பிழையில்லா கவிதை நீ – 4
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 4
“மிஸ்.ஜனார்த்தனி, எங்கே இந்தப் பக்கம்?” என்று கேட்ட இன்ஸ்பெக்டர் ஜெகவீரனைத் தானும் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, இதழ்களில் புன்சிரிப்புத் தவழப் பார்த்தாள் அவள்.
“அட! நான் யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்க போல? நீங்க போலீஸே தான்! இப்போ நான் எழுபத்தி ஐந்து சதவீதம் நம்புறேன் இன்ஸ்பெக்டர்…” என்று அந்தப் புன்னகை சிறிதும் மாறாமல் சொன்னாள்.
“அதென்ன எழுபத்தி ஐந்து சதவீதம்?”
“என் பேரை சரியா கண்டுபிடிச்சதுக்கு…” என்றாள் கண்ணைச் சிமிட்டி!
“ஓஹோ! இதுக்கு அப்புறமா உங்ககிட்ட விளக்கம் கேட்குறேன். இப்போ சொல்லுங்க, என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க? சார் யார்?” என்று ஜனார்த்தனியுடன் வந்திருந்தவரைப் பார்த்துக் கேட்டான்.
“இவர் என் ஃபிரண்ட் வினயாவின் அப்பா சேதுராமன். உங்ககிட்ட ஒரு கம்ளைண்ட் கொடுக்க வந்திருக்கோம்…”
“என்ன கம்ளைண்ட்?”
“என் ஃப்ரண்டு வினயாவைக் காணோம். நீங்க தான் கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்…” என்றவளை வியப்பாகப் பார்த்தான்.
“ஏன் அப்படிப் பார்க்கிறீங்க இன்ஸ்பெக்டர்?”
“யுகா டிடெக்டிவ் ஏஜென்சியில் டிடெக்டிவாக இருக்கும் மிஸ்.ஜனார்த்தனி நானே கண்டுபிடிச்சுக்கிறேன்னு கிளம்பாம இந்தப் போலீசாரைத் தேடி வந்திருக்கீங்களே! அதுதான் வியப்பைத் தருது…” என்றான்.
“என் வேலையையும் கண்டுபிடிச்சாச்சா? சரிதான்! இப்போ இங்கே வந்தற்கான காரணம், அங்கிள் முறைப்படி போலீஸில் கம்ளைண்ட் கொடுக்கணும்னு சொன்னார். அதான் வந்தோம். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியலைன்னா சொல்லுங்க, நானே பார்த்துக்கிறேன்…” என்றாள் விறைப்பாக.
“நீங்களே பார்த்துக்கிறதை எல்லாம் இங்கே வர்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும் மேடம். இப்போ டூ லேட்…” என்று அவளிடம் சொன்னவன், பின்பு அவளைக் கண்டு கொள்ளாமல், “சொல்லுங்க மிஸ்டர் சேதுராமன், உங்க பொண்ணு எப்போதிலிருந்து காணோம்?” என்று விசாரித்தான்.
“தெரியலை…” என்ற சேதுராமனின் பதிலில் அவரைக் குழப்பத்துடன் பார்த்தான்.
“தெரியலையா? என்ன பதில் இது?” என்றவன் திரும்பி ஜனார்த்தனியைப் பார்த்தான்.
அவளோ ‘நீயே கேட்டுத் தெரிந்து கொள்!’ என்பது போல் அமர்ந்திருந்தாள்.
மீண்டும் திரும்பிச் சேதுராமனைப் பார்க்க, அவர் விவரம் சொல்ல ஆரம்பித்தார்.
“நான் பத்து வருஷமா கனடாவில் வேலை பார்க்கிறேன் இன்ஸ்பெக்டர். என் மனைவியும், மகளும் மட்டும் இங்கேயே இருக்கிறார்கள். நான் வருஷத்துக்கு ஒரு முறை தான் இங்கே வருவேன். இந்த வருஷம் என் மனைவிகிட்டயும், மகள்கிட்டயும் சொல்லாமல் அவர்களுக்குச் சர்ப்ரைஸ் தரணும்னு கிளம்பி வந்தேன். வந்து பார்த்தால் என் மனைவி ஜடம் போல் வந்து கதவைத் திறந்தாள். அதுவும் நான் ரொம்ப நேரம் விடாமல் கதவைத் தட்டிய பிறகு வந்தாள்.
வீட்டுக்குள்ள போய்ப் பார்த்தால் என் பொண்ணு வினயாவைக் காணோம். பொண்ணை எங்கேனு என் மனைவி கஸ்தூரிகிட்ட கேட்டால், ஒரு மாதிரி முழிக்கிறாள். இல்லனா ஒரு மாதிரி நடுங்கிப் போய் என்னைப் பார்க்கிறாள். நான் எப்படி எப்படியோ கேள்விக் கேட்டுப் பார்த்துட்டேன். ஒரு பதிலும் சொல்லலை. ஒரு கட்டத்தில் மயக்கம் போட்டே விழுந்துட்டாள். அதனால் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனேன். காலையில் இருந்து மதியம் வரை மயக்கத்திலேயே இருந்தாள்.
அப்புறம் முழிப்பு வந்த பிறகும் ஒரு மாற்றமும் இல்லை. டாக்டர் ஏதோ அதிர்ச்சியில் இப்படி ஆகியிருக்கலாம்னு சொன்னார். என்ன அதிர்ச்சி? என் பொண்ணு எங்கே? எதுவும் தெரியாமல் நான் குழம்பிப் போய் நின்னப்ப தான் ஜனாவைப் பார்த்தேன்…” என்று கவலையும், வருத்தமுமாகச் சொல்லி முடித்தவர் ஜனார்த்தனியைப் பார்த்தார்.
“நான் என்னோட வேலை விஷயமா இன்னைக்கு அந்த ஹாஸ்பிடல் போனேன் இன்ஸ்பெக்டர். அப்போ தான் அங்கிளைத் தற்செயலா பார்த்தேன். என்னன்னு விசாரிச்சப்ப தான் விஷயம் சொன்னார். ஏற்கனவே அங்கிள் வினயா நம்பருக்குப் போன் போட்டுப் பார்த்து ரீச் ஆகலைன்னு சொன்னார். நானும் ட்ரை பண்ணினேன். பட், நோ யூஸ்!
அதன் பிறகு வினயாவுக்கும், எனக்கும் இருக்கும் பொதுவான பிரண்ட்ஸ், வினயாவுக்கு மட்டும் இருக்கும் பிரண்ட்ஸ்னு சிலரை காண்டாக்ட் பண்ணிப் பார்த்தேன். யாருக்கும் வினயா பற்றித் தெரியலைன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு மேலேயும் அமைதியா இருக்கக் கூடாது, போலீஸ்ல போய் முறைப்படி கம்ளைண்ட் கொடுக்கணும், கூட வர முடியுமானு அங்கிள் கேட்டார், வந்துட்டோம்…” என்று மேலும் விவரம் சொன்னாள் ஜனார்த்தனி.
“ஓ! ஓகே…” என்று விவரம் கேட்டுக் கொண்டவன், “நீங்க வீட்டுக்கு வந்தப்போ வீட்டுச் சூழ்நிலை எப்படி இருந்தது? யாரும் வந்து போனதற்கான அடையாளம், கொள்ளை அடிச்சதுக்கான அடையாளம், பொருட்கள் கலைந்து இப்படி எதுவும் இருந்ததா?” என்று சேதுராமனிடம் விசாரித்தான்.
“கலைந்து எல்லாம் இல்லை சார். எல்லாமே வச்சது வச்ச இடத்தில் இருந்தது. பொண்ணு மட்டும் இல்லை. அதுவும் இல்லாம என் மனைவி பிரமை பிடித்தது மாதிரி இருந்ததில் வேற எதுவும் நான் தேடலை…” என்றார்.
“உங்க பொண்ணுக்கு காதல் ஏதாவது இருந்ததா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க,
“இல்லை இன்ஸ்பெக்டர், காதல் எல்லாம் இல்லை…” என்று வேகமாக மறுத்தார்.
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? வீட்டில் எதுவும் கலையலைனு சொல்றீங்க. ஆனா பொண்ணு மட்டும் காணோம். ஒருவேளை உங்க பொண்ணுக்கு காதல் இருந்து, அவள் வீட்டை விட்டு வெளியே போய், அந்த அதிர்ச்சியில் உங்க மனைவிக்கு அப்படி ஆகியிருக்கலாம் இல்லையா?” என்று கேட்டான்.
“என்ன இன்ஸ்பெக்டர் இப்படி எல்லாம் கேட்குறீங்க? என் பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணு இல்லை…” தகப்பனாகப் பதறிப் போய்ச் சொன்னார்.
“வினயா காதலில் விழுந்திருக்கலாம் என்பது என் ஊகம் தான். அது மட்டுமே நடந்திருக்கும்னு சொல்ல வரலை. ஆனா நீங்க சொன்ன விவரத்தை வைத்துப் பார்க்கும் போது அந்தச் சந்தேகம் தான் முதலில் வருது…” என்று அவரிடம் சொன்னவன் ஜனார்த்தனியின் புறம் திரும்பி, “நீங்க சொல்லுங்க ஜனார்த்தனி, உங்களுக்கு ஃபிரண்ட் என்பதால் இன்னும் விவரம் தெரிந்து இருக்கலாம். வினயாவிற்குக் காதல் எதுவும் இருந்ததா?” என்று கேட்டான்.
“எனக்கு அது பற்றித் தெரியாது இன்ஸ்பெக்டர். ஏன்னா, நான் வினயாவிடம் பேசியே ஆறு மாசம் ஆகுது. அதுக்கு முன்னாடி எனக்குத் தெரிந்த வரை அவளுக்குக் காதல் இல்லை…” என்றாள்.
“நீங்க இரண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் தானே?”
“ஆமாம்… அதில் என்ன சந்தேகம் இன்ஸ்பெக்டர்?”
“அப்புறம் ஏன் ஆறு மாசமா பேசலை?”
“காலேஜ் படிக்கும் போது நாங்க இரண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ். அதுக்குப் பிறகு எங்கயாவது பார்த்தால் பேசிப்போம். எப்பவாவது போனில் பேசிப்போம். கடந்த சிக்ஸ் மந்தா நான் என் வேலையில் பிஸி. வினயாவும் எனக்குக் கால் பண்ணலை…” என்றாள்.
“வினயா வேலை பார்க்கிறார்களா?” என்று சேதுராமனிடம் கேட்டான்.
“ஆமா இன்ஸ்பெக்டர், சக்தி கம்ப்யூட்டர் சென்டரில் ஆறு மாதமாக டீச் பண்ணிட்டு இருக்காள்…” என்றார் சேதுராமன்.
“அங்கே வினயா பற்றி விசாரிச்சீங்களா?”
“அங்க யாரோட நம்பரும் எனக்குத் தெரியாது…”
“உங்க மனைவிக்குத் தெரிந்து இருக்கலாம்…”
“இருக்கலாம், ஆனா இப்போ அவள் பேசும் நிலையில் இல்லையே…”
“அவங்க போனில் நம்பர் இருக்கலாம். உங்க மனைவியின் போன் எங்கே?”
“வீட்டில் இருக்கு சார்…”
“ஓகே, நீங்க கம்ளைண்ட் எழுதிக் கொடுங்க. நாங்க வந்து விசாரிக்கிறோம். முதலில் உங்க வீட்டை தான் செக் பண்ணனும். வினயா அவங்களா வெளியே போனாங்களா? இல்லை, வேறு எதுவும் அசம்பாவிதம் நடந்ததானு செக் பண்ணனும். அதுக்குப் பிறகு உங்க மனைவியின் போன் வேணும். அவங்க லாஸ்டா யார்கிட்ட பேசினாங்கனு செக் பண்ணனும். வினயா போன் நம்பர் வேணும். எங்க டிப்பார்மெண்ட்ல சொல்லி அவங்க நம்பரை ட்ரேஸ் பண்ண முடிகிறதானு பார்க்கணும்…” என்று வரிசையாக அடுத்து நடக்க வேண்டியதை சொன்னவன், வினயாவின் அலைபேசி எண்ணை முதலில் வாங்கி அதற்கான ஏற்பாட்டைச் செய்தான்.
அதற்குள் புகார் கடிதமும் தயார் ஆகியிருக்க, உடனே கிளம்பினான்.
காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், “நீங்க எதில் வந்தீங்க ஜனார்த்தனி?” என்று விசாரித்தான்.
“நான் என் ஸ்கூட்டியில் தான் ஹாஸ்பிடலில் இருந்து அங்கிளையும் கூட்டிட்டு வந்தேன்…”
“இப்போ உங்க அடுத்தப் பிளான் என்ன? வினயா வீட்டுக்கு வர போறீங்களா?”
“கண்டிப்பா இன்ஸ்பெக்டர். என் ஃபிரண்ட் கிடைக்கிற வரை என்னோட வேலை அவளைத் தேடுவது மட்டும் தான். உங்க வழியில் நீங்க முயற்சி செய்ங்க. என் வழியில் ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்…”
“ஓகே, ஆனா எங்க வேலையில் உங்க மூக்கைத் தேவையில்லாமல் நுழைக்கக் கூடாது…” என்று கண்டிஷன் போலச் சொன்னவன், “அப்போ நீங்க என் கூடக் காரில் வாங்க. உங்க வண்டியில் கான்ஸ்டபிளும், மிஸ்டர் சேதுராமனும் வரட்டும். உங்ககிட்ட நான் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு…” என்றான்.
“ஓகே போகலாம்…” என்றவள் வண்டிச் சாவியை அவன் சொன்ன கான்ஸ்டபிளிடம் கொடுத்துவிட்டுக் காவல் வாகனத்தில் ஏறினாள்.
முன்னால் இருசக்கர வாகனத்தில் அவர்கள் செல்ல, ஜெகவீரனும், ஜனார்த்தனியும் இன்னொரு கான்ஸ்டபிளும் காரில் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
வாகனம் கிளம்பியதும் அவள் புறம் திரும்பியவன், “அதென்ன எழுபத்தி ஐந்து பிரசண்ட்டேஜ் மிஸ் ஜனார்த்தனி?” என்று கேட்டான்.
“சொல்றேன் இன்ஸ்பெக்டர். அதுக்கு முன்னாடி ஒவ்வொரு முறையும் இனி மிஸ் ஜனார்த்தனினு சொல்ல வேண்டாம். ஜனா சொல்லுங்க போதும். அதே போல நான் உங்களை ஜெகா தான் சொல்லுவேன். என்னடா இவ மூணு முறை பார்த்துட்டு நாலாவது முறை பேரைச் சுருக்கிட்டாள். எப்படி இவள் சுருக்கலாம்னு எல்லாம் சண்டைக்கு வரக்கூடாது. என் பேரைச் சுருக்க நானே முன் வந்தேன்ல, அது போல உங்க பேரைச் சுருக்குவது என்னோட உரிமை. உங்களைப் போல என்னால நீட்டி முழங்கி இன்ஸ்பெக்டர் ஜெகவீரன்னு சொல்ல முடியாது…” என்று நானே எல்லாம் முடிவு செய்வேன் என்பது போல் படபடவெனப் பொரிந்தவளைக் கண்டு வியந்து பார்த்தவன் பக்கென்று சிரித்து விட்டான்.
“உங்க பெயரை நீங்க சுருக்கமா சொல்ல உரிமை இருப்பது போல், என் பேரைச் சுருக்கமா சொல்லிக்கலாம்னு நான் தானே சொல்லணும் மேடம். அதுக்கான உரிமை எனக்குத் தானே இருக்கு?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“இருக்கு… இருக்கு… யாரு இல்லனு சொன்னா?”
“பின்ன, நீங்களே அந்த உரிமையை எடுத்துக்கிட்டா எப்படி?”
“சில நேரம் எல்லாம் உரிமையைத் தானா எடுத்துக்கணும். அவங்களா தருவாங்கனு இருந்தால் வேலைக்கு ஆகாது…” என்று அலட்சியம் போல் சொல்லித் தோளை குலுக்கிக் கொண்டாள்.
அவள் அலட்சியம் போல் சொன்னாலும், அவளிடம் இலகுத்தன்மை இருந்தது. ‘நட்பாக இருக்கலாம் வா!’ என்பது போலான இலகுத்தன்மை. அது அவனிடமும் இளக்கத்தைத் தந்திருக்கப் புன்னகைப் புரிந்தான்.
“நீங்க விவரம் தான்…” என்று மேலும் ஏதோ பேசப் போனவனை “வெயிட்! வெயிட்! இந்த ‘ங்க, போங்க’னு பொங்க(ல்)ள் எல்லாம் இங்கே வேண்டாம். பன்மைக்குப் பாய் சொல்லிட்டு, ஒருமைக்கு என்ரி கார்ட் போட்டுக்கோங்க போதும்…” என்றாள் பெருந்தன்மையாக.
அவள் காட்டிய பாவனை அப்படித்தான் இருந்தது.
கைகளை ஆட்டி, முகத்தில் பாவங்களைப் பிரதிபலித்து அவள் காட்டிய பாவனையில் அவனின் சிரிப்பு விரிந்தது.
“பிறந்ததில் இருந்தே இந்த டிசைன் தானா ஜனா?” பிகு பண்ணாமல் ஒருமைக்குத் தாவி கேலியாகக் கேட்டான்.
“நோ, நோ… இது தானா வந்த டிசைன் இல்லை. நானே உருவாக்கிக் கொண்ட டிசைன்….” என்று சொல்லிப் பெருமையாக அவள் போட்டிருந்த டீஷர்ட்டின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள்.
இலகுவாக, படபடவென்று, யாரோ மூன்றாம் மனிதரிடம் போல் இல்லாது, சகஜமாகப் பேசியவளை உள்ளூர தோன்றிய வியப்புடன் தான் பார்த்தான் ஜெகவீரன்.
அதுவும் ‘நானே உருவாக்கிக் கொண்ட டிசைன்’ என்று சொல்லும் போது, தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் கல்கி சிலை போல் தான் கம்பீரமாக மிளிர்ந்தாள்.
“சரி, அந்த எழுபத்தி ஐந்துக்கு வருவோம்…” என்று தானே எடுத்துக் கொடுத்தான்.
“வர்றேன் ஜெகா, என்ன அவசரம்? அதுக்கு முன்னாடி என்னை எப்படிக் கண்டுபிடிச்சீங்க? சம்பளம் இல்லாமலேயே ஸ்பெஷல் டூட்டில போலீஸ் வேலை பார்த்தீங்களோ?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
“பின்ன, வேற என்ன செய்றது? ஒரே முக ஜாடை இருக்குற பொண்ணு! ஆனா ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பேரு, வேலையும் வேற, பேச்சும், பாவனைகளும் வேறு. தழும்பு மாறி மாறி இடம் மாறினாலும் இந்தப் பொண்ணு ஒரே பொண்ணு தான்னு முணுமுணுக்குற மனசு. உலகத்தில் ஒருத்தரை போலவே ஏழு பேரு இருப்பாங்கனு எல்லாம் நினைக்கத் தோணாம, போலீஸ் மூளை அந்தப் பொண்ணைப் பற்றிக் கண்டுபிடினு பிராண்ட, சம்பளமே இல்லாத ஸ்பெஷல் டூட்டி பார்த்துக் கண்டுபிடிச்சேன்…” என்றான்.
“பரவாயில்ல, ஒரு போலீஸையே சுத்தலில் விட்டிருக்க ஜனா! குட்!” என்று தன் தோளின் மீது தட்டி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டாள்.
அதில் ஜெகன் அவளைப் பொய்யாக முறைக்க, அதைத் தூசு போலத் தட்டி விட்டாள்.
அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், “நெற்றியிலேயும், நாடிலேயும் தழும்பு ரொம்ப வருஷமா இருக்குற மாதிரி தானே இருக்கு. அது எப்படி அப்பப்போ மறைஞ்சு போச்சு?” என்று கேட்டான்.
“ம்ம்… பலவருஷமா இருக்குற தழும்பு தான்…” என்று இரண்டு தழும்புகளையும் தடவி ஏதோ ஒரு மாதிரியான குரலில் சொன்னவள், சட்டென்று தலையைக் குலுக்கி அவனைப் பார்த்துச் சிரித்து, “தழும்பு காணாமல் போனது எல்லாம் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி! அந்த ரகசியத்தை எல்லாம் சொல்ல முடியாது…” என்றாள் அலட்டலாக.
“அட! பெரிய சீக்ரெட் தான்! இப்போ எல்லாம் உடம்பில் அடிப்பட்டு ரத்தம் வர்ற போல ஒட்ட எத்தனையோ ஸ்டிக்கர்கள் கிடைக்குது. வேஷம் போட கிட் கிடைக்கிறதுக்குப் பஞ்சமா என்ன?” என்றான் அவளை விட அசால்டாக.
“உங்களுக்கே தெரியுதுல, அப்புறம் என்ன கேள்வி? ஆம்பளைங்க நீங்க தாடி ஒட்டுவீங்க, மீசையை எடுப்பீங்க, இல்லேன்னா பெரிசாக வைப்பீங்க. பொண்ணுங்க என்ன செய்றது? அதான் இப்படி! நீங்களே கொஞ்சமா குழம்பினீங்க தானே? அதுதான் எனக்கு வேணும். அதனால் இதுபோல என் வேலைக்காகச் சின்னச் சின்ன மாறுதல் செய்துப்பேன். நீங்க என்னைப் பார்த்தப்ப நான் எடுத்துக் கொண்டது எல்லாம் சாதாரணக் கேஸ். அதனால் சின்னத் தழும்பு மறைவு, பெயர் மாற்றம் போதும். இதே பெரிய கேஸ்னா என்னை நீங்க அவ்வளவு சீக்கிரம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது…” என்றாள்.
“கேஸ் கண்டுபிடிக்க அங்கே வேலையும் பார்ப்பியா ஜனா?” என்று விசாரித்தான்.
“யெஸ்… சில நேரம் ஆப்போசிட் பார்ட்டி கூடவே இருந்து கண்காணிக்கிற மாதிரி இருக்கும். அதனால் அந்த இடத்தில் வேலைக்குச் சேருவேன். சேருற வேலைக்குத் தகுந்த மாதிரி வேலையும் பார்க்கணுமே? அதுதான் நம்ம பீச், காஃபி ஷாப் சந்திப்பு! பப்புக்கு ஒருத்தரை பின் தொடர்ந்து அங்கே வந்தேன்…” என்றாள்.
“உன்னோட சேஃப்டி?” என்று கேட்டான்.
பார்க்கத் துடிப்பானவளாக, தைரியம் மிக்கவளாகத் தெரிந்தாலும், ஏனோ அந்த நேரம் அவளிடம் அவனுக்கு அந்தக் கேள்விக் கேட்கத் தோன்றியது.
“என் சேஃப்டியை என்னாலேயே பார்த்துக்க முடியும். ஆனாலும் என்னோட பாஸ் இருக்காரே பாஸ், யுகா டிடெக்டிவ் ஏஜென்சி ஓனர் மிஸ்டர் கவியுகன்! தன்கிட்ட வேலை செய்யும் பொண்ணோட சேஃப்டி முக்கியம்னு எனக்கே தெரியாம என்னைப் பாதுகாக்க ஒரு ஏற்பாட்டைப் பண்ணி வச்சுருப்பார்.
அது எனக்குத் தெரிஞ்சாலும், என் பாஸோட திருப்திக்காகத் தெரியாதது போலக் காட்டிப்பேன். அதனால் சேஃப்டி பத்தி நோ டென்ஷன்…” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு ஜெகவீரனுக்கு உள்ளுக்குள் பெருத்த நிம்மதி உண்டானது.
‘தனக்கு ஏன் அந்த நிம்மதி?’ என்று அவன் யோசிக்கவில்லை. யோசிக்க நேரமும் இல்லாமல் வினயாவின் வீடு வந்திருந்தது.