பிழையில்லா கவிதை நீ – 11

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 11

“இதோ இங்கே இருந்து தான் எடுத்தேன். இங்கே பாருங்க நம்ம தலைவர் விட்டுச் சென்ற சிகரெட் தடயம்…” என்று சுற்றுச்சுவரில் இருந்த சிகரெட் அழுத்திய கறுப்புப் புள்ளியையும், சிகரெட் கிடந்த இடத்தையும் காட்டினாள் ஜனார்த்தனி.

மனிதர்கள் ஏற்படுத்தும் கைத்தட அழுக்குகள் கூட இல்லாமல் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவரில் அந்தக் கறுப்பு நிற புள்ளி தனியாகத் தெரிந்தது.

“நீங்க உள்ளே அங்கிள்கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஜன்னல் வழியா சும்மா பார்த்தப்ப இந்தப் புள்ளி கண்ணில் பட்டுச்சு. வந்து பார்த்துச் சிகரெட்டை எடுத்தேன்…” என்றாள்.

“உன்னை யார் சிகரெட்டைக் கையில் எடுக்கச் சொன்னது?” எரிச்சல் கொப்பளித்தது ஜெகவீரனிடம்.

“ஏன்?”

“பார்க்கிறது டிடெக்டிவ் வேலை. ஆனால் ஒரு ஆதாரம் கிடைத்தால் அதை எப்படி எடுக்கணும்னு கூடத் தெரியாமல் கேட்கிறாள் பார், ஏன்னு சர்வசாதாரணமாக…” முன்பை விட இன்னும் வார்த்தையில் சூடு பறந்தது.

“ஓஹோ! பதிலுக்குப் பதிலா? நான் உங்களைச் சொன்னேன்னு திருப்பி என்னை மட்டம் தட்டுறீங்க? இருக்கட்டும், பார்த்துக் கொள்கிறேன்…” என்று படபடத்தவள், “தவறு தான். சிகரெட்டைக் கையால் எடுத்திருக்கக் கூடாது தான். வினயா வீட்டில் பார்த்த அதே தடயத்தை இங்கே பார்த்ததும் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன்…” என்றாள் தான் செய்த தவறை உணர்ந்தவளாக.

“வினயா வீட்டில் இருந்த சிகரெட்டில் இருந்த கை தடயமும், இதில் இருப்பதும் ஒன்று தானான்னு பார்த்திருக்கலாம். பரவாயில்லை… டெஸ்டுக்கு ஏற்கனவே கொடுத்த சிகரெட் கூட இதையும் கொடுக்கலாம்.

நீ கைவைக்காமல் இருந்திருந்தால் குற்றவாளி பற்றித் தகவல் தெரியும் போது கைரேகை ஒன்று தானான்னு டெஸ்ட் பண்ணி சொல்லிடுவாங்க. ஆனா இப்போ நீ செய்து வச்சுருக்கிற வேலை என்ன?” என்று கடுப்பாகச் சொன்ன ஜெகன் அவளிடம் இருந்து சிகரெட் துண்டை வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்தான்.

“யானைக்கும் அடி சருக்கும். சண்டிக் குதிரைக்கும் கால் சருக்கும்…” என்று அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னான்.

“ஹேய்! யாரைச் சண்டிக் குதிரைன்னு சொல்றீங்க?” பாய்ந்து அவனின் கழுத்தைப் பிடிக்கப் போவது போல் குதித்துக் கொண்டு வந்தாள் அந்தச் சண்டிக் குதிரை.

“உன்னைத் தான் சொன்னேன் சண்டிக் குதிரை ஜனா…” தன் கழுத்தை நெறிக்க வந்த அந்தக் கைகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அவள் முகத்தைப் பார்த்து நேரடியாகவே சொன்னான்.

இப்போது அவனின் கழுத்தில் கையை வைத்தே விட்டிருந்தாள் ஜனார்த்தனி.

‘முடிந்தால் நெறித்துக் கொள்!’ என்பது போல் அவளின் கண்களையே தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகவீரன்.

“சார்…” என்ற அழைப்புக் கேட்டு, தன் கழுத்தில் இருந்த அவளின் இரண்டு கைகளையும் ஒற்றைக் கையால் வலுவாகப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு நிதானமாகக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான்.

கஸ்தூரி இருந்த அறையில் இருந்து ஜன்னல் வழியாகப் பரத் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரின் கலாட்டாவையும் தற்செயலாக ஜன்னல் வழியாகப் பார்த்தவன் அழைத்திருந்தான்.

“என்ன பரத்?” என்று கேட்ட ஜெகனின் கைகளுக்குள் இன்னும் ஜனாவின் கைகள் சிறைப்பட்டிருந்தன.

“எதுவும் பிரச்சினையா சார்?” ஜனா அவனின் கழுத்தைப் பிடித்திருந்ததைப் பார்த்திருந்ததால் கேட்டான்.

“நத்திங் பரத்! எங்களுக்குள் சின்ன ஊடல்!” என்று “என் கையை விடுங்க…” என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாவின் பேச்சைப் பொருட்படுத்தாமல் பரத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் பரத் ஏதோ புரிந்து கொண்ட பாவனையில் பார்த்துச் சிரித்தான்.

“என்னது ஊடலா? நமக்குள்ள ஊடல் வருவதற்கு நாம என்ன லவ்வர்ஸா?” கடுப்புடன் கேட்டவள் தன் கைகளை அவனிடமிருந்து வெடுக்கென்று பறிக்க முயன்றாள்.

ஆனால் அவளின் இரண்டு கைகளையும், தன் ஒற்றைக் கையால் அவன் அலட்சியமாகப் பிடித்திருப்பது போல் இருந்தாலும், வலுவாகவே பிடித்திருந்தான்.

சிறிதும் கைகளை விடுவித்துக் கொள்ள முடியாமல் போனதில் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“இப்போ நம்ம இரண்டு பேரையும் பார்க்கிறவங்க லவ்வர்ஸ்னு தான் நினைப்பாங்க. அங்கே பார்! பரத்தும் அப்படித்தான் நினைக்கிறார்…” என்று அவன் சொன்னதில் அவளின் ஆச்சரியம் அப்படியே அடங்கி விட, முறைத்துப் பார்த்தாள்.

அவர்கள் தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக் கொள்ள, அது அவர்களுக்கிடையே நெருக்கமாக ஏதோ பேசிக் கொள்வதாகக் காட்ட, பரத் அவர்களைப் பார்க்காமல் பார்வையைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவளின் முறைத்த விழிகளைத் தீர்க்கமாகப் பார்த்தான் ஜெகன்.

கூடவே அவனின் மனதிற்குள் கேள்வி ஓடியது.

அவளின் வீட்டில் இருந்து கிளம்பியதில் இருந்தே, ஒரு வித ஒதுக்கம் ஜனாவிடம் வந்திருந்தது புரிந்தது.

அவனையும் ஒதுக்கி நிறுத்துவதற்காகவே மட்டம் தட்டிப் பேசினாளோ என்று நினைத்தான்.

அதுவும் வேலையில் உன்னிப்பாகக் கவனத்துடன் இருப்பவள், தன்னைக் குறை சொல்ல வேண்டும் என்றே அவசரப்பட்டுச் சிகரெட்டைக் கையால் எடுத்திருக்கிறாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

அவன் அவளைப் பற்றிய யோசனையில் இருக்க, அவளும் யோசனையில் தான் இருந்தாள்.

ஆனால் அவளின் யோசனை ‘எப்படித் தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளலாம்’ என்பதில் இருந்தது.

கைகள் கட்டுண்டு விட்டால் அவளின் அடுத்த ஆயுதம் கால்கள் தான்.

அவனின் பார்வை முழுவதும் தன் முகத்தில் இருப்பதைப் பார்த்தவள், தன் கால் முட்டியை மடக்கி அவனைத் தாக்க முடிவு செய்து, அவனின் அடி வயிற்றுக்கு முட்டியால் குறி வைத்தாள்.

அவள் காலை ஓங்கிய மறுநிமிடம் அவளின் கால் அந்தரத்தில் நின்றது.

“ஏய்! என்ன இது?” என்று கேட்டபடி நிற்க வைத்திருந்தான் ஜெகவீரன்.

ஒரு கை அவளின் இரண்டு கைகளையும் பிடித்திருக்க, இன்னொரு கையால் தன்னைத் தாக்க வந்த காலை பிடித்திருந்தான்.

அவனிடம் அவ்வளவு துரித வேகத்தையும், வலுவையும் எதிர்பாராத ஜனா ஆச்சரியத்துடன் திகைத்துத்தான் போனாள்.

அவன் தன்னிடம் சாதாரணமாகப் பேசும் முறையையும், இலகுவாக நடந்து கொள்வதையும் வைத்து அவனைச் சாதாரணமாக எடை போட்டுவிட்டாள் போலும்.

ஆனால் இப்போதோ அவன் தன் திறமையை அவளிடம் இதுவரை வெளிக் காட்டாததால் இன்னும் அவனைப் பற்றித் தான் சரியாக அறிந்து கொள்ளவில்லை என்று நினைத்துக் கொண்டாள்.

“என்ன ஜனா, கையை விடுன்னு சொன்னா விட்டுட்டுப் போறேன். அதுக்காக உயிர் நாடியிலேயே கால் வைப்பியா நீ? ஹ்ம்ம்?” என்று புருவத்தை உயர்த்தி நிதானமாகக் கேட்டான்.

“ம்ப்ச்… விடுங்க ஜெகன்…” அவனிடம் தோற்றுப் போன கோபத்தில் எரிச்சல் பட்டாள்.

“ம்ம்… விடுறேன். உனக்கு என் மேல் ஏதோ ஒரு கோபம். என்ன அது?” என்று கேட்டபடியே அவளின் கைகளையும், காலையும் விடுவித்தான்.

“நீங்க ஒரு போலீஸ்காரர் தானான்னு எனக்குச் சந்தேகமாக இருக்கு. நாம தேடுற ஒருத்தன், இங்கே வரை வந்து அவனின் தடத்தை விட்டுட்டுப் போயிருக்கான். அதைப் பற்றி ஆராயாமல் அசால்டா என் கூட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேச்சை மாற்றினாள்.

“ஹ்ம்ம்… பேச்சை மாத்துற ஜனா. ஓகே, நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்கலாம்…” என்று அவளிடம் பேச்சை முடித்துக் கொண்டவன், சுற்றுப்புறத்தை ஆராய ஆரம்பித்தான்.

கஸ்தூரி இருந்த அறைக்கும், மருத்துவமனை சுற்றுச்சுவருக்கும் இடையே ஒரு கார் போகும் அளவிற்குப் பாதை இருந்தது.

சுற்றுச்சுவர் நல்ல உயரமாக இருந்தது. வெளிப்பக்கம் இருந்து தாவி உள்ளே வருவது என்றால் ஏணி வைத்து ஏறி தாவி வந்தால் தான் உண்டு.

தாவிக் குதித்து வருவது என்றால் இயலாத காரியம்.

அதனால் மருத்துவமனை வாயில் வழியாகத் தான் வந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான் ஜெகவீரன்.

கஸ்தூரி இருந்த அறை ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதை நோட்டம் விட வந்தவன் அந்தச் சுற்றுச்சுவரின் பக்கம் நின்று ஜன்னல் திறக்கும் நேரத்திற்காகக் காத்திருந்திருக்கலாம் என்று ஊகம் செய்ய முடிந்தது.

ஜெகவீரன் அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது அந்தப் பக்கம் மருத்துவமனை காவலாளி ஒருவர் வர, அவரை அருகில் அழைத்தான்.

“என்னங்க சார்…” பவ்யத்துடன் கேட்டுக் கொண்டு வந்து நின்றான் அந்தக் காவலாளி.

“இந்தப் பக்கம் இருக்கிற பாதையில் கார் வருமா?” என்று ஜெகன் இந்தக் கேள்வியைக் கேட்கவும் காரணம் இருந்தது.

மருத்துவமனையின் இந்தப் பக்கம் வர, இங்கே வரும் பொது மக்களுக்கு மறுப்பு இருந்ததைக் கவனித்திருந்தான்.

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த மருத்துவமனையின் முன் பக்கம் மட்டும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தப் பக்கம் வாகனங்கள் வந்து செல்வதற்கான தடயங்கள் காணப்பட்டன.

இங்கே வரை வந்த சிகரெட் நபர் ஒருவேளை அவனின் வாகனத்தில் இந்தப் பக்கம் வந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் தான் ஜெகன் அக்கேள்வியைக் கேட்டான்.

பொதுமக்கள் வராத இந்தச் சுத்தமான பகுதியில் ஒரே ஒரு சிகரெட் துண்டு, அதுவும் சரியாக அதே சுவற்றுக் கறுப்புப் புள்ளி தடத்துடன் இருந்ததில் வினயாவின் விஷயத்தில் சம்பந்தப்பட்டவன் தான் இங்கே வந்தது என்பதை உறுதிப்படுத்தியதைப் போல் இருந்தது.

“ஆமாங்க சார். இங்கே வேலை பார்க்கிற டாக்டருங்க கார் பார்க்கிங் இந்தப் பக்கம் தான் சார் இருக்கு. அவங்க கார் மட்டும் இந்தப் பக்கம் வரும். வேற யாரும் இங்கிட்டு வரக்கூடாதுனு தான் இந்தப் பக்கம் வர்ற பாதையை அடைச்சு வச்சுருக்கோம்…” என்றான்.

“வேற யாரும் வர உறுதியா அனுமதி இல்லையா?”

“இல்லைங்க சார். இதோ இந்தப் பொண்ணே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உள்ளே அத்துமீறி வந்துச்சுன்னு திட்டிப் போகச் சொன்னேன் சார்…” என்று ஜனாவைக் கை காட்டினான் காவலாளி.

“இந்த இடம் இவ்வளவு சுத்தமா இருக்கே? இதை க்ளீன் பண்ண ஆள் வருவாங்களா?”

“வருவாங்க சார். தினமும் ஹாஸ்பிட்டல் சுத்திச் சுத்தம் பண்ணுவாங்க…”

“தினமும் எப்போ பண்ணுவாங்க?”

“காலையில் ஐந்து மணிக்கு ஆரம்பிச்சு ஏழு மணிக்குள்ளே க்ளீன் பண்ணி முடிக்கணும்னு ரூல்ஸ் சார்…” என்றவன்,

“எதுவும் பிரச்சினையா சார்?” போலீஸ் தன்னிடம் விசாரணை செய்வதில் லேசாக நடுங்கிய படியே கேட்டான்.

“இந்தப் பொண்ணு போல வேற யாரும் சமீபத்தில் இந்தப் பக்கம் அத்துமீறி வந்தாங்களா?”

“இல்லைங்க சார். நான் காவல் இருந்த வரை வேற யாரையும் பார்க்கலை…”

“வேற யார் இங்கே வாட்ச்மேன்?”

“நைட் டூட்டிக்குத் தனி ஆள் சார். நைட் ஒன்பதில் இருந்து, காலை ஆறு மணி வரை வேற ஆள் வருவார் சார். ஆறுமணிக்கு நான் வந்துடுவேன். எதுக்கு விசாரிக்கிறீங்க சார்? எதுவும் பிரச்சினையா? போலீஸ் விசாரிச்சது தெரிஞ்சா பெரிய டாக்டர் என்னைத் திட்டுவாங்க சார்…” என்றான் லேசான பயந்த குரலில்.

“ஒரு சின்ன என்கொயரி. இதுக்கு மேல உங்க டாக்டர்கிட்ட பேசி நான் பார்த்துக்கிறேன். நீங்க போய் வேலையைப் பாருங்க…” என்றவன், “ஜனா இந்த ஹாஸ்பிட்டல் எண்டரன்ஸ்ல சிசிடிவி கேமிரா பார்த்தேன். இனி அதைத் தான் செக் பண்ணனும். நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டான்.

“நல்ல ஐடியா தான் ஜெகன். ஆனா பல பேர் வந்து போற இடத்தில், யாருனே அடையாளம் தெரியாதவனை நாம எப்படி அடையாளம் பார்க்க முடியும்?”

“சேதுராமனையும், பரத்தையும் கூடக் கூப்பிட்டுக்கலாம். அவங்களுக்கு யாரையாவது தெரியுமானு பார்க்க சொல்லலாம்…” என்றான்.

“கோ அஹெட்!” என்றாள் ஜனார்த்தனி.

“தினமும் ஏழு மணிக்குள்ளே க்ளீன் பண்ற ரூல்ஸ்னா சிகரெட்காரன் அந்த நேரத்திற்குள் வந்திருந்தா இந்தச் சிகரெட்டை க்ளீன் பண்ணிருக்கணுமே? ஆனா பண்ணலைனா ஏழு மணிக்கு பிறகு தான் அவன் வந்திருப்பான்னு தோணுது. இப்போ மணி பத்து. இந்த இடைப்பட்ட நேரத்தை குறிப்பா பார்த்தால் கூடப் போதும்னு நினைக்கிறேன்…” என்ற படி மீண்டும் மருத்துவமனைக்குள் சென்று டாக்டர் நடேசனை சந்தித்து விவரம் சொல்லி, சிசிடிவி காணொளியைப் பார்க்க அனுமதி வாங்கினான்.

அதற்கு முன் சேதுராமனை அழைத்து, “ஜன்னல் பக்கம் யாரும் நின்றதைப் பார்த்தீர்களா?” என்று விசாரித்திருந்தான்.

“இல்லை சார். யாரையும் நான் பார்க்கலையே…” என்று கையை விரித்தார் சேதுராமன்.

“இந்த ஜன்னல் எப்பவும் திறந்தே இருக்குமா?” என்று கேட்டான் ஜெகன்.

“இல்லை சார், கொசு வந்திடும்னு சாயந்திரம் ஆறு மணிக்குப் பூட்டிட்டேன். திரும்பக் காலையில் ஆறு மணிக்கு மேல திறந்தேன்…”

“அதுக்குப் பிறகு இந்த அறையை விட்டுப் போனீங்களா?”

“எட்டு மணி போலக் கேன்டின் போனேன் சார்…”

“அதுக்கு முன்னாடி உங்க மனைவி எப்படி இருந்தாங்க?”

“ஏழு மணிக்கு எழுந்திருக்கும் போது சாதாரணமா தான் சார் இருந்தாள். ஆனா நான் கேன்டின் போய்ட்டு வந்தப்ப, ஒரு மாதிரி நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள். நான் பயந்து போய் நர்ஸை கூப்பிட்டேன். அவங்க வந்து செக் பண்ணிட்டு பிரஷர் கூடி இருக்குனு சொன்னாங்க. அதுக்குப் பிறகு டாக்டர் வந்து செக் பண்ணிட்டு ஒரு டெஸ்ட் எழுதி கொடுத்தார். அதை எடுத்துட்டு, பிரஷருக்கு ஊசி போட்டுட்டு நீங்க வந்த பிறகு வந்தோம்…” என்றார்.

‘அப்போ சேதுராமன் கேன்டின் போனப்ப தான் அவன் ஜன்னல் வழி பார்த்திருக்கணும். அவனைப் பார்த்துப் பயந்து போய்த் தான் கஸ்தூரிக்கு பிரஷர் கூடியிருக்கணும்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஜெகவீரன்.

சேதுராமனிடம் பேசி விட்டு அவரையும், பரத்தையும் சிசிடிவி காணொளியைப் பார்க்க அழைத்துச் சென்றான்.

பெரிய மருத்துவரிடம் அனுமதி வாங்கி விட்டதால் போனதுமே காணொளியைப் போட்டுக் காட்டினார்கள்.

குறிப்பாக அன்று காலையிலிருந்து மருத்துவமனை வாயிலின் வழியாக நுழைந்தவர்களைக் கவனித்துப் பார்த்தார்கள்.

நிமிடங்கள் கரைய, பத்து மணி வரையிலான பதிவுகள் வரை ஓடி முடித்த பிறகும், சேதுராமனும், பரத்தும் யாரையும் அடையாளம் காட்டவில்லை.

“என்ன அங்கிள் உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரும் ஹாஸ்பிட்டலுக்குள் வரலையா?” என்று கேட்டாள் ஜனார்த்தனி.

“இல்லை ஜனா. யாரும் எனக்குத் தெரிஞ்சவங்க இல்லையே…” என்றார் சேதுராமன்.

“உங்களுக்குப் பரத்?”

“எனக்குத் தெரிஞ்சவங்களும் இல்லை சிஸ்டர்…” என்றான் பரத்.

“நல்லா கவனிச்சுப் பார்த்தீங்களா? மாறு வேஷத்தில் அவன் வந்திருக்கலாம்…” என்று மீண்டும் கேட்டுப் பார்த்தாள்.

“நல்லா கவனிச்சுத்தான் பார்த்தேன் ஜனா. யாரையும் தெரியலை…” என்றார் சேதுராமன்.

இருவரின் பதிலிலும் ஏமாற்றம் அடைந்த ஜனார்த்தனி உதட்டைப் பிதுக்கி ஜெகனை பார்த்தாள்.

அவனோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தவன் போல் அவளைப் பார்க்காமல் இருக்க, “ஆமா, அய்யா யோசிச்சு உடனே வினயாவைக் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்து நிறுத்த போறார்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் நக்கலுடன் முணுமுணுத்தாள்.

அவளின் முணுமுணுப்பில் யோசனை கலைந்தவன், அவளைப் பார்த்து முறைத்தான்.

“ஏன் நீயும் டிடெக்டிவ் தானே? நீ ஏன் இன்னும் உன் ஃபிரண்டை கண்டுபிடிச்சுக் கொண்டு வந்து நிறுத்தாம இருக்க?” என்று பதிலுக்கு அவளைப் முறைத்துக் கொண்டே மெல்லிய குரலில் கேட்டான்.

அவளோ அவன் சொன்னதே காதில் விழாதது போல வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்…” என்று அவளின் அலட்சியத்தைக் கண்டு பல்லைக் கடித்த படி சொன்னவன், மருத்துவமனை ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தான்.

“இந்த மெயின் வழி தவிர ஹாஸ்பிட்டலுக்குள்ள வர வேற வழி இருக்கா?” என்று விசாரித்தான்.

“எமர்ஜென்சிக்குத் தனி வழி இருக்கு சார். ஆனா அதில் ஒன்லி ஆம்புலன்ஸுக்கு மட்டும் தான் அனுமதி உண்டு. அது தவிர இங்கே வேலை பார்க்கிற நர்ஸ், ஸ்டாப் எல்லாம் வர ஒரு வழி இருக்கு. ஆனா அதில் அவங்க ஐடி கார்ட்டை காட்டினால் தான் உள்ளே விடுவாங்க…”

“அந்த வழிக்கு எல்லாம் சிசிடிவி இருக்கா?”

“இருக்கு சார்…”

“அதையும் போட்டுக் காட்டுங்க…”

அதுவும் போட்டுக் காட்டப்பட்டது.

அதையும் பார்த்துவிட்டு “யாரும் தெரிந்தவர்கள் இல்லை” என்ற பதிலையே சேதுராமனும், பரத்தும் சொல்ல,

“அப்போ எப்படி அவன் உள்ளே வந்தான்?” என்று கேள்விக்குப் பதில் தெரியாமல் குழம்பிப் போய் நின்றான் ஜெகவீரன்.