பிழையில்லா கவிதை நீ – 20
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 20
விழிகளைத் திறந்த அதே வேகத்தில் சட்டென்று மூடியும் கொண்டார் கஸ்தூரி.
அவரின் அதிவேகமான செயலைக் கவனம் முழுவதையும் சேதுராமன் மீது வைத்திருந்த ஜெகவீரன் கவனியாமல் போனான். அவனின் மூளை சேதுராமன் சொன்னதை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.
ஆனால் கஸ்தூரியின் அச்செயலை ஜனார்த்தனியின் விழிகள் கண்டுவிட, அவளின் புருவங்கள் யோசனையுடன் சுருங்கின.
“என்ன ஜனா, என்ன யோசனை?” தளர்ந்து அமர்ந்த சேதுராமனை பரத் கவனிக்க ஆரம்பிக்க, தன் பார்வையை ஜனார்த்தனியின் புறம் திருப்பியிருந்தான் ஜெகவீரன்.
“அங்கிள் சொன்ன போன் கால் பத்தி தான் யோசிக்கிறேன் ஜெகா…”
“இந்தப் போன் கால் பத்தி நீ என்ன நினைக்கிற ஜனா?”
“அங்கிள் சொல்ற மாதிரி போன் பண்ணி மிரட்டியது பிரகாஷ் இல்லைனா வேற யாருன்னு யோசிச்சேன்…”
“யாருன்னு நீ கெஸ் பண்ற?”
“அன்னைக்குச் சிசிடிவியில் ஆம்புலன்ஸ் வேனில் இரண்டு பேர் பார்த்தோமே ஜெகா?”
“ஆமா, எனக்கும் அதான் மைண்ட்ல ஸ்பார்க் ஆச்சு. நாம அந்த வேனில் இரண்டு பேரைப் பார்த்தோம். ஒன்னு பிரகாஷ் என்றால், இன்னொரு ஆள் அவனோட ஃபிரண்டா இருக்கணும். அவன் தான் போனில் மிரட்டியவனா இருக்கணும்…”
“யெஸ் ஜெகா. அதான் நானும் நினைச்சேன். ஆனா இப்போதைக்குப் பிரகாஷ் தான் எப்படி இருப்பான்னு நமக்குத் தெரியும். சோ, பிரகாஷை முன்ன விட்டு பின்னாடி இருந்து அவன் ஃபிரண்ட் வேலை பார்க்கிறான்னு தோணுது…”
“அதே தான் ஜனா. பிரகாஷை பிடிச்சாலே அவன் ஃபிரண்டும் மாட்டுவான். சோ, பிரகாஷை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிடிக்கணும்…” என்றான் ஜெகவீரன்.
ஜெகனிடம் வழக்கு பற்றிச் சாதாரணமாக உரையாடினாலும் கஸ்தூரியைப் பற்றிச் சொல்லவில்லை அவள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
போலீஸ் தலையீடு இல்லாமல் கஸ்தூரியிடம் தனியாக விசாரிக்க நினைத்தவள் ஜெகனிடம் சொல்லும் முடிவைத் தள்ளிப் போட்டாள்.
இருவரும் பேசிக் கொண்டதைக் கேட்ட சேதுராமன் மீண்டும் எழுந்து தயக்கத்துடன் அருகில் வந்தார்.
“சார், அதான் உண்மையைச் சொல்லிட்டேனே. என் பொண்ணைப் பணம் கொடுத்து நான் கூட்டிட்டு வந்துக்கிறேன் சார். நீங்க இந்தக் கேஸை விட்டு விலகிக்கோங்களேன்…” என்றார் கலக்கத்துடன்.
“நீங்க உண்மையைச் சொல்லிட்டாலும் இந்த நிலையில் கேஸை விட்டு விலக முடியாது மிஸ்டர் சேதுராமன்…” என்று உறுதியாக மறுத்தான் ஜெகவீரன்.
“சார்…” என்று அவர் பயத்துடன் அழைக்க,
“நாங்க குற்றவாளியை நெருங்கிட்டோம் சேதுராமன். இந்த நேரத்தில் கண்டிப்பா பின்வாங்க முடியாது…”
“ஆனா சார்… என் பொண்ணு உயிருக்கு, மானத்துக்கு ஏதாவது ஆனால்…” என்று தொடர்ந்து சொல்ல முடியாமல் நிறுத்தினார்.
“வினயாவுக்கு எதுவும் ஆகாமல் சீக்கிரம் உங்ககிட்ட ஒப்படைச்சுடலாம் சேதுராமன். கவலைப்படாதீங்க…” என்று அவன் சொல்லியும் சேதுராமன் அவனின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறிப் போனார்.
மகள் நல்லபடியாகக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க, வேறு எதையும் சிந்திக்கும் நிலையில் கூட அவர் இல்லை.
அவரின் நிலையைப் பார்த்தவன், “நாம இப்போ ஒரு விஷயம் பேசி முடிவுக்கு வருவோம் சேதுராமன். நீங்க உங்களுக்கு வந்த மிரட்டல் கால் பற்றி என்னிடம் சொல்லலை. எனக்கும் அது தெரியாது…” என்று அவன் சொல்ல, ‘அதான் எல்லாம் சொல்லிட்டேனே’ என்ற பார்வையுடன் அவர் புரியாமல் முழித்தார்.
“நீங்க என்கிட்ட சொன்ன விஷயம் இங்கே இருக்கிறவங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. இங்கே இருக்குற யாரும் அவன்கிட்ட சொல்லப் போறதும் கிடையாது. சோ, அவனைப் பொருத்தவரை எனக்கு விஷயம் தெரியாது.
அதனால் இப்போ என்ன பண்றீங்கனா அவன் திரும்பப் போன் போட்டா போலீஸ்கிட்ட இருந்து கேஸை வாபஸ் வாங்கிட்டேன்னு சொல்லுங்க. அவன் கேட்ட பணத்தையும் கொடுக்குறதா சொல்லி, எங்கே கொடுக்கணும், எப்போ கொடுக்கணும்னு விவரம் கேளுங்க.
இதெல்லாம் நடக்கும் போது உங்க பின்னணியில் நாங்க இருப்போம். நீங்க பணம் கொடுக்கப் போகும் போது அவனை லாக் பண்ணி பிடிச்சுடலாம்…” என்றான்.
அவன் சொன்னதில் சேதுராமனுக்கு உடன்பாடே இல்லை என்றாலும், அவருக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
“என் பொண்ணுக்கு மட்டும் எதுவும் ஆகாம பார்த்துக்கோங்க சார்…” என்றார் கண்ணீருடன்.
“ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனமா தான் எடுத்து வைப்போம் சேதுராமன். கவலையை விடுங்க. இந்த நிமிஷத்தில் இருந்து உங்க போனை ட்ரேஸ் பண்ண ஏற்பாடு பண்றேன். அவன் எங்கிருந்து போன் பண்றான். அவன் யார் என்று எல்லா விவரமும் அதன் மூலம் கலெக்ட் பண்ணலாம்…” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனின் அலைபேசி அழைத்தது.
எடுத்துப் பேச ஆரம்பித்தவன் முகம் மெல்ல மாற ஆரம்பிக்க, சுற்றி இருந்தவர்களும் அவனையே பார்க்க ஆரம்பித்தனர்.
சில நொடிகளில் அழைப்பைத் துண்டித்தவன், “ஸ்டேஷன்ல இருந்து தான் போன். நான் உடனே கிளம்பணும்…” என்று பொதுவாகச் சொன்னவன் ஜனாவின் புறம் திரும்பினான்.
“நீங்க கிளம்புங்க ஜெகா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்று அவன் பேசுவதற்கு முன் தான் முந்திக்கொண்டு வேகமாகச் சொன்னவளை வியப்பாகப் பார்த்தான் ஜெகவீரன்.
‘எதற்கு இவ்வளவு வேகம்?’ என்ற கேள்வி தோன்ற, அவனின் வியப்பு பார்வை சந்தேகப் பார்வையாக மாற ஆரம்பித்தது.
‘காரணம் இல்லாமல் அவள் எதையும் செய்ய மாட்டாள்’ என்று அவளைப் பற்றி நன்றாக அறிந்தவன் ஆகிற்றே!
அவனின் பார்வை புரிந்து அவன் அருகில் வந்தவள், “கேஸ் விஷயமாத்தான் நான் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வர்றேன்னு சொல்றேன் ஜெகா, புரிஞ்சுக்கோங்க…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தாள்.
அவனின் பார்வை இப்போது தீர்க்கத்துடன் அவளை மொய்த்தன.
அவளின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை தான். அவள் எதுவும் ஜாடையும் காட்டவில்லை தான். ஆனாலும் எதுவோ புரிந்து கொண்ட பாவனையில் ஜெகனின் கண்கள் கண நொடிகள் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்த கஸ்தூரியின் மீது பாய்ந்து மீண்டன.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவன் கண்டு கொண்டதில் ஜனாவின் முகம் பிரகாசித்தது.
‘வெரி ஷார்ப் மேன் நீ!’ என்று உள்ளுக்குள் அவனை மெச்சிக்கொண்டவள் இதழ் பிரியாமல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“என் உதவி எதுவும் தேவைப்படுதா ஜனா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
அவனுக்கு வார்த்தையால் பதில் சொல்லாதவளின் கண்கள் வாயிலில் நின்றிருந்த கான்ஸ்டபிளின் மீது படிந்து மீண்டன.
அதைப் புரிந்து கொண்டவன், “ஓகே அப்புறப்படுத்துறேன்…” என்று மெதுவாக முனங்கிவிட்டு, “சீக்கிரம் வந்து சேர் ஜனா. இப்போ வந்த அழைப்பும் முக்கியமானது தான்…” என்று சப்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
வெளியில் போகும் போதே கான்ஸ்டபிளிடம் ஏதோ சொல்லி விட்டுச் செல்ல, அவரும் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர்கள் சென்றதும் அந்த அறையின் கதவை மூடித் தாழ்ப் போட்டுவிட்டு வந்த ஜனார்த்தனி கட்டிலின் அருகில் சென்று, “ஆன்ட்டி, போலீஸ் போயாச்சு. கொஞ்சம் கண்ணைத் திறக்குறீங்களா?” என்று மென்மையும் இல்லாது, கடுமையும் இல்லாத குரலில் அழைத்தாள்.
அவளின் செய்கைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சேதுராமன், அவள் தன் மனைவியை எழுப்ப முயலவும் வேகமாக அருகில் வந்தார்.
“அவளை எதுக்குமா எழுப்புற? அவள் எழுந்து என்ன செய்யப் போறா?” என்று கேட்டார்.
“அவங்க எழுந்து செய்றதுக்கு எதுவுமில்லை அங்கிள். ஆனால் சொல்றதுக்கு நிறைய இருக்கு…” என்றாள்.
“என்னமா சொல்ற? அவள் என்ன சொல்லுவாள்? எழுந்தா வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பாள். அதைத் தானே எப்பவும் செய்றாள்…” என்று குழப்பமாகக் கேட்டார்.
“இல்லை அங்கிள். இப்போ பேசுவாங்க. நீங்களே எழுப்புங்க…” என்று சொல்ல, அவள் சொன்னதைச் செய்தார்.
“கஸ்தூரி, எழுந்திரு…” என்று அவர் எழுப்ப அப்போதும் கண்களைத் திறக்காமல் அடம் பிடித்தார் கஸ்தூரி.
“உங்க பொண்ணு இப்போ ரொம்ப இக்கட்டான நிலையில் மாட்டிட்டு இருக்காள். ஆனா இந்த நிலையிலும் நீங்க இப்படி நடிக்கிறது சரியில்லை ஆன்ட்டி.
உங்க பொண்ணு பத்தி டீடைல்ஸ் சொல்லக் கூடிய நீங்களே இப்படி அவள் கிடைக்க முட்டுக்கட்டையாக இருக்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு…” என்று அவள் பேசிக் கொண்டே போக, பட்டென்று விழிகளைத் திறந்த கஸ்தூரி வழக்கம் போல் அவளை வெறித்துப் பார்த்தார்.
“இப்படிப் பார்த்தது போதும் ஆன்ட்டி. வாயைத் திறந்து பேசுங்க. உங்க பொண்ணு எங்கே?” என்று கேட்டாள்.
பரத்தும், சேதுராமனும் வெறும் பார்வையாளர்களாக நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இ…இல்லை… எ…என் பொ…பொண்ணு இ..ல்லை…” என்று முதல் முறையாக வாயைத் திறந்து புலம்ப ஆரம்பித்தார் கஸ்தூரி.
“இல்லையா? என்ன சொல்றீங்க ஆன்ட்டி?” என்று குழப்பத்துடன் கேட்டாள் ஜனார்த்தனி.
“ஹான்… இல்லை என் பொண்ணு இல்லவே இல்லை…” என்று அவர் சொன்னதையே சொல்லிப் புலம்ப,
“என்னைக் காதலிச்சதால் அவளை அவங்க பொண்ணு இல்லைன்னு சொல்றாங்க போலச் சிஸ்டர்…” என்று அவளுக்குப் பின்னால் நின்றிருந்த பரத் வருத்தத்துடன் சொல்ல,
“அப்படியா ஆன்ட்டி? உங்க பொண்ணு காதலிச்சதால் அவள் உங்க பொண்ணே இல்லைன்னு சொல்றீங்களா?” என்று ஜனா கஸ்தூரியிடம் கேட்க, மீண்டும் வெறித்த பார்வையை அவளின் மீது செலுத்தினார்.
“இப்போ இப்படிப் பார்க்கிறதுக்கு நேரமில்லை ஆன்ட்டி. ப்ளீஸ், வாயைத் திறந்து பேசுங்க. அன்னைக்கு உங்களுக்கும், வினயாவுக்கும் இடையே என்ன நடந்தது?
வினயாவுக்கு எப்படி உடம்பு சரியில்லாம போச்சு? அவளை யார் கூட ஆம்புலன்ஸில் அனுப்பி வச்சீங்க?” என்று அடுத்தடுத்த கேள்விகளை ஜனார்த்தனி தொடுக்க, கஸ்தூரியின் பார்வை நிலையில்லாமல் அலைய ஆரம்பித்தது.
கண்களை உருட்டி உருட்டி நிலையில்லாமல் அலைய விட்டவர், தன் கைகளால் படுத்திருந்த படுக்கை விரிப்பைக் கசக்கிக் கொண்டே பற்களை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தார்.
அவரின் நிலையைக் கண்டு திடுக்கிட்ட ஜனார்த்தனி, அவர் கையை அழுத்திப் பிடித்து, “ஆன்ட்டி, ரிலாக்ஸ்! வினயாவைப் பத்திரமா காப்பாற்றத்தான் கேட்குறேன். சொல்லுங்க ஆன்ட்டி…” என்று நயமாகக் கேட்டாள்.
அவளின் கையில் இருந்து தன் கையை வெடுக்கென்று பிடிங்கியவர், “இல்லை.. என் பொண்ணு இல்லை. இப்போ இல்லை…” என்று திரும்ப அதையே சொன்னார்.
அவர் சொல்ல வருவது அவளுக்குப் புரியவே இல்லை.
அவரை எப்படிப் பேச வைப்பது என்று புரியாமல் விழி பிதுங்கிப் போனாள் ஜனார்த்தனி.
மருத்துவர் சொன்ன எச்சரிக்கை வேறு அவளை அதற்கு மேல் அவரிடம் கடுமையாக விசாரிக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
அவளின் நிலையைக் கண்டு அதுவரை ஒதுங்கி நின்றிருந்த சேதுராமன் மனைவி அருகில் வந்து நின்றார்.
‘இல்லை.. இல்லை’ என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்த மனைவியின் தோளை அழுத்திப் பிடித்தவர், “கஸ்தூரி…” என்று அதட்டலாக அழைத்தார்.
அவரின் அழுத்தத்தில் திடுக்கிட்டு விழித்த கஸ்தூரி தன் புலம்பலை நிறுத்திவிட்டுக் கணவனைப் பயத்துடன் பார்த்தார்.
“என்ன இல்லை? நம்ம பொண்ணு எங்கே? அவளை ஏன் உன் பொண்ணு இல்லன்னு சொல்ற? சொல்லு…” என்று அவரின் தோளை பிடித்து உலுக்கி அதட்டிக் கேட்டார்.
“இல்லங்க… நம்ம பொண்ணு இப்போ இல்லங்க…” என்று கணவனைப் பயத்துடன் பார்த்துக் கொண்டே கஸ்தூரி சொல்ல,
“அதான் கேட்கிறேன். என்ன இல்லைன்னு சொல்லு…” என்று அவரின் இரு தோள்களையும் பிடித்துப் பலமாக உலுக்கினார் சேதுராமன்.
“அங்கிள், ஆன்ட்டி திரும்ப மயக்கம் போட்டு விடப் போறாங்க. பார்த்துக் கவனமா விசாரிக்கணும்…” என்று அவரைப் பொறுமையாக இருக்கச் சொன்னாள் ஜனார்த்தனி.
“இதுவரைக்கும் பொறுமையா இருந்ததெல்லாம் போதும் ஜனா. இனியும் பொறுமையாக இருக்க முடியாது. என் பொண்ணு எங்க இருக்கா? என்ன நிலைமையில் இருக்கான்னு தெரியாம ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டு இருக்கேன். இவள் என்னென்னா இப்படி மயக்கத்திலிருந்தே என்னை உயிரோடு கொல்றாள். இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னவர் மீண்டும் மனைவியின் தோளை பிடித்துக் குலுக்கினார்.
“வாயைத் துறந்து பேசு கஸ்தூரி. நம்ம பொண்ணை எவனோ கடத்தி வச்சுக்கிட்டுப் பணம் கேட்டு மிரட்டுறான். இனியும் நீ ஊமையா இருந்தா நம்ம பொண்ணு நமக்கு இல்லாம போய்டுவா. சொல்லு நம்ம பொண்ணு எங்கே?” என்று கேட்டார்.
“ஹா..ஹான்… இல்லை…” என்று கஸ்தூரி மேலும் இழுக்க,
“இப்ப சொல்லப் போறீயா இல்லையா?” என்று அதட்டல் போட்டார் சேதுராமன்.
அவரின் அதட்டலில் திடுக்கிட்டு விழிகளை மலங்க விழித்த கஸ்தூரி, “இ..இ.. இல்லைங்க.. நம்.. நம்ம பொ… பொண்ணு… இப்.. இப்ப.. உயி…உயிரோட… இ..இல்ல…” என்று திக்கித் திணறி அவர் சொன்ன நிமிடம்,
“எ…என்ன…?” அதிகப் பட்ச அதிர்வுடன் சிலையாகிப் போயினர் அங்கிருந்த மூவரும்.
அந்த அதிர்வு அவர்களை விட்டுச் சிறிதும் குறையாத நிலையில், “ஆ.. ஆமா.. இ…ல்ல… இல்ல… எ.. என்… பொ.. பொண்ணு இப்… இப்ப உ.. உயிரோட இ..இல்ல… அவ.. அவள… நா..ன் தான்… நான் தான்… என் கை..யால… கையால கொ… கொன்னு…ட்டேன்…” என்று அடுத்த அதிர்வெடியைத் தூக்கிப் போட்ட கஸ்தூரி அடுத்த நொடி மயங்கிப் போனார்.