பிழையில்லா கவிதை நீ! – 1

அத்தியாயம் – 1

“மாமோவ்… ஏ மாமோவ்… நில்லு மாமோவ்… அட நில்லு மாமோவ்… நானும் வந்துடுதேன்னு சொல்லுதேன்ல… நா சொல்ல சொல்ல செவுலுல வாங்காம என்னைய இப்புடி வுட்டுப் போட்டுப் போறீகளே…” என்று தன் பின்னால் கேட்ட கத்தலில் ‘யாரது?’ எனத் திரும்பிப் பார்த்தான் ஜெகவீரன்.

அவன் நிற்கவும் மூச்சு வாங்கிய படி அவனின் முன்னால் நின்றிருந்தாள் அவள்.

‘யார் இவள்? என்னையா அழைத்தாள்?’ என்ற குழப்பத்துடன் அவளின் தோற்றத்தை ஏற இறங்க பார்த்தான்.

கண்டாங்கி சேலை கட்டி, ஒருபக்க கொண்டை போட்டு, அந்தக் கொண்டையைச் சுற்றி மல்லிகை சூடி, அதிலிருந்து தொங்கிய மீதி மல்லிகையை முன் பக்கமாகத் தொங்க விட்டு, கழுத்தில் காசு மாலையும், இன்னும் சில நகைகளும் அணிந்து, காதில் பெரிய தொங்கட்டான் அணிந்து, நெற்றி வகிட்டில் இருந்து உச்சந்தலை வரை குங்குமத்தை நீளமாக வைத்து, நெற்றியில் நாணயம் அளவிலான குங்குமம் வைத்து, அதன் கீழ் சிறு கீற்றாகத் திருநீற்றைப் பூசி நின்றிருந்தவளை ‘யார் நீ?’ என்பது போலப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.

“என்னங்க மாமோய், என்னைய இப்புடி வுட்டுப் போட்டு வந்துட்டீக? நானு எம்புட்டு நேரமா கத்திக்கிட்டு கிடந்தேன்…” என்று நீட்டி முழங்கி அவனிடம் கேட்டு ‘நான் அழைத்தது உன்னைத்தான்’ என்பதை உறுதிப்படுத்தினாள் அவள்.

“ஹலோ! எஸ்க்யூஸ் மீ! யார் நீங்க? யார்க்கிட்ட கேட்குறீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“அய்யோ! அய்யோ! என்னைய பாத்து… என்னைய பாத்து ஆரு நீயின்னு கேட்டுப்புட்டியே மாமோய்…” மூக்கை சீந்தி ‘ஓ’ என்று சப்தம் போட்டு ஒப்பாரி வைத்தவளை, அசூசையுடன் பார்த்தான் ஜெகவீரன்.

“ஏய்! முதலில் என்னை மாமானு சொல்றதை நிறுத்து. நீ யாருன்னே தெரியலைன்னு சொல்லிட்டு இருக்கேன். என்னைப் போய் மாமானு கூப்பிட்டுக்கிட்டு இருக்க. மூடு! முதலில் வாயை மூடு!” என்று அவளின் ஒப்பாரியைச் சகிக்க முடியாமல் கடும் கோபத்துடன் அதட்டினான்.

அவனின் அதட்டலில் முந்தானையை எடுத்து வாயை மூடியவளின் கண்கள் அதிர்ச்சியுடன் விரிந்தன.

ஆனாலும் மூடிய வாயிற்குள் இருந்து ஏதோ முனங்கினாள்.

“என்ன… என்ன?” என்று அவள் சொன்னது புரியாமல் அதட்டிக் கேட்டான்.

வாயை மூடியிருந்த சேலையை விலக்கியவள், “ஓ பொஞ்சாதி ராசாத்தியைப் பாத்து ஆருன்னு கேட்டுப்புட்டியே மாமோய்…” என்றாள் கதறலாக.

“என்னது பொஞ்சாதியா?” என்று அதிர்ந்தே போனவன், “ஏம்மா, நீ என்ன லூசா? நீ யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னென்னா பொஞ்சாதினு சொல்லிட்டு இருக்க?” என்று கடுமையாகத் திட்டியவன், அவளைச் சந்தேகத்துடன் ஆராய்ந்தான்.

அவனின் ஆராய்ச்சியைக் கண்டு கொள்ளாமல் “என்ன மாமா உண்மைய சொன்னா என்னைய மட்டினு சொல்லிப்புட்டிக?” என்று சொன்னவள் குழாயைத் திறந்து விட்டது போல் மளமளவென்று கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.

‘தன் எதிரில் இருப்பவள் நிச்சயமாகப் பைத்தியமே தான்’ என்ற முடிவிற்கே வந்து விட்டான் ஜெகவீரன்.

“நீ யாரு? எந்த ஊரு?” என்று கேட்டான்.

“என்ன மாமா? உனக்குத் தெரியாதா? நீயும், நானும் ஒரே வூருதானே…” என்று கையை நீட்டி முழங்கினாள்.

“ஒரே ஊரா? அப்படி என்ன ஊரு?” பைத்தியமே தான் என்று நினைத்தவன் அவளையே பேச வைக்க நினைத்தான்.

“நம்ம சொந்த வூரைப் போயி மறந்துபுட்டியே மாமா…” என்று அழும் குரலில் சொன்னவள் மீண்டும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

“ஏய்! இந்தா, அழுகையை நிறுத்து. அதோட என்னை மாமான்னு சொல்றதை முதலில் நிறுத்து…” என்று கடுமையாக அதட்டியவன், “யார் கூட வந்த நீ?” என்று கேட்டான்.

“என்ன மாமா, இப்படிக் கேட்டுப்புட்ட? நீயி தானே என்னைய இங்கன கூட்டியாந்த…” என்று சொன்னவளைப் பார்த்துக் குழம்பிப் போனான்.

‘இவளை யாராவது இங்கே விட்டுவிட்டுப் போய் விட்டார்களோ? அதில் பைத்தியம் பிடித்து விட்டதோ?’ என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

“எப்பா தம்பி, என்ன விஷயம்? எதுக்கு இந்தப் பொண்ணு அழுகுது? நீ ஏன் அந்தப் பொண்ணை மிரட்டுற?” என்று அறுபது வயது தக்க இருந்த ஒரு பெரியவர் அவனைக் கேள்விக் கேட்க, ‘நீ யாருய்யா?’ என்பது போல அவரைப் பார்த்தவன் அப்போது தான் அவரின் பின்னால் கவனித்தான்.

அவர் மட்டுமில்லாமல் இன்னும் சிலரும் அவருடன் நின்று கேள்வியுடன் அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவன் நின்றிருந்த இடம் சென்னை மெரினா கடற்கரை.

அது ஒரு மாலை நேரம்.

அன்று விடுமுறை தினம் இல்லையென்றாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கடற்கரையில் அதிகமாகத் தான் இருந்தது.

அதனால் கூட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தவன், கால்களைக் கடலில் நனைத்து விட்டுத் திரும்பி வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது தான் அவன் பைத்தியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அப்பெண் வழியை மறைத்தாள்.

அவள் தன் பொண்டாட்டி என்று சொன்னது அவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி தான்!

பார்க்க கிராமத்தில் இருந்து வந்த பெண் போல் இருந்தாலும், திருத்தமான உடை, நடை பாவனையில் தெரிந்தாள்.

ஆனால் அவளின் பேச்சு அவளைப் பைத்தியமாகக் காட்டக் குழப்பத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பெரியவருடன் சேர்ந்து சிறு கும்பலும் கூடி விட, ‘என்னடா இது?’ என்றாகிப் போனது அவனுக்கு.

‘வந்துட்டாரு நாட்டாமை விசாரிக்க’ என்பது போல் அவரை ஒரு பார்வை பார்த்தவன் ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் முன்,

“நல்லா கேளுங்கய்யா. எங்க ஊருல இருந்து மெட்ராஸை சுத்திப் பாப்போம் வான்னு கூப்பிட்டுக்கிட்டு வந்தவுக. இம்மாம் பெரிய பீச்சுல என்னைய விட்டுப்புட்டுப் பஜ்ஜி வாங்கிட்டு வந்துடுறேன்னு போனவக திரும்பி வரலையேன்னு பாத்தா, என்னைய யாருன்னே தெரியலைன்னு சொல்லி விட்டுப்புட்டுப் போகப் பாக்குறாவுக. நல்லா நியாயத்தைக் கேளுங்கய்யா…” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே அவரிடம் மட்டுமில்லாமல் சுற்றி நின்றிருந்தவர்களிடமும் புகார் வாசிக்க ஆரம்பித்திருந்தாள் ராசாத்தி.

‘அட! இவ முழு லூசா? இல்லை விவரமான லூசா?’ என்று நினைத்தவன், “ஏய்! நான் யாருன்னு தெரியுமா? விட்டா ஓவரா பேசிட்டு போற? நீ யாருன்னு முதலில் சொல்லு. ஒருவேளை பைத்தியக்கார ஹாஸ்பிட்டலில் இருந்து தப்பிச்சு வந்துட்டியா?” என்று அதட்டிக் கேட்டான்.

“அய்யோ! அய்யோ! எம் மாமனுக்கு என்னைய அடையாளம் தெரியலையே… இந்த அநியாயத்தை நா எங்கன்னு போயி சொல்லுவேன்? ஏதுன்னு சொல்லுவேன்? என்னைய கல்யாணம் கட்டிக்கிட்ட அன்னைக்கு இனி உன்னோட கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வர விடமாட்டேன் ராசாத்தினு சொல்லுச்சே. நீயே ஏ பொஞ்சாதி… நானே ஓ சரிபாதின்னு சினிமா பாட்டெல்லாம் பாடுச்சே. ஆனா இப்ப என்னைய இப்படி அழ வச்சுப்புடுச்சே…” என்று கத்தி இன்னும் ஊரைக் கூட்டியவளை இருந்த பொறுமையை எல்லாம் பறக்க விட்டு அடிக்கப் பாய்ந்திருந்தான் ஜெகவீரன்.

“ஏய் தம்பி! இந்தாப்பா… என்னதிது? இத்தனை பேரு இருக்கும் போதே உன் பொண்டாட்டியை அடிக்கப் போற. என்ன சண்டைனாலும் உங்க வீட்டுக்குள்ள வச்சுக்காம இப்படியா வெளியூர் வந்த இடத்தில் சண்டை போடுவீங்க?” என்று அந்தப் பெரியவர் அவனின் கையைப் பிடித்துத் தடுத்துக் கொண்டே புத்திமதி சொன்னார்.

“யோவ் விடுயா! நான் யாருன்னு தெரியாம பஞ்சாயத்துப் பண்ண வராதே. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. எவளோ ஒருத்தி என் பொண்டாட்டினு சொன்னா பெரிய ஜட்ஜ் மாதிரி தீர்ப்புச் சொல்ல வந்திருவீங்களோ? என்னையும் அவளையும் பாருங்கய்யா. அந்தப் பட்டிக்காட்டுக்கும், எனக்கும் எவ்வளவு வித்தியாசம்னு. அதுலயே நாங்க புருஷன், பொண்டாட்டியா இல்லையான்னு தெரிஞ்சுடும்…” என்று ஜெகன் சொன்னதும் ஆட்கள் இரண்டு பேரையும் ஆராய்ந்தார்கள்.

அவள் அக்மார்க் கிராமத்துப் பைங்கிளி போல் இருக்க, ஜெகவீரனோ ஜீன்ஸ், டீசர்ட் அணிந்து குளிர் கண்ணாடியை டீசர்ட்டின் கழுத்துப் பகுதியில் தொங்க விட்டிருந்தான்.

அலை அலையான கேசம், கடற்காற்றில் அடங்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

திருத்தமாக வெட்டப்பட்டிருந்த மீசையை லேசாக இரண்டு பக்கமும் சுருட்டி விட்டிருந்தான். சுத்தமாக மழிக்கப்பட்ட தாடை என நவநாகரிகமாக இருந்தான்.

இருவரின் தோற்றத்திலும், பேச்சிலும் இருந்த வித்தியாசத்தில் இருவரும் கணவன், மனைவி என்பதைப் பார்ப்பவர்களால் நம்ப முடியாமல் தான் இருந்தது.

இருவரையும் ஆராய்ந்தவர்கள், இப்போது அவளைச் சந்தேகமாகப் பார்க்க, அவர்களின் பார்வையில், “இதுதேன் இதுதேன்யா, ஏ மாமனுக்கு என்னைய புடிக்காம போனதுக்குக் காரணம். அவுக படிச்சவுக, நா படிக்காதவ. எனக்கு ஏ மாமனை மாதிரி ஸ்டெயிலா உடுப்பு உடுத்தத் தெரியாது. பேச தெரியாதுன்னுதேன் என்னைய இப்படி வுட்டுப்புட்டுப் போறாக…” என்று அவர்களின் சந்தேகத்தை அடியோடு அடித்து விரட்டும் வண்ணம் கதறினாள்.

‘கடல் தண்ணீரை எடுத்து வந்து கண்களுக்குள் விட்டுக் கொண்டாளோ?’ என்று நினைக்கும் வண்ணம், கண்களில் இருந்து இறங்கிய‌ கண்ணீர் அவளின் கழுத்து வரை வடிந்திருந்தது.

“பொம்பள பிள்ளை இந்த விஷயத்தில் பொய்ச் சொல்ல மாட்டாங்க‌…”

“இந்தப் பொண்ணு சொல்றது தான் உண்மையா இருக்கும்…”

“இந்த அநியாயத்தை எங்கயாவது கண்டோமா? கட்டுன பொண்டாட்டியை இப்படிப் பொண்டாட்டியே இல்லன்னு சொல்றானே…”

“எல்லாம் படிச்ச‌ திமிரு…”

“இந்தப் பொண்ணு சரியான நேரத்தில் புருஷனை கவனிக்காம போயிருந்தா இந்த நேரம் இவளை இப்படியே விட்டுட்டு எஸ்கேப்பாகி இருப்பானே…” என்று ஆளாளுக்கு ஒன்று பேச, அனைத்தையும் கேட்ட ஜெகனின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.

“ஏய்‌! நிறுத்துங்கய்யா! இவளை யாருனே தெரியாதுன்னு சொல்றேன். நீங்க பாட்டுக்கு வாய்க்கு வந்ததைப் பேசிக்கிட்டு இருக்கீங்க?”

“திரும்பத் திரும்பப் பொய்ச் சொல்லாதீங்க தம்பி. பெண் பாவம் பொல்லாதது…” என்று ஒருவர் சொல்ல,

“ஒரு பொண்ணு எப்படி யாரோ ஒருத்தனை புருஷன்னு பொய்ச் சொல்லுவாள்? அதனால நீ சொல்றதை நம்ப மாட்டோம்…” என்று அவனைப் பார்த்துச் சொன்னார்கள்.

அவர்களின் பேச்சில் எரிச்சலடைந்தவன், “பொண்ணு பொய்ச் சொல்ல மாட்டாள்னு எந்த அகராதியில் எழுதி வச்சுருக்காங்க?” என்று நக்கலுடன் கேட்டான்.

“பொண்டாட்டியை விட்டுட்டுப் போறது மட்டுமில்லாம, இப்படி நக்கலா வேற பேசாதீங்க தம்பி…” என்று அந்தப் பெரியவர் அதட்டினார்.

ஜெகவீரனின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.

தன்னை யார் யாரோ திட்டுவதற்குக் காரணமாக இருந்தவளை முறைத்துப் பார்த்தான்.

அவளோ ‘நியாயத்தைக் கேளுங்க’ என்பது போல் ஒரு பார்வை பார்த்து உதட்டை லேசாகப் பிதுக்கியபடி கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாள்.

‘சுற்றியுள்ள பைத்தியங்களிடம் பேசுவதை விட இந்தப் பைத்தியக்காரியிடமே பேசுவது மேல்’ என்ற முடிவுக்கு வந்தவன் போல் அவளை ஆராய்ந்து கொண்டே கூர்மையாகப் பார்த்தான்.

அவளோ அவன் பார்வையைச் சளைக்காமல் எதிர்கொண்டாள்.

‘இவளுக்குத் தைரியம் அதிகம் தான்!’ என்று நினைத்தவன் கைகளைக் கட்டிக்கொண்டு அலட்சியமாக அவளைப் பார்த்து “நீ என் பொண்டாட்டிங்கிறதுக்கு ஃப்ரூப் காட்டு…” என்றான்.

“என்னது புருவு காப்பியா? என்ன மாமா இந்த நேரத்துல போய்ப் புரு காப்பிக் கேக்குறீகளே? இப்படித் திடுதிப்புனு புருவு காப்பித் தண்ணி கேட்டா நானு எங்கன்னு போயி போடுவேன்? இங்கன அடுப்பு கூட இல்லையே?” என்று அப்பாவியாக உதட்டைப் பிதுக்கிக் கேட்டாள்.

ஃப்ரூப்பை ப்ரு காஃபியாக மாற்றியவளை பார்த்து இப்போது அவனுக்குக் கொலை வெறியே வந்தது.

“அம்மா, தாயே! ப்ரூ காஃபி இல்ல. ஃப்ரூப்! அதாவது அத்தாட்சி.‌ நீ என் பொண்டாட்டிங்கிறதுக்கு அத்தாட்சி காட்டு…” என்றான் அழுத்தமாக.

“அத்தாட்சியா கேட்டீக? அத்தாச்சி இப்போ என்கிட்ட ஒன்னும் இல்லங்களே மாமா…” என்று கைகளை விரித்தாள்.

“ஓஹோ!” என்று இழுத்தவன் அவளை இன்னும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே “உன் கழுத்துல தாலி இருக்கும் இல்ல? அந்தத் தாலியைக் காட்டு…”

“தாலியா…?”

“தாலியே தான்!” என்றவன் கூட்டத்தினரைப் பார்த்து “இவ்ளோ நேரம் என்னைத் திட்டுனீங்களே… எல்லோரும் இப்ப அந்தப் பொண்ணைத் தாலியைக் காட்ட சொல்லுங்க…” என்றான்.

“பொண்டாட்டின்னு சொல்றவ கழுத்துல தாலி இல்லாமலா இருப்பாள்? ஏம்மா, நீ தைரியமா காட்டுமா…” என்று அவனை ஆரம்பத்திலிருந்து விரட்டிய பெரியவர் சொல்ல, அவளோ இன்னும் அதிகமாகக் கத்தி அழுதாள்.

அவளின் அழுகையை எரிச்சலுடன் பார்த்தாலும் ‘இப்ப மாட்டினடி மவளே!’ என்பது போல் நக்கலாகவும் பார்த்து வைத்தான்.

“என்ன மாமா இப்படிக் கேட்டுப்புட்டீக? தாலி எல்லாம் இம்புட்டுப் பேருக்கு முன்னாடி காட்டக்கூடாது மாமா. அம்மாச்சி சொல்லி இருக்குல்ல? தாலிய வெளிய தொங்கப் போட்டா கண்ணு பட்டுடும்னு. மறந்துட்டியா மாமா நீ?” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அப்பாவியாகக் கேட்டு வைத்தாள்.

“இந்தத் தில்லாலங்கடி வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். ஒழுங்கா தாலியை எடுத்துக் காட்டு…” என்று மிரட்டலாகச் சொன்னான்.

“அய்யோ! சொன்னா கேளு மாமா. நீ நல்லா இருக்கணும்னு தேன் மாமா சொல்லுதேன். தாலியெல்லாம் கண்ணு பட்டுடும் மாமா. அப்புறம் ஓ உசுருக்குத்தேன் மாமா ஆபத்து…” என்று கழுத்தில் கை வைத்து மறைத்துக் கொண்டே தாலியை எல்லாம் வெளியே காட்ட முடியாது என்பது போல் தலையை மறுப்பாக அசைத்தாள்.

“என்னது? என்னோட உசுருக்கு ஆபத்தா? இந்தப் புளுகு எல்லாம் இங்கே வேண்டாம். இப்போ ஒழுங்கா நீ தாலியை எடுத்துக் காட்டுறீயா? இல்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏத்தவா?” என்று அவளிடம் மிரட்டலாகக் கேட்டான்.

அவனின் பார்வைக் கூர்மையாக அவளை ஊடுருவியது.

அதே நேரத்தில் “ஏம்மா, உனக்குத் தாலி முக்கியமா? புருஷன் முக்கியமாமா? புருஷன்னு ஃப்ரூப் பண்ணினா தானே அந்தத் தாலி செல்லும். தாலியை எடுத்துக் காட்டுமா‌…” என்று ஒருவர் சப்தம் போட்டார்.

“ஏ அம்மாச்சி சொல்லிருக்கு. நானு மாட்டேனுங்க…” என்று குழந்தை போல் தலையை‌ ஆட்டி மறுத்தவளை எகத்தாளமாகப் பார்த்தவன்,

கூட்டத்தினரைப் பார்த்து, “இவகிட்ட தாலின்னு ஒன்னு இருந்தால் தானே காட்டுவாள்? இவ யாருன்னு இப்போ நான் சொல்றேன்…” என்றவன், தங்களின் ஒரு பக்கமாக நின்றிருந்த கூட்டத்தினரைக் கண்டு கொள்ளாமல், எதிர் திசையில் சென்றவன், அங்கே இருந்த படகின் மறைவில் இருந்தவனைச் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.

அவன் கையில் பெரிய கேமிரா இருந்தது.

அவனின் பின்னால் இன்னும் ஒரு ஆணும் நின்று கொண்டிருந்தான். அவனையும் ‘வா’ என்பது போல் சைகை செய்தவன், அவள் பக்கம் வர, அவளோ ‘ஓ! தெரிஞ்சிடுச்சா?’ என்ற பாவனையில் அலட்சியமாக நின்றாள்.

‘இவளுக்கு இருக்கும் எகத்தாளத்தைப் பாரேன்’ என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன், “சார்… சார்… விடுங்க சார்…” என்று தன் கைப்பிடியில் இருந்து கத்தியவனைத் தன் முன்னால் நிறுத்தி, கையைக் கட்டிக் கொண்டு தீர்க்கமாகப் பார்த்தவன், “யார் நீங்க?” என்று மூவரையும் பார்த்துக் கேட்டான்.

“ஹலோ சார், என் பேரு ஆகாஷ். நாங்க இங்கே லோக்கல் டீவியில் இருந்து வர்றோம். இவங்க எங்க கோ ஒர்க்கர் கவினி, இவர் கேமிராமேன் அஸ்வின்…” என்று கிராமத்துப் பைங்கிளி வேடத்தில் இருந்தவளையும், கேமிரா வைத்துக் கொண்டிருந்தவனையும் அறிமுகப்படுத்தினான் ஆகாஷ்.

அறிமுகப்படுத்தி விட்டு ஜெகவீரனிடம் கையைக் குலுக்கக் கை நீட்டினான்.

ஆனால் ஜெகனோ அவனின் கையைக் கண்டு கொள்ளாமல், கவினியையே விடாமல் தீர்க்கமாகப் பார்த்து, “என்ன கூத்து இதெல்லாம்?” என்றான்.

“இதுவா? இது, ‘இந்தா பார் குல்லா… போடுவோம் பார் நல்லா’ என்ற ப்ரோக்ராமுக்கு இப்படி ஒரு ட்ராமா போட்டோம் சார். ஜஸ்ட் ஃபார் ஃபன்‌…” என்று சர்வசாதாரணமாகச் சொன்னாள் கவினி.

டீவியில் இருந்து வந்துள்ளோம் என்றதும் அங்கே இருந்த கூட்டத்தினர் ஆவலாக அவர்களைச் சுற்றி நின்றனர்.

‘இப்படி ஒரு ப்ரோக்ராமா? என்னடா பேர் இது? குல்லா, நல்லானுட்டு’ என்று முகத்தைச் சுளித்தவன், “ஓகோ! ஃபன்னு? உங்க ஃபன்னுக்கு நான் தான் கிடைச்சேனா?” என்று எரிச்சலுடன் கேட்டவன், “நான் வர்ற சீன் எதுவும் உங்க ப்ரோக்ராம்ல இருக்கக் கூடாது. அப்படி இருந்தது, உங்களைச் சும்மா விடமாட்டேன்…” என்று கடுமையாகச் சொன்னான்.

“சார், சார்… என்ன சார் இப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே ஆகாஷ் சமாதானம் பேச வர, “நான் யாருன்னு தெரியாம என்னை இந்த ப்ரோக்ராம்ல இழுத்து விட்டது உங்க தப்பு. இதான் ஃபைனல் வார்னிங். உங்க ப்ரோக்ராம்ல நான் தெரியக்கூடாது…” என்று எச்சரித்தான்.

“என்ன சார் இது? அப்போ இருந்து நான் யார் தெரியுமா? யார் தெரியுமானு கேட்டுக்கிட்டே இருக்கீங்க. யார் சார் நீங்க? எதுக்கு உங்களை டீவியில் போடக்கூடாதுன்னு சொல்றீங்க? அதுவும் நான் கஷ்டப்பட்டு வில்லேஜ் கேர்ள் மாதிரி வேஷம் போட்டதைப் போடக்கூடாதுன்னு எப்படிச் சொல்லலாம்? இப்படி நடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஆனா நீங்க ஈஸியா டெலிகாஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்றீங்க…” என்று எகிறிக் கொண்டு அவனிடம் சண்டைக்குக் கிளம்பினாள் கவினி.

அவளை அமைதியாகப் பார்த்தவன், தன் கால்சட்டையில் இருந்து தன் அடையாள அட்டையை எடுத்து அவளின் முகத்திற்கு நேராக நீட்டினான்.

‘என்ன?’ என்பது போல் அந்த அடையாள அட்டையைப் பார்த்த கவினியின் புருவங்கள் வியப்புடன் மேலே ஏறின.

‘ஜெகவீரன், இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்!’ என்று அவனை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது அந்த அடையாள அட்டை!