற்கண்ணி.

“அப்ப இருந்து செத்த பொறு, செத்த பொறுனு சொல்லிட்டு தாண்டி இருக்கீக. ஆனா வேலைதேன் முடிஞ்ச பாட காணோம். குமரிகளா லட்சணமா வெரட்டு வெரட்டுன்னு களையைப் புடுங்கினோமா வேலையை முடிச்சோமானு இல்லாம குமரிகளாம் சேர்ந்து வெட்டி நியாயம் பேசிட்டு திரியுறாளுக…” என்று கயற்கண்ணியுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டே வேலை பார்த்த அவள் வயது குமரிகளை எல்லாம் குறை சொன்னார்.

“ஓய் கிழவி…! ஓ வேலையை மட்டும் நீ பாரு. என்னமோ நீதேன் இந்த நிலத்துக்குச் சொந்தக்காரி கணக்கா எங்கள விரட்டாத…!”

“ஓகோ… குமரிகளுக்குச் சொல்ல வேண்டியவக சொன்னா தேன் வேலை நடக்குமோ…?” என்று நிமிர்ந்து கேட்டு சுற்றி ஒரு பார்வை பார்த்தவர் முகம் மலர,

“எய்யா ராசா, இங்கன வாய்யா…” என்று யாரையோ கையாட்டி அழைத்தார்.

“என்ன ஆத்தா?” என்று வந்து நின்ற இளஞ்சித்திரனைப் பார்த்து, குமரிகள் எல்லாம் தலையை நிமிர்த்தி ஆர்வமாகப் பார்த்தனர்.

அவனோ பெண்களின் பார்வையில் சங்கடப்பட்டவன் அதை வெளியே தெரியாத வண்ணம் மறைக்க முயற்சி செய்து கொண்டே தன்னை அழைத்த மூதாட்டியை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் சங்கடத்தைக் கண்டுகொண்டவள் போலக் கயற்கண்ணி நமட்டுச் சிரிப்பு ஒன்றை வெளியிட்டு, வாயை கையால் மறைத்துக் கொண்டாள்.

அவளின் சிரிப்பில் அவனின் பார்வை அவள் புறம் திரும்பியது.

பாவாடை, சட்டை அணிந்து, வேலை செய்ய வசதியாகப் பாவாடையைக் கெண்டை கால் தெரியும் வண்ணம் தூக்கி சொருகி, உழைப்பில் பூத்த வேர்வையுடன், கையில் பிடுங்கிய களையுடன் நின்றிருந்தவளை பார்த்தவன் புருவங்கள் ஒரு முறை உயர்ந்து இறங்கியது.

தன்னை யாரெனக் கண்டுகொண்டான் என்று அவனின் உயர்த்திய புருவமே சொல்ல இப்போது தான் சங்கடப்பட்டுப் போனவள், தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

நேற்று மாலை நடந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.

மாலை இருள் மங்கிய வேளையில் விறகு சேகரிக்கச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாள் கயற்கண்ணி.

அவளுடன் வந்த இரண்டு பேர் முன்னால் நடந்து கொண்டிருக்க, இவள் மெதுவாகப் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

அவர்கள் வந்து கொண்டிருந்த பாதை இளஞ்சித்திரனின் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை ஒட்டி தான் இருந்தது.

அப்போது அந்த நிலத்தில் கம்பங்கதிர் பயிரிடப்பட்டிருந்தது.

கதிர்கள் விளைந்து கண்கொள்ளாக் காட்சியைத் தந்து கொண்டிருந்த அதே வேளையில், இரவு தலை காட்ட ஆரம்பித்த அந்த நேரத்தில் கம்பங்காடு பயத்தையும் விளைவித்துக் கொண்டிருந்தது.

கயற்கண்ணியின் வாய் சவிடால் தான் பெரிதாக இருக்குமே தவிர, யாரும் கோபத்துடன் அதட்டி பேசினாலே அரண்டு போகும் குணம் உடையவள்.

அப்படிப்பட்டவளுக்கு இருட்டும் பொழுதும் கூட உள்ளுக்குள் ஒரு பயத்தைக் கொடுத்தாலும், வேலைக்கு வந்து போய்ப் பழகிய இடம் தான் என்பதால் தைரியமாகவே நடந்தாள்.

அவளின் தைரியமும் கூடக் கம்பங்காட்டுக்குள் சலசலவெனக் கேட்ட சப்தத்தில் காணாமல் போனது.

பாதுகாப்பான ஊர் தான் என்றாலும், இது போல் பயிர்கள் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கும் போது, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஒரு வித பயம் அங்கே நிலவுவது உண்டு.

திருடர்கள் இது போல் விளைந்த நிலத்தில் கை வைப்பார்கள் என்ற வாய்ப்பேச்சுக்கள் ஊருக்குள் நிலவும் என்பதால் கூடுதல் கவனத்துடனேயே இருப்பார்கள்.

காவலுக்கு இரவு நிலத்தைச் சேர்ந்த ஆட்கள் சுற்றி வருவதும் உண்டு.

திருடர்கள் பயம் பற்றிய நினைவு வரவும், கம்பங்காட்டுக்குள் கேட்ட சலசல சப்தம் கயற்கண்ணியை மிரள வைத்தது.

மிரண்ட விழிகளுடன் தன் முன்னால் சென்று கொண்டிருந்தவர்களைத் தேடினாள்.

தேடிய விழிகளுக்கு அவர்கள் சிக்கவில்லை.

“அடிப்பாவிகளா…! விட்டுப்போட்டு போய்ட்டீங்களா…?” என்று நினைத்தவள் சுற்றி முற்றி பார்த்தாள்.

“ஆடி அசைஞ்சு நடந்தா இப்படித் தான் விட்டுப்புட்டு போவாளுக…” என்று தன்னையே திட்டிக் கொண்டவள் ஆள் அரவம் இல்லாத அந்த வயல்வெளிகளைப் பயத்துடன் பார்த்தாள்.

கம்பங்காட்டுக்குள்ளிருந்து சப்தம் வேறு அதிகமாக வர ஆரம்பித்தது.

‘களவாணி பயலா இருக்குமோ?’ என்று நினைத்தவள், தலையில் வைத்திருந்த விறகு கட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள்.

நடையையும் நிற்காமல் தொடர்ந்தாள். அவள் நடக்க, நடக்கச் சப்தமும் அவளருகில் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் தன் பயத்தை உதறி தள்ளியவள், “எவன்டா அது?” என்று கேட்டுக் கொண்டே அரிவாளை ஓங்கிய படி திரும்ப, “ஏய்…” என்று அதிர்ந்து கத்தினான் அவன்.

பாவாடை, தாவணியில் தலையில் விறகு கட்டும், கையில் அரிவாளை ஓங்கிய படியும் இருந்தவளை அவன் விழிகள் விரிய பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பட்டாபட்டி டவுசரும் (பெர்முடாஸ் அவளின் பார்வையில் பட்டாபட்டி டவுசரானது) கையில்லாத பனியனும், மூக்கு வரை மறைத்த துவாலையும் என்று நின்றிருந்தவனைப் பார்க்க அவளுக்குக் களவாணி பையன் போல் தான் தெரிந்தது.

அதுவும் அவன் முகத்தைப் பாதி மூடியிருந்த விதம் அவனைத் திருடனாகத் தான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.

“யார் நீ?” அரிவாளை இன்னும் ஓங்கி கொண்டு கோபத்துடன் கேட்டாள்.

“ஏய்… ஏய்… அருவாளை கீழே இறக்கு! என் வரப்பு மேட்டில் இருந்துகிட்டு என்னையவே யாருனு கேட்பியா?” என்று அதட்டிக் கொண்டே தன் முகத்தில் மூடியிருந்த துணியை விலக்கினான்.

அவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.

“என்னது உங்க வரப்பா? யாருய்யா நீ? இது எங்க வேங்கையன் அய்யா வூட்டு வரப்பு. பார்க்க வெளியூர் பைய கணக்கா இருக்க. எந்த ஊருய்யா நீ?” என்று அதட்டலாகக் கேட்டாள்.

அவளுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லை என்றதும் சில வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்திருந்த இளஞ்சித்திரனின் முகம் கோணியது.

ஆனாலும் அவளின் அதட்டல் அவனுக்குச் சிரிப்பை வர வைக்க, லேசாக உதட்டை சுழித்துச் சிரித்தவன், அவளுக்குப் பதில் சொல்லாமல் அவளைத் தாண்டி வரப்பில் நடக்க ஆரம்பித்தான்.

“யோவ்! என்ன கேட்டதுக்குப் பதிலு சொல்லாம ஓடுற? அப்போ நீ களவாணி பைய தானே…” அவனின் பின்னால் விரட்டினாள்.

அவள் களவாணி பையன் என்றதும் அதிர்ந்து நின்று அவளைப் பார்த்தவன், “எந்த ஊருல களவாணி பைய இம்புட்டு பொறுமையா நின்னு பொட்டைப்புள்ளகிட்ட பேசிட்டு இருப்பான்?” என்று நிதானமாகக் கேட்டான்.

அவனின் கேள்வியில் திருதிருவென முழித்தவள், “அப்போ நீ களவாணி பைய இல்லையா?” என்று கேட்டாள்.

‘இல்லை’ என்று தலையசைத்தவனுக்கு அவளின் முழி விரிந்த புன்னகையை வரவைத்தது.

“அப்படினா நீ யாரு? ஊருக்கு புதுசா இருக்க? களவாணி பைய மாதிரி மூஞ்சை எல்லாம் மூடியிருந்த?” என்று கேட்டாள்.

அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “என்னடா இளா இன்னும் வூட்டுக்கு போகாம இந்தப் பொட்டைப்புள்ளகிட்ட என்ன பேசிட்டு இருக்க?” என்ற குரல் அவளின் பின்னால் இருந்து கேட்க, விதிர்த்துப் போய்த் திரும்பி பார்த்தாள்.

அவனின் குரலிலேயே யாரெனக் கண்டு கொண்டவளுக்கு உடல் லேசாக நடுங்கியது.

அவளின் நடுக்கத்தை யோசனையுடன் பார்த்த இளஞ்சித்திரன், “இதோ போய்ட்டே இருக்கேன் அண்ணே. நான் கம்பங்காட்டுக்குள்ளார கூடி வந்ததால இந்தப் புள்ள என்னைய களவாணி பையனு நினைச்சு புடுச்சு. அதான் இல்லைனு சொல்லிட்டு இருந்தேன்…” என்று தன் அண்ணன் இமயவரம்பனிடம் விளக்கம் சொன்னான்.

“என்னது ஏ தம்பியையே களவாணி பையனு சொல்லுச்சா?” என்று மிரட்டலுடன் கயற்கண்ணியை அடிக்கப் போவது போல வந்தான் இமயவரம்பன்.

அதில் பயந்து அவளின் கையில் இருந்த அரிவாளை கீழே போட, அது அவளின் காலையே பதம் பார்க்க இருந்து கடைசி நிமிடத்தில் தன்னிச்சையாக விலகியதில் கால் தப்பியது.

அதில் பதறிய இளஞ்சித்திரன் “அய்யோ அண்ணே அடிச்சுப்புடாதே… என்னைய யாருன்னு அந்தப் புள்ளக்கு அடையாளம் தெரியலை…” என்று அண்ணனுக்கும், அவளுக்கும் இடையில் வந்தவன், “ஏய் புள்ள போ… போ… வூடு போய்ச் சேரு…” அவளின் புறம் திரும்பி பார்க்காமல் அவளை விரட்டினான்.

‘விட்டால் போதும்’ என்று தன் அரிவாளை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

‘என்னது இவரோட தம்பியா? ஓ வெளியூருல பெரிய படிப்புப் படிக்கப் போனவகளா?’ என்று நினைத்த படி வீடு போய்ச் சேர்ந்தாள்.

அவளுக்கு இன்னும் இமயவரம்பன் அடிக்க வந்தது உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

அவன் அப்படித்தான் அவனின் வாயை விடக் கைதான் அதிகம் பேசும்!

அதிலும் அவ்வூரின் பெரிய மனிதரின் மகன் என்ற தலைக்கனத்தில் எப்போதும் அதிகமாகத்தான் ஆடுவான்.

அதனாலேயே அவனைக் கண்டாலே அனேகம் பேர் ஒதுங்கிப் போவார்கள்.

இளஞ்சித்திரனை நினைத்துப் பார்த்தாள். அவனை நினைத்தால் தான் இன்னும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவனும் முன்பு இமயன் போலத் துடிப்புடன் தான் இருப்பான். ஆனால் இன்றோ தான் அவனைக் களவாணி என்று சொன்ன பிறகும் அடாவடி இல்லாமல் அமைதியாகப் பதில் சொன்னவனை நினைத்து அவளுக்கு வியப்பாக இருந்தது.

இப்போது களை எடுக்கும் வேலை பார்த்துக் கொண்டே நேற்று நடந்ததை நினைத்தவளுக்குச் சிரிப்பு வர, அதை மறைக்கக் குனிந்து‌ கொண்டே வேலையைத் தொடர்ந்தாள்.

அவளின் சிரிப்பை பார்த்தாலும் கண்டு கொள்ளாதது போல‌ தன்னை அழைத்த மூதாட்டியிடம் பேச ஆரம்பித்தான் இளஞ்சித்திரன்.

“எதுக்கு ஆத்தா கூப்பிட்டீக?”

“இந்தக் குமரிகளை என்னன்னு கேளு ராசா. வெரசா சோலியை பாருங்கனு உடையவகதேன் சொல்லணுமாம். நான் சொன்னா நீயா உடையவனு என்கிட்ட சண்டைக்கு வாறாளுக…”

“அப்படியா?” என்று கேட்டவன் திரும்பி வேலை செய்து கொண்டிருந்த பெண்களைப் பார்த்தான்.

அவன் வந்தவுடன் மும்முரமாக வேலை செய்வதாகக் காட்டிக்கொண்டு வேலை செய்தவர்களைப் பார்த்து அவனின் உதட்டில் புன்முறுவல் பூத்தது.

ஆனாலும் அதை உடனே மறைத்தவன், “வெரசா சோலியைப் பாருங்க புள்ளைகளா…” என்று நிலத்திற்குச் சொந்தக்காரனாக அதட்டினான்.

“இந்தக் கிழவிக்குக் கொழுப்பை பாரேன்…” என்று தன் அருகில் இருந்த தோழியிடம் முனங்கிய கயற்கண்ணி, “எங்க சோலியைப் பாத்துக்கிட்டு தானே இருக்கோம்…” என்று இளஞ்சித்திரனின் காதில் விழும்படி முணுமுணுத்தாள்.

“ஏய்… பேசாம கிடடி…!” என்று கயலின் அருகில் இருந்த தோழி அவளை அதட்டினாள்.

“ஏன் பேசினா என்னவாம்?”

“அவரு பெரியய்யா புள்ள டி. அவரப் போயி பேசிக்கிட்டு கிடக்க…” என்று தோழியை அடக்கினாள் அவள்.

‘அதுதான் எனக்கு நேத்தே தெரியுமே…’ என்று நினைத்துக்கொண்டவளுக்கு நேற்று அவன் அமைதியாக இருந்தது துடுக்குத் தனத்தைத் தந்திருக்க,

அவனிடம் ஒரு வேகத்துடன் கையில் எடுத்த களையைத் தூக்கி எறிந்து விட்டு நிமிர்ந்து நின்று அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“பட்டணத்து ராசா இந்தப் பட்டிக்காட்டுப் பக்கம் எங்கன வந்தாரு?” என்று நீட்டி முழங்கி கேட்ட கயற்கண்ணியைச் சுவாரசியமாகப் பார்த்தான் இளஞ்சித்திரன்.

அவள் தன்னிடம் இப்படிப் பேசுவாள் என்று எதிர்பார்க்காதவன் அவளை வியந்து பார்த்தாலும் அவனுக்கும் அவளிடம் வாயாடும் சுவாரசியம் ஏற்படத் தானும் பதிலுக்குப் பேச ஆரம்பித்தான்.

“பட்டிக்காட்டில் பண்ணையம் பார்க்க வந்தேன்…” குறும்பாக அவளுக்குப் பதிலை சொன்னான்.

“அடியாத்தே…! பட்டணத்தில் பட்டம் படிச்சவரு, இந்தப் பட்டிக்காட்டில் பண்ணையம் பார்க்க போறீராக்கும்? இந்நேரம் படிச்ச பட்டத்தைப் பட்டணத்தில் பறக்க விட்டிருக்க வேணாமா?”

“ஏன் பட்டணத்தில் படிச்சா பட்டத்தை மட்டும் தேன் பறக்க விடணும்னு எதுவும் பட்டா போட்டு கொடுத்திருக்கா என்ன?” கண்ணில் சிரிப்புடன் கேட்டான் இளஞ்சித்திரன்.

இருவரும் மாறி மாறி வழக்காட சுற்றியிருந்தவர்கள் சுவாரசியத்துடன் இருவரையும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவர்களின் பார்வையைக் கண்டவன், சட்டென்று பேச்சை நிறுத்தினான்.

“வெரசா வேலையை முடிங்க…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கயற்கண்ணி, தோளை குலுக்கி விட்டு களையைப் பிடுங்க ஆரம்பித்தாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பம்பு செட்டில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

அதில் குளித்து விட்டு ஏற்கனவே வீட்டில் சேர்ந்திருந்த அழுக்கு துணிகளைத் துவைப்பதற்காக அள்ளிக் கொண்டு வந்திருந்தாள் கயற்கண்ணி.

அவ்வூரை சேர்ந்த இரண்டு பெண்கள் ஏற்கனவே அங்கே‌ தங்கள் துணிகளை அலசி விட்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

“என்ன ஜோதிக்கா உங்க துணிகளை அலசிப்புட்டீகளா? நீங்க இருக்கீகனு தானே நானும் துணிகளை அள்ளிப்போட்டு வந்தேன்.‌ அதுக்குள்ளே கிளம்பப் போறீக போல…” என்று கயல் கேட்க,

“ஆமா கயலு. நாங்க அலசிப் போட்டோம். கொஞ்ச துணிதேன் கொண்டு வந்தோம் கயலு. அதுதேன் வெரசா முடிஞ்சது…” என்றாள் ஜோதி.

“அச்சோ…! அப்பனா நான் தனியா அலசணுமா? உச்சிப் பொழுதா இருக்கு. இந்தப் பக்கம் அவ்வளவா ஆளுக வர மாட்டாகளே…” என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள்.

“நீ அலச ஆரம்பி கயலு. மோட்டார் ஓடுற வரை யாராவது வந்துட்டுதேன் இருப்பாக. நாங்க இப்போ வூட்டுக்கு போகணும் கயலு. புள்ளைகளை விட்டுப்போட்டு வந்தோம்…” என்று ஜோதியுடன் வந்திருந்த கலா சொல்லவும்,

“நீங்க கிளம்புங்க கலாக்கா. நான் பாத்துக்கிடுதேன்…” என்றவள் தன் துணிகளைத் தண்ணீரில் நனைக்க ஆரம்பித்தாள்.

“நாங்க வர்றோம் கயலு…” என்று அவர்கள் செல்ல, “ஆகட்டும்கா…” என்ற படி துணிகளுக்குப் சோப்பை போட ஆரம்பித்தாள்.

அன்று பார்த்து யாரும் அந்தப் பக்கம் வரவில்லை.

சிறிது தூரத்தில் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த ஒருவர் மட்டும் இருந்தார்.

அவரும் வேலையைப் பார்த்துக் கொண்டே அந்தப் பக்கம் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார்.

“இன்னைக்குனு பார்த்து நம்ம ஊரு பொம்பளைங்க வேற யாரும் வர காணோமே…” என்று புலம்பி கொண்டே துணிகளைத் துவைத்தாள்.

துவைத்த துணிகளை எல்லாம் ஒரு ஓரமாகக் கல்லில் வைத்தாள்.

அப்போது யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, “ஹப்பா…! யாரோ வர்றாங்க போல. இப்போ தேன் நிம்மதியா இருக்கு. இல்லனா இப்படித் தனியா நிக்கிறது வதக்கு வதக்குனு(பய உணர்வு) இருக்கு…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே நிமிர்ந்து பார்த்தவள் “இவுகளா…?” என்று முழித்துப் பார்த்தாள்.

இளஞ்சித்திரன் தான் மோட்டார் தண்ணீரில் குளிக்க வந்து கொண்டிருந்தான்.

அவனும் அப்போது தான் கயற்கண்ணி அங்கே துணிகளை அலசிக் கொண்டிருந்ததைக் கவனித்தான்.

தண்ணீரில் நின்றிருந்ததால் உடுத்தியிருந்த பாவாடை, சட்டை நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டு இருக்க, அது அவளின் உடல் அழகுகளை எடுத்துக் காட்டுவது போல் இருந்தது.

அதைக் கண்டவன் நொடியில் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

வேலை செய்வதற்கு ஏதுவாக அவளின் தந்தையின் சட்டையை அணிந்திருந்தாள். அது அவள் உடலுக்குச் சரியான அளவில் இருக்க, தண்ணீரில் நனைந்ததும் அது அவளின் உடலை இறுக்கி பிடிப்பது போல் ஆகியிருந்தது.

அவனுக்கு உடலும், உள்ளமும் படபடப்பது போல் இருக்க, அவ்விடம் நோக்கி வந்து கொண்டிருந்தவன், பார்வையை மட்டும் இல்லாமல், தன் கால்களையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நடந்து சென்றான்.

அவனின் பார்வையைக் கண்டவள் தானும் பதறி, துவைத்துக் கல்லில் வைத்திருந்த தன்னுடைய தாவணி ஒன்றை மேலே எடுத்து போட்டுக் கொண்டாள்.

அவள் பதறி தாவணியை எடுத்ததில் குவித்து வைத்திருந்த துணிகள் கலைய, அந்தக் குவியலில் இருந்த மற்றொரு தாவணி அந்தக் கல்லிற்குப் பின்னால் இருந்த கிணற்றில் விழுந்தது.

அவள் அமர்ந்து துவைத்த இடம் மோட்டார் தண்ணீர் விழும் தொட்டிக்கு கீழே உள்ள ஒரு நீண்ட கல் தான்.

அக்கல்லில் ஒரு பக்கம் அமர்ந்து துவைத்து இன்னொரு பக்கம் துணிகளைக் குவித்து வைத்திருந்தாள். அந்தக் கல்லுக்கு அந்தப் பக்கம் மோட்டார் அறையை ஒட்டினார் போல் பெரிய கிணறு இருந்தது.

அவள் தாவணியை எடுத்த வேகத்தில் மற்றொரு தாவணி விழ “அச்சோ… தாவணி…” என்று பதறி போனாள்.

அவளிடம் இருப்பதே சொற்ப தாவணி தான். அதில் ஒன்று இல்லாமல் போனால், தன் அன்னை தன்னைச் சும்மா விடமாட்டார் என்பதால் பதட்டத்துடன் தாவணியை எடுக்க மோட்டார் அறையைச் சுற்றிக் கொண்டு ஓடினாள்.

கயற்கண்ணி மோட்டார் தண்ணீரின் அருகில் இருந்ததால் அங்கே குளிக்க முடியாது என்று இளஞ்சித்திரனும் அப்போது கிணற்றில் குளிக்கலாம் என்று அந்தப் பக்கம் தான் நடந்து கொண்டிருந்தான்.

அவன் முன்னால் போவது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியாமல் தாவணியை எடுப்பது ஒன்றே குறிக்கோளாகக் கிணற்றின் பக்கம் ஓடினாள்.

அவளின் பதட்டத்தையும், தன்னைத் தாண்டி ஆவேசமாக ஓடுவதையும் கண்டவன் என்னவோ ஏதோ என்று பதறித்தான் போனான்.

அதுவும் அவள் கிணற்றில் விழப்போவது போல் ஓடினால் அவனும் தான் என்ன நினைப்பான்?

“ஏய் புள்ள! என்ன? என்னாச்சு…?” என்று அவனும் அவள் பின்னால் பதட்டத்துடன் ஓடினான்.