பிழையில்லா கவிதை நீ – 7
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 7
“உங்க ஐடி கார்ட் பார்த்துப் பத்துச் சதவீதம் கொடுத்தேன்…”
“பீச்ல நான் உங்களோட வொய்ப் என்று சொல்லிக் கலாட்டா செய்தப்ப, கோபப்பட்டாலும், சுற்றியுள்ள சூழ்நிலையை ஆராய்ந்து, சரியாக நோட் பண்ணி என்னைக் கண்டுபிடிச்சதுக்கு இருபத்தி ஐந்து சதவீதம்…”
“காஃபி ஷாப்லயும், பப்புலேயும் என்னைச் சரியாக அடையாளம் கண்டுபிடிச்சு, அது ஒரே ஆளாகத் தான் இருக்க முடியும்னு நினைச்சதுக்கும், என்னைப் பற்றி விசாரித்துச் சரியாக என் பேர், வேலை எல்லாம் கண்டுபிடிச்சதுக்கும் பதினைந்து சதவீதம்…”
“பப்புக்கு கமிஷ்னர் சொல்லி வந்தாலும், எது நியாயமோ அதுக்குத் தகுந்த மாதிரி பேசியதும், கூழைக் கும்பிடு போடாமல், அந்தச் சுனில் கிட்ட நீ சொல்லிக் கமிஷ்னர் மூலமாக வந்ததால் உனக்கு நான் வளைஞ்சு போக முடியாதுன்னு கெத்தா நின்னதுக்கு இருபத்தி ஐந்து சதவீதம்…”
“இது தான் நான் உங்களுக்குக் கொடுத்த எழுபத்தி ஐந்து சதவீதம் மார்க்கின் விளக்கம். சொல்லிட்டேன், போதுமா? இதுக்கு எதுக்கு என்னை மெனக்கெட்டு உங்க வண்டியில் இழுத்துட்டு வர்றீங்க ஜெகா?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.
மறுநாள் காலை ஒன்பது மணி. மீண்டும் காவல் வாகனப் பயணம் தான்.
இப்போது செல்வதோ வினயா வேலை பார்க்கும் சக்தி கம்ப்யூட்டர் சென்டரை நோக்கி.
முதல் நாள் கஸ்தூரியைப் பற்றிய பேச்சில் இருவரும் முறைத்துக் கொண்டே தங்கள் பேச்சை முடித்திருந்தாலும், காலையில் மீண்டும் முதல் வேலையாகக் கஸ்தூரியைப் பார்க்கத் தான் இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
இரவு தூங்கி எழுந்து கஸ்தூரி அமர்ந்திருக்க, ஜனா மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தாள். கஸ்தூரியிடம் எந்த வித மாற்றமும் இல்லை.
கஸ்தூரியின் மீது சந்தேகம் இருந்ததால் அன்றே ஒரு கான்ஸ்டபிளை அங்கே காவலுக்கு வைத்து விட்டுத் தான் சென்றான் ஜெகவீரன். காலையில் அவரை மாற்றி விட்டு இன்னொரு காவலரைக் காவலுக்கு வைத்து விட்டு வெளியில் இருந்தே கஸ்தூரியைப் பார்த்தான்.
மருத்துவர் கஸ்தூரிக்கு அதிக அதிர்ச்சியில் நெஞ்சுவலி வர வாய்ப்புள்ளது என்று சொன்னதால் அவன் அவ்விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
‘கஸ்தூரியும் எதுவும் பேசும் நிலையில் இல்லாத போது, எதற்குத் தேவையில்லாத ரிஸ்க்?’ என்று அவரை விட்டுவிட்டான்.
ஆனால் அவனின் சந்தேகத்தில் மட்டும் சிறிதும் மாற்றமில்லை. அதனால் அவரின் நடவடிக்கையில் எதுவும் வித்தியாசம் தெரிகிறதா? ஒருவேளை பிரமை பிடித்தது போல் நடிக்கிறாரா? என்பதைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் படி கான்ஸ்டபிளுக்கு உத்தரவிட்டிருந்தான்.
காவலரின் கண்காணிப்பிலேயே இருந்தார் கஸ்தூரி.
அதை ஜனார்த்தனியும் உணர்ந்தாலும், காவலர்களின் நடவடிக்கையில் அவள் தலையிடவில்லை.
வினயாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தானாக மூக்கை நுழைத்துக் கொண்ட கேஸ். அப்படியிருக்க, மொத்தமாக எங்கே ‘எங்கள் விஷயத்தில் தலையிடாதே!’ என்று ஜெகன் சொல்லி விடுவானோ என்று நினைத்தவள் ஓரளவு ஒதுங்கியே இருந்தாள்.
அவளுக்குத் தேவை வினயா! அவள் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்! அவளை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மட்டும் பார்ப்போம் என்று நினைத்தவள் அதற்கான வேலையைச் செய்ய மட்டும் முடிவெடுத்திருந்தாள்.
அதனால் அவளும் அன்று சக்தி கம்ப்யூட்டர் சென்டர் செல்வதாக இருந்தாள்.
கஸ்தூரியைப் பார்த்து விட்டு வெளியே வந்த ஜனாவை ‘தான் சக்தி கம்ப்யூட்டர் சென்டருக்குச் செல்வதாகவும், நீயும் கூட வா’ என்றும் தானே அவளைக் காவல் வாகனத்தில் வரச் சொல்லி அழைத்துச் சென்று கொண்டிருந்தான் ஜெகவீரன்.
இதற்கிடையே வினயாவைக் கண்டுபிடிக்கச் சில நடவடிக்கைகள் எடுத்திருந்தான். இரவே அனைத்து செக் போஸ்ட்டுக்கும் வினயாவின் புகைப்படம் விநியோகிக்கப்பட்டிருந்தது. அவளின் கைபேசி எண்ணை வைத்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரிக்கச் சொல்லியிருந்தான்.
ஏற்கனவே சேதுராமன் விசாரித்திருந்தாலும் காவல்துறையின் சார்பாக, வினயாவின் நண்பர்களிடம் அலைபேசி மூலமாக விசாரணை நடத்தியிருந்தான்.
அந்த நண்பர்களிடம் பேசிய வரை வினயாவிற்குக் காதல் இருந்தது போல் எதுவும் தகவல் இல்லை.
ஆனால் சக்தி கம்ப்யூட்டர் சென்டரின் உரிமையாளர் சக்திவேல் சொன்ன தகவல் மட்டும் ஒரு புதிய தகவலாக இருந்தது.
அதை விசாரிக்கத்தான் சென்று கொண்டிருந்தான்.
தேடுதல் ஒரு புறம் நடந்தாலும், ஜனார்த்தனியுடன் இருக்கும் நேரத்தையும் அதிகமாக்கி கொண்டிருந்தான் ஜெகவீரன்.
அவளின் கலகலப் பேச்சும், துடிப்பான செயலும், அவளிடம் இருக்கும் நிமிர்வும் என அனைத்தும் சேர்ந்து அவனைக் கொஞ்ச கொஞ்சமாக அவளின் புறம் இழுத்துக் கொண்டிருந்தன.
காரில் ஏறி அமர்ந்ததுமே எழுபத்தி ஐந்து சதவிகிதத்திற்குத் தான் முதலில் விளக்கம் கேட்டான்.
இந்த முறை அவனை ஏமாற்றாமல் விளக்கம் சொல்லிவிட்டு, “சொல்லிட்டேன், போதுமா?” என்று கேட்டவளை அவனின் கண்கள் ஆர்வத்துடன் பார்த்தன.
“என்ன போதாதா?” அவனின் பார்வையைப் பார்த்துக் கேட்டாள்.
“எப்போ நூறு சதவீதம் என்னைப் போலீஸா ஏத்துக்குவனு பார்க்கிறேன்…” என்றான்.
“வினயாவைக் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம்…” என்றாள்.
“ஏன்? அப்படி என்ன ரூல்ஸ்?”
“ரூல்ஸ் எல்லாம் இல்லை. ஒரு சேலஞ்ச் போல வச்சுக்கங்களேன்…” என்றாள்.
“ஓகோ! இந்தக் கேஸ் நான் எப்படி நடத்துறேன்னு பார்த்துட்டு அப்புறமா என்னை முழுப் போலீஸா ஏத்துப்பிங்களோ?” என்று கேட்டான்.
“அப்படித்தான்!” இலகுவாகவே ஒத்துக்கொண்டாள்.
“ஓகே… உன்னோட சேலஞ்சை ஏத்துக்கிறேன்…” என்றான்.
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ஜெகா?” என்று வேறு பேச்சிற்குத் தாவினாள் ஜனார்த்தனி.
“என்ன விஷயம் ஜனா? எதைப் பற்றிக் கேட்குற?”
“வினயா பற்றித் தான்!”
“வினயா பற்றி என்ன?”
“நீங்க சந்தேகப்பட்டது போல வினயா யாரையோ காதலிக்கிறாள்னு நினைக்கிறேன்…” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“இது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் சக்திவேல்கிட்ட பேசினாயா?” என்று கேட்டான்.
“இல்லை, வேற ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன்…”
“யார்கிட்ட? எப்போ?”
“நேத்து நைட் சக்தி கம்ப்யூட்டர் சென்டர்ல வினயா கூட வேலை பார்க்கிறவங்களை விசாரிக்க நினைச்சேன். அதுக்கு முதலில் சக்தி கம்ப்யூட்டரில் யார் யார் வேலை செய்றாங்கனு முதலில் தெரிஞ்சுகிட்டேன்.
அது ஆறு மாத கோர்ஸ், ஒரு வருஷ கோர்ஸ்னு சொல்லித்தரும் கம்ப்யூட்டர் சென்டர். அங்கே மொத்தம் வினயாவைச் சேர்த்து மூணு டீச்சர். வினயா, சுவாதினு இரண்டு லேடீஸ். பரத்னு ஒரு ஜென்ட்ஸ். நாலாவதா சக்திவேலும் கூடச் சொல்லித் தருவாராம்.
அந்தச் சுவாதியைத் தான் என் விசாரணைக்கு அவள் வீட்டைக் கண்டுபிடிச்சி போய்ப் பிடிச்சேன். சுவாதி மூலம் எனக்குக் கிடைச்ச தகவல் பரத்தும், வினயாவும் கொஞ்சம் குளோஸா பழகுவாங்களாம். ஆனா இரண்டு பேரும் பிரண்ட்ஸா தான் பழகுறோம்னு சொல்லுவாங்களாம். ஆனா அங்கிருக்கும் எல்லோருக்குமே பார்க்க லவ்வர்ஸ் போலத் தான் தெரியுமாம். அப்படித்தான் அவங்க பழகுற விதம் இருக்கும்னு சொன்னாங்க. அடுத்து பரத் பற்றி விசாரித்தேன்…”
“அவனும் இரண்டு நாளா கம்ப்யூட்டர் சென்டருக்கு வரலை. லீவும் சொல்லலை…” என்று அவளின் பேச்சை முடித்து வைத்தான் ஜெகவீரன்.
“நீங்களும் விசாரிச்சுட்டீங்களா?” என்று கேட்டாள் ஜனா.
“பழைய ஃபிரண்ட்ஸ் விடப் புதுப் ஃபிரண்ட்ஸ் கிட்ட விசாரிக்கிறது தானே இப்போ முக்கியம்? சக்திவேல் மூலமா தெரிஞ்சுகிட்டேன். இன்னைக்குக் கம்ப்யூட்டர் சென்டரில் மேலும் எதுவும் தகவல் தெரியுதான்னு பார்த்துட்டு, அந்தப் பரத் என்ன ஆனான்னு தேடணும். இந்தக் கேஸ் ஒரு பக்கம் லவ் கேஸ் போலத் தெரிந்தாலும், அந்தச் சிகரெட்டும், மிசஸ் கஸ்தூரியின் நடவடிக்கையும் இன்னும் ஏதோ ஒரு பூதம் உள்ளே ஒளிந்து கொண்டு இருப்பதைச் சுட்டிக் காட்டுது…” என்றான்.
“எனக்கும் அப்படித்தான் தோணுது…” என்றாள் ஜனா.
கம்ப்யூட்டர் சென்டர் வந்ததும் நேராக சக்திவேலின் அறைக்குத் தான் சென்றார்கள்.
கான்ஸ்டபிள்கள் வெளியே இருக்க, ஜெகாவும், ஜனாவும் மட்டும் உள்ளே சென்றனர்.
“வாங்க இன்ஸ்பெக்டர் சார். வினயா பற்றி வேற எதுவும் நியூஸ் கிடைச்சுதா?” என்று கேட்டுக் கொண்டே வரவேற்றார் நாற்பது வயதைத் தொட்டிருந்த சக்திவேல்.
“இன்னும் இல்லை மிஸ்டர் சக்திவேல். என்னோட அடுத்த விசாரணை உங்க கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து தான் ஆரம்பிக்குது. இங்கே சிலரை நான் கொஞ்சம் விசாரிக்கணும். அதோட எனக்குப் பரத்தோட அட்ரஸ், டீடைல்ஸ் எல்லாம் வேணும்…” என்றான் ஜெகவீரன்.
“பரத் இந்த ஏரியா தான் சார். மூணு தெரு தள்ளி தான் ஒரு ரூம் எடுத்து தங்கியிருக்கான். சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்திலிருந்து வந்தவன். கவர்மெண்ட் வேலைக்காக எக்ஸாம் எழுதிட்டு இருக்கான். அது போக வேலை கிடைக்கிற வரைக்கும் இங்கே டீச் பண்ணிக்கிட்டு இருக்கான். குணம் என்று பார்த்தால் நல்ல பையன் தான். அவனும் ஏன் இரண்டு நாளா வரலைனு தெரியலை. அவனோட போன் நம்பர் நைட்டு நான் கொடுத்தேனே போன் பண்ணி பார்த்தீங்களா சார்?” என்று கேட்டார் சக்திவேல்.
“பரத் போன் நாட் ரீச்சபிள்னு வருது சக்திவேல். அவரோட அட்ரஸ் கொடுங்க. நான் நேர்ல போய்ப் பார்த்துக்கிறேன்…” என்று அவரிடம் பரத்தின் முகவரியை வாங்கியவன், மேலும் சிறிது நேரம் செலவழித்து அங்கே இருந்தவர்களிடம் வினயாவைப் பற்றி விசாரித்தான்.
ஜனாவை யார் என்று கேட்ட சக்திவேலுக்குத் ‘தன் தோழி’ என்று அறிமுகப்படுத்தினான் ஜெகவீரன்.
அங்கே திருமணம் முடிந்த பெண்கள் சிலர் படிக்க வந்திருக்க, அவர்களிடம் ஜனா பேச்சுக் கொடுத்து வினயா பற்றி விசாரிக்க, ஜெகன் சுவாதியிடம் தன் விசாரணையை நடத்தினான்.
சற்று நேரத்திற்குப் பிறகு மீண்டும் வாகனத்தில் ஏறி பரத் தங்கும் இடத்திற்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
“அங்க படிக்கிறவங்க பார்வையில் கூட வினயாவும், பரத்தும் லவ்வர்ஸ் போல் தான் தெரிஞ்சிருக்காங்க ஜெகா. ரெண்டு பேரும் கண்ணாலேயே பேசிப்பாங்களாம். வீட்டுக்குக் கிளம்பிப் போகும் போதும் ஒன்றாகவே தான் கிளம்பிப் போவாங்களாம். இரண்டு பேரையும் ஜோடியா இந்த ஏரியா பூங்காவில் பார்த்ததாகக் கூட ஒருத்தர் சொன்னார்…” என்றாள் ஜனார்த்தனி.
“ஒருவேளை நான் முன்னாடி சொன்னது போல் வினயாவும், பரத்தும் ஜூட் விட்டுருப்பாங்களோ?” என்று கேட்டான் ஜெகவீரன்.
“ஆமா… நீங்க அதையே பிடித்துத் தொங்குங்க! அப்போ அந்தச் சிகரெட்டுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.
“நீ மட்டும் சிகரெட்டையே பிடித்துத் தொங்கலாமா? என்ன செந்தில் எதுக்குச் சிரிக்கிறீங்க?” ஜனாவிடம் கேள்விக் கேட்டவன், முன்னால் அமர்ந்திருந்த செந்தில் சிரிக்கவும் அவரிடம் கேட்டான்.
“வேற எதுக்குச் சிரிச்சிருக்கப் போறார்? நீங்க என்கிட்ட சின்னப் பையன் போல் சண்டைப் போடுவதைப் பார்த்துச் சிரிப்பு வந்திருக்கும்…” என்று அவருக்குப் பதிலாக ஜனாவே பதிலைச் சொன்னாள்.
“அது சரி… அது என்ன சக்திவேல்கிட்ட என்னை உங்களோட ஃபிரெண்டுனு அறிமுகப்படுத்தினீங்க? நான் உங்களுக்கா ஃபிரண்ட்? வினயாவுக்குத் தானே ஃபிரண்டு?” என்று கேட்டாள்.
“ஏன் வினயாவுக்கு ஃபிரண்டா இருந்தா, எனக்கு ஃபிரண்டா இருக்க மாட்டியா?” என்று உரிமையுடன் கேட்டான் ஜெகவீரன்.
“இல்ல… நான் உங்களுக்கு ஃபிரண்டா இருக்க மாட்டேன்…” என்று பட்டென்று சொன்னாள் ஜனார்த்தனி.
அவள் பதில் சொன்ன விதத்திலும், வேகத்திலும் ஜெகனின் முகபாவனை மாறிப் போனது.
அவனின் மாற்றத்தைக் கண்டாலும் சமாதானமாகக் கூட ஒன்றும் சொல்லாமல் அமைதியாகிப் போனாள் ஜனார்த்தனி.
அதன் பிறகு அங்கே சில நிமிடங்கள் மெளனமே ஆட்சி செய்தது.
பரத்தின் இருப்பிடம் வந்ததும் வண்டியிலிருந்து இறங்கிய ஜெகன் “நீ வர வேண்டாம் ஜனா. இங்கேயே இரு!” என்று அழுத்தமாகச் சொன்னான்.
‘தான் அப்படிச் சொன்னதால் இப்படிச் சொல்கிறானோ?’ என்று அவனின் முகத்தைத் தீவிரமாகப் பார்த்தாள்.
அவன் முகத்தில் முன்பிருந்த இலகுத்தன்மை மறைந்து, பக்கா போலீஸ் தனம் வந்திருந்தது. அதோடு ஒரு வித தீவிரமும் அவனின் முகத்தில் தெரிய, தன்போக்கில் ‘சரி’ என்று தலையசைத்தாள்.
“செந்தில் நீங்க மட்டும் என் கூட வாங்க!” என்று அவரை அழைத்துச் சென்றான்.
அது ஒரு மூன்று மாடிக் கட்டிடம். கீழே கடைகளும், முதல் மாடியில் நான்கு அறைகளும், இரண்டாவது மாடியில் நான்கு அறைகளும் இருந்தன. மூன்றாவது மாடி மட்டும் படிகளுக்குக் கம்பி கேட் போட்டு, பூட்டுப் போட்டுப் பாதுகாப்பு வளையத்திற்குள் மேலே ஒரே வீடாக இருந்தது.
பரத்தின் அறை இரண்டாவது மாடியில் இருந்தது. படிகள் நடுவில் இருக்க, படிகளுக்கு வலது பக்கம் இரண்டு அறைகளும், இடது பக்கம் இரண்டு அறைகளும் இருந்தன.
பரத்தின் அறை வலது பக்கம் இருக்க, அங்கே சென்றார்கள்.
அறைக் கதவில் பெரிய பூட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஜெகன் பக்கத்து அறைகளை நோட்டம் விட்டான். பரத்தின் அறைக்கு அருகில் இருந்த அறையும் வெளியே பூட்டுத் தொங்கியது.
இடது பக்கம் இருந்த இரண்டு அறைகளில் ஒரு அறை மட்டும் வெளியில் பூட்டுத் தொங்காமல் இருக்க, அந்த அறைக்குச் சென்று கதவைத் தட்டினான் ஜெகவீரன்.
சில நொடிகளுக்குப் பிறகு கலைந்த தலையும், தூக்கத்தில் மூழ்கியிருந்த விழிகளும், கையில்லாத பனியனும், பெர்முடாஸுமாகக் கதவைத் திறந்தான் ஒரு இளைஞன்.
காக்கி உடையைப் பார்த்ததும் தூக்கம் சுமந்த விழிகளை அகலமாக விரித்து, தூக்கத்தை விரட்டியவன், “சா… சார்…” என்று அதிர்ந்து அழைத்தான்.
“அந்த நாலாவது ரூம்ல இருக்கும் பரத் பற்றித் தெரியுமா மிஸ்டர்?”
“தெ… தெரியும் சார்…” என்று குளிர் ஜுரம் வந்தவன் போல நடுங்கி வார்த்தைகளை வெளியிட்டான்.
“அவன் ரூம் பூட்டியிருக்கு. அவன் எங்கே போயிருக்கான்னு தெரியுமா?”
“தெ… தெரியாது சார்…”
“கடைசியா பரத்தை நீ எப்போ பார்த்த?”
“ஒருவாரம் இருக்கும் சார். போன சண்டே பார்த்தேன்…”
“அதுக்குப் பிறகு வார நாட்களில் பார்க்கலையா?” அவனைப் பார்வையால் துளைத்துக் கொண்டே கேட்டான் ஜெகன்.
“இல்லை சார்…”
“ஏன்?”
“எனக்கு இந்த வாரம் நைட் டூட்டி சார். காலையில் ஆறுமணிக்கு ரூமுக்கு வந்தா தூங்கி எழுந்துட்டு மதியம் தான் கீழே இறங்கிச் சாப்பிடவே போவேன். சாப்பிட்டுவிட்டு வந்து திரும்பத் தூங்கிருவேன். திரும்ப ஈவ்னிங் டூட்டி கிளம்பிருவேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் பார்க்கலை சார்…” என்றான் நீண்ட விளக்கமாக.
“ஓ! ஓகே… அந்தப் பரத் ஆள் எப்படி?”
“சைலண்டான ஆள் சார். இதுவரை இங்கே அவரால் ஒரு பிரச்சினையும் இல்லன்னு ஹவுஸ் ஓனரே அப்பப்போ பெருமையா சொல்லிட்டுத் திரிவார். இப்போ என்னாச்சு சார், எதுவும் பிரச்சினையா?” ஆரம்பத் தயக்கம் போய் அடுத்தவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான் அவன்.
‘அது எதுக்கு உனக்கு?’ என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தவன் செந்திலின் புறம் திரும்பி, “பேசாம பூட்டை உடைச்சுருவோம் செந்தில்…” என்று சொல்லிக் கொண்டே பரத்தின் அறைபக்கம் நடந்தான்.
“சார்… சார்…” என்று அழைத்துக் கொண்டே அவனின் பின் வந்தான் அந்த அறைக்காரன்.
‘என்ன?’ என்று ஜெகன் விழி உயர்த்திக் கேட்க, “ஹவுஸ் ஓனர் கிட்ட இன்னொரு சாவி இருக்கும் சார்…” என்றான்.
“ஹவுஸ் ஓனர் எங்கே இருக்கார்?”
“மேலே மாடியில் தான் சார்…” என்று அவன் சொல்ல,
“செந்தில் நீங்க போய்ச் சாவியை வாங்கிட்டு வாங்க…” என்று அவரை அனுப்பினான்.
மேலே செல்லும் மாடிப்படிக்குச் செல்ல முடியாமல் கீழே இருந்த கேட்டில் உள் பக்கமாகப் பூட்டியிருக்க, செந்தில் மேலே செல்ல முடியாமல் நின்றார்.
“கேட் பக்கத்தில் காலிங் பெல் பட்டன் இருக்கு சார். அதை அடிங்க…” என்றான்.
அதை அடித்து, மேலிருந்து வீட்டு உரிமைக்காரர் வரவும், அவருக்கு மேலோட்டமாக விவரத்தைச் சொல்லி விட்டுச் சாவியை வாங்கிப் பரத்தின் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்ற ஜெகவீரன், உள்ளே இருந்த பொருட்களைப் பார்த்ததும், நொடிப்பொழுது கண்களில் திகைப்பைக் காட்டினான்.
அதே நேரம் கீழே வண்டியில் சும்மா அமர்ந்திருக்க முடியாமல், வண்டியை விட்டு இறங்கிய ஜனார்த்தனி, அங்கிருந்த கடைகளை நோட்டம் விட்டாள்.
மெதுவாக அந்தக் கடைகளின் பக்கம் நடந்தவள், பின் அங்கிருந்த சின்னப் பேக்கரி கடையின் முன் நின்று, “அண்ணா, இங்கே மேலே பரத்னு ஒருத்தர் இருக்காரே, அவரைத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“ஆமா, பரத் தம்பியைத் தெரியுமே… ஏன் கேட்குற மா? யார் நீ?” என்று கேட்டார்.
“நான் கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து வர்றேன் அண்ணா. என் ஃபிரண்ட் அனுப்பின்…” என்று அவளின் வார்த்தை முடியும் முன் “யார், வினயா பொண்ணா?” என்று குறுக்கிட்டுக் கேட்டார்.
அவரின் கேள்வியில் உள்ளுக்குள் தோன்றிய வியப்பை வெளியே காட்டாமல், “ஆமாண்ணா… நேத்திக்கு இருந்து பரத்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வினயா முயற்சி பண்றாள். ஆனா பரத் போனை எடுக்கலை. அதான் ‘என்னன்னு பார்த்துட்டு வா’னு என்னை அனுப்பினாள். நீங்க பரத்தைப் பார்த்தீங்களா அண்ணா?” என்று அவள் கேட்ட கேள்விக்கு அவரிடம் இருந்து வந்த பதிலில் “அப்படியா?” என்று வெளிப்படையாகவே தன் அதிர்வைக் காட்டினாள் ஜனார்த்தனி.