பிழையில்லா கவிதை நீ – 8

அத்தியாயம் – 8

சிகரெட் தடயங்களைக் காட்டி, வினயா காதலனுடன் ஓடிப் போயிருக்க மாட்டாள் என்று ஜெகவீரனிடம் வாதாடினாலும், ஜனார்த்தனிக்கும் அதே எண்ணம் உள்ளூர இருந்து கொண்டுதான் இருந்தது.

சிகரெட் பிடித்த நபர் வினயாவின் வீட்டிற்கு, அவள் காணாமல்போன அன்று தான் வந்திருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லையே?

அதற்கு முன்பே வந்திருக்கலாமே? அதுவும் வீட்டிற்குள் சர்வசாதாரணமாக வந்து செல்லும் உறவினர் என்றால் சிகரெட் கிடந்தது சாதாரண விஷயம் தானே?

சிகரெட் தடயத்தை மட்டும் புறம் தள்ளிவிட்டால், மற்ற அனைத்து ருசுவும் சேர்ந்து வினயா காதலுக்காக வீட்டை விட்டுச் சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தான் அவளுக்கும் உள்ளூர தந்து கொண்டே இருந்தது.

ஆனால் இப்போது ஜெகவீரன் வெளிப்படையாகச் சொன்னதும், ஜனார்த்தனி உள்ளுக்குள் நினைத்துக் கொண்டதுமான ‘வினயா காதலனுடன் சென்றிருக்கலாம்’ என்பதற்கு அர்த்தமே இல்லாமல் ஆகியிருந்தது.

ஜனா கடைக்காரரிடம் பரத்தைப் பற்றி விசாரிக்க, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பரத் தம்பியைப் பார்த்தேன்…” என்ற அவரின் பதிலில் வெளிப்படையாகவே அதிர்ந்தவள் “அப்படியா?” என்று கேட்டாள்.

அதே நேரம் மேலே சற்று நேரத்திற்கு முன்னர்தான் வாங்கியிருந்த உணவு பொட்டலங்கள் பிரித்து நடுஅறையில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து தெளிந்திருந்தான் ஜெகவீரன்.

“என்ன செந்தில், பையன் இங்கே தான் இருக்கான் போல… பார்சல் இப்ப வாங்கியது போல இருக்கு. ஆனா கால்வாசி கூடச் சாப்பிடாமல் அப்படியே வேற இருக்கு…” என்று கான்ஸ்டபிளிடம் யோசனையுடன் கேட்டான்.

“ஆமா சார்… இப்ப வாங்கிய பார்சல் போலத் தான் இருக்கு…” என்று செந்தில் சொல்லவும் தலையசைத்த ஜெகவீரன் மேலும் அறையை நோட்டமிட்டான்.

அவனின் பார்வை வட்டத்தில் அங்கிருந்த சூட்கேஸ் விழ, அதனருகில் சென்றான்.

சூட்கேஸ் முழுமையாகப் பூட்டப்படாமல் லேசாகத் திறந்திருந்தது. அதைக் கண்டவன் “இதைத் திறங்க செந்தில்…” என்று கான்ஸ்டபிளுக்கு உத்தரவிட்டான்.

அவர் திறக்கவுமே அங்கிருந்த பேருந்து பயணச்சீட்டு தான் முதலில் கண்களில் பட்டது.

கான்ஸ்டபிள் அதை எடுத்து ஜெகவீரனிடம் தர, அதிலிருந்த விவரத்தைப் படித்துப் பார்த்தவனின் விழிகள் வியப்பைப் பிரதிபலித்தன.

அது புதன்கிழமை இரவு பதினொரு மணிக்குக் கோயம்பேட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்திற்கு எடுக்கப்பட்ட பயணச்சீட்டு. அதுவும் இரண்டு பேருக்கான பயணச்சீட்டு.

“புதன் இரவில் இருந்து வினயாவைக் காணோம். அன்னைக்கு நைட் பதினொரு மணிக்குச் சேலம் போக இரண்டு பேருக்கான பஸ் டிக்கெட் பரத்திடம் இருக்கு‌. இதற்கு என்ன அர்த்தம்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன், “வேற எதுவும் பெட்டியில் இருக்கா செந்தில்?” என்று கேட்டான்.

“துணிமணி தான் சார் இருக்கு. வேற எதுவும் இல்லை…” என்றார்.

மேலும் சில மணித்துளிகள் கடந்து சென்றன.

அந்தச் சிறிய அறையில் இருந்த ஒரு அலமாரி, படுக்கை, பெட்டி அனைத்தும் ஒன்று விடாமல் ஆராயப்பட்டன.

அந்தப் பயணச்சீட்டு தவிர வேறு எதுவும் அக்காவலர்களுக்குக் கிடைக்கவில்லை.

வீட்டு உரிமையாளரிடமும் ஒரு தகவலும் பெயராமல் போக, ‘பரத் இப்போது எங்கே?’ என்ற கேள்வியுடன் நின்ற பொழுதில் ஜெகவீரனின் அலைபேசி அழைத்தது.

எடுத்து யார் எனப் பார்க்க, ஜனா தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

“யெஸ் ஜனா…” என்று அழைப்பை ஏற்றான்.

“ஹலோ இன்ஸ்பெக்டர். நீங்கள் தற்சமயம் தேடிக் கொண்டிருக்கும் நபர் இப்போது என் கஸ்டடியில் இருக்கிறார். அவரை நல்லபடியாக உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் உடனே உங்கள் காருக்கு வரவும்! இல்லையென்றால்…” என்று வில்லிக் குரலில் ஜனா பேசியதைக் கேட்டு, நொடிப்பொழுது குழம்பியவன் முகம் அடுத்த நொடிப் பிரகாசமாக ஜொலித்தது.

“ஹேய் ஜனா… பரத் கீழே தான் இருக்கானா? இதோ வந்துட்டேன்…” என்று பரபரப்பாகச் சொன்னவன் அதே வேகத்தில் கீழே விரைந்தான்.

கீழே காவல் வாகனத்தில் மூன்று நாட்கள் மழிக்கப்படாத தாடியுடனும், சோகத்தைப் பிரதிபலித்த கண்களுடனும், போலீஸ் தன்னைத் தேடி வந்ததில் ஏற்பட்ட பயமுமாகக் காணக் கிடைத்தான் பரத்.

தானும் வண்டியில் ஏறியவன், “பரத்…?” அவன் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டான் ஜெகவீரன்.

“அதோ அந்தக் கடைக்காரரின் மூலம் கன்பார்ம் பண்ணிக்கிட்டேன். பரத் தான்! அவர்கிட்ட தான் பரத் பத்தி விசாரிச்சுட்டு இருந்தேன். அப்போ தான் பரத் வந்தார். உடனே இங்கே காருக்குத் தள்ளிட்டு வந்துட்டேன்…” என்று உறுதிப்படுத்தினாள் ஜனார்த்தனி.

“வினயா எங்கே பரத்?” அழுத்தமாக விசாரணையை ஆரம்பித்தான் ஜெகவீரன்.

“வி…வினு… வினுவுக்கு என்னாச்சு? வினுவைத் தேடியா வந்திருக்கீங்க?” என்று உச்சக்கட்ட அதிர்ச்சியை உள்வாங்கியவன் போல் கண்களை விரித்து, முகம் வெளிறிப் போய்த் திணறலுடன் கேட்டான் பரத்.

“வினயாவைச் சேலத்துக்குக் கூட்டிட்டுப் போன நீ தான் அவளுக்கு என்னாச்சுனு சொல்லணும்…” என்று கடுமையாகக் கேட்டான் ஜெகவீரன்.

“சா…சார்… என்ன சொல்றீங்க? நான் வினுவைக் கூட்டிட்டுப் போகலை…” என்று பயத்துடன் அலறினான் பரத்.

“பொய்ச் சொல்லாதே பரத்! நீ வினயாவைச் சேலம் கூட்டிட்டுப் போனதுக்கான ஆதாரம் இதோ…” என்று அவன் அறையில் எடுத்த பயணச்சீட்டை பரத்தின் முகத்திற்கு நேராக எடுத்து நீட்டினான்.

“சொல்லு… வினயா எங்கே? அவளைச் சேலத்துக்குக் கூட்டிட்டுப் போய்ட்டு நீ மட்டும் எப்போ சென்னைக்குத் திரும்பி வந்த? வினயா சேலத்தில் தான் இருக்காளா? இல்லை வேற எங்கேயும் ஒளிச்சு வச்சுருக்கியா?” என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினான்.

“சா… சார்… எ… என்ன சார்… என்னென்னவோ கேட்குறீங்க? வினுவைக் காணோம்னு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும் சார். அய்யோ! என் வினுவுக்கு என்னாச்சு?” என்று பதட்டத்துடன் புலம்பினான் பரத்.

அவனிடம் உண்மையான பதட்டம் தெரிந்தது. கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன.

“அப்போ வினயாவை நீ அழைச்சுட்டுப் போகலையா?” அவனைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டான் ஜெகவீரன்.

“இல்லை சார்…”

“அப்போ இந்த டிக்கெட் யாரோடது?”

“என்னோடது தான் சார். நான் தான் எடுத்தேன்…”

“அப்போ நீ புதன்கிழமையன்று சேலம் போனாயா? என்னைக்குத் திரும்பி வந்த? வினயா எங்கே? கடைசியா வினயாகிட்ட எப்போ பேசின? இரண்டு பேருக்கு டிக்கெட் வாங்கியிருக்க. அப்போ உன் கூட வந்த இன்னொரு நபர் யார்?”

“இந்த டிக்கெட் எனக்கும், வினுவுக்கும் தான் வாங்கினேன் சார். ஆனா வினு அன்னைக்கு வரலை. நானும் சேலம் போகலை…”

“என்ன சொல்ற? அப்போ அன்னைக்கு இரண்டு பேரும் சேலம் போறதா இருந்தீங்களா?”

“ஆமா சார்….”

“அது எப்போ போட்ட பிளான்?”

“பிளான் எல்லாம் எதுவும் இல்லை சார். சடர்னா எடுத்த முடிவு…”

“யார் எடுத்த முடிவு…”

“வினு தான் சார்…”

“ஏன்? எதுக்கு அப்படி ஒரு அவசர முடிவு?”

“வினுவோட அம்மா தான் காரணம் சார்…”

“என்ன? மிசஸ் கஸ்தூரிக்கு உங்க காதல் பற்றித் தெரியுமா?”

“தெரியும் சார்…”

“ஓ…!”

“அவங்க தான் வினுவை வீட்டை விட்டுப் போகும் முடிவை எடுக்க வச்சாங்க சார். ஆனா வினு வர்றேன்னு சொல்லிட்டு வரலை…”

“வரலையா? ஏன்?”

“அதுதான் எனக்கும் தெரியலை சார்… பதினொரு மணி பஸ்ஸுக்கு டிக்கெட் எடுத்தேன். அவளுக்கும் இன்பார்ம் பண்ணினேன். வந்துடுறேன்னு சொன்னாள். ஆனா வினு வரலை. பன்னிரெண்டு மணி வரை அங்கேயே வெயிட் பண்ணினேன். ஆனா வினு வரவே இல்லை சார்…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு ஜெகனும், ஜனாவும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள்.

“வினயா உன் கூட வர்றேன்னு சொல்லிட்டு வரலைன்னு சொல்ற. ஆனா இப்போ வினயாவைக் காணோம்னு அவளோட அப்பா சேதுராமன் கம்ளைண்ட் கொடுத்திருக்கிறார். வினயா காணாமல் போனதே உனக்குத் தெரியலைன்னு சொல்ற. உங்க விஷயத்தில் மிசஸ் கஸ்தூரி என்ன செய்தாங்க? புதன்கிழமை நைட் என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு…” என்றான் ஜெகவீரன்.

“நானும், வினயாவும் கடந்த ஐஞ்சு மாசமா லவ் பண்றோம் சார். படிப்பு, வசதி எல்லாத்துலயும் என்னை விட வினயா உயர்ந்த இடம் தான். அவள் படிச்சிருக்கிற படிப்புக்குப் பெரிய கம்பெனிகளிலேயே வேலை கிடைக்கும். ஆனால் அவளுக்கு டீச்சிங் பிடிச்சிருந்தது. வேலைக்கு வந்ததே ஒரு பொழுதுபோக்குக்காகத் தான் வர்றதா சொல்லுவாள்.

அவங்க அப்பா வெளிநாட்டில் வேலை செய்வதால் அவருக்கு நல்ல சம்பளம். அதனால் வசதியும் ஓரளவு உண்டு. ஆனால் நான் அப்படி இல்லை. நான் கவர்மெண்ட் வேலைக்காக இன்னும் படிச்சுக்கிட்டுத் தான் இருக்கேன். என்னோட அப்பாவும், அம்மாவும் ஊரில் கொஞ்சமா இருக்குற நிலத்தில் விவசாயம் பார்த்துப் பொழைப்பை நடத்துக்கிறார்கள்.

எங்க காதல் விஷயம் வினுவோட அம்மாவுக்குத் தெரிய வந்தப்ப, அவங்க எதிர்ப்புத் தெரிவிக்க, எங்க இரண்டு பேருக்கு‌ இடையே இருக்கும் படிப்பு, வசதி ஏற்றத்தாழ்வே போதுமானதாக இருந்தது. பதினைந்து நாட்களுக்கு முன்னாடி தான் அவங்களுக்கு எங்க காதல் பற்றித் தெரியும். தெரிந்ததில் இருந்து வினுவுக்கும், அவ அம்மாவுக்கும் பிரச்சினை தான். என்னை மறந்துட்டு அவங்க வசதிக்கும் மேலான ஒரு பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லியிருக்காங்க.

ஆனா வினு நான் தான் வேணும்னு உறுதியா இருந்தாள். அன்னைக்குப் புதன்கிழமை அவங்க சொந்தக்காரங்க ரிசப்ஷனுக்குப் போகலாம்னு கூட்டிட்டுப் போய்ட்டு அங்கே வச்சு ஒரு பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு மறைமுகமா வினுவைப் பொண்ணு பார்க்கும் படலத்தை நடத்திருக்காங்க. அந்த விஷயம் வினுவுக்குத் தெரிய வந்து அவளுக்கு ரொம்பக் கோபம். அதனால் அவங்க அம்மா கூடச் சண்டை போட்டுருப்பா போல.

ஒரு கட்டத்தில் ‘நான் இந்த வீட்டில், உங்க கட்டுப்பாட்டில் இருக்கிறதால் தானே எனக்கே தெரியாம பொண்ணு பார்க்கிற அளவுக்குப் போனீங்க… அதனால் நான் என் மனசுக்குப் பிடிச்சவன் கூடவே போய்டுறேன்’ என்று சொல்லிட்டு, உடனே எனக்குப் போன் போட்டு வீட்டில் நடந்ததைச் சொல்லி என்னை உடனே கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னாள்.

எனக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்காத போது எப்படிக் கல்யாணம் பண்ண? அதனால் கொஞ்ச நாள் பொறுத்துக்கோனு சொன்னேன். ஆனால் அவள் கேட்கலை. இப்போ நீயும் என்னைக் கூப்பிட்டுப் போகலைனா நான் உனக்கும் தெரியாமல் எங்கயாவது காணாமல் போயிருவேன். என்னால் கண்டவன் முன்னால் எல்லாம் பொண்ணுன்னு நிக்க முடியாது. அதனால் நான் சொல்றதைக் கேளுன்னு அடம் பிடிச்சாள்.

கண் காணாமல் எங்கயாவது போயிருவேன்னு வினு சொன்னதும் எனக்குப் பதறிப் போயிருச்சு. அதனால் என்ன ஆனாலும் சரின்னு அவளை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லிட்டேன். பணம், வசதினு இல்லைனாலும் அம்மா, அப்பாவுக்கு என் விருப்பம் தான் அவங்க விருப்பமும். அதனால் வினுவைக் கூட்டிட்டு ஊருக்கே போயிடலாம்.

அங்கே போய் அப்பா, அம்மா என்ன சொல்றாங்களோ அடுத்து அதன் படி பண்ணிக்கலாம்னு நினைச்சுத் தான் சேலத்துக்குக் கிளம்பத் தயாரானேன். வினுவுக்கு அந்தத் தகவலைச் சொன்னேன். அவள் உடனே நீங்க கிளம்பிக் கோயம்பேடு போய்டுங்க. நானும் அங்கே வந்துடுறேன்னு சொன்னாள். இல்லை உன் வீட்டுப் பக்கத்தில் வந்து நான் உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்னு சொன்னேன்.

ஆனா அவள் அதையும் கேட்கலை. நீங்க முதலில் போய் டிக்கெட் வாங்கி ரெடியா இரு. இங்கே நான் கிளம்பக் கொஞ்ச நேரமாகும்னு சொன்னாள். மேலே நான் சொல்ற எதையும் அவள் கேட்க தயாராயில்லை. அதனால் அவளை நேரா கோயம்பேடு வரச் சொல்லிட்டு நான் முன்னாடி போய் அங்கே டிக்கெட் எடுத்துட்டு வெயிட் பண்ணினேன். ஆனா பஸ் கிளம்பிப் போன பிறகும் வினு வரலை…”

“கடைசியா வினயாகிட்ட எப்போ போனில் பேசின?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“நான் கடைசியா அவள்கிட்ட ஒன்பது மணி போலப் போன்ல பேசினேன் சார்…”

“அதுக்குப் பிறகு பேசவே இல்லையா?”

“இல்லை சார். அதுக்குப் பிறகு நான் போட்ட எந்தப் போனுக்கும் பதில் இல்லை. அதனால் வாட்சப்புக்கு மெசேஜ் அனுப்பினேன்…”

“அதுக்குப் பதில் அனுப்பினாங்களா?”

“அதுக்கும் பதில் இல்லை சார். ஆனா என் மெசேஜ் எல்லாத்தையும் பார்த்ததுக்கு அடையாளமா இரண்டு டிக் இருந்தது. ஒருவேளை போனில் பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள் போலனு நினைச்சு மெசேஜ் மட்டும் அனுப்பிட்டே இருந்தேன். ஆனால் பஸ் கிளம்பும் நேரத்தில் அப்படி இருக்க முடியாம போன் போட்டேன். ஆனா போன் நாட் ரீச்சபிள்னு வந்தது. அதுக்குப் பிறகு அனுப்பிய மெசேஜையும் அவள் பார்க்கவே இல்லை. எனக்கு என்ன செய்றதுனே தெரியலை…”

“வினயாவைத் தேடி வீட்டுக்குப் போனீங்களா?” என்று இப்போது ஜனா கேட்டாள்.

“கோயம்பேட்டில் இருந்து நேரா அங்கே தான் போனேன்…”

“அப்போ எத்தனை மணி இருக்கும்?”

“ஒன்னு… ஒன்றரை இருக்கும்…”

“அங்கே வினயா பற்றி ஏதாவது தெரிந்ததா?”

“இல்லை… அவளோட வீட்டுப் பக்கமே ரொம்ப நேரம் சுத்திச் சுத்தி வந்தேன். ஆனா ஒண்ணுமே தெரியலை. வீட்டுக் கதவை அந்த நேரத்தில் தட்டவும் யோசனையா இருந்தது. ஒருவேளை அவளோட அம்மா வீட்டுக்குள் அவளைச் சிறை வச்சுட்டாங்க போலனு தான் தோணுச்சு. அடுத்து என்ன செய்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியலை. பித்துப் பிடிச்சது போல அந்த வீட்டுப் பக்கமே சுத்திட்டுக் காலையில் வருவோம்னு கிளம்பிட்டேன்…”

“காலையில் போனீங்களா?”

“காலையில் மட்டும் இல்லை. வியாழன் சாயந்தரமும் போனேன். இரண்டு தடவை கதவைக் கூடத் தட்டினேன். யாருமே வந்து கதவைத் திறக்கலை. மூணாவது முறை தட்டும் போது கதவு திறக்கலை. ஆனா ஜன்னல் பக்கம் நின்னுட்டு வினுவோட அம்மா என்னையே முறைச்சுப் பார்த்துட்டு இருந்தாங்க…”

“அவங்களுக்கு நீ தான் வினயாவோட லவ்வர்னு தெரியுமா? உன்னை அதுக்கு முன்னாடி பார்த்து இருக்காங்களா?” என்று ஜெகன் கேட்டான்.

“தெரியும் சார். முதல் தடவை எங்க இரண்டு பேரையும் ஒரு கடையில் சேர்ந்து பார்த்துட்டுத் தான் அவங்களுக்கு வினு என்னை லவ் பண்ற விஷயமே தெரியும்…”

“ஜன்னல் வழி பார்த்தப்ப கஸ்தூரி பேசினாங்களா?”

“இல்லை சார்… கண்ணைக் கூடச் சிமிட்டாம ஒரு மாதிரி முறைச்சுட்டே இருந்தாங்க. நான் தான் வினயாவை எங்கேனு கேட்டேன். அவளை அடைச்சு வச்சுருந்தா விட்டுருங்க ப்ளீஸ்னு கெஞ்சினேன். அதுக்கும் அதே பார்வை தான். அப்புறம் உள்ளே போய்ட்டாங்க. கதவைத் தட்டிப் பார்த்துட்டு ஒன்னும் பலன் இல்லைனு திரும்பி வந்துட்டேன்…”

“வினயாவோட அப்பா ஊரில் இருந்து வந்திருப்பது உனக்குத் தெரியுமா?”

“தெரியாது சார். இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும். நிஜமாவே வினயாவைக் காணோமா சார்? அப்போ அவங்க அவளை அடைத்து வைக்கலையா?” என்று கலங்கிய விழிகளுடன் கேட்டான்.

அவனிடம் சேதுராமன் வந்ததிலிருந்து நடந்ததைச் சொல்ல, காணாமல் போன காதலியை நினைத்துக் குலுங்கி அழ ஆரம்பித்தான் பரத்.

“நான் ஒரு கோழை சார். அன்னைக்கு நைட்டே வினயா வீட்டுக்கதவை நான் தட்டியிருக்கணும். இல்லைனா அவள் தனியா வர்றேன்னு சொன்னப்ப அப்படியே விடாம நான் போய்க் கூட்டிட்டு வந்திருக்கணும். முட்டாள்தனம் பண்ணிட்டேன். இப்போ என் வினு எங்கே இருக்காளோ? அவளுக்கு என்னாச்சோ?” என்று தலையில் அடித்துக் கொண்டே புலம்பி அழுதான்.

அவனிடம் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து நீட்டினாள் ஜனார்த்தனி.

அவர்கள் இப்போது இருந்தது காவல் நிலையத்தில்.

வண்டியில் ஏறியதுமே காவல் நிலையத்திற்கு வாகனத்தை விடச் சொல்லியிருந்தான் ஜெகவீரன்.

“தண்ணியை வாங்கிக் குடி பரத். இது அழுவதற்கான நேரமில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன் வரை வினயா உன் கூட வீட்டை விட்டுப் போயிருக்கலாம்னு எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா இப்போ விஷயம் சீரியஸா போய்ட்டு இருக்கு. நீ இங்கே இருக்க. வினயாவைக் காணோம். வீட்டை விட்டுக் கோயம்பேடு போற வழியில் எதுவும் நடந்ததானு தெரியலை…” என்று ஜெகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பரத்தின் கண்ணீர்க் கூடியதே தவிரக் குறையவில்லை.

“ரிலாக்ஸ் பரத்…” என்ற ஜனா அவன் தண்ணீரைக் குடித்து அழுகையை அடக்கிய பிறகு தான் அவனை விட்டாள்.

“உங்களுக்குச் சிகரெட் பிடிக்கிற பழக்கம் இருக்கா பரத்?” என்று கேட்டாள்.

அவன் வினயாவின் வீட்டைச் சுற்றி வந்தான் என்று சொல்லவும் ஜெகனிற்கும் அந்தச் சந்தேகம் இருந்தது.

“இல்லைங்க… சிகரெட், தண்ணின்னு எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. என் வினுவுக்கு என்கிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயமும் அது தான்…” என்றவன் குரல் காதலியை எண்ணி ஏற்பட்ட கலக்கத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

அவன் சொன்னதைக் கேட்டு, ஜனாவும், ஜெகனும் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள்.

‘நம் கண்களுக்குப் புலப்படாத மூன்றாம் நபர் ஒருவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்’ என்று இருவரின் கண்களும் ரகசியமாகச் சொல்லிக் கொண்டன.