பிழையில்லா கவிதை நீ – 6

அத்தியாயம் – 6

உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு, ஜன்னல் பக்கம் திரும்பி வெளியே மட்டும் பார்வையை வைத்திருந்த ஜனார்த்தனியைச் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டு வந்தான் ஜெகவீரன்.

மீண்டும் காவல் வாகனப் பயணம்.

வினயாவின் அன்னை கஸ்தூரியைக் காண மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

வினயா பற்றி மேலும் விவரம் சொல்லக் கூடிய ஆள் இப்போது அவர் மட்டுமே என்பதால் அவர் பேச வாய்ப்புள்ளதா என்று தெரிந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்கள்.

மனைவியைத் தனியாக மருத்துவமனையில் விட்டுவிட்டு வந்ததை நினைத்துச் சேதுராமன் வருத்தமாகப் பேச, அவரை ஜனார்த்தனியின் இருசக்கர வாகனத்தில் முன்னால் அனுப்பியிருந்தார்கள்.

கார் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். இருசக்கர வாகனம் என்றால் விரைந்து சென்று விடலாம் என்று அந்த ஏற்பாடு. அவருடன் முன் போல ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி வைத்திருந்தான் ஜெகவீரன்.

காரில் ஏறியதில் இருந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனத் தாரகையாக வந்து கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

மேலும் சில நிமிடங்கள் கடந்த பிறகும் அவளின் பாவனையில் மாற்றம் எதுவும் இல்லாமல் போக, “ராசாத்திக்கு இப்போ என்ன கோபம்?” என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டு அவளின் நிலையைக் கலைத்தான் ஜெகவீரன்.

“ஹேய்! இந்தப் பேரை நீங்க இன்னும் ஞாபகம் வச்சுருக்கீங்களா?” அவன் ராசாத்தி என்று விளித்ததில் வேகமாக அவனின் புறம் திரும்பி வியப்புடன் கேட்டாள்.

‘மறக்கக்கூடிய பேரா அது?’ அவளுக்குக் கேட்காமல் தனக்குள் மட்டும் சொல்லிக் கொண்டான் அவன்.

“என்ன கோபம்னு கேட்டேன்…” அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன் கேள்வியை முன்னிறுத்தினான்.

“நானா எடுத்துக்கிட்ட உரிமையை வாபஸ் வாங்கிட்டீங்களே இன்ஸ்பெக்டர்ர்ர்ர்…” என்று அந்த இன்ஸ்பெக்டரை இழுத்தாள்.

அவள் சொல்லிக் காட்டிய பாவனையில் “ஹா…ஹா…” என்று சப்தமாகச் சிரித்தான்.

‘ஜெகா என்று அழைக்க வேண்டாம்’ என்று சொன்னதைச் சொல்கிறாள் என்பது புரிந்தது.

“போதும்… போதும்… வாய்ச் சுளுக்கிக்கப் போகுது இன்ஸ்பெக்டர்ர்ர்ர்…” என்றாள் பல்லைக் கடித்து.

“போதும் தாயே! போதும்! என்னை டர்ராக்கி டாராக்கியது போதும்!”

“போதும்னு நிறுத்தணும்னா அப்போ நான் உங்களை ‘ஜெகா’னே கூப்பிடலாமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

“வேண்டாம்!”‌ என்றான் பட்டென்று.

அதில் முகத்தைச் சுளித்தவள், “ஏன்?” என்று கேட்டாள்.

“நீ ‘ஜெகா’னு சொல்லும் போதெல்லாம் நான் ஜகா வாங்குற மாதிரியே இருக்கு…” என்றான்.

“ம்ப்ச்… ம்ப்ச்…” என்று சலிப்புடன் அலுத்துக் கொண்டாள்.

“இப்ப எதுக்கு இத்தனை உச்சுக் கொட்டுற ஜனா?”

“ச்சே… இப்போ வேற பேரு தேடணும்…” என்றாள் அலுப்பாக.

“எனக்கு வைக்கவா? அதுதான் ஜெகன்னு கூப்பிடுனு சொல்லிவிட்டேனே?”

“உங்களுக்கு இல்ல… நம்ம ப்ராஜெக்ட்டுக்கு…”

“நம்ம ப்ராஜெக்ட்டா? என்ன ப்ராஜெக்ட்?” புரியாத குழப்பத்துடன் கேட்டான்.

“நீங்களும், நானும் சேர்ந்து வினயாவைக் கண்டுபிடிக்கிற ப்ராஜெக்ட்.…”

“வாட்!‌ ஜனா என்ன இது?”

“இப்ப எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?” என்று கேட்டவள், “ஜெகா, ஜனா தேடுதல் வேட்டை! அப்படினு கெத்தா ஒரு பேரு வச்சேன். ஆனா ஜெகானு உங்களைச் சொல்லக்கூடாதுனு சொல்லி நான் செலக்ட் பண்ணிய சூப்பர் பேருக்கு முட்டுக்கட்டைப் போட்டுட்டீங்க. இனிமே நான் வேற பேரு தேடணும்…” என்று சொல்லியவளைத் திறந்த வாய் மூடாமல் அதிர்ச்சியுடன் பார்த்தான் ஜெகவீரன்.

“எதுக்கு என்னை இப்ப வாயைத் திறந்துகிட்டுப் பார்க்குறீங்க? என்ன என்னை இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து கழட்டி விடலாம்னு நினைச்சு வச்சிருந்தீங்களா? அதெல்லாம் நடக்காது. நீங்களே கழட்டி விட நினைச்சாலும் நான் கழண்டுக்க மாட்டேன்…” என்றாள் விறைப்பாக.

“நான் அதை நினைக்கலை. காணாமல் போனது உன்னோட ஃப்ரண்ட்…”

“ஆமா… யார் இல்லைன்னு சொன்னது?”

“ஃப்ரெண்ட் காணாம போயிட்டாள்னு பதறாமல், நீ என்ன கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம் எழுதப் போகிறவள் போல ப்ராஜெக்ட்னு பேரெல்லாம் வச்சுக்கிட்டு இருக்க?”

“ஏன் வச்சா என்ன?”

“ஃப்ரண்ட் காணோம்னு வருத்தம் இல்லையா?”

“அது இருக்கு எக்கச்சக்கமா…”

“பார்த்தால் அப்படித் தெரியலையே?”

“நான் தான் தெரிய விடலையே…” என்று ‌சொல்லித் தோளைக் குலுக்கினாள்.

ஜெகன் அவளை வினோதமாகப் பார்த்தான்.

“மலையளவு மனசுல வருத்தம் இருந்தாலும், அதை மடுவளவு கூட வெளியே காட்டக் கூடாது என்பது தான் என் பாலிசி!” என்றவள்,

“வருத்தத்தை வெளியே காட்டி என்ன செய்ய முடியும்? அதனால் நம் வருத்தம் குறையுமா? இல்லை… கண்டிப்பா இல்லை… அந்த வருத்தத்தைப் போக்க என்ன வழின்னு பார்க்கணுமே தவிர அதுலயே உழண்டு, சுருண்டு போய்ட கூடாது…” என்று சொன்னவள் தன் வழக்கம் போலத் தோளைக் குலுக்கினாள்.

அவளின் பேச்சில் உச்சிமேட்டை தொட்டு அங்கேயே சில நொடிகள் நிலைத்து நின்றன ஜெகவீரனின் புருவங்கள்.

“எதுக்கு இப்போ இவ்வளவு வியப்பு?” அவனிடம் கேட்க, “நீ என் கண்ணுக்குக் கொஞ்சம் வித்தியாசமானவளா தெரியுற ஜனா…” என்றான்.

“நான் நானாக இருக்கிறேன். அது தான் வித்தியாசமா தெரியுது…” என்றாள் அலட்சியம் போல்.

“நீ உண்மையிலேயே வித்தியாசமானவள் தான் ஜனா. மூன்று முறை உன்னை வேற வேற பெயரில் பார்த்த போதும் சரி, ஸ்டேஷன் வந்ததில் இருந்து இப்போ வரைக்கும் சரி, உன் செயல் ஒவ்வொண்ணும் என்னை வியக்க வைக்குது. முன்பு பார்த்த போது கேஸுக்காக வேலை செய்வது போல் நடிக்காமல் உண்மையாக வேலை செய்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இப்போ ஸ்டேஷனில் அப்படியே அலட்டிக்காமல் என்னை மீட் செய்தப்பயும், என்னவோ வெகு நாட்கள் பழகியது போல் பேரைச் சுருக்கிக் கூப்பிடுவேன் அது நானாக எடுத்துக் கொண்ட என் உரிமைனு சொன்னப்பவும், சின்னக் கறுப்புப் புள்ளி கண்டு வினயா கேஸ் கோணத்தை வேறு திசையில் கவனம் செலுத்த வைத்த போதும், இதோ இப்போ செல்லமா என் பேருக்காகக் கோவிச்சுக்கிட்டதும், இப்போ நான் நானாக இருக்கிறேன்னு கெத்தா சொல்வதும் என்று ஒவ்வொரு நேரமும், உன்கிட்ட ஒவ்வொரு பரிமாணம் பார்க்கிறேன்…” என்றான் குரலில் இருந்த வியப்புச் சிறிதும் மாறாமல்.

“பிகாஸ், நாம எல்லாம் பச்சோந்திங்க…” என்றாள் பட்டென்று.

“என்ன சொல்ற ஜனா பச்சோந்தியா? அதுவும் பொதுவா சொல்ற?”

“யெஸ், பொதுவாத்தான் சொல்றேன். மனுஷங்க எல்லோர்கிட்டயும் பச்சோந்தி தனம் இருக்கு. இடத்துக்குத் தகுந்த மாதிரி, நம்ம கூடப் பழகும் மனிதர்களுக்குத் தகுந்த மாதிரி, சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரினு அந்தந்த இடத்துக்குத் தகுந்த மாதிரி அழுகை, கோபம், ஆத்திரம், சிரிப்பு, ஆதங்கம், விருப்பு, வெறுப்புன்னு நம்ம எக்ஸ்பிரஷன் மாறிக்கிட்டே தான் இருக்கு. அதில் நானும் ஒரு வகை. அவ்வளவு தான்! அதாவது சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வது போன்றது தான் அது!”

“பச்சோந்தியும் அப்படித்தான். பச்சோந்திக்குக் காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம் உண்டாம். அதுமட்டுமில்லாம அது ஒரு பயந்த பிராணியும் கூட. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை அதுக்கு இருக்கு. அதாவது அதுக்கு உண்டான ஆபத்து, அந்த நேர சூழ்நிலைக்காக அது தன்னோட நிறத்தை மாற்றித் தன்னைத் தானே காத்துக் கொள்கிறது”

“அந்தப் பச்சோந்தி தனம் எல்லா மனிதர்களிடமும் உண்டு தானே? சூழ்நிலைக்கு ஏற்ப தன் மன நிறத்தை மாற்றிக் கொள்வது! அதே தான் நானும் செய்றேன். சோ… நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை…” என்றாள் சர்வசாதாரணமாக.

“உன் சிந்தனை கூட வித்தியாசமாகத்தான் இருக்கு ஜனா…” என்றான்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. அப்படிப் பார்த்தால் நீங்க கூடத் தான் என் பார்வைக்கு வித்தியாசமானவரா தெரியுறீங்க…” என்றாள்.

“நானா? என்கிட்ட அப்படி என்ன வித்தியாசத்தை நீ பார்த்த?” என்று கேட்டான்.

“ஜெகவீரன் என்ற உங்க பேரை வச்சு, நீங்க ரொம்ப ‘ரப் அன்ட் டப்’பான ஆளு. எப்பவும் வீரன் என்ற பேருக்குத் தகுந்தாற்போல விறைப்பா இருப்பீங்கனு நினைச்சேன். ஆனால் நீங்க என்கிட்ட ரொம்ப ப்ரண்ட்லியா பேசுறதைப் பார்த்தால் உங்க பேருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கு. அப்போ நீங்களும் வித்தியாசமானவர் தானே?” என்றாள்.

“ஹா…ஹா…! வீரன் என்று பேர் இருந்தால் விறைப்பாகத் தான் இருப்பாங்கன்னு உனக்கு யார் தவறா தகவல் தந்தது? எனக்கும் வீரன் என்ற பேருக்குத் தகுந்தாற்போல வீரம் கண்டிப்பா இருக்கு. ஆனா அதுக்காக எப்பவும் விறைப்பாக இருந்து தான் அதை நிரூபிக்கணும்னு அர்த்தமில்லை. என் வீரத்தை எங்கே, எப்போ, எப்படிக் காட்டணுமோ அப்போ கண்டிப்பா காட்டுவேன்…” என்றான்.

“ம்ம்… இது உங்க இயல்பு. அதே போல் நான் இப்படி இருப்பது என் இயல்பு…” என்று அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

அவளின் அந்தப் புன்னகையைச் சில நொடிகள் இமைக்காமல் பார்த்த ஜெகவீரன், பின் அவளின் கேள்வியான பார்வையில் தன் தலையைக் குலுக்கி விட்டு, “அது சரி, எப்போ எனக்கு எழுபத்தி ஐந்து பிரசெண்டேஜூக்கு விளக்கம் சொல்லப் போற?” என்று கேட்டு தன் நிலையைச் சமாளித்தான்.

“இப்பவும் சொல்ல நேரம் வரலை இன்ஸ்பெக்டர்ர்ரே…” என்று கிண்டலுடன் சொன்னவள், வெளியே பார்வையைச் செலுத்தி மருத்துவமனை வந்ததைச் சுட்டிக் காட்டினாள்.

“அம்மா, தாயே! அதுக்கு எப்போ வேணும் என்றாலும் பதில் சொல்லு. ஆனால் என்னை டர்ராக்கி தார் ரோடு போடுற வேலையை முதலில் விடு. முன்ன மாதிரி ஜெகாவே சொல்லிக்கோ…” என்று போலியாக அலறினான் ஜெகவீரன்.

“அது…!” என்பது போல் கெத்துப் பார்வை பார்த்தவள், வண்டி நிற்கவும் மகாராணி தோரணையில் இறங்கினாள்.

அவளின் தோரணையை ரசித்துப் பார்த்த படி தானும் இறங்கி மருத்துவமனைக்குள் நடக்கத் துவங்கினான்.

இருவருக்கும் இடையே பேச்சுக்கள் சர்வசாதாரணமாக வந்தன.

நான் ஆண்பிள்ளை ‘என்னை மதித்துப் பேசு!’ என்று அவளை அதட்டி உருட்டாமல், ‘இப்படி எப்படி நீ பேசலாம்?’ என்று சிடுசிடுக்காமல், எந்தத் தலைக்கனமும் இல்லாமல் இயல்பாகப் பேசினான் ஜெகவீரன்.

அவனின் அந்த அணுகுமுறையை உள்ளூர ரசித்தபடி, அந்த ரசிப்பை அவனுக்குக் காட்டாமல் அவனுடன் நடந்து சென்றாள் ஜனார்த்தனி.

சேதுராமனுடன் வந்திருந்த கான்ஸ்டபிள் அங்கே வரவேற்பறையில் தான் நின்று கொண்டிருந்தார்.

அவரிடமே கஸ்தூரி இருக்கும் இடம் தெரிந்து கொண்டு அங்கே சென்றனர்.

“நீ இங்கே வச்சுச் சேதுராமனை பார்த்தப்ப மிசஸ் கஸ்தூரியைப் பார்த்தியா ஜனா?”

“இல்லை ஜெகா… அங்கிளை அவர் மெடிக்கலில் இருக்கும் போது தான் பார்த்தேன். ஆன்ட்டி அப்போ தூங்குறாங்கனு சொன்னார். அப்போ அவங்க தூங்கும் போதே கம்ளைண்ட் கொடுத்துட்டு வந்திருவோம்னு சொல்லி ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்…” என்றாள்.

“ஓகே, இப்போ பார்த்து விடலாம்…” என்றவன் கஸ்தூரியின் அறைக்குள் நுழையும் நேரம் அவனின் கைபேசி அவனை அழைத்தது.

அந்த அழைப்பை எடுத்துப் பார்த்தவன், “கமிஷ்னர் ஜனா… நான் பேசிட்டு வர்றேன். நீ உள்ளே போ…” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்த வராண்டாவில் ஓரமாக நின்று பேச ஆரம்பித்தான்.

ஜெகன்‌ அறைக்குள் நுழைந்த போது “என்னை ஞாபகம் இருக்குத் தானே ஆன்ட்டி? உங்க வீட்டுக்கு நான் முன்னாடி வந்திருக்கேனே… வினயாவைப் பார்க்க வீட்டுக்குப் போனேன் ஆன்ட்டி. ஆனா அவள் இல்லை. போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கிறாள். வினயா எங்கே ஆன்ட்டி?” என்று மென்மையான குரலில் கஸ்தூரியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

ஆனால் கஸ்தூரியோ அவளையே மலங்க, மலங்க பார்த்துக் கொண்டிருந்தார்.

“நான் பேசுறது புரியுதா ஆன்ட்டி? நான் அவசரமா வினயாவைப் பார்க்க வேண்டியது இருக்கு ஆன்ட்டி. ஒரு முக்கியமான விஷயம் அவகிட்ட சொல்லணும்…” என்று வார்த்தைகளை மாற்றிக் கேட்டாள்.

கஸ்தூரியோ இப்போது அவளையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்தார்.

“இப்படித்தான்மா நான் வந்ததில் இருந்து முழிக்கிறா, இல்லனா முறைக்கிறா. எதுக்கு இப்படிப் பார்க்கிறாள்னே தெரிய மாட்டிங்குது. என் பொண்ணு வேற எங்க இருக்காள்னு தெரியலையே. இருட்டிக்கிட்டு வேற வருது. இப்போ எங்கே எந்த நிலையில் இருக்காளோ?” என்று கலங்கிப் போய்ப் புலம்ப ஆரம்பித்தார் சேதுராமன்.

அவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டே அங்கே மெதுவாக வந்து ஜனாவின் அருகில் நின்றான் ஜெகவீரன்.

அவனின் பார்வை முழுவதும் கூர்மையுடன் கஸ்தூரியைத் தான் துளைத்தது.

ஜனாவையே பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரி, அப்போது தான் அவளின் அருகில் இன்னொருவர் வந்து நிற்பதைப் பார்த்து ஜெகனின் புறம் திரும்பினார்.

காக்கி உடையில் அவனைப் பார்த்த கஸ்தூரியின் கண்கள் அடுத்த நொடி பெரிதாக விரிந்தன.

அவரின் விரிந்த விழிகளை இன்னும் கூர்மையுடன் பார்த்துக் கொண்டே, “உங்க பொண்ணு வினயா எங்கே மிசஸ் கஸ்தூரி?” என்று கேட்டான்.

அவ்வளவு தான்! அடுத்த நொடி “ஹ…ஹ…” என்று தொண்டைக்குள் இருந்து வினோத ஒலியை எழுப்பிய படி கை, கால்கள் நடுங்க, கண்கள் சொருக, படுக்கையில் அமர்ந்திருந்தவர், அப்படியே அந்தப் படுக்கையிலேயே மயங்கி விழுந்தார்.

சட்டென்று அங்கே ஒரு பதட்டமான நிலை உருவானது.

“கஸ்தூரி என்ன… என்னாச்சு?”என்று பதறிப் போய் மனைவியைத் தாங்க வந்தார் சேதுராமன்.

“ஆன்ட்டி, என்னாச்சு?” என்று பதறிய ஜனா சட்டென்று சுதாரித்து, “நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்…” என்று வெளியே ஓடினாள்.

இருவரும் பதறிப் போக, ஜெகனின் கண்களோ சிறிதும் பதட்டம் இல்லாமல் இன்னும் தீவிரமாகக் கஸ்தூரியை மொய்த்தன.

சற்று நேரத்தில் மருத்துவருடன் வந்தாள் ஜனார்த்தனி.

வேகமாக வந்து கஸ்தூரியைப் பரிசோதித்த மருத்துவர், “இங்கே ஏன் இத்தனை பேர் நிற்கிறாங்க…” என்று அங்கிருந்த செவிலியைக் கடிந்து கொண்டார்.

“சார், மேடம் நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க…” என்று மூவரையும் வெளியேற்றினார் செவிலி.

வெளியே வந்த ஜெகனின் முகத்தில் யோசனை ரேகைகள் ஓட, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ஜனா.

அவளின் பார்வை எல்லாம் அவனின் கருத்தில் படவே இல்லை.

சேதுராமன் மருத்துவரின் வார்த்தைக்காகப் பதட்டத்துடன் வெளியே காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், “அவங்க தூங்கி எழுந்ததும் நார்மலா தானே இருந்தாங்க. மயக்கம் போடுற அளவுக்கு இப்போ என்ன நடந்துச்சு?” என்று சேதுராமனிடம் கேட்டார்.

“என் பொண்ணைக் காணோம் டாக்டர். அதைப் பற்றித் தான் அவள் கிட்ட விசாரிச்சுட்டு இருந்தோம். பேசிட்டு இருக்கும் போதே திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாள். அவளுக்கு என்னாச்சு டாக்டர்?” என்று கேட்டார்.

“ஹை பிரஷர் சடர்னா ஏறியிருக்கு. ஏற்கனவே அதிர்ச்சியில் தான் வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தாங்க. இப்போ பொண்ணைப் பற்றிக் கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்கு…” என்றார் டாக்டர்.

“கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவங்ககிட்ட பேசலாமா டாக்டர்?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“அவங்க இப்போ பேசுற நிலையில் இல்லை இன்ஸ்பெக்டர். அவங்களுக்குப் பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கு. இஞ்செக்ஷன் போட்டுருக்கேன். இனி காலையில் வரைக்கும் தூங்கிட்டு தான் இருப்பாங்க…” என்றார்.

“அப்போ காலையில் வந்தா பேசலாம் தானே?” என்று விடாமல் கேட்டான் ஜெகன்.

அவனை யோசனையுடன் பார்த்த மருத்துவர், “அவங்க பொண்ணை நினைச்சுத் தான் அவங்களுக்கு ரத்த அழுத்தம் உயருதுனு நினைக்கிறேன் இன்ஸ்பெக்டர். நீங்க அவங்க பொண்ணைப் பற்றித் தான் விசாரிக்கப் போறதாக இருந்தால் அதுக்கு நான் அனுமதிக்க முடியாது…” என்றார்.

“என்ன டாக்டர், இப்படிச் சொல்றீங்க? அவங்க பொண்ணு கூட அவங்க தான் கடைசியா இருந்துருக்காங்க. இப்போ அவங்க பொண்ணு சீக்கிரம் கிடைக்கணும்னா அவங்க பேசித்தான் ஆகணும். என்ன நடந்துச்சுனு அவங்க தான் சொல்லணும். அதுக்கு அவங்ககிட்ட பேசியே ஆகணும் டாக்டர்…” என்றான் பிடிவாதமாக.

“இல்லை இன்ஸ்பெக்டர், அதுக்கு நான் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே ஹை லெவல் பிரஷர். இனியும் இதே மாதிரி பிரஷர் கூடினால் அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸ் இருக்கு. அந்த அளவுக்குப் போக நான் விட முடியாது. அவங்க பொண்ணை வேற ஏதாவது வழியில் கண்டுபிடிக்க முடியுதானு பாருங்க…” என்று சொல்லி விட்டுச் சென்றார் மருத்துவர்.

அவர் சென்றதும் “ச்சே…” என்று சலித்துக் கொண்டான் ஜெகவீரன்.

மனைவியின் நிலையை நினைத்துப் பரிதவித்து நின்றிருந்த சேதுராமன், “கஸ்தூரியை டிஸ்டர்ப் பண்ணாம என் மகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்களேன் இன்ஸ்பெக்டர். ப்ளீஸ்…” என்று ஜெகனைப் பார்த்துக் கெஞ்சலாகச் சொன்னார்.

அவரை எரிச்சலுடன் பார்த்தான் ஜெகவீரன்.

“இப்போ எதுக்கு இப்படி ஹார்ஷா பிகேவ் பண்றீங்க ஜெகா? ஆன்ட்டிகிட்டயும் மெதுவா கேட்காம ஒரு மாதிரி முறைச்சுக்கிட்டே கேட்டீங்க. அது தான் அவங்களுக்கு மயக்கம் வந்துருச்சு…” என்று அவனை முறைத்துக் கொண்டே கேட்டாள் ஜனா.

“இப்போ என்ன ஹார்ஷா நான் பிகேவ் பண்ணினேன்? நான் எப்பவும் போலத் தான் விசாரிச்சேன். சும்மா என்னைக் குறை சொல்றதை விடு! நீ ஒரு விஷயத்தை அப்சர்வ் பண்ணினியா இல்லையா ஜனா?”

“நல்லாவே பண்ணினேன்… பண்ணாம என்ன?” எனறாள்.

“நீ பேசுறதையும், என்னை முறைக்கிறதையும் பார்த்தால், நீ அப்சர்வ் பண்ணலைன்னு தான் எனக்குத் தோணுது…”

“உங்களை, அதாவது ஒரு போலீஸை பார்த்ததும் பயந்து பிரஷர் அதிகமாகி ஆன்ட்டி மயங்கிட்டாங்க. அப்படினா போலீஸுக்குப் பயப்படுற அளவுக்கு அவங்ககிட்ட ஏதோ தப்பு இருக்குனு நீங்க நினைக்கிறீங்க. இதானே நீங்க சொல்ல வர்றது?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டாள்.

“யெஸ், அதேதான்!” என்று அழுத்தி சொன்னான் ஜெகன்.

அவர்கள் பேசிக் கொண்ட விஷயத்தின் சாராம்சத்தைக் கேட்டு “சார்…” என்று அதிர்ந்து அலறினார் சேதுராமன்.

“வினயா‌ எங்க பொண்ணு சார். கஸ்தூரி அவளுக்கு அம்மா. அவளைப் போயா சந்தேகப்படுறீங்க?” என்று குரல் நடுங்க கேட்டார்.

“அங்கிள், ரிலாக்ஸ்! நீங்க அங்கே போய் உட்காருங்க. நான் பேசிக்கிறேன்…” என்ற ஜனா அங்கிருந்த காத்திருப்போர் இருக்கையில் சென்று சேதுராமனை அமர வைத்து விட்டே வந்தாள்.

அவர் அவள் சொன்னதைச் செய்தாலும் இன்னும் அதிர்வு மாறாமல் ஜெகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘பொண்ணைக் காணோம்னு கம்ளைண்ட் பண்ணினா, பெத்த அம்மாவையே சந்தேகப்படுவாங்களா என்ன?’ என்று மனதிற்குள்ளேயே புழுங்கிய படி அமர்ந்திருந்தார்.

“இங்கே பாருங்க ஜெகா, உங்க சந்தேகம் தேவையில்லாத சந்தேகம். போலீஸை பார்த்ததும் நட்பா பழகுற அளவுக்கு நம்ம மக்கள் இன்னும் சகஜமாகலை. அதுவும் லேடீஸ் தூரத்துல போனாலே போலீஸை பயத்தோடு பார்க்கிறவங்க இருக்காங்க. அந்தப் பயம் தான் ஆன்ட்டி வெளிப்படுத்திய பயம். அதைப் போய் ஏன் சந்தேகக் கண்ணோட பார்க்கிறீங்க?” என்று கேட்டாள்.

“நீ சொன்னதெல்லாம் எனக்குத் தெரியாத விஷயம்னு நினைச்சியா ஜனா? மக்கள் போலீஸை பார்த்து எப்படிப் பிகேவ் பண்ணுவாங்கனு எனக்கும் தெரியும். ஆனா அந்த மாதிரி பயமா மிசஸ் கஸ்தூரியோட பயத்தை என்னால் நினைக்க முடியலை…” என்றான் விடாமல்.

“அட! என்னதிது, இப்படி ஒரு பிடிவாதம்?” என்று சலிப்பாகக் கேட்டாள் ஜனார்த்தனி.

“நீ என்ன சொன்னாலும் சரி, மிசஸ் கஸ்தூரிகிட்ட ஏதோ தப்பு இருக்கு…” என்று உறுதியாகச் சொன்னான் ஜெகவீரன்.