பிழையில்லா கவிதை நீ – 30 (Final)

அத்தியாயம் – 30

பட்டென்று விஷயத்தைப் போட்டுடைத்த ஜனார்த்தனியைச் சலனமே இல்லாமல் பார்த்தான் ஜெகவீரன்.

‘அவன் அதிர்ந்து போவான், தன்னை அருவெறுப்பாகப் பார்ப்பான், முகத்தைச் சுளிப்பான்’ என்று ஜனா நினைத்த மாற்றம் எதுவும் அவனிடத்தில் வரவில்லை.

‘காரணத்தைச் சொல்லிவிட்டாயா? சரி!’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை ஜனா…” என்றான் அமைதியாக.

“அது…” அவள் ஏதோ சொல்ல வர,

“இரு! நான் பேசி முடிச்சுக்கிறேன்…” என்று அவளின் பேச்சை நிறுத்தினான்.

“அன்னைக்கு ஒருநாள் காரில் போகும்போது சொன்னியே ஜனா… ‘என்னை நானே செதுக்கிக் கொண்டேன்’ என்று? அப்படியே கெத்தா! கம்பீரமா! அந்த ஜனார்த்தனி எங்கே போனாள் ஜனா?” என்று கேட்டான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் முழித்தாள் ஜனார்த்தனி.

“உனக்குச் சரியாக விவரம் புரியாத வயதில் எவனோ ஒரு மிருகம் உன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாலேயே நீ அப்பழுக்கானவள்னு சொல்லுவன்னு நான் எதிர்பார்க்கலை ஜனா…” என்றவனை விழிகளைப் பெரிதாக விரித்துப் பார்த்தாள்.

“உங்க… உங்களுக்குத் தெரியுமா? எப்படி?” என்று தயக்கத்துடன் நம்ப முடியாமல் கேட்டாள்.

“என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு அன்னைக்கு நீ என்கிட்ட கேட்டப் போதே உன்னைப் பத்தி நான் தெரிந்து கொண்டது போதாதுன்னு எனக்குத் தெரிந்துவிட்டது.

அதனால் உன்னைப் பற்றி முழு விவரமும் தேடித் தேடித் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ உன்னைப் பற்றிய எல்லா விவரமும் இதோ இங்க இருக்கு…” என்று விரல் நுனியைக் காட்டினான்.

அவன் அப்படிச் சொன்னதும் தளர்ந்து தொப்பென்று சோஃபாவில் அமர்ந்தாள்.

முகத்தை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டவள், “அப்பழுக்கானவள்னு நான் சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா கல்யாணம்னு வரும் போது…” என்று மேலும் சொல்ல முடியாமல் அவள் தடுமாற,

“நான் உன்னைத் தப்பா நினைச்சு இப்படிப்பட்ட உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு தூக்கி எரிந்து விட்டுப் போயிடுவேன்னு உனக்குப் பயம். அதான் என்னைக் காதலிக்கிறதைக் கூட என்கிட்ட சொல்லக் கூடாதுன்னு என்னை விலக்கி வைக்கும் வேலையை மட்டும் செய்யணும்னு நினைச்ச…” என்று அவளின் எண்ணத்தை அப்படியே ஒப்பித்தான்.

அவள் பதில் சொல்லாமல் அவனின் முகத்தைப் பார்க்காமல் அமர்ந்திருக்க, “என் முகத்தைப் பார் ஜனா…” என்றான்.

“நீ வெர்ஜின் இல்லைன்னு எதை வைத்துச் சொன்ன ஜனா? ஒரு பொண்ணை உடல் ரீதியா துன்பப்படுத்தி ஒரு ஆண்மகன் தன் இச்சையைத் தீர்த்துக்கிட்டதாலேயே அவள் கன்னிப்பொண்ணு இல்லைன்னு அர்த்தம் ஆகிவிடுமா?

பொண்ணோட கற்பு அவள் உடம்பில் இல்லை ஜனா. அவள் மனசில் இருக்கு. உன் மனசு அப்பழுக்கற்றது ஜனா!

என் ஜனாவோட மனசைத்தான் விரும்புறேனே தவிர, அவள் உடலை மட்டும் இல்ல…” என்றான்.

ஆழ்ந்த குரலில் பேசியவனை இமை சிமிட்டாமல் பார்த்தாள் ஜனார்த்தனி.

“நீங்க பேசுறதைக் கேட்க நல்லா இருக்கு. ஆனா…” என்று அவள் ஏதோ சொல்ல,

“இப்போ இப்படிப் பேசிட்டுப் பின்னால் நான் எதுவும் குத்திக் காட்டுவேன்னு நினைக்கிறாயா?” என்று அவள் கேட்க நினைத்த கேள்வியை அவனே கேட்டு முடித்தான்.

“ம்ம்… சுனில் மேல நான் கேஸ் போட்டதுக்கு உனக்குக் களங்கம் வர்றது எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னீங்க. ஆனா இப்போ நான் களங்கப்பட்டிருப்பது தெரிந்தும் அதெல்லாம் ஒன்னுமில்லை என்பது போல் பேசறீங்க…” என்றாள்.

“சோ, அதை மனதில் வைத்துக் கொண்டு தான் என்னை அவாய்ட் பண்ணியிருக்க?” என்றவன்,

“ஒரு மிருகம் அடங்காமல் துள்ளிக்கிட்டே இருந்தால் அதை எப்படி அடக்கணும்னு யோசிக்கணுமே தவிர, அதுகிட்ட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கக் கூடாது. சுனில் போல ஆளுங்களை எல்லாம் நீ பண்ணியது தப்புடான்னு சொல்லிச் சொல்லி அடிக்கணுமே தவிர, நம்ம பேருக்கு கெட்ட பெயர் வர வைத்துக் கொண்டு அவனைப் போல ஆளுங்களைத் தண்டிக்கக் கூடாது. அவன் எல்லாம் அந்த அளவுக்கு ஒர்த்தான ஆளே இல்லை…” என்றான்.

“நீங்க சொல்றதும் சரிதான். அந்த நேரத்தில் நான் சட்டு சட்டுன்னு தான் முடிவெடுத்தேன்…” என்றவள், “என்னைப் பத்தி தெரிஞ்ச பிறகும் உங்க முடிவில் மாற்றம் இல்லையா?” என்று கேட்டாள்.

“உன்னைப் பத்தி தெரிஞ்ச பிறகு எனக்குள் நிறைய மாற்றம் வந்திருக்கு…” என்று சொல்லி நிறுத்தியவன், அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே மேலும் தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தும், இப்போ ஒரு டிடெக்டிவா கம்பீரமா, கெத்தா உயர்ந்து நிற்கும் ஜனா கூடவே நானும் இருக்கணும்னு ஆர்வம் அதிகமாகியிருக்கு.

கெட்டதுலயும் நல்லது பார்க்கும் உன்னோட குணத்தைப் பிரகாஷ் அம்மா விஷயத்தில் அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணி சேதுராமன்கிட்ட பேசினப்ப பார்த்தேன். அந்தக் குணமுள்ள என் ஜனா கூட என் வாழ்க்கை இருக்கணும்னு எதிர்பார்ப்பு எனக்கு அதிகமாகியிருக்கு.

முரட்டுக் குழந்தையா வெளியே காட்டிக்கிட்டாலும் மென்மையான மனசுள்ள ஜனாவின் காதலும், அரவணைப்பும் எனக்கே எனக்கு மட்டும் தான் வேணும்னு பேராசை எக்கச்சக்கமா இருக்கு…” என்றான்.

ஜனாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்போதும் பதிலுக்குப் பதில் பேசுபவள் அவனின் கண்களில் மின்னிய காதலில், அவனின் பேச்சில் இருந்த உருக்கத்தில், அவனின் எதிர்பார்ப்பில் மௌனத் தாரகையாகிப் போனாள்.

அவளின் அமைதியைப் பார்த்தவன் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து “இன்னும் என்ன தயக்கம் ஜனா? என் ஜனா பிழையில்லாத கவிதை போன்றவள்.

ஆமாம் ‘பிழையில்லா கவிதை நீ!’. என் ஜனா எப்படி இருக்காளோ அப்படியே தான் அவளை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன். இப்போ சொல்லு… நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்றவனை இமைகளைச் சிமிட்டாமல் பார்த்தாள்.

அவளுக்கு ஏதோ நெஞ்சை அடைத்து வைத்திருந்த பாரம் எல்லாம் விலகியது போல் இருந்தது.

“உங்க வார்த்தை ஒவ்வொன்னும் என் மனதை உருக்குது. என்னை இவ்வளவு விரும்பும் ஒருத்தர் எனக்குக் கிடைப்பார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

பதினாலு வயசுல, என்ன ஏதுன்னு புரியாமல் இருந்த ஒரு நிலையில் ஒருத்தன் உடலால் என்னைக் கொத்திக் காயப்படுத்தினப்ப மனசளவுலயும், உடலளவுலயும் அப்படியே செத்துப் போயிருந்தேன் ஜெகா.

அப்போ எல்லாம் வாழணும்னு ஆசையே இருக்காது. ஒரு இரண்டு வருஷம் வெளி உலகத்தைப் பார்க்க கூடப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். அப்போ தான் ஒரு நாள் அப்பா என்கிட்ட பேசினார்.

நம்ம வாழ்க்கை எப்படி இருக்கணும்னு நாம தான் முடிவு பண்ணனும் ஜனாமா.

அதை முடிவு பண்ண இரண்டே வழிகள் தான் இருக்கு.

அது… வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்ளவா? சீரமைத்துக் கொள்ளவா? என்று யோசித்தாலே போதும்.

சீரழிந்து – சீரமைத்து என்ற இரண்டு தராசில் எந்தப் பக்கம் நமக்கு நன்மை தரும் என்று யோசி! உனக்கான விடை கிடைக்கும்! என்று சொன்னார்.

அதுக்குப் பிறகு தான் நிறைய யோசிச்சேன். நான் என்ன தப்பு செய்தேன்னு இப்படி முடங்கிப் போய் என் வாழ்க்கையை இப்போ நானே சீரழித்துக் கொண்டிருக்கிறேன்னு தோணுச்சு. அப்ப முடிவு பண்ணினேன். இனி வரும் ஒவ்வொரு நாளையும் என்னை நானே சீரமைத்து நல்லா வாழ்ந்து காட்டணும்னு எனக்குள் ஒரு வெறி.

அந்த வெறியை வெற்றியாக மாற்ற உதவியது என் பேரண்ட்ஸ் தான். நான் துவண்டு விழும் போதெல்லாம் நான் இருக்கிறேன் உனக்குன்னு என்னைத் தோள் கொடுத்து தாங்கினாங்க.

வெளியே போய் வேலை பார்க்கணும்னு எண்ணம் வந்தப்ப, இந்த டிடெக்டிவ் வேலையைத் தேர்ந்தெடுக்க உதவியதும் அப்பா தான். நாட்டில் எத்தனையோ குற்றங்கள் நடக்குது. அதை எல்லாம் நம்மால் ஒன்னும் செய்ய முடியாம பார்த்துட்டுத்தான் இருக்கோம்.

அப்படி இருக்காம குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது மட்டும் இல்லாம, நானும் வேற எந்தச் சிந்தனைக்கும் இடம் கொடுக்காம, இந்த வேலை மூலமா என் மனநிலை மாறவும் உறுதுணையா இருந்தார்.

என்னை நானே செதுக்கிக் கொண்டேன்னு சொல்வதை விட, என்னைச் செதுக்கிக் கொள்ள உளியாக இருந்தது என் பெற்றோர் தான். அப்படிப்பட்ட அவர்கள் என்னிடம் கேட்ட ஒரே ஒரு விஷயம் என்னோட கல்யாணம்.

ஆனா அவங்களுக்கு அந்தச் சந்தோஷத்தை என்னால் கொடுக்க முடியாமலே போய்விடுமோ என்று கூடப் பயந்திருக்கிறேன். உங்களை விரும்பிய பிறகும் கூட…” என்று சொல்லி நிறுத்தி அவனின் முகத்தைப் பார்த்தாள்.

‘உன் மனநிலை எனக்குப் புரிகிறது’ என்பது போல் தலையை அசைத்தான் ஜெகவீரன்.

“என்னோட அந்தப் பயத்தைப் போக்கிய உங்களை இப்போ எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்குது. நம்ம கல்யாணத்தைப் பத்தி எங்க அப்பா, அம்மா கிட்ட பேசுங்க…” என்றாள் ஜனார்த்தனி

“ஹலோ மேடம்! அதெல்லாம் ஏற்கனவே அவங்ககிட்ட பேசியாச்சு. சம்மதமும் வாங்கியாச்சு. இப்ப கிடைக்க வேண்டியது உன்னோட சம்மதம் மட்டும் தான். உன்னோட பதிலை மட்டும் நீ சொல்லு…” என்றான்.

“என்ன? பேசிட்டீங்களா? இது எப்போ?” என்று வியப்புடன் கேட்டாள்.

“நேத்தே பேசிட்டேன். உள்ளே போய்ப் பாரு. உங்க அம்மா இந்த மாப்பிள்ளைக்குத் தடப்புடலா விருந்து ரெடி பண்ணிட்டு இருக்காங்க. உங்க அப்பா விருந்துக்கு இலை வாங்க போயிருக்கார். அதுமட்டுமில்ல… நம்ம கல்யாணத்தைப் பேசி முடிவு பண்ண இப்போ என்னோட அப்பாவும், அம்மாவும் வரப்போறாங்க…” என்று அவன் அடுத்தடுத்து அதிர்வெடிகளை எடுத்து வீசினான்.

“அடப்பாவி!” என்று வாயில் கை வைத்தாள் ஜனார்த்தனி.

“எல்லாத்தையும் நீங்களே பேசி முடிச்சுட்டு… இப்போ என்கிட்ட கல்யாணத்துக்குச் சம்மதமான்னு கேட்பது என்ன கண்துடைப்பா?” என்று முறைத்துக் கொண்டே கேட்டாள்.

“எப்படியும் நீ சம்மதம் சொல்வாய் என்ற நம்பிக்கை தான்…” என்றான் சிரித்துக்கொண்டே.

“நான் சம்மதிக்கலைனா?” என்று கிண்டலுடன் கேட்டாள்.

“நீ சம்மதிச்சா இன்னைக்கு நடக்கப் போறது நம்ம கல்யாணம் முடிவான நாள் விருந்து. சம்மதிக்கலேனா நம்ம ரெண்டு ஃபேமிலியும் பிரெண்ட்ஸா மீட் பண்ணிக்கிற விருந்து…” என்று சீரியஸாகச் சொன்னவனை ஆழ்ந்து பார்த்தாள்.

“பெரியவங்க சம்மதம் மட்டும் போதாது. நீ முழு மனசோட சம்மதிச்ச பிறகு தான் நம்ம கல்யாணம் முடிவாகும். உன் சம்மதம் இல்லாம வேற எதுவுமே நடக்காது…” என்று தொடர்ந்து சொன்னவனின் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

“நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கீங்க வீரா. அதனால் நான் உங்களையே கல்யாணம் கட்டிக்கிறேன்…” என்று கிண்டலாகச் சொல்வது போல் இருந்தாலும், மனப்பூர்வமாகத் தன் சம்மதத்தைச் சொன்னாள்.

“ஹேய்!” என்று சந்தோஷ கூச்சலிட்டவன் தன் அருகில் அமர்ந்திருந்தவளின் தோளில் கையைப் போட்டு இன்னும் தனக்கு நெருக்கமாக அமர வைத்துக் கொண்டான்.

“ஹலோ… என்ன டச்சிங் டச்சிங் அதிகமா இருக்கு?” என்று அவள் பொய்க் கோபத்துடன் கேட்டாள்.

அவனிடம் தன் மனதை மறைக்கப் போராடியது மாறி இன்று வெளியிட்டுவிட்டதில் நிம்மதியாக உணர்ந்தவள் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள்.

“இனி அப்படித்தான் இருக்கும். அதைக் கண்டுக்காதே! நீ சொல்லு, அது என்ன புதுசா வீரா?” என்று வியப்புடன் கேட்டான்.

“அது…” என்று அவள் பதில் சொல்ல வாயைத் திறந்த நொடி வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

“உன் மாமியார், மாமனாரும், என் மாமனாரும் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். போய்க் கதவைத் திற!” என்றான்.

ஜெகன் சொன்னது போலவே அவனின் பெற்றோரும், அவளின் தந்தையும் தான் வந்திருந்தனர்.

கதவைத் திறந்த மகளின் முகத்தில் இருந்த பிரகாசமே அவள் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டாள் என்று பகலவனுக்குப் புரிய வைத்து விட மகளை மகிழ்வுடன் பார்த்தார்.

அடுத்து வந்த மணி துளிகள் இரு வீட்டு பெற்றவர்களின் அறிமுகப்படலமும், விருந்தும், திருமணப் பேச்சும் நடைபெற்றன.

பகலவன், சுகுமாரி முகத்தில் முன்பு இருந்த ஒரு வித இறுக்கம் மறைந்து இருவரின் முகமும் மகிழ்ச்சியை மட்டுமே பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

மதிய விருந்து முடிந்ததும் ஜனாவை வெளியே அழைத்துச் செல்ல பெரியவர்களிடம் அனுமதி வாங்கினான் ஜெகவீரன்.

அவர்கள் சம்மதித்ததும் அவனின் இருசக்கர வாகனத்தில் இருவரும் கிளம்பினர்.

“எங்கே போறோம் வீரா?” என்று வண்டி கிளம்பியதும் கேட்டாள் ஜனா.

“ஏய்! அதென்ன புதுசா வீரா? அப்பயே கேட்டேன். இன்னும் நீ பதில் சொல்லலை…” என்றான்.

“பதில் அப்புறம் சொல்றேன். நீங்க இப்போ நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க. எங்கே போறோம்?”

“அங்கே போனதும் உனக்கே தெரிஞ்சுடும். அதனால என் கேள்விக்குப் பதில் சொல்லு…”

“ஹப்பா! விட மாட்டீங்களே?” என்று அலுத்துக் கொண்டவள், “கேஸுக்கு மட்டும் தான் ஜெகா பேர். ஜெகா-ஜனா பிராஜெக்ட் பேருக்கு அப்போ தான் பொருத்தமா இருக்கும். பர்ஷனலுக்கு மட்டும் வீரா தான். அதுவும் என் வீரன்!” என்று பின்னால் இருந்து சற்று குனிந்து அவனின் காதின் ஓரம் சொன்னாள்.

அதில் அவனின் காது மடல்கள் சிலிர்த்து நிற்க, “ம்ம்… என் சில்லிசிக்கன் தேறிட்டாள்…” என்றான்.

“பின்ன, நான் யாரு?” என்று அவள் டீசர்ட்டின் காலரை தூக்கி விட்டுக் கொள்ள,

“என் காரசாரமான சில்லிசிக்கன்…” என்றான்.

“சரி, எங்க போறோம்னு சொல்ல மாட்டீங்களா?” என்று திருப்பிக் கேட்டாள்.

“அதான் சொல்லிட்டேனே. அங்க வந்து தெரிஞ்சிக்கோன்னு…” என்றான்.

“எதுக்கு இப்போ வெளியே வந்திருக்கோம்? அதையாவது சொல்லுங்க…” என்று கேட்டாள்.

“நீயும், நானும் மட்டும் தனிமையில் உட்கார்ந்து நிறையப் பேசணும் ஜனா. அதுக்குத்தான் போறோம்…”

“ஏன், அதை நம்ம வீட்டில் அங்கேயே பேசியிருக்கலாமே?”

“அங்கே பெரியவங்க பேசிட்டு இருக்கட்டும் ஜனா. அவங்க பேசிட்டு இருக்கும் போது நாம தனியா உட்கார்ந்து பேசுறோம்னு விலகிப் போய் உட்கார முடியாது. ஏன் என் கூட வெளியே வர உனக்குப் பிடிக்கலையா?”

“அப்படின்னு நான் சொன்னேனா?”

“பின்ன என்ன? பேசாம வா!”

“ஹப்பா! முடியலைடா சாமி. இப்படிப் பேசிப் பேசியே நம்ம இரண்டு பேரும் எனர்ஜியை வேஸ்ட் பண்றோம்…” என்றாள் அலுப்பாக.

“பேசி வேஸ்ட் பண்ற எனர்ஜியை வேற வழியில் ஏத்திக்கலாம்…” என்று கண்ணாடி வழியே அவளைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.

“ஹலோ! என்னதிது டபுள் மீனிங் மாதிரி இருக்கு?” என்று கேட்டாள்.

“ச்சே, ச்சே… இந்த விஷயத்துக்கு எல்லாம் ஒன்லி சிங்கிள் மீனிங் தான். டபுள் மீனிங்கா நீயே நினைச்சுக்கிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை…” என்றான் கிண்டலுடன்.

“லொள்ளு…” என்று அவனின் முதுகில் லேசாக அடித்தாள்.

“உனக்கு நம்ம முதல் சந்திப்பு ஞாபகம் இருக்கா ஜனா? என் பொஞ்சாதின்னு சொல்லிட்டு மாமோவ்னு கூப்பிட்டியே… அன்னைக்கு அது நாடகமா இருந்தாலும், நீயே என் பொஞ்சாதியா வரப் போறன்னு நினைக்கும் போது அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கு ராசாத்தி…” என்றான் குறும்பாக.

அன்றைய ஞாபகம் ஜனாவின் உதட்டில் புன்னகையைத் தவழ வைக்க, அதை அடக்கியவள், “அதெல்லாம் பொய்ப் பேரு. இந்த ஜனா தான் நிஜம்! அதனால் வானத்தில் பறக்காம ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டுங்க…” என்றாள்.

“நான் பறந்தா உனக்குப் பொறுக்காதே…” என்று அலுத்துக் கொண்டவன், “சரி, எனக்கு எப்போ சென்டம் மார்க் தருவ ஜனா? வினயா கேஸ் முடிஞ்சதும் தருவன்னு சொன்ன. ஆனா வினயா கேஸ் முடிஞ்சு இத்தனை நாள் ஆன பிறகும் நீ தரலை…” என்றான்.

“ஆமால? மறந்துட்டேன். அப்ப தரலைனா என்ன இப்ப தந்துட்டா போச்சு. ஆனா உங்களுக்கு நூறு மார்க் போதுமா என்ன?” என்று கேட்டாள்.

“வேற எவ்வளவு தருவதாக ஐடியா வைத்திருக்க? தொண்ணூறு?”

“ச்சே, ச்சே… தொண்ணூறு எல்லாம் இல்லை…”

“பின்ன? எம்பதா?”

“அட! என்ன குறைஞ்சுட்டே போகுது? நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய மார்க்கை குறைக்கலை. கூட்டியிருக்கேன்…” என்றாள்.

“கூட்டியிருக்கியா? எவ்வளவு?” என்று வியப்புடன் கேட்டான்.

“நூத்துக்கு இருநூறு…” என்றாள்

“வாட்!” என்று அதிர்ந்தவன், வண்டியைச் சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தினான்.

“யா… யா… இருநூறு மார்க் வாங்கியிருக்கீங்க…” என்றாள்.

“எப்படி? எதுக்கு அவ்வளவு மார்க்?” என்று முகத்தைப் பின்னால் திருப்பி அவளைப் பார்த்தபடி கேட்டான்.

“வினயா கேஸை நல்லபடியா முடிச்சதுக்கு நூறு மார்க். அப்புறம்…”

“அப்புறம்?”

“இந்த ஜனார்த்தனி மனசை கொள்ளையடிச்சதுக்கு நூறு மார்க். சோ, நூத்துக்கு இருநூறு மார்க்…” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டியவளைக் காதலுடன் பார்த்தான் ஜெகவீரன்.

“போதும்! போதும்! பார்த்தது…” அவனின் விழி வீச்சைத் தாங்க முடியாமல் சொன்னவள், அவனின் தலையில் கைவைத்து முகத்தை முன்னால் திருப்பி விட்டு வண்டியை எடுக்கச் சொன்னாள்.

இருவரும் பேசிக் கொண்டே வர, ஒரு வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்தினான் ஜெகன்.

“ஹோ… நான் செட்டில் ஆகப் போற வீட்டுக்குத் தானே கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று அவன் சொல்லும் முன்பே தானே ஊகித்துச் சொல்லியிருந்தாள் ஜனா.

“டிடெக்டிவ் மேடம்னா சும்மாவா? ஆமா, சரியா சொல்லிட்ட. வா…” என்று அவளின் கையைப் பற்றி அழைத்துச் சென்றான்.

கதவைத் திறந்து இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

உள்ளே சென்றதும் வீட்டை சுற்றிலும் பார்த்துக் கொண்டே ஜனா உள்ளே செல்ல, ஜெகன் கதவைத் தாழ் போட்டுவிட்டு அதன் மீதே சாய்ந்து நின்றான்.

“ம்ம்… வீடு நல்லா இருக்கு வீரா…” என்று சொல்லிக் கொண்டே அவனின் பக்கம் திரும்பினாள்.

அவனோ அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையின் வீச்சில் தடுமாற்றம் வருவது போல் உணர்ந்தாள் ஜனார்த்தனி.

“என்ன பார்வை இது?” தன் தடுமாற்றத்தை முயன்று வெளியே தெரியாத வண்ணம் சமாளித்துக் கொண்டு கேட்டாள்.

பிழையில்லா கவிதை நீ!
உன்னைக் களவாட காத்திருக்கும்
காவலன் நான்!”

என்று மென்குரலில் சொல்லிக் கொண்டே அவளின் அருகில் வந்தான் ஜெகவீரன்.

அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவளை நெருங்க, அவளோ ஆணி அடித்தது போல் அங்கேயே நின்றாள்.

“என்னதிது? கவிதையா?” அவளின் உதடுகள் மட்டும் அசைந்து கேள்வி கேட்டன.

“ம்கூம்… என் மனசு!” என்றவன் இருவரின் மூச்சுக் காற்றும் கலக்கும் தூரத்தில் நின்று மெதுவாகத் தன் கையை உயர்த்தி அவளின் இடையைப் பற்றினான்.

இன்னொரு கையை அவளின் தோளின் மீது வைத்தான்.

அவனின் கரம் தன் இடையைத் தீண்டியதும் தன்னிச்சையாக அவளின் கைகளும் உயர்ந்து அவனைச் சுற்றிப் படர்ந்தன.

மென்மையாக, மிக மிக மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான்.

அந்தக் காவல்காரனின் மென்மை அவளை மென்சாரலாய்த் தீண்டியது.

“பேசிட்டு இருக்கப் போறோம்னு தானே சொன்னீங்க?” அவனின் அணைப்பில் வாகாக அடங்கிக் கொண்டே கேட்டாள்.

“பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் எனர்ஜி ஏத்திக்கலாம்னு தான்…” என்று சொன்னவன், மென்மையான அணைப்பை சற்று வன்மையான அணைப்பாக மாற்றினான்.

“என் சில்லிசிக்கன் எப்படி இருக்கும்னு கொஞ்சம் டேஸ்ட் செய்து பார்த்துக்கலாமா ஜனா?” என்று அவளின் காதில் மீசை ரோமங்கள் உராயக் கேட்டான்.

“ஓ! அத்தை வீட்டில் சில்லிசிக்கன் செய்து வைத்திருக்காங்களா? எடுத்துட்டு வாங்க. நாம இரண்டு பேரும் சேர்ந்தே டேஸ்ட் பார்க்கலாம்…” என்று அவளும் பதிலுக்கு அவனின் காதில் கிசுகிசுத்தாள்.

‘அவள் ஏதோ ரொமான்டிக்காகச் சொல்லப் போகிறாள்’ என்று கவனித்துக் கேட்டவன், அவள் சொன்னதைக் கேட்டுக் கடுப்பாகி, அவளின் தோளின் மீதிருந்து நிமிர்ந்து முறைத்துப் பார்த்தான்.

முறைத்தவனைப் பார்த்து நிதானமாகக் கண்சிமிட்டினாள்.

அவள் வேண்டுமென்றே விளையாடியது புரிய, “உன்னை…” என்று கடிந்து கொள்வதைக் கூடக் காதலுடன் சொன்னவன், அவனின் சில்லிசிக்கனின் சுவை அறிய, அவளின் இதழ் நோக்கி குனிந்தான் ஜெகவீரன்.

தன் காவல்காரனின் கள்ளத்தனத்தில் கள்ளியாகக் களம் கொண்டாள் ஜனார்த்தனி.

*****சுபம்*****