பிழையில்லா கவிதை நீ – 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 9
உலகத்தில் உள்ள மொத்தக் கவலையையும் தான் ஒருவரே விலைக் கொடுத்து வாங்கியவர் போல் அமர்ந்திருந்தார் சேதுராமன்.
அவரின் எதிரே உள்ள படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அவரின் மனைவி கஸ்தூரி.
அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே உணராமல் மருத்துவமனை வாசத்தில் அதிக நேரம் உறக்கத்தின் பிடியில் தான் இருந்தார்.
அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த பரத்தின் மீதே சேதுராமனின் பார்வை இருந்தது.
மகளின் மனதிற்குப் பிடித்தவன்!
அதை ஒரு தகப்பன் தெரிந்து கொள்ளும் சூழ்நிலை?
முகத்தில் அப்பியிருந்த சோகம் மட்டும் இல்லையென்றால் இன்னும் அதிக வசீகரம் நிறைந்த, அழகான ஆண்மகன் தான் பரத். ஆனாலும் அந்தச் சோகம் கூடத் தன் மகளை நினைத்து வந்ததால், அதுவே ஒரு நல்ல ஆண்மகனுக்கான வசீகரமாக அவருக்குத் தெரிந்தது.
மகள் காணாமல் போகாமல் பரத்தை விரும்புவதை அவள் சொல்லியிருந்தால் அந்த நேரத்தில் அவரின் முடிவு எப்படி இருந்திருக்குமோ?
ஆனால் இப்பொழுதோ பரத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருந்தார்.
அந்த மனநிலையில் ‘மகளின் காதல் விஷயத்தில் மனைவி அவசரப்பட்டது சரியில்லை’ என்றே நினைத்தார்.
அதோடு தன்னிடம் மகளின் விருப்பம் பற்றிச் சொல்லாமல் அவசரமாக வேறு மாப்பிள்ளை பார்த்த கோபமும் மனைவியின் மீது எழுந்தது.
‘மனைவியின் அவசரச் செயலால் இப்போது மகளைத் தொலைத்து விட்டு நிற்கிறோம்’ என்று நினைத்தவரின் பார்வை தூங்கிக் கொண்டிருந்த மனைவியை வெறித்தது.
“ஏன் அங்கிள் ஆன்ட்டியை அப்படிப் பார்க்கிறீங்க?” பரத்தைப் பற்றிய விவரம் சொல்லிவிட்டு அங்கேயே ஒரு காலை தரையிலும், ஒரு காலை பின்னால் மடக்கிச் சுவற்றிலும் ஊன்றி, கைகளை அழுத்தமாகக் கட்டிக் கொண்டு நின்றிருந்த ஜனார்த்தனி அவரின் பார்வையில் இருந்த வேறுபாட்டைக் கவனித்துக் கேட்டாள்.
‘என் மனைவி செய்த முட்டாள்தனத்தை நினைத்து அவளை முறைத்துக் கொண்டிருக்கின்றேன். இவள் மட்டும் தான்தோன்றித்தனமாக நடக்காமல் இருந்திருந்தால் இப்போது எங்கள் மகள் என் கண் முன் இருந்திருப்பாளே. அவள் காணாமல் போனதற்கு முதல் காரணம் என் மனைவி என்பதால் அவளை அப்படிப் பார்க்கின்றேன்…’ என்று ஜனா கேட்ட கேள்விக்குத் தனக்குள்ளேயே பதில் சொல்லிக் கொண்டார் சேதுராமன்.
மனைவியின் மீது தவறே இருந்தாலும், அதை வாய் விட்டுச் சொல்லி ஜனாவிடமும், பரத்திடமும் தன் ஆதங்கத்தைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவர்.
என்னதான் இருந்தாலும் மனைவி ஆகிற்றே! அடுத்தவர்களிடம் அவளை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை அவருக்கு!
அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அவரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவள் போலத் தோளை அவருக்குத் தெரியாத வகையில் குலுக்கிக் கொண்டவள், “ஓகே அங்கிள், எனக்கு வெளியே ஒரு சின்ன வேலை இருக்கு. நான் கிளம்புறேன்…” என்றாள்.
“சரிமா…” என்று அவர் சொன்னதும், அங்கிருந்து கிளம்பியவளை “சிஸ்டர், ஒரு நிமிஷம்…” என்று நிறுத்தினான் பரத்.
“என்ன பரத்?”
“என் வினு கிடைச்சுருவாள் தானே சிஸ்டர்?” என்று கேட்டவன் குரல் கலக்கத்துடன் வந்தது.
“விஷயம் தெரிஞ்சதிலிருந்து ஒவ்வொரு நொடியும் அவளை எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன் பரத். இன்ஸ்பெக்டர் ஜெகவீரனும் முழு மூச்சா அந்த வேலையில் தான் இருக்கார். கண்டுபிடிச்சிருவோம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு பரத்…” என்றாள்.
அவளுக்குத் தலையை அசைத்தவன், “அதே நம்பிக்கையோட நானும் இந்த நிமிஷத்திலிருந்து என் வினுவைத் தேடப் போறேன் சிஸ்டர்…” என்றான்.
“எங்கே போய்?”
“எங்கயாவது… ரோடு ரோடா, தெருத்தெருவாக அலைஞ்சாவது தேடப் போறேன் சிஸ்டர். அவளை அவளோட அம்மா தான் அடைச்சு வைச்சுருக்காங்கனு நினைச்சு சாப்பிடாம, சரியா தூங்காம சும்மா சுத்தி ஏற்கனவே மூணு நாளை வேஸ்ட் பண்ணிட்டேன். அதிலும் என்னோட வினு தொலைஞ்சு போனது கூடத் தெரியாம பல மணி நேரங்கள் இருந்து இருக்கேன்னு நினைக்கும் போது எனக்கே என்னை நினைச்சு வெட்கமா இருக்கு. இனியாவது ஒரு நொடியைக் கூட வேஸ்ட் பண்ணாம தேடப் போறேன்…” என்றான் தீவிரத்துடன்.
“கோ அஹெட் பரத்!” என்று சொல்லி அவனின் முயற்சிக்கு ஆதரவுத் தெரிவித்தவள், தானும் அங்கிருந்து தன் அடுத்த முயற்சியைத் தேடிச் சென்றாள்.
அவளின் பின்னே அறையை விட்டு வெளியேறிய பரத்தைப் பார்த்துச் சேதுராமனுக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான்.
அது ‘மகளின் காதல் விஷயத்தில் மனைவி பொறுமையைக் கடைபிடித்திருக்கலாம்…’ என்பதே!
மருத்துவமனையில் இருந்து நேராக ஜனார்த்தனி போய் நின்ற இடம் வினயாவின் வீட்டு வாசலின் முன்பு தான்.
வாசல் கேட் அருகில் நின்றவளின் பார்வை முதலில் பூட்டியிருந்த வீட்டை நோக்கிச் சென்றது.
பின் அப்படியே பார்வையை மெதுவாகத் திருப்பியவள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டே தன் இருசக்கர வாகனத்தைத் தெருக்களில் உருள விட்டாள்.
தெருவின் இந்த முனையில் இருந்து அந்த முனை வரை ஆராய்ச்சியாகக் கண்களைச் சுழல விட்டாள்.
அப்படி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் சென்று வந்ததில் ஒரு வீடு மட்டும் கண்களை உறுத்த, அவ்வீட்டு வாசலின் முன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள்.
அவ்வீடு சரியாக வினயாவின் வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி எதிர்சாரியில் இருந்தது.
அவ்வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே சில நொடிகள் செலவழித்து நடந்ததும் வாசல் கதவு வந்தது. மரக்கதவிற்கு வெளியே இரும்புக் கேட் கவசமாக நின்று கொண்டிருந்தது. அதன் உள்பக்கம் கனமான பெரிய பூட்டு தன் வலிமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஆனாலும் உள்ளே ஆட்களின் நடமாட்டத்தைச் சுட்டிக் காட்டும் வகையில் உள்ளிருந்து மெல்லிசையாகப் பழைய பாடல் பூட்டிய கதவிற்கு வெளியே கசிந்து வந்து கொண்டிருந்தது.
கதவிற்கு அருகில் சுவற்றில் இருந்த அழைப்பு மணி பொத்தானை நிதானமாக அழுத்தி விட்டு உள்ளிருந்து ஆள் வரச் சில நொடிகள் காத்திருந்தாள்.
நொடிகள் கடந்த நிலையில் அவளின் கணிப்புப்படியே அறுபது வயதைத் தாண்டிய ஒருவர் வந்து மரக்கதவை மட்டும் திறந்து அவளை ஆராய்ச்சிக் கண்களுடன் பார்த்தார்.
முதியவர் ‘யார் நீ?’ என்று கண்களால் கேட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உள்ளிருந்து “யாருங்க வந்திருக்கா?” என்ற பெண் குரல் கணீரென்று கேட்டது.
“ஒரு பொண்ணு வந்திருக்காள். இரு, யாரு என்னன்னு விசாரிக்கிறேன்…” ஜனார்த்தனியைப் பார்த்துக் கொண்டே கழுத்தைக் கூட திருப்பாமல் உள்ளிருந்து வந்த கேள்விக்குப் பதில் சொன்னவர், “யாருமா நீ?” என்று கேட்டார்.
“ஹலோ அங்கிள், நான் ஜனார்த்தனி…” என்றவள் அடுத்த வரியை வார்த்தையில் சொல்லாமல் கால்சட்டையில் இருந்த தன் அடையாள அட்டையை எடுத்துக் காட்டினாள்.
“ஜனார்த்தனி, யுகா டிடெக்டிவ் ஏஜென்சி! சரி, அதுக்கு என்ன?” அடையாள அட்டையைப் பார்த்து வாய் விட்டுப் படித்தவர் அசுவாரசியமாகவே கேட்டார்.
“ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷன் வேணும் அங்கிள்…” லேசாக இதழைப் பிரித்து மென்னகை புரிந்து இதமான குரலில் கேட்டாள்.
“இன்ஃபர்மேஷன்? இங்க என்ன இன்ஃபர்மேஷன் கொடுக்கப்படும்னு போர்டா போட்டு வச்சுருக்கோம்?” என்று சிடுசிடுத்தார் அவர்.
“கூல் அங்கிள்! எதுக்கு இவ்ளோ டென்ஷன்? ஒரு வயசு பொண்ணுக்கு ஆபத்து. அவளை அந்த ஆபத்தில் இருந்து காப்பாத்த சில இன்ஃபர்மேஷன் தேவைப்படுது. ஏதோ உங்க மூலமா ஏதாவது தகவல் தெரிஞ்சு அது மூலமா அந்தப் பொண்ணு காப்பாற்றப்பட்டால் உங்களுக்கும் புண்ணியம் தானே?” என்று மென்னகை மாறாமல் நயமாகவே பேசினாள்.
“வயசு பொண்ணுக்கு ஆபத்தா? யாருக்கு?” அதுவரை ஏற்றமாக இருந்த ஸ்ருதியை இறக்கிக் கேட்டார்.
“அதோ அந்த வீட்டில் உள்ள பொண்ணு. அவளை நீங்க பார்த்திருக்கீங்களா?” என்று அங்கிருந்து பார்த்தால் தெரியும் வினயாவின் வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.
“வினயா பொண்ணுக்கா ஆபத்து? ஏன், என்னாச்சு அவளுக்கு? அதான் போலீஸ் வந்து போச்சா?” என்று பெரியவரின் முதுகுக்குப் பின் நின்றிருந்த அவரின் மனைவி கேட்ட படி தன் முகத்தை ஜனாவிற்குக் காட்டினார்.
“சொல்றேன் ஆன்ட்டி. அதுக்கு முன்னாடி நீங்க கடைசியா வினயாவை என்னைக்குப் பார்த்தீங்கனு சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.
“ஏங்க கேட்டைத் திறங்க. அந்தப் பொண்ணு உள்ளே வரட்டும்…” என்று அவ்வளவு நேரமும் பூட்டி இருந்த இரும்புக் கதவைத் திறக்கக் கணவனுக்குக் கட்டளையிட்ட பெண்மணி, கணவர் அவ்வேலையைத் தொடங்கியதும், “இங்க நானும், இவரும் மட்டும் தான் தனியா இருக்கோம். எங்க பாதுகாப்புக்குப் பழக்கமில்லாத யார் வந்தாலும் கேட்டுக்கு வெளியே வச்சே பேசி அனுப்பிருவோம். நீ டிடெக்டிவ்னு சொல்றதால் நம்பி உள்ளே விடுறோம்…” என்று ஜனாவிற்கு விளக்கம் சொன்னார்.
“உங்க நம்பிக்கைக்கு நன்றி ஆன்ட்டி…” என்ற படி உள்ளே வந்து அவர்கள் காட்டிய இடத்தில் அமர்ந்தவள் பார்வை, வீட்டை ஒரு அலசு அலசி விட்டு மீண்டு எதிரே இருந்த முதிய தம்பதிகளின் முகத்தில் பதிந்தது.
“வினயாவுக்கு என்ன ஆபத்துமா? எதுக்குப் போலீஸ் வந்து போனாங்க? போலீஸ் வினயாவோட பக்கத்து வீடுகளுக்கும் போனதைப் பார்த்தேன். என்ன பிரச்சினைனு ஒன்னும் தெரியலை. ஆனாலும் எங்களையும் விசாரிக்க வருமோனு பயந்து நாங்க வெளியே தலையைக் காட்டலை…” என்றார் அந்தப் பெண்மணி.
“சொல்றேன் ஆன்ட்டி. அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்விக் கேட்டேனே ஆன்ட்டி?” என்றாள் பதிலுக்கு.
“வினயாவை நான் தினமும் அவள் வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் பார்ப்பேன் பொண்ணே. ஆனா இந்த நாலு நாளா அவளை வெளியே பார்க்கவே இல்லையே? அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு அன்னைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனாங்களே… இன்னுமா சரியாகலை? அதைத் தான் ஆபத்துன்னு சொல்றீயா?” என்று கேட்டார்.
அவர் சொன்ன தகவலில் சுறுசுறுப்பானாள் ஜனார்த்தினி.
“என்ன ஆன்ட்டி சொல்றீங்க? வினயாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனாங்களா? என்னைக்கு?” என்று பரபரப்பாகக் கேட்டாள்.
“ம்ம்… என்னைக்கு?” என்று ஒரு நொடி யோசித்தவர், “ஹான்… புதன் கிழமை நைட் ஒரு பத்து, பத்தரை இருக்கும். ஒரு ஆம்னி வேன் ஆம்புலன்ஸ்ல வினயாவை ஏத்திட்டு இருந்தாங்க. அவளோட அம்மா கஸ்தூரி வேன் பக்கத்தில் நின்னு அழுதுட்டு இருந்தாள்…” என்றார் அவர்.
“என்ன?” பலமான அதிர்வை உள்வாங்கினாள் ஜனார்த்தனி.
“என்னமா, நீ இவ்வளவு ஷாக் ஆகுறதைப் பார்த்தால் உனக்கு விஷயமே தெரியாது போலிருக்கு. அப்புறம் ஏன் அவளுக்கு ஆபத்துன்னு சொன்ன?” என்று கேட்டார்.
அவரிடம் வினயா காணாமல் போன விஷயத்தைச் சொல்லி, மேலும் சில கேள்விகள் கேட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினாள் ஜனார்த்தனி.
“ஆம்னி வேன் ஆம்புலன்ஸ்ல இரண்டு பேர் இருந்திருக்காங்க ஜெகா. வினயாவை வேனில் ஏத்திட்டு ஒருத்தன் வேனை ஓட்ட உட்கார்ந்திருக்கான். இன்னொருத்தன் பின்னாடி உட்கார்ந்திருக்கான்…”
“மிசஸ் கஸ்தூரி வேனில் போகலையா?” என்று கேட்டான் ஜெகவீரன்.
“அதைப் பார்க்கலைனு சொல்றாங்க. அந்த நேரம் அந்த அங்கிள் அந்த ஆன்ட்டியை எதுக்கோ உள்ளே கூப்பிடவும் போய்ட்டாங்களாம். திரும்பி வந்து அவங்க பார்த்தப்ப வேன் அங்கே இல்லை. வீடும் பூட்டி இருந்ததாம்…”
“ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிட்டல் பேரு எதுவும் பார்த்தாங்களா?”
“இல்லை ஜெகா. இந்த இடத்தில் ஒரு விஷயம் இடறுது. வினயாவை ஆம்புலன்ஸ்ல ஏத்தும் போது கூட வெளியே வராண்டா லைட் எதுவும் போட்டுக்காம இருட்டா இருந்திருக்கு. அந்த ஆன்ட்டி அந்தத் தெருவில் இருக்குற தெரு விளக்கு வெளிச்சத்தில் தான் எல்லாத்தையும் கோட்டோவியமா பார்த்து இருக்காங்க. அதுல வேனில் எழுத்து எல்லாம் அவங்க படிக்கலை. அதுவும் வேன் பக்கத்தில் கஸ்தூரி ஆன்ட்டி அழுதுட்டு இருந்ததாக அவங்க சொன்னது அவங்களோட கனத்த சரீரத்தை நிழல் உருவமா பார்த்து, அப்போ வேனில் ஏற்றப்பட்டது வினயாவா தான் இருக்கும்னு கெஸ்ல தான் சொல்றாங்க…”
“இது புதுத் தகவலாக இருக்கே ஜனா. அன்னைக்கு நைட் வேற என்ன எல்லாம் நடந்திருக்கும்? உடம்பு சரியில்லைன்னு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது வினயா. ஆனால் இப்போ ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருப்பது மிசஸ் கஸ்தூரி. ஹ்ம்ம்… குழப்பமாத்தான் இருக்கு. நம்ம தேடுதல் வேட்டையை இன்னும் துரிதப்படுத்தணும் ஜனா…”
“இன்னைக்கு உங்க ஏற்பாட்டில் எதுவும் தகவல் தெரிந்ததா ஜெகா?”
“இல்லை ஜனா. பரத் கோயம்பேடு வரச் சொன்னதை வச்சு ஒருவேளை ஆட்டோ பிடிச்சு வினயா கிளம்பி இருக்கலாம்னு அந்த ஏரியா ஆட்டோ ஸ்டாண்ட் எல்லாம் விசாரித்து விட்டோம். ஆனா அங்கே வினயா ஏறலை…”
“இப்போ எல்லாம் தனியார் கம்பெனில லிங்க் ஆகியிருக்குற டிராவல்ஸில் புக் பண்ணி வீட்டுக்கே ஆட்டோ, கார் வர வைக்கிறது தானே வாடிக்கை ஜெகா…”
“யெஸ், அந்தக் கோணத்தில் போய்த்தான், அந்தக் கம்பெனிகளில் தனிப்பட்ட முறையில் பிரஷர் கொடுத்துப் புதன்கிழமை லிஸ்ட் சேகரிச்சோம். ஆனா வினயா வீட்டுத் தெருவில் ஒருத்தர் கூட அன்னைக்கு யாரும் டிராவல் புக் பண்ணி போகலை. அதோட அன்னைக்கு ஏதாவது பொண்ணுக்கு ஆக்சிடென்ட், இல்லை ஏதாவது பொண்ணுக்கு விபரீதம் நடந்ததா நியூஸ் வந்ததான்னு எல்லாப் போலீஸ் ஸ்டேஷன்லையும் விசாரணை நடத்தியாச்சு. அந்த லிஸ்டில் வினயா இல்லைனு ரிப்போர்ட் வந்துருச்சு…”
“அது தான் ஆம்புலன்ஸ்ல ஏத்திக் கொண்டு போயிருக்காங்களே… அப்புறம் எப்படி உங்க விசாரணையில் பலன் கிடைத்திருக்கும்?”
“யெஸ், அதே தான்! இது தெரியாமல் நான் பரத்தைச் சந்தித்த பிறகு இத்தனை வேலை பார்த்திருக்கேன். நான் ஊரெல்லாம் சுத்தி தேட, நீ ஒரு தெருவை மட்டும் சுத்திட்டு வந்து லட்டு மாதிரி விஷயத்தைக் கொண்டு வந்திருக்க…” என்றான் மெச்சுதலாக.
கொஞ்சம் கூடப் பொறாமையோ, தான் கண்டுபிடிக்காமல் போனதை நீ எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல் அவன் பாராட்டியதைக் கவனித்துக் கொண்டே தன் டீசர்டின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள் ஜனார்த்தனி.
“போதும், போதும் பெருமை பீற்றல். சரி, இப்பயே நைட் ஒன்பது ஆகப் போகுது. வீட்டுக்கு எப்போ போறதா ஐடியா?” என்று கேட்டவனிடம் அக்கறை தெரிந்தது.
“என்ன ஜெகா இம்புட்டு நேரம் ஆகியும் வெளியே எங்கெங்கோ சுத்திய உங்களைப் பிடிச்சு, ஸ்டேஷன் வர வச்சு லட்டு போல விஷயத்தைச் சொன்னால், அடுத்து இதை வைத்து என்ன செய்யப் போறீங்கன்னு சொல்லாம என்னை விரட்டி விடுவதிலேயே குறியா இருக்கீங்களே?” என்று சலித்துக் கொண்டாள் ஜனார்த்தனி.
“அடுத்து என்ன, வினயா வீட்டு ஏரியாவில் தான் சின்ன வேலை இருக்கு. அங்கே தான் கிளம்பிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணப் போற? வீட்டுக்கு…”
“போகிறாயா?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன், “நானும் உங்களோட வர்றேன்…” அவனை முந்தி கொண்டு எழுந்து நடக்கத் தொடங்கினாள் ஜனா.
“அப்ப ஸ்கூட்டியை இங்கேயே விட்டுட்டுக் காலையில் வந்து எடுத்துக்கோ. அங்கே விசாரணையை முடிச்சுட்டு நானே உன்னை வீட்டில் விட்டுறேன்…” என்ற கண்டிஷனுடன் அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
“அப்போ காலையிலும் நீங்களே என்னை என் வீட்டில் இருந்து பிக்கப் பண்ணிக்கணும்…” என்று பதிலுக்குக் கண்டிஷன் போட்டு விட்டே அவளும் வண்டியில் ஏறினாள்.
“அது சரி, உனக்கு எப்படி அந்த வீட்டில் போய் விசாரிக்கத் தோணுச்சு ஜனா? நாங்களும் தான் அக்கம்பக்கத்தில் விசாரிச்சோம். பக்கத்து வீட்டுக்காரங்களுக்குக் கூட ஒன்னும் தெரியலைன்னு சொல்லிட்டாங்க. ஆனால் நாலு வீடு தள்ளி விசாரிக்காம விட்டது எங்க தப்புதான். அதோட அந்தத் தெருவில் யார் வீட்டிலும் செக்யூரிட்டி கேமரா இல்லாமல் போனது வேறு கேஸை வேகமாக நகர்த்த விடாம பண்ணிடுச்சு…” என்றான் ஜெகவீரன்.
“யூ ந்நோ ஒன் திங் ஜெகா? நீங்க ஏற்கனவே விசாரித்ததில் பலன் இல்லைன்னு தெரிஞ்சாலும், நம்ம மக்கள் சிலருக்கு அடுத்த வீட்டில் நடப்பது, வெளியே நடப்பதை தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கும். அப்படி யாராவது எப்படியாவது வினயாவின் ஏரியாவில் மாட்டுவாங்களானு தேடித்தான் அங்கே போனேன்.
அந்த ஏரியாவுக்குள் நுழையும் போதே அந்த வீட்டு ஆன்ட்டி பால்கனியில் நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க. அதுவும் அந்த வீட்டுப் பால்கனியில் கம்பிக் கேட் போட்டுத் திருடன் வர முடியாத அளவிற்குச் சேஃப்டி பண்ணி வச்சுருந்தாங்க. அதோட அந்தப் பால்கனியில் இரண்டு ஈஸி சேர் இருந்தது. அது வயசானவங்க அங்கே எந்த நேரமும் உட்காரும் இடமா இருக்கலாம்னு ஒரு சின்னக் கெஸ். அவ்வளவு சேஃப்டி இருந்தால் ராத்திரி தூக்கம் வரலைனா கூடத் திருடன் பயம் இல்லாமல் அங்கே உட்காரலாம்.
அந்த ஆன்ட்டியும், அங்கிளும் அப்படி உட்காருவது வழக்கம் தானாம். அதுவும் பசங்க எல்லாம் வெளிநாட்டில் இருக்க, இவங்க இரண்டு பேர் என்பதால் பெரிதாக வேலையும் இல்லை. சோ, அவங்க இப்படி வேடிக்கை பார்ப்பது கூட அவங்களுக்கு ஒரு பொழுதுபோக்குத்தான்.
அவங்களோட வேடிக்கை பார்க்கும் பழக்கத்தில் ஏதாவது நம்ம கேஸுக்குப் பயன்படும் வகையில் மாட்டுமானு யோசனையோட ஏதோ ஒரு நப்பாசையில் குருட்டாம்போக்கில் தான் அந்த வீட்டுக் கதவைத் தட்டினேன். ஆனால் நானே எதிர்பாராத வகையில் இவ்வளவு பெரிய லட்டு மாதிரியான விஷயம் கிடைக்கும்னு கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை…” என்றாள்.
“அப்போ அடுத்த வீட்டில் என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்பதும் ஒரு வகையில் நல்லதுன்னு சொல்லு…” என்றான் புன்னகையுடன்.
“யாருக்கு நல்லதோ இல்லையோ, நம்ம வேலைக்கு இந்த வேடிக்கை பார்த்தல் ரொம்ப ரொம்ப நல்லது…” தானும் அவனிடம் சிறிது புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டவள் போல் மென்னகையுடன் சொன்னாள்.
பேசிக்கொண்டே அவர்கள் வந்து சேர்ந்த இடம் வினயாவின் வீடு இருக்கும் தெருவில் இருந்து வெளி வந்து பிரியும் பிரதான சாலை அது.
அச்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்க அதன் வாயிலில் வாகனத்தை நிறுத்த சொன்னான் ஜெகவீரன்.
கீழே இறங்கியதும் அங்கே தாங்கள் வந்ததற்கான காரணம் ஜனாவிற்குப் புலப்பட்டது.
பெட்ரோல் பங்கின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஜெகன், புதன்கிழமைக்கான தேதியை, நேரத்தை சொல்லி அவர்கள் சாலையைப் பார்த்தது போல் வைத்திருந்த செக்யூரிட்டி கேமராவின் புட்டேஜை பார்க்க வேண்டும் என்று சொன்னான்.
அவனின் காவல்துறை உடை அங்கே உள்ளவர்களைக் கேள்விக் கேட்க விடாமல் செய்து விட, அவன் கேட்ட காணொளி பதிவைப் போட்டுக் காட்டினார்கள்.
அந்தப் பெண்மணி குறிப்பிட்ட பத்து அல்லது பத்து முப்பது மணி என்ற நேரத்தின் படி பார்க்க, ஒன்பது நாற்பத்தி ஐந்தில் இருந்தே காணொளியை ஓட விடச் சொன்னான்.
சரியாகப் பத்து மணி நான்கு நிமிட மணி துளிகளில் சாலையில் ஒரு ஆம்னி வேன் ஆம்புலன்ஸ் வெகு வேகத்தில் விரைந்து சென்றது.
“ஸ்டாப்! ஸ்டாப்!” என்று அந்த இடத்தை நிறுத்த சொன்ன ஜெகன், அதை மீண்டும் ஸ்லோவாக ஓட விடச் சொன்னான்.
மெதுவாகக் காணொளியை ஓட விட்டு ஆராய்ந்து பார்த்து, “பின்னாடி இருக்குற நம்பரை நோட் பண்ணுங்க செந்தில்…” என்று கான்ஸ்டபிளுக்கு உத்தரவிட்டான்.
பின்பு பக்கவாட்டிலும் பின்புறத்திலும் மருத்துவமனை பெயர் எதுவும் தெரிகிறதா என்று ஆராய, சிவப்பு நிறத்தில் வெறும் கூட்டல் குறி தவிர வேற எதுவும் இல்லாததைக் கண்டு புருவத்தைச் சுருக்கினான்.
மீண்டும் காணொளியை ஓட விட்டு, வேன் திரும்பி வரும் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.
சரியாகப் பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் வேன் திரும்பி வர, மீண்டும் மெதுவாக ஓட விடச் சொன்னான்.
ஒரு கட்டத்தில் காணொளியை நிறுத்தி வேனை ஆராய்ந்து கொண்டே “கவனிச்சியா ஜனா?” என்று கேட்டான்.
“யெஸ் ஜெகா, போகும் போது ஒருத்தன் தான் இருந்தான். ஆனா திரும்பி வரும் போது முன்னாடி ஒருத்தன், பின்னாடி ஒருத்தன்னு இரண்டு பேர் இருக்காங்க…”
“அதே தான்! அப்போ ஏற்கனவே வினயா வீட்டில் ஒருத்தன் இருந்திருக்கிறானா என்ன? யார் அவன்?” என்று கேட்டான் ஜெகவீரன்.