பிழையில்லா கவிதை நீ – 5

அத்தியாயம் – 5

வாகனம் நிற்கவும் வினயாவின் வீட்டைச் சுற்றிலும் உள்ள சுற்றுச் சூழலை ஆராய்ந்து கொண்டே இறங்கினான் ஜெகவீரன்.

அந்த ஏரியாவே வெகு அமைதியான ஏரியாவாகத் தான் இருந்தது.

வீடுகளும் நெருக்கமாக இல்லாமல் சற்றுத் தள்ளி தள்ளி தான் அமைந்திருந்தன.

இரண்டு இடங்களில் புதிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள் பெரிதாக எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

அதிலும் சுற்றிலும் வெளியே அடைக்கப்பட்டிருந்தது. இன்னும் இரவு நேரம் வரவில்லை என்பதால் ஆட்கள் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஏரியாவில் இன்னும் சில புதிய கட்டிடங்கள் முளைக்கும் என்பதைப் பறைசாற்றும் வகையில் இரண்டு, மூன்று இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தன.

“இந்த ஏரியாவுக்கு நாங்க வீடு கட்டிக் குடி வந்தபோது எண்ணி ஐந்தே வீடு தான் இருந்தது சார். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா புது வீடுகள் வந்தது. ஆனாலும் நிறைய இடம் சும்மா தான் இருந்தது. இப்போ தான் பில்டர்ஸ் வாங்கிப் பில்டிங் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதோ அந்த அப்பார்ட்மெண்டில் எங்களுக்கு ஒரு பிளாட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கோம்.

என் மனைவிக்குப் பிளாட்ல இருக்கணும்னு ஆசை. மகளைக் கட்டிக் கொடுத்த பிறகு தனியா இருக்கணும். அதனால் இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டுப் பிளாட்டுக்குப் போகணும்னு சொல்லுவாள். பிளாட்னா நல்லா இருக்கும்னு என்னென்னமோ பிளான் போட்டு வச்சுருந்தாள். ஆனா இப்போ…” ஜெகனின் ஆராய்ச்சிப் பார்வையைப் பார்த்து விவரம் சொன்ன சேதுராமனுக்கு மகள், மனைவியை நினைத்ததும் துக்கம் தொண்டையை அடைக்க, மேலும் பேச முடியாமல் தடுமாறினார்.

காணாமல் போன மகள் ஒரு பக்கம், மனைவியின் பிரமை பிடித்த நிலை ஒரு பக்கம் என்று வேதனை நெஞ்சை அடைக்கக் கண்கலங்கிக் கொண்டே கதவைத் திறந்து விட்டார்.

“வினயா கிடைச்சுருவா அங்கிள். டோன்ட் வொர்ரி! அப்புறம் எல்லாம் சரியா போகும்…” என்று அவருக்குச் சமாதானம் சொன்னாள் ஜனார்த்தனி.

வீட்டிற்குள் ஜெகவீரனும், கான்ஸ்டபிள்களும் செல்ல, ஜனார்த்தனி உள்ளே செல்லாமல் அப்படியே பின் தங்கினாள். இப்போது அவளின் பார்வை கூர்மையுடன் சுற்றுப்புறத்தை ஆராய ஆரம்பித்தது.

உள்ளே சென்ற ஜெகவீரன் கான்ஸ்டபிளிடம் கண்ணைக் காட்ட, ‘வினயா கடிதம் எதுவும் எழுதி வைத்திருக்கிறாளா?’ என்று தேட ஆரம்பித்தார்.

சேதுராமன் மனைவி கஸ்தூரியின் கைபேசியை எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கி இன்னொரு கான்ஸ்டபிளிடம் கொடுத்தவன், சேதுராமனுடன் சேர்ந்து அதில் ‘சக்தி கம்ப்யூட்டர் சென்டரில் உள்ளவர்களின் எண்கள் எதுவும் உள்ளதா?’ என்றும், ‘கடைசியாக அவர் தொலைபேசியில் யாருடன் உரையாடினார்? என்றும் பார்க்க சொன்னான்.

அடுத்து அவன் வீட்டைப் பார்வையிட்டான். மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு அது. சமையலறை, டைனிங் ஹால் என்று வீடு கச்சிதமாக இருந்தது. வீடு அளவாக இருந்தாலும் அங்கே இருந்த பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்ததாகவே இருந்தன.

வீட்டைச் சுற்றிலும் சிறிய இடம் இருக்க, அதில் சில வகைப் பூச்செடிகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.

முன் பக்கம் கார் நிறுத்தும் அளவிற்கு இடம் இருந்தாலும் அங்கே கார், இருசக்கர வாகனம் என்று எதுவுமில்லை.

“செக்யூரிட்டி கேமிரா இல்லையா?” என்று வீட்டைப் பார்வையிட்டு முடித்து விட்டுச் சேதுராமனிடம் கேட்டான் ஜெகவீரன்.

“இல்லை சார்‌. இந்த வருஷம் வர்றப்ப வைக்கலாம்னு இருந்தேன்…” என்றார்.

வீட்டிற்குள் சேதுராமன் சொன்னது போல் பொருட்கள் எல்லாம் அடுக்கி வைத்து அதனதன் இடத்தில் தான் இருந்தன. எந்தப் பொருளும் கலைந்து போனதற்கான தடயம் எதுவும் அங்கே இல்லை.

ஊரில் இருந்து சேதுராமன் கொண்டு வந்த பெட்டிகள் மட்டும் வரவேற்பறையில் ஒரு ஓரமாக இருந்தன.

மூன்று படுக்கையறைகளிலும் சிறிதும் பொருட்கள் கலையாமல் இருந்தன.

முதலில் இரண்டு அறைகளைப் பார்த்து விட்டு வந்தவன் வினயாவின் அறைக்குள் இன்னும் கூர்மையுடன் ஆராய்ந்தான்.

கான்ஸ்டபிளும் அந்த அறையில் தான் கடிதம் எதுவும் தென்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்.

அனைத்து இடங்களிலும் தேடி விட்டு, பீரோவைப் பார்க்க, அது சாவியால் மூடப்பட்டிருந்தது. மற்ற அறைகளில் எல்லாம் கபோர்ட் மட்டும் இருந்திருக்க, வினயாவின் அறையில் மட்டும் தான் கபோர்டுடன் ஒரு பீரோவும் இருந்தது.

“இந்தப் பீரோவைத் திறங்க சேதுராமன்…” என்று ஜெகவீரன் சொல்ல, சாவியை எடுத்து வந்து திறந்து விட்டார்.

“நீங்க வந்த பிறகு பீரோவைத் திறந்து பார்த்தீங்களா?”

“இல்லை சார், பார்க்கலை. கஸ்தூரியை அப்படிப் பார்த்தே திகைச்சுப் போயிட்டேன். வினயாவும் காணோங்கவும் அவள் போனுக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தேன். வேற எதுவும் தேடணும்னு யோசனை கூட வரலை…” என்றார்.

ஜெகனுக்கு அவரின் நிலைப் புரிந்தது. வெளிநாட்டில் இருந்து மனைவி, மகளைக் காண ஆசையுடன் வந்தவருக்குக் காணாமல் போன மகளும், மனைவியின் நிலையும் அவரைக் கண்டிப்பாக அதீத திகைப்பிற்கு உள்ளாக்கியிருக்கும்.

எதிர்பாராமல் நேர்ந்த விஷயங்கள் அவரின் மூளையை மழுங்கடித்திருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பீரோவைத் திறந்ததும் துணிகள் பக்கம் இருந்த ஒரு அடுக்கு மட்டும் லேசாக அலுங்கி இருந்தது. அந்த இடத்தில் இருந்து சில துணிகள் எடுக்கப்பட்டதற்கான அடையாளம் காண கிடைத்தது.

அதைக் குறித்துக் கொண்டவன், பீரோவின் உள்பகுதியைத் திறக்கச் சொன்னான்.

“இதுக்குள்ள என்னென்ன பொருட்கள் இருக்கும்னு உங்களுக்குத் தெரியும் தானே?”

“தெரியும் சார்…”

“எதுவும் மிஸ்ஸாகி இருக்கானு செக் பண்ணுங்க…” என்றதும், சேதுராமன் உள்ளிருந்த பொருட்களை ஆராய்ந்தார்.

சில நிமிட ஆராய்ச்சிக்குப் பிறகு “சார்…!” என்று அதிர்ந்து அழைத்தார்.

“என்னாச்சு?”

“நகைகளைக் காணோம் சார்…”

“ஓ, எவ்வளவு இருக்கும்?”

“பெரிய நகை எல்லாம் லாக்கரில் இருந்தாலும், ஒரு முப்பது பவுன் மட்டும் சின்னச் சின்னதா எப்பவும் வீட்டில் இருக்கும் சார். எதுவும் பங்ஷனுக்குப் போகணும்னா அதைத்தான் என் மனைவியும், மகளும் போட்டுப் போவாங்க. அதில் ஒன்னைக் கூட இப்போ காணோம்…” என்றார்.

“ஓ, வீட்டில் சூட்கேஸ் எதுவும் இல்லாமல் இருக்கானு பாருங்க…” என்றான்.

உடனே சூட்கேஸ் வைத்திருக்கும் இடத்தைப் பார்த்து விட்டு வந்தவர் முகம் பேயறைந்தது போல் இருந்தது.

“ஒரு சூட்கேஸ் இல்லை…” என்றார்.

“சாரி டூ சே திஸ் மிஸ்டர் சேதுராமன். என் ஊகம் சரிதான்னு இந்தப் பீரோவே சொல்லுது. இங்கே பாருங்க, இங்கிருந்து சில ட்ரெஸ் எடுக்கப்பட்டதற்கான அடையாளம் இருக்கு. நகையும் இல்லை. சூட்கேஸும் இல்லை. லெட்டர் எதுவும் இல்லைனாலும், உங்க பொண்ணு அவங்களா வீட்டை விட்டுப் போனதற்கான அறிகுறிகள் தான் தெரியுது. உங்க மகளுக்கு எதுவும் லவ் இருந்ததான்னு விசாரிக்கணும். அது கன்பார்ம் ஆனால் உங்க பொண்ணு காணாமல் போனதற்கு அது தான் காரணம். பொண்ணு வீட்டை விட்டுப் போன துக்கத்தில் தான் உங்க மனைவி அப்படி ஆகியிருப்பாங்கனு நினைக்கிறேன்…” என்றான்.

“பொண்ணு லவ்வர் கூட ஓடிப் போயிருப்பாள்னு சொல்லிக் கேஸை உடனே இழுத்து மூடி ஜகா வாங்க நினைக்காம, இன்னும் கொஞ்சம் தூண்டித் துருவி விசாரிங்க ஜெகா…” என்று சொல்லிக் கொண்டே அங்கே வந்தாள் ஜனார்த்தனி.

“இதென்ன குற்றச்சாட்டு ஜனா? கேஸ்ஸை சீக்கிரம் மூடத்தான் வினயா ஓடிப் போயிருப்பாங்கனு சொல்றேன்னு சொல்றீயா?” கோபம் துளிர்த்த குரலில் கேட்டான்.

“ம்ப்ச்… அப்படிச் சொல்ல வரலை. அவசரப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம்னு சொல்றேன்…”

“நான் அப்படி என்ன அவசரப்பட்டேன் ஜனா? காணாமல் போன நகைகளையும், துணிகளையும் பார்த்தால் நீ என்ன முடிவுக்கு வருவ? நகைகள் மட்டும் காணாமல் போனால் அதைத் திருட்டா நினைக்கலாம். ஆனா துணிகளும் எடுத்துட்டுப் போகப்பட்டிருக்கு. சூட்கேஸையும் காணோம். ஒருவேளை திருடன் வந்திருந்தால் அதுக்கான அடையாளம் இருந்திருக்கும். அப்படி எதுவும் இல்லாம எல்லாம் வச்சது வச்சபடியே இருக்கும் போது உன் டிடெக்டிவ் மூளை என்ன சொல்லும்? திருடன் வந்து பொறுமையா சூட்கேஸ் எடுத்து அலுங்காமல், குலுங்காமல் நகைகள் கூடச் சில துணிகளையும் சூட்கேஸ்ல அள்ளிப் போட்டுக் கொண்டு போனான்னு சொல்லுமா?” என்று கடுப்புடன் கேட்டான்.

‘வழக்கில் இருந்து ஜகா வாங்கி விடாதே!’ என்று அவள் சொன்னது அவனை எரிச்சலுக்கு உள்ளாக்கியிருந்தது.

“ஷ்ஷ்… ஷப்பா! எம்புட்டு சூடு? சூட்டைக் குறைங்க ஜெகா…” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

“கால் மீ ஜெகன்!” என்றான் இன்னும் எரிச்சலுடன்.

‘பார்றா! பயபுள்ள இம்புட்டு கோபத்திலும் சார்னு கூப்பிடு, முழுப்பேர் சொல்லுன்னு சொல்லாம, மூணு எழுத்துப் பேரோட நிறுத்திக்கிச்சு…’ என்று உள்ளுக்குள் நக்கலாக நினைத்துக் கொண்டாள்.

“ஓகே, ஓகே, கூல் ஜெகன்! உங்களை மாதிரி துணி, நகை, பெட்டியை மட்டும் பார்த்திருந்தால் நானும் உங்க முடிவுக்குத் தான் வந்திருப்பேன். ஆனா இப்போ என்னால் அந்த முடிவுக்கு வர முடியாததற்குக் காரணம், இங்கே வாங்க சொல்றேன்…” என்றவள் வாசல் பக்கம் சென்றாள்.

ஜெகனும், மற்றவர்களும் அவளின் பின் செல்ல, வாசல் படியின் கீழ் இறங்கியவள் “இங்கே பாருங்க…” என்று சுவற்றில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினாள்.

வாசல் கதவு ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி, வெள்ளைச் சுவற்றில் கறுப்பு நிறத்தில் சிறு புள்ளி ஒன்று இருந்தது. அதற்கு நேர் கீழே, பாதியில் அணைந்த ஒரு சிகரெட் துண்டு கிடந்தது.

“வீட்டுக்குள்ள இருந்து ஆள் வந்து கதவைத் திறக்கப் போறதை உணர்ந்து வேகமாகச் சிகரெட்டை அப்படியே சுவற்றில் வைத்து அழுத்தி அணைத்துப் போட்டுருக்கணும்…” என்றாள் ஜனார்த்தனி.

‘ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்ட ஜெகன், “உங்களுக்குச் சிகரெட் பிடிக்கிற பழக்கம் இருக்கா?” என்று சேதுராமனை பார்த்துக் கேட்டான்.

“இல்லை சார்…” என்றார்.

“அங்கிளுக்கு அந்தப் பழக்கம் இல்லன்னு தெரியும். வினயா முன்னாடி சொல்லியிருக்காள். அதனால் தான் வினயா பற்றி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாம்னு சொன்னேன். அது மட்டுமில்ல. இங்கே வாங்க…” என்றவள், “கான்ஸ்டபிள் சார், நீங்க வினயா ரூமுக்குப் போய் அங்க இருக்குற ஜன்னலைத் திறங்களேன்…” என்று ஒரு கான்ஸ்டபளிடம் சொல்லி அவரை அனுப்பி வைத்தவள், “இப்போ நான் காட்டப் போறதைப் பார்த்தால் நீங்களும் என்னைப் போல் தான் நினைப்பிங்க ஜெகன்…” என்றவள் வீட்டைச் சுற்றி நடந்தாள்.

வீட்டைச் சுற்றிலுமே சந்து போல் இருந்தது. காம்பவுண்ட் சுவர் சுற்றி ஓரமாக வண்ண வண்ணப் பூச்செடிகள் இருந்தன.

வீட்டின் சுவற்றிற்கும், பூச்செடிகளுக்கும் இடையே ஒரு ஆள் நடக்கும் அளவிற்குப் பாதை இருந்தது.

ஜனார்த்தனி முன்னே செல்ல, பின்னால் ஜெகவீரனும், சேதுராமனும், மற்றொரு கான்ஸ்டபிளும் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர்.

வினயாவின் அறைக்கு நேராக வந்தவள் “இங்கே பாருங்க ஜெகன்…” என்று ஜன்னலுக்கு வெளிப்புறமாக இருந்த சிறிய திட்டைக் காட்டினாள்.

ஜன்னல் கம்பிகளுக்கு அருகில் இருந்த சிறிய திட்டில், வீட்டு வாசலின் முன் இருந்தது போல் அதே மாதிரியான கறுப்புப் புள்ளி இருந்தது.

அந்தப் புள்ளியை உண்டாக்கிய சிகரெட் துண்டு காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி இருந்த ஒரு செடியின் வேர் பகுதியின் அருகில் கிடந்தது.

உள்ளே கான்ஸ்டபிள் அந்த ஜன்னலைத் திறந்து விட்டிருக்க, அதன் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டே “யாரோ வினயா ரூம் வரை வந்து சிகரெட் பிடிச்சுட்டு அதை வெளியில் தூக்கிக் போடும் முன் ஜன்னல் திட்டில் வச்சு அழுத்தி அணைச்சுட்டுத் தூக்கிப் போட்டுருக்காங்க. அந்த நபருக்குச் சுவற்றில் சிகரெட்டை அழுத்தி அணைக்கிறது ஒரு பழக்கமா இருக்கும்னு நினைக்கிறேன். வினயா ரூம் வரை ஒருத்தன் வந்துட்டு போயிருக்கான் என்றால் யாரது?” என்று கேள்வியாக நிறுத்தினாள் ஜனார்த்தனி.

“ஓ, ஜனா! உன் டிடெக்டிவ் மூளை படு வேகமாகத் தான் வேலை செய்கிறது…” என்று மெச்சுதலாகச் சொன்ன ஜெகன், “வேற எதுவும் வீட்டைச் சுத்திப் பார்த்தியா?” என்று கேட்டான்.

“இல்லை, இவ்வளவு தான் பார்த்தேன்…” என்றாள்.

“ஓகே ஜனா… கான்ஸ்டபிள், நீங்க ஒரு முறை வீட்டைச் சுத்திச் செக் பண்ணுங்க. காம்பவுண்ட்டுக்கு வெளியேவும் ஒரு பார்வை பார்த்திருங்க…” என்று அவருக்கு வேலையைக் கொடுத்தவன், செடி அருகில் இருந்த சிகரெட் துண்டையும், வீட்டின் முன் இருந்த சிகரெட் துண்டையும் கைப்படாமல் கவனமாக எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

அதைச் சில நொடிகள் ஆராய்ந்தவன், “இரண்டுமே ஒரே பிராண்ட் சிகரெட் தான்…” என்றவன், “உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரெல்லாம் சிகரெட் பிடிப்பாங்க? அதாவது வீட்டிற்குள் சகஜமா வந்து போறவங்க?” என்று சேதுராமனிடம் கேட்டான்.

“என் வொய்பும், மகளும் மட்டும் தனியா இருக்கிறதால் சொந்தக்கார ஆம்பளைங்க யாரும் சகஜமா வர மாட்டாங்க சார். அப்படி வந்தாலும் என் மனைவி சோஃபா தாண்டி அலோ பண்ண மாட்டாள். பெட்ரூம் வரை வந்து யார் சிகரெட் பிடிச்சாங்கனு தெரியலையே…” என்றார்.

“உங்க மகள், மனைவியிடம் எப்போ கடைசியா போனில் பேசினீங்க?”

“ஞாயிற்றுக்கிழமை பேசினேன்…”

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை. அதுக்குப் பிறகு நடுவில் நீங்க பேசலையா?”

“இல்லை சார். நான் ஊருக்கு வரும் ஐடியாவில் இருந்ததால் வேலை நிறைய இருந்தது. அதனால் நான் பிஸியா இருப்பேன், பேச முடியாதுன்னு வீட்டில் சொல்லி வைத்திருந்தேன். அதனால் இங்கே இருந்து அவங்களும் அதுக்குப் பிறகு பேசலை…” என்றார்.

“ம்ம்… அப்போ அன்னைக்கு இரண்டு பேரும் உங்ககிட்ட எப்படிப் பேசினாங்க? வழக்கம் போலச் சகஜமா பேசினாங்களா, இல்லை ஏதாவது மாற்றம் தெரிந்ததா?”

“வழக்கம் போலத் தான் பேசினாங்க இன்ஸ்பெக்டர்…”

“உங்க மனைவியோ, மகளோ புதுசா ஏதாவது விஷயம் பேசினாங்களா?”

“என் பொண்ணு, ‘அப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்’ என்று சொன்னாள். நான் ‘சொல்லுமா’னு சொல்லும் போதே, என் வொய்ப் போனை வாங்கி, ‘இவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்ங்க. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?’ என்று கேட்டாள். கல்யாண விஷயம்னு சொல்லவும் எப்படியும் ஊருக்குத் தானே போகப் போறோம். அப்போ நேரிலேயே பேசிக்கலாம்னு நினைச்சு, ‘சரிமா பார்க்கலாம்’ என்று மட்டும் சொன்னேன்.

‘வினயா ஏதோ பேசணும்னு சொன்னாளே என்னது?’ என்று கேட்டேன். ‘அது ஒன்னும் இல்லைங்க. நீங்க வச்சுருங்க’ என்று வச்சுட்டாள். அதுக்குப் பிறகு நானும் இங்கே கிளம்புவதில் பிஸியாக இருந்ததால் வினயா என்ன பேசணும்னு சொன்னாள் என்பதை மறந்துட்டேன்…” என்றார்.

“அப்போ வினயா உங்ககிட்ட ஏதோ சொல்ல நினைச்சுருக்காங்க. அதை உங்க மனைவி தடுத்துருக்காங்க. இன்னைக்கு வெள்ளிக்கிழமை, நீங்க ஞாயிற்றுக்கிழமை பேசியிருக்கீங்க. அப்போ இந்த இடைப்பட்ட நாளுக்குள்ள தான் ஏதோ நடந்து, வினயா காணாமல் போயிருக்காங்க…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“இன்ஸ்பெக்டர், இன்னொரு விஷயம்…” என்று பரபரப்பாகச் சொன்னார் சேதுராமன்.

“சொல்லுங்க…”

“இந்த வாரத்தில் எங்க சொந்தத்தில் ஒரு கல்யாணம் இருந்தது. திங்கட்கிழமை கல்யாணம் வேலூர்ல நடந்துச்சு. ஆனால் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க சென்னை என்பதால் புதன்கிழமை ஈவ்னிங் இங்கே ரிசப்ஷன் வச்சுருந்தாங்க. அதுக்குப் போகப் போறதா என் மனைவி சொல்லிட்டு இருந்தாள். அதுக்கு அவள் போயிருந்தால் என் பொண்ணு காணாமல் போன தேதி என்னைக்குனு தெரியும்னு நினைக்கிறேன்…” என்றார்.

“யெஸ், அதே போலச் சக்தி கம்ப்யூட்டர் சென்டரில் என்னைக்குக் கடைசியா வினயா வேலைக்கு வந்தாள்னு கேட்டாலும் காணாமல் போன தேதி தெரியும்…” என்றாள் ஜனார்த்தனி.

“உங்க மனைவி போனில் சக்தி கம்ப்யூட்டர்ல இருக்குற யார் போன் நம்பராவது இருந்ததா?” என்று கேட்டான் ஜெகன்.

“சக்திவேல்னு புதுசா ஒரு நம்பர் இருந்தது சார். அதுவா இருக்கலாம்னு நினைக்கிறேன்…” என்று சேதுராமன் சொல்ல,

“கான்ஸ்டபிள், நீங்க அந்தச் சக்திவேல் நம்பருக்குப் போன் போட்டு சக்தி கம்ப்யூட்டரானு கேளுங்க. அப்படி அவங்கதான்னா வினயா எப்போ கடைசியா வேலைக்கு வந்தாங்கனு கேளுங்க. சேதுராமன் நீங்க உங்க ரிலேட்டிவ் வீட்டுக்குப் போன் போட்டு ரிசப்ஷனுக்கு உங்க மனைவி வந்தாங்களானு கேளுங்க…” என்றான்.

இருவரும் பேசிவிட்டு வந்தவர்கள், “அந்த நம்பர் சக்தி கம்ப்யூட்டரோட ஓனர் சக்திவேல் நம்பர் தான் சார். புதன்கிழமை சாயங்காலம் நாலு மணிக்கு வேலையை முடிச்சுட்டு வினயா வீட்டுக்குக் கிளம்பியதா சக்திவேல் சொன்னார். வியாழக்கிழமையான நேத்து வேலைக்கு வரலை, லீவும் சொல்லலைனு சொன்னார்…” என்று கான்ஸ்டபிளும், “கஸ்தூரி, வினயா இரண்டு பேருமே ரிசப்ஷன்னுக்குப் போயிருக்காங்க சார். ஆறு மணி போல வந்தாங்களாம். எட்டு மணி வரை அங்க இருந்திருக்கலாம்னு சொல்றாங்க…” என்று சேதுராமனும் தகவல் சொல்ல,

“அப்போ புதன்கிழமை நைட் எட்டுமணிக்குப் பிறகு இருந்து, வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு நீங்க வீட்டுக்கு வந்ததற்கு முன் உள்ள இடைப்பட்ட நேரத்தில் தான் வினயா காணாமல் போயிருக்காங்க…” என்றான் ஜெகவீரன்.