பிழையில்லா கவிதை நீ – 14

அத்தியாயம் ‌- 14

“இவன் மார்பிங் பண்ணியது தெரிந்ததுமே போலீஸ்கிட்ட விஷயத்தைக் கொண்டு போயிருக்கணும் ஜனா…” என்றான் ஜெகவீரன்.

“யமுனா வீட்டில் நானும் அப்படித்தான் சொன்னேன். ஆனா அவங்க போலீஸ்கிட்ட விஷயத்தைக் கொண்டு போகத் தயாராக இல்லை. அதனால்தான் நானே விஷயத்தை டீல் பண்ணினேன்…” என்றாள் ஜனார்த்தனி.

“ஒரு அப்பாவே மகனோட கெட்ட காரியத்துக்கு ஜால்ரா அடிக்கும் போது இவன் ஆடாமல் என்ன செய்வான்? அவங்கப்பா அப்படிச் சொன்னது சுனிலுக்குத் தெரிந்ததும் அவனுக்குத் துளிர் விட்டுப் போச்சு. தன் அப்பாவோட சப்போர்ட் இருக்குன்னு தெரிந்ததும் இவன் என்ன செய்தான் தெரியுமா ஜெகா?”

“என்ன செய்தான்?”

“யஷ்வினி வீட்டுக்கே போய்ட்டான்…” என்றாள்.

“என்ன?” என்று ஜெகன் அதிர்ந்து கேட்க,

“ஆமா ஜெகா… இவன் போட்டோ காட்டி மிரட்டியது தெரிந்த பிறகு யஷ்வினியை அவள் பேரண்ட்ஸ் காலேஜுக்கு அனுப்பலை. நானும் அனுப்ப சொல்லிப் பார்த்தேன். ஆனா பொண்ணு மானம், குடும்பக் கௌரவம்னு ஏதேதோ சொல்லி அவளை வீட்டில் வச்சுக்கிட்டாங்க. இதுக்காகத் தான் என் பேரண்ட்ஸ்கிட்ட விஷயத்தைச் சொல்லாமல் இருந்தேன்னு யமுனா சொன்னாள். அவள் பயந்த மாதிரியே யஷ்வினியை மேலும் படிக்க அனுப்பாம வீட்டில் பூட்டி வச்சுட்டாங்க.

அவள் காலேஜுக்கு வரலைங்கவும், இவன் அவளைத் தேடி வீட்டுக்கே போய்ட்டான். அன்னைக்கு வீட்டில் யாரும் இல்லை. யமுனாவும் வேலை பார்க்கிறாள். அதனால் அவளும் வேலைக்குப் போய்ட்டாள். யஷ்வினி மட்டும் தனியா இருந்திருக்காள். இவன் அங்கே போய்க் கதவைத் தட்டியிருக்கான். அவள் பயந்து போய்க் கதவைத் திறக்காமல் இருந்திருக்காள்.

கதவைத் திறக்கலைனா அந்தப் போட்டோவை உன் வீட்டுத் தெருவில் எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டிருவேன்னு பயமுறுத்தியிருக்கான். அதைக் கேட்டு அவள் ரொம்பப் பயந்து போயிருக்காள். ஆனா கதவை மட்டும் திறக்கலை. ரொம்ப நேரம் கதவைத் திறக்கலைங்கவும் இவனும் அங்க இருந்து போய்ட்டான். இவன் போன கொஞ்ச நேரத்தில் என் சாவுக்குக் காரணம் சுனில் தான்னு சொல்லி லெட்டர் எழுதி வச்சுட்டுச் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டாள்…” என்றாள் ஜனார்த்தனி.

“அந்தப் பொண்ணு இப்போ?” என்று ஜெகன் வேகமாகக் கேட்டான்.

“இருக்காள், காப்பாத்தியாச்சு. நல்லவேளையா அன்னைக்குனு பார்த்து யமுனா வேலை முடிஞ்சு சீக்கிரமே வீட்டுக்கு வந்திட்டாள். அதனால் உடனே யஷ்வினியைப் பார்த்துக் காப்பாத்தியாச்சு. கஸ்தூரி ஆன்ட்டி அட்மிட் பண்ணிருக்கிற ஹாஸ்பிட்டலில் தான் யஷ்வினியை அட்மிட் பண்ணிருந்தாங்க.

அவள் சாகுற அளவுக்குப் போன பிறகும் சும்மா இருக்கக் கூடாதுன்னு சொல்லி அவள் எழுதின லெட்டர் வச்சே, அவளோட பேரண்ட்ஸை கன்வீன்ஸ் பண்ணி மகளிர் காவல் நிலையத்தில் கம்ளைண்ட் பண்ண வச்சேன். கேஸ் ஃபைல் ஆனதில் இருந்து ஆள் எஸ்கேப் ஆகிட்டான். இன்னைக்குத் தான் மாட்டியிருக்கான்…” என்று அனைத்தையும் சொல்லி முடித்தாள் ஜனார்த்தனி.

“இன்னைக்கு ஏன் இவன் உன்னை மிரட்டிப் போன் போட்டான்?” என்று கேட்டான் ஜெகன்.

“அதை அவன்கிட்டயே கேளுங்க…” என்று கையை மண்டியிட்டு அமர்ந்திருந்த சுனிலின் புறம் நீட்டினாள்.

“ஏன்டா மிரட்டின?” என்று ஜெகன் சுனிலிடம் கேட்க,

“பின்ன, என் காதலைப் பிரிச்ச இவளுக்குப் பாராட்டு விழாவா நடத்த முடியும்?” என்று அந்த நிலையிலும் நக்கலாகச் சொன்ன சுனிலை முறைத்த ஜெகன் மீண்டும் ஒரு அறை விட்டான்.

அதில் அவனின் உதடு கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது.

“காதலா? எதுடா காதல்? ஒரு பொண்ணைப் ஃபிளாக் மெயில் பண்ணி உன் விருப்பத்துக்கு ஆட்டிவிக்க நினைச்சதுக்குப் பேர் காதல் இல்லடா…” என்று ஆத்திரமாகச் சொல்லிக் கொண்டே இன்னொரு கன்னத்தையும் பதம் பார்த்தான் ஜெகன்.

“இன்னும் இரண்டு போடுங்க ஜெகா. யஷ்வினி செத்துப் பிழைச்சு வந்திருக்காள். ஆனா அவள் தன் உயிரையே போக்கிக்கக் காரணம் ஆகிட்டோமேனு கொஞ்சம் கூடக் கவலை இல்லாம இவனோட காதலை நான் பிரிச்சுட்டதா குதிக்கிறான்.

ஒரு பொண்ணுக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து அவளைத் தன் வழிக்குக் கொண்டு வருவதைத் தான் காதல்னு நினைச்சுட்டு இருக்கான் போல முட்டாப்பய!” என்று எரிச்சலுடன் சொன்னாள் ஜனார்த்தனி.

“நீ மட்டும் குறுக்க வராமல் இருந்திருந்தால் யஷ் எப்படியும் என்னை லவ் பண்ணிருப்பாள். நீ தான் என்னென்னவோ பேசி அவளைக் காலேஜ் வர விடாமல் செய்துட்ட…” என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் தன் தவறை சிறிதும் உணராமல் ஜனார்த்தனியைக் குறை சொன்னான் சுனில்.

அவன் பேசிய விதத்தைக் கேட்டு அவனை வியப்பாகப் பார்த்தாள் ஜனார்த்தனி.

‘இவன் என்ன மனிதன் தானா? இல்லை மிருகமா? ச்சே ச்சே! மிருகம் என்று சொன்னால், தாங்கள் படைக்கப்பட்ட வேலையை மட்டும் செவ்வனே செய்யும் அந்த ஐந்தறிவு மிருகங்களுக்குத் தான் இழுக்கு. ஆறறிவு படைத்த மனிதனாகப் பிறந்து விட்டு, கொடூர எண்ணத்துடன் பிதற்றும் இவன் எல்லாம் மனிதனே இல்லை…’ என்று சுனிலை அற்பமான பார்வை பார்த்தாள்.

“நீ செய்தது காதலே இல்லையடா முட்டாள்!” என்று அவனிடம் உரக்கச் சொல்ல தோன்றியது ஜனார்த்தனிக்கு.

ஆனால் அவள் சொல்லவில்லை.

‘புரிந்து கொள்பவர்களிடம் பேசலாம். புரிந்து கொள்ள மறுத்து வீண் பிடிவாதம் பிடித்து, தான் சொல்வது மட்டுமே சரி என்று வீம்பு பிடிக்கும் முட்டாளிடம் பேசுவது, தன் தலையைத் தானே சுவற்றில் மோதிக் கொள்வதற்குச் சமம்!’ என்று நினைத்தவள் அமைதியாகிப் போனாள்.

அவள் அமைதிக்கும் சேர்த்துச் சுனில் பேசிக் கொண்டே போனான்.

“நீ என் காதலைப் பிரிச்சிட்டு போலீஸ்ல கம்ளைண்ட் வேற கொடுத்து, என்னைத் தலைமறைவா சுத்த வச்சுட்டு, இதோ இந்தப் போலீஸ்கிட்ட பல்லைக் காட்டிக் காட்டிப் பேசிட்டு இருந்தால் நான் பார்த்துட்டுப் பேசாமல் போகணுமா? இப்பவும் சொல்றேன். என் லவ்வை பிரிச்ச, உன் லவ்வை பிரிக்காம விடமாட்டேன்.

இந்தப் போலீஸ் ஏற்கனவே பப்ல வச்சு என்னை என் பிரண்ட்ஸ் முன்னாடி கேவலப்படுத்தினான். இப்போ என் காதலைப் பிரிச்ச உன்னைக் காதலிக்கிறான். இரண்டுக்கும் சேர்த்து நான் உங்களுக்குச் சரியான பாடம் புகட்டலைனா என் பேரு சுனில் இல்லை…” என்று ஆவேசமாகப் பேசியவன் அடுத்த நொடி சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தான்.

மண்டியிட்டு அமர்ந்து அறைகூவல் விட்டவனை உதைத்துத் தள்ளியிருந்தான் ஜெகவீரன்.

“மவனே! யார்க்கிட்ட சவால் விட்டுட்டு இருக்க? நீ பெரிய இடம்னா என்ன வேணும் என்றாலும் செய்யலாம்னு நினைச்சியா? உன் அப்பன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் பார்த்திடலாம்டா! உன் அப்பா சப்போர்ட் உனக்கு இருக்குனு தானே நீ போலீஸ்கிட்ட பேசுறோம்னு கூட இல்லாமல் ஆடுற? உன் ஆட்டத்தை நான் அடக்கிக் காட்டுறேன்…” என்ற ஜெகன் மீண்டும் அவனை அடிக்கப் போக, “நிறுத்துங்க இன்ஸ்பெக்டர்!” என்ற படி அங்கே வந்தார் ஒருவர்.

“யார் சார் நீங்க?” என்று சுனிலிடம் இருந்து பார்வையைத் திருப்பி வந்திருந்தவரிடம் நிதானமாகக் கேட்டான் ஜெகவீரன்.

“நான் சுனிலோட வக்கீல் குணசேகர்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரைக் கேள்வியாகப் பார்த்தான் ஜெகவீரன்.

‘இவர் எப்படி வந்தார்?’ என்று யோசித்தவன், திரும்பிச் சுனிலைப் பார்த்தான்.

“என் அப்பா ஏற்பாடு. போலீஸ் என்னைப் பிடிச்சா உடனே அவருக்கு விஷயம் தெரியணும்னு என் வண்டியில் ஜிபிஆர்எஸ் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்தார்…” என்று ஜெகனின் பார்வை புரிந்து ஆணவமாகச் சொன்னான் சுனில்.

‘இப்படி ஒரு அப்பன், மகன். ச்சே!’ என்று எரிச்சலாக முணுமுணுத்த ஜெகன், “என்ன விஷயம்னு சொல்லுங்க…” என்று வக்கீல் குணசேகரிடம் நிதானமாகக் கேட்டான்.

“சொல்றதுக்கு என்ன சார் இருக்கு? நான் சுனிலைக் கூட்டிட்டுப் போக வந்திருக்கேன். கேஸே இல்லாம என் கிளைண்ட்டை பிடிச்சு அடிச்சதுக்கு உங்க மேலே தான் இப்போ கம்ளைண்ட் கொடுக்கணும்…” என்ற வக்கீலைக் குழப்பத்துடன் பார்த்த ஜெகன்,

“சுனில் மேலே கேஸ் இல்லைன்னு யார் சொன்னா?” என்று கேட்டான்.

“சாருக்கு இன்னும் விஷயமே தெரியாது போலிருக்கு?” என்று கிண்டலாகச் சொன்ன வக்கீல் தான் கொண்டு வந்திருந்த கோப்பில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து ஜெகனிடம் கொடுத்தார்.

அதை வாங்கிப் படித்த ஜெகன், “ஜனா இதைப் பார்!” என்று அந்தக் காகிதத்தை ஜனார்த்தனியிடம் கொடுத்தான்.

காகிதத்தில் இருந்த விஷயத்தைப் படித்த ஜனாவின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

வக்கீலைக் கடுமையாக முறைக்க ஆரம்பித்தாள்.

அவரோ அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்து, “இடம் தெரியாமல் மோதிட்டீங்க மேடம்…” என்றார்.

அதில் இன்னும் அவளுக்குக் கோபம் கிளர்ந்து எழ, “அப்பாவி குடும்பத்தை மிரட்டி கேஸை வாபஸ் வாங்க வச்சுருப்பீங்க. அதில் உங்களுக்குப் பெருமை வேறயா வக்கீல் சார்?” என்று கடுமையாகக் கேட்டாள்.

“மிரட்டலா? அதெல்லாம் எப்படின்னு கூட எனக்குத் தெரியாதுங்க டிடெக்டிவ் மேடம். இரண்டு பொண்ணு வச்சுருக்கீங்க. அவங்களுக்குக் கல்யாணம் பண்ற ஐடியா இல்லையாங்க? கேஸுன்னு நடந்தா உங்க பொண்ணுங்க முதிர்கன்னியா தான் வீட்டில் உட்கார்ந்து இருக்கணும்.

காலம் அப்படி இருக்கு. பார்த்து சூதானமா இருங்கன்னு ஃபிரண்ட்லியா தான் அட்வைஸ் பண்ணினேன். பாவம் இரண்டு பொண்ணுங்களுக்குத் தகப்பனாச்சே அவரே முன்வந்து கேஸை வாபஸ் வாங்கிட்டார்…” என்று வக்கீல் அக்கறை உள்ளவர் போல் பேசினார்.

‘இதுக்குப் பேரு தானுங்க மிரட்டல்’ என்று அவர் தலையிலேயே ஒரு கொட்டு வைத்துச் சொல்ல வேண்டும் போல் ஜனார்த்தனிக்கு தோன்றியது.

பல்லைக் கடித்துக் கொண்டு அவரை முறைத்துப் பார்த்தாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கேஸை வாபஸ் வாங்கினாங்க. அது கூடத் தெரியாமல் சுனிலைப் பிடிச்சுட்டு வந்து முட்டாள் தனம் பண்ணிட்டீங்க. இப்போ நான் சுனிலைக் காரணம் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு வந்து அடிச்சதுக்காக உங்க மேலே மான நஷ்ட வழக்கு போட போறேன்…” என்ற வழக்கறிஞர் “கிளம்புங்க தம்பி போகலாம்‌‌…” என்று அவளின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் சுனிலை அழைத்துக் கொண்டிருந்தார் வக்கீல் குணசேகர்.

“ஒரு நிமிஷம் வக்கீல் சார். காரணம் இல்லாமல் நாங்க சுனிலைப் பிடிச்சுப் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வரலை…” என்று சுனிலை அழைத்துக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்தவரைத் தடுத்து நிறுத்தினாள் ஜனார்த்தனி.

“இன்னும் என்ன கேஸ்? அந்தப் பொண்ணு யஷ்வினி தான் கேஸ் கொடுத்த மகளிர் காவல் நிலையத்திலேயே கேஸை வாபஸ் வாங்கிருச்சே?” என்று குழப்பத்துடன் கேட்டார் வக்கீல்.

“வாபஸ் வாங்கியது பற்றிய டீடைல்ஸ் அடங்கிய பேப்பரைத் தான் நீங்க காட்டிட்டீங்களே வக்கீல் சார். அதை நானும் பார்த்துட்டேனே. இனியும் அதைப் பற்றிப் பேசுவேனா என்ன?” என்று உதட்டை இழுத்துச் சிரித்துக் கொண்டே சொன்ன ஜனார்த்தனி, “இது வேற கேஸுங்க வக்கீல் சார்…” என்றாள் கிண்டலாக.

“என்ன கேஸ்?” என்று கேட்ட வக்கீல் ‘இன்னும் என்ன தம்பி செய்து வச்சீங்க?’ என்பது போல் சுனிலைப் பார்த்தார்.

ஆனால் சுனிலும் குழப்பத்துடன் ஜனாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஒருவேளை தான் மிரட்டியதைச் சொல்கிறாளா?’ என்பது போல் அவளையே புரியாமல் பார்த்தான்.

வக்கீலை மட்டுமில்லாமல், சுனிலையும் கிண்டலாகப் பார்த்த ஜனார்த்தனி, பின் ஜெகவீரனின் புறம் திரும்பி, “சுனில் மேல் நான் ஒரு கம்ளைண்ட் கொடுக்கணும் இன்ஸ்பெக்டர்…” என்றாள்.

அவள் இன்ஸ்பெக்டரில் அழுத்தம் கொடுத்து சொன்ன விதத்தில் ‘இப்போது நான் உன் ஃபிரண்டாகப் பேசவில்லை’ என்ற குறிப்பு ஜெகனுக்கு இருந்தது.

அவ்வளவு நேரம் ஜனா சொன்ன வழக்கு என்ன என்று புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன், “என்ன கம்ளைண்ட் மிஸ்.ஜனார்த்தனி? இவன் போன் போட்டு உங்களை மிரட்டினானே அதுவா?” என்று அவளின் குறிப்பை புரிந்து கொண்டதற்கு ஏற்ப மிஸ் போட்டு கேட்ட ஜெகவீரன், ‘மிரட்டியதை மட்டும் கம்ளைண்டாகக் கொடு!’ என்று அவளுக்கும் குறிப்புக் கொடுத்தான்.

ஆனால் அவளின் எண்ணம் எல்லாம் வேறாக இருந்ததால், அவனின் குறிப்பைக் குப்பையில் போடுவது போல் அலட்சிய பாவனைக் காட்டியவள், “அதை எல்லாம் விட இது முக்கியமான கம்ளைண்ட் இன்ஸ்பெக்டர். அதுவும் ஒரு பொண்ணோட மானம் சம்பந்தப்பட்டது…” என்றாள்.

“மானம் சம்பந்தப்பட்டதா? யார் பாதிக்கப்பட்டது?” என்று ஜெகன் கேட்க,

“நான் தான்!” என்றாள் அழுத்தமாக.

“என்ன சொல்றீங்க மிஸ்.ஜனார்த்தனி?” என்று திடுக்கிட்டுக் கேட்டான் ஜெகவீரன்.

“ஆமாம் இன்ஸ்பெக்டர். பாதிக்கப்பட்டது நான் தான். சுனில் என்கிட்ட தப்பா நடக்க முயன்றான். அவன்கிட்ட இருந்து தப்பிக்க நான் முயற்சி செய்தப்ப தான் நீங்க ஹெல்ப் பண்ணி இவனைப் பிடிச்சீங்க. அதுக்குக் கம்ளைண்ட் எழுதிக் கொடுக்கத் தான் நான் இங்கே வந்தேன்.

ஆனா வக்கீல் வேற ஏதோ கேஸை காரணம் காட்டி சுனிலைக் கூட்டிட்டுப் போகப் பார்க்கிறார். அந்தக் கேஸ் என்ன என்றெல்லாம் எனக்குத் தெரியாது இன்ஸ்பெக்டர். சுனில் என்கிட்ட தப்பா நடக்க முயன்றதற்கு இப்போ நான் கம்ளைண்ட் எழுதிக் கொடுக்குறேன்…” என்று நிறுத்தி நிதானமாக என்ன வழக்கு என்பதை ஜனார்த்தனி சொல்ல, ‘வேண்டாம் ஜனா’ என்று தலையசைத்து அவளுக்கு மறுப்பைக் காட்டினான் ஜெகவீரன்.

அவனின் மறுப்பைக் கவனியாதவள் போல், அங்கிருந்த கான்ஸ்டபிள் பக்கம் திரும்பியவள், “சார், ஒரு பேப்பர் தர்றீங்களா? கம்ளைண்ட் எழுதணும்…” என்று நிதானமாகக் கேட்டாள்.

‘இவளுக்குக் கொழுப்பை பாரேன். சொல்வது எல்லாம் பொய்! இதில் நான் தான் காப்பாத்தினேன்னு என்னையும் கூட்டுச் சேர்க்கிறாள். இதில் நான் சொல்லும் மறுப்பைக் கூடக் கண்டு கொள்ளாமல் கம்ளைண்ட் எழுதிக் கொடுக்கப் போறாளாம்’ என்று மனதில் சொல்லிய படி ஜனாவைப் பார்த்துப் பல்லைக் கடித்தான் ஜெகவீரன்.

“இல்ல, பொய்… இவ பொய் சொல்றாள். நான் இவகிட்ட தப்பா நடந்துக்கலை…” என்று கத்தினான் சுனில்.

இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாராத வக்கீல் ஒரு நொடி முழித்தவர் பின், “ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு மேடம்…” என்றார் ஜனாவிடம்.

“ஆதாரம் இல்லைனு உங்களுக்கு எப்படித் தெரியும் வக்கீல் சார்?”

“என்ன ஆதாரம் இருக்கு?”

“அதை நான் கோர்ட்டில் தான் சொல்வேன் வக்கீல் சார். அப்படியே இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோங்க. மிரண்டினா மிரண்டு கேஸை வாபஸ் வாங்க நான் யஷ்வினி இல்லை…” என்று அழுத்தமாகச் சொன்னவள், நிதானமாகக் காகிதத்தை எழுத்துக்களால் நிரப்ப ஆரம்பித்தாள்.

“ஜனா…” என்று கடுமையாக அழைத்து அவள் எழுதுவதைத் தடுக்க நினைத்தான் ஜெகவீரன்.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க இன்ஸ்பெக்டர். இந்தக் கம்ளைண்டை எழுதி முடிச்சுடுறேன்…” என்று அவனின் பக்கம் கூடத் திரும்பாமல் இன்னொரு மேஜையின் அருகே அமர்ந்து எழுதுவதைத் தொடர்ந்தாள்.

அவளைத் தடுக்க முடியாத இயலாமையில் மேஜையில் ஓங்கி அடித்த ஜெகவீரன், பின் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

“ஏய்! ஏன்டி பொய் பொய்யா சொல்ற? நான் எங்கடி உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்?” என்று சுனில் கத்தியதைக் கேட்டு, ஒரு நொடி எழுதுவதை நிறுத்திய ஜனார்த்தனி பின் மீண்டும் எழுதிக் கையெழுத்து போட்டு முடித்து விட்டு அவனின் புறம் திரும்பியவள்,

“மரியாதை தம்பி, மரியாதை! உன்னை விட நான் பெரியவள் தம்பி. ஆனா அதைக் கூட நினைக்காம என் மேலே கையை வச்சதுக்கு உன்னைச் சும்மா விடுவேன்னு நினைச்சீயா? இனி நீ எந்தப் பொண்ணு மேலேயும் கை வைக்கக் கூடாது தம்பி. அதுக்குத் தான் இந்த அக்கா வழி செய்துருக்கேன்…” என்று சொன்னவளைப் பார்த்து வாய்க்கு வந்த படி திட்ட ஆரம்பித்தான் சுனில்.

“உங்க கிளைண்ட்டை கொஞ்சம் வாயை அடக்கச் சொல்லுங்க வக்கீல் சார். அப்புறம் என்னை அநாகரீகமா பேசியதற்காக வேற நான் சுனில் மேலே கம்ளைண்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்…” என்று அவரிடம் சொல்ல, ‘இது வேறயா?’ என்று நினைத்த குணசேகர், சுனிலை அடக்கும் வேலையில் இறங்கினார்.

“நீங்க பேசாதீங்க தம்பி. உண்மையான கம்ளைண்டையே ஒன்னுமில்லாம ஆக்கிய என்னால் பொய் கம்ளைண்டை தூசா பறக்க விட முடியாதா என்ன? டிடெக்டிவ் மேடம் கொடுத்த கம்ளைண்ட் வச்சே ஏன்டா அந்தக் கம்ளைண்ட் கொடுத்தோம்னு நினைக்க வைக்கிறேன் தம்பி…” என்று சொல்லி சுனிலைச் சமாதானம் செய்தார்.

அவர் சொன்னதை எல்லாம் காதில் வாங்கி விட்டு ஒரு அலட்சிய புன்னகையைத் தந்த ஜனார்த்தனி நிதானமாக நடந்து வந்து ஜெகவீரனின் முன் வந்து நின்றாள்.

“என்ன செய்றனு புரிஞ்சு தான் செய்றீயா ஜனா?” என்று ஜெகன் அவளிடம் மெதுவான குரலில் கேட்க,

“இப்போ நான் உங்க ஃபிரண்ட் இல்லை இன்ஸ்பெக்டர். அபிஷியலா கம்ளைண்ட் கொடுக்க வந்திருக்கேன். சோ, அதுக்குத் தகுந்த மாதிரி பேசுங்க…” என்ற ஜனாவை ஜெகன் முறைக்க,

அந்த முறைப்பை சட்டை செய்யாமல் “இந்தாங்க இன்ஸ்பெக்டர் என் கம்ளைண்ட்…” என்று காகிதத்தை நீட்டினாள்.

அதை வேண்டா வெறுப்பாக வாங்கிய ஜெகன் அதில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்து முன்பை விட அவளைக் கடுமையாக முறைக்க ஆரம்பித்தான்.

‘உன் முறைப்பு என்னை ஒன்றும் செய்யாது’ என்ற பாவனையைக் காட்டிக்கொண்டு நின்றாள் ஜனார்த்தனி.