பூவோ? புயலோ? காதல்! – 10

அத்தியாயம் – 10

இரவு பன்னிரெண்டு மணி…

வேதவர்ணா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ரித்விக்கோ முகமும், உடலும் இறுக பால்கனியில் நின்று தூரத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்தான்.

இரவு உணவை முடித்து விட்டு படுக்கைக்கு வரும் வரை அவனிடம் இருந்த உற்சாகம் எல்லாம் இப்போது கடுகளவு கூட இல்லாமல் காணாமல் போயிருந்தது.

எதையும் பொறுமையாகக் கையாள்பவன் அவன்.

ஆனால் இப்போது தன் பொறுமை தன்னை விட்டு போய்விடுமோ என்று அவனுக்கே அவனை நினைத்துப் பயமாக இருந்தது.

மனைவியின் பரிமாணங்கள் அவனுக்கு அந்தப் பயத்தை வர வைத்திருந்தது.

சற்று நேரத்திற்கு முன் தங்களுக்குள் நடந்த நிகழ்வை நினைத்து ரித்விக்கிடம் இருந்து பெருமூச்சு கிளம்பியது.

காலை அலுவலக உணவகத்தில் அவளாக முத்தமிட்டுத் தன்னைத் தூண்டி விட்டவள் அதன் பிறகு அப்படி ஒரு நிகழ்வே நடக்காதது போல நடந்து கொண்டது மனதை உறுத்தினாலும், அன்றைய இரவிற்காக ஆவலாகவே காத்திருந்தான் ரித்விக்.

கணவனாக அவனின் உணர்வுகள் அன்று அதிகமாகவே அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தன.

மனைவி கருவுற்றதில் இருந்து குழந்தைக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று பயந்து தானே அவளை விட்டு இரவுகளில் தள்ளி இருந்திருக்கிறான்.

அவன் அப்படி இருப்பதைப் பெருமையாகப் பார்த்திருக்கிறாள் வேதா.

இரவு ஒருவரை ஒருவர் அணைத்துப் படுத்திருந்தாலும், அதற்கு மேல் செல்லாமல் மனைவியைத் தாங்கினான் ரித்விக்.

கணவன், மனைவிக்குள் ஆயிரம் முத்தங்கள் பரிமாறப் பட்டிருந்தாலும் எதிர்பாராத நேரத்தில் தன் துணையிடம் இருந்து கிடைக்கும் முத்தத்திற்குத் தித்திப்பு அதிகம் தான் போலும்.

அந்தத் தித்திப்பு ரித்விக்கிடம் ஒரு விதமான கிறக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.

வேலை விட்டு வந்ததும் காரிலேயே மனைவியை அணைத்துக் கொள்ள அவனின் கைகள் பரபரத்தன.

ஆனால் அவள் வரும்போதே எரிச்சலுடன் வர, அவனின் ஆர்வம் அப்படியே அடங்கிப் போனது.

பசி அடங்கியதும், அவனிடம் வளவளத்துக் கொண்டு வந்தவள், காலையில் நடந்ததைப் பற்றிச் சிறிதும் நினைவு கூர்ந்தாள் இல்லை.

அவன் தன் ஆர்வத்தை அடக்கி கொள்ள முடியாமல் வீட்டிற்குள் நுழைந்ததும், சாற்றிய கதவின் மீதே அவளைச் சாய்த்து வைத்து, வேகமாக மனைவியின் இதழ்களைச் சிறை பிடித்தான்.

காலையில் தட்டி போன சந்தர்ப்பத்தை இப்போது மொத்தமாகப் பயன்படுத்துபவன் போல அவளின் இதழை ஒரு வழியாக்கி கொண்டிருந்தான்.

கணவனின் வேகத்தில் மூச்சு முட்டி போனாள் வேதா.

அவனிடம் இருந்து அவ்வளவு வேகத்தை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் விரிந்த கண்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அதைக் கண்டு கொள்ளாமல் அவளின் இதழ்களுக்குள் காதல் இலக்கணம் படித்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

“ம்ம்… ரித்வி… கண்ணா… மூச்சு…” என்று பூட்டிய அதரங்களுக்குள் அவள் முனங்க, அவள் மூச்சுக்கு தடுமாறியதை உணர்ந்து மெல்ல தன்னிடமிருந்து அவளைப் பிரித்து நிறுத்தி தன் தோள் வளைவிலேயே வைத்துக் கொண்டான்.

“என் ரித்வி கண்ணாவுக்கு என்னாச்சு?” முகத்தை நிமிர்த்தி அவனின் முகம் பார்த்து திணறலுடன் கேட்டாள்.

“பதிலுக்குப் பதில்…” என்று கண்ணைச் சிமிட்டிய படி சொன்னவனைப் புரியாமல் பார்த்தாள்.

மனைவியின் புரியாத பார்வையில் ரித்விக்கின் இமைகள் சுருங்கின. அவள் அப்படியா மறந்து விட்டாள் என்பது போல் மனைவியின் முகத்தையே ஆராய்ந்து பார்த்தான்.

அவளோ கணவன் சொல்ல வருவது புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அடுத்தடுத்து இருந்த வேலையிலும், உடல் அலுப்பிலும் மறந்து விட்டிருந்தாள் என்பதை அவளின் முகப்பாவம் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது.

“நீ செய்ததுக்குப் பதில்…” என்று அயராமல் எடுத்துச் சொன்னான்.

“நான் என்ன செய்தேன்?” என்று இன்னும் புரியாமல் கேட்டவளை பார்த்தவனின் முகம் இப்போது அப்பட்டமாக வருத்தத்தைக் காட்ட, தான் ஏதோ சொதப்பி விட்டோம் என்று புரிந்து கொண்டாள் வேதா.

ரித்விக் இவ்வளவு வருத்தப்படவும் காரணம் இருந்தது.

ரித்விக்கே அவர்களுக்குள் நடந்த சில விஷயங்களை மறந்தாலும் வேதா அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டாள்.

அப்படிப்பட்டவளே மறந்து விட்டாள் என்பதால் தான் அவளை வேதனையுடன் பார்த்தான்.

“என்ன ரித்வி? நிஜமா எனக்கு ஞாபகம் இல்லைப்பா. என்னன்னு சொல்லுங்க…”

“ஆஃபீஸ் கேன்டின்னு கூட‌ பார்க்காம நீ கிஸ் பண்ணின…” என்று அமைதியாக அவளிடம் சொன்னவன் அவளை விட்டு விலகி படுக்கையறைக்குள் சென்றான்.

அப்போது தான் காலையில் நடந்தது ஞாபகம் வர, ‘இதை எப்படி மறந்தேன்?’ என்று தலையில் கை வைத்த வேதா, வேகமாகக் கணவனின் பின் சென்றாள்.

“ரித்வி, சாரி கண்ணா… இதை எப்படி மறந்தேன்னு எனக்கே தெரியலை. காலையில் என்னன்னு தெரியலை. எனக்கு உடனே உங்களைக் கிஸ் பண்ணனும்னு தோணுச்சு. அதான் எப்பவும் இல்லாமல் வெளியே அப்படிப் பிகேவ் பண்ணிட்டேன். அதுக்குப் பிறகு இருந்த வேலை டென்ஷனில் மறந்தே போய்ட்டேன் ரித்வி. வேணும்னே மறக்கலை…” என்றவள் உடையை மாற்ற சட்டையைக் கழட்டிக் கொண்டிருந்தவன் பின்னே நின்று அவனை அணைத்து அவனின் முதுகில் முகத்தைப் புதைத்துக் கொண்டே வருத்தத்துடன் பேசினாள்.

மனைவியின் வருத்தம் அவனையும் தாக்க, அவளைத் தன்னிடமிருந்து பிரித்து முன்னால் நிறுத்தி, அவளின் முகத்தைக் கைகளில் தாங்கியவன், “இட்ஸ் ஓகே வரு. நீ கேன்டின்ல அப்படி நடந்துக்கிட்டதே என்னால நம்ப முடியலை. வெளியிடத்தில் டீசண்டா நடந்துக்கணும்னு எனக்கே பாடம் எடுப்பவள் நீ. அப்படி இருந்தும் நீ கிஸ் பண்ணினப்ப, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? ஆனா இப்போ நீ அந்த விஷயத்தைச் சுத்தமா மறந்துட்டேன்னு சொல்லவும், என்னால தாங்க முடியலை. அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். நீ வருத்தப்படாதே…” என்று மனைவியைத் தேற்றி தன்னையும் தேற்றிக் கொண்டவன்,

“இன்னும் ஒன்னும் சொன்ன, அது ஞாபகம் இருக்கா?” என்று கண்ணில் மின்னிய குறும்புடன் கேட்டான்.

அவன் கேட்டதும் வேதாவின் கன்னம் நாணத்துடன் மிளிர்ந்தது.

அவள் தான், தான் சொன்ன அனைத்தையும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்திருந்தாளே.

அவளின் முகத்தைப் பார்த்தே அதைக் கண்டு கொண்டவன், “அப்போ இன்னைக்கு ஓகே தானே?” என்று அவளின் காதில் உதட்டை வைத்து முனங்கி தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினான்.

“ம்ம்…” என்று சம்மதம் சொன்னவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“ஹேய் ரித்வி, மெதுவா…” என்று அவனின் வேகத்திற்கு அணை போட்டாள்.

“ஹா… ஆமாம்ல நம்ம பேபிக்கு வலிக்கும்…” என்று அவளை மென்மையாக அணைத்தவன், “அப்போ அப்பயும் பேபிக்கு வலிக்கும் தானே?” என்று யோசனையுடன் அவளிடம் ரகசிய குரலில் கேட்டான்.

“அதான் மெதுவானு சொன்னேனே…” என்று அவனுக்கான பதிலையும் அவள் ரகசிய குரலில் சொல்ல, புரிந்து கொண்டவன், ஆவலுடன் அவளின் முகத்தில் கவிழ்ந்தான்.

வேகமாக அவனிடம் இருந்து விலகியவள், “இப்போ இல்லை. நைட் தான். இப்போ எனக்குப் பசிக்கிது…” என்று வயிற்றைத் தடவி கொண்டே அவள் பரிதாபமாகச் சொல்லவும், “சாரிடா வரு. வா முதலில் சாப்பிடுற வேலையை முடிப்போம்…” என்று தனக்காக விலகியவன் மேல் காதல் பெறுக, அழுத்தமாக அவனின் கன்னத்தில் முத்தம் வைத்து தன் சந்தோஷத்தை காட்டினாள்.

அதன் பிறகு சிறு சிறு சீண்டலும், பேச்சுமாக இருவரும் இணைந்து இரவு உணவை முடித்து, அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு படுக்கைக்கு வந்த போது இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.

ரித்விக் அவளுக்கு உதவிகள் செய்துமே வேதாவை சோர்வு ஆட்கொண்டது.

சோர்வுடன் படுத்திருந்த மனைவியைப் பார்த்து இரக்கம் சூழ, தன் ஆசையை அப்படியே அமிழ்த்தி அமைதியாகப் படுத்திருந்தான்.

இப்போதும் தனக்காகப் பார்த்து ஒதுங்கி அமைதியாகப் படுத்திருந்த கணவனின் செயலில் நெக்குருகி போன வேதா தானே அவனின் மீது கையைப் போட்டுத் தனக்குச் சம்மதம் என்பதை உணர்த்தினாள்.

தன்னை வளைத்திருந்த மனைவியின் கையுடன் தன் கையையும் நெருக்கி பிடித்துத் தவிப்பாய் அவளைப் பார்த்தவன், “நீ டயர்டா தெரியுறாயே வருமா…” என்றான் தயக்கத்துடன்.

“அவ்வளவு டயர்டா இல்லை ரித்வி…” என்றவள் ‘அருகில் வா’ என்பது போல் ஜாடை காட்டி அழைத்தாள்.

நான்கு மாதங்களாகத் தள்ளி இருந்ததின் தவிப்பு அவனை அவளிடம் நெருங்க சொல்லி தூண்ட, மறுக்காமல் மனைவியை நெருங்கினான்.

முத்தத்தில் ஆரம்பித்துக் காதல் யுத்தத்தில் முடிக்க ஆர்வம் கொண்டவன், இத்தனை நாட்களின் பிரிவிற்குமாகச் சேர்த்து மனைவியை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.

உடல்கள் பின்னி பிணைந்திருந்த வேளையில் ‘வேண்டாம்’ என்ற முனங்கல் ரித்விக்கை தேங்க வைக்க, வேகமாக மனைவியின் முகத்தை ஆராய்ந்தான்.

கண்களை இறுக மூடி தலையணையை இறுக பற்றிக் கொண்டு “வேண்டாம்… ம்ம்… வேண்டாம்” என்று மெல்லிய குரலில் முனங்கி கொண்டே இருந்த மனைவியைப் பார்த்து அதிர்ந்தவன் சட்டென்று மொத்தமாக அவளை விட்டு விலகி “வருமா… வரு… என்னடா…?” அவளின் கன்னத்தில் தட்டி மென்மையாக அழைத்தான்.

அவனின் விலகலிலேயே சிறிது நிம்மதியாக உணர்ந்தவள், அவனின் தவிப்பான அழைப்பில் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள்.

“என்னாச்சு வரு? என்ன வேண்டாம்? ஏன் வேண்டாம்?” என்று புரியாமல் திணறலுடன் கேட்டான்.

அவள் தான் அருகில் வர சொல்லி அழைத்தாள். அவன் இட்ட முத்தங்களையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதை உணர்ந்த பிறகுதான், அதிக நெருக்கத்தைத் தங்களுக்குள் கொண்டு வந்தான்.

ஆரம்பத்தில் சுகித்துக் கிடந்தவளுக்குப் பின்பு ஏன் கசந்தது? என்று புரியாமல் குழம்பி போனான் ரித்விக்.

அவனின் தாபங்கள் அப்படியே அடங்கி விட, மனைவியைப் பற்றிய சிந்தை அவனை ஆட்கொண்டது.

கண் விழித்துக் கணவனைப் பார்த்தவளோ, தான் வேண்டாம் என்று சொன்னதன் காரணம் அவளுக்கே புரியாமல் தவிப்புடன் கணவனின் முகம் நோக்கினாள்.

“என்ன வரு? என்னனு சொன்னாத்தானே தெரியும்…”

“எனக்கே தெரியலை ரித்வி. ஆனா வேணாம்னு மட்டும் தோணுது…” அவளின் குரல் அவனை ஆசைக்காட்டி ஏமாற்றி விட்டோமோ என்ற தவிப்புடன் ஒலித்தது.

மனைவியின் தவிப்பில் தகித்தவன், “இட்ஸ் ஓகே வருமா. அதுக்கு ஏன் இவ்வளவு வருத்தப்படுற? வேணாம்னா விட்டுடலாம்…” என்று அவளைச் சமாதானம் செய்தான்.

அவனின் சமாதானத்தில் வேதாவிற்குச் சட்டெனக் கண்கள் கலங்கி போனது.

அவளுக்குக் கணவனின் தோள் சாய வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் அவனின் ஆசையை நிராசையாக ஆக்கிவிட்டு இன்னும் அவனைத் தூண்டி விடுவது போல் நடந்து கொள்வதா? என்று தோன்ற, தன் எண்ணத்தைக் கைவிட்டு கணவனைக் கண்ணீர் மல்க பார்த்தாள்.

அவளின் கண்ணீரை பார்த்து அவனுக்கு அப்படியே உருகி போயிற்று.

அவளின் மனதை அறிந்தவன் போல வாகாகப் படுத்து அவளை இழுத்து தன் தோள் வளைவில் இறுத்திக் கொண்டவன், “இப்போ எதுக்கு இவ்வளவு கலங்கி போற வரு? இந்த ஃபோர் மந்த்தா நாம பேபிக்காக ஷேப்பா தானே இருந்தோம். அது போல இன்னைக்கும் இருந்துட்டு போவோம். அவ்வளவுதான்! இதுக்கு நீ இவ்வளவு வருத்தப்படத் தேவையே இல்லை…” என்று அவளின் உச்சியில் நாடி பதித்து, முதுகை இதமாக வருடி விட்டு அவளைத் தேற்றினான்.

கணவனின் தேற்றலும், தேறுதலுமே வேதாவை இன்னும் கலங்கி போக வைத்தது.

“சாரி ரித்வி கண்ணா…” என்று வருத்தத்துடன் உரைத்தாலும், அவனின் வருத்தத்தைப் போக்க, அன்னியோன்ய உறவை வளர்க்க அவளின் மனம் விரும்ப வில்லை.

அவ்வுறவு வேண்டாம் என்பதில் மட்டும் அவளின் எண்ணம் உறுதியாக இருந்தது.

“சாரி எல்லாம் வேண்டாம் வரு. ஐயாம் ஆல் ரைட்! நீ தூங்கு…!” என்று தொடர்ந்து அவளை வருடி விட்டு, மேலும் அதைப் பற்றிய பேச்சை வளர்க்காமல் தூங்க வைத்தான்.

ஆனால் அவளைத் தூங்க வைத்தவனுக்குத் தான் தூக்கம் தொலைதூரம் போனது.

வருத்தம் மனதில் அண்டி கிடக்க, தூக்கம் வருவேனா என்று ஆட்டம் காட்டியது.

வருத்தம் என்றால் மனைவியைச் சுகிக்க முடியவில்லை என்பதால் வந்த வருத்தம் அல்ல!

அவளின் மனநிலையைக் குறித்த வருத்தம்!

மனைவியின் சிந்தனையில், செயலில் இந்த நான்கு மாதங்களாக ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்ததால் வந்த வருத்தம்.

அவ்வருத்தம் அவனைப் படுக்க விடாமல் விரட்ட , படுக்கையில் இருந்து எழுந்து பால்கனியில் நடமாடிக் கொண்டிருந்தான்.

நேரத்திற்கு நேரம் மாறும் அவளின் மனநிலையை எண்ணி பார்த்தவனுக்கு ‘எதனால் இப்படி இருக்கிறாள்?’ என்ற கேள்வி உண்டானது.

அக்கேள்விக்கு விடை தேட முயன்றவன், யோசனையுடன் பால்கனியை அளந்தான்.

வெகு நேரம் யோசனையின் பிடியில் சிக்கியிருந்தவன் சிந்தையில் ஓர் எண்ணம் பளிச்சிட, அதைச் செய்து காட்டிவிடும் முடிவுடன் நிம்மதியாக நித்திரையை நாடி சென்றான்.