பிழையில்லா கவிதை நீ – 17

அத்தியாயம் – 17

“ஜனா…” தன் உயிரே போனது போல் அதிர்ந்து கத்திக்கொண்டு காரிலிருந்து குதித்து இறங்கினான் ஜெகவீரன்.

“செந்தில், அந்தக் காரைப் பிடிங்க, விடாதீங்க…” என்று உத்தரவிட்டுக் கொண்டே ஜனாவை நோக்கி அவன் ஓட, காவல் வாகனம் அந்தக் காரைத் துரத்திக் கொண்டு ஓடியது.

ஜனா ஒரு சாய்த்துச் சாலையில் விழுந்து கிடக்க, அவளின் காலின் மேல் வண்டி விழுந்து கிடந்தது.

முதலில் வண்டியைத் தூக்கிய ஜெகன், பின் ஜனாவின் அருகில் ஓடினான்.

“ஸ்ஸ்ஸ்…” என்ற முனங்கலுடன் தரையில் இருந்து எழ முயன்று கொண்டிருந்தாள் ஜனார்த்தனி.

சிக்னல் அருகில் என்பதால் அங்கிருந்த ட்ராபிக் போலீஸ் வந்து விட, ஜெகனுடன் அவர்களும் துரிதமாகச் செயல்பட்டனர். சிறு கூட்டமும் அந்த இடத்தில் கூடிவிட்டது.

ஜனாவைத் தூக்கி அமர வைத்த ஜெகன், “என்னாச்சு ஜனா, எங்கே அடிப்பட்டிருக்கு?” என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே அவளை ஆராய்ந்தான்.

“எனக்கு ஒன்னுமில்லை ஜெகா. பதட்டத்தில் தான் கத்திட்டேன்…” என்றவள் வலியை வெளிப்படுத்தும் விதமாக “ஸ்ஸ்ஸ்…” என்று மீண்டும் முனங்க, அவனே அவளுக்கு எங்கே அடிப்பட்டிருக்கிறது என்று பார்த்தான்.

அவளின் இடது கையின் முழங்கையில் இருந்து ரத்தம் விரல் வரை வடிந்து கொண்டிருந்தது. இடது காலின் பெருவிரலில் நகம் பிய்ந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. தலைக்கவசம் அணிந்திருந்ததால் நல்லவேளையாகத் தலையில் அடிப்படாமல் தப்பினாள்.

அவளின் ரத்தத்தைப் பார்த்துக் கலங்கிப் போனான் அந்தக் காவல்காரன்.

“எனக்குத் தான் ஒன்னுமில்லைன்னு சொல்றேனே ஜெகா. அவனைப் பிடிங்க. என்னைக் கொல்ல முயற்சி செய்தவன் யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும். நீங்க போங்க…” என்று பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு அவனின் தோளைப் பிடித்துத் தள்ளினாள் ஜனார்த்தனி.

“அவனை எப்படிப் பிடிக்கணும்னு எனக்குத் தெரியும் ஜனா. நீ கிளம்பு. ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்றான் ஜெகவீரன்.

“எப்போ பிடிப்பிங்க? அவன் ஓடிப் போன பிறகா?” என்று அவள் கடுப்பாகக் கேட்க,

அவளைக் கடுமையாக முறைத்த ஜெகன், தன் வாயில் விரல் வைத்து “ஷ்ஷ்…!” என்று மிரட்டி, “ஒழுங்கா ஹாஸ்பிட்டல் கிளம்பு!” என்று பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.

அவனின் கண்டிப்பு வேலை செய்ய, மெல்ல எழ முயன்றாள்.

ஆனால் அவளால் நிற்கவே முடியவில்லை. கால் பெருவிரலில் மட்டும் தான் அடிப்பட்டது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, எழுந்து நிற்க முயலும் போது தான் முட்டி விண்ணென்று தெறித்ததை உணர்ந்தாள்.

அவள் படும் சிரமத்தைக் கண்டு, “என்ன ஜனா… கால் என்னாச்சு?” என்று பதறிப் போய்க் கேட்டான் ஜெகன்.

“முட்டி ரொம்ப வலிக்குது ஜெகா. நிக்க முடியலை…” என்று அவள் வலியுடன் முனங்க, சிறிதும் யோசிக்காமல் சட்டென்று அவளின் கையை எடுத்து தன் தோளைச் சுற்றிப் போட்டு அவளைத் தாங்கிக் கொண்டான்.

அவளும் இருந்த வலியில் இன்னும் வசதியாகத் தன் கையை அவனின் மீது போட்டுக் கொண்டு தன் எடை முழுவதையும் அவன் மேல் சாய்த்து நிற்க முயன்றாள்.

“முட்டியிலும் ரத்தம் வருதா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் முட்டியைப் பார்த்தான்.

அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் மீது ரத்தம் எதுவும் தெரியவில்லை.

அங்கிருந்த ட்ராபிக் கான்ஸ்டபிளின் உதவியுடன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் அவளை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றான்.

சிகிச்சை துரிதமாக நடைப்பெற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் கான்ஸ்டபிள் செந்திலுக்கு அழைத்துக் கார்காரனைப் பிடிக்க முடிந்ததா என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

“அவனைப் பிடிச்சிட்டீங்களா செந்தில்?”

“ஸாரி சார். எஸ்கேப் ஆகிட்டான்…” என்று செந்தில் அந்தப் பக்கமிருந்து தகவல் தர,

“ஷிட்…!” என்று கையைக் கோபத்துடன் உதறிக் கொண்டான் ஜெகவீரன்.

செந்திலுடன் பேசியதோடு நிற்காது அடுத்தச் சில நிமிடங்கள் தொடர்ந்து சில அலைபேசி உரையாடல் நடத்தி சில தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தான்.

சற்று நேரத்தில் ஜனார்த்தனியின் சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியே வர, தன் அலைபேசி உரையாடலை முடித்துக் கொண்டு அவரிடம் வேகமாகச் சென்று அவளின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.

“ஜனா எப்படி இருக்காள் டாக்டர்?”

“கையில் ஒரு கீறல். அதில் மூணு தையல் போட்டுருக்கேன். கால் பெருவிரல் நகம் தனியா பிய்ந்து விட்டது. அதைக் கிளின் பண்ணிக் கட்டுப் போட்டுருக்கு. அது தவிரக் கால் முட்டியில் லேசா சுளுக்கு இருக்கு.

அதுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்தாச்சு. இப்போ நீங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகலாம். இரண்டு நாளுக்குப் பிறகு கிளின் பண்ணிக் கட்டு மாத்த வரணும். டேப்ளட் டீடைல்ஸ் நர்ஸ் சொல்லுவாங்க…” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் மருத்துவர்.

அவர் சென்றதும் ஜனா இருந்த அறைக்குள் சென்றான் ஜெகன்.

முழங்கைக்குக் கீழ் ஒரு கட்டும், கால் விரலில் ஒரு கட்டுமாகப் படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்தாள் ஜனார்த்தனி.

அவளின் முகத்தில் இருந்த சோர்வை பார்த்து வருந்தியவன், கண்மூடி படுத்திருந்தவளின் அருகில் சென்று, அவளின் நெற்றியில் கை வைத்து மெல்ல வருடினான்.

தையல் போட்டதில் லேசான வலியுடன் கூடிய மயக்கத்தில் இருந்த ஜனா, அவனின் வருடலை உணர்ந்து விழிகளைத் திறந்து பார்த்தாள்.

“வலிக்குதா ஜனா?” வருடலைத் தொடர்ந்து கொண்டே கேட்டான்.

தன் வலியை அவன் வலியாக உணர்ந்தவன் போல் வலி நிறைந்த குரலில் கேட்டவனின் விழிகளை ஊருவுவது போலப் பார்த்தாள் ஜனார்த்தனி.

“என்ன ஜனா?” அவளின் பார்வையின் பொருள் விளங்காமல் கேட்டான்.

‘ஒன்றுமில்லை’ என்பது போல் அவள் தலையை அசைக்க,

“ரொம்ப வலிக்குதா? கஷ்டமா இருக்கா?” என்று கனிவுடன் கேட்டான்.

“ம்ப்ச்…” என்று உதட்டைச் சுளித்துச் சப்தம் எழுப்பியவள், “இந்த வலியெல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை…” அந்த நிலையிலும் தோள்களை அலட்சியமாகக் குலுக்கிவிட்டுச் சொன்னாள்.

அவளின் வாய் தான் வலியைச் சொல்லவில்லையே தவிர, அவளின் கண்கள் அவளின் வலியை நன்றாகவே காட்டிக் கொடுத்தன.

அதைக் கண்டு கொண்டவன் அவளின் தைரியத்தை நினைத்து உள்ளுக்குள் வியந்தாலும் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், கையில் போட்டுருந்த கட்டின் மீது தன் விரலை வைத்து மென்மையாக வருடினான்.

“இதை விடுங்க…” என்று அவனின் கையைப் பற்றி விலக்கி விட்டவள், “காரில் வந்து என்னை இடிச்சது யார்னு தெரிந்ததா ஜெகா?” என்று கேட்டாள்.

“இல்லை ஜனா. செந்திலை அனுப்பினேன். அவனைப் பிடிக்க முடியாமல் மிஸ் பண்ணிட்டார்…” என்றான்.

“ஓ சரி, இந்த வேலையைப் பார்த்தது அந்தச் சுனிலாகத் தானே இருக்கும். அவனைப் பிடிச்சா வேலை முடிந்தது…” என்றாள்.

“உன் கெஸ் தப்பு ஜனா…” என்றான் ஜெகன்.

“தப்பா? தப்புன்னு எப்படிச் சொல்றீங்க ஜெகா?”

“உன்னைச் செக்கப்புக்கு அனுப்பிட்டு முதல் வேலையா போன் மூலமா சில வேலைகள் பார்த்துச் சுனிலை பிடிச்சுக் கேட்டாச்சு. அவன் ரொம்பத் தெனாவட்டா பேசுறான். ஆனால் அதிலேயே அவன் இல்லைன்னு எனக்கு உறுதியா தெரிஞ்சு போய்டுச்சு…”

“அப்படி என்ன பேசினான்?”

“முதலில் என்னைக் காட்டிக்கக் கூடாதுன்னு தான் நான் யாருன்னு சொல்லாம மிரட்டல் விட்டேன். ஆனா எப்போ நீ என்னைப் பிடிச்சியோ அப்ப இருந்து இனி நேரடி டீலிங் தான். இனி நான் யாருன்னு காட்டிக்காம எதுவும் செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

என்னைப் போலீஸ்கிட்ட மாட்டி விட்டுப் பொய் வழக்குப் போட்டவள்கிட்ட நேருக்கு நேர் மோதி தான் யாருன்னு காட்டுவேனே தவிர இனி ஒளிவு மறைவே கிடையாதுன்னு என்கிட்டயே போனில் தெனாவட்டா பேசுறான்.

அவன் பேசியதில் எனக்குக் கோபம் இருந்தாலும், இனி நான் அவனைத் தனியா டீல் பண்ணிக்கலாம்னு இப்போதைக்கு அவனை விடச் சொல்லிட்டேன்.

சோ, உன்னைக் காரை வச்சு இடிச்சது அவன் இல்லை. என் கெஸ் என்னென்னா உன்னை இடிச்சவன் வினயா கேஸ் சம்பந்தப்பட்டவனா இருப்பானோன்னு தோணுது…” என்றான்.

“என்ன? வினயா கேஸ் சம்பந்தப்பட்டவனா?” என்று அதிர்வுடன் கேட்டாள்.

“ம்ம், ஆமா. பிரகாஷ் மேல தான் என் சந்தேகம். அவன் வெளியூர் போயிருக்கான்னு சொன்னது பொய். இங்கே தான் எங்கிருந்தோ நம்மை வாட்ச் பண்ணிட்டு இருக்கான்னு என் போலீஸ் மூளை சொல்லுது. அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வந்ததும் அவனாகத் தான் இருக்கும்…” என்றான்.

“ஓ! ஆனா அன்னைக்கு ஹாஸ்பிட்டல் சிசிடிவியில் பார்த்து யாரையும் தெரியலைன்னு சேதுராமன் அங்கிள் சொன்னாரே ஜெகா? அவரோட அக்கா பையனை அவருக்கு எப்படி அடையாளம் தெரியாமல் போகும்?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“அதுக்கும் இப்போ எனக்குப் பதில் கிடைச்சிருச்சு ஜனா…”

“என்ன பதில் ஜெகா?”

“நாம அந்த ஹாஸ்பிட்டலில் மூணு வழி சிசிடிவி தான் பார்த்தோம். நாலாவதாக இருந்த ஒரு வழியை மிஸ் பண்ணிட்டோம்…”

“என்ன சொல்றீங்க ஜெகா? நாலாவதா ஒரு வழியா? என்ன வழி அது?”

“மார்ச்சுவரி…” என்றான் ஒற்றை வார்த்தையாக.

“என்ன?” என்று அதிர்வுடன் கேட்டாள்.

“யெஸ், அந்த ஹாஸ்பிட்டலில் இறந்தவர்களைக் கொண்டு போகத் தனி வழி இருக்கு. அந்த வழியாகத்தான் அன்னைக்கு அவன் ஹாஸ்பிட்டல் வந்து கஸ்தூரியைப் பார்த்திருக்கணும்…” என்றான் உறுதி நிறைந்த குரலில்.

“ஆனா ஜெகா, அப்போ அங்கிருந்த சிசிடிவி பத்தி ஹாஸ்பிட்டல் ஸ்டாப்ஸ் சொல்லியிருக்கணுமே. அன்னைக்கு நாம போய்க் கேட்டப்ப மூணு வழி தானே சொன்னாங்க?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“அதையும் விசாரிச்சுட்டேன். அங்கே இருந்த சிசிடிவி இரண்டு நாளா வேலை செய்யலையாம். அந்த நேரத்தில் போலீஸ் விசாரணைனு நாம போய் நிற்கவும் நம்ம கிட்ட சொல்லாம மறைச்சுருக்காங்க. விசாரணை இன்னும் பெருசா ஆகிவிடக் கூடாதுன்னு வழக்கமா இருக்கும் பயம் தான் காரணம்.

அதோட சிசிடிவி வேலை செய்யலைன்னு வேற யாருக்கும் தெரிய வந்தால் யாராவது அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறா பயன்படுத்த காரணமா அமைந்து விடும்னு நம்மகிட்ட சொல்லாம விட்டுருக்காங்க.

இந்த ஹாஸ்பிட்டல் வந்தப்ப இங்கே அப்படி ஒரு வழி இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தேன். அப்புறம் தான் எனக்கு ஸ்பார்க் ஆகி அந்த ஹாஸ்பிட்டலுக்குப் போன் செய்து விசாரித்தேன்…” என்றான்.

“ச்சே… இதை அன்னைக்கே அந்த ஹாஸ்பிட்டலில் சொல்லியிருந்தால் இந்நேரம் நாம வினயா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சிருக்கலாம்…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டாள்.

“அதே எண்ணம் தான் எனக்கும். ஆனாலும் இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை ஜனா. அந்தப் பிரகாஷை பிடிச்சிட்டா வேலை முடிஞ்சது. அதுக்குத் தான் கிளம்பிட்டு இருக்கேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜனா ஏதோ சொல்ல வர,

“ஏய்… வழக்கம் போல இப்பயும் நான் கூட வர்றேன்னு கிளம்பிடாதே! இந்த நிலையில் கண்டிப்பா நான் உன்னைக் கூட்டிட்டுப் போக மாட்டேன். உங்க அப்பாவுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன். கிளம்பி வந்துட்டு இருக்கார். நீ அவர் கூட வீட்டுக்குப் போ. இனி இந்தக் கேஸை தனியா நானே பார்த்துக்கிறேன்…” என்றான் கண்டிப்புடன்.

“இதெல்லாம் ஒரு அடியா ஜெகா? என்னால் முடியும். நானும் வர்றேன்…” என்றாள் பிடிவாதமாக.

“இப்போ போட்ட ஊசி வலியைக் குறைச்சுருக்கும். ஊசியோட பவர் குறைஞ்சதுனா உன்னால் நிற்க கூட முடியாது. ஒழுங்கா அப்பா கூட வீட்டுக்குக் கிளம்பு…” என்றான் .

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஜனாமா…” என்று அழும் குரலில் அழைத்துக் கொண்டே அங்கே வந்தார் அவளின் அன்னை சுகுமாரி.

“என்னடி இத்தனை கட்டுப் போட்டுருக்கு?” என்று பதறிப் போய் அவளைத் தடவிப் பார்த்தார்.

“அம்மா, ரிலாக்ஸ்மா… எனக்கு ஒண்ணுமில்லை…” என்று அவரைச் சமாதானப்படுத்தினாள்.

“கைலயும், கால்லயும் இவ்வளவு பெரிய கட்டுப் போட்டுருக்கு. ஒண்ணுமில்லைனு சொல்ற? இதுக்குத் தான் உனக்கு இந்த வேலை வேண்டாம்னு சொல்…” என்று அவர் வார்த்தையை முடிக்கும் முன் “அம்ம்ம்மா…” என்று அழுத்தி அழைத்து அவரின் பேச்சை நிறுத்தினாள்.

“இதுதான் எனக்குப் பிடிச்ச வேலை…” என்று அவரைக் கூர்ந்து பார்த்து அழுத்தமாகச் சொல்ல, கப்பென்று தன் வாயை மூடிக் கொண்டார் சுகுமாரி.

“தேவையில்லாததைப் பேசாதே சுகு…” என்று மகளின் அருகில் நின்று மனைவியிடம் சொன்ன பகலவன், “உனக்குப் பிடிச்ச வேலையைச் செய் ஜனா. ஆனா ரொம்பக் கவனமா இரு…” என்றவர் அவளின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டார்.

“ஓகே பா…” என்றாள்.

மகளுடன் பேசிவிட்டு ஜெகனின் அருகில் வந்த பகலவன், “இவ்வளவு நேரம் பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி தம்பி…” என்றார்.

“நன்றி எல்லாம் சொல்லாதீங்க அங்கிள். ஜனாவைப் பார்த்துக்க வேண்டியது என் கடமை. அதைத்தான் செய்தேன். அவளை இப்போ நீங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம். நான் அப்புறம் வீட்டில் வந்து பார்க்கிறேன்…” என்றான்.

“சரிங்க தம்பி…” என்று பகலவன் சொல்ல,

“ஓகே ஜனா. நான் கிளம்புறேன். வீட்டில் போய் ரெஸ்ட் எடு. அப்புறம் பார்க்கலாம்…” என்றான்.

“சரி ஜெகா. கேஸ் பத்தி எதுவும் தகவல் தெரிஞ்சா இன்பார்ம் பண்ணுங்க. அப்புறம் இன்னொரு விஷயம். நாளைக்கு நானும் வருவேன். இப்பவே சொல்லிட்டேன்…” என்றாள் கண்டிப்புடன்.

‘நீ அடங்க மாட்டியே…’ என்ற பார்வை பார்த்தவன், பெரியவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

“எந்த ஏரியாவில் அந்தக் காரை மிஸ் செய்தீங்க செந்தில்?”

“ஈ சி ஆர் ரோட்டில் சார்…”

“அந்த ஏரியாவில் உள்ள சிக்னல் சிசிடிவி எல்லாம் செக் பண்ண ஏற்பாடு பண்ணுங்க செந்தில். அந்தக் கார் நம்பர் எதுவும் நோட் செய்தீங்களா?”

“செய்தேன் சார்…” என்றவர் நம்பரை தெரிவிக்க,

“இந்த நம்பரும் போலியா இருக்கச் சான்ஸ் இருக்கு. ஆனாலும் அப்படி நினைச்சு விட முடியாது. செக் போஸ்ட், சிக்னல் எல்லாத்துலயும் அலார்டா இருக்கச் சொல்லணும். நீங்களும் அந்த ஏரியாவிலேயே ரவுண்ட்ஸ் வாங்க…” என்று மருத்துவமனையில் இருந்து செல்லும் போதே செந்திலுக்கு அழைத்து அடுத்துச் செய்ய வேண்டியதைத் திட்டமிட்டவன்,

அடுத்ததாக இன்னும் சில ஏற்பாடுகள் மூலம், சிக்னல், செக்போஸ்ட் அனைத்திலும் தகவல் சென்றடையும் படி பார்த்துக் கொண்டான்.

தேடுதல் வேட்டை எந்தச் சுணக்கமும் இல்லாமல் துரிதமாக நடைபெற ஆரம்பித்தது.

அடுத்து ஜெகவீரன் நேராகச் சென்று நின்ற இடம் பிரகாஷின் வீடு.

“என்னங்க சார், யார் வேணும்?” ஜெகன் தட்டியதும் கதவைத் திறந்த பிரகாஷின் அன்னை தனம் போலீஸ் என்றவுடன் பயத்துடன் கேள்வி எழுப்பினார்.

“உங்க பையன் பிரகாஷ் எங்கே மா?” என்று போலீஸ் தோரணையில் கேட்டான்.

“அவன் வேலை விஷயமா பெங்களூர் வரைக்கும் போயிருக்கான் சார். இதை ஏற்கனவே ஒரு போலீஸ் வந்து விசாரிச்சாங்களே சார்?” என்று நடுக்கத்துடன் கேட்டார்.

“அந்தப் போலீஸை விசாரிக்க அனுப்பியது நான் தான். இப்போ எனக்கு உங்க பையன் எந்தக் கம்பெனியில் வேலை செய்றான். எப்போ பெங்களூர் போனான். என்னைக்குத் திரும்பி வருவதாகச் சொன்னான். இந்தத் தகவல் எல்லாம் வேணும் சொல்லுங்க…”

“கே ஆர் பிரவேட் கம்பெனியில் வேலை செய்றான் சார். வெள்ளிக்கிழமை மதியம் போல ஆபிஸ்ல இருந்து வந்து கம்பெனியில் பெங்களூர் போகச் சொல்லியிருக்காங்க. அதனால் உடனே கிளம்பணும்னு சொல்லிக் கிளம்பிட்டான் சார்…”

“எப்ப திரும்பி வருவான்னு சொன்னானா?”

“இல்லை சார். அங்கே போன பிறகு தான் வேலை முடியுறது பொறுத்து திரும்பி வர்ற தேதி தெரியும்னு சொன்னான்…”

“அங்கே போன பிறகு உங்களுக்குப் போன் போட்டானா?”

“இல்லை சார். வெளியூர் போனா போன் எல்லாம் போட மாட்டான். நான் போட்டாலும் திட்டுவான்…”

“அவன் போன் நம்பர் சொல்லுங்க…” என்று கேட்டு அவர் நம்பர் சொன்னதும் தன் அலைபேசியில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்துப் பார்த்தான்.

ஆனால் அழைப்புச் செல்லாமல் போன் அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகத் தகவல் வர, யோசனையுடன் நெற்றியைத் தடவி கொண்டான்.

“பிரகாஷ் வேலை பார்க்கிற ஆஃபிஸ் நம்பர் கொடுங்கமா…” என்று கேட்டான்.

“அதோ அந்தக் காலண்டர்ல எழுதி வச்சுருக்கான் சார்…” என்று அவர் சொல்லவும், அதன் அருகில் சென்று, அந்த எண்களைப் பார்த்து அதற்குத் தொடர்பு கொண்டான்.

அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்படவும், தான் அழைத்த விவரம் சொல்லி, பிரகாஷ் பற்றிய விவரம் கேட்டான். அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு அவன் சிறிதும் அதிர்ச்சி அடையவில்லை.

அவன் எதிர்பார்த்த பதில் தான் கிடைத்தது என்பதால் தகவலுக்கு நன்றி சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.