பிழையில்லா கவிதை நீ – 2

அத்தியாயம் – 2

“ஓ! நீங்க போலீஸ் இன்ஸ்பெக்டரா?” என்று கேட்ட கவினி, “அதனால் என்ன சார்? போலீஸ் இன்ஸ்பெக்டர் ப்ரோக்ராம்ல வரக்கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே?” என்று கேட்டாள்.

“சட்டம் இருக்கோ, இல்லையோ… என் அனுமதியில்லாமல் நீங்க எடுத்த ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் ஆகக் கூடாது…” என்று கடுமையாகச் சொன்னான் ஜெகவீரன்.

அதற்குக் கவினி ஏதோ சொல்லப் போக, “கவி, ப்ளீஸ் ஸ்டாப் இட்!” என்று அவளின் பேச்சைத் தடுத்தான் ஆகாஷ்.

“என்ன ஆகாஷ், நீங்களாவது பேசுங்க…” என்று கவினி சொல்ல, “வேண்டாம் விட்டுடு கவி. சாருக்குப் பிடிக்கலைனா போட வேண்டாம்…” என்று அவளிடம் முடிவாகச் சொன்னவன், “நாங்க போட மாட்டோம் சார்…” என்று ஜெகவீரனிடம் உறுதியளித்தான்.

“ஏன் ஆகாஷ்?” என்று அவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் கவினி.

“போலீஸ்காரங்களைப் பகைச்சுக்கக் கூடாது கவி. இதைப் பெரிய இஸ்ஷு ஆக்காதே!” என்று அவளை அதட்டி அடக்கினான்.

அவர்கள் மெல்லிய குரலில் பேசினாலும், என்ன பேசினார்கள் என்று ஜெகனின் காதிலும் விழத்தான் செய்தது.

கவினியைப் பார்த்து அலட்சியமாக உதட்டைச் சுழித்துக் கொண்டான்.

அதைக் கண்டு அவனை முறைத்துப் பார்த்தவள், பின்பு தானும் அலட்சியமாகத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

அவளுக்கு ஆரம்பத்திலிருந்து ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்த பெரியவர், அவளையே வாயைப் பிளந்து பார்த்து ‘அத்தனையும் நடிப்பா கோபால்?’ என்ற பாவனையில் முழித்துக் கொண்டிருந்தார்.

அவரின் பார்வையைக் கண்டவள் “அத்தனையும் நடிப்பே கோபால்…” என்று கண்களைச் சிமிட்டிக் குறும்புடன் வாய் விட்டே சொல்ல, ‘நான் மனசுக்குள்ள நினைச்சதை இந்தப் பொண்ணு எப்படிச் சரியா சொல்லுச்சு?’ என்று நினைத்து இன்னும் வாயைப் பிளந்து பார்த்தார்.

அதன் பிறகு அவரைக் கண்டுகொள்ளாதவள் ஜெகவீரனின் புறம் திரும்பி, “என்கிட்ட தாலி இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க இன்ஸ்பெக்டர்? ஆரம்பத்திலேயே கேமிரா இருந்த இடத்தைப் பார்த்துட்டீங்களா?” என்று கேட்டாள்.

“நான் போலீஸ்காரன் மேடம். எந்த நேரமும் கவனமாகத்தான் இருக்கணும்…” என்று அவளுக்கு அலட்சியம் போல் பதில் சொன்னான்.

“நீங்க போலீஸ்னு உங்க ஐடி கார்ட் பார்த்தே தெரிஞ்சுக்கிட்டேன் சாரே. நீங்க சொன்னதையே திருப்பிச் சொல்லாம எப்படிக் கண்டுபிடிச்சீங்கனு சொல்லுங்க…” அவனின் அலட்சியத்தை அசால்டாகத் தூக்கிப் போட்டு விட்டுக் கேட்டாள்.

“உனக்குத் திமிர் ஜாஸ்தி தான்!” போலீஸ் என்றதும் பலர் ஓர் அடி தள்ளி வைத்துத் தயக்கத்துடன் பேசித்தான் பார்த்திருக்கிறான். ஆனால் இவளோ ‘நீ போலீஸாக இருந்தால் என்ன?’ என்பது போல் சாதாரணமாகப் பேசுகிறாள் என்று புரிந்து கொண்டவனுக்கு உள்ளுக்குள் அவளை நினைத்து வியப்பாக இருந்தது.

ஆனாலும் அதைச் சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “கேமிராவை லேட்டாகத்தான் கவனிச்சேன். திருமதி மாதிரி வேஷம் எல்லாம் பக்காவா தான் போட்டுருக்க. ஆனா அதுலயும் சொதப்பல். அது தான் காட்டிக் கொடுத்துருச்சு…” என்று அவளுக்கான பதிலைச் சொன்னான்.

“என்ன சொதப்பல்?” கேள்வியுடன் தன்னையே ஒரு முறை ஆராய்ந்து கொண்டு கேட்டாள்.

“உச்சந்தலை வரை குங்குமம் வச்சா மட்டும் பத்தாது…” என்றவன் லேசாகக் குனிந்து அவளின் காலை காட்டினான்.

‘காலில் என்ன?’ என்று புரியாமல் பார்த்தவளுக்குச் சில நொடிகளுக்குப் பிறகே தான் மெட்டிப் போடாதது புரிந்தது.

“ஓ! மெட்டியைச் சொல்றீங்களா? இப்போ எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகும் கூடச் சிலர் மெட்டிப் போடுவதில்லையே? அதான் அதை நான் பெருசா நினைக்கலை…” என்றாள்.

“நீ போட்டது வில்லேஜ் கேர்ள் வேஷம்…” என்று மட்டும் சொன்னவன், “வில்லேஜ் பொண்ணு மெட்டி இல்லாமயானு டவுட் வந்தது. அதோட கழுத்தைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தேன், தாலி இல்லை. அப்புறம் சுற்றுப்புறத்தைப் பார்த்தேன். கேமிரா தன்னோட தலையை மட்டும் நீட்டித் தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது…” என்று முடித்தான்.

“ஓஹோ!” என்றவள், “சரிதான், நீங்க நிஜமாவே போலீஸ்னு ஒத்துக்கிறேன்…” என்றவளின் கண்கள் குறும்புடன் சிரித்தன.

“ஓய்! என்ன நக்கலா?” அவளின் குறும்பைப் பார்த்துக் கடுப்பாகக் கேட்டான்.

“ச்சே…ச்சே! நக்கல் எல்லாம் இல்லை. கை எல்லாம் ஆர்ம்ஸ் வச்சு அப்படியே கெத்தா தெரிந்தாலும், போலீஸுக்கு உண்டான சில உங்ககிட்ட மிஸ்ஸிங். அதான் எனக்கு டவுட் வந்துருச்சு. ஆனா நீங்க மெட்டியை வச்சே சட்டுசட்டுன்னு கண்டுபிடிச்சு நீங்க போலீஸ் தான்னு ஃபுரூப் பண்ணிட்டீங்க…” என்றாள்.

“அப்படி என்ன போலீஸுக்கு உண்டானது என்கிட்ட மிஸ்ஸிங்?”

“முதலில் உங்க தலை, போலீஸ் கட்டிங் மிஸ்ஸிங். அடுத்து…” என்றவள் கேலியாக அவனின் வயிற்றின் புறம் கையை நீட்டிக் காட்டி “தொப்பை மிஸ்ஸிங்…” என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்.

“பத்து நாள் லீவ்ல இருக்கேன். அதான் தலை இப்படி. அதோட போலீஸ்னாலே தொப்பையோட தான் இருக்கணும்னு இல்லை…” என்று எரிச்சலாகச் சொன்னாலும், அவளின் தைரியத்தை உள்ளுக்குள் பாராட்டவே செய்தான்.

“அதுதான் வேஷம் கலைஞ்சு போய்ருச்சுல. இன்னும் ஏன் கண்ணுல இருந்து தண்ணி வருது?” கவினி அவனிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், அவளின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கேட்டான்.

“அதுவா? கொஞ்சம் கிளிசரின் ஜாஸ்தியா போட்டுட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நான் கூடக் கடல் தண்ணியைக் கண்ணுக்குள்ள விட்டுக்கிட்டயோனு நினைச்சேன்…” என்று நக்கலாகச் சொன்னவனை முறைத்துப் பார்த்தாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, கேமிராவைப் பார்த்து இன்னும் கூட்டம் கூட ஆரம்பித்தது.

அதனால் அங்கிருந்து செல்ல முடிவெடுத்த ஜெகவீரன் பேச்சை நிறுத்தி விட்டு நகர்ந்தான்.

“போறதுக்கு முன்னாடி டெலிகாஸ்ட் பண்ண பெர்மிஷன் கொடுக்கலாமே?” அவன் தன்னிடம் சிறிது சகஜமாகப் பேசியதை வைத்துக் கேட்டுக் பார்த்தாள்.

நகர்ந்து கொண்டிருந்தவன் நின்று, அவளை முறைத்து, சுட்டு விரலைக் காட்டி, “போடக்கூடாது…” என்று மிரட்டலாகச் சொன்னவன், ஆகாஷை பார்க்க, “போட மாட்டோம் சார்…” என்று வேகமாகச் சொன்னான் அவன்.

அவன் சென்றதும் தன்னையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்த பெரியவரின் புறம் திரும்பினாள்.

அதற்காகவே காத்திருந்தவர் போல் “உனக்கு மைண்ட் ரீடிங் தெரியுமாமா?” என்று கேட்டார்.

“மைண்ட் ரீடிங் தெரியாதுங்க. ஆனால் மனுசங்க ரீடிங் தெரியும்…” என்று சொல்லி விட்டுத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.


அன்று மதியம் மூன்று மணியளவில் ஒருவருடன்‌ அந்தக் காஃபி ஷாப்பிற்கு வந்தான் ஜெகவீரன்.

தன்னுடன் வந்தவருடன் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டே இருக்கையில் அமர்ந்தான்.

தங்களுக்கெனக் குடிக்க எதுவும் தருவித்துக் கொள்ளாமல் பத்து நிமிடங்கள் கடந்த பின்பும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பின் சில நிமிடங்களுக்குப் பிறகு நிமிர்ந்த ஜெகன், ‘காஃபி ஆர்டருக்காகக் கடை ஊழியர்கள் யாரும் வருகிறார்களா?’ என்று பார்த்தான்.

அவன் நிமிரவே காத்திருந்தது போல அங்கே வந்த கடை ஊழியப் பெண்ணைப் பார்த்து ஜெகனின் புருவங்கள் ஆச்சரியத்துடன் ஏறி இறங்கின.

‘இந்தப் பெண் எங்கே இங்கே?’ என்ற பாவனையில் அவன் பார்க்க, அப்பெண்ணோ யாரோ புதிய நபரைப் பார்ப்பது போல் பார்த்து, “சார், ஆர்டர் ப்ளீஸ்…” என்று மென்குரலில் கேட்டாள்.

அவளின் பார்வையை யோசனையுடன் பார்த்தாலும் அவளிடம் ஒன்றும் கேளாமல், “டூ காஃபி…” என்று மட்டும் சொன்னான்.

அப்பெண்ணும் சிறிது நேரத்தில் காஃபியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றாள்.

அவளையே அவ்வப்போது ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே, எதிரில் இருந்தவரிடம் பேசி முடித்தான்.

“அந்தக் கேஸ் என்னன்னு பார்க்கிறேன். அப்புறம் எதுவும் விவரம் வேணும்னா உங்களைக் கூப்பிடுறேன்…” என்று அவரிடம் ஏதோ வழக்கு விஷயமாகப் பேசிவிட்டுக் ‘காஃபிக்குத் தான் பணம் கொடுக்கிறேன்’ என்றவரைத் தடுத்துத் தான் கொடுப்பதாகச் சொல்லி அவரை அனுப்பி வைத்தான்.

அவர் சென்றதும் ஃபில் கேட்க, அப்பெண் கொண்டு வந்து வைத்து விட்டு அங்கிருந்து நகரப் போக, “மிஸ்.கவினி நீங்க எங்கே இங்கே? உங்க டீவி வேலை என்னாச்சு?” என்று கேட்டு அவளை நிறுத்தினான்.

“கவினியா? யாரை சார் சொல்றீங்க, என்னையா?” என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.

‘என்னடா இந்தப் பொண்ணு இப்படிக் கேட்குது?’ என்று நினைத்துக் கொண்டே, “உங்களைத் தான்! உங்க பேர் கவினி தானே? பத்து நாளைக்கு முன்னாடி தானே பார்த்தோம். அதுக்குள்ள மறந்து போயிருச்சா?” என்று கேட்டான்.

“சாரி சார், என் பேர் கவினி இல்லை, தர்ஷினி! நான் இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்தது இல்லையே…” என்றாள் அமைதியான குரலில்.

தர்ஷினி என்று சொல்லியவளின் முகத்தைக் குழப்பத்துடன் ஆராய்ந்தான்.

பத்து நாட்களுக்கு முன் கடற்கரையில் கிராமத்துப் பெண் வேடத்தில் பார்த்த கவினி ஏன் இப்போது இந்தக் காஃபி ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டு தன்னைத் தர்ஷினி என்கிறாள்?

அன்றைக்குக் கிராமத்துப் பெண் வேடத்தில் இருந்தாள். இன்றோ அக்மார்க் நகரத்துப் பெண்ணாக இருந்தாள்.

அன்று கண்டாங்கி சேலை கட்டியிருக்க, இன்றோ அந்தக் காஃபி ஷாப்பின் சீருடையான பேண்ட், சட்டையில் இருந்தாள்.

அன்று கொண்டை, இன்று குதிரைவால் சடை போட்டு, தொப்பி அணிந்திருந்தாள்.

‘உடையில் வேறுபாடு இருந்தாலும் முகம் ஒன்று போல் தானே இருக்கிறது?’ என்று நினைத்துக் கொண்டே அவளின் முகத்தை ஆராய, அவள் முகத்தில் புருவத்திற்கு மேல் இருந்த தழும்பு புதியதாக இருந்தது.

ஆனாலும் சமீபத்தில் உண்டான தழும்பு போல் இல்லை அது!

அன்றைக்குக் கவினியின் நெற்றியில் தழும்பு இருந்ததா? என்று யோசித்துப் பார்த்தான்.

‘ம்கூம்… இல்லையே கவினிக்கு நெற்றியில் தழும்பு இல்லை. ஆனால் நாடியில் ஒரு தழும்பு இருந்தது. அப்போ இவள் வேற பெண்ணா? இல்லை கவினியும், தர்ஷினியும் இரட்டையர்களா?’

“நீங்களும், கவினியும் ட்வின்ஸா?” என்று அவளிடமே கேட்டான்.

“நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு சார். கவினின்னு எனக்கு யாரையும் தெரியாது. ஏன் சார் என்னைப் பார்த்துக் கவினியானே கேட்டுட்டு இருக்கீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

‘என்ன இது? ஒரே குழப்பமா இருக்கே. ஒருவேளை அன்று போல் டீவி ப்ரோக்ராமுக்காக நடிக்கின்றாளோ’ என்று யோசித்துக் கொண்டே சந்தேகத்துடன் அவளைப் பார்த்து, “ஹேய்… இன்னைக்கும் உங்க குல்லா, நல்லா ப்ரோக்ராமுக்கு என்னை முட்டாளாக்க நடிக்கிறாயா? இன்னைக்கு எங்கே நிக்குறான் அந்தக் கேமிராமேன்?” என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“அச்சோ! என்ன சார், என்னென்னவோ சொல்றீங்க? எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது சார். நீங்க சொல்ற பொண்ணு நான் இல்லை…” என்று அழும் குரலில் சொல்லித் தவிப்புடன் கைகளைப் பிசைந்தாள்.

அன்று கவினி படபடப் பட்டாசாகப் பொரிய, இந்தத் தர்ஷினியோ மென்குரலில் பேசிப் பயத்துடன் படபடத்தாள்.

பெயரில் இருந்து நடை, உடை, பேச்சு வரை வேறுபாடு இருந்தாலும் இருவருக்கும் இருந்த உருவ ஒற்றுமை அவனை நம்பவிடாமல் செய்து கொண்டிருந்தது.

“இல்லை, நீ பொய்…” என்று அவன் மேலும் ஏதோ சொல்ல வர, “தர்ஷினி என்ன ப்ராப்ளம்?” என்று கேட்டுக் கொண்டு அங்கே வந்தான் அந்தக் கடையின் ஆண் ஊழியன்.

“இந்தச் சார் யாரோ கவினின்னு சொல்லி, அது நீங்களானு கேட்குறார். இல்லன்னு சொன்னாலும் நம்பாம ஏதேதோ கேட்குறார்…” அவனிடம் வருத்தமாக விவரம் சொன்னாள்.

“எஸ்க்யூஸ் மீ சார், இவங்க பேர் தர்ஷினி தான். இங்கே தான் வேலை பார்க்கிறாங்க. ரொம்ப அமைதியான பொண்ணு. கவினின்னு இங்கே யாரும் இல்லை…” என்று அந்த ஊழியன் ஜெகவீரனுக்கு விளக்கம் சொன்னான்.

“ஓ!” என்ற ஜெகன் இன்னும் நம்பாமல் அவளைப் பார்த்தாலும், அவளின் வருத்தமான முகத்தைப் பார்த்து “எனக்குத் தெரிஞ்ச பொண்ணு கவினி. அவங்களை மாதிரியே நீங்க இருக்கீங்க. அதான் சின்னக் கன்பூஷன்…” என்றான்.

போலீஸாகவே இருந்தாலும் அந்த நேரத்தில் அதற்கு மேல் ஒரு பெண்ணைப் பற்றித் தூண்டித் துருவ அவன் விரும்பவில்லை.

காவல் நிலையத்திலேயே பல வழக்குகள் வரிசைக் கட்டி நிற்க, அந்த வேலைக்கே நேரம் இல்லாமல் உழைக்கும் போது, யாரோ ஒரு பெண்ணைப் பற்றியும் நினைத்து எதற்கு நேரத்தை வீணாக்க வேண்டும் என்று நினைத்தவன், அவளிடம் அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அப்போதைக்கு ஆராய்ச்சி வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும், அவனின் மூளையில் கவினியின் உருவமும், தர்ஷினியின் உருவமும் தங்கிப் போனது.

ஒரே விதமான இரண்டு உருவமே அந்தக் காவல்காரனைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த நேரத்தில், அதே உருவத்தில் சின்ன வேறுபாட்டுடன் வந்து நின்ற மூன்றாவது நபரைப் பார்த்தால் என்ன பாவனைக் காட்டுவானோ?

அதுவும் அவளின் பெயரும், நடை, உடை பாவனைகளும் வேறாக இருக்க, மலைத்துத் தான் போனான் ஜெகவீரன்.