பிழையில்லா கவிதை நீ – 12

அத்தியாயம் – 12

“சொல்லு ஜனா, ஏன் இப்படிப் பண்ற?” என்று தன் எதிரில் அமர்ந்திருந்த ஜனார்த்தனியிடம் கேட்டுக் கொண்டிருந்தான் ஜெகவீரன்.

அவளோ அவனின் கேள்விக் காதிலேயே விழாதது போல் தன் கையில் இருந்த காஃபியை ரசித்து, ருசித்து ஒவ்வொரு மிடறாகப் பருகிக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையோ அந்தக் கடையின் கண்ணாடிச் சுவற்றின் வழியே சாலையில் செல்லும் வாகனங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தது.

நொடிகள் கடந்து சென்றன. சாலையில் நூறு வாகனங்களாவது ஜனாவின் பார்வையில் பட்டுக் கடந்திருக்கும். அவள் அருந்திய காஃபியும் அவளின் வயிற்றிற்குள் சென்று ஜீரணமாகியிருக்கும்.

அத்தனை நிமிடங்கள் கடந்த பிறகும் ஜெகனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நேரத்தைக் கடத்தினாள் ஜனார்த்தனி.

“சோ, அப்போ நீ பதில் சொல்ல மாட்ட?” என்று மீண்டும் ஜெகன் கேட்டும் யாரோ யாரையோ கேள்விக் கேட்கும் பாவனையில் அமர்ந்திருந்தாள்.

“உன் நெற்றியில் இருக்கும் தழும்புக் கூட உனக்கு அழகா இருக்கு ஜனா…” என்று திடீரென்று சொன்னான் ஜெகவீரன்.

அதுவரை எங்கேயோ பார்வையை வைத்திருந்த ஜனா பட்டென்று திரும்பி அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

“ஹப்பா! உன் உணர்வுகள் இங்கே தான் இருக்குன்னு எனக்கு இப்போ கன்பார்ம் ஆகிருச்சு…” என்றவன் குரல் கிண்டலுடன் குதூகலம் கலந்தும் வந்தது.

அவள் கண்களில் கனல் தெறிக்க, அவன் கண்களில் குறும்புக் கூத்தாடியது.

“ஹ்ம்ம்! இப்போ சொல் ஜனா! ஏன் இப்படிப் பண்ற?”

“எப்படிப் பண்றேன்?”

“ஏன் உனக்குத் தெரியாது?”

“எனக்குத் தெரியாது…”

“ம்ப்ச்! வார்த்தையாடாம சொல் ஜனா!”

“நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க ஜெகன்?”

“உண்மையைச் சொல்லணும்னு எதிர்பார்க்கிறேன் ஜனா…”

“அதான் என்ன உண்மை?”

“தெரிஞ்சுக்கிட்டே கேட்குற? ஹ்கூம்! ஓகே, பரவாயில்லை. நானே சொல்றேன். என்னை உன்கிட்ட இருந்து தள்ளி நிறுத்தணும் என்பதற்காக என்னை மட்டமா, என் வேலையைக் குறை சொல்வது போல் அப்பப்போ பேசுகிறாயே… அது ஏன்?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க இன்னும் வினயாவைக் கண்டுபிடிக்காம இருக்கீங்கனு ஒரு கோபம். அவ்வளவுதான்!”

“நோ! வினயாவை இன்னும் கண்டுபிடிக்காதற்குக் காரணம் உனக்கே தெரியும். நான் போலீஸ்காரன் தான். மந்திரவாதி இல்லை. ஜீ பூம் பா போட்டுக் கண்டுபிடிக்கிறதுக்கு. என்னால் முடிந்த முயற்சி இந்தக் கேஸுக்காக நான் எடுத்துட்டு இருக்கேன்னு உனக்கே தெரியும். அப்படியிருந்தும் அதனால் தான் என் மேல் கோபம்னு நீ சொல்றதை என்னால நம்ப முடியாது. அதனால் உண்மையான காரணத்தைச் சொல்!” என்று ஜனாவின் கண்களை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டான்.

அவனின் பார்வையைச் சளைக்காமல் சில நொடிகள் எதிர் கொண்ட ஜனார்த்தனி தற்செயலாகத் திரும்பிக் கொள்வது போல் பார்வையை வேறு பக்கம் மெதுவாகத் திருப்பிக் கொண்டாள்.

அவளின் மீதே தன் கவனம் முழுவதையும் வைத்திருந்தவனுக்கு அவளின் முயற்சி புரிந்தது. அந்தப் புரிதல் அவனிடம் புன்சிரிப்பை வரவைத்தது.

“நாடியில் இருக்கும் தழும்பும் கூட உனக்கு அழகா தான் இருக்கு ஜனா…” என்றான் குறும்புக் குரலில்.

அந்தப் பேச்சுப் பிடிக்காமல் தன்னை முறைக்கத் தன் பக்கம் திரும்புவாள் என்று அவன் நினைக்க, அவளோ அவனின் நினைப்பை பொய்யாக்கி, ‘நீ என்னவோ பேசிக்கொள்’ என்ற பாவனையைக் காட்டினாள்.

“அட! ரொம்பப் பிகு பண்றீங்களே மேடம்…” என்று சலிப்பாகச் சொன்னவன், “அப்போ நீ சொல்ல மாட்ட?” என்று மீண்டும் கேட்டு அவளைப் பேச வைக்க முயற்சி செய்தான்.

மௌனத்தை விலைக் கொடுத்து வாங்கியவள் போல் அமர்ந்திருந்தாள்.

“ஹ்ம்ம்ம்ம்…” என்று பெரிதாக மூச்சை இழுத்து விட்டான்.

“நீ சொல்ல மாட்டனு தெரிஞ்சிடுச்சு. நானே சொல்றேன். உன்னோட செயலுக்கு இரண்டு காரணம்!” என்று சொல்லி நிறுத்தியவன், அவளின் முகத்தை ஆராய்ந்தான்.

காதுகள் விடைக்க, அவனின் பேச்சில் அவள் கவனம் வைத்திருந்ததை உணர்ந்ததும் பேச்சைத் தொடர்ந்தான்.

“முதல் காரணம் உன் அம்மாவோட பார்வை!” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும், ஜனாவின் காது லேசாகத் துடித்தது. உதட்டின் ஓரம் மெல்லிய நடுக்கம் போல் சிலிர்ப்பு ஓடி ஒளிந்தது.

அவளின் அந்தச் சிறு அசைவையும் அவனின் பார்வை படம் பிடித்துக் கொண்டிருந்தது.

“உன் அம்மா நம்ம இரண்டு பேரையும் ஜோடியா பார்த்ததால் அவங்களுக்கு ஒரு ஆர்வம். நாம இரண்டு பேரும் ஜோடி சேர்ந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சதை அவங்க கண்கள் காட்டிக் கொடுத்துருச்சு…”

“என்ன சரியா?” அவன் சொன்னதைக் கேட்டு மெதுவாகத் திரும்பிப் பார்த்த ஜனாவின் பார்வையைக் கண்டு கேட்டான்.

அவனுக்கு வாயால் பதில் சொல்லாமல் ‘எப்படிக் கண்டுகொண்டாய்?’ என்ற பார்வை பார்த்தாள்.

‘எல்லாம் நான் அறிவேன்’ என்ற பதில் பார்வை பார்த்தவன் “உன் அம்மா அப்படி உன்னையும், என்னையும் நினைச்சது உனக்குப் பிடிக்கலை. அதுதான் அவங்க ஆசையை வளர்க்கக் கூடாதுனு உடனே என்னைத் தள்ளி நிறுத்தும் முயற்சியைச் செய்ய ஆரம்பிச்சுட்ட…” என்றான்.

அவன் சொல்லி முடித்த பின் சில நொடிகள் அவனையே தீர்க்கமாகப் பார்த்தாள்.

பின் ‘நீ கண்டு கொண்டதால் எனக்கு ஒன்றும் இல்லை’ என்பது போல் தோளை வெகு அலட்சியமாகக் குலுக்கினாள்.

“இன்னொரு காரணம் சொல்லட்டுமா?” அவளின் அலட்சியத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் கேட்டான்.

“இரண்டாவது காரணம் தான் மெயினான காரணம்! அது உன் மனசு!” என்றவன் பார்வை அவளை ஊடுருவியது.

‘என்ன சொல்ல வருகிறாய்?’ என்று கேள்வியாகப் பார்த்துத் தன்னை ஊடுருவிய பார்வையை உதறி விட முயன்றாள்.

“உன் மனசு எங்கே என் பக்கம் சாய்ந்து விடுமோன்னு உனக்குப் பயம்! அந்தப் பயம் உன்கிட்ட நெருங்க விடாம என்னை விரட்ட சொல்லுது…” என்று லேசான புன்சிரிப்புடன் சொன்னான்.

“கற்பனைக்குக் கால் வைக்காதீங்க காவலரே…” என்று பட்டென்று ஜனா சொல்ல, அவனின் புன்சிரிப்புப் பெரிதாக விரிந்தது.

“மௌனம் உடைத்தாயே மௌனத்தாரகையே…” என்றான் அகலமான புன்னகையுடன்.

“அனாவசிய பேச்சுக்கள் அலட்சியப் படுத்தப்படும் காவலரே! அதனால் அளந்தே பேசுங்க…” அவனின் புன்னகை ஏற்படுத்திய எரிச்சலைக் குரலில் காட்டினாள் ஜனார்த்தனி.

“உன் மௌனத்தை உடைத்தே உன் அலட்சியத்தை அலட்சியப் படுத்திவிட்டாய் ஜனா. இன்னுமா உனக்கு அது புரியலை?” என்று கேட்டான்.

“நீங்க இப்படிப் பேசுறது தான் எனக்குப் புரியலை ஜெகன். வினயா கேஸ் இழுத்துட்டுப் போகுதே என்ற கோபத்தில் தான் கொஞ்சம் நான் ஹார்ஷா பேசினேன். ஆனா அதுக்கு நீங்க ஏன் வேறு அர்த்தம் கற்பிச்சுக்கிறீங்கனு தான் எனக்குப் புரியலை…” என்றாள்.

“இப்போ நீ தான் புரியாம பேசுற ஜனா. ஜெகான்னு என் பேரைச் சுருக்கியது நீ தான். ஆனா நான் உங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனதிலிருந்து அந்தப் பேரை அவாய்ட் பண்ற. வினயா கேஸ் எந்த மாதிரி மூவ் ஆகிட்டு இருக்குனு நல்லா தெரிஞ்சும், என்னமோ நான் தான் அவளைக் கண்டுபிடிக்க முடியாமல் தள்ளிப் போடுவது போல் இளக்காரமா பேசுற. இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம் ஜனா?” என்று கேட்டான் ஜெகவீரன்.

“வினயா விஷயத்துக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன். பேர் ஜெகான்னு கூப்பிடாதற்குக் காரணம்… அப்படி நான் கூப்பிடுவது பார்க்கிறவங்களுக்குத் தேவையில்லாத கற்பனையை உண்டாக்குதுனு எனக்குத் தோணுச்சு. கற்பனைக்கு உயிர் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அதான் ஜெகன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். ஆனா அதுக்கு நீங்க வேற அர்த்தம் வைக்கிறது தான் இப்போ வேடிக்கையா இருக்கு…” என்றாள் ஜனார்த்தனி.

“நீ இப்படிப் பேசுறது தான் வேடிக்கையா இருக்கு ஜனா. உன் மனசில் தடுமாற்றம் இல்லனா அடுத்தவங்க கற்பனைக்கு நீ ஏன் கவலைப்படணும்? அதோட இந்த நேரத்தில் என் மனசை உன்கிட்ட…”

“ஸ்டாப்! ப்ளீஸ் ஸ்டாப்!” என்று அவன் மேலும் ஏதோ பேசும் முன் அவனின் பேச்சை நிறுத்தினாள் ஜனார்த்தனி.

“இப்போ என்ன? உங்களை ஜெகான்னு கூப்பிடாதது தான் பிரச்சனையா? அப்போ நான் ஜெகானே கூப்பிடுறேன். மத்தவங்களோட கற்பனை பார்வைக்கு யோசித்து, உங்க கற்பனைக்கு உயிர் கொடுக்க என்னால் முடியாது…” என்றாள் கறாராக.

“நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளு ஜனா…”

“நோ! நாம இங்கே வந்தது வினயா கேஸ் விஷயம் பற்றிப் பேசத்தான். இன்னைக்கு ஹாஸ்பிட்டல் சிசிடிவி பார்த்து முடிச்சதும் என் பாஸ் கவியுகன் கூப்பிட்டார்னு நான் கிளம்பிப் போன பிறகு, என்ன நடந்ததுனு சொல்லத்தான் நீங்க என்னை வரச் சொன்னீங்க. அதனால் அதைப் பற்றி மட்டும் பேசுங்க…” என்றாள் அழுத்தமாக.

அவளின் முகம் கடுமையாக இருந்தது. ‘நீ வேறு பேச்சுப் பேசினால் எனக்குப் பிடிக்காது’ என்ற பாவனையில் அமர்ந்திருந்தாள்.

“ஏன் பிடிவாதம் பிடிக்கிற ஜனா?” அவளின் பாவனைப் புரிந்தாலும், விடாமல் கேட்டான் ஜெகவீரன்.

“நான் நினைச்சா இந்தச் செகண்ட் கிளம்பிப் போய்ட்டே இருக்க முடியும் ஜெகா…” என்று சொல்லி அவனின் வாயை அடக்க வைத்தாள்.

“இப்போ நான் பேசுறதைக் கேட்கும் மூடில் நீ இல்லை ஜனா. அதனால் இப்போ நான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விடுறேன். ஆனா எல்லா நேரமும் இப்படி இருப்பேன்னு நினைக்காதே!” என்று அவளை விட அழுத்தமாகச் சொன்னான்.

“விஷயத்துக்கு வாங்க ஜெகா…” அவனின் அழுத்தமான பேச்சை அலட்டாமல் புறக்கணித்துத் தள்ள முயன்றாள்.

அவளின் நடவடிக்கையில் எரிச்சல் அடைந்தவன் “சில்லி சிக்கன்…” என்று கடுப்புடன் முனங்கினான்.

“என்ன… சில்லி சிக்கன் வேணுமா? இது காஃபி ஷாப் ஜெகா…”

“அது எனக்குத் தெரியாதா என்ன? நான் சில்லி சிக்கன் கேட்கலை. உன்னைச் சில்லி சிக்கன்னு சொன்னேன்…”

“என்ன? நான் சில்லி சிக்கனா?” ஜெகன் நக்கலாகச் சொன்ன விதத்தில் கோபம் எட்டிப் பார்த்தது ஜனாவிடம்.

“ஆமா… அதுவும் தூக்கலா காரம் போட்ட சில்லி சிக்கன்…” என்றான் இன்னும் நக்கலாக.

“என்ன நக்கலா? எனக்கு நீங்க ஒரு போலீஸ்காரர்தானானு ரொம்ப டவுட்டா இருக்கு…” என்றாள்.

“டவுட்டா? வரக்கூடாதே! அதுவும் பாயிண்ட் பாயிண்டாகப் போட்டு எழுபத்தைந்து பிரசண்டேஜ் மார்க் போட்ட பிறகும் சந்தேகம் வருவது தப்பாச்சே…” என்றான் பயந்தவன்‌ போல்.

“அந்த எழுபத்தைந்து பிரசண்டேஜ் மார்கை குறைக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்…”

“ஏன்?”

“பின்ன? ஒரு போலீஸ் போலவா உங்க பேச்சும் செயலும் இருக்கு? கேஸ் விஷயம் பேசணும்னு வரச்சொல்லிட்டு ரோட்சைட் ரோமியோ போலப் பேசிட்டு இருக்கீங்க…” என்றாள்.

“ஏன்? உனக்கு அடுப்புல வச்சது போல் கடுப்பா இருக்கிற போலீஸ் தான் வேணுமா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

அவன் சொன்ன விதத்தில் அவள் முறைப்பை பதிலாகத் தந்தாள்.

“பின்ன என்ன ஜனா? போலீஸ்னா எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிற? முகத்தை எந்த நேரமும் கடுமையா வச்சுக்கிட்டு, சிடுசிடுனு பேசிக்கிட்டு, உடம்புக்கும் கஞ்சி போட்டது போல இருந்தால் தான் போலீஸ்னு நம்புவியா? உனக்கு அப்படிப்பட்ட போலீஸ் தான் வேணும்னா‌ கண்டிப்பா அதை என்கிட்ட எதிர்பார்க்காதே! ஒருவேளை அப்படி இருப்பது போல் தான் என்னைப் பார்க்க ஆசைப்பட்டினா நான்‌ குற்றவாளிகள் கூட இருக்கும் போது வா! அந்த மாதிரியான போலீஸை நீயே என்கிட்ட பார்ப்பாய்…” என்றான்.

“அப்ப மத்த நேரமெல்லாம் நீங்க போலீஸ் இல்லைன்னு சொல்றீங்களா?”

“நான் எப்பவும் போலீஸ் தான். ஆனால் அந்தப் போலீஸ் தனத்தை உன் முன்னாடி மட்டும் காட்ட எனக்கு விருப்பமில்லை…”

“ஏன்? நான் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்?”

“என்ன ஸ்பெஷல்னு உனக்கு இன்னும் புரியலைனா நான் புரியவைக்க முயற்சி செய்கிறேன் ஜனா. அதுக்கு அப்ப நிறுத்திய பேச்சை என்னைத் திரும்பவும் பேசவிடு!” மீண்டும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் ஜெகவீரன்.

“இல்ல, நீங்க பேசவே வேண்டாம்…” அவனுக்குப் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருந்தவள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வரவும் சட்டென்று அந்தப் பேச்சிற்குத் தடைப் போட்டாள்.

“சில்லி சிக்கனே தான்…” என்று அவன் மீண்டும் கேலியாகச் சொல்ல, அவள் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

“ரொம்ப ஓவரா…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளின் அலைபேசி அவளை அழைக்க, பேச்சை நிறுத்திவிட்டுக் கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

பெயரிடப்படாத அழைப்பாக இருக்கவும் ஒரு நொடி யோசித்தாள்.

பின் யோசனையுடன் அழைப்பை ஏற்க, “தேவையில்லாம என் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் உன் மூக்கை எப்படி உடைக்கலாம்னு என் யோசனைக்கு நீங்களே சூப்பரான மேட்டரை தூக்கிக் கொடுத்து விட்டீங்களே துப்பறியும் மேடம்…” என்று அந்தப் பக்கமிருந்து கிண்டலான குரல் ஒன்று கேட்டது.

“ஏய்! யார் நீ?” என்று அதட்டலாகக் கேட்டாள் ஜனார்த்தனி.

“அதே தான் நானும் கேட்கிறேன். என் விஷயத்தில் தலையிட நீ யார்? தப்பு பண்ணிட்ட ஜனார்த்தனி. பெரிய தப்பு பண்ணிட்ட. அந்தத் தப்புக்குத் தண்டனையையும் ஏற்க தயாரா இருந்துகோ…” என்று அந்தப் பக்கம் இருந்து மிரட்டல் விட்டான்.

“யார்டா நீ? முதலில் அதைச் சொல்லிட்டு உன் மிரட்டலை விடுடா…” என்று இவள் அதட்ட,

“நீங்க தேடிக்கிட்டு இருக்குற ஆளு தானுங்க…” என்று மீண்டும் அந்தப் பக்கம் நக்கல் தொனித்தது.

“நான் தேடிக்கிட்டு இருக்கிற ஆளா? என்ன சொல்ற நீ?” என்று கடுமையாகக் கேட்டாள்.

அவளின் பேச்சின் த்வனியில் யோசனையுடன் எதிரே அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன் ‘என்ன?’ என்பதாகக் கையசைத்துக் கேட்டான்.

ஆனால் அவனுக்கு எதுவும் பதில் சொல்லாமல் தனக்கு வந்த அழைப்பில் கவனம் செலுத்தினாள்.

“என்னடா இவளைத் தட்டித் தூக்க லட்டு மாதிரி எதுவும் மேட்டர் கிடைக்கலையேனு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ உன் லவ்வர்பாயையே கண் முன்னாடி காட்டிட்ட. அதுவும் சாதாரண லவ்வர் பாயா? தி கிரேட் இன்ஸ்பெக்டர் ஜெகவீரன். அவன் கிட்ட ஏற்கனவே ஒரு விஷயத்துக்குக் கணக்குத் தீர்க்க வேண்டியது இருக்கு. இப்போ உன் கூடச் சேர்ந்ததுக்குச் சேர்த்து என் கணக்கைத் தீர்க்கப் போறேன்…”

“என்ன லவ்வர் பாய்யா? என்னடா உளர்ற? யார் நீன்னு முதலில் சொல்! கோழை மாதிரி பேர் சொல்லாம ஏதாவது உளறாதே!”

“என்னம்மா கண்ணு அர்த்தமில்லாமல் பேசிக்கிட்டு இருக்க. போன் போட்டு மிரட்டுறவன் பேரும், வீட்டு அட்ரஸுமா கொடுப்பான்? நான் கோழையா இல்லையான்னு உன் லவ்வர் உடம்பில் கட்டோட ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது உனக்கே தெரியும்!” என்று அவன் தெனாவட்டாகச் சொல்ல,

இங்கே ஜனாவின் முகம் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது.

அவளின் அதிர்ச்சியைக் கண்டு அவளிடம் இருந்து கைபேசியைப் பறித்துப் பேச முயன்றான் ஜெகவீரன்.

ஆனால் கைபேசியைக் கைப்பற்ற விடாமல் காத்தவள், தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி எச்சரித்தாள்.

“என்னடா பூச்சாண்டி காட்டுறீயா? உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ! அதோட லவ்வர் பாய்னு எனக்கு ஒருத்தனும் இல்லை. நீ தப்பா புரிஞ்சுகிட்டு, அவர் மேலே கை வச்சா சேதாரம் அவருக்கு இல்லை, உனக்குத் தான்!”

“அந்த இன்ஸ்பெக்டர் உன் லவ்வர் இல்லைன்னு நீ சொன்னா நான் நம்பிருவேன்னு நினைச்சியா? அவன் விடாம உன் முகத்தைப் பருகுவது போலப் பார்க்கிறதும், நீ செல்லமா அவனை முறைக்கிறதையும் பார்த்த பிறகும் நீ சொல்ற பொய்யை நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்லை. எதிர்பார்த்துட்டே இரு. கூடிய சீக்கிரம் உன்னைத் தேடிக் கெட்ட நியூஸ் வரும்…” என்றவன் தொடர்பைத் துண்டித்தான்.

அவனின் கடைசிப் பேச்சில் இருந்த செய்தியைப் புரிந்து கொண்ட ஜனா, உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

‘அவன் இங்கே இருந்து தான் எங்கோ நின்று கொண்டு தங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே பேசுகின்றான்’ என்று புரிந்த நொடி, “ஜெகா குவிக்! அவன் இங்கே தான் இருக்கான்…” என்று ஜெகனிடம் சொல்லிக் கொண்டே கடையின் வாயிலை நோக்கி ஓடினாள்.

அவள் இந்தப் பக்கம் பேசியதை வைத்தே ஏதோ மிரட்டல் கால் என்பதைப் புரிந்து கொண்டிருந்த ஜெகன், அவள் தன்னைப் பேச விடாமல் செய்ததில் ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்தான்.

இப்போது மிரட்டல்காரன் அருகில் தான் இருக்கின்றான் என்று தெரிந்ததும், அதிவேகமாகச் செயல்பட்டான்.

ஜனாவுடன் வாயிலுக்கு ஓடியவன், அவளுடன் சேர்ந்து சுற்றும், முற்றும் தேடினான்.

அப்போது எதிரே தெரிந்த பெரிய துணிக்கடை வாயிலில் இருந்து ஒருவன் தலையில் ஹெல்மெட் அணிந்து, இவர்களைப் பார்த்துக் கொண்டே துரித வேகத்தில் நடந்து தன் வண்டியில் ஏறிச் செல்லப் போக, “அதோ அவன் தான் போல…” என்ற ஜனா வேகமாகத் தன் வண்டியை எடுக்க ஓடினாள்.

அவளின் கையைப் பிடித்து நிறுத்திய ஜெகன், “என் கூட வா ஜனா…” என்று அருகிலேயே இருந்த தன் இரு சக்கர வாகனத்தை எடுத்தவன் அவளையும் ஏறச் சொன்னான்.

இருவரும் தன்னைக் கண்டுகொண்டதைக் கவனித்து விட்ட மிரட்டல்காரன், வேகமாகத் தன் இருசக்கர வாகனத்தில் அந்த இடத்தை விட்டுச் செல்ல,

அவனைப் பிடித்து விடும் வேகத்துடன் ஜனார்த்தனியையும் அழைத்துக் கொண்டு தன் வண்டியைப் பறக்கவிட்டான் ஜெகவீரன்.