பிழையில்லா கவிதை நீ – 27

அத்தியாயம் – 27

இரவு பத்து மணி.

காவல்நிலையத்தில் காவல்துறையினர் காட்டிய கைவண்ணத்திற்குச் சிறிதும் அசராமல் நீலேஷ் இருக்கும் இடத்தைச் சொல்லாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான் பரிதி.

“இங்கே பார் பரிதி. எப்படியும் நீலேஷை நாங்க பிடிச்சே தீருவோம். இப்பயே நீ உண்மையைச் சொல்லிட்டா, உன்னை அப்ரூவரா மாத்தி தண்டனையைக் குறைச்சு தர செய்வோம். அதை விட்டு நாங்களா கண்டுபிடிச்சோம்னு வை நீலேஷுக்குக் கிடைக்கிற தண்டனை தான் உனக்கும் கிடைக்கும்…” என்றான் ஜெகவீரன்.

அவன் அவ்வளவு பேசியும் பரிதி வாயைத் திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தான்.

“உனக்குப் பேச்சு வார்த்தையெல்லாம் சரி வராதுன்னு நீயே சொல்ற? ம்ம்…” என்றவன், “கான்ஸ்டபிள்ஸ் சாருக்கு வேற ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க. அப்பயாவது வாயைத் திறக்குறானான்னு பார்ப்போம்…” என்றவன் லாக்கப்பை விட்டு வெளியே வந்தான்.

அப்போது அவனின் அலைபேசி அழைத்தது.

“யெஸ், இன்ஸ்பெக்டர் ஜெகவீரன்…”

“சார், சேதுராமனுக்கு வந்த காலில் இப்போ வேற ஒருத்தன் பேசினான். அதுக்குப் பிறகு அவனை ட்ரேஸ் பண்ண முடியலை சார்…” என்று சொல்லி விட்டு, அவன் கடைசியாக எங்கிருந்து பேசினான் என்ற தகவலைத் தெரிவித்தனர்.

அதே நேரம் உள்ளே கான்ஸ்டபிள்கள் கொடுத்த அடுத்த ட்ரீட்மெண்ட்டில் “உண்மையைச் சொல்றேன்…” என்று அலறியிருந்தான் பரிதி.

அடி தாங்காமல் வினயா அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பரிதி தெரிவிக்க, உடனே அங்கே கிளம்பினான் ஜெகவீரன்.

அதே நேரம் மருத்துவமனையில் அங்கே காவலுக்கு இருந்த காவலரின் கவனத்தைத் திசை திருப்பி விட்டுப் பணத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய சேதுராமன் வாடகை காரில் ஏறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஜனார்த்தனியும், சப் இன்ஸ்பெக்டர் கேசவ்வும் அவரவர் இருசக்கர வாகனங்களில் அவரைப் பின் தொடர்ந்தனர்.

வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே ஜெகனுக்கு அழைத்தவள், “அங்கிள் பணத்தை எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டார் ஜெகா. நாங்க அவரை ஃபாலோ பண்றோம்…” என்றாள்.

“கேசவ் உன் கூடத் தானே வர்றார்?”

“ஆமா ஜெகா. அவர் வண்டியில் அவரும், கான்ஸ்டபிளும் வந்துட்டு இருக்காங்க…”

“ஓகே… கவனம் ஜனா. நீ அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம். அவனை அங்கிருந்து தப்பிச்சுப் போகவிடாம மட்டும் பார்த்துக்கோ. இங்கே வினயா இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சு. ஈசிஆர் ரோட்டில் ஒரு வீட்டில் அடச்சு வைக்கப்பட்டிருக்காளாம். இப்போ அங்கே தான் நான் போய்ட்டு இருக்கேன்…” என்றான்.

“ஓகே ஜெகா. நீங்களும் கவனமா இருங்க…” என்று சொல்லிவிட்டு அவனின் பதிலுக்குக் காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.

அவள் கடைசியாகச் சொன்னதைக் கேட்டு அந்தப் பதட்டமான நிலையிலும் ஜெகவீரனின் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது.

ஈசிஆர் சாலையில் பாதித் தூரம் சென்றதும் ஒரு சிறு பாதை பிரிய, வாகனம் அந்தப் பாதையில் செல்ல ஆரம்பித்தது.

சேதுராமனிடம் வினயா தங்களிடம் தான் இருக்கிறாள் என்பதை உறுதி செய்ய ஒரு புகைப்படம் மட்டும் எடுத்து அனுப்பிய நீலேஷ், பணத்தைப் பதினொரு மணி அளவில் அவன் சொல்லும் இடத்திற்குக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லியிருந்தான் நீலேஷ்.

வினயாவையும் அப்போது உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்று சொல்லி நம்ப வைத்திருந்தான்.

ஆனால் நீலேஷின் திட்டமே வேறாக இருந்தது. சேதுராமனைப் பணத்துடன் வர வைத்து, அவர் வந்ததும் மறைந்து நின்று காத்திருக்கும் நீலேஷின் ஆட்கள் இரண்டு பேர் அவரை அடித்துப் போட்டு விட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பிக்கும் அதே நேரத்தில், இங்கே வினயாவை வீட்டில் இருந்து வெளியேற்றி அழைத்துச் சென்று வழக்கமாக அவன் பெண்களை விற்கும் பார்ட்டியிடம் அவளை விற்றுப் பணம் பெற்றுக் கொள்வதே அவனது திட்டமாக இருந்தது.

இரண்டு பணமும் வந்ததும் சில நாட்கள் தலைமறைவாக இருந்து விட்டு மீண்டும் அவன் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்தான்.

சேதுராமனிடம் பணத்தைப் பறிக்க அவரை வரச் சொல்லியிருந்த இடத்தில் இரண்டு பேர் தயாராக நின்று கொண்டிருந்தனர்.

இங்கோ வினயாவின் கையையும், காலையும் கட்டிக் கொண்டிருந்தான் நீலேஷ்.

அதே நேரத்தில் அந்த வீட்டிலிருந்து சற்று தொலைவிலேயே காவல் வாகனத்தை நிறுத்திவிட்டு மூன்று கான்ஸ்டபிள்களுடன் அந்த வீட்டைச் சுற்றி வளைத்திருந்தான் ஜெகவீரன்.

அவனின் கையில் கைத்துப்பாக்கி தயாரான நிலையில் வீற்றிருந்தது.

வீட்டை நோட்டம் விட, வீட்டின் முன்பும், பின்பும் இரண்டு வாசல் கதவுகள் இருந்தன. நான்கு ஜன்னல்கள் இருந்தன. பின் பக்க கதவு பக்கம் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.

வீட்டிற்குள் சிறுசிறு சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

“டேய் சேகர், பரிதி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டான் போல. இன்னும் ஆளை காணோம். போலீஸ் மோப்பம் பிடிச்சு வர்றதுக்குள்ள இந்த இடத்தை விட்டுப் போகணும். பார்ட்டி வர இன்னும் நேரம் இருந்தாலும் பரவாயில்லை. உடனே கிளம்புவோம். பார்ட்டி வரும் வரை காரில் சுத்துவோம்…” என்று தன் வேலையாளிடம் சொன்னான் நீலேஷ்.

“சரி அண்ணே. கிளம்பலாம்…” என்றான் சேகர்.

“நீயும், மகேஷும் இவளைத் தூக்கி கார் டிக்கியில் போடுங்க. நான் பின்னாடி வர்றேன்…” என்று அவன் கட்டளை இட, சேகர், மகேஷ் இருவரும் சேர்ந்து மயங்கிக் கிடந்த வினயாவைத் தூக்கினர்.

உள்ளே நடந்த பேச்சுச் சப்தம் தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும், கதவை நெருங்கி வரும் அவர்களின் காலடி சப்தம் கேட்க, உசாராக நின்றான் ஜெகவீரன்.

அவர்கள் கதவைத் திறந்த அடுத்த நொடி முதலில் காலை வெளியே எடுத்து வைத்த மகேஷின் மீது பாய்ந்து தலையில் ஓங்கி அடித்தான் ஜெகன்.

எதிர்பாராத அடியில் மகேஷ் நிலைகுலைந்து மடங்கி விழ, அவன் கையில் இருந்த வினயாவும் கீழே சரிந்தாள்.

போலீஸை பார்த்ததும் சேகரும் வினயாவைக் கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓட முயல, “கான்ஸ்டபிள் இந்தப் பொண்ணைப் பாருங்க…” என்று உத்தரவிட்டுக் கொண்டே தப்பி ஓட முயன்ற சேகரை சட்டென்று விரட்டிப் பிடித்து அவனின் கையை முறித்துக் காலில் ஓங்கி மிதித்தான்.

அதில் சேகரும் மடங்கி விழ, இங்கே கேட்ட சப்தத்தில் எட்டிப்பார்த்த நீலேஷ் அங்கிருந்து இன்னொரு கதவின் வழியாகத் தப்பி ஓட முயன்றான்.

அடி வாங்கி விழுந்தவர்களைக் கான்ஸ்டபிள்கள் விலங்கை மாட்டிக் கைது செய்ய, தப்பியவன் பின்னால் ஓடிய ஜெகவீரன், “நீலேஷ் ஓடாதே! நில்லு! இனி நீ தப்பிக்க முடியாது நீலேஷ்…” என்று கத்தினான்.

நீலேஷ் நிற்காமல் ஓட, நிதானித்து நின்றான் ஜெகவீரன்.

கையில் இருந்த துப்பாக்கியால் ஓடிக் கொண்டிருந்தவனைக் குறிபார்த்து முட்டிக்குக் கீழ் சுட, சுருண்டு விழுந்தான் நீலேஷ்.

சேதுராமன் காரிலிருந்து பணத்துடன் இறங்கிக் காரை அனுப்பி வைத்தவர் நீலேஷ் வரச் சொல்லியிருந்த இருட்டை பூசியிருந்த ரோட்டின் ஓரம் நின்று அவன் சொன்ன பாதையை இருட்டில் துழாவினார்.

சாலையில் இருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு பெரிய மரத்தடியில் பணப்பையை வைக்கச் சொல்லியிருந்தான் நீலேஷ். அவன் வந்து பையை எடுத்துச் சென்ற மறுநிமிடம் மரத்துக்குப் பின் இருந்து அவரின் பெண் வருவாள் என்றும் சொல்லியிருக்க, அந்த மரம் அருகில் சென்றவர் பணத்தை வைக்காமல் “வினயா…” என்று கொடுத்தார்.

ஒரு அரவமும் கேட்காமல் போக, மீண்டும் பயத்துடன் “பணம் கொண்டு வந்துட்டேன்…” என்று சப்தம் கொடுத்தார்.

“மரத்தடியில் பணத்தை வை…” என்று மரத்திற்குப் பின் இருந்து சப்தம் வந்தது.

“என் பொண்ணு?”

“வருவா… பணத்தை வை!” என்று குரல் அதட்ட, நடுங்கிய கைகளால் கையில் இருந்த பணப்பையை வைக்கக் குனிந்த அடுத்த நொடி அவரின் பின்னாலிருந்து ஒருவன் அவர் தலையில் அடிக்கக் கட்டையை ஓங்கியிருந்தான்.

ஆனால் அந்த அடி அவரின் தலையில் விழாமல் கட்டை வலுவாகப் பற்றப்பட்டது.

“யாரது?” என்று அவன் வேகமாகத் திரும்ப, திரும்பிய வேகத்தில் வயிற்றில் பலமான உதை ஒன்றை வாங்கினான்.

அவனின் வயிற்றைப் பதம் பார்த்த ஜனார்த்தனி அதே வேகத்தில் அவன் கையில் இருந்த கட்டையைப் பறித்து அதனாலேயே சரமாரியாக அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

ஜனா அவனை அடி வெளுக்க, மரத்தின் பின் இருந்து ஓடிய இன்னொருவனைக் கேசவ் அடிக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் கேசவ்வும், கான்ஸ்டபிளும் குற்றவாளிகள் கையில் விலங்கை மாட்டினர்.


மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கிடந்தாள் வினயா.

அவளின் அழகான முகம் அடி வாங்கியதற்கு அடையாளமாக வீங்கியிருந்தது. நெற்றியில்
ஒரு கட்டுப் போடப்பட்டிருந்தது. உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன.

இன்னும் மயக்கம் தெளியாமல் இருந்தாள்.

“அடி உதைன்னு கொஞ்சம் டார்ச்சர் பண்ணிருக்காங்க. அதோட போதை ஊசியும் போட்டுருக்காங்க. இன்னும் சில நாட்கள் கண்டின்யூவா ட்ரீட்மெண்ட் கொடுத்தால் முழுசா குணமடைஞ்சுருவாங்க…” என்றார் மருத்துவர்.

“ஓகே டாக்டர். தேங்க்யூ…” என்ற ஜெகவீரன், அருகில் தலையில் அதிகமான வெள்ளை முடி, பெரிய மூக்கு கண்ணாடி, முகத்தில் லேசான செயற்கை சுருக்கங்கள், முழுக்கை ரவிக்கை போட்டுச் சேலை கட்டியபடி நின்றிருந்த ஜனார்த்தனியைப் பார்த்தான்.

பார்த்ததும் சட்டென்று ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வயதான பெண் போல வேஷம் போட்டுருந்தவளைக் கண்டு ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான் ஜெகவீரன்.

“என்ன பார்வை ஜெகா?” என்று ஜனா கேட்க,

“சண்டை எல்லாம் போட்டியாமே. இந்த உடையிலா?” என்று கேட்டான்.

“ஏன், இந்த ட்ரெஸுக்கு என்ன? சேலையோ, ஜீன்ஸோ சண்டைன்னு வந்துட்டா வெளுத்து வாங்கிடுவேன்…” என்று சொன்னவள் அவளின் வழக்கமாகத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

“அடியாத்தி! அப்ப உன்கிட்ட கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்…” என்று பயந்தவன் போலப் பாவனைக் காட்டினான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகே வந்தார் சேதுராமன்.

“ரொம்ப நன்றி சார். என் பொண்ணைத் திரும்பப் பார்ப்பனோ, பார்க்க மாட்டேனோன்னு ரொம்ப நடுங்கிப் போயிருந்தேன். என் பொண்ணை நல்லபடியா கண்ணில் காட்டிட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றி சார்…” என்றார் குரல் தழுதழுக்க.

“எங்க கடமையைத் தான் செய்தோம் சேதுராமன்…” என்றான் ஜெகன்.

“சாரி சார். உங்ககிட்ட சொல்லாம பணம் கொண்டு போனேன். ஆனா அவனுங்க என்னை அடிச்சுப் போட்டுப் பணத்தைப் பறித்துக்கொண்டு போக இருந்தப்ப தான், நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணிட்டேன்னு புரிஞ்சது. ஆனா என் தப்பையும் பெருசா நினைக்காம எனக்கு உதவி பண்ணிருக்கீங்க. நன்றி சார்…” என்றார்.

“ஒரு தகப்பனா நீங்க யோசிச்சுருக்கீங்கன்னு என்னால் புரிஞ்சுக்க முடியுது மிஸ்டர் சேதுராமன். அதே நேரம் எங்க கடமையையும் நாங்க சரியா செய்யணுமே? அதான் ஜனாவையும், சப்இன்ஸ்பெக்டரையும் அனுப்பி வச்சேன்.

இன்னும் ஒன்னு உங்க வழியில் உங்களைப் போக விட்டதுக்குக் காரணம் வினயா கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கூண்டோடு பிடிக்கணும்னு தான்…” என்றான்.

“உங்க அக்காவையும், பிரகாஷையும் போய்ப் பார்த்தீங்களா அங்கிள்?” என்று கேட்டாள் ஜனா.

“இல்லைமா, போகலை…” என்றார் இறுகிய முகத்துடன்.

“பிரகாஷின் குணம் வேணா அப்படி இருக்கலாம் அங்கிள். ஆனா உங்க அக்கா பாவம். இனி நீங்க தான் அவங்களுக்கு ஆறுதல். பாவம் ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க…” என்று சொல்ல, அவரின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அவள் மேலும் ஏதோ சொல்லப் போக, அவளைச் சொல்ல விடாமல் அவளின் கையைப் பிடித்து அழுத்தினான் ஜெகன்.

அவள் என்னவென்று பார்க்க, “தனம் அவரோட அக்கா ஜனா. என்ன இருந்தாலும் ரத்தபந்தம் அவ்வளவு சீக்கிரம் விட்டுப் போகாது. என்ன மிஸ்டர் சேதுராமன், சரிதானே?” என்று கேட்டான்.

ஆமாம், இல்லை என்று எதைச் சொல்வது என்று புரியாமல் எல்லாப் பக்கமும் தலையை ஆட்டியவர் அங்கிருந்து நகர்ந்தார்.

“ஏன் ஜெகா என்னைப் பேசவிடாம செய்தீங்க?”

“வினயா எழுந்து நார்மலா நடமாடும் வரை தான் அவர் கோபம் இருக்கும்னு தோணுது ஜனா. அப்புறம் எல்லாம் சரியாகிடும். அதுவா கனிய வேண்டியதை நாம அழுத்தம் கொடுத்துக் கனிய வைக்கக் கூடாது…” என்றான்.

“சரிதான்…” என்று முடித்துக் கொண்டாள்.

அவ்வளவு நேரமும் கண்ணாடி வழியாக வினயாவைப் பார்த்துக் கொண்டிருந்த பரத் இப்போது அருகில் வந்து இருவருக்கும் கையெடுத்துக் கும்பிட்டுக் கண்ணீர் மல்க நன்றி சொன்னான்.

“கையை இறக்குங்க பரத். வினயாவோட அப்பாவையும், அம்மாவையும் சம்மதிக்க வைச்சுக் கல்யாணத்தை முடிக்கப் பாருங்க…” என்றான் ஜெகன்.

“என்னோட அப்பா, அம்மாவுக்கு விஷயத்தைச் சொல்லி வரச் சொல்லிட்டேன் சார். அவங்க வந்து கல்யாணத்துக்குப் பேசுறோம்னு சொல்லியிருக்காங்க…” என்றான் பரத்.

“குட்!” என்று அவனின் தோளில் தட்டிய ஜெகன் “நாம கிளம்பலாமா ஜனா?” என்று கேட்டான்.

“யா, போகலாம்…” என்றாள்.

இருவரும் மருத்துவமனை வெளியே வந்தனர்.

காரின் அருகில் வந்ததும், “அப்புறம்?” என்று ஜனாவைப் பார்த்துக் கேட்டான்.

“அப்புறம் என்ன? ஜெகா, ஜனா பிராக்ஜெட் வெற்றி அடைந்து விட்டது. இனி வீட்டில் போய் நல்லா ரெஸ்ட் எடுக்கப் போறேன்…” என்றாள்.

“அவ்வளவு தானா?” என்று அவளின் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான்.

“வேறென்ன? அவ்வளவேதான்…” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவளின் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து இயக்கியவள், “பை ஜெகா…” என்று சொல்லி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றாள்.

சென்றவளையே பார்த்துக் கொண்டு நின்றான் ஜெகவீரன்.