பிழையில்லா கவிதை நீ – 18

அத்தியாயம் – 18

பிரகாஷ் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு பேசி முடித்து விட்டு எதற்கு இந்த விசாரணை என்று புரியாமல் அவனையே மலங்க விழித்த படி பார்த்துக் கொண்டிருந்த தனத்தின் புறம் திரும்பி அவரைக் கூர்மையாக அளவிட்டான் ஜெகவீரன்.

அவரின் முகத்தில் அப்பாவித்தனம் தெரிந்தது. கண்களில் கலக்கம் இருந்தாலும் அதில் பொய்மை இல்லை என்பதைக் கண்டுகொண்டாலும் தன் விசாரணையைத் தொடர்ந்தான்.

“உங்க மகன் வேலை பார்க்கிற கம்பெனியில் நாங்க பிரகாஷை பெங்களூர் அனுப்பலைன்னு சொல்லிட்டாங்க. உண்மையைச் சொல்லுங்க உங்க மகன் எங்கே?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“என்ன சார் சொல்றீங்க? அவன் பெங்களூர் போகலையா? என்கிட்ட அப்படிச் சொல்லிட்டுத் தான் போனான் சார்…” என்று பதறிப் போய்ப் பதில் சொன்னார் தனம்.

“அதான் போகலைன்னு கம்பெனியில் உறுதியா சொல்லிட்டாங்களே. இனி நீங்க தான் பதில் சொல்லணும். உங்க மகன் கூடச் சேர்ந்து நீங்களும் பொய்ச் சொல்றீங்களா?” என்று கடுமையாகக் கேட்டான்.

“சார்… சார்… நான் எந்தப் பொய்யும் சொல்லலை சார். நீங்க இப்போ சொல்லித்தான் என் மகன் பெங்களூர் போகலைனே எனக்குத் தெரியும். அவன் ஏன் அப்படிப் பொய்ச் சொல்லிட்டுப் போனான்னு தெரியலை சார். என்கிட்ட பொய்ச் சொல்லிட்டு எங்கே போனானோ…” என்று பதறியவர் மகனை நினைத்துப் புலம்பவும் ஆரம்பித்தார்.

“உங்க மகனை நினைச்சு அப்புறம் புலம்புங்கமா. இப்போ நான் கேட்குறதுக்கு எல்லாம் பதில் சொல்லுங்க. பிரகாஷ்கிட்ட வேற போன் நம்பர் எதுவும் இருக்கா?”

“இல்லைங்க சார். ஒரு நம்பர் தான்…”

“அவன் கார் வச்சுருக்கானா?”

“கார் எல்லாம் இல்லை சார். பைக் தான். அதுவும் ஏதோ ரிப்பேர்னு மெக்கானிக் செட்ல ஊருக்குப் போறதுக்கு முன்னாடி விட்டுட்டுப் போறேன். ஊருக்குப் போய்ட்டு வந்து எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டுப் போனான்…” என்றார்.

“அவன் வழக்கமா வண்டியை விடுற மெக்கானிக் செட் எது?”

“இந்த ஏரியா தான் சார். வெங்கடேஷ் கடையில் தான் எப்பவும் விடுவான்…”

“இப்போ அவன் ரூம் எதுன்னு காட்டுங்க. செக் பண்ணனும்…” என்றான்.

“எதுக்குச் சார்?” என்று அவர் இன்னும் பதற,

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ எது அவன் ரூம்னு சொல்லுங்க…” என்றான் கடுமையாக.

அவனின் கடுமையில் பயந்து வேகமாக மகனின் அறைப்பக்கம் கையை நீட்டினார் தனம்.

அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்தன. அதில் ஒரு அறையைத் தான் கைக் காட்டினார் தனம்.

அவ்வீட்டில் இரண்டு படுக்கையறைகளும், ஒரு சமையலறையும், சிறிய வரவேற்பறையும் இருந்தது.

தனம் மகனின் அறையைக் கைக் காட்டவும், ஜெகவீரன் நேராக அங்கே செல்ல, அவனின் பின் தயக்கத்துடன் சென்றார் தனம்.

அறைக்குள் சென்ற ஜெகனின் கண்களில் முதலில் பட்டது அந்த அறை சுவற்றில் ஆங்காங்கே இருந்த கறுப்புப் புள்ளிகள் தான்.

அப்புள்ளிகள் வினயாவின் வீட்டிலும், மருத்துவமனை சுற்றுச்சுவரிலும் பார்த்த புள்ளிகளைக் கண் முன் கொண்டு வர, பிரகாஷின் மீதான தன் சந்தேகத்தை அழுத்தமாக உறுதிச் செய்தான் ஜெகவீரன்.

அவனின் பார்வை சுவற்றில் தெரிந்த புள்ளிகளை வெறிப்பதைக் கண்ட தனம், “அவனுக்குக் கொஞ்சம் சிகரெட் பிடிக்கிற பழக்கம் இருக்கு சார். அதை அணைக்கிறேன்னு சுவத்தில் அமுக்கி வச்சுருவான். இப்படிச் செய்யாதேடான்னு சொன்னாலும் கேட்க மாட்டான். என் ரூம்ல என் இஷ்டத்துக்குத் தான் செய்வேன்னு சொல்லுவான்…” என்று தயங்கிய படியே சொன்னார்.

அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாதவன், அறையைச் சோதனையிட ஆரம்பித்தான்.

ஒற்றைப் படுக்கையும், சுவர் ஓரத்தில் ஒரு மேஜையும், அதன் முன் ஒரு நாற்காலியும் இருந்தது. மேஜையின் மீது சில புத்தகங்கள், செய்தித்தாள்கள் என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

முதலில் அந்த மேஜையின் ட்ராயரை பார்வையிட ஆரம்பித்தான்.

அதில் முதல் ட்ராயரில் ஒரு சிகரெட் பாக்கெட் இருக்க, அதை எடுத்து உள்ளிருக்கும் சிகரெட்டை ஆராய்ந்தான்.

வினயா வீட்டில் கிடந்த அதே வகையைச் சேர்ந்த சிகரெட் என்பது பார்த்ததுமே தெரிந்தது. அதைத் தன் விசாரணைக்குத் தனியாக எடுத்து வைத்தான்.

பின் அடுத்தடுத்த ட்ராயரை திறந்து பார்க்க, சில புத்தகங்களும், பேப்பரும், பில்களும் தான் கிடந்தன.

அனைத்தையும் எடுத்துப் பார்த்தான். ஆனால் வேறு எந்தத் துப்பும் கிடைக்காமல் போக, ட்ராயர்களைத் திரும்ப மூடினான்.

அப்போது கீழே இருந்த கடைசி ட்ராயரை மூடும் போது அதில் இருந்த ஒரு புத்தகத்தில் ஏதோ நீட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டவன் திரும்பத் திறந்து அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தவன் அது என்ன புத்தகம் என்று பார்த்தான்.

அது ஒரு ஆங்கில நாவல் என்று அதில் இருந்த எழுத்துகள் அவனுக்கு எடுத்துரைக்க, புத்தகத்தைத் திறந்து அந்த நீட்டிக் கொண்டிருந்த பக்கத்தைத் திறந்தான்.

திறந்தவன் புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்கின.

அப்பக்கத்தில் இருந்த புகைப்படத்தில் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் வினயா.

அவன் ஏதோ புகைப்படத்தைப் பார்ப்பதைக் கண்டு சிறிது தள்ளி நின்று ‘என்ன அது?’ என்று எட்டிப் பார்த்த தனம் வினயாவின் புகைப்படத்தைக் கண்டு “அட மகனே!” என்று அதிர்ச்சியாக முனங்கிய படி வாயில் கை வைத்தார்.

வினயாவின் புகைப்படத்தைக் கையில் எடுத்த ஜெகன் நிதானமாகத் தனத்தின் புறம் திரும்பினான்.

அவன் கேள்விகள் எதுவும் கேட்கும் முன், “சார் அது…” என்று இழுத்தார் தனம்.

“உங்க தம்பி பொண்ணு வினயா…” என்று அவரின் இழுவையை முடித்து வைத்தான் ஜெகவீரன்.

“ஆமா சார்… அவளை எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“நான் இப்போ உங்க வீட்டுக்கு வந்ததுக்குக் காரணமே வினயா தானே…” என்று சொன்னவனைப் புரியாமல் பார்த்தார் தனம்.

“வினயாவா? அவள் என்ன செய்தாள் சார்?” என்று கேட்டார்.

“உங்க கேள்வியே தப்பு. அவள் என்ன செய்தாள்னு கேட்காதீங்க. அவளை உங்க பையன் என்ன செய்தான்னு சொல்லுங்க…” என்று இறுக்கமான குரலில் கேட்டான்.

“சா..சார்… என்..என்ன… சொல்றீங்க? அவளை என் மகன் என்..என்ன செய்தானா?” என்று வார்த்தைகள் வராமல் தந்தியடிக்கக் கேட்டார்.

“ஆமாம், என்ன செய்தான்? சொல்லுங்க…”

“நீங்க என்ன கேட்குறீங்கனே எனக்குப் புரியலை சார்…”

“புரியும் படியாகவே கேட்குறேன். உங்க தம்பி பொண்ணு வினயா இப்போ எங்கே?” என்று கேட்டான்.

“அவள் அவளோட வீட்டில் தானே இருப்பாள் சார்?” என்று குழப்பத்துடன் சொன்னார் தனம்.

“வினயா அங்கே இருந்திருந்தால் நான் ஏன் இங்கே வரப் போறேன்? அவளைப் போன புதன்கிழமையில் இருந்து காணோம். அவளைக் கண்டுபிடிச்சுத் தரச் சொல்லி அவளோட அப்பா மிஸ்டர் சேதுராமன், அதான் உங்க தம்பி என்கிட்ட கம்ளைண்ட் கொடுத்திருக்கார்…”

“என்ன வினயாவைக் காணோமா?” என்று அதிர்ந்து போய்க் கேட்டார்.

“ஏன் உங்களுக்குத் தெரியாதா? உங்க தம்பி சேதுராமன் சொல்லலையா?” என்று கேட்டான்.

“இல்லையே சார். அவன் ஊரில் இருந்து வந்தது கூட எனக்குத் தெரியாதே…” என்று கண்ணீருடன் கையை விரித்தார்.

அவரிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டவன், “வினயா காணாமல் போனதில் இப்போ என்னோட சந்தேகம் உங்க மகன் பக்கம் தான் திரும்பி இருக்கு. சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போலத் தான் எனக்குத் தடயமும் கிடைச்சிருக்கு…” என்று சிகரெட்டையும், வினயாவின் புகைப்படத்தையும் காட்டினான்.

“நானே இப்பதான் இந்தப் போட்டோவை அவன் வச்சிருக்கிறதைப் பார்க்கிறேன் சார். என் மகனுக்கு வினயாவைப் பிடிச்சிருக்கலாம் சார். ஆனா அதுக்காக அவளைக் கடத்துற அளவுக்கு எல்லாம் போயிருக்க மாட்டான்…” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

“உங்க அழுகைக்கான நேரம் இது இல்லமா. எனக்கு இப்போ சில விவரம் எல்லாம் தெரியணும். நான் கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க…” என்றான் சற்று அதட்டலாக.

அதில் அவர் அழுகையை அடக்கப் போராட, அவரைச் சலனமில்லாமல் பார்த்தவன் தன் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தான்.

“உங்க தம்பி குடும்பத்துக்கும், உங்க குடும்பத்துக்கும் இருக்கும் பழக்கம் எல்லாம் எப்படி? மிசஸ் கஸ்தூரி உங்ககிட்ட எல்லாம் எப்படிப் பழகுவாங்க?”

“சேது என் கூடப் பிறந்தவன் தான் சார். நல்ல பாசமானவனும் கூடத் தான். ஆனா அவனுக்கு எப்போ கல்யாணம் ஆச்சோ அப்பவே அந்தப் பாசம் எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சுன்னு தான் சொல்லணும்.

அதுக்கு முதல் காரணம் அவன் பொண்டாட்டி கஸ்தூரி தான். நான் புருஷனை இழந்து பிள்ளையோட தனியா நின்னது தான் கஸ்தூரி எங்களை ஒதுக்கக் காரணம்.

“என் வீட்டுக்காரர் பிரகாஷுக்கு ஐஞ்சு வயசா இருக்கும் போதே ஒரு விபத்துல போய்ச் சேர்ந்துட்டார். அதுக்குப் பிறகு தையல் தைச்சுத்தான் என் பிள்ளையை வளர்த்தேன்.

அவர் இறந்தப்போ எனக்கு உதவி செய்ய முன் வந்த என் தம்பி, அப்புறம் அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு எங்களைப் பார்க்க வருவதைக் குறைச்சுக்கிட்டான்.

ஆனாலும் அவன் பொண்டாட்டிக்குத் தெரியாம எப்பவாவது வந்து பார்த்துட்டுப் பிரகாஷ் கையில் காசு கொடுத்துட்டுப் போவான். அவன் அப்படி வந்து பார்த்துக் காசு கொடுப்பது எனக்குப் பிடிக்கலை. அதனால் காசு எல்லாம் கொடுக்காதே நான் தையல் தைச்சு என் பிள்ளையைக் காப்பாத்திக்கிறேன்னு சொல்லிட்டேன்.

அதுக்குப் பிறகு அவன் வேலையில் நல்ல பேர் வாங்கி அடுத்தடுத்த பதவிக்குப் போகவும், கஸ்தூரிக்கு இன்னும் தலைக்கனம் ஏறிப் போயிருச்சு. எப்பவாவது குடும்ப விழாவில் சந்திச்சு பேசிக் கொள்வதோட எங்க பழக்க வழக்கம் நின்னு போயிருச்சு. அது எல்லாம் கூட என் பையன் பிரகாஷ் நல்லா படிச்சு ஒரு நல்ல வேலையில் சேரும் வரை தான்.

பிரகாஷ் நல்ல வேலையில் சேர்ந்து கையில் காசு பார்க்கவும், ஓட்டு வீடும், ஒற்றை அறையுமா இருந்த இந்த வீட்டை வேலை பார்த்து, கிடந்த இடத்தையும் சேர்த்து இரண்டு ரூமா எடுத்துக் கட்டினான்.

அதிலிருந்து கஸ்தூரி அவனை எங்கயும் பார்த்தால் நல்லா பேசுவாள். எங்களையும் அவள் வீட்டுக்கு எப்பவாவது கூப்பிடுவாள்.

நானும் எப்படி இருந்தாலும் சொந்த தம்பி வீடாச்சேன்னு போய்ட்டு வருவோம். சேதுவும் வெளிநாட்டுக்குப் போன பிறகு ஊருக்குப் போய்ட்டு வந்து இங்கே வந்து பேசிட்டு அங்கே வாங்கினேன்னு ஏதாவது கொடுத்துட்டுப் போவான்.

ஆனா இப்போ என் பையனுக்கு வினயாவைப் பிடிச்சிருக்கு என்பதும், என் தம்பி ஊரில் இருந்து வந்ததும் எதுவும் எனக்குத் தெரியாது சார்…” என்றார் தனம்.

“வினயா உங்ககிட்ட, உங்க மகன்கிட்ட எல்லாம் எப்படிப் பழகுவாள்?”

“அவள் ரொம்ப நல்ல பொண்ணு சார். எங்க பார்த்தாலும் அத்தை அத்தைன்னு பாசமா கூப்பிட்டுப் பழகுவாள். பிரகாஷ்கிட்டயும் நல்லா தான் பேசுவாள்…” என்றார்.

“புதன்கிழமை ஒரு கல்யாண ரிசப்ஷன் நடந்ததே… அதுக்கு நீங்க போனீங்களா?”

“இல்லை சார். அன்னைக்கு எனக்கு முட்டிவலி அதிகமா இருந்துச்சுன்னு என்னால போக முடியலை. பிரகாஷ் தான் போனான்…”

“அன்னைக்குப் பிரகாஷ் திரும்பி எப்போ வீட்டுக்கு வந்தான்?”

“மறுநாள் காலையில் தான் வந்தான் சார்…”

“என்ன, மறுநாள் காலையிலா?”

“ஆமா சார்…”

“ஏன்?”

“அன்னைக்கு நைட் போன் பண்ணி அவன் பிரண்டுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவனுக்கு உதவியா ஹாஸ்பிட்டல் போறேன்னு சொல்லிட்டுப் போனான். காலையில் வந்து இப்போ கொஞ்சம் பிரண்டுக்குப் பரவாயில்லைன்னு சொன்னான்…” என்றார்.

“அவன் பிரண்டு யாருக்கு உடம்பு சரியில்லை, எந்த ஹாஸ்பிட்டல்னு எதுவும் சொன்னானா?”

“நான் கேட்டதுக்கு ஆபிஸ் பிரண்டுன்னு சொன்னான் சார். வேற எதுவும் சொல்லலை…”

“அதை நான் விசாரிச்சுக்கிறேன். அவன் பிரண்ட்ஸ் யார் யார்? அவங்க போன் நம்பர், வீட்டு அட்ரஸ் இந்த விவரமெல்லாம் சொல்லுங்க…”

“அட்ரஸ் எல்லாம் தெரியாது சார். அவன் ஆபிஸ் பிரண்டு நம்பர் மட்டும் தான் அந்தக் காலண்டர்ல எழுதி வச்சுருக்கான்…” என்றார்.

“உங்ககிட்ட போன் இல்லையா? எதுக்குக் காலண்டர்லயே எழுதி வைக்கிறான்?”

“பட்டன் போன் இருக்கு சார். ஆனா அதில் நம்பர் பதிஞ்சு வச்சா சரியா போன் போட தெரியாம மாத்தி மாத்தி வேற யாருக்காவது போட்டு விட்டுருவேன். அதனால இப்படிக் காலண்டர்ல எழுதி வச்சுட்டா தேவைப்படும் போது நம்பர் போட்டுப் போன் போட்டுருவேன்…” என்றார்.

ஜெகவீரன் தனத்திடம் விசாரணையை முடித்துக் கொண்டு காலண்டரில் பிரகாஷ் குறித்து வைத்திருந்த அவனின் நண்பனின் தொலைபேசி எண்களுக்கு அழைத்து விசாரிக்க ஆரம்பித்தான்.

அந்த விசாரணையில் பிரகாஷின் நண்பன் புதன்கிழமை இரவு அவனுடன் அலுவலகத்தில் வேலை பார்த்த யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போகவில்லை என்ற தகவலைத் தெரிவித்தான்.

அதில் ‘நினைத்தேன்’ என்ற எண்ணத்துடன் மேலும் சில நொடிகள் விசாரணை நடத்தி விட்டு அழைப்பை துண்டித்தான் ஜெகவீரன்.

பிரகாஷின் அன்னையிடம் நடத்திய விசாரணையிலும், அவனின் வீட்டைச் சோதனை செய்ததிலேயும் பிரகாஷ் தான் வினயாவைக் கடத்திச் சென்றிருப்பான் என்ற எண்ணம் உறுதியாக, அவனைப் பிடித்து விடும் உத்வேகத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் வாசப்படியில் காலை வைத்த போது அவனின் பின் ஓடிவந்த தனம், “சார், சார் பிரகாஷ் வினயாவைக் கடத்திருக்க மாட்டான் சார். என் பையன் அப்படிப்பட்டவன் இல்ல. அவனை ஒன்னும் பண்ணாதீங்க சார்…” என்று கெஞ்சினார்.

அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான் ஜெயவீரன்.

மீண்டும் காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வழியில் அவனுக்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்துப் பேசினான்.

அந்தப் பக்கமிருந்து அழைத்த சப்-இன்ஸ்பெக்டர் சொன்ன தகவலைக் கேட்டு “அப்படியா? நான் உடனே அங்கே வர்றேன்…” என்றான்.

சற்று நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்குச் சென்று பார்க்க, சென்னைக்கு வெளியே இருந்த பைபாஸ் ரோட்டில் ஒரு மரத்தடியின் கீழ் அனாதரவாக நின்று கொண்டிருந்தது அந்தக் கார்.

“கார் எப்போ இருந்து இங்கே நிக்கிது செந்தில்?”

“அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான் இங்கே ஒரு கார் தனியா நிக்கிதுன்னு தகவல் வந்தது சார். சப் இன்ஸ்பெக்டர் உடனே என்னை இங்கே அனுப்பி வச்சுட்டார்…”

“ஜனாவை இடிச்ச வண்டி தானே இது?”

“ஆமா சார். அதே வண்டி தான்…”

“இந்தக் காரை ஓட்டிட்டு வந்தவன் பத்தி எதுவும் தகவல் தெரிந்ததா?”

“இல்ல சார். வண்டி மட்டும் தான் அநாதையா நிக்கிதுன்னு தகவல் வந்தது. உடனே இந்தப் பக்கம் எல்லாம் செக் பண்ணி பார்த்துட்டேன். யாரும் கிடைக்கலை சார்…”

“நாம அவனை வலைப் போட்டுத் தேடுறோம்னு தெரிஞ்சதும் வண்டியை இங்கே அநாதையா விட்டுட்டு ஆள் எஸ்கேப் ஆகிட்டான்…” என்று சொல்லிக் கொண்டே காரை சுற்றி வந்து ஆராய்ந்தான்.

காருக்குள்ளும் ஆராய எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

“ரொம்பக் கிளீனா இருக்கு. வண்டி நம்பர் மட்டும் தான் நமக்குக் கிடைச்சுருக்கு. ஆனா அதையும் அவன் தைரியமாக விட்டு வச்சுருக்கான் என்றால் கண்டிப்பா இது ஒரிஜினல் நம்பரா இருக்காது…” என்றான்.

மேலும் சிறிது நேரம் செந்திலுடன் பேசியவன் ‘பிரகாஷ் பற்றித் தனக்குக் கிடைத்த தகவலை வைத்து அவனைத் தேடும் வேகத்தைத் துரிதப்படுத்த வேண்டும்’ என்றான்.

“அப்படியே பிரகாஷ் போன் கடைசியா எந்த ஏரியாவில் ஆக்டிவாக இருந்ததுன்னு விசாரிங்க செந்தில். சீக்கிரம் அவனைப் பிடிச்சே ஆகணும்…” என்றான்.

இரவோடு இரவாகப் பிரகாஷை தேடும் வேட்டை ஆரம்பமானது.

இந்த வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுநாள் காலையில் இன்னொரு தகவலும் கிடைத்தது.

அத்தகவலை மருத்துவமனையில் கஸ்தூரியைக் கண்காணித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் தெரிவித்தார்.